Avalukkenna…!-2

Avalukkenna…!-2

அத்தியாயம்
2

ஐந்தரை அடி உயர அழகுப் புயல். அமைதியோ அமைதி. அமைதிக்கெல்லாம் அமைதி. மனம் முழுவதும் ஈரம் இருக்க, துன்பம், துயரம், நோய், வறுமை, முதுமை என யாரைப் பார்த்தாலும் இளகும் இரக்க குணம்.

அக்குணம் தான் பெற்றவர்களையும், தனது ஆஸ்தி, அந்தஸ்து, அதனோடு அவளின் ஆசைகள் அனைத்தையும் மறந்து, தனது பிறந்த ஊரைவிட்டு, அவளை சென்னை வரை ஓடி வரச் செய்திருந்தது.

‘பிறப்பினால் வந்த ஒன்றை இறப்போடு இறக்கச் செய்வோம், அதுவரை இயலாதோருக்கு, இல்லாதோருக்கும் இரங்குவோம்’, எனும் மந்திரத்தோடு அனைத்தையும் கடந்திருந்தாள்.

தன்னை மாற்றிக் கொள்ள அவள் பிரியப்படவில்லை. இழப்பு என எதையும் எண்ணவில்லை. தன்னிடமிருந்து சென்றது, தனக்கானது அல்ல என்ற தெளிவு அவளிடம் இருந்தது.

நம்பிக்கை என்ற ஒற்றைச் சொல்லுக்கு ஓராயிரம் வரைமுறைகளை சமூகம் சொல்லி வருகிறது. அது அவரவர் எதிர்பார்ப்புகளுக்கும், எல்லைமீறலுக்கும் இடைப்பட்டதாக, நாணல் போல… அதன் உண்மைத் தன்மை இருப்பதை அனன்யாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

சொந்த ஊரில் வீதிக்கு ஒரு மருத்துவமனை இருக்க, அவளால் அங்கு டயட்டீசியனாக பணியை தொடர முடியவில்லை. நடந்த விடயம் அவளை சென்னை வரை விரட்டியிருக்க, விரக்தி இல்லை அவளுக்கு. வருத்தம் இருந்தது.

தங்கள் ஊரிலேயே இருந்த பிரபல மருத்துவமனையின் வேலைக்கான முன் உத்தரவை கையிலேயே வைத்திருந்தாலும், அங்கு பணியைத் தொடர விரும்பவில்லை. ஆனால் அம்மருத்துவமனைக்கு சென்று, அவர்களின் கிளை இருக்கும் வேறு ஊர்களில் அவளுக்கான பணியை மாற்றித் தரும்படி கேட்டாள்.

மருத்துவமனை நிர்வாகம், அவளின் ஈடுபாட்டுடன் கூடிய பணியை அறிந்திருந்தமையால், அவர்களது சென்னை கிளைக்கு அனுப்பி வைத்திருந்தனர்.

தினந்தோறும், பெற்றோருடன் காலை, மாலை இரு வேளையும் அலைபேசியில் அழைத்துப் பேசுவாள். அத்தோடு மருத்துவமனை நோயாளிகளின் நோயின் தன்மைக்கு ஏற்ற மூன்று வேளை உணவைத் திட்டமிடுதல், அவர்களுக்கு கவுன்சிலிங் என அன்றைய தினத்தை கழிப்பாள்.

வருடங்கள் மூன்று தாண்டியிருந்தாலும், இன்னும் பழைய நினைவுகளால் உண்டான வருத்தம் மனதில் மிச்சம் இருந்தது. சொச்சம் நாட்களை கழித்து, மனதில் இருக்கும் மிச்ச வருத்தம் பூஜ்யம் ஆகும் போது ஊருக்கு திரும்புவதாக பெற்றோரிடம் கூறியிருந்தாள், அனன்யா.

எவ்வளவு கூறினாலும் பெற்றோரை கோவை சென்று காணமாட்டாள். அவர்களே மாதம் ஒருமுறை அவள் தங்கியிருந்த, அவ்வளாகத்தினுல் இருந்த மருத்துவமனைக்குரிய விடுதியில், அவளை நேரில் வந்து சந்தித்துப் போவார்கள்.

அனன்யாவின், எட்டு மணி நேர பணிக்குப் பின் விடுதிக்கு வந்திருந்தாள். இதுவரை எவ்வளவோ நோயாளிகளைப் பார்த்திருக்கிறாள். யாருடனும் அளவோடு வைத்துக் கொள்வாள். ஆனால் அனைவரது நலனிலும் அதிக அக்கறை எடுத்துக் கொள்வாள்.

