அத்தியாயம்
3
மூன்று நாட்கள், மூன்று யுகமாக கழிந்தது, அனன்யாவிற்கு.
ஆம். கைலாஷ் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சென்று இரண்டு நாட்கள் முடிந்திருந்தது. ஆனால் அவனிடமிருந்து, எந்த டெக்ஸ்ட்ம் அனன்யாவிற்கு வரவில்லை.
தானாக அவனிடம் பேச ஏதோ ஒரு தயக்கம். அதை மீறிப் பேசும்போது தன்னை தவறாக எண்ணிவிட்டால், என்ன செய்வது?. பணத்திற்காக பேசுகிறாள் என கைலாஷ் தன்னை எண்ணிவிட்டால், அதனால் தவிர்த்து, தவித்திருந்தாள், அனன்யா.
பணம் கைலாஷ் தனக்கு தருவதை, தராமல் போவதைப் பற்றிய எண்ணமில்லை, அனன்யாவிற்கு. நம்பிக்கை இருந்தது. அது எதனால் என்று நிச்சயமாக அவளுக்கு தெரியவில்லை. மருத்துவமனையில் இருந்து அவன் போனதை எண்ணி அவள் வருந்தவில்லை.
மருத்துவமனையில் ஒரு நோயாளியாக அவனைப் பார்த்திருந்த நாட்கள், கனவு போல மறந்து போகட்டும் என்றே நினைத்தாள்.
இனி நிஜத்தில் அவனை வேறு இடங்களில், மகிழ்ச்சியோடு, ஆனந்த நினைவுகளை தரும் தருணங்களோடு, கைலாஷைக் காண ஆசைப்பட்டாள். அப்படி ஒரு நாளுக்காக காத்திருந்தாள்.
யார்..? எங்கிருந்து வந்தான்? என்ன செய்தான்? என எதுவும் தெரியாதவனை, மனதிற்குள் இருபது நாட்களுக்குள் அஸ்திவாரம் போட்டு அமர வைத்த தனது மனதை அவளால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மூடிய இமைகளுக்குள் இளமையாக சிரித்தவனை ரசிக்க மட்டுமே முடிந்தது.
வீட்டு முகவரி மருத்துவமனையின் அறிக்கையில் இருந்ததை எடுத்து வைத்திருந்தாள். ‘அவனுடைய ஆதார் எண் இருக்கிறது. அவனது வங்கி கணக்கு எண் இருக்கிறது. அவனது வாட்சப் எண், அலைபேசி எண் இருக்கிறது.
ஆனால் அவனை எப்படி இனி பார்ப்பேன். அவனுக்கும் எனக்கும் இடையே என்ன உறவென்று போய்… அவனை நான் பார்ப்பேன், எங்கு சென்று பார்ப்பேன்!’ என்ற எண்ணமே அவளுக்கு வலித்தது.
தந்தை, தாய், பணி எல்லாம் பின்னுக்கு சென்றிருக்க, அனைத்துமாக அவன் மட்டுமே ஒவ்வொரு செல்லிலும் பதிந்து இருந்தான். அவன் பின்னோடு தானறியாமல் சென்றுவிட்ட வெட்கமில்லாத மனதை, வீறுகொண்டு இழுத்தாலும் வரவில்லை.
கைலாஷின் பின்னோடு சென்றிருந்த மனதை தன்பக்கமாக இழுக்க இயலாத வருத்தமுமில்லை அவளுக்கு!. ‘போகட்டும் அதனாலென்ன, அங்கு மட்டுமே நான் ஜீவித்திருந்தேன்’ என அறிவும் சப்பைக் கட்டு கட்டியது. அவனோடு போன மனதின் ராகமே, அவளுடைய ஆன்மாவின் சங்கீதம். அதுவே தனது சந்தோசம் என தன் மன வானத்தை அவனிடமே விட்டிருந்தாள்.
வழமைபோல மருத்துவமனை சென்று, பணிகளை சமீப நாட்களில் இலகுவான, ஆனால் இயந்திரத்தனமாக பார்க்கிறாள்.
