Avalukkenna…!-1

Avalukkenna…!-1

அவளுக்கென்ன…!
அத்தியாயம்
1
சென்னையின் பிரபல மருத்துவமனை, நடுஇரவு நேரத்திலும், எல்.இ.டி. விளக்குகளின் பளிச்சென்ற வெளிச்சத்தில் பகல் போல் எந்த மாறுபாடும் இன்றி பரபரப்புடன் இயங்கியது.

பினாயில் மற்றும் மருந்துகளின் நெடி மூக்கில் குத்தும் அளவிற்கு இல்லாமல் இலகுவாக உணரும் அளவிற்கு இருக்க, ஃபுளோரிங் அந்த இரவு நேரத்திலும் சுத்தமாக, அன்னம் இட்டு உண்ணும் அளவிற்கு அதன் தூய்மை பராமரிக்கப்பட்டு இருந்தது.

ரிசப்சனில் இருந்தவள், அந்த நடு இரவிலும் தூக்கத்தை விட்டு வெகுதூரத்தில், சிரத்தையுடன் கூடிய அலங்கரிப்பால் அழகாக இருந்தாள்.

ரிசப்சன் போலவே, ஃபார்மஸி, எக்ஸ்ரே, ஸ்கேன் என அனைத்திலும் அந்நேரத்திலும் ஆட்கள் பணியில் இருந்தனர். பணியில் இருந்தவர்கள் அனைவரும் நடுநிசி நேரத்திலும் உறங்காமல், அவரவர் பணிகளை சோம்பலின்றி செய்தபடி இருந்தனர்.

புதியதாக மருத்துவமனை வளாகத்தினுள் நுழைந்த சைரன் சத்தம் கேட்டு, வழக்கமான பணிகளை விடுத்து, வண்டியில் வரும் புதிய கேஸைப் பற்றி அறியும் வேகத்தில் வாயிலை நோக்கியிருந்தனர்.

கவனத்தை ஈர்த்தபடி சைரன் சத்தத்துடன் வாயிலுக்கு முன் வந்து நின்ற ஆம்புலன்ஸில், இரவு நேரப் பணியில் இருந்தவர்களின் கவனம் இருந்தது.

ஆம்புலன்ஸின் பின்னோடு இருசக்கர வாகனத்திலிருந்து இறங்கிய இருவர், ரிசப்ஷன் என்ற பெயர் தாங்கிய இடத்தை நோக்கி பதட்டத்துடன் மருத்துவமனைக்குள் வந்தனர்.

வந்தவர்களை வரவேற்று, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தாள், ரிசப்சன் பெண். ரிசப்சன் டேபிளின் டிராயரின் உள்ளிருந்த ஃபார்மை எடுத்து எதிரில் நின்றவர்களிடம் கொடுத்தாள்.

புரியாமல் இருவரும் ரிசப்சனிஸ்ட்டை நோக்க, பேசண்ட் பற்றிய தகவல்களை பூர்த்தி செய்து கொடுக்குமாறு கூறினாள்.

பதற்றத்தில் எதுவும் தோன்றாமல் நின்றிருந்தவர்களை உணர்ந்த ரிசப்சனிஸ்ட், அவர்களுக்கு வழிகாட்ட தடுமாற்றத்துடன் பூர்த்தி செய்ய ஆரம்பித்திருந்தனர்.

நண்பர்களுடன் செகண்ட் ஷோ முடிந்து திரும்பும் வழியில் நடைபெற்ற எதிர்பாரா விபத்தில், காலில் உண்டான பலத்த காயம் காரணமாக, மயங்கியிருந்த நண்பனை ஆம்புலன்ஸில் அம்மருத்துவமனைக்கு கொண்டு வந்திருந்தனர் இருவரும்.
அட்மிசனுக்காக ஃபார்ம் ஃபில் செய்து கொடுத்தான் ஒருவன்.

“எங்க வீட்டு அட்ரஸ் போட்றவாடா?”

“ஆமா அவனே மயக்கத்துல இருக்கான். அவன் எப்ப எழுந்து அவன் அட்ரஸ் சொல்றது, உங்க வீட்டு அட்ரஸ் இல்லனா… எங்க வீட்டு அட்ரஸ சும்மா எழுது” அவனருகில் முகத்தில் அப்பிய சோகத்துடன் நின்றிருந்தவன் பதில் சொன்னான்.

