Avanindri oranuvum – 12

Avanindri oranuvum – 12

அவனன்றி ஓரணுவும்-12

இந்த பூவுலகிலேயே பேராபத்தான ஒரு ஜந்து உண்டெனில் அது மனிதன்தான். அவன் மூளையை விட ஆபத்தான ஓர் பேரழிவு வேறெதும் இல்லை.

யுரேனியத்தை நியூட்டிரானால் பிளந்தால் பிரிவு ஏற்படும். அதன் மூலமாக ஆட்டம்பாம் தயாராகும் என்று கண்டுபிடித்து தன் இனத்தை தானே கொத்தாக கொத்தாக மரணிக்க செய்த  ஒரே இனம் அவன் மட்டும்தானே! 

 

‘மை டார்லிங் ஷெர்லி,

நீ எனக்கு கடவுள் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம். உன் குழந்தைத்தனமான புன்னகையில்தான் என் வாழ்க்கையின் பாவங்கள் கரைந்து புனிதமடைகிறது.

நீ இல்லாமல் போயிருந்தால் விரக்தியும் வெறுமையும் மட்டுமே எனக்கு மிச்சமாக இருந்திருக்கும். நான் பைத்தியம் பிடித்து இந்நேரம் ஒரு மனநோயாளியாக இருந்திருப்பேன். அதுவே நான் செய்த பாவங்களுக்கு எனக்கு நல்ல தண்டனையாகவும் இருந்திருக்கும்.

ஆனால் தண்டனைக்கு பதிலாக எனக்கு நீ உன் அளப்பரிய அன்பையும் அரவணைப்பையும் தந்திருக்கிறாய். இன்னும் இன்னும் தந்து கொண்டிருக்கிறாய். அதற்கு பதில் உபாகாரமாக நான் என்ன செய்வேன்.

உன்னை பத்திரமாக பார்த்து கொள்வதன் மூலமாக என் பாவங்களுக்கு நான் கொஞ்சம் விமோசனம் தேடி கொள்ள முயல்கிறேன். ஆனால் இனி அது முடியாது. உன்னை விட்டு நான் வெகுதொலைவு போகிறேன். என்னுடைய முடிவை நானே தேடி கொள்ள போகிறேன்.’

 

முழுவதுமாக ஆங்கிலத்திலிருந்த அந்த கடிதத்தை படித்து முடிக்கும் போது பிரபஞ்சன் எதிரே நின்றிருந்த ஷெர்லியை அதிர்ச்சி கலந்த பார்வையை பார்த்தான். அவன் கைகளிலிருந்த  இரண்டு தாள்களில் ஒன்று அந்த கடிதம்.

ஷெர்லியிடம் அதனை திருப்பி தந்துவிடலாம் என்று யோசித்த போது ஷெர்லி கண்ணீரோடு அவனை நிமிர்ந்து பார்த்து, “என் கிரேன்ட் பா அவரோட லாஸ்ட் டேஸ் ல எழுதுனது… இட்ஸ் மோர் ப்ரெசியஸ் ஃபார் மீ… அந்த ஃபர்ஸ்ட் பேஜ்ல டாட்ஸ் மாதிரி இருக்கிறதெல்லாம் அவரோட ப்ளேட் ஷெட்ஸ்” என்றாள்.

அவள் சொன்ன நொடி அவன் கைகளிலிருந்த தாளின் பின்பக்கத்தை பார்த்தான். டிசேஸ்டர் என்ற தலைப்பிற்கு கீழ் கரிய நிறமாக மாறியிருந்த அந்த புள்ளிகள் அவரின் இரத்தத்துளிகள் என்பதை அவனால் யூகித்து கூட பார்க்க முடியவில்லை. லேசாக அவன் கை நடுங்கியது.

வருடங்கள் பல கடந்துவிட்டதால் அது அப்படி கரிய நிறமாக மாறியிருக்க கூடும் என்று தோன்றியது.

