avav4

avav4

அரிவை விளங்க .. அறிவை விலக்கு  04

குலதெய்வம் கோவில் மட்டுமல்லாது அருகே இருக்கும் கச்சி ஏகாம்பரநாதனையும், அன்னை காமாக்ஷியையும் தரிசித்து, வெளியிலேயே உணவினை முடித்து, வீடு திரும்பும்போது இரவாகி இருந்தது. அனைவரும் அக்கடாவென படுத்தால் போதும் எனும் அளவுக்கு அசதியாய் இருந்தனர். சென்னை/புறநகரில், வெய்யிலின் தாக்கம் அத்தனை கோரமாய் இருந்தது.

வண்டியின் டிக்கியில் இருந்த மாலைகள், அர்ச்சனை தட்டுக்கள், மாமியார் கேட்ட தாழம்பூ குங்குமம், அங்கு வாங்கிய ஆடைகள் [ காஞ்சி சென்று பட்டு வாங்காமலா?], இன்னபிற வஸ்துக்கள், பைகளில் இருக்க… இவைகளை வீட்டினுள் நங்கை கொண்டு செல்ல, அண்ணிகள் தூங்கி வழியும் பிள்ளைகளை தூக்கிக்கொண்டு, படுக்கையறையுள் விட்டு என அவர்களோடு போராட… கட்டைப் பைகளை தூக்கி நடக்கும் நங்கையிடம் இருந்து, இரண்டு பைகளை த்ரிவிக்ரமன் வாங்கிக்கொண்டான். … கூடவே இருவருக்குள்ளும் பேச்சும் ஓடியது.

“இங்க பரவால்ல, சாயங்காலம் ஆனா கடல் காத்து அடிச்சு எல்லா எடத்தையும் ஓரளவுக்காவது குளிர்ச்சியாக்கும். நம்ம ஊர்ல[டெல்லி] சுத்தம்.. இதை விட கொடுமையா இருக்கும், அனல்காத்துதான் எப்பவுமே. ஏசிய விட்டு வெளியே வர முடியாது அவ்வளவு வெயில் இருக்கும். வின்டர் -ல அப்படியே உல்ட்டா. குளிர் பிச்சு உதறும்.”, அவளுக்கு அவன் இருப்பிடம், அதன் சீதோஷண நிலை தெரிந்து தன்னை தயார்படுத்திக் கொள்ளவேண்டுமென அதைக் குறித்த தகவல் அளித்தான்.

“ஏன் டெல்லி ?, இந்தப்பக்கம் வர முடியாதா?”, நங்கை கேட்க, த்ரிவிக்ரமன் ஒரு நொடி அவளை நிமிர்ந்து பார்த்தான். கேள்வி யதார்த்தமா? அல்லது திட்டமிடப்பட்டதா? என்பது போல ஒரு ஆராய்ச்சி.

“நம்ம கம்பெனி டைரக்டர்ஸ் மூணு பேரு என்னையும் சேர்த்து. ஸ்கூல் லேர்ந்து ஒண்ணா படிச்ச கேங் நாங்க.. சோ எங்களுக்குள்ள வேவ்லெங்த் ரொம்ப சரியா இருக்கும். நான் சொல்ல வர்றத… புரிஞ்சி அதுக்கேத்தா மாதிரி, அட்ஜஸ்ட் பண்ணுவாங்க. நமக்கு கீழ ஒரு இருபது இருபத்தைந்து பேர் இருக்காங்க. மெயினா நம்ம எடுக்கறது கவர்மெண்ட் ப்ரொஜெக்ட்ஸ், வேற பெரிய MNC கம்பெனிக்கும் பன்றோம்-ன்னாலும், டெல்லிதான் ஈஸி-ன்னு தோணிச்சு. எல்லாரும் அங்கேயே செட்டிலும் ஆயிட்டோம்.”

இருவரும் பேசிக் கொண்டு மேலே ஏற போக, நங்கையின் அப்பா கூப்பிட்டார். “மாப்பிள?”,

இரண்டாவது படியிலேயே நின்று திரும்பி, “பேர் சொல்லியே கூப்பிடுங்க மாமா, பார்மாலிட்டி எதுக்கு?”, என்றவாறு, பைகளை படியிலேயே வைத்து.. அவரருகில் ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தான்.

