avalukkenna13A

avalukkenna13A

அத்தியாயம்(நிறைவு)
13a

அகல்யாவைப் பற்றிய உண்மைகளை, தனது கணவன் வாயால் கூறக் கேட்ட அனன்யா வருத்தமுற்றதோடு, இயல்பைத் தொலைத்து முற்றிலுமாக மாறியிருந்தாள்.

வசந்தம் வீசிய புதுமணத் தம்பதியரின் வாழ்வில், அகல்யாவின் கடந்து போன வாழ்க்கையை மனதிற்குள் போட்டுக் குழப்பியவாறு, தானும் வருந்தி தன்னவனையும் வருத்தியிருந்தாள், அனன்யா. தன்னிலை மறந்து தோழியைப் பற்றி மட்டுமே சிந்தித்தபடியே இருந்தாள்.

ஓரளவிற்கு இதையெல்லாம் எதிர்பார்த்து சற்று யூகித்திருந்தவனுக்கு, அனன்யாவைத் தேற்றும் வழி தேடிக் களைத்திருந்தான். ஆனாலும் ஓயவில்லை.

மகுடியாக மாறி, தான் செய்த மாயத்திற்கு விழிப்பற்று தன் எண்ணம் போல ஆட்டுவிக்கப்பட்டிருந்தவள், சுற்றம் உணர மறந்துபோன நேரமும் வந்தது.

பெண்கள் தனக்குள் நிரம்பியதை மட்டுமே மீண்டும் மீண்டும் எண்ணுகிறோம். மனதோடு அல்லாடுகிறோம். அனன்யாவின் உள்ளம் அகல்யாவின் தவறவிட்ட வாழ்க்கையை எண்ணிக் கொதித்தது.

தனது வாழ்க்கையைப் பங்கிட்டுக் கொள்ள அகல்யா தனது ஆவலைத் தெரிவித்தபோதுகூட மனம் வருந்தவில்லை. அப்போது மனதில் வருத்தம் இருந்தேயன்றி, இவ்வளவு கொதிப்பு அனன்யாவிற்கு எழவில்லை. ஆனால் இப்போது தனது தோழி ஏமாற்றப்பட்டாள் என்ற செய்தி கேட்டு உள்ளம் கொதித்தது.

‘அவ்ளோ தூரம் எடுத்துச் சொல்லியும், அவனை நம்பி மோசம் போயிருக்காளே! இன்னும் என்ன கஷ்டமெல்லாம் அனுபவிச்சானு தெரியலயே?’, என உள்ளம் உருகி, மருகினாள்.

அனன்யாவின் வருத்தத்தை போக்கும் மருந்தை அறிந்து உரிய நேரத்தில் கொடுக்கும் முயற்சியை கைலாஷ் மேற்கொண்டபடியே, தனது பணிகளையும் கவனித்துக்கொண்டு இருந்தான்.

தன்னால் இயன்ற வகையில், அகல்யாவிற்கு வேண்டிய நியாயம் கிடைக்கச் செய்ய உறுதுணையாக இருப்பதாக மனைவியிடம் உறுதி கூறியிருந்தான், கைலாஷ்.

முதலில் தனது தோழியை நேரில் சந்தித்துப் பேச எண்ணியதை, கணவனிடம் மறையாது கூறினாள் அனன்யா.

அடுத்து வந்த வாரவிடுமுறை தினத்தன்று கணவன், மனைவி இருவரும் புதுக்கோட்டைக்குப் பயணமாகினர்.
——————————————–
எதிர்பாரா புதுமணத் தம்பதியரின் வருகையை கண்ட அகல்யா, உள்ளம் மகிழ்ந்து, உவகை கொண்டவள், வந்தவர்களை வரவேற்று உபசரித்திருந்தாள்.

சற்று நேரம் புதியவர்களைக் கண்டு எட்ட நின்று, தாயின் பின்புறம் மறைந்தவாறு அவர்கள் பேசுவதைக் கவனித்த குழந்தை அனிருத், பின்பு சகஷமாகியிருந்தான்.