மதியத்திற்கு மேல் விடுதிக்கு வருபவள் அவனின் நினைவுளால் ஆகர்ஷிக்கப்படுகிறாள். அதை தடை செய்ய எண்ணி, எத்துணை பணிகளை இழுத்துப் போட்டு செய்தாலும், ஒரு ஓரத்தில் இவனுக்காக அன்று அது செய்தேன். இன்று இதைச் செய்தேன் என மனம் அவன் புறத்தே செல்கிறது.
பசிக்கவில்லை. சுறுசுறுப்பில்லை. எல்லாம் அவன் நினைவாலேயே மறந்து போனது. ‘பசியை உணர முடியாத அளவிற்கு அவனின் நினைவு என்னை புசித்திருந்தது!’, என அவள் மனம் மகிழ்ந்திருந்தது.
மூன்றாவது நாள் அவளது வங்கிக் கணக்கில் பணம் கிரெடிட் ஆன செய்தியுடன், வாட்சப்பிலும் அவனிடமிருந்து செய்தி வந்திருந்தது.
“சாரி அன்யா!”, உள்ளம் நொந்தே அதை அனுப்பியிருந்தான்.
“அமௌண்ட் க்ரெடிட் ஆகிருச்சானு பாத்துட்டு சொல்லு!”, ‘அட போடா அது போனா என்ன? வந்தா என்ன?’ என அனன்யாவின் மனம் அரற்றியது.
“ட்டூ டேஸ்… என் பேரண்ட்ஸ் கன்வின்ஸ் பண்ண பத்தல! இன்னும் அவங்க ரெண்டு பேரும் என்மேல ரொம்ப கோபமா இருக்காங்க. என்னோட ஆக்சிடெண்ட மறைச்சிட்டேனு ரொம்ப வருத்தம் அவங்களுக்கு”, கைலாஷ்
‘அடக்கடவுளே…! இருக்காதா பின்ன…! ரொம்ப கேஷூவலா நீங்க சொல்லிட்டா… நீங்க பண்ணது சரினு ஆகாது பாஸ்… என்ன ஒரு வில்லத்தனம்! உங்கிட்ட ரொம்ப கேர்புல்லா இருக்கணும் போலயே…! அவிங்களுக்கு போட்ட பாம்… பின்னாளில் எனக்கும் வர வாய்ப்பிருக்கும் போலயே!’, என அவனின் செய்திக்கு மனதிற்குள் பேசியிருந்தாள்.
“அண்ட் உன்னப் பத்தி வீட்ல சொன்னேன். எங்க அம்மா ரொம்ப சந்தோசப்பட்டாங்க. உன்ன மிஸ் பண்ணதா உங்கிட்ட சொல்ல சொன்னாங்க. எங்க அப்பாவும் உன்னைப் பத்தி சொன்னவுடனே சந்தோசப்பட்டாங்க”, கைலாஷ்
‘என்னப்பத்தி அன்னை தெரசா ரேஞ்சுக்கு அப்டி என்னத்த சொன்ன கண்ணு! ஐயோ!! எல்லாத்தையும் இப்டி கவனிச்சதில்ல… உன்னிய மட்டும் விழுந்து விழுந்து கவனிச்சு… மனசு இப்ப பஞ்சராகி கிடக்கேன், உனக்கு ரொம்ப நல்ல பேரண்ட்ஸ் போல… இருக்கட்டும்!’, என அவனின் பெற்றோருக்கு சான்றிதழ் வழங்கி சாந்தமாகி இருந்தாள்.
“நீ இல்லனா, அவிங்களோட பிள்ளையா இன்னிக்கு வீட்டுக்கு வந்திருப்பேனாங்கிறதே சந்தேகம்னு சொல்லிருக்கேன். எப்போ எங்க வீட்டுக்கு வர? நீ இங்க வந்தா எல்லோரும் சந்தோஷப்படுவோம்”, என கடிதம் போல செய்தி அனுப்பியிருந்தான், கைலாஷ்.
