Avalukkenna…!-4

Avalukkenna…!-4

அத்தியாயம்
4

வேனிற்காலமும், வசந்தகாலம் போல இருக்கும் உன்னதம் இந்நகரின் சிறப்பு. வடக்கில் கர்நாடக மாநிலமும், தெற்கில் கேரள மாநிலமும், சரிபாதி வானிலையை அந்நகருக்கு தாராளமாக தாரை வார்த்திருந்தது.

கிழக்கில் ஈரோடு மாவட்டமும், மேற்கில் நீலகிரி மாவட்டமும் சூழ, மேற்கு தொடர்ச்சி மலையும், நீலமலையும் ஒரு மதில்போல் அந்நகருக்கு தூண் போல அமைய, காலை வேளையின் இதமான வானிலை, அந்நகர மக்கள் அனைவரையும் கதகதப்பாக அரவணைத்திருந்தது.

அற்புதமான சூழலில் ஆதவனின் கரங்களை ஆசையோடு ஆகர்சித்திருந்தது, கோயம்பத்தூர்.

ஒன்றரை ஏக்கர் நிலப்பரப்பினைச் சுற்றிலும் எழுப்பப்பட்டிருந்த காம்பவுண்டுக்குள், ஒரு ஏக்கர் நிலத்தை தனக்குள் அடக்கி, அமைதியாக இருந்த அந்த பங்களாவின் முதல் தளத்தில் இருந்த அறைக்குள் காலை வேளை ஆதவனின் வரவினை சாளரத்தின் வழி உணர்ந்தாள், அனன்யா.

அனன்யா, ஈஸ்வரன், தேவகியின் ஒரே செல்வ மகள். துணி மில்களுக்கு புகழ்பெற்ற கோவையில், ஈஸ்வரன் அன்ட் கம்பெனி ஆண்டுதோறும் துணி மில்லின் மூலம் கோடிக்கணக்கில் பொருளீட்டி கடந்த நான்கு ஆண்டுகளாக நகரின் நம்பர் ஒன்னாக திகழ்கிறது.

கொந்தளிப்பான, மகிழ்ச்சியான, தீவிர, திறமையான, படைப்பு எனும் அர்த்தங்களைப் பெறும் அனன்யா, பெயரின் அர்த்தங்களுக்குள் அடங்கும் சில குணங்களை பெற்ற அறிவு + அழகு = அறிவழகி பெண்.

இமைகள் திறவாமலேயே அறையில் பரவிய இதமான வெளிச்சம் உணர்ந்தாள். ரோஸ்மில்க் நிறத்தையுடைய மேனி முழுவதும் காலைக் குளிருக்கு இதமாக செரேப்பிற்குள் இருக்க, முகம் மட்டும் மூடாமல், அடர்செந்திற ரோஜாவின் நிறத்தைப் பெற்றிருந்த இதழில் புன்னகை உறைந்திருந்தது.

“ஏய், என்ன காலைலயே கனவாடி?”, வந்த குரலுக்கு சொந்தக்காரி யாரென உணர்ந்தவுடன் அனன்யாவின் இதழ் முன்பை விட சற்று அதிகமாகவே விரிந்தது.

“இந்த வயிட் பேப்பரு முழுக்க எழுதி எழுதி என்னதாண்டி பண்ணுற…! கவிதை எழுதறாலாம்!
யாரு கேட்டா இவகிட்ட…! எழுதுன அத்தனையும் இப்டி பறக்க விட்டுட்டு, அப்றம் அம்மாகிட்ட திட்டு வாங்குறதே வேல…!

எத்தனை தடவ சொல்லிட்டாங்க…! பேப்பரை அங்கங்க இப்டி எழுதி வைக்காதன்னு…! அம்மா வந்து இரஞ்சு கிடைக்கற பேப்பர பாத்து திட்டு வைக்கும் முன்ன எடுடி!
பொம்பள வைரமுத்துன்னு நினப்பு இவளுக்கு…!, கவிதை எழுதறேன்…! அவியல் வைக்குறேன்னு…!”, என தோழியின் படுக்கையில் இருந்த தாள்களைப் பார்த்து கூறினாள் அகல்யா.

அகியின் வார்த்தைக்கு பதில் பேசாமல் இப்பொழுதும் அதே சிரிப்பை சற்று விரித்திருந்தாள் அனி. அதைக் கண்ட அகி,

“அனி, சிரிச்சே எல்லாத்தையும் கொல்லு!”, மீண்டும் குரல்வர

“சிரிக்கறதுல தாண்டி மனுசன் வித்யாசப்படறான். அதக்கூட செய்ய தடை விதிச்சா!” கண் திறவாமலேயே பதில் சொன்னாள்.