தோழியிடம் மனம் திறந்திருந்தாள் அனன்யா.

அரங்கத்தனமாக உள்ளதைப் பேசாமல் மறைத்தவளை, உரிமையோடு அதட்டி உள்ளதைப் பேச வைக்க முயற்சி செய்தாள் அனன்யா.

கைலாஷ் இருப்பதால் கூறத் தயங்குகிறாளோ என எண்ணி அகல்யாவிடம் இருந்த குழந்தையை வாங்கிக் கணவனின் கையில் திணித்திருந்தாள் அனன்யா. குழந்தை அனிருத்தும் முதலில் மிரண்டு பின் கைலாஷோடு இணக்கமாகியிருந்தான். இருவரும் அகல்யாவின் ஸ்கூட்டியில் வெளியே சென்றிருந்தனர்.

அகல்யாவின் மனஆழத்தில் இருந்ததையெல்லாம் தோண்டி வெளியில் எடுக்கும் தனது முயற்சியில் வெற்றி கண்டிருந்தாள் அனன்யா.

“அப்போ இருந்த என்னோட வயசு, மனசு ரெண்டையும் அவனுக்கு சாதகமாக பயன்படுத்திக்க, நானும் ஒரு காரணமா இருந்துட்டேன் அனி. நீ எவ்வளவோ எடுத்துச் சொன்ன…! ஆனா அப்போ எனக்கு அது புரியல…!

என்னோட செயலுக்கு யாரையும் நான் நோக பிரியப்படல. ஆனா… நம்ப வச்சுக் கழுத்தறுத்த அவனை எனக்கு சக மனுசனா மதிக்கக் கூடப் பிடிக்கல. எனக்கு மனசே வெறுத்துருச்சு அனி, இனி எனக்கு அவன் வேணாம். எனக்கு எம்பையன் இருக்கான். அவனை நல்லபடியா ஆளாக்கினாலே போதும்”, என்றவளை அத்தோடு அவளின் போக்கில் விடவில்லை அனன்யா.

“உனக்குப் போதும் அகி. நீ தியாகி. இனி இந்த வேலையே கதின்னு ஆயுள் வரை இருக்கப்போற…! சரி…! உன்னைய மட்டுமே இப்பவும் யோசிக்கிறியேடி! உன்னை நம்பி இருக்கிற அனிருத் பத்தி என்ன யோசிச்சு வச்சிருக்க?”, என மகனைப் பற்றிக் கேள்வியெழுப்பி அகல்யாவை யோசிக்கத் தூண்டினாள் அனன்யா.

“அவனுக்கென்ன அனி, எனக்கு நல்ல வருமானம்தான். அவனுக்கு நல்ல எஜூகேசன் கொடுப்பேன். அப்புறம் அவன் லைஃப்ல நல்லபடியா செட்டிலாக என்னால முடிஞ்சத செய்வேன். இதவிட வேற என்ன வேணும்?”, என அனிருத்தின் எதிர்காலம் பற்றிய தனது திட்டமிடலை தோழியிடம் மகிழ்வோடு பகிர்ந்து கொண்டாள், அகல்யா.

“அவன் ஸ்கூலுக்கு போவான். ஆனா அங்க அவனோட படிக்கிற புள்ளைங்க எல்லாம் அம்மா, அப்பானு ரெண்டு உறவோட ட்ராவல் பண்ணுவாங்கள்ல…”, என்று கூறி தோழியின் முகம் பார்த்திருந்தாள்.

“அதுக்கென்ன…! அப்பா வெளியூர்ல இருக்காருனு சொல்லி வளக்கவேண்டியதுதான்! ஏன் அனி ஃபாரின் போயி அப்பா சம்பாதிக்க, அம்மாதானே இங்க குழந்தைகளை கவனிச்சிட்டு இருக்காங்க… அதுபோல நாம இவங்கிட்ட சொல்லிடவேண்டியதுதான்”, என இலகுவாக பதில் சொல்லியிருந்தாள் அகல்யா.