“அது ஒன்னுமில்ல, நாளைக்கு காலைல நீங்க உங்க வீட்டுக்கு போறதா நல்லா சொன்னா, அவளுக்கு கொடுக்க வேண்டிய சீரெல்லாம் பெட்டில அப்படியே இருக்கு உங்க கிட்ட தரட்டுமா? இல்ல அப்பாகிட்ட தரட்டுமா?”, என்று கேட்க..

“வாட்? எங்க அப்பாம்மா சீரெல்லாம் கேட்டாங்களா?”, ஆச்சர்யமாய் கேட்டான் த்ரிவிரமன்.

“ச்சே ச்சே .. அவங்க , ‘உங்க பொண்ணு , உங்க இஷ்டம்போல செய்ங்க’ னு தான் சொன்னாங்க”, என்றார் அவர் உடனே.

“அதான பாத்தேன், எங்களுக்கு இந்த டௌரி கான்செப்ட் ல நம்பிக்கை இல்லை மாமா.. என் வொய்ப்-ஐ வச்சு காப்பாத்தற அளவுக்கு, நல்லாவே சம்பாதிக்கிறேன். சோ, நீங்க எது கொடுத்தாலும் நங்கை கிட்ட கொடுங்க.”, என்று முடித்துவிட்டான்.

“அம்மா நல்லா..”, என்று அவர் பெண்ணைக்கூப்பிட.. “தோ வர்றேன் ப்பா”, மேலிருந்து குரல் மட்டும் வந்தது. கொண்டு வந்த சாமான்களை அடுக்குவாளாயிருக்கும், என்று தோன்றியது அமர்ந்திருந்த இருவருக்கும்.

“அதென்ன நல்லா?, நங்கை ங்கிற பேர் நல்லாத்தானே இருக்கு?”, அவனுக்கு திடீரென முளைத்த சந்தேகத்தை கேட்க..

மோகனசுந்தரம் மெல்ல சிரித்து , “அது.. வீர நங்கைங்கிறது, எங்க அம்மா பேரு, அதான் நல்லாள்-ன்னு என் பொண்டாட்டி கூப்பிட ஆரம்பிச்சு, அப்படியே நல்லா வா ஆயிடிச்சு”, என்றார்.

“இதுவும் நல்லாத்தான் இருக்கு”, ரசித்து சொன்னான்.

“ஆமா, ரொம்ப நல்ல பொண்ணு. என் பொண்ணுங்கிறதுக்காக சொல்லல, இதுவரைக்கும் வாயைத்திறந்து இது வேணும்-னு அவ எதை பாத்தும் கேட்டதேயில்ல, நான்தான் மனசுக்குள்ள குமைஞ்சு போவேன், அவங்கம்மா இருந்திருந்தா கேட்டிருப்பாளோ?-ன்னு, அதனாலேயே அவ தேவை என்னான்னு பாத்து பாத்து செய்வேன். பம்பரம் மாதிரி, எத்தனை வேலை-ன்னாலும் செய்வா. எத்தனை பேர் வந்தாலும் சமாளிப்பா, ஆபிஸ்..” என்று அவர் ஆரம்பிக்கும்போது, நங்கை மேலேயிருந்து பார்த்திந்திருந்தாள். தந்தையின் முகம் விகசித்து இருப்பதை மாடி இறங்கும்போதே கவனித்து, தன்னைப் பற்றித்தான் பேசுகிறார் என்பதை உணர்ந்து …

“என்னப்பா, என்னப்பத்தி ஏதோ சொல்லிட்டு இருக்கீங்க போல.. எம்பொண்ணு .. வீரி, சூரி, காளி, நீலி .. பாத்து சூதானமா நடந்துக்கோங்க-ன்னா?”, என்று இடைவெட்டினாள்..

“ஹ ஹ ஹ”, மூவரும் சேர்ந்து நகைக்க… “இல்லடாம்மா , உன் சீரெல்லாம் எப்போ தர்றதுன்னு பேசிட்டிருந்தோம். மாப்பிள்ள, உன்கிட்ட கொடுக்க சொல்லிட்டாரு. அதான் கூப்பிட்டேன்.”