“தடை விதிக்கிறேன். அடை விக்கிறேன்னு!”, இது அகி.

“காலையிலேயே உனக்கு சாப்பாடு ஞாபகம் தானா! அவியல், அடைன்னு பயங்கற ஃபார்முல்ல இருக்க!”, அனி

“ஆமா, எனக்கு பசிக்குமில்ல. சாப்பிடனுமில்ல!”, என அகல்யா கூற

“போடீ இவளே (தின்னி)!, விடிஞ்சா, அடஞ்சா, சாப்பாடுதானா! வந்தேன்னா பூசைய (அடி) போட்டுறப் போறேன்!”

“ம்… அது வர எங்கையி என்ன புளியங்காவா பறிக்கப் போகும்!”

“நீ புளியங்கா பறி, இல்ல மாங்காய பறி. எனக்கொன்னுமில்ல!”

“போடீ! நீ மெதுவா வா. இன்னிக்கு காலைல என்ன பிரேக்ஃபாஸ்ட்னு, ஃபாஸ்டா கீழ போயி பாத்துட்டு வந்து காலேஜ்கு கிளம்பணும்”, என்றவளின் குரல் தேய்ந்ததை வைத்து அவள் அங்கிருந்து சென்றதை உணர்ந்தாள், அனன்யா.

அகல்யா, அனன்யாவின் பால்ய சினேகிதி. இருவரது சில ரசனைகள் ஒரே அலைவரிசையில் இருக்கும். நிறங்கள், உணவு. உடை என்று இருவரின் பிடித்தங்களும் ஒரே மாதிரியாக இருந்தது.

ஒரு பொருள் வாங்கினால், அதை அனன்யா, அகல்யாவிடம் கொடுத்துவிடுவாள். இதனைத் தவிர்க்க தேவகி பெரும்பாலும் எல்லாவற்றிலும் இரண்டு பொருளாக சிறுவயது முதலே வாங்கிக் கொடுத்திருந்தார்.

அகல்யா சிறுவயதிலேயே தாய், தந்தையரை இழந்தவள். தன் தாய் வழிப்பாட்டியான ராசாத்தியின் தயவில் அனன்யாவின் பங்களாவிற்குள் இருக்கும் சிறுமனைக்கு மூன்று வயது குழந்தையாக அழைத்து வரப்பட்டாள், அகல்யா.

ராசாத்தி நீண்ட காலமாக அனன்யாவின் வீட்டில் வேலை பார்த்திருந்தார். தேவகியின் தயவால், ராசாத்தியின் கணவரின் மறைவிற்குப் பின் தங்களது வளாகத்தினுள் குடியிருக்க ஏதுவாக, பங்களாவின் அருகிலேயே சிறுமனை கட்டி ராசாத்திக்கு கொடுக்கப்பட்டிருந்தது. ராசாத்தி பெரும்பாலும் பங்களாவில் தான் வேலை காரணமாக இருப்பார்.

தன் ஒரே மகள் மற்றும் மருமகனின் எதிர்பாரா விபத்தில் உண்டான மறைவிற்கு பின், அகல்யாவை தன்னுடன் அழைத்து வந்திருந்தார், ராசாத்தி.

வெளியில் யாருடனும் சென்று தன் சிறு பிராயத்தில் அதுவரை இணைந்து விளையாடாத அனன்யாவிற்கு, தங்கள் வீடு இருக்கும் காம்பவுண்டுக்குள் குட்டித் தோழியாய் அறிமுகம் ஆகியிருந்தாள், அகல்யா.

அனன்யா பள்ளிக்குச் செல்லும் வரை இருவரும் ஒன்றாக விளையாடி மகிழ்ந்திருந்தனர். அதன்பின் பள்ளியில் அனன்யாவை சேர்க்க, அகல்யாவும் வந்தால் தான் தானும் பள்ளிக்கு செல்வேன் என அடம் பிடித்தாள், அனன்யா.

ஈஸ்வரன் மகளின் பிடிவாதம் அறிந்து, ராசாத்தி மறுத்தும் கேளாமல், அகல்யாவையும் அதே பள்ளியில் சேர்த்து விட்டிருந்தார்.