“எவ்வளவு நாளுக்கு அப்டி சொல்லமுடியும்? அதுக்கும் ஒரு முடிவுனு வேணும்ல? இரண்டு வருசத்துல ஒரு முறையாவது ஃபாரின்ல இருக்கிற அப்பா அவங்க வீடுகளுக்கு வந்து போயி இருப்பாருல்ல…! அந்தக் கேள்வி குழந்தைக்கு எழும்போது என்ன செய்யறதா இருக்க…?”, புரியாதவளுக்கு புரிய வைக்கும் நோக்குடன் கிளறினாள்.

‘அட… ஆமா அனி சொல்லறமாதிரி எவ்ளோ நாளுக்கு அனிருத்கிட்ட இப்டியே சொல்லிட்டு இருக்க முடியும்?’ என யோசித்தபடியே, “இல்லைனா…!”, என ஒரு கனம் நிதானித்தவள், “… செத்துப் போயிட்டான்னு சொல்லிட வேண்டியதுதான் அனி!”, என மனதில் இரக்கமற்றவளாக பேசிய தனது தோழியைப் பார்த்து மனம் வெதும்பியிருந்தாள் அனன்யா. ஆனால் எந்த வருத்தமும் இன்றி அமர்ந்திருந்த அகல்யாவைப் பார்த்தவளுக்கு உள்ளம் கொதித்தது.

எந்தளவு தனது தோழி வெறுக்கும்படி அந்த நவீன் நடந்து கொண்டிருந்தால், அவன்தான் வேண்டும் என விரும்பி ஏற்றுக் கொண்டவனை உயிரோடு இருக்கும் போதே இறந்து போனதாக ஒரு பெண்ணால் கூறமுடியும் என்பதை உணர்ந்து, தோழியை எண்ணி மனம் உருகிப்போனாள் அனன்யா.

“கணவன் அப்டிங்கற உறவு உயிரோட இருக்கிறதோ, சாகறதோ உனக்கு பிரச்சனையில்லாம இருக்கலாம். குழந்தைக்கு அப்டியில்ல. அம்மாங்கிற உறவுமேல மதிப்பு, மரியாதைங்கிற ஒன்னு வரணும்னா, சில விசயங்கள்ல நாம வெளிப்படையா இருக்கணும்.

அப்புறம் ஒவ்வொரு இடத்திலயும் அவன் இந்த சொசைட்டியை ஃபேஸ் பண்ணணும்ல அகி. உனக்குனு மட்டும் யோசிக்காத. அனிருத்தோட எதிர்காலத்தையும் யோசி.

சிங்கிள் பேரண்டா இருந்தா ‘மிஸ் யுனிவர்ஸ் சுஷ்மிதா சென்’னோட அடாப்டட் செயில்ட பாத்து இந்த சொசைட்டி பெருமையா பேசும்! கொண்டாடும்! இது புரியாம நம்மளும் அவங்கமாதிரி எதாவது புதுமை பண்றோம்னு இன்னிக்கு தப்பிக்க எதாவது சொல்லிட்டாலும், பின்னாடி உண்மை தெரியவரும்போது ரொம்ப கஷ்டம்”, என்று தோழியிடம் கூறினாள்.

“ஏன் அப்பா இல்லாம… அம்மா மட்டுமே பிள்ளைங்கள ஆளாக்குறது இல்லையா?”, என்ற எடக்கு கேள்வியை அகி கேட்டாள்.

“உனக்கு பெரிய மகாலெட்சுமின்னு நினைப்பாக்கும்!”, என்று கூறிய தனது தோழி அனன்யாவை புரியாத பார்வை பார்த்தாள் அகல்யா.

“என்ன புரியலயாக்கும். எம்.குமரன் சன் ஆஃப் மகாலெட்சுமி படத்துல வர நதியானு உனக்கு நினைப்பாக்கும்னு கேட்டேன்”, என்று விளக்க

“….”, தோழியின் பேச்சைக் கேட்டவாறு யோசித்திருந்தவளைப் பார்த்து அனன்யா மேலும் தனது எண்ணத்தைக் கூறினாள்.