பிரபஞ்சன் அதிர்ச்சியோடு நிமிர்ந்து, “எப்படி ஷெர்லி?” என்று கேட்டதும்,

“சூசைட் பண்ணிக்கிட்டாரு” என்றாள் தம் விழிகளின் நீரை துடைத்து கொண்டே!

“ஏன்? எப்படி?”

அவள் தெரியாது என்ற பாவனையோடு தோள்களை குலுக்கிவிட்டு, “அப்போ என் ஏஜ் ஜஸ்ட் டென்… ஈவன் என் டேடுக்கு கூட என்ன காரணம்னு தெரியல… இதுதான் என் கிரேன்ட் பா லாஸ்ட்டா எழுதிட்டிருந்த புக்… பினிஷ் பண்ணாமலே” என்று சொல்லும் போதே அவள் வார்த்தைகள் தொண்டையை விட்டு வெளிவாரமல் சிக்கி கொண்டன.

அவளின் வலி அவள் முகத்தில் அப்பட்டமாக தெரிந்தது. எல்லோருடைய வாழ்க்கையிலும் இப்படி ஒரு ஜீரணித்து கொள்ள முடியாத இழப்பு இருக்கவே செய்கிறது. அதுதான் மனித வாழ்வின் நிதர்சனம் போலும்.

நேற்று தனக்காகவும் ஹரிக்காகவும் வருந்திய அதே மனம் இன்று அவள் தாத்தாவின் இழப்பை எண்ணி கலங்கி நிற்கிறது. அவன் மனமும் கூட அவளுக்காக அந்த நொடி கலங்கியது.

“ஐம் சாரி” என்று பிரபஞ்சன் வேதனையோடு சொல்ல, “இட்ஸ் ஓகே” என்று அவள் தன்னைத்தானே தேற்றி கொண்டாள்.

பின் அவனை நிமிர்ந்து பார்த்தவள், “இதுவரைக்கும் என் கிரேன்ட் பா அதுல என்ன எழுதியிருக்காருன்னு நான் படிச்சதே இல்ல ஹென்சம்

எப்பவும் அவர் யூஸ்வலா இந்த மாதிரி  நிறைய புக்ஸ் எழுதிறதுதான்… ஆனா என்னவோ இந்த பேபர்ஸ் பார்க்கும் போதெல்லாம் எனக்கு ரொம்ப அழுகையா வரும்… ஸோ ஐ வோன்ட்… ஆனா பரவாயில்ல… நீங்க படிச்சிட்டு கொடுங்க” என்று அந்த தாள்களை அடுக்கியபடி அதனை ஒரு கோப்பையில் வைத்து அவனிடம் நீட்டினாள்.

“நான் படிச்சிட்டு பத்திரமா உங்ககிட்ட திருப்பி கொடுத்துடுறேன் ஷெர்லி” என்றவன் முகம் மலர அதனை பெற்று கொண்டு,“தேங்க்ஸ்” என்றான்.

“ஹம்ம்” என்றவள் தலையசைத்துவிட்டு அந்த அறையை விட்டு வெளியேறி விட, அவன் யோசனையாக நின்றுவிட்டான். அப்படியெனில் ஷெர்லி அவர் தாத்தா எழுதிய அந்த கடிதத்தை இதுவரை படித்ததேயில்லையா?

வியப்பாக இருந்தது அவனுக்கு!

அதேநேரம் கிறிஸ்டோபர் அதில் எழுதியதன் முழு அர்த்தம் அவனுக்கு புரியவில்லை. ஆனால் அதில் ஏதோ உள்ளர்த்தம் பொதிந்திருக்கிறது என்பதாக தோன்றியது.

ஒருவேளை இது அவர்களின் தனிப்பட்ட விஷயமாக இருக்குமோ?! இதை தான் படிப்பது சரியாக இருக்குமோ என்ற கேள்வி எழ, அந்த கோப்பையை மேஜை மீது வைத்துவிட்டான். ஆனால் ஏதோ ஒரு உள்ளுணர்வு அதனை படிக்க சொல்லி அவனை உந்திதள்ளியது.