“ஏன்?”, நேராய் கணவனைப் பார்த்து கேட்டாள்.

“உன்னோடது உன்கிட்ட தான இருக்கணும்?”, என்றான் கணவன். அவனுக்கு இவளது சீர் எவ்வளவு என்று தெரியாதல்லவா?

மோகனசுந்தரம் , “வாங்க ரூமுக்கு போயிடலாம்”, என்று சொல்லி எழுந்து ஒரு அறைக்குள் சென்றார். இருவரும் பின் தொடர்ந்தனர், த்ரிவிக்கிற்கு மனமில்லை, ஆனால் போகவில்லை என்றால் நன்றாய் இருக்காதே என்று போனான்.

சுவரோடு பதித்த கனமான அலமாரி, பழைய கால லாக்கர் அது.. நம்பர்களை போட்டு வலம், இடமாய் சுற்றிச் சுழற்றி ஒருவழியாய் திறந்தார். இரண்டு பெட்டிகளை வெளியே எடுத்து வந்து டேபிளில் வைத்தவர், ஒன்றை திறந்து, பின் அடுத்ததையும் திறந்தார்.

த்ரிவிக்கிரமன் கண்கள் தெரித்தே விடும் என்பதைப்போல பார்த்தான், ஒரு பெட்டி நிறைய, இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகள். நிச்சயமாய் அவனுக்கு இது அதிர்ச்சிதான். மொத்தமாய் இத்தனை பணம், அவன் வணிகத்தில் இதைவிட பலமடங்கு கண்டிருந்தாலும், அவை அனைத்தும் காகிதத்தில் இருக்கும் அல்லது வங்கிக் கணக்கில் இருக்கும். முடிந்தவரை, பிளாஸ்டிக் அட்டையை பயன்படுத்துபவன்.

“இதுல ரெண்டரை கோடி இருக்கு மாப்பிள, இதுல ஒரு கோடி இவங்க பாட்டி வீட்டு சீர், ஒன்னரை நான் கொடுக்கறது”

அடுத்த பெட்டியை திறந்து, நகைகளை காண்பித்தார். “நூறு சவரன் பாட்டியோடது, அதாவது எங்கம்மாவோடது, நூத்தம்பது சவரன், என் பொண்டாட்டியோடது, மீதி இருநூத்தம்பது சவரன்தான் நான் கொடுக்கறது.” என்றவர்… தொடர்ந்தார்…

“பணம் ன்னா பாப்பா பாத்துக்கும், இது நகையும் இருக்கு பாருங்க, அதான் உங்களுக்கும் சொல்லி கொடுக்கறேன், பத்ரம் மாப்பிள்ளை”, என்று கடமை முடிந்ததாக அவர் பேச்சை முடித்தார்.

கணவனின் திகைத்த முகத்தை பார்த்து, “அப்பா.. எல்லாம் உள்ளேயே இருக்கட்டும், காலைல என்ன பண்றதுன்னு சொல்றேன், இப்போ ரொம்ப டைம் ஆச்சு, தூங்கலாம்பா”, என்றாள்.

“ஓகேடா, குட் நைட்”, சொல்லி அவர் அறைக்குள் மறைந்தார்.

“குட் நைட் ப்பா”, தந்தையிடம் விடைபெற்று மாடியேற, அவள் பின்னோடு சென்ற த்ரிவிக், “எதுக்கு இவ்வளவு லிக்விட் கேஷ்?, நகை..? இத்தனையும் யார் பாதுகாப்பா வச்சுக்கறது ? ஓஹ். மை காட் !!! கண்டிப்பா டெல்லிக்கெல்லாம் இதை எடுத்திட்டு வந்திராத, எனக்கு லாக்கர் ஃபெசிலிட்டில்லாம் தேட முடியாது , அங்க போனா வேலைல தான் என் கான்சன்ட்ரேஷன் இருக்கும் “, ஸ்ட்ரிக்ட் ஆபீசராய் அவன் பேச…, கை தன்னிச்சையாய் படுக்கையை தட்டி போட்டது. [வேலைகளுக்கு பழகியவன்தான் எனக் கொள்க.]