“நம்ம புள்ளைங்க மிடில் கிளாஸ்ல இருந்து இந்த மாதிரியான சிச்சுவேசனை ஃபேஸ் பண்ணி முன்னேறனும்னா… அது அவ்ளோ சாதாரணம் இல்ல! ஊரறிய கல்யாணம்னு ஒன்னு நடந்து, வாழ்ந்துகிட்டு இருந்தவங்களோட நிலைமையே இன்னிக்கு பல கேள்விகளுக்கு உள்ளாகுது.

இங்க நீ சிங்கிள் பேரண்டா இருக்கலாம். ஆனா குழந்தைக்கு அப்பாங்கற உறவு யாருங்கறதை தெளிவா சொல்லிட்டா அனிருத்கு பின்னாடி எந்த இஸ்யூவும் இல்ல. அவனுக்காகவாவது யோசி அகி”, என்று தனது எண்ணத்தை அகல்யாவிடம் திணித்திருந்தாள்.

“நான் அடுத்த வாரமும் வருவேன். அப்போ ஒழுங்கா நல்லா யோசிச்சு ஒரு முடிவு சொல்ற…”, என்று தனது தோழியை உண்டு இல்லை என ஆக்கிவிட்டு கணவனோடு கிளம்பியிருந்தாள், அனன்யா.

———————-

தகப்பன் யாரென்று தெரியாமல் வளரும் குழந்தைகள் மனரீதியாகவும், சமூகநிலையிலும், குடும்ப வாழ்க்கையிலும் பெரும்பாலும் பாதிக்கப்படுகிறார்கள். அதற்கு தெரிந்தும், தெரியாமலும் தாய் என்ற உறவே காரணமாகிறது என்பது வருத்தத்திற்குரியது.

இளவயதிலயே தந்தை எனும் உறவை தன்முனைப்பினால் பிரிந்து, தாயின் அரவணைப்பில் மட்டும் வளரும் குழந்தைகள் பெரும்பாலும் குடும்ப வாழ்க்கையில் சோபிப்பது கிடையாது.

புரிதல், விட்டுக்கொடுத்தல், தியாக மனப்பான்மை, பொறுமை, சகிப்புத்தன்மை தெரியாதவர்களாக, குடும்பச் சிக்கலை அவிழ்க்கத் தெரியாதவர்களாக வளருகிறார்கள். தனியொருவருடைய மேற்பார்வையில் வளருவதால் இந்தப் பிரச்சனைகளை அத்தகைய குழந்தைகள் சந்திப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றது.
————————

அகல்யாவைச் சந்தித்து திரும்பிய பிறகு, சற்றே மாறியிருந்தாள் அனன்யா. முன்பைவிட சற்றுத் தெளிந்து காணப்பட்டாள். தோழியின் நிலையறிந்தவுடன் மாறிப்போனவளைத் தேற்ற அரும்பாடுபட்டிருந்தான், கைலாஷ்.

அடுத்த வாரம், தோழியிடம் கூறியதைப்போல புதுக்கோட்டைக்கு விஜயம் செய்யும் முன்பே அலைபேசியில் சிலவற்றைப் பேசியிருந்தாள் அனன்யா.

நமது சமூகக் கட்டமைப்பில் திருமணம் போன்ற நிகழ்வுகளின்போது, பெற்றோர்களை வைத்தே பெரும்பாலும் அடுத்தகட்ட நகர்விற்கு முன்னேறுவர் என்பதையும் தோழிக்கு புரியும்படியாக எடுத்துக் கூறினாள் அனன்யா.

“இப்பதான் அனிருத் சின்னப் பையன், வருசம் டக்குனு ஓடிரும். அப்போ யாரு நிலைமை எப்டினு சொல்ல முடியாது. கல்யாணம் அப்டிங்கற ஒரு நிலைக்கு அனிருத் வரும்போது, இன்றைய உன்னோட முடிவுனால… பிற்காலத்துல எதாவது இஸ்யூஸ்னா உனக்கு மட்டும் கஷ்டமில்லை. அவனுக்கும் உம்மேல அதிருப்தி வந்திரும்”, என தோழிக்கு வெளிப்படையாகவே எடுத்துக் கூறினாள்.