மனம் குழப்பமுற்றது. இப்போதைய தன் மனநிலைக்கு தெளிவு ஏற்பட வேண்டுமெனில் யோகாதான் ஒரே தீர்வு என்று தான் எப்பொழுதும் செய்யும் தன் காலை பயிற்சிகளை செய்ய தொடங்கினான். முதலில் அரைமனதாக தொடங்கினாலும் பின் முழு மனதாக அவற்றில் தன்னை ஈடுபடுத்தி கொண்டான்.

அதேசமயம் ஷெர்லி வெளியே ஊஞ்சலில் அமர்ந்திருக்க, அவள் கையில் காபி கோப்பை இருந்தது. அதனை குடித்து கொண்டே அவள் தீவிரமாக எதையோ சிந்தித்து கொண்டிருந்தாள். ஹரி அருகிலிருந்தும் அவரிடம் அவள் ஒருவார்த்தை கூட பேசவில்லை.

நேற்று அவள் முகத்திலிருந்த தெளிவு இப்போது அவளிடம் இல்லையே என்று யோசித்த ஹரி, “என்னாச்சு பியுட்டி?!” என்று கேட்க,

அவரை நிமிர்ந்து பார்த்தவள், “நத்திங்” என்றாள். அவள் மனதிற்குள் அவள்  தாத்தாவின் நினைவுகள் அலைகழித்து கொண்டிருந்தன.

ஹரிக்கோ அவள் ‘நத்திங்’ என்று சொன்ன பிறகு தோண்டி துருவி கேட்க விருப்பமில்லாததால் அவர் அமைதியாக எழுந்து செல்ல பார்க்க,

“ஹரி” என்று அழைத்து, “சுத்தி காட்டிறேன்னு சொன்னீங்களே… நம்ம எங்கயாச்சும் இன்னைக்கு வெளியே போகலாமா?” என்று கேட்டாள்.

அவள் அப்படி கேட்டதும் மீண்டும் அவரை உற்சாகம் பற்றி கொள்ள, அவள் அங்கே அருகாமையில் சுற்றி பார்க்க என்னென்ன இடங்கள் இருக்கின்றன ஒரு நீண்ட பட்டியலை சொல்லி முடித்தார்.

அவளும் ஆர்வமாக அவர் சொன்ன இடத்திற்கெல்லாம் செல்ல சம்மதமாக தலையசைத்தாள். ஹரி அதே உற்சாகத்தோடு சமையலறைக்கு சென்று,

‘பிரபாவையும் கூப்பிடணும்… அவனுக்கு இன்னைக்கு எந்த வேலையும் இருக்க கூடாது’ என்று முணுமுணுத்து கொண்டே அவனுக்காக க்ரீன் டீயை தயாரித்து எடுத்து கொண்டு மேலே அறைக்கு சென்றார்.

பிரபஞ்சன் அப்போது பத்மாசன நிலையில் விழிகள் மூடி தியானத்தில் அமர்ந்திருக்க, அவனை தொந்தரவு செய்துவிடாதவாறு சத்தமில்லாமல் எடுத்து வந்த க்ரீன் டீயை மேஜை மீது வைத்துவிட்டு அங்கேயே நின்றிருந்தார்.

பிரபஞ்சன் சில நிமிடங்கள் கழித்து தம் விழிகளை திறந்தான். இயல்பாக மனம் குழப்பத்திலிருக்கும் போது தம் எண்ணங்களை கட்டுப்படுத்தி ஓர் நிலைப்பாட்டிற்கு கொண்டு வருவது சற்றே அசாத்தியமான காரியம்தன். ஆனால் பிரபஞ்சனுக்கு அது சாத்தியப்பட்டது.