கட்டிலின் அடியில் இருந்த ஸ்டோரேஜ் அலமாரியில் இருந்து, தலையணையும், போர்வையையும் எடுத்து விரித்தவாறே,

“நாளைக்கு நம்ம வீட்டிற்கு போறோம் இல்லையா? அத்த மாமாட்ட காமிச்சிட்டு ஏதாவது பண்ணுவோம்”, நங்கை சொன்ன ‘நம்ம வீடு’ பிடித்திருக்க, சீர் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி தற்காலிகமாய் வைக்கப்பட்டது.

மேலும் சிற்சில வேலைகள் செய்து, அறையை பூட்டி வரும் அந்த இரண்டு நிமிட இடைவெளியில் த்ரிவிக் தூங்கியிருந்தான். அலைச்சல் அதிகமென்பதால், படுத்த நங்கைக்கும் நொடியில் தூக்கம் வந்தது.

மறுநாள் வீட்டிற்க்கு கிளம்பும்போது “அப்பா வர்றேன்ப்பா “, என்று அவர் கைபிடித்து விடைபெறும்போது அழுதே கரைந்தாள் பெண். இத்தனைக்கும் அண்ணிகள் இருவரும் உடன் வருகிறார்கள், தந்தையுடன் சேர்த்து. அதற்கே பிழிய பிழிய அழுதாள்.

“என்னடா இப்படி அழற? தோ முக்கால் மணி நேரத்துல வீடு, போன்ல கூப்டா உடனே வரப்போறேன்.”, என்றவரை இடையிட்டு,

“ஹுக்கும்..நாந்தான் நாளன்னி க்கு டெல்லி போயிடுவேனே?”, கேவலோடு மகள் பேச, என்னவென பதிலுரைப்பார்?

“ஸ்கைப் பேசு. சிம்பிள். ப்ளீஸ். அங்க எல்லாரும் நமக்காக வெயிட்டிங், முகத்தை கழுவி, கிளம்பர வழிய பாரு. அம்மா வேற கால் பண்ணிட்டே இருக்காங்க”, என்றுசற்று கடிந்து த்ரிவிக் சொல்லவும்தான் ஒருவழியாய் அழுகையை குறைத்து, வந்து வண்டியில் ஏறினாள்.

04 – contd ..

கிட்டத்தட்ட ஒரு மணி நேர பயணம். அங்கும் புது மனமக்கள் சம்பிரதாயங்கள் முடிந்து, விருந்துகளெல்லாம் ஓய்ந்து ஒருவழியாய் அந்திசாயும் நேரம், மாமியார் மருமகளுக்கென நேரம் கிடைத்தது. அதற்குள் நங்கைக்கும் இவ்வீட்டு வழமைகள் ஓரளவு புரிந்தது.

அருகருகே இருந்த சொந்தங்களாதலால், அனைவரும் விடை பெற்றிருக்க,இரவு உணவு தயாரிக்க மாமியார் செல்ல.. கூடவே சென்றாள் நங்கை.

“நாங்க ரெண்டே பேர்தான், அதனால சமைக்க ஆளெல்லாம் கிடையாது. சில சமயம் நான் வர லேட்டான அவரே சமைச்சிடுவார். ரொம்ப லைட்டாத்தான் நைட்எடுத்துப்போம். அந்த வீட்டுல எப்படி?”, ‘உங்க வீட்டில’ என்பதை அவர் தவிர்த்தது தெரிந்தது.

“அது நேரத்துக்கு ஏத்தமாதிரி மாத்துவோம் அத்த. காலை, மதியம் ஹெவிபுட் ன்னா நைட் இட்லி/ தோசை ன்னு வச்சிடுவோம். ஆனா, பசங்க எது கேட்டாலும் கிடைக்கும். அண்ணிங்களுக்கு அதுக்கே நேரம் சரியா இருக்கும். நானும் சுமாரா சமைப்பேன்”

“சரியா எட்டு மணிக்கு அப்பா சாப்பிட்டுடுவார், அவருக்கு எப்பவும் நான்தான் சாப்பாடு போடணும்., வேற யாருன்னாலும் எதுவும் சொல்ல மாட்டார், வெறும் மோர் சாதம் போதும்ன்னு போயிடுவார். “, சொல்லும் அவளின் குரல் உள்ளே சென்றிருக்க.. கண்கள் தானாகவே கலங்கியது.