கடைசி செய்தியைப் படித்தவள்,
‘எப்டினாலும் க்யூர் ஆகி வீட்டுக்கு போயிட்டுதான் கண்ணா இருப்ப…! ஆனா… உங்க வீட்டுக்கு எப்டி நான் வர… வந்த பின் வரும் விளைவுகளுக்கு யாரு பொறுப்பு எடுக்கறது…! நான் வந்தா ஒரு வேல நீ சந்தோசப்படலாம். அது ஒத்துக்கறேன். பட், உங்க வீட்ல இருக்கறவிங்கள்லாம் என்னைய கண்டவுடனே காண்டாகிட்டாங்கன்னா…!’, என தனக்குள்ளே எண்ணிச் சிரித்திருந்தாள்.
இருபது முறைகளுக்கு மேல் ஒரே மெசேஸை படித்தும் அனன்யாவிற்கு அலுக்கவில்லை. மீண்டும் மீண்டும் படித்து தன்னை அறியாது மனனம் செய்திருந்தாள். அதைப் படிக்கும்போது உண்டான அவளின் பரவசம், வார்த்தைகளால் சொல்லமுடியாதது.
அத்துணை முறைகள் படித்தும் அவளுக்கு சலிக்கவில்லை. பணியின் களைப்பு தீர, அந்த வரிகளைப் படித்து தன்னை களைப்பிலிருந்து மீட்டுக் கொள்கிறாள். நாட்கள் இவ்வாறு செல்வது அவளுக்கு ஒரு புறம் இன்பமாகவும், அவனைக் காணாமல் நினைவில் வைத்து சுகப்படுவது சற்றே துன்பமாகவும் சென்றது.
நான்கு நாட்களுக்குப்பின் மீண்டும் அவனிடம் இருந்து மீண்டும் செய்தி வரும்வரை, அவளின் தவறு அவளுக்கே தெரியவில்லை.
“என்ன அன்யா, அதுக்குள்ள என்ன மறந்தாச்சா…! இல்ல நான்.. உன் நினைவில் இல்லயா, உன் தொகை உனது வங்கிக் கணக்கில் சேர்ந்திருக்கும் என நம்புகிறேன்.
ஆனால், எந்தப் பதிலும் இல்லாமல்… ஏனிப்படி?
எனக்கு ஒன்றும் புரியவில்லை. உன் உடல்நலனில் ஏதும் குறைபாடா? இல்லை அதிகமான வேலைப் பளுவா?
ஒரு வார்த்தை டெக்ஸ்ட் செய்ய மறுக்கும் அளவிற்கு, உனக்கு அப்படி என்ன தீராத துன்பம் செய்தேன் என்று நிச்சயமாகத் தெரியவில்லை?
உன்னை வருத்தியிருந்தால், வருந்துகிறேன். பதிலில்லாததால், பதறிவிட்டேன்.
இன்னும் இரண்டு நாட்களில் ஒரு வேலை விசயமாக சென்னை வருகிறேன். சந்திக்கலாமா?
உன் விருப்பம்போல…!”, என்ற கைலாஷிடம் இருந்து வந்த செய்தி பார்த்ததில் இருந்து அனன்யா தனது தவறை, பதில் அனுப்ப மறந்து போகும் அளவிற்கு இருக்கும் தன்னிலையை எண்ணிக் குழம்பினாள்.
இயல்பான எழுத்தாக இல்லாமல் கவிதையின் சாயல் பூசி இருப்பதற்கான மனவியல் காரணம், மனதில் காதல் வந்துவிட்டது. ஆனால் அவனுடைய காதல் மனதை புரிந்து கொள்ள வேண்டியவள், புரிந்து கொள்வாளா?
‘எப்படி பதிலனுப்ப மறந்து போனேன்?’. படித்து மகிழ்ந்த தருணங்கள் நினைவில் வர… அவனை நேரில் கண்டது போல அவன் அனுப்பிய செய்தியின் மேல் இருந்த மயக்கம் இன்னும் மாறவில்லை. தீரவில்லை. அதனால் பதிலனுப்ப எண்ணவில்லை.
ஆனால், ‘இதை அத்துனையும் அப்படியே… எப்படி அவனிடம் பகிர்ந்து கொள்ளமுடியும்! பகிராத விடயங்கள் பக்க விளைவுகளைக் கொடுத்துவிடும்’. ஆகையால் நாட்களை அல்ல. நிமிடங்களை வீணாக்காமல் பதில் அனுப்ப ஆயத்தமானாள் அனன்யா.