“என்னடா இந்நேரம் ஹாஸ்பிடல்ல டாக்டரெல்லாம் இருப்பாங்களா!”, என நண்பனுக்கு மட்டும் கேட்கும் குரலில் மெதுவாகக் கேட்டான்.

“24 மணிநேர சர்வீஸ்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனாலதான் கைலாஷ்ஷ இங்க கூட்டிட்டு வந்தேன். நீ ரொம்ப பயப்படாத!”, என அவனும் அதே டோனில் பேசியிருந்தான்.

அதற்குள் உள்ளிருந்து வந்த மருத்துவமனையின் ஸ்ட்ரக்சரில் ‘கிஷோர் கைலாஷ்’ என ஃபார்மில் குறிப்பிட்ட பெயருக்கு உரியவனை ஆம்புலன்ஸ் ஸ்ட்ரக்சரில் இருந்து மாற்றி இருந்தார்கள்.

கால்களில் உண்டான ஃப்ராக்சர் காரணமாக, அதிகமான இரத்தபோக்கு உண்டாகி, சம்பவ இடத்திலேயே மயங்கியிருந்தான். அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் மற்றும் இதர பணியாளர்கள் கைலாஷிற்கு முதலுதவிக்கான பணிகளில் ஈடுபட்டிருந்தனர்.

ட்யூட்டியில் இருந்த மருத்துவர் அடுத்தடுத்து டெஸ்ட்களுக்கும், மருந்துகளுக்கும் எழுதிக் கொடுக்க, நண்பர்கள் இருவரும் பதட்டத்துடன் ஆளுக்கொரு பணியை ஏற்று செய்ய ஆரம்பித்தனர்.

துரித நடவடிக்கையால் அதீத ரத்தப்போக்கு கட்டுப்படுத்தப்பட்டது. ட்ரிப்ஸ் போடப்பட்டு அதன்பின் முழங்காலுக்குக் கீழ், காலின் உடைந்திருந்த பகுதியை இரவோடு இரவாக, எக்ஸ்ரே மற்றும் MRI ஸ்கேன் எடுக்கச் சொல்லியிருந்தனர்.

அதிக இரத்தபோக்கு இருந்ததால் அதை ஈடுசெய்யும் விதமாக அவனது பிளட் க்ரூப் அறியப்பட்டு, இரத்தம் பெறப்பட்டு, ஏற்றப்பட்டது. பணம் தண்ணீராக செலவளிய எதைப்பற்றியும் யோசிக்காமல், நண்பர்கள் இருவரும் மருத்துவர்கள் சொன்னதை செய்தனர்.

எலும்புகள் நொறுங்கப்பட்டிருந்த பகுதியை ஸ்கேன் எடுத்து, ஆர்த்தோ மருத்துவருக்கு குறிப்புகளுடன் ஸ்கேன் ரிப்போர்ட் அப்போதே அனுப்பப்பட்டது.

அடுத்ததாக சிறு சிராய்ப்புகள் இருக்கும் இடங்களில் மட்டும் தூய்மை செய்யப்பட்டு, அதற்காக மருந்துகள் போடப்பட்டிருந்தது.

அதிகாலையில் வந்து நேரில் பார்த்த ஆர்த்தோ டாக்டர்கள் குழு, உடனே அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யுமாறு கூற, அன்று மதியத்திற்கு மேல் கைலாஷிற்கு காலில் ஆபரேசனும் செய்திருந்தனர்.

“அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணிருவோம்டா”, ஒருவன்

“அவன் கண்ணு முழிக்கட்டும்டா, அப்புறம் அவங்கிட்ட கேட்டுக்கிட்டு… அவங்க வீட்டுக்கு இன்ஃபார்ம் பண்ணுவோம்”, மற்றொருவன்.

“எல்லாம் நம் நேரம் டா…!, காலேஜ் அலும்மினில பார்ட்டிசிபேட் பண்ணோமா… உடனே அவனவன் வேலய பாத்துக் கிளம்பனோமான்னு இல்லாம…! நாம படம் பாக்க கூப்பிட்டு போனதுதான் இப்ப தப்பா போச்சு!”, என ஒருவன் புலம்ப

“இதெல்லாம் அனெக்ஸ்பெக்டடா நடக்கிறது. இதுக்கு யாரு என்ன செய்ய முடியும்!”, மற்றவன் அதை மறுத்திருந்தான்.