ராசாத்தி இருந்தவரை அகல்யாவை கட்டுப்பாடுகள் விதித்து வந்தார். அகல்யாவும் பாட்டியின் சொல்கேட்டு நடப்பாள். அனன்யாவின் அடத்தினால் சில விடயங்கள் நடக்கும். இருந்தாலும், ராசாத்தி அகல்யாவிடம் தங்களின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

இடையில் தனது வயோதிகம் காரணமாக ராசாத்தியும் இறந்துவிட, அதன்பின் சிறுமனையில் இருந்தவளை வீட்டில், தனது அறையிலேயே வந்து தங்குமாறு கட்டாயப்படுத்தி இருந்தாள், அனன்யா.

அகல்யாவும் எந்தத் தயக்கமுமின்றி தனது பொருட்களுடன், அனன்யாவின் அறையிலேயே தஞ்சமடைந்திருந்தாள்.

ஈஸ்வர், தேவகி இருவரும் அனன்யாவிடம், எதையும் ஒரு அளவுடன் வைத்துக் கொள் என்று கூறினாலும், அதைக் கண்டு கொள்ளவில்லை அனன்யா. தனக்கென வாங்கியதையும் தோழிக்கு கொடுத்துவிடும் பெருந்தன்மை மிக்கவள். பகிர்ந்து கொள்ளாத விடயங்களோ, ரகசியங்களோ எதுவும் அனன்யாவிடம் இருக்காது.

அகல்யாவும் தனது நிலையை உணர்ந்தாற்போல இல்லாமல், எதைவும் மறுக்காமல், அனன்யாவுடைய பொருட்களை தனது விருப்பம் போல் வேண்டியதை எடுத்து உபயோகப்படுத்தி, அவ்வீட்டின் மற்றொரு பிள்ளையாகவே வளர்ந்து இருந்தாள்.

உடை, உணவிற்கு இதுவரை மறுத்துக் கூறாத பெரியவர்கள், அணிமணிகள், விலையுயர்ந்த ஆபரணங்கள் என்று வரும்போது அனன்யாவிடம் தங்களது அதிருப்தியை காட்டவும், கூறவும் தொடங்கி இருந்தனர்.

“இன்னும் ரெண்டு பேரும் சின்ன புள்ள இல்ல அனன்யா, அவளுக்கு அதிகமா இடம் கொடுக்கற! பின்னால எதுவும் பிரச்சனைய கூட்டிட்டு வந்திராத!”, இது தேவகி.

“ஏம்மா…!, அவளே அதெல்லாம் புரிஞ்சு சரியா நடந்துப்பாம்மா!”

எதையும் அதுவரை ஒரு பொருட்டாகக் கொள்ளாத அனன்யா, தோழியின் எந்த செயலுக்கும் மறுப்போ, எதிர்ப்போ காட்டுவதில்லை. பள்ளிக் கல்விக்குப் பின், இருவரும் இணை பிரியாமல் கல்லூரிக் கல்விக்கு, ஒரே இடத்திலேயே, ஒரே துறையிலேயே சேர்க்கப்பட்டிருந்தனர்.

தற்போது இருவரும், அவினாசிலிங்கம் நிகர்நிலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் மனையியல் துறையின் இரண்டாமாண்டு படிக்கும், இருபது வயது யுவதிகள்.

முந்தைய தினம் தேவகி, கடைக்குச் சென்றிருந்தவர், தனது மகளுக்கு மிகவும் பாந்தமாக இருக்கும் என எண்ணி ஒரு உடையை எடுத்திருந்தார். ஆனால் ஒரே நிறத்தில் அதே டிசைனில் இல்லாததால், இரு வேறு நிறங்களில் ஒரே டிசைனில் எடுத்துக் கொடுத்திருந்தார்.

ஒன்று அனன்யாவிற்கும், மற்றொன்று அகல்யாவிற்கும் என எடுத்து வந்திருந்தவர், உடையை அனன்யாவிடம் கொடுக்கும் போதும், ‘அனன்யா இது உனக்கு’ என்று அவளுக்கு பிடித்த கலர் உடையைக் காட்டி கூறி மகளிடம் கொடுத்திருந்தார்.

அடுத்த நாள் காலையில் டைனிங்கில் கணவருக்கு பரிமாறியபடி நின்றிருந்தார் தேவகி. அப்போது அனன்யாவிற்கு என எடுக்கப்பட்டிருந்த ஆடையை அணிந்து, காலை உணவை உண்ண வந்தமர்ந்தாள் அகல்யா.