அந்த சில நிமிடங்கள் ஏனைய அனைத்து கவலைகள் குழப்பங்கள் யாவையும் ஒதுக்கிவிட்டு தன் எண்ணங்களை ஓர் புள்ளிக்குள் சங்கமிக்க செய்து தன் தியானத்தை செய்து முடித்தான். அவன் தெளிவற்ற மனதிற்கு அப்போது அந்த அமைதி தேவையாகவும் இருந்தது.

அதேநேரம் நம் சக்திக்கு அப்பாற்ப்பட்ட ஒன்றை எண்ணி கவலையுறுவது உபயோகமில்லை என்ற ஒருவித விரக்திநிலை அவனை பீடித்து கொண்டதும் உண்மை.

பிரபஞ்சன் எழுந்ததும் மேஜையின் அருகில் நின்றிருந்த ஹரியை பார்க்க விருப்பமில்லாதது போல் முகத்தை திருப்பி கொள்ள,

“சாரி பிரபா” என்று அவனை சமாதானம் செய்யும் விதமாக பேச ஆரம்பித்தார் அவர்.

“எதுக்கு சாரி?” என்று அலட்சியமாக கேட்டுவிட்டு அவர் மேஜை மீது வைத்திருந்த க்ரீன் டீயை எடுத்து நிதானமாக பருகி கொண்டே  இருக்கையில் அமர்ந்து அந்த கோப்பையை கையிலெடுத்து புரட்டி கொண்டிருந்தான்.

“நீ கோபமா இருக்கன்னு எனக்கு தெரியும்” என்று ஹரி சொல்ல,

“நான் கோபப்பட்டா மட்டும் நீங்க குடிக்கிறதை நிறுத்திட போறீங்களா?”

“என்னைக்கோ ஒரு நாள்… அதுகென்னவோ ஓவரா சீன் போடுற” என்றவர் எரிச்சலாக கேட்க அவரை நிமிர்ந்து பார்த்தவன்,

“என்னைக்கோ ஒரு நாள்னு இப்படி லிமிட் இல்லாம குடிப்பீங்களா? அதுவும் கூட ஒரு பொண்ணை வைச்சுக்கிட்டு” என்று சீற்றமாக கேட்டான்.

“டே! இந்த ட்ரிங்க்ஸ் பார்ட்டியே  ஷெர்லியை வெல்கம் பண்ணத்தான்” என்றவர்  சாதாரணமாக சொல்ல, அவரை விழிஇடுங்க  பார்த்தவன்,

“ஹ்ம்ம் ஹ்ம்ம்… பண்ணுங்க பண்ணுங்க… வெல்கம் பார்ட்டி சென்ட் ஆஃப் பார்ட்டின்னு எல்லாம் பண்ணுங்க” என்று சொல்லி தலையிலடித்து கொண்டான்.

“சென்ட் ஆஃப் பார்ட்டி எல்லாம் கிடையாது… அந்த பொண்ணு இங்கேதான் இருப்பா… போக மாட்டா”

அதிர்ச்சியாக எழுந்து நின்ற பிரபஞ்சன், “என்ன விளையாடுறீங்களா? நேத்து ஒரு மாதிரி பேசுறீங்க இன்னைக்கு ஒரு மாதிரி பேசுறீங்க… அந்த பொண்ணு டெம்பரரியா டூரிஸ்ட் விசாலதானே இங்க வந்திருக்கா” என்று கேட்டான்.

“ஏன்? அதை பெர்மனட்டா மாத்த முடியாதா?”

பிரபஞ்சன் அதிர்ந்தான். பதிலின்றி அவரை கூர்மையாக அவன் பார்க்க, “இந்த ஊர்லையே ஒரு நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சிட்டா” என்றதும், “என்ன சொன்னீங்க?” என்றவன் கோபமாக கத்த,

“டே! நல்ல பையன்தானே சொன்னேன்… உன்னைன்னு நான் சொல்லவே இல்லையே” என்றவர் எகத்தாளமாக சொல்ல அவனுக்குள் எந்தளவுக்கு கோபம் மூண்டது என்று வார்த்தைகளால் சொல்ல முடியாது.