“அவன் ஊருக்கு கிளம்பியிருந்தா இந்த பிரச்சனை வந்திருக்காம அவாய்ட் பண்ணிருக்கலாம்ல”, AI (செயற்கையான தர்க்கமுறை) டெக்னிக் அங்கு அலசப்பட்டது.

“அப்டி ஏன் நினைக்கிற, நம்ம ஃபிரண்டுக்கு வந்த எதிர்பாரா கஷ்டத்துல இருந்து, அவன் மீண்டு வர நம்மளால உதவி செய்ய முடிஞ்சதுனு நினைச்சு சந்தோசப்பட்டுக்க வேண்டியது தான்!

சப்போஸ்…! ஊருக்கு போற வழியில இந்த மாதிரி நடந்து… அவன் அங்க தனியாளா மாட்டியிருந்தா…!

அவன் நிலைய யோசிச்சுப் பாரு. இங்க இருந்ததால தான்… நாம அவன ஹாஸ்பிடலைஸ் பண்ணி… அவனுக்கு வேண்டிய அவசர உதவி செஞ்சோம்னு நினச்சுக்க…!”

“மாத்தி யோசிங்கற…!”

“ஆமா, நம்மள குழப்பிக்காத அளவுல மாத்தி யோசிக்கணும்”

இருவரும் ICU வில் இருக்கும் நண்பன் கண் விழிக்க வேண்டி, அறை வாயிலில் காத்திருந்தனர். சரியாக ஒரு நாளுக்குப்பின், இரவு கண்விழித்தான் கைலாஷ்.

விழித்தவனுக்கு நண்பர்களுடன் பைக்கில் வந்தது, அதனை அடுத்து நடந்த எதிர்பாரா விபத்து மட்டுமே நினைவில் வந்தது.

கைலாஷிற்கு, மருத்துவமனை வந்தது நினைவில் இல்லை. காலில் உண்டான காயம், இரத்தப்போக்கு, அதோடு தான் மயங்கியது, நண்பர்கள் இருவரும் தன்னை பெயர் கூறி அழைத்தது வரை மட்டுமே யோசிக்க முடிந்தது.

அதன் பின்புதான் நண்பர்கள், ஆம்புலன்ஸிற்கு அழைத்தனர். ஒருவன் தனது வெஸ்டைக் (Vest) கழற்றி இரத்தப் போக்கிருந்த இடத்தில் கட்டினான்.

அடுத்தவன், அருகில் இருந்த கடையில் பிஸிலரி பாட்டில் வாங்கி அதிலிருந்த நீரை எடுத்து கைலாஷின் முகத்தில் தெளித்திருந்தான். குடிக்க தண்ணீர் கொடுத்துப் பார்த்தான். ஆனால் மயக்க நிலையில் இருந்தவனால் எதுவும் முடியவில்லை.

இது எதையும் அறியாதவன், தன் நண்பர்களுக்கு தன்னால் உண்டான அசௌகரியத்தை எண்ணி வருந்தியவாறு ICUவில் படுத்திருந்தான்.

அடுத்த நாள் காலையில் கைலாஷை தனி ரூமிற்கு மாற்றினார்கள். அதன்பின் அவனது நண்பர்கள் வந்து அவனைப் பார்த்தனர்.

“சாரிடா, உங்கள ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா!”, முந்தைய இரவிலிருந்து யோசித்ததை, தன்னை அறியாமல் நண்பர்களைப் பார்த்ததும் கேட்டிருந்தான், கைலாஷ்.

“அப்டியெல்லாம் இல்லடா, இப்ப எப்டி ஃபீல் பண்ற?”, அவனை பயமுறுத்தாமல் பதில் சொன்னதோடு, நண்பனின் நலனை அறிந்து கொள்ள விழைந்தார்கள், நண்பர்கள் இருவரும்.

“பெயின் இருக்கு, டாக்டர்ஸ் என்ன சொல்றாங்கடா?”, தன்னைப் பற்றி அறியாமல் இரண்டு நாட்கள் கழிந்ததை அறிந்திருந்தான். அதனால் மருத்துவர்களின் கணிப்பை அறிந்து கொள்ள கேட்டான்.