சாப்பாட்டு மேசையில் அமர்ந்து காலை ஆகாரத்தை உண்டு கொண்டிருந்த ஈஸ்வரன், இதைப் பற்றி எதுவும் அறியாததால் எதையும் கவனத்தில் கொள்ளவில்லை.

அகல்யாவைக் கண்ட தேவகி்க்கு, மனம் சுணங்கியது. அதைக் கவனியாமல் டேபிளில் வைக்கப்பட்டிருந்தவற்றை தானாகவே எடுத்துப் போட்டுக் கொண்டு உண்ண ஆரம்பித்தாள், அகல்யா.

கைக்கு எட்டாத தூரத்தில் இருந்த உணவு பாத்திரத்தை எடுக்க சிரமப்பட்ட அகல்யாவிற்கு, கையில் எடுக்க ஏதுவாக அருகில் நகர்த்தி பாத்திரங்களை தேவகி வைக்க,

“அம்மா, இன்னிக்கு சாப்பிட என்னம்மா?”, என்றவாறு வந்து அமர்ந்த மகளின் உடையில் முகம் மாறினார், தேவகி.

அகல்யா, அனன்யா இருவரும் பருவ வயது காரணமாக மிகவும் அழகாக இருந்தாலும், அகல்யாவின் உடையால் அவள் அதிகபட்சமான அழகாகவும், அனன்யா சற்று குறைவாகவும் இருப்பது போல தேவகிக்குத் தோன்ற, தனது மகளின் பெருந்தன்மையை எண்ணி வருத்தம் வந்திருந்து.

இன்று நேற்றல்ல, அகல்யா இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்து ஒரு வாரத்தில் வரத் துவங்கிய மாற்றம். இது வரை எந்த மாற்றமும் இல்லாமல், வளர்ந்திருந்தது.

தான், தனது என்கிற அதிகார பற்றோ, பொருள் பற்றோ இல்லாமல் இருந்த தன் மகளை எண்ணி வருந்த மட்டுமே முடிந்தது, தேவகியால்.

ஈஸ்வரனுக்கு விடயம் தெரியாததால், அவர் அமைதியாக உண்டு, தனது அலவலகம் கிளம்பிவிட்டார்.

அனன்யாவைத் தனியே பிடிக்கவே முடியாது. கூடவே எப்பொழுதும் ஒட்டுப்புல் போல இருக்கும் அகல்யாவிடம் இருந்து தனது மகளை மீட்க, என்ன செய்ய எனத் தெரியாமல் தேவகி உள்ளம் குமைந்திருந்தார்.

தான் பெற்ற மகளுக்கு அத்துணை விவரம் இல்லாமல் இருக்கிறதே என எண்ணியே மனம் வருந்தினார், தேவகி.

அனன்யாவைப் பொறுத்தவரை தனது சிறுவயது முதல் தன்னுடன் வளர்ந்த அகல்யாவை உடன்பிறவா சகோதரியைப் போல பாவித்திருந்தாள்.

அதையும் தன் தாயிடம் சில முறை பகிர்ந்து கொண்டிருக்கிறாள்.

“ஏம்மா எனக்கு ஒரு தம்பியோ, இல்ல தங்கச்சியோ இருந்திருந்தா தருவேன்ல, அந்த மாதிரி நினச்சுக்கங்கம்மா!”, என்பாள் அனன்யா.

“தம்பியோ இல்லை தங்கச்சியோ எதுவானாலும், அவங்கவங்களுக்கு எடுத்துச் சொன்னாதான், இன்னது செய்யனும், இதச் செய்யக் கூடாதுன்னு புரியும். அத சொல்லாத வர எப்பவும் கஷ்டம் தான் அனிமா…!”, தேவகி.

“அப்ப அகிட்ட நீங்களே எடுத்துச் சொல்லுங்கம்மா!”, அனி

“நான் சொன்னா… அவ எப்டி எடுத்துப்பாளோ!”, என எப்போதும் அகல்யாவிடம் கூற சற்று தயங்குவார், தேவகி.

இவ்வாறு தாய், மகளுக்கிடையே பலமுறை பேச்சு வந்திருந்த போதிலும், அது அகல்யாவைச் சென்றடையவே இல்லை.