‘இன்று நான் இயல்பாக இல்லையோ!

அதிகப்படியாக ஒரே ஒரு நோயாளியை மட்டும் தனி கவனம் எடுத்தது எதனால்?

கடந்த மூன்று ஆண்டுகளில் யாரையும் தனது அனுபவத்தில் இதுபோல கவனித்தது இல்லையே!!!

இவனை மட்டும் கருத்தில் வைத்துக் கவனிக்க வேண்டிய அவசியம் என்னவாக இருக்கும்!!!

பரிச்சயமான உணர்வு அவனிடம் மட்டும் தோன்றுவது ஏன்!
எப்போது, எங்கே, யாருடன், எந்த இடத்தில், எப்படி பார்த்தேன்?’ என தனக்குள்ளே கேள்வி எழுப்பியவளாய் ஓய்வு நேரத்திலும் படுக்கையில் படுத்தவாறு, மனதிற்கு வேலை கொடுத்திருந்தாள், அனன்யா.

‘தன்னை தனிப்பட்டு அழைத்து பேச அவன் முயற்சிக்கவில்லை.

தன்னைக் காணும் கண்களில் ஆவலில்லை.

அதே போல அலட்சியமும் இல்லை.

ஆனால் அறிமுகமானவர்களை பார்ப்பது போல இயல்பான அவன் பேச்சு’, அவளை மேலும் சிந்திக்க வைத்ததோடு, அவனைச் சந்திக்கத் தூண்டியது. பார்வையில் வேறு எந்த உணர்வையும் அவன் கண்கள் காட்டவில்லை என்பதையும் மனம் யோசித்தது.

‘நாளைக் காலை அவனது மருத்துவமனை எண்ணை வைத்து, அவனின் பிறந்த ஊர் எது என்று மறக்காமல் பார்க்க வேண்டும்!’, என எண்ணினாள், அனன்யா.

அவளுக்கு முதல் பார்வையில் யாரையும் இதுபோல தோன்றியதில்லை. அதுவும் ஒரு நோயாளியை கண்டு குழம்பிய, புலம்பிய அனுபவம்! அவளை அன்று நித்திரை கொள்ளவிடவில்லை. மனதில் ஏதோ ஒரு கலக்கம் வந்திருந்தது.

எதனால் இப்படி தனக்கு என்று எண்ணியபடி படுத்திருந்தவள், உறங்கியதே விடியலுக்கு சற்று முன்புதான்.

ஆனாலும், எழுந்த பழக்கம் காரணமாக உறங்கிய சற்று நேரத்தில் விழிப்பு வந்தது. நேரம் பார்த்தவள், அடித்துப் பிடித்துக் கிளம்பி மருத்துவமனைக்கு வந்திருந்தாள்.

வந்தவளுக்கு பணிகள் குவிந்து இருக்க, காலையில் வந்தவுடனே அவளுக்கு கொடுக்கப்பட்டிருந்த சிஸ்டத்தில் அமர்ந்து, தன்னைக் குழப்பியதுடன், தன்னைத்தானே புலம்பவிட்டவனின் வீட்டு முகவரியைப் பார்த்தாள். அதில் சென்னை முகவரி இருந்தது.

‘ஹப்பா…! அந்த ஹேண்ட்சம் பேசண்ட்… கோவை இல்ல! சென்னைதான் பெர்மனென்ட் அட்ரஸ்ல இருக்கு. நமக்கு தெரிஞ்சவன்…! சென்னைல இருக்க சான்சே இல்ல!’, என்று பெருமூச்சு விட்டவள் தனக்கு ‘சும்மா அப்டி தோணுது!’ என கலங்கிய மனதைத் தேற்றி பணிகளில் கவனமானாள்.

பத்து மணிக்கு மேல் கைலாஷின் அறைக்கு அனன்யா சென்றிருக்க,
கைலாஷின், கால் கட்டுகள் மாற்றப்பட்டு புதியதாக இருந்தது. அவனுக்கு உதவிக்காக வந்திருந்த அட்டெண்டர் பெண், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கையில் இருந்த புத்தகத்தை வாசித்தபடி இருந்தாள்.