அவர் அவனை மனதில் வைத்துதான் அவ்விதம் பேசுகிறார் என்பதை புரிந்து கொள்ள முடியாத முட்டாள் இல்லை. ஆனால் அவரிடம் கேட்டால் தலைகீழாக நின்று அப்படி இல்லை என்று சாதித்துவிடுவார்.

மனதில் எழுந்த கோபத்தை கட்டுபடுத்தி கொண்ட பிரபா, “எனக்கு ஏற்கனவே நிறைய டென்ஷன்… இதுல உங்ககிட்ட பேசுனா இன்னும் இன்னும் டென்ஷன்தான் ஏறுது… ப்ளீஸ் நீங்க போங்க” என்றவரிடம் வெளியே செல்ல சொல்லி வாசலை காண்பிக்க,

ஹரி அப்போதும் முறுவலித்து,“அவ்வளவு டென்ஷனா இருந்தா  எங்க கூட வாயேன்… நானும் ஷெர்லியும் வெளியே போறோம்” என்றான்.

“நான் வரல… நீங்க போயிட்டு வாங்க” என்று சொல்லி முகத்தை திருப்பி கொண்டான்.

“ஏதோ டென்ஷனா இருக்கியேன்னு கூப்பிட்டேன்… வரலன்னா போ” என்று அசட்டையாக சொல்லிவிட்டு அறையை விட்டு வெளியேற பார்க்க அத்தனை நேரம் கோபமாக பேசி கொண்டிருந்த பிரபஞ்சன்,

“சார்” என்று நிதானமாக அழைத்தான்.

அவர் அவனை திரும்பி பார்க்க, “நீங்களும் ஷெர்லியும் இன்னைக்கு எங்கேயும் வெளியே போக வேண்டாம்” என்றான்.

“நீ வரலன்னா நாங்க போக கூடாதா?” என்று ஹரி கோபமாக,

“நான் அதனால சொல்லல… எனக்கு ஏதோ மனசுக்கு சரியா படல… தப்பா ஏதோ நடக்க போற மாதிரி” என்றவன் மேலே சொல்லாமல் நிறுத்தி கொண்டான். தன் வேதனையும் தவிப்பும் தன்னோடே போகட்டும் என்று அவன் அமைதியாக இருந்துவிட,

ஹரி படபடப்போடு அவனை பார்த்தார். அவன் முகமே ஏதோ சரியில்லை என்பதை அவருக்கு உணர்த்தியது.

“என்ன பிரபா சொல்ற?  என்ன நடக்க போகுது… எதாச்சும்” என்று அவராலும் ஒரு நிலைக்கு மேல் யோசிக்க முடியவில்லை.

“ப்ளீஸ் சார் … இப்ப எதுவும் கேட்காதீங்க… நீங்களும் ஷெர்லியும் இன்னைக்கு எங்கயும் வெளியே போக வேண்டாம்… அவ்வளவுதான்” என்று தீர்க்கமாக சொல்லிவிட்டு அவன் அறைக்குள் சென்றுவிட்டான்.

ஹரிஹரன் பிரபா சொன்னதை யோசித்து கொண்டே படியிறங்கி சென்று விட்டார். அவன் இந்தளவு தீவிரமாக சொல்கிறான் எனில் அதில் ஏதாவது ஆழமான காரணம் இருக்கும் என்பது அவருக்கு தெரியும்.

பிரபஞ்சனின் சிந்தனை முழுக்க அந்த கோர சம்பவத்தை குறித்துதான். ஆனால் இப்போது அவனுடைய யோசனையெல்லாம் இதுவரை அவனுக்கு இன்ஸ்டிங்டாக தோன்றி எல்லா சம்பவங்களும் அப்படியே பலித்திருக்கின்றன. அப்படியெனில் இதுவும் பலிக்கும். ஆனால் இந்த கனவு மட்டும் முன்பு நடந்த சம்பவங்களை விட முற்றிலும் மாறுப்பட்ட விதத்தில் தோன்றியது.