கல்லூரிக்கு வந்தவர்கள், புதிய ஆடையில் வந்த இருவரில், யார் கண்டவுடன் அழகாக இருக்கிறார்கள் என ரஃப்பான பட்டிமன்றம், கல்லூரியின் காரிடரில் தோழிகள் புடைசூழ்ந்து நடத்த, கண்ணெடுப்பிலேயே (வாக்கெடுப்பு போல) அனன்யா வென்றிருந்தாள்.

அகல்யா எதையும் அப்போது கண்டு கொள்ளாத போதும், வீட்டிற்கு திரும்பும் வழியில் அனன்யாவிடம் கேட்டிருந்தாள்.

“அனி நீ போட்டுருக்கறத தான அம்மா எனக்கு எடுத்தாங்க, அப்புறம் ஏன் அத எங்கிட்ட குடுக்காம, நீ போட்ட!”, அகி

“நீ தான் முதல்ல குளிச்சிட்டு வந்து, அந்த ட்ரெஸ்ஸ எடுத்துப் போட்டுக்கிட்ட, அப்புறம் வந்து இப்டி கேப்பியா!”, அனி

“எனக்குனு அம்மா அத தான் எடுத்தாங்கனு அப்புறம் தான நீ சொன்ன!”, வியக்கியானம் பேசினாள்.

“நீ ட்ரெஸ்ஸ போடுமுன்ன கேக்கவே இல்லையடி”, நியாயம் பேசினாள், அனி.

“ப்சு… இந்த கலர் எனக்கு எடுக்கலயாம்!”, அகியின் வருத்தத்தினை எண்ணி அனி சிரிக்க

“என்னடி! எங்கஷ்டம் உனக்கு சிரிப்பா இருக்கா”, அகல்யா வருந்த

“என்னடி கஷ்டம் இதுல உனக்கு!”, உணராதது போலவே கேட்டிருந்தாள்.

“இனி மாத்திப்போம், இனி நான் போட்டுருக்கறது உனக்கு, நீ போட்ருக்கறது எனக்கு, ஓகேவா”, அகல்யாவின் முடிவைக் கேட்டு சிரித்து தலையாட்டிய அனன்யா,

“சாப்பாட்டுல பாதி கேட்டா கொடுக்கலாம், ட்ரெஸ்ல அந்த மாதிரி குடுக்க முடியாதுனு தான், அம்மாவும் இது வர ஒரே கலர்ல, ஒரே பேட்டர்ன்ல ரெண்டு எடுப்பாங்க. அன்னிக்கு ஒரே கலர்ல கடையிலயே இல்லனால வேற கலர்ல எடுத்துக் குடுத்ததுக்கு இம்புட்டு அலும்பு பண்ற!”, என உண்மையை கூறியிருந்தாள்.

“ஆமா ரெண்டு பேருக்கும் ஒரே டேஸ்ட் தான!”

“அதுலாம் சரிதான், ஆனா இனி யோசிச்சு செய்யி அகி!”

“என்னத்த… யோசிக்க?”, மூளைக்கு வேலையே கொடுக்காமல் கேட்டிருந்தாள்.

“ஷேர் பண்றது நல்ல பழக்கம் தான் இல்லனு சொல்லல. ஆனா எதுலயும் மெச்சூர்ட்டா பிகேவ் பண்ண ட்ரை பண்ணு அகி!”

“மெச்சூர்ட்டா தான இருக்கேன்!”, தன்னைப் பற்றிய சந்தேகம் கேட்டாள், அகி.

“மெச்சூர்ட் இப்டி நடக்க மாட்டாங்க!”, அனி

“நான் இதுவரை எல்லாத்தையும் உங்கூட ஷேர் பண்ற மாதிரி, கடைசி வரை எல்லாத்தையும் ஹாப்பியா ஷேர் பண்ணிக்குவேன்டி”, என அகி சிரிக்க

“அதுக்காக ரிலேசன்ஸ் எல்லாம் ஷேர் பண்ண முடியாதில்லயா?”

“ஏன் உன் அம்மா, அப்பாவ… நானும் அம்மா, அப்பானு தான கூப்டுறேன்!”

“அது வேறடி, ஆனா எல்லா ரிலேசனயும் அப்டி ஷேர் பண்ண முடியாதில்லயா?”

“நான் ஹப்பிய கூட ஹாப்பியா ஷேர் பண்ணிக்குவேண்டி!”, எனக்கூறி அகி சிரிக்க

‘ஹப்பியவுமா?’ அனியின் மனம் சற்று முரண்டியது. ஒரு அளவிற்கு பொருத்துப் போனவளால் கணவன் என்ற பேச்சு வந்ததும், தனது மறுப்பை முதன் முதலில் மறைக்காமல் முகம் காட்டியது. ஆனால் அதை உணராத அகல்யா பேசிக்கொண்டே இருந்தாள்.