கண்களை மூடிப் படுத்திருந்தவன், அறைக்குள் வந்திருந்த அரவத்தில் விழித்துப் பார்த்தான். விழிகளில் விழுந்த பிம்பத்திற்கு சொந்தமானவளை, அதே தொனியில் பார்த்தான்.

“நீங்க சூஸ் பண்ண ஃபூட் தான நேத்து லன்ச், டின்னர்கு கொண்டு வந்து கொடுத்தாங்க!”, டயட்

“ஆமா மிஸ்…!”, கைலாஷ்

“குவாண்டிட்டி எல்லாம் ஓகே தான!”

“ம்…”, என தலையை ஆட்டினான், டயட்டீசியனைப் பார்த்து

“டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது என்ன சொன்னாங்க!”

“ட்டூ டேஸ்குரிய இம்புரூவ்மெண்ட் இருக்குனு சொன்னாங்க, இந்த வெளியில போட்டுருக்கிற ஸ்குரூஸ் ரிமூவ் பண்ற வர ஜாக்கிரயா பாத்துக்கணும்னு சொன்னாங்க. டாக்டர் சொன்னபிறகு பிஸியோதெரபி ரெகுலர் பண்ண சொன்னாங்க!”, என கைலாஷ் கூற, அதைக் கேட்டபடியே அவனுடைய கேஸ் டீடையல்ஸை எடுத்துப் பார்த்தாள், அனன்யா.

மருந்துகள் எதுவும் புதிதாக கொடுக்கப்படவில்லை. ஏற்கனவே கொடுக்கப்பட்டிருந்த மருந்துகள் மாற்றப்படவில்லை என்பதை உறுதி செய்தவள்,

“உங்களுக்கு வேற எதுவும் அலர்ஜி, இல்லனா… வேற எதுனா இஷ்யூஸ் இருந்தா, கண்டிப்பா எங்களுக்கு உடனே கன்வே பண்ணிருங்க சார்!”, என்றவள் அதற்கு மேல் அங்கு என்ன பேச என யோசித்தபடியே, ஒன்றுமில்லை என முடிவுக்கு வந்தவள், அங்கிருந்து கிளம்பினாள்.

அனன்யாவின் பேச்சுக்கு, ‘சரியென தலையாட்டியவன்’, அவள் அங்கிருந்து கிளம்பியபின், தனது சார்ஜ் செய்யக் கொடுத்த மொபைலை, தனது அட்டென்டரிடம் கேட்டு வாங்கினான். அதன்பின் தனது மெயில் ஐடிக்கு வந்திருந்த தகவல்களைப் பார்த்துவிட்டு, நண்பனை அழைத்தான்.

அவனது லேப்பை அவன் தங்கியிருந்த லாட்ஜின் அறையில் இருந்து எடுத்து வந்து கொடுக்குமாறு நண்பனிடம் கூறியிருந்தான்.

உடனே பதிலனுப்ப வேண்டியிருந்ததால், தனது லேப்டாப்பை எப்போது எடுத்து வந்து, தன்னிடம் கொடுக்க முடியும் என அலைபேசியில் நண்பனிடம் கேட்டான்.

தனது அறைக்குள் மீண்டும் வந்த, அனன்யாவைப் பார்த்துவிட்டு… விரைவாக அலைபேசியில் நண்பனிடம் விடயத்தைக் கூறிவிட்டு வைத்தான், கைலாஷ்.

“உங்க அட்டெண்டர ஹெட் வந்து பாக்க சொன்னாங்க, அதான் சொல்ல வந்தேன்!”, என்றவள் அட்டெண்டரை அவ்வார்டின் ஹெட் அழைப்பதாகக் கூறி அங்கிருந்து அனுப்பினாள், அனன்யா.

அட்டெண்டர் சென்றபின், கைலாஷை நோக்கி, “உங்களுக்கு முதல்ல அட்டெண்டர் வேணும்னு நான் வார்ட் ஹெட்கிட்ட சொன்னதால, இப்போ என்னை கூப்டு பேசினாங்க!”