“சாரி கைலாஷ், எனது அலைபேசிக்கு வந்த அலர்ஜியினால் பதில் அனுப்ப இயலவில்லை”. ‘ஏண்டி புளுகுற’ என மனம் இடிக்க அதை அடித்தாள்.
“சந்திக்கலாம்…!”
‘இதயச் சத்தங்கள் கேட்கும் நொடிக்காக, நாடியைப் பிடித்து நாட்களைக் கடத்துகிறேன்’ என நினைத்தவாறே
“ஆனால் ஒரு சந்தேகம். ஒரு வேலை விசயமாக சென்னை வருவதென்றால்… தங்களின் பிறப்பிடம்? எது உங்களின் இருப்பிடம் என நான் தெரிந்து கொள்ளலாமா?”
அனன்யாவின் பதிலைப் படித்தவன், அவளை தான் மடித்ததை (அவள் தன் வயப்பட்டதை) அறிந்து கொண்டான். அவளின் வார்த்தைகள் சொன்ன பதிலை விட, அதன் நடை சொன்னது, பெண் தன் வயப்பட்டதை!.
“கோவை என் பூர்வீகம், என் பூகோளம் அறிய விழைந்த உனது ஆவலின் அவசியத்தை நான் அறியலாமா!”
செய்தி படித்தவள்… யோசிக்கிறாள். ‘கோவையில் பார்த்த முகம் என்பதால்தான், தனக்கு பல காலம் பழகிய நபரைப் போல தோன்றியதா?
யாராக இருக்கும்? நமக்குத் தெரிந்தவனா? நம்மை அறிந்தவன் தானா? அதனால் தான் அந்த இணக்கமான முகத்தை தன்னிடம் காட்டினானா?’ என கேள்விகளைக் கேட்டு பதில் தெரியாமல் திண்டாடினாள், தனக்குள்ளே.
அவன் மேல் வந்த ஆவலின் காரணம், காதல் அன்றி வேறேது!. ஆனால் அதை துணிச்சலாக சொல்லும் தைரியம் இல்லை அனன்யாவிற்கு.
அவன் வரும் நாள் வரை வராமல் போன தூக்கம் கூட மறந்து போனது. நாட்கள் நகர, அவன் வரும் நாளும் வந்தது. வந்தவனிடமிருந்து வந்த செய்தியை வாசித்தாள், பெண்.
“பதில் சொல்லும் நல்ல பழக்கம் உனக்கு இல்லாமல் போனது ஏனோ?
ஆனால் உன்னைக் காண நேரிலே நான் வந்துவிட்டேன்.
இன்று எங்கு, எப்போது சந்திக்கலாம் என கூறினால் நன்று”, என்ற அவனின் செய்தி பார்த்தவுடன், அவள் மனம் மகிழ்ந்தது.
முகம் மத்தாப்பாய் மலர்ந்தது. ஆனால் எங்கு சந்திக்கலாம்? இறுதியாக பெசன்ட் நகர் பீச் என முடிவானது. நேரம் நான்கு எனக் குறிப்பிட்டு அனுப்பினாள்.
மாலை 4.
பெசன்ட் நகர் பீச்சை ஒட்டிய கடைகளில், அப்போது தான் தனது இரவு நேர வியாபாரத்தை ஆரம்பிக்க ஏதுவான பணிகளை பார்த்துக் கொண்டிருந்தனர், வியாபாரிகள்.
வந்தவர்கள் இருவருக்கும் எளிதாக கண்டு கொள்ளும் அளவிற்கு கூட்டம் இல்லாமல் இருந்தது. இருவரும் முதலில் அஷ்டலட்சுமியை தரிசிக்கலாம் என முடிவு செய்யப்பட்டது.
அவளை முன்னே நடக்கவிட்டு, பின்னே வந்தவனை தரிசனம் முடித்து வெளியே வரும்வரை பார்க்கவில்லை. தரிசனம் முடிந்தபின் இலகுவான இடம் பார்த்து கடற்கரை மணலில் கடலை நோக்கி இருவரும் அமர்ந்தனர்.