“சின்ன ஆப்பரேசன் பண்ணிருக்காங்க, சிறுவயசுனால நல்ல சாப்பாடா எடுத்துட்டு, பிஸியோதெரபி பண்ணா, சீக்கிரமா ரெக்கவர் ஆகிறலாம். ஆனா நார்மலா நடக்க கொஞ்சம் நாளாகும்னு சொல்றாங்க, உங்க வீட்ல உன் பேரன்ட்ஸூக்கு கால் பண்ணி இன்னும் சொல்லலடா, இப்போ சொல்லிறவா?”

“நல்ல வேல சொல்லல, நான் பாத்துக்கறேன்டா. அவங்க ரெண்டு பேரும் ரொம்ப பயப்படுவாங்க, மெதுவா சொல்லிக்கலாம்!”, என்பதை மிகவும் மெதுவாகவே சொன்னான்.

“இப்பவே சம்பவம் நடந்து ரெண்டு நாளாச்சு, இதுவே லேட்டுதான். இன்னும் மெதுவான்னா நீ எந்திரிச்சு நடந்த பின்னாடியா! போடா…! எப்டியும் சொல்லித்தான ஆகணும். உனக்கு துணைக்கு ஆள் யாரும் இல்லாம தனியா இங்க எப்டி இருக்க முடியும், கைலாஷ்!”, எதார்த்தம் பேசினான் ஒருவன்.

“இல்ல நான் அம்மாட்ட போன்ல பேசிக்கறேன்டா, இதுவர எவ்வளவு செலவாகிருக்கு, செலவுக்கெல்லாம் என்னடா பண்ணீங்க?”, நண்பர்களின் நிலை உணர்ந்து கேட்டான், கைலாஷ்.

“அது என்னடா பிசாத்து பணம், நீ மயங்கினவுடனே ரொம்ப பயம் வந்திருச்சுடா. நல்ல வேல! நைட்டு நேரத்துல இந்த ஹாஸ்பிடல்ல டாக்டர்ஸ்லாம் இருந்தாங்க. அதேபோல எல்லா ஃபெஸிலிட்டியும் அவைலபிளா… இந்த காம்பவுண்ட்குள்ளயே இருந்தது. இல்லனா ரொம்ப கஷ்டம் தான், நீ கண்ணு முழிச்சதே எங்களுக்குப் போதும்டா!”, ‘இனி எங்கள விட்டா சரிடா’ என்ற ரேஞ்சில் மற்றொருவன் பேசினான்.

இருநண்பர்களும் திருமணமானவர்கள். குடும்பத்தை விட்டுவிட்டு இரண்டு நாட்களாக, மருத்துவமனையே பழியாக நண்பனுக்காக இருக்கிறார்கள். விடயத்தை பகிர்ந்தால் வீட்டில் மண்டகப்படியாக வசை கிட்டும் என்பதால் இருவரும் ‘மூச்’ காட்டவில்லை.

“டாக்டர் எப்ப வருவாங்க?”, கைலாஷ்.

“எட்டு மணி போல ரவுண்ட்ஸ் ஆரம்பிச்சுருவாங்க!”, தனக்குத் தெரிந்ததை கூறினான் ஒருவன்.

“உனக்கு இங்க டயட்ல மார்னிங் பிரேக்ஃபாஸ்ட் வரும், நீ அத சாப்பிடு!. நாங்க இரண்டு பேரும் வெளிய கேண்டின்ல போயி எதாவது சாப்பிட்டு வரோம். உனக்கு வேற எதுவும் வேணும்னா சொல்லு!, இந்தா உன் மொபைல், சைலண்ட்ல போட்டுருக்கேன்”, என மொபைலை கைலாஷ் வசம் கொடுத்துவிட்டு, இருவரும் பேசியபடியே வெளியே சென்றார்கள்.

கைலாஷின் நண்பர்கள் இருவருமே சென்னையை சேர்ந்தவர்கள். கைலாஷ் மட்டும் கோவையை சேர்ந்தவன்.

பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி அனைத்தும் சென்னையில் என்பதால், சென்னையில் தான் கைலாஷிற்கு நண்பர்கள் அதிகம். சிறு வயதிலேயே உண்டு உறைவிடப்பள்ளியில் தங்கி படித்ததால் கோவையில் நண்பர்கள் அதிகம் கிடையாது.