இயல்பாக அவனுக்கு வரும்  இன்ஸ்டிங் நடக்கும் நிகழ்வை அப்படியே காட்சிகளாக அவனுக்கு காட்டும். சில நேரங்களில் அது அவன் கண்முன்னே நடக்கும் நிகழ்வாக இருக்கலாம். சிலவை அவன் பார்க்காத தூரத்திலும் நிகழலாம். ஆனால் இந்த கனவு மட்டும் தன்னுக்குள் தானே அந்த காட்சிகளை பார்ப்பது போல் அவனுக்கு உணர்த்தியிருந்தது. அப்படியெனில் அந்த சம்பவம் நடக்கும் போது, அந்த இடத்தில் தான் இருக்கிறோமோ என்று யோசித்தவன்,

தான் வெளியே சென்றால்தானே அவற்றை பார்க்க நேரிடும். அந்த கனவு பலிக்கும். தான் செல்லாமல் போனால் எப்படி நடக்கும்?

இந்த யோசனை எந்தளவுக்கு வேலை செய்யும் என்றெல்லாம் அவனுக்கு தெரியாது. ஆனால் அந்த கோரமான விபத்தை தடுக்க அவன் மூளைக்குள் உதித்த ஒரு சிறிய லாஜிக்.

‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ எனில் தன்னை அந்த விதியே சம்பவம் நடக்கும் இடத்திற்கு இழுத்து போகட்டுமே?! என்று பிரபா தனக்குள்ளாக ஒரு சங்கல்பம் செய்து கொண்டு விதியோடு ஓர் விளையாட்டை தொடங்கியிருந்தான். ஆனால் அவன் யோசித்ததை விட இன்னும் ஆழமாக வேறொரு விஷயம் தன் கனவில் ஒட்டாமல் நின்றதை அவன் கவனிக்க தவறியிருந்தான்.

******

மத்திய விஞ்ஞானம் , தொழில்நுட்ப துறை, இந்திய விண்வெளி துறை, விஞ்ஞான தொழில்நுட்ப ஆராய்ச்சி பேரவை ஆகியவை இணைந்து ரூ. 125  கோடி செலவில் புவி விஞ்ஞான அமைப்பு என்ற ஒன்றை உருவாக்கியிருந்தது.

அந்த அமைப்பின் மூலமாக ஹைதராபாத்தில் இந்தியாவின் முதல் சுனாமி முன்னெச்சரிக்கை மையம் நிறுவியது.

ஆழிபேரலைகளை உருவாக்க காரணமான கடலுக்கடியில் ஏற்படும் கடுமையான நிலநடுக்கங்களை கண்டறிந்து இந்த ஆய்வு மையம் சுனாமி தாக்கும் அபாயத்தை 30 நிமிடங்களுக்குள் உள்துறை அமைச்சகத்துக்கு தகவல் அளிக்கும்.

கடலுக்கடியில் ஏற்படும் நிலநடுக்கங்களை ஆராய்பவர்கள், சாலைகளில் சுற்றி திரியும் ஐந்தறிவு பிராணிகள் இப்படியான தகவல் மையங்களின் எச்சரிக்கை இல்லாமலே, எந்த உபாயத்தை கொண்டு தங்களை இதை போன்ற இயற்கை பேரழிவிலிருந்து காத்து கொள்கின்றன என்று ஏன் ஆராய்ச்சி செய்யவில்லை?

இன்னும் சொல்ல போனால் மனிதன் தனக்குள் இருக்கும் சக்தியை தேடுவதை  விடுத்து கோடி கணக்கில் செலவு செய்து செயற்கை கோள்களை அனுப்பி விண்வெளியை ஆராய்ந்து கொண்டிருக்கின்றான். அதையே நாட்டின் பிரதான கௌரவமாக பார்க்கின்றான்.