“என்ன அன்யா, ஜாப் எப்பவும் போல தான இருக்கு…!, ஓவர்டைம் போறீயா?. ரொம்ப டல்லாருக்க?”, அவன் தன்னைப் படித்ததை அறிந்து அயர்ந்தாள்.
“அப்டியா, இல்லையே கைலாஷ், எப்பவும் போல தான் வர்க். ஏன் எப்டி இருக்கேன்?”, நிச்சயமாக அவளுக்கு தெரியவில்லை.
“டல்லாஹ்… பத்துநாளுக்கு மேல பட்டினி கிடந்தாபோல… அப்டிதான் இருக்க!”, ஊர்ஜிதம் செய்தான்.
“ஓஹ்… ஆனா நேரத்துக்கு சாப்பிடறேனே!”, டயட்டீசியனுக்கு வந்த சோதனை… வேதனையுடன் பேசச் சொன்னது.
“நான் கேட்டதுக்கு பதிலே சொல்லவே இல்லயே,
இப்பவாவது சொல்லுவியா?”, எதையும் விட விருப்பம் இல்லாமல் பழையதை கிளறினான், கைலாஷ்.
“எப்ப….என்ன கேட்டீங்க?”, உண்மையில் எதுவும் நினைவில் இல்லை. ஆம் அவனையன்றி வேறெதுவும் அவள் நினைவில் இல்லை.
“போச்சுடா… அதுவே மறந்து போச்சா!”, எப்டி இப்டி இருக்கா என எண்ணியவாறே கேட்டான்.
“…”, என்னவாக இருக்கும் மனம் விடயத்தைத் தேடத் தொடங்கியிருந்தது.
“என்ன அன்யா, ஆப்சன்ஸ் ஆஃப் மைண்ட்ல இருக்கியா. என்ன யோசனை”
“ஒன்னுமில்லை”
“கோவை என் பூர்வீகம், என் பூகோளம் அறிய விழைந்த ஆவலின் அவசியத்தை நான் அறியலாமா!” எனும் கைலாஷ் அனுப்பிய செய்தியை தனது அலைபேசியில் இருந்ததை எடுத்து அனன்யாவிடம் காட்டினான்.
அலைபேசியில் இருந்ததை ஆவலாகப் பார்த்து, ஆசுவாசத்துடன் படித்தவள், “கண்டிப்பா பதில் சொல்லணுமா?”, என தனது முகத்தை அப்பாவி போல வைத்துக் கொண்டு கேட்டாள்.
“ஆமா… பதில் வரல. அதுக்கு தான நேருல தெரிஞ்சுக்கலாம்னு வந்திருக்கேன்!”, விடாக்கண்டனாக வினவியிருந்தான்.
“ஓஹ்… அது… நீங்க அட்மிட் ஆன ஹாஸ்பிடல் ரெக்கார்ட்ஸ்ல எல்லாம்… உங்க அட்ரஸ்… சென்னைனு இருந்தது. ஆனா நீங்க சென்னை வரேன்னு சொன்னதால அப்டி கேட்டேன்”, கூலாக பதில் சொன்னாள், பெண்.
“அப்ப வேற ஒன்னுமில்லயா?”, வண்ணப் பொறி வராத புஸ்வானம் போல மாறிய மனத்துடன், பெருத்த ஏமாற்றமாகக் கேட்டான்.
“வேற என்ன? எனக்குப் புரியல?”, உண்மையில் புரியாமல் தான் கேட்டாள், அனன்யா.
“நிஜமா புரியலயா?, இல்ல புரியாத மாதிரி நடிக்கிறியா?”,என சிரித்தபடி கேட்டவனை வைத்த கண் வாங்காமல் பார்த்தவள்,
“இல்ல நிஜமாவே புரியல. நீங்க என்ன கேக்குறீங்கனு ஸ்ட்ரெயிட்டாவே கேளுங்க!”, ‘என்னத்த பெருசா கேக்கப் போறான் பய’ என்ற எள்ளலுடன் எண்ணியபடி கேட்டவளை
“எனக்கு சுத்தி வளைச்சு பேச தெரியாது, அன்யா. எனக்கு உன்ன பிடிச்சிருக்கு! மேரேஜ் பண்ணிக்கலாம்னு நினைக்கிறேன்!
