AVAV-1

AVAV-1

ஹாய் நட்புக்களே…… இந்த கதை பிளான்-லயே இல்ல… ஆனா… ஆரம்பிச்சிட்டேன்… பதிவு முன்ன பின்ன ஆகும்..

அரிவை விளங்க .. அறிவை விலக்கு

தலைப்பு பற்றி…

சங்க காலத்தில் பெண்ணின் பருவங்களுக்குரிய வயது கீழ்க்காணும் வகையில் பிரிக்கப்பட்டது.

1. பேதை : 5 முதல் 8 வயது

2. பெதும்பை : 9 முதல் 10 வயது

3. மங்கை : 11 முதல் 14 வயது

4. மடந்தை: 15 முதல் 18 வயது

5. அரிவை: 19 முதல் 24 வயது

6. தெரிவை: 25 முதல் 29 வயது

7. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது

‘அரிவை தெரிவை பேரிளம் பெண்ணெனப் பாற்படு மகளிர் பருவக் காதல் நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ – பன். பாட். 220

‘அரிவைக்கு யாண்டே அறுநான்கு என்ப.’ ’’ 225

பெண் – தமிழ் விக்கிப்பீடியா

நிச்சயமா ஆதரிப்பீங்க-ன்னு நம்பிக்கையோட … ஆதி

AVAV -1

“மாங்கல்யம் தந்துனானேன

மமஜீவன ஹேதுநா

கண்டே பத்நாமி ஸுபகே

த்வம ஜீவ சரதஸ் சதம்”

“மங்களம் நிறைந்தவளே! உன்னோடு இல்லற வாழ்வை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று இந்த மங்கல நாணை உன்னுடைய கழுத்தில் அணிவிக்கிறேன். என் வாழ்வில் ஏற்படும் சுக, துக்கங்களில் பங்கேற்கும் நீ, சுபபோகங்களுடன் நூறாண்டு வாழ்வாயாக!” , மனதுக்குள் சாரலாய் மந்திரத்தின் பொருள் ஒலிக்க, கழுத்தில் மஞ்சள் பூசிய மங்கள ஆபரணமாய் , பெண்மையின் பூரணமாய் போற்றப்படும் திருமாங்கல்யம் அலங்கரிக்க, அதை தனக்கு சொந்தமாக்கிய மணாளனை, அலையென ஆர்ப்பரித்த மனதுடன் விழியெடுத்து பார்த்தாள், நங்கை நல்லாள்…. நம் நாயகி..

அருகில் அமர்ந்திருந்த த்ரிவிக்ரமன், இவள் பார்ப்பது தெரிந்து… சின்னதாய் ஒரு புன்னகை புரிந்தான்.

அடுத்து அவன் கூறியது….” ரொம்ப புகை இல்ல? … ஹைலி பொல்யூட்டிங்.. நல்லவேளை நான் அலர்ஜிடிக் இல்ல”, சலிப்போடு வந்தது அவன் வார்த்தைகள்… தொடர்ந்து… “எப்போ முடியும் இது?, அதான் தாலி கட்டியாச்சே ? உஷ்… வேர்வை .. என்ன AC மண்டபமோ ? ம்ப்ச் ….”,

ஒரு வெல்கம் டு மை லைப், ஒரு மகிழ்ச்சியான வாழ்த்து எதிர்பார்த்து அவனை நோக்கிய நங்கை .. இந்த பதிலால் சற்று மனம் சுணங்கினாள். நல்ல வேளையாய், அப்போதைய திருமண சடங்குகளும் விரைவிலேயே முடிய… தம்பதிகளை உணவுண்ண செல்லுமாறு சாஸ்திரிகள் கூற…”தேங்க் காட் “, சொல்லி சட்டென எழுந்தான், விழா நாயகன்.