“என்ன சொல்றாங்க!”, கைலாஷ்

“உங்க வீக்லி பில்ஸ் வரும்போது அமௌண்ட் செட்டில் பண்ணிறலாமா, இல்லனா டிஸ்சார்ஜ் ஆகும்போது ஃபுல்லா பண்றீங்களானு கேட்டு இன்னிக்கு ஒரு ஃபார்ம் வரும். அதுல உங்க கன்வீனியன்ட் படி, டிக் பண்ணிக்கலாம்.
பட்…, உங்க அட்டெண்டர்கு டெய்லி தான் நீங்க பே பண்ற மாதிரி வரும். அதனால அத நீங்க டெய்லி பண்ற மாதிரி கைல கேஸ் வச்சிருக்கீங்களா?, இல்லனா எதாவது ஏற்பாடு பண்ணிட்டீங்களா?”, என கைலாஷிடம் கேட்டிருந்தாள் அனன்யா.

“எங்கிட்ட கைல இப்ப நோ கேஷ், வேணும்னா ஃபிரண்ட எடுத்துட்டு வந்து தர சொல்றேன்”, கைலாஷ்

“ஏன் சார்!, உங்க ரிலேட்டிவ்ஸ், வேற யாரும் ஹெல்புக்கு உங்களுக்கு வர முடியாதா?”

“இல்ல, எனக்கு இங்க ஹெல்புக்கு ஃபிரண்ட்ஸ் மட்டும்தான்!”, என்ற கைலாஷின் வார்த்தைகளைக் கேட்டவள்

“ஓஹ் சாரி சார்!, வேற எதுவும் உங்களுக்கு வேணும்னா உங்க அட்டெண்டர் கிட்ட சொல்லலாம், பட்… ஏடிஎம் ல பணம் எடுக்கறது, எதாவது வெளியில காஸ்ட்லி திங்க்ஸ் வாங்கணும்னா… அந்த மாதிரி ஹெல்புக்கு நீங்க அவங்கள நம்ப வேணாம்.

இங்க ஹாஸ்பிடல்ல ஹெல்ப்கார்ட் வாங்கிட்டு உங்க மணி அதுல கொஞ்சம் ட்ரான்ஸ்பர் பண்ணிட்டா, ஹாஸ்பிடல் எக்ஸ்பென்சஸ்கு ஃபுல்லா அந்த கார்ட்டே யூஸ் பண்ணிக்கலாம். கேஸ்லெஸ் திங்க்ஸ் பர்சேஸ் இந்த காம்பவுண்ட்குள்ள மட்டும், இந்த கார்ட் வச்சு பண்ணிக்கலாம்.

மெடிசன்ஸ்ல இருந்து எல்லாமே நீங்க அது யூஸ் பண்ணிக்கலாம். அது நான் ரெடி பண்ணித் தரேன். அத உங்க அட்டெண்டர் கிட்ட நீங்க கொடுத்து யூஸ் பண்ணலாம். அது நோ பிராப்ளம்!”, என்றவள், அங்கிருந்து சென்று அதற்கான அப்ளிகேசன் பார்மை எடுத்து வந்தாள்.

பிறகு, ஹெல்ப் கார்டை பெற வேண்டிய ஃபார்மில் கைலாஷிடம் கையெழுத்து வாங்கி உரிய இடத்தில் சமர்ப்பித்தாள்.

கார்டை வாங்கி வந்து தந்தவள், “உங்க மணி ட்ரான்ஸ்ஃபர் மட்டும் உங்களுக்கு நம்பிக்கையானவங்கள வச்சு… எவ்வளவு வேணுமோ இந்த கார்ட்ல ட்ரான்ஃபர் பண்ணிக்கங்க சார்!”, என கைலாஷிடம் வந்து கொடுத்தாள்.

“நீங்க தப்பா நினச்சுக்கலனா நீங்களே என் கார்ட்ல இருந்து பிஃப்டி தௌசண்ட் மட்டும் ட்ரான்ஸ்ஃபர் பண்ணித்தர முடியுமா?”, என கைலாஷ் அவளிடமே உதவி கேட்க

யோசித்தவள், “ட்யூட்டி முடிஞ்சு கிளம்பறப்போ… மணி ட்ரான்ஸ்ஃபர் செய்து கொடுக்கறேனே!”, என்றாள்.

“ஓஹ், சரி மிஸ்…!”

“என் நேம் அனன்யா சார், நீங்க பேரு சொல்லியே சொல்லுங்க”, அடிமனம் இடித்தது, ‘இப்போ அவன் உன் பேரு கேட்டானா? எதுக்கு சொல்ற… ! அவங்கிட்ட இதல்லாம்!’.