உனக்கும் என்னை பிடிச்சிருக்க மாதிரி ஃபீல் பண்றேன். உன் ஒப்பீனியன் என்னானு சொன்னா… உங்க வீட்ல உன் பேரண்ட்ஸ்ட மேற்கொண்டு… என் பேரண்ட விட்டு பேச சொல்லலாம்னு நினைக்கிறேன்!”, என மிக நீளமாக தனது அவாவை கூறியிருந்தான்.
“…”, திடீரென்னு கைலாஷ் திருமணம் பற்றி பேசுவான் என எதிர்பாராததால், அவன் கேட்டதை சீரணிக்க நேரம் தேவைப்பட்டது, பெண்ணிற்கு.
“உனக்கு பிடிக்கலனா ஃபோர்ஸ் பண்ண மாட்டேன். ஆனா சீக்கிரமா பதில் சொன்னா நல்லா இருக்கும்!”, அவளின் அமைதி அவன் மனதிற்குள் கடலலை போல கலவரத்தை இரையச் செய்தாலும், அவளை விரைவுபடுத்த மறக்கவில்லை.
“…”, அடுத்தடுத்த அவனது தாக்குதலால் என்ன பேசுவதென்றே தெரியாமல் சற்றே தடுமாறியிருந்தாள், அனன்யா.
“என்ன… நான் பேசுறதே பிடிக்கலயா? ரொம்ப சைலண்டாகிட்ட…!”, விடாக்கண்டன் கொடாக் கண்டனாக மாறும் நிலைக்கு வந்திருந்தான்.
“நமக்கு இன்னும் நம்மை பத்தி எதுவும் தெரியாது. அப்றம் எப்டி மேரேஜ் வர யோசிக்கறதுனு கொஞ்சம் குழப்பமாவும் இருக்கு. எனக்கு இன்னும் கொஞ்சம் காலம் வேணும்!”
“பிடிச்சிருந்தா யோசிக்கலாம், இல்லனா விட்ரலாம், அதுக்கு நம்ம ஆர்ஜின் எல்லாம் எதுக்கு? அப்றம்… குழப்பம் எதுனால… என்ன குழப்பம்னு எங்கிட்ட சொல்லு. முடிஞ்சா அதுக்கு என்ன தீர்வுனு இப்பவே பேசலாம். காலம்னா… இன்னும் எவ்வளவு நாளுன்னு சரியா சொல்லு!”, தேர்ந்த வியாபாரியாதலால், வியாபாரி போல திருமணத்தை அணுகியிருந்தான்.
“எனக்கு கொஞ்சம் டைம் வேணும். நான் இதுவர இதப் பத்தி யோசிக்கல”, விட்டால் அழுதுவிடுபவள் போலாகியிருந்தாள், அனன்யா.
“கூல்… அன்யா… சரி இதுவர யோசிச்சத பத்தி சொல்லு, டிஸ்கஸ் பண்ணலாம்!”, உலக நலனுக்கு ஐநா கூட இந்தளவு ரிஸ்க் எடுத்திருக்காது. ஆனால் தனது வாழ்வு சிறக்க டிஸ்கசனுக்கு அழைத்தான், கைலாஷ்.
“நீங்க ரொம்ப ஃபாஸ்ட், பட் நான் ரொம்ப ஸ்லோ”, உணர்ந்து தன்னைப் பற்றி கூறினாள்.
“எதுல?”, தனக்கே புரியாத விடயம், அவளால் ஃபாஸ்ட் என பேசப்பட்டதால் அறிந்து கொள்ளக் கேட்டிருந்தான்.
“இப்ப பேசுன விசயத்துல”, தெளிவாகவே பதில் சொல்லியிருந்தாள்.
“பொதுவா ஆண்களுக்கு எதயும் இழுத்துப் பிடிச்சு, இன்ச் பை இன்ச் ஆஹ் ஆராஞ்சு… யோசிச்சு, இது இந்த எடத்துல சரி வருமா, இங்க வராதா அப்டி நினைக்க மாட்டாங்க.