அவர்கள் சாப்பிட செல்வதற்குள்…

நங்கை நல்லாள் : 

M.Sc [ஹோம் சயின்ஸ்], முடித்து நான்கு மாதமாய் வீட்டில் இருப்பவள். செல்வசீமாட்டி.. வேலைக்கு போகும் … தேவையும் இல்லை, அவர்கள் வீட்டு வழமையும் இல்லை…. பருகும் நீரையும் ரசித்து குடிப்பவள். ஒவ்வொரு நொடியும் அனுபவித்து வாழ்ந்திட துடிக்கும் இக்கால யுவதி. படிப்பு சுமார் ரகம். தம்பி ஒருவன், MBA முதல் வருடத்தில் இருக்கிறான். அம்மா இல்லை. ஆனாலும் அந்த குறை தெரியாதவாறு ஊரில் இருந்து சொந்தங்கள் மாற்றி மாற்றி வந்தவண்ணம் இருப்பர். அப்பா, மோகனசுந்தரம் ஆவடியில் {வீடு கட்ட உபயோகப்படுத்தும்} கம்பிகள் தயாரிக்கும் தொழிற்சாலை வைத்து நடத்துகிறார்.

படிக்கவென சிறுவயதிலேயே வந்து வடசென்னையின் பெயர் சொல்லும் அடையாளமானவர். சுருக்கமாய் சொல்வதெனில் .. இவர் கண்ணசைத்தால் காரியம் செய்ய, போலீஸ் முதல் தாதா வரை தயாராய் இருப்பர். எந்தளவிற்கு பாசமானவரோ அதே அளவிற்கு பயம் காட்டுபவர். நங்கையின் அம்மா வழிப்பாட்டி, மனவாடு தேசத்தில் [ஆந்திரா], கோதாவரி நதிக்கரையில் அவரது சொந்த ஊரில் நில புலன்களை பார்த்துக் கொண்டுள்ளார்.

த்ரிவிக்ரமன் : 

பிட்ஸ் பிலானியில் MS (IT ) முடித்து, எலக்ட்ரானிக் சிட்டி -யில் மூன்று வருடங்கள் குப்பை கொட்டி, டெல்லி சென்ற மூன்று வருடங்களில் மொத்தமாய் டெல்லிவாசி ஆனவன். அப்பா, அம்மா இருவருமே பேராசிரியர்கள். அப்பா வேதியியல் [செய்யாறு கல்லூரி], அம்மா இயற்பியல் [நந்தனம் கல்லூரி]. ஒரே பிள்ளை. த்ரிவிக், கருத்தரித்ததில் இருந்தே கம்ப்யூட்டர் என்ஜினீயர் என்ற முத்திரையோடு வளர்ந்தவன், [எதிர்காலம் வளம் கொழிப்பதாய் இருக்குமே?] மதிப்பெண் பெறுவது மட்டுமே அவனது வேலை என்று திட்டமிட்ட வளர்த்த பெற்றோர். பார்வைக்கு அழகன், அவன் போடும் ரிம்லெஸ் கண்ணாடி, இன்னமும் அவன் வனப்பை கூட்டும் .. ஆனால், அதையும் கூட தெரிந்து கொள்ளாதவன்… சுருங்க கூறின்… வைதேகி & ஸ்ரீராமுலு அவனை நல்ல மூளைக்காரனாய் தயாரித்திருந்தனர். மூளைக்காரனாய், பணம் பண்ணும் யுக்தி தெரிந்தவனாய் மட்டும்.

திருமண சந்தையில் எங்கோ, யாரோ சொல்லக்கேட்டு … மூன்றாவது தலைமுறை சொந்தமாக இரு வீட்டாரும் இருக்க… அந்தஸ்து பாராமல், பெண் வீட்டில் இருந்து அழைப்பு வர…. ஸ்ரீராமுலு, அவர்களின் வசதியை பார்த்து மலைத்தாலும், மகனின் தகுதிக்கு சரியான சம்பந்தம் என்று எண்ணி … இதோ திருமணம்…

வீட்டில் பூ மலர்ந்தாலே “ஸ்வீட் எடு .. கொண்டாடு”, என்று பார்ட்டி கொடுக்கும் நங்கைக்கும்…

திருமணத்திற்கென, மகனுக்கு டெல்லி லஜ்பத் நகரில் பிளாட் வாங்கி பெற்றோர் பரிசாய் தர, சாவியை கையில் வாங்கி, “ஓகே, அங்க போகும்போது பாக்கறேன்”, என்று பதிலளிக்கும்… விக்ரமனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு சென்னை ஸ்ரீவாரி கல்யாண மண்டபத்தில் கோலாகலமாய் முடிந்தது…

வாழ்க்கை இவர்களுக்கு வைத்திருப்பது என்ன?….

error: Content is protected !!