பெற்றோரிடம் விடயத்தை எப்படிக் கூறுவது என யோசித்தபடி இருந்த கைலாஷ், சிறிது நேரம் கழித்து தனது தாய்க்கு அலைபேசியில் அழைத்திருந்தான்.

மறுபுறம் எடுக்கப்பட்ட உடனே, “என்னப்பா, போயிட்டு போன் போட்ட…! அதுக்கப்புறம் ஒரு போனு கூட இல்ல. சரி நாம பேசுவோம்னு போன் பண்ணாலும்… ரெண்டு நாளா போனே எடுக்கல, எப்ப ஊருக்கு வர!”, என கைலாஷின் தாய் கேட்டிருக்க…

“அம்மா! என் போனு ‘டச்’ கொஞ்சம் வேல செய்யல. அதான் வேலைக்கு கொடுத்திருந்தேன். அப்புறம், எனக்கும் இங்க வந்த வேல இன்னும் முடியாம இருக்கு, அதனால ஊருக்கு வர இருபது நாளுக்கு மேல ஆகும். எல்லாத்தையும் முடிச்சிட்டு சீக்கிரமா வந்திறேன்னு அப்பாகிட்டயும் சொல்லுங்கம்மா!”, என தனது நிலையை மறைத்து பேசியிருந்தான் கைலாஷ்.

“அப்பாகிட்டயும்… நீயே கூப்ட்டு ஒரு வார்த்தை பேசிரு கிஷோரு… !, இல்லனா அப்டி என்ன புது வேலனு எங்கிட்ட அவரு கேட்டா… எனக்கு எதுவும் சொல்லத் தெரியாது!”

“சரிம்மா… நான் அப்பாகிட்ட பேசுறேன்!”, என்றபடி எதேச்சையாக அறைவாயிலை நோக்கித் திரும்பியவனின் பார்வையில் பட்டவளை, எதிர்பாராத இடத்தில், எதிர்பாரா தனது நிலையில் கண்டவன், மறுபுறம் பேசும் தாயின் பேச்சு காதில் விழாதவனாய், கண்ணில் விழுந்தவளைக் கண்டு தன்னையே கேட்டிருந்தான், ‘அவள்தானா இவள்?!’
—————————————-

கிஷோர் கைலாஷ், ஆறடி உயர மாநிறமான ஆணழகன். எதிர்பாரா விபத்தால் சற்றே நிறம் மாறி பிரபஞ்ச மூல நிறத்தின் அருகிலிருந்தான். மூன்று நாள் சவரம் செய்யாத முகம் கூட அவனது களையைக் கூட்டியிருந்தது.

காதல் தோல்வியோ, டொக்கு வாங்கிய கன்னங்களோ இல்லாமலேயே, கன்னங்களில் வளர்ந்திருந்த மூன்று நாள் முடி அவனுக்கு மேலும் கவர்ச்சியைக் கூட்டி களையாகக் காட்டியிருந்தது.

ஆணழகனை, அரையழகனாய் மாற்றிய மருத்துவமனை, அவனின் மனமறிந்து உரிய நபரை எதிர்பாரா நேரத்தில் அவனது அறைக்கு அனுப்பி வைத்திருந்தது.

நிர்வாகமோ, வந்தவளோ அறியாத ரகசியங்களை உள்ளடக்கியவன், கட்டிலில் பேசண்டாக இருக்க, ஃபேசன் உடையை மறந்து அலுவலுக்கு உரிய உடையில் வந்தவள், பணியில் கண்ணும் கருத்துமானவளாக இருந்தாள்.

எதையும் அறியாமல் தனது அறைக்குள் நுழைந்தவளைக் கண்டவன் துணுக்குற்றிருந்தான். சிம்பிளான சுரிதாரின் மேல் டாக்டர்கள் அணிவது போன்ற வயிட் கோட் அணிந்து வந்தவளை பார்த்தபடியே இருந்தான்.

வந்தவள் பேசண்ட்டை பார்க்காமல் அவனது ‘கேஸ் பைலை’ எடுத்து படித்தாள். கடந்த இரண்டு தினங்களில் குறிக்கப்பட்டிருந்த தகவல் அடங்கிய பைலை எடுத்து வாசித்தவளின், முகபாவங்களை வாசித்திருந்தான், கைலாஷ்.