பிடிச்சிருந்தா அவங்கள எவ்வளவுனாலும் சகிச்சிக்கலாம்னு டக்குனு அடுத்த ஸ்டெப் போயிருவோம். அதே தான் நான் இப்ப உன்னக் கல்யாணம் செய்துக்க கேட்டது!”, தனது இனம் பற்றிய கருத்தை பதிவு செய்திருந்தான்.
“…”, ‘அதுக்காக என்னால இவ்வளவு ஃபாஸ்டா என் வாழ்க்கை பற்றி யோசிக்க முடியல’ என நினைத்தபடியே அமைதியாக இருந்தாள்.
“என்ன ரொம்ப யோசனையா இருக்க அன்யா, வாழ்க்கைய அதன் போக்குல வாழ்ந்து பாக்கணும், அதை நம்ம விருப்பத்துக்கு திருப்பணும்னு நினைச்சு பண்ணா, அது நம்ம போட்டு பாத்துரும்!”, அனுபவம் அணு அணுவாகப் பேசியது.
“ம்… எனக்கும் கோவை தான் நேடிவ்”, என்ன இனி அவனிடம் பேச எனப் புரியாமல் தனது பிறந்தக இடத்தைப் பற்றிக் கூறினாள்.
“உன்ன பத்தி எனக்கு நீ சொல்லணும்னு கேக்கல… ஆனா எனக்கு ஓரளவு உன்னைப் பற்றித் தெரியும். கண்டிப்பா சொல்லணும்னு நினச்சா நீ சொல்லு, நான் கேப்பேன்”, எதற்கும் தயாராக வந்திருக்கிறேன் என்றது அவனது பதில்.
“எப்டி தெரியும்… என்னப் பத்தி”, சந்தேகம் பெண்களின் தேகத்தோடு பிறந்ததோ என எதிரிலிருப்பவன் சொல்லாத வரை பிழைத்தாள், பெண்.
“தெரியும்… ஆனா நான் கேட்டதுக்கு பதில் உண்மையா சொல்லணும்
என்னை உனக்கு பிடிச்சிருக்கா? உன் மேரேஜ் லைஃப்ப என்னோட லீட் பண்ண மனசு ஓகேனு சொல்லுதா! இல்ல இவன் வேணாம்னு சொல்லுதா? அத மட்டும் இப்ப சொல்லு!”, அவளின் சம்மதம் பெற, சளைக்காமல் அவளை வார்த்தைகளால் வளைத்தான்.
“பிடிச்சிருக்கா… இல்ல பிடிக்கலயானு கேள்வி கேட்டா சொல்லத் தெரியல!
ஆனா உங்க பக்கத்துல இருக்கும் போது மனசு அமைதியா, ஹாப்பியா இருக்கு!
பக்கத்தில நீங்க இல்லாதப்ப வந்த மனபாரம், உங்கள பாத்தவுடனே குறஞ்ச மாதிரி… ஃப்ரீயா ஃபீல் ஆகுது.
லைஃப் லாங் நீங்க எங்கூட இருந்தா நான் நல்லா இருப்பேன்னு தான் தோணுது.
ஆனா அது இன்ஃபாக்சுவேசன்னாலயும் வரும்ல”, அவளின் குழப்பங்கள் இருந்த குளத்தில் மீன் பிடிக்க அவள் அறியாமலேயே அவனுக்கு அனுமதித்திருந்தாள்.
“டீன் ஏஜ்ல வரது வேணா… நீ சொல்ற மாதிரி இருக்கலாம். ஆனா இப்ப உனக்கு ஏஜ் ட்வெண்டி ஃபைக்கிட்ட ஆகலயா, இப்ப அப்டி இன்ஃபாக்சுவேசனா இருக்க வாய்ப்பு இல்ல!”, தைரியமாகச் சொல்லியிருந்தான், கைலாஷ்.
“என் ஏஜ்லாம் எப்டி உங்களுக்கு தெரியும்?”, என அதிர்ச்சியாகவே கேட்டாள், அனன்யா.
“நான் கேட்டதுக்கு எல்லாம் நீ பதில் சொன்னா, நீ கேக்காமலேயே எல்லாம் சொல்றேன்”, டீலுக்கு வந்திருந்தான்.