“எல்லாம் ஷேர் பண்ணுவோம். உலகம், உன்னையும், என்னையும் பாத்து ரொம்ப நல்லா மெச்சிக்கும்!”,என்று அனி கிண்டல் குரலில் கூற

அதை உணராமல், “நம்ம வாழ்க்கைல இதுவர இரண்டு பேருக்குள்ள ஷேர் பண்ணிக்காத விசயமோ, பொருளோ, நபரோ இல்லனு, நம்ம கூப்டு அவார்டு குடுக்கப் போறான், நீ வேணா பாரேன்!”, என அகி சிரித்தபடி கூற

“எப்டி அகி எல்லாமும், எல்லா காலத்திலயும் ஷேர் பண்ணுவோம்! எல்லாம் ஒரு காலகட்டம் தான், அது பொருள், நபர், இடம் மாறும் போது ஷேரிங்க்கு வாய்ப்பு இல்லாமலும் கூட போகும்!”, அனி.

“அதெப்டி! இது வர அப்டிதான இருந்திருக்கோம்!”

“ஆனா காலம் முழுவதும் அப்டியே தொடற முடியாதுல்ல!”, நிதர்சனம் கூறினாள், அனி.

“ஏன் முடியாது? சைட்டெல்லாம் சேந்து தானா அடிக்கிறோம்!”, குதர்க்கமாக கேட்டாள், அகி.

“சைட்டு, சாப்பாடு மாதிரி… எல்லாத்தையும் எப்டிடி ஷேர் பண்றது!”, தன்னால் இயன்றவரை தனது கருத்தை தோழியின் மனதில் பதிய வைக்க முயன்றாள்.

“ஏன் இது வர ஷேர் பண்ண மாதிரி, இனியும் ஷேர் பண்ணிக்க வேண்டியதுதான்!”, என்ன பேசுகிறோம் என யோசிக்கிறாளா இல்லையா என எதிரில் இருப்பவர்கள் யோசிக்கும் வகையில் அகல்யா கூற

“ஏய், என்ன பேசறனு யோசி அகி!”,என்றபடி அனி கடினக் குரலில் கூறி அமைதியாகி விட, சிந்திக்கிறாளா இல்லை கண்டு கொள்ளவே இல்லையா எனக் கணிக்க முடியாதபடி அகல்யா அமைதியாகவே இருந்தாள். அதற்குள் வீடு வந்திருக்க வண்டியில் இருந்து இறங்கி அமைதியாக வீட்டினுள் நுழைந்தனர்.

அகல்யாவின் அமைதியை, பகிர்தலில் உள்ள வரம்புகள் பற்றி தனது தோழி யோசிக்க ஆரம்பித்துவிட்டாள் என அனன்யா நினைத்திருந்தாள்.

ஆனால் அகல்யா, எப்போதும் இல்லாத புது கதையை அனன்யா, தனக்கு கூறுவதற்கான காரணம் என்னவாக இருக்கும் என்பதை உணராமல், தன்னிடம் இருந்து தோழி விலகிச் செல்ல எண்ணுவதாக மட்டுமே சிந்தித்திருந்தாள், அகல்யா.
————————

ஹாலில் ஈஸ்வரனுடன் அமர்ந்து அவரின் நண்பர் திருக்குமரன் பேசிக் கொண்டிருந்தார். கோவையில் முதன் முதலில் தொழில் துவங்கும் போது ஈஸ்வரனும், திருக்குமரனும் இணைந்து முதல் போட்டு ஆரம்பித்திருந்தனர்.

தொழில் சற்று பிடிபட்டு சூடுபிடிக்க, வந்த வருமானத்தில் இருவரும் மனம் ஒப்பி, அதே போல பத்து கிலோ மீட்டர் தூரத்தில் மற்றொரு இடத்தினை வாங்கி, அதன் கிளையைத் துவங்கி இருவரும் பாடுபாட்டனர்.

இரு நிறுவனங்களும் ஓரளவு ஸ்திரமான பின்பு, தொழிலில் நல்ல வருமானம் ஈட்ட வழி செய்தனர். பிறகு வந்த இலாப நட்டங்களை கணக்கிட்டு அவரவர் பிரியப்பட்ட இடத்தினை அவரவர் பெயருக்கு மாற்றி சுமுகமாக இசைவுடன் பிரிந்திருந்தனர். அதனால் இன்று வரை கல்மிஷம் இல்லாமல், இருவரும் எப்போதும் போல நட்பு பாராட்டி வருகின்றனர்.