முந்தைய தினம் இரவு வரையிலான தகவல்கள் மட்டும் கேஸ் ஃபைலில் குறிக்கப்பட்டு இருந்தன. அதில் அதற்குமேல் விடயங்கள் நிரப்பப்படாமல் இருக்க, நிமிர்ந்தவள்,

“சார், உங்களுக்கு இன்னிக்கு தான் ரூம்கு ஷிப்ட் பண்ணிருக்காங்க, உங்க மார்னிங் டயட்… நானே சிம்பிளா சொல்லிட்டு வந்திருக்கேன்!”, தனது கையில் இருந்த வாட்சை திருப்பிப் பார்த்தவள், “இப்ப வந்திரும்! மார்னிங் மட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க…

அடுத்து இன்னிக்கு நூன்ல இருந்து கரெக்டா டயட் ஃபாலோ பண்ணிக்கலாம், பேப்பர் தரேன். உங்களுக்கு போன் பிராக்சர் இன்ஜுரி. சோ என் டேபிள்ல போயி அதற்கான பேப்பர் எடுத்துட்டு வரேன். உங்களுக்கு பிடிச்ச ஐடெம்ஸ் நீங்க சூஸ் பண்ணிக்குடுங்க!”, மூச்சு விடாமல் பேசியவளை கண்டவன்,
‘கோமதியோட (கைலாஷின் தாய்) பெஸ்டி!… ரொம்ப காம்மா (Calm) இருப்பானு…! இவ்ளோ நாளா நினைச்சிருந்தேனே… ! ! ! இப்பவுல்ல தெரியுது, விட்டா எஸ்.பி.பி. மாதிரி மூச்சடக்கி பேசும்னு’ என்று நினைத்தபடியே மூச்சடைக்கி ‘வச்ச கண்ண வாங்காமல்’ தனது முன் நின்றிருந்தவளை இமைக்க மறந்து பார்த்திருந்தான், கைலாஷ்.

அவளின் ஒட்டாத அந்நிய, ஆனால் பணிக்கான பக்குவப் பார்வையிலேயே… அவனை அவளுக்கு தெரியவில்லை என்பதைக் கண்டு கொண்டான், கைலாஷ். ஆனாலும் அவளிடம் எதையும் ஊர்ஜிதம் செய்யும் எண்ணமில்லை, அவனுக்கு.

“நோ இஸ்யூஸ்…! மிஸ்…!”,என்றவனிடம்

“சரி சார், கொடுத்து விடறேன். நோட் பண்ணி வைங்க, ரிட்டன் வரும்போது நானே உங்க ஒப்பீனியன் பாத்துட்டு கலெக்ட் பண்ணிக்கறேன்”, என்றவள் அங்கிருந்து அகன்றிருந்தாள்.

வெளியே சென்றவளை அவனின் விவரம் தெரிந்த நாள் முதல் அறிவான். ஆனால் அவளுக்கு விவரம் தெரியும் முன் அந்த ஊரை விட்டுப் படிக்க சென்னை வந்ததால் அதிகமான பழக்கம் அவளுடன் இல்லாமல் போயிருந்தது.

சிறுபிராயத்தில் இருந்த அதே முகம் அவளுக்கு. மாறவே இல்லை. அவளின் ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும் போது கடைசியாக பார்த்த ஞாபகம், கைலாஷிற்கு. அவன் அப்போது தான் கல்லூரியில் பிபிஏ படித்துக் கொண்டிருந்தான். அதன்பின் அவளை வெளியிடங்களில் வைத்து கோவையில் பார்த்திருக்கிறான். மற்றபடி பேசியதில்லை.

ஏனோ முன்பு போல தங்களின் வீட்டிற்கு அவள் வருவதில்லை. கிஷோரின் அம்மா தேவகி, அடிக்கடி அவளை தன்னுடைய பேச்சில் கொண்டு வர, அதை ஊக்கப்படுத்தவோ இல்லை, அலட்சியப்படுத்தவோ செய்யாமல் அகன்றுவிடுவான்.