மேல்மனம் சொன்னது, ‘பேரு சொன்னா என்னாகும். பாவம் ஸ்கூல் பையன் மாதிரி மிஸ்ஸூங்கறான்… போறான். இத போயி பெருசா எடுத்துகிட்டு’, என மனதை அதற்கு மேல் பேசவிடாமல், அவளிடம் பேசுபவனைக் கவனித்தாள்.

“கே, தாங்ஸ் அன்யா!”, என கைலாஷ் நன்றியை கூற,
‘என்னது கன்யா வா… ! சே!!! அன்யானு சொல்லிருப்பான் போல! நம்ம காதுல… பசி மயக்கத்தினால கொஞ்சம் கேக்காது அன்… கன் னுனு கேட்டிருச்சு போல… ஜஸ்ட் இயர் ஸ்லிப்பு…’ என நினைத்தவளிடம்

“அன்யா… அப்டி கூப்பிடலாம்ல!”, என கைலாஷ் வினவ

“ஓஹ்… சரி சார்!”, என மனமெல்லாம் அவனின் அன்யாவில் மையம் கொண்டிருக்க, வந்த மையலில் சரியென்றிருந்தாள்.

“நீங்களும் அப்போ என்னை கைலாஷ்னே பேரு சொல்லுங்க அன்யா, நான் உங்க பேரு சொல்லி கூப்பிடும்போது… நீங்க மட்டும் என்ன சார்னா எனக்கு ஒரு மாதிரியா அன்ஈஸியா இருக்கும்ல!”, ‘எனக்கு எதுக்கு கஷ்டத்தைக் குடுக்கற என் தேவதையே’னு சொல்ல முடியாம, சாந்தமா கைலாஷ் சார் பேசிட்டாரு.

“நீங்க கொஞ்சம் பெரியவங்க, உங்கள போயி எப்டி பேரு சொல்றது!”, என அவள் தயங்க

“பேரு…! கூப்ட தான வச்சிருக்காங்க”, தத்துவம் நாவில் தவழ்ந்திட “அதனால… நீங்க என் பேரு சொல்லலாம்!”, என மிகவும் தீவிரமாக தீர்ப்பு கூறியிருந்தான் கைலாஷ்.

“கே கைலாஷ்!”, என்றவளின் பதில் கேட்டு, உள்ளம் குதூகலித்தாலும், குன்று போல அசையாமல் இருந்தான்.

“நான் ஃப்ரீயான பின்ன வந்து பாக்கறேன். கார்ட் மட்டும் கைல வச்சுக்கங்க, வந்து வாங்கிக்கறேன்!” என அவள் கிளம்பவும் குன்று போலிருந்தவனின் மனம், உடைந்த கண்ணாடி சிதறியது போல மாறியிருந்தது.

அன்யா கிளம்பியிருக்க, கைலாஷின் அட்டென்டர் அறைக்குள்ளே வந்தார்.

கைலாஷின் நண்பர்கள் இருவரும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் போது வந்து நண்பனை நலம் விசாரித்துச் சென்றார்கள். அனன்யா அவளால் இயன்ற அனைத்து உதவிகளையும் கைலாஷ் கேட்காமலேயே செய்து கொடுத்தாள்.

அலைபேசி எண்கள், அனன்யா, கைலாஷிற்கு இடையே முதலில் பரிமாறப்பட்டன. அதன்பின் வாட்சப் வழியே முக்கிய செய்திகள் பகிரப்பட்டது. எதிலும் நேர்த்தி இருந்தது. குறுக்கு வழியோ, குதர்க்கமோ இல்லாமல் நாட்கள் சென்றன.

கட்டுகள் பிரிக்கப்பட்டன. திடகாத்திரமான உடம்பு ஆதலால் படிப்படியான முன்னேற்றம் விரைவாகவே வந்திருந்தது, கைலாஷிற்கு.
பிஸியோதெரப்பிஸ்ட், ஒரு பக்க ஸ்டிக்கின் உதவியுடன் கைலாஷை நடக்கப் பழக்கினார்கள். இருபது நாட்களில் நன்கு தேறியிருந்தான்.

பணம் தண்ணீராக செலவளிந்தது. அவனது கார்டில் பேலன்ஸ் இல்லாமல் போயிருந்தது. அடுத்து டிஸ்சார்ஜ் என்ற நிலையில், தந்தைக்கு அழைத்து தனது அக்கவுண்டிற்கு பணம் போட சொல்லியிருந்தான், கைலாஷ்.