குமரன், அனன்யாவைக் கண்டவுடன், “அனிக்குட்டி, வீட்டுப் பக்கமே நீ வரமாட்டிங்கறயே, ஏன்னு உங்க அத்த கேக்க சொன்னா!”

“வாங்க மாமா, அத்தலாம் நல்லா இருக்கங்களா,
நான் சீக்கிரமா வீட்டுக்கு வரேன்னு அத்தகிட்ட சொல்லுங்க மாமா”

“வர்ற தடவயெல்லாம் நானும் கேக்கறேன். எல்லா முறையும் வரேன்னு தான் எங்கிட்ட சொல்ற, ஆனா வர முடியாதபடி ரொம்ப பிஸியாவே இருக்கியா!”

“இந்த தடவ கண்டிப்பா வருவேன்னு அத்தகிட்ட சொல்லுங்க மாமா”, என அனன்யா கூற

“வீட்டுக்கு வந்தா… உங்க அத்த உனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வச்சிருக்காளாம்!, சொல்லிக்கிட்டு இருந்தா”, என அனன்யாவுடன் சற்று நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, அனைவரிடமும் சொல்லிக் கொண்டு கிளம்பினார், குமரன்.

திருக்குமரன், கோமதி தம்பதியருக்கு கிஷோர் எனும் மகன் மட்டுமே. மகனுக்கு திருமண வயது வந்திருக்க மணமகளாக அனன்யாவைக் கேட்கும் எண்ணம் தம்பதியருக்கு இருக்க, அதைப்பற்றி நேரில் பேசவே… திருக்குமரனின் இந்த பயணம்.

நண்பன் நேரில் வந்து கேட்டதை மறுக்காத ஈஸ்வரன், மனைவியுடன் கலந்து கொண்டு, மகளுக்கு பிடித்தம் இருக்கும் நிலையில் பேசலாம் என கூறிவிட்டார்.

அனன்யாவை விட ஆறு ஆண்டுகள் மூத்த கிஷோர் தற்போது தந்தைக்கு உதவியாக தொழிலில் ஈடுபட்டிருந்தான்.

இது வரை எந்த கெட்ட பெயரோ, தீய பழக்கங்களோ இல்லாமல் இருந்தவனை மறுக்கும்படியான காரணம் எதுவும் இல்லாமல் இருந்தது, ஈஸ்வரனுக்கு. மேலும் இது போல தெரிந்த இடத்தில் பெண்ணை நம்பிக் கொடுத்தால் பிரச்சனை எதுவும் இல்லாமல் கடைசி வரை இருக்கும் என கணித்திருந்தார், ஈஸ்வரன்.

மனைவியிடம் மகளின் திருமணம் பற்றிக் கேட்க, படித்து முடித்தவுடன் வைத்துக் கொள்ளலாம் என்றுவிட்டார். அதனால் மகளிடம் இது பற்றி எதுவும் பகிராமல் விட்டிருந்தனர், ஈஸ்வரன் தம்பதியினர்.

பள்ளிப் பருவத்தில், பள்ளியில் கேஜியில் சேர்ந்திருந்த போது கிஷோரை முதன் முதலில் பார்த்திருந்த ஞாபகம் மட்டுமே இருந்தது, அனன்யாவிற்கு. கிஷோரைப் பற்றி அவன் பெயரைத் தவிர வேறு எதுவும் அனன்யாவிற்கு தெரியாது.

அனன்யா, கேஜி இரண்டாமாண்டு போகும் போதே, உண்டு உறைவிடப்பள்ளிக்கு மாற்றப்பட்டிருந்தான், கிஷோர். ஆகையால் அவனிடம் பேசுவதற்கோ, இல்லை பழகுவதற்கோ வாய்ப்பு இல்லாமல் போயிருந்தது.

சிறு வயதில் கோமதியுடன் அவர்கள் வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவாள். விடுமுறைக்கு வீட்டிற்கு வந்திருக்கும் கிஷோரிடம், கோமதியைக் காணாத போது, ‘கிஷோர் அண்ணா’ என அழைத்து கேட்கும் கோமதி பற்றிய கேள்விகளுக்கு மட்டுமே பதிலளித்திருந்தான், கிஷோர்.