“என்னதான் வெஸ்டர்ன் ஃபாலோ பண்றேன். பீசாதான் திம்பேன்னு ஊரை ஏமாத்திகிட்டு வெளியே எல்லா பயலுகளும் திரிஞ்சாலும், நம்ம மக்களோட சில பார்வைகளை, பேச்சை, முடிவுகளை நாம முழுமையா என்னிக்குமே மாத்தமுடியாது. அதுல… அனிருத் வளந்த பின்னகூட கஷ்டப்படக்கூடாது.

நம்ம சொசைட்டி மட்டுமில்ல. நம்ம கவர்மெண்ட்டையும் நம்ப முடியாது. எப்ப என்ன சட்டம் கொண்டு வருவான்னு. அதனால அனிருத்தோட ஃபியூச்சர் அஃபக்ட் பண்ற மாதிரி எதுவும் நம்ம கேர்லெஸ்னால வந்திரக்கூடாது அகி. அதனால நல்ல முடிவா எடு”, என்று அலைபேசியில் பேசிவிட்டே புதுக்கோட்டைக்கு கணவனுடன் கிளம்பி வந்திருந்தாள் அனன்யா.

குழந்தையின் எதிர்காலம் கருதி, குழந்தையின் தகப்பன் நவீன்தான் என்கிற உண்மையைத் தவிர, வேறெதுவும் அவனிடம் தனக்குத் தேவையில்லை என்கிற வாதத்தில் தெளிவாக இருந்தாள், அகல்யா.

நவீனின் பெற்றோரை, பெரியவர்கள் சந்தித்துப் பேசியபோது நியாயம் எதுவும் கிடைக்கவில்லை.

அகல்யா வேறு எங்கோ தவறிவிட்டு தனது உத்தம மகனின் மீது குற்றம்சாட்டி, சொத்துக்களைக் குறி வைக்கிறாள் என்கிற அதீத உண்மையைக் கண்டுபிடித்துவிட்டதாக மார்தட்டிக் கொண்டது, நவீனின் குடும்பம்.

பெண்ணை தரக்குறைவான வார்த்தைளால், தகா உறவுமுறை கூறி பேசினால், அதை மீறி பெண்கள் வெளியே வரத் தயங்குவார்கள் என்பதை இச்சமூகம் அவ்வப்போது பயன்படுத்திக் கொள்கிறது.

மனநிலையை பாதிக்கும் சில கற்பு ரீதியிலான சமூகக் குற்றங்களை பெரும்பாலும் பெண்களின் நடத்தையின் மீது அபாண்டமாகக் குற்றம் கூறி அடக்கிவைக்கும் வித்தை தெரிந்தது இந்த சமூகம்.

அகல்யாவின் விசயத்திலும் அது எதிரணியால் கடைபிடிக்கப்பட்டது. ஆனால் அகல்யா துவளவில்லை. வீட்டிற்குள் முடங்கவில்லை. இதையெல்லாம் எதிர்பார்த்தே தனது மகனின் எதிர்காலம் கருதி துணிந்து முடிவு எடுத்திருந்தாள்.

பெரியவர்கள் பேசியபோது பொதுவில் எதையும் பேசாமல் தனது செயலைப் பற்றி பேசாமல் அமைதியாக இருந்தான் நவீன். அதன்பின் நேரில் வந்து அகல்யாவை தனிமையில் சந்தித்துப் பேசினான்.

தனது மனைவி மற்றும் குடும்பத்து பெரியவர்களுக்குத் தெரியாமல் அகல்யாவை நேரில் சந்தித்துப் பேசியவன், அனிருத்தை வளர்த்து ஆளாக்க வேண்டிய பொறுப்பை தான் மனமுவந்து ஏற்றுக்கொள்வதாகவும், அதனால் மட்டுமே அகல்யாவிற்கு தன்னால் உண்டான இழப்பிற்கு பிராயச்சித்தம் செய்ய முடியும் என்றும் நல்லவன் வேடமேற்று வந்து கூறியிருந்தான்.