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு தனது தாய், தந்தை இருவரும், அவளை தனக்கு மணமுடிக்க கேட்டதையும், அவள் அதற்கு மறுப்பு தெரிவித்த செய்தியையும் அறிந்திருந்தான். அதற்கான காரணமாக அவள் கூறிய வார்த்தையையும் எண்ணி மனதில் சிரித்திருந்தான் அப்போது. எப்போதும் அதை நினைத்தால் கைலாஷிற்கு சிரிப்பு வரும்.

மருத்துவமனை அட்டெண்டர் ஒருவர், 1×8 சைஸிலிருந்த சிறு புத்தகத்தை போன்ற தாள்களின் தொகுப்பை, கைலாஷின் கையில் கொடுக்க, வாங்க கை நீட்டிய கைலாஷ், என்னவென கேள்வியாக அட்டெண்டரைப் பார்க்க…?

“இந்த பேப்பர… டயட்டம்மா குடுத்துவிட்டாங்க!”, என கூறியவாறு கைலாஷின் கையில் கொடுத்திருந்தான், அட்டெண்டர்.

“ஓஹ்… !”, என வாங்கிய கைலாஷ், கையில் வாங்கியதை இருபுறமும் திருப்பி பார்த்தான்.

‘பதினைந்து பக்கங்களுக்கு மேல இருக்கறதை நாங்கள் பேப்பருனு சொல்லமாட்டோம். புக் அப்டிதான் சொல்லுவோம்’, என எண்ணியவனாய் உள்ளிருந்தவற்றை பிரித்துப் பார்த்தான்.

“சரி நான் குறிச்சு வைக்குறேன்!”, என்று அட்டெண்டரை பார்த்துக் கைலாஷ் கூற, தலையை ஆட்டிவிட்டு அங்கிருந்து அகன்று சென்றிருந்தான், அட்டெண்டர்.

வாங்கியதை பார்த்தபடி இருந்தவன், ‘என்னங்கடா இது, ட்ரீட்மெண்ட்கு வந்தா… புக்க கைல குடுத்து குறிக்க சொல்றீங்க. அத வச்சு எதுவும் எங்க உடம்பப் பத்தி குறி எதுவும் சொல்லுவீங்களாடா! ஒன்னும் புரியமாட்டுது!’, என நினைத்தவன் அதைப் புரட்டி வாசித்துப் பார்க்க ஆரம்பித்தான்.

பேனா எதுவும் கையில் இல்லாமல், அதை முழுவதும் பார்த்து முடிக்கும்போது, காலை உணவை அறைக்குள் கொண்டு வந்து வைத்துச் சென்றிருந்தான், டயட் சப்ளையர்.

அதே நேரம் நண்பர்களும் அவனது அறைக்குள் வர,
“வாங்கடா சாப்பிடுவோம்”, என கைலாஷ் அழைக்க

“நாங்க சாப்பிட்டுத்தான வந்தோம், நீ சாப்பிடு”, என்று நண்பர்கள் கூற,

கீழே இறங்கிச் சென்று கை கழுவி வர முடியாத நிலையில் தற்போது என்ன செய்ய என கைலாஷ் விழிக்க, அதே நேரம் கைலாஷின் மெனுக்கார்ட் அடங்கிய தொகுப்பை வாங்க உள்ளே நுழைந்தாள், டயட்டீசியன் அனன்யா.

“பேப்பர்ஸ் ரெடியா இருக்கா சார்?”, என கைலாஷைப் பார்த்துக் கேட்டாள், டயட்டீ

“இல்ல மிஸ்… ! பென் எங்கிட்ட இல்ல, அதான் ஃபிரண்ட்ஸ் வந்தவுடனே வாங்கி டிக் பண்ணித் தரலாம்னு நினச்சிருந்தேன். ஃபிரண்ட்ஸூம், நீங்ளும் ஒரே நேரத்தில தான் இங்க வந்தீங்க. நான் டிக் பண்ணி கொடுத்து விடறேனே!”, பணிவாகவே கூறினான்.

அதற்குள் அறைக்குள், அனன்யாவின் அலைந்த பார்வைக்குள் சிக்கிய உணவைப் பார்த்திருந்தாள்.