தொடர்ச்சியாக வங்கி விடுமுறையாக இருந்ததோடு, அவனின் தந்தை, மகன் கூறியதை முதலில் மறந்து போயிருந்தார். அக்கவுண்டில் பணம் போட மறந்ததுடன் மகன் கேட்கும் வரை நினைவில் வராமல் இருந்துவிட்டார்.

தனது தந்தையிடம் இதற்குமேல் பேசினால் விபத்து பற்றி கூற வேண்டி வரும் என நினைத்தவன், அதற்கு மேல் பேசாமல் விட்டிருந்தான், கைலாஷ். அடுத்து தனது நண்பர்களிடம் கேட்டான்.

கிளம்பும் நாள் ஒன்றரை இலட்சம் போல மீதம் கட்ட வேண்டியிருந்ததால் நண்பர்களை பணத்திற்காக நாடியிருந்தான். நண்பர்கள் கையிலும் அவ்வளவு பணம் இல்லை என்று கூற, இறுதியாக அனன்யாவிடம் உதவி கேட்கலாமா வேண்டாமா என்ற யோசனை, கைலாஷிற்கு.

ஆனால் எவ்வளவோ உதவிகள் செய்திருந்தவளிடம் பணம் வேண்டுமென கேட்க மனம் சற்று முரண்டியது.

வழமைபோல எட்டுமணி நேர பணி முடிந்து அவளது இருப்பிடம் நோக்கிச் சென்றிருந்தாள், அனன்யா.

நண்பர்கள் அவனை டிஸ்சார்ஜ் செய்து அழைத்துச் செல்ல, மாலையில் மருத்துவமனைக்கு வந்திருந்தனர். ஆனால் பணம் முழுவதும் கட்ட போதிய இருப்பு இல்லாமல் என்ன செய்யலாம் என பல வகையிலும் யோசித்து இறுதியில் அனன்யாவைத் தவிர வேறு யாரிடமும் கேட்க முடியாத சூழல்.

இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே தனது தந்தையால் வங்கி மூலம் தனது கணக்கிற்கு பணம் அனுப்ப இயலும் என்ற சூழ்நிலை. அதுவரை மருத்துவமனையில் இருக்க கைலாஷிற்கு விருப்பமில்லை.

சவரம் செய்யப்பட்டு சற்று இளைத்து மருத்துவமனையில் இருந்து கிளம்பத் தயாராகி இருந்தவனை இனி எப்போது பார்க்க என்ற எண்ணமே, அனன்யாவை அங்கு வராமல் தடை செய்திருந்தது. அதனால் அவளின் அறையில் தஞ்சமடைந்திருந்தாள்.

தனக்குள் இருக்கும் எதையோ இழக்கப் போவது போன்ற உணர்வு தாக்க, எதனால் என்று உண்மையாகவே புரிந்தும்… புரியாத நிலையில் அனன்யா அவளின் அறையில் இருந்தாள்.

அனன்யாவின் எண்ணுக்கு அழைத்திருந்தான், கைலாஷ்.

இரண்டொரு ரிங்கிலேயே கைலாஷின் அழைப்பை எடுத்தவளிடம், “அன்யா, இப்ப ரூம்ல இருக்கியா?”, கைலாஷ்

“ஆமா கைலாஷ், இன்னிக்கு உங்களுக்கு டிஸ்சார்ஜ் இல்ல!. கிளம்பிட்டீங்ளா?”, குரலை சாதாரணமாக்கி பேசினாள்.

“ம்… எனக்கு உங்கிட்ட ஒரு பெரிய ஹெல்ப் வேணும், நேருல வரியா?”, என குரலைக் குறைத்து அவளிடம் பேசியதால் அருகில் நின்றிருந்த நண்பர்களுக்கு கேட்கவில்லை.

“என்ன விசயம்? எதுவும் பிரச்சனையா?”, என பதறியளை

“இல்ல… பிரச்சனையெல்லாம் ஒன்னுமில்ல… நேருல வர்றியா?”, குரலில் நீ கண்டிப்பாக இங்கு வா என்ற கட்டளை இருக்க

“இதோ டென் மினிட்ஸ்ல வரேன்”, என்றவள் பத்து நிமிடங்களில் வந்திருந்தாள்.