“ம்… என்ன உங்களுக்கு முன்னயே தெரியுமா?”, விடாமல் வினவினாள்.
“என்ன நல்லா பாரு… நான் கேட்டதுக்கு ஃபர்ஸ்ட் கரெக்ட் ஆன்சர் சொல்லு, மற்ற விசயம் எல்லாம் நான் உனக்கு சொல்றேன்”, மீண்டும் டீல் பேசப்பட்டது.
“என்ன சொல்ல?”, பெண்ணுக்கு இப்போதே அலுத்திருந்தது.
“என்ன எந்த மாதிரி ரிலேசானா லைஃப்ல கொண்டு வரணும்னு உன் மனசக் கேட்டு முதல்ல சொல்லு”, அவள் வாயால் தன்னை கணவனாக ஏற்க விழைவதைக் கேட்க ஆவல் வந்திருந்தது.
“அது டக்குனு என்னால சொல்ல முடியல…”, ‘மேரேஜ்னாலே நம்பிக்கை போச்சு… அதான் எதயும் என்னால யோசிக்க முடியல’, சூடு கண்ட பூனையின் நிலையில் இருந்தாள், பெண்.
“அப்ப இந்த பேச்ச இத்தோட விட்ரலாமா?”, டாட் வைக்கப்பட்டிருந்தது டீலுக்கு.
“…”, ’டக்குனு என்னைய கழட்டிவிடற மாதிரி பேசுனா அழுதுருவேன்’, என அவள் மனம் முரண்டியதை முகம் காட்டியிருந்தது. அதைப் பார்த்தவன்,
“சொல்லு அன்யா! உன்னோட ஆசை, விருப்பம் இன்னும் உன் சார்ந்த விசயம் எப்டி பட்டதா இருந்தாலும் பரவாயில்லை. மனசு என்ன சொல்லுதோ, அத எங்கிட்ட ஃபிராங்கா சொல்லு, அத அப்டியே சாசனமாக்கிறலாம்”, என சிரித்தவன் எதற்கும் அசையாதவளை வார்த்தையால் அசைத்திருந்தான்.
“…”, ‘நான் நினைக்கிறத சொன்னா நீ காத தூரமில்ல, கடல் கடந்து என்னைய விட்டு ஓடுனாலும் ஓடிருவ…!’, என நினைத்தவள் ஒன்றும் சொல்லாமல் இருந்தாள்.
“உங்க அப்பா, அம்மாகிட்ட என் பேரன்ட்ஸ விட்டு பேசச் சொல்லவா?”, திருமணப் பேச்சை நேரடியாகவே ஆரம்பிக்க முடிவு செய்து கேட்டிருந்தான்.
“சொல்லலாம். ஆனா அதுக்கு முன்ன நான் பேசிக்கிறேனே வீட்ல. ம்… ஆனா உடனே மேரேஜ் வேணாம். கொஞ்சம் எனக்கு டைம் வேணும்!”, என மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏற யோசிக்க, இன்னும் தயக்கமாகவே பேசினாள்.
“கல்யாண பேச்ச முதல்ல ஆரம்பிப்போம். மேரேஜ் அப்டிங்கற கிளைமேக்ஸ்கு எப்டியும் மினிமம் ஒன் மன்த் ஆகும்ல. அதுவர உனக்கு டைம் இருக்குல்ல!”, லாஜிக் பேசினான் ஆண்.
“இருக்கு… ஆனா கொஞ்சம் எனக்கு டைம் வேணும்…”, என பிடிவாதமாகவே சொன்னாள். அடுத்து தயக்கத்துடன் “இன்னொரு விசயம் உங்ககிட்ட சொல்லணும்!”, என கைலாஷின் முகத்தை தயக்கமாக பார்த்தவளை
“என்ன சொல்லப் போற, கண்டிப்பா நீ சொல்லணும்னு நினச்சா நான் கேக்கத் தயார்!”, என்று கைலாஷ் கூறினான்.
அனன்யா சென்னை வருவதற்கு காரணமாக இருந்த நிகழ்வுகளை கைலாஷிடம் கூற ஆரம்பித்திருந்தாள்.
கடந்து போன நாட்களில்… அவளுக்கென்ன…!
—————————–