கிஷோர், அவனாக அனன்யாவிடம் கேட்டதோ, பேசியதோ, விளையாடியதோ இல்லை. அவள் பெயரிட்ட அழைப்போ, ஒரு சாதாரண பார்வையோ கூட அனன்யாவிடம் வைத்துக் கொள்ள மாட்டான். ஆனால் கோமதிக்கு அனன்யா என்றால் மிகவும் பிடிக்கும்.

பெண் பிள்ளை இல்லாமல் போன குறையை, அனன்யாவுடன் பேசி, நேரம் செலவளித்து சரி செய்து கொள்வார், கோமதி.

கோமதி அதிகம் அனன்யாவைக் கொண்டாடும் போதும் மனவருத்தம் கொள்ளாமல் சிரித்தபடியே அகன்றுவிடுவான், கிஷோர்.

கோமதி, சிறுவயதில் அனன்யாவை அடிக்கடி வெளியே அழைத்துச் சென்று வருவார். அகல்யாவின் பாட்டி இறந்த பிறகு, அனன்யா தனது தோழியை விட்டு வெளியே செல்வதை விரும்பாமல் முதலில் கோமதியிடம் மறுக்க, அதன்பின் கோமதி அனன்யாவை கேட்பதையே விட்டுவிட்டார்.

ஆனாலும், வீட்டிற்கு வரும்போது அனன்யாவுடன் தனித்து எப்படியும் ஒரு மணித் தியாலம் பேசிவிட்டே செல்வார். அப்படி வீட்டிற்கு வந்து போகும்போது தேவகியிடம், அனன்யா வெகுளியாக இருப்பதாகவும், சற்று அவளுக்கு உலக விடயங்களைச் சொல்லுக் கொடுக்குமாறும் கூறி விட்டுச் செல்வார், தேவகி.

ஆரம்பத்தில் கோமதியின் வார்த்தைகளை, தேவகியும் பொருட்படுத்தாமல் தான் இருந்தார். ஆனால் நாட்கள் சென்று வருடமாகும் போது, பல விடயங்களை நேரில் கண்டு மணம் வெதும்பத் துவங்கினார். மகளை கண்டிக்கவும் முடியாமல், இயலும் போது நேரடியாக மகளிடம் விடயத்தைக் கூறி வந்தார்.

நாட்கள் அதன்போக்கில் செல்ல, அகல்யாவும், அனன்யாவும் இணைந்து மனம் போன போக்கில் தங்களின் வயது பெண்களைப் போல, கேண்டினில் கேலியையும், திரையரங்குகளில் பல திருகுதாளங்களையும், கஃபேக்களில் கலகங்களையும் செய்து வயதுக்குரிய கொண்டாட்டங்களை தோழிகளுடன் கொண்டாடி மகிழ்ந்திருந்தனர்.

கல்லூரியில் இருந்து சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக செய்தி அறிவிக்கப்பட்டது. அனன்யா, அகல்யா இருவரும் சேர்ந்து செல்வதாக கல்லூரியில் தங்களது பெயரைப் பதிவு செய்து வீடு திரும்பியிருந்தனர்.

மற்ற மாணவியர்கள், வீட்டில் கேட்டு பிறகு சொல்வதாகக் கூறிச் சென்றிருந்தனர். கல்லூரியில் இருந்து வந்தவுடன் தாயிடம் இதுபற்றி கூறினாள், அனன்யா.

அனன்யா கூறியதைக் கேட்ட தேவகி, முதலில் வேண்டாமென மறுத்துவிட்டார். பிறகு ஒரு வாரம் உணவிற்கு தடா என்று அனன்யா தர்ணா செய்ததும், தேவகி ஒத்துக் கொண்டார். ஈஸ்வரனிடம் கூறி இருவருக்கும் சுற்றுலாவிற்கு செல்ல வேண்டிய அனைத்து ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தார், தேவகி.

சுற்றுலா செல்வதாக இருந்த இரு நாட்களுக்கு முன் எதிர்பாரா விதமாக அகல்யாவிற்கு குளிர் சுரம் வந்து உடல்நலக் குறைபாடு உண்டாகியிருந்தது. சுரத்திற்கு என மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல, அங்கு டெங்கு சுரமாக இருக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறி உடனே அவளை மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர்.

அகல்யா! அவளுக்கென்ன… ! அடுத்த அத்தியாயத்தில்…
—————————–

error: Content is protected !!