“பிரேக்ஃபாஸ்ட் வந்திருச்சு போலயே!, இன்னும் நீங்க சாப்பிடலயா!. ஃபர்ஸ்ட் சாப்பிடுங்க! அப்புறம் வந்து நானே கலெக்ட் பண்ணிக்கறேன்”, ‘நீ தேற முதல்ல சாப்பாட்ட தேடு!’ என நேரடியாகக் கூறாமல் கூறினாள்.

நண்பர்கள் இருவரும் அவர்களின் மொபைலில் கவனத்தை வைத்திருக்க, கைலாஷ் உண்ண ஏதுவாக எந்த உதவியும் செய்யாமல் இருவரும் இருப்பதைக் கவனித்தவள்

“உங்களுக்கு ஹெல்ப்கு வீட்ல இருந்து யாரும் இன்னும் லேடீஸ் வரலயா சார்!”

“வந்துட்டு இருக்காங்க!”,என கைலாஷ் கூற, போனில் கண்ணும், இவர்களின் பேச்சில் காதும் வைத்திருந்த நண்பர்கள் இருவரும், ‘அப்பாடி. அப்ப அவங்க வந்தவுடனே இவன அவங்ககிட்ட ஒப்படைச்சுட்டு கிளம்பிற வேண்டியதுதான்!’, என நண்பனின் பதிலைக் கேட்டு நினைத்திருக்க

“அப்டியா!, சீக்கிரமா வரச் சொல்லுங்க, ஒன்வீக் நீங்க, அங்க இங்க அதிகம் அலட்டாம இருந்தா தான், கால்ல போட்ட ஸ்ட்ரிச் செட்டாகி உங்க வூண்ட் கொஞ்சம் சரியாகும். வெளியே தெரியற இந்த ஸ்குரூஸ் கலட்டற வர கேர்ஃபுல்லா இருக்கணும். இல்லனா கஷ்டம்!”, என நிசம் சொன்னாள், டயட்டீசியன்.

“இங்கயே ஹெல்ப்கு யாரையும் அரேன்ஞ் பண்ணித் தருவாங்களா?”, என டயட்டீசியனிடம் கைலாஷ் கேட்க, ‘எதுக்குடா?’ என இரு நண்பர்களும் நண்பனை நிமிர்ந்து பார்த்தார்கள்.

“ஏன், உங்களுக்கு யாரும் வீட்ல இருந்து இப்ப ஹெல்புக்கு வர முடியாதா?”, டயட்

“இல்ல, பேரண்ட்ஸ் ரெண்டு பேரும் வயசானவங்க. விசயம் இன்னும் அவங்களுக்கு சொல்லல. சொன்னா பயந்துருவாங்க!. அவங்களால இங்க வந்து அலையவும் முடியாது. அதான் கேட்டேன். எவ்வளவுனாலும் பே பண்ணிறேன்”, பவ்யம், பக்குவம் இரண்டின் இருப்பிடம் போல மாறி, தங்கள் நண்பன் பேசுவதைக் கேட்ட இருவரும், ‘என்னடா இவன், இன்னும் ஒரு முடிவுக்கும் வரலயா!’, என கைலாஷை கைமா பண்ணும் வெறியோடு பார்த்திருந்தார்கள்.

“அப்டியா!, உங்க வார்ட் சீஃப் கிட்ட சொன்னா… அவங்களே ஏற்பாடு பண்ணித் தருவாங்க, டே அண்ட் நைட்கு தனித் தனியா ஆள் அரேன்ஞ் பண்ணிக்கலாம்”, என்றவள்

“அப்ப அரேன்ஞ் பண்ற வர உங்க ஃபிரண்ட்ஸ் யாரையாவது ஒருத்தவங்கள ஹெல்புக்கு வச்சுக்கங்க!”,டயட்

“தாங்க் யூ மிஸ்!”, என்று கைலாஷ் கூற அங்கிருந்து அகன்றவள்

பின் திரும்பி வந்து, “சீஃப்கிட்ட நானே போகும் போது சொல்லிட்டுப் போறேன்!”, என்று கூறிக் கிளம்பினாள், அனன்யா.

கைலாஷின் மனம்… அங்கிருந்து கிளம்பியவளை எண்ணியபடி… ‘வந்த வேல முடிஞ்சுது. அதான் போயிட்டா… ! அவளுக்கென்ன…!!!’, என கைலாஷின் மனம் நினைத்திருந்தது.
—————————————————-

error: Content is protected !!