நண்பர்களிடம் கூறிக்கொண்டு, அவளுடன் பில் செட்டில் செய்யும் இடத்திற்கு அவளிடம் பேசியபடி மெதுவாக நடந்தவன், அவளின் ஓய்ந்த தோற்றம் கண்டதும், “உடம்புக்கு முடியலயா அன்யா, சொல்லிருந்தா நான் உன்ன வர சொல்லிருக்க மாட்டேனே!”

“இல்ல, படுத்திருந்தேன் அதான் அப்டி இருக்கு. என்ன விசயம்?”

“இல்ல… அப்பா பணம் போட மறந்துட்டாங்க என் அக்கவுண்ட்ல, நெட் பாங்கிங்லாம் அவங்க இன்னும் பண்ணி பழகல. இப்போ கொஞ்சம் பணம் சார்ட்டேஜ் எனக்கு. அதான்… உன்ன கூப்டேன்!

எனக்கு இன்னும் ஒன் லேக் (LAKH) தேவைப்படுது. இப்ப எனக்கு தெரிஞ்ச யாருகிட்டயும் கைல அவ்ளோ பணம் இல்ல. தரணும்னு நினைக்கறவங்க கிட்ட பேங்க்லயும் இல்ல. அதான் எனக்கு உன்னை விட்டா இப்ப யாருகிட்டயும் ஹெல்ப் கேக்க முடியல!

எதாவது ஏற்பாடு பண்ணா, ட்டூ டேஸ்ல உன் அக்கவுண்ட்கு ட்ரான்ஃபர் பண்ணிறேன். உன்னால முடிஞ்சா செய்யி!. இல்லனா ரெண்டு நாள் கழிச்சு தான் டிஸ்சார்ஜ் ஆகணும்!!”, என கைலாஷ் மருத்துவமனையில் இருக்க பிரியப்படாததை வார்தைகளில் அறியாமலேயே விட்டிருக்க,

“என் அக்கவுண்டல பாக்கறேன்”, என்றவள்

தனது செலவு போக சம்பளம் முழுமையும் தனது அக்கவுண்டில இரண்டரை லகரங்களுக்கு மேலே இருப்பு காட்ட…

நெட் பாங்கிங் IMPS மூலமாக அவனுடைய வங்கி எண்ணிற்கு அவன் கேட்ட தொகையை அனுப்பியிருந்தாள், அனன்யா.

நன்றி பல கூறியவனின் வார்த்தைகளைக் கேட்காமல் அவன் அருகாமை தந்த இதத்தை ரசித்திருந்தாள், அனன்யா. இனி அவனை ‘எங்கு சந்திப்பேன்!’ என்ற நினைவே அவளை வதைத்தது.

பைனல் தொகையை செட்டில் செய்துவிட்டு, அனன்யாவிடம் சொல்லிக் கொண்டு நண்பர்களுடன் கிளம்பியிருந்தான், கைலாஷ்.

ஒரு நோயாளியாக அவனை அவளால் நினைக்க முடியவில்லை. தனது மனதிற்கு நெருக்கமானவர்களை விட்டு பிரியும் தருணங்கள் வரும்போதெல்லாம் வருந்தியிருக்கிறாள்.

ஆனால் அதுபோல இது இல்லை. இது வேறு விதமான வலியை மனதில் தந்தது. அவளுக்கு இது எதனால் என்று புரிந்தாலும், அடிபட்ட மனம்… எதையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப் பயந்தது.

அவளின் மனம் அறியாதவன், அன்று இரவே கோவைக்கு கிளம்பியிருந்தான். ஸ்லீப்பர் கோச்சில் ஏறியவன் பேருந்தில் ஏறிப் படுத்ததும் உறங்கியிருந்தான்.

அனன்யா அழகு மட்டும் அல்ல. ஏனோ அவளை அவனுக்கு பிடித்திருந்தாலும் நேரில் சொல்ல முடியவில்லை. அவள் தன்னை நிராகரித்ததை அறிந்திருந்தாலும், மறுமுறையும் நிராகரித்தால் அதைத் தாங்கும் வலிமை கைலாஷின் மனதிற்கு இல்லை.

அனன்யாவை நினைத்தபடியே உறங்கியிருந்தான், கிஷோர் கைலாஷ்.

டிஸ்சார்ஜ் ஆகி மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்றுவிட்டவனின் நினைவுடனே உறங்காமல் விழித்திருந்தாள், பெண்ணவள்!!.

‘அவளுக்கென்ன…!’ அடுத்த அத்தியாயத்தில்…
—————————————-

error: Content is protected !!