ஆடு நனைவதை எண்ணி ஓநாய் வருத்தப்படுவது எதனால் என்பதும், அதனால் விளையும் தீமையைப் பற்றியும், ஆட்டிற்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் அடிபட்ட வேங்கையான அகல்யா, ஆடாக இல்லாமல் தெளிவான வேங்கையாக மாறியிருந்தாள் என்பதை அறியாதவனாக நவீன் இருந்தான்.

ஓநாயின் வருத்தம் எதற்கு என்பதை உணர்ந்து, உரிய வழிகாட்டுதலின்பேரில் குழந்தையின் தந்தை நவீன்தான் என உறுதிசெய்ய DNA டெஸ்ட் எடுக்கப்பட்டு, நீதிமன்றத்தின் உதவியுடன் நிரூபிக்கப்பட்டது.

காலம் அதிகம் எடுத்துக்கொண்டாலும், பொறுமையாக, ஈஸ்வரன், திருக்குமரன், கைலாஷ் துணையுடன் தனக்குத் தேவையானதை, அனிருத்தின் எதிர்காலத்திற்கு அவசியமானதை வழக்கறிஞர் உதவியுடன் சாதித்துக் கொண்டிருந்தாள் அகல்யா.

குழந்தைக்கு தகப்பன் நவீன்தான் என உறுதி செய்தது மட்டும் போதும். நவீன் தனது எதிர்கால வாழ்க்கைக்கு வேண்டாம் என அகல்யா வழக்கு மன்றத்திலேயே மறுத்திருந்தாள்.

தனது தவற்றை முற்றிலும் உணர்ந்து, தன்னைப் புதுமைப் பெண்ணாக செதுக்கிக் கொண்டவள், யாருக்கும் அஞ்சாது தற்போது கோவை மாவட்டத்தில் மாற்றலாகி பணிபுரிகிறாள்.

ஓநாயை விரட்டி அடிக்க, அனிரூத் என்னும் குட்டிச் சிங்கம் அகல்யாவிற்கு போதுமானதாக இருந்தது, இருக்கிறது. ஆம், விவரம் தெரியத் துவங்கியபோதே நவீனைப் பற்றிய தகவலை மகன் புரிந்து கொள்ளும்படியாக எடுத்துக்கூற தோழி கூறியதைத் தொடர்ந்து மகனுக்கு பக்குவமாக எடுத்துக் கூறியிருந்தாள் அகல்யா.

அனிருத்தும் தனது தாயின் நிலை அறிந்து வளரத் துவங்கியிருந்தான். சுற்றம் உணர்ந்திருந்தான். ஈஸ்வரன், தேவகி, திருக்குமரன், கோமதி, கைலாஷ் போன்ற உறவுகளின் உன்னதம் உணர்ந்து வளரத் துவங்கினான்.

தற்போது கோமதி, தேவகி இருவரின் பொறுப்பில் அனிருத் பொறுப்புடனும், கண்டிப்புடனும் வளர்க்கப்படுகிறான். தாய்மாமன் முறைக்கு கைலாஷ் அனிரூத்திற்கு வேண்டிய அனைத்தையும் செய்து கொடுக்கிறான்.

இளவயது பெண்ணின் பருவத்தேவைக்கு உரிய உறவு, துணை அவசியம் என்பதை உணர்ந்த அனன்யா, அவ்வப்போது தோழியிடம் மறுமணம் பற்றி பேசுகிறாள்.

அகல்யா பிடிகொடுக்கவில்லை. ஆனாலும், கஜினி முகமதுவைப் போல தளராமல் தோழியிடம் கேட்டு, அவள் முரண்டினாலும், சலித்துக் கொண்டாலும், சளைக்காமல் தோழியிடம் கேட்கிறாள் அனன்யா.

அகல்யா தனது வாழ்க்கையில் இனியொரு ஆண்மகனுக்கு இடமளிக்கப் பிரியப்படாத நிலையில் தெளிவாகவே இருக்கிறாள்.

——————

error: Content is protected !!