ஆனால் அனுப்பிய செயற்கோள்கள் பல தம் சக்தியையும் இயக்கத்தையும் இழந்த பின், விண்வெளிகளில் தேவையற்ற குப்பையாக மிதந்து கொண்டிருக்கிறது. பூமியோடு சேர்த்து ஆராய்ச்சி என்ற பெயரால் வானவெளியையும் குப்பை கிடங்காக மாற்றுகிறான் என்பதை யார் அவனுக்கு சொல்வது.

இவற்றையெல்லாம் விட மனித மூளையின் ஆபார சாதனை ஒன்றிருக்கிறது. பூமியை சுற்றிலும் இயற்கையானது தானாகவே  உருவாக்கி வைத்திருக்கும் காக்கும் படலமான ஓசோனை, துச்சாதனன் திரௌபதி துகிலை உரிப்பது போல் விடாமுயற்சியோடு உரித்து கொண்டிருப்பதுதான். விரைவில் ஒசோன் படலத்தை கிழித்து இந்த மனித இனம் பூமியை கற்பழித்துவிடும். ஆனால் அதற்கு முன்னால் இயற்கை முந்தி கொள்ள பார்க்கிறது.

பரபரப்பே இல்லாமல் இயங்கி கொண்டிருந்த ஹைதராபாத்தில் உள்ள சுனாமி எச்சரிக்கை ஆய்வு மையம் இன்னும் சில மணி நேரங்களில் உச்சப்பட்ச பரபரப்பை எட்ட போகிறது. தென்னிந்தியாவை உலுக்க போகும்  ஒரு பயங்கர தகவலை உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்ப போகிறது.

ஓர் மரண காண்டத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் அந்த பரபரப்பான சூழல் தொடங்க போகிறது. ஆனால் இதை குறித்து முன்னமே தன் ஈஎஸ்பி சக்தி மூலமாக அறிந்து கொண்ட பிரபஞ்சன் அப்போது கிட்டத்தட்ட தொண்ணூறு வருடங்கள் முன்பு நடந்த டெக்சாஸ் சூறாவளியை பற்றி படித்து கொண்டிருந்தான்.

நடக்க போகும் பயங்கர நிகழ்விற்கும் முடிந்து போன அந்த பேரழிவிற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்டால் அது அவனுக்கும் தெரியாது. ஆனால் அந்த மோசமான சூறாவளியால் அலைகழிக்கபட்ட ஓர் கர்ப்பவதி குறை பிரசவத்தில் ஒரு ஆண் குழந்தையை ஈன்றெடுக்கிறாள்.

அவர் பெயர்தான் கிறிஸ்டோபர் எட்வர்ஸ்.

‘டிசேஸ்டர்’ – 1

‘நான் பிறந்த அந்த நாளும் நேரமும் அமெரிக்காவின் வராலாற்றின் பதிய பட்ட முக்கிய நாளாகவும் பலராலும் மறக்க முடியாத ஓர் மோசமான நாளாகவும் மாறியிருந்தது.

வானத்திற்கும் பூமிக்கும் இடையில் விஸ்வரூபம் எடுத்து நின்று அந்த சுழற் காற்றின் வீச்சீன் வீரியத்தில்  வடக்கு டெக்சாஸ் நகரமே சின்னாபின்னபானது. உயிர் சேதம் பொருட் சேதம் என்று கணக்கிலடங்கா பேரழிவை சந்தித்த அதேநாளில் அதேநகரத்தில் இந்த பூமியில் ஓர் சிறு புள்ளியாக என் பயணம் தொடங்கியது.

அன்றிலிருந்து எனக்கும்  இந்த பூமிக்கும் இடையில் ஓர் விசித்திரமான பந்தமும் உருவாகியிருந்தது’

 

error: Content is protected !!