இப்பெண்ணிற்கு தந்தையின் மேல் பிரியம் அதிகமென, அவருக்கு புரிந்தது. “உன் காலேஜ்-ல்லாம், எப்போ முடிச்ச ?”,பேச்சை மாற்றினார்.

இந்த கேள்வியில் இலகுவானவள், “இங்கதான் சென்னை-ல அத்தை”, என்றவள் பேசினாள்…. பேசினாள் … பேசிக்கொண்டே இருந்தாள். அவளைப்பற்றி, அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள் பற்றி, அவள் வீட்டு நாய்குட்டி-யை கூட விடாது அனைத்தையும் பேசியவள், ஒருவழியாய் முடித்து, “நீங்க என்ன எடுக்கறீங்க? ஐ மீன்… ??”, என்று மாமியாரிடம் கேட்டாள்.

“பிஸிக்ஸ், நாங்க படிக்கற காலத்துலல்லாம் , மெடிசன் படிக்கரதுங்கிறது, ஒரு பெரிய கனவு. சயின்ஸ் குரூப் கிடைச்சு, நல்ல மார்க்கும் எடுத்தேன். வெளியூர்ல சீட் கிடைச்சுது. ஒரே வார்த்தைல நோ ன்னு சொல்லி இந்த லைன் க்கு கொண்டுவந்துட்டாங்க. ஆனா, உங்க மாமா அப்படி இல்ல. சொல்லிக் குடுக்கறதுக்குன்னே படிச்சார். விக்கி வயித்துல இருக்கும்போது, PDF [Postdoctoral Fellowship Academic] க்கு வெளிநாட்டுக்கு போயி படிக்க வாய்ப்பு கிடைச்சுது.”, கணவனை பற்றி சொல்லும்போது அவர் முகம் பெருமையில் முகம் விகசித்தது.

“உன்னை இந்த நிலமைல விட்டுட்டு போகமாட்டேன்”-ன்னு ஒரே புடியா நின்னுட்டார். பிடிவாதத்துத்துல அவரையே கொண்டு புறந்தவன் உன் புருஷன். அதுல இவங்க ரெண்டு பேரையும் அசச்சுக்க முடியாது.”,

ஒரு வயதிற்கு பிறகு, குடும்பம்/குழந்தைகள் குறித்த பேச்சுக்களில் தான் பெண்களுக்கு இன்பமோ?, நங்கைக்கு தன் மாமியாரை நிரம்பப் பிடித்தது, ஒரு வித அன்யோன்யம் தானாகவே வந்திருந்தது. அவள் நினைவுகளில், ‘அம்மா இருந்திருந்தால் இப்படித்தான் தன்னை பற்றியும் தந்தையை பற்றியும் பேசியிருப்பார்கள்’, என்று ஓடியது. அவரை ஒட்டிக்கொண்டே அலைந்தாள்.

பேச்சு வாக்கில் நகை பற்றியும் பணம் குறித்தும் வந்தது. பணத்தை டெப்பாஸிட் செய்து, நகைகளை அப்பாவிடமே குடுத்து அல்லது இன்ஷுரன்ஸ் செய்து லாக்கரில் வைக்கவும் அறிவுரை தந்தார்.

நங்கை, அவை யாவும் காப்பீடு செய்யப்பட்ட நகைகளே என்று கூற, அவளும் விஷயம் தெரிந்தவள் என்பதை உணர்ந்தார். நங்கைக்கு, இரண்டு நாட்கள் சென்றதே தெரியவில்லை. தரிவிக்கிற்கோ, அம்மா மற்றும் மனைவி யின் அனுசரணையில் மகிழ்ந்தாலும், .இங்கிருந்து டெல்லி கிளம்ப, இவள் உருண்டு பிரண்டு அழுவது நிச்சயம் என அவனுக்குத் தெரிந்தது. இவர்கள் டெல்லி கிளம்பும் நாளும் வந்தது.

இரண்டே இரண்டு பேர் டெல்லி செல்வதற்கு, வழியனுப்பவென நான்கைந்து கார்களில் வந்த நங்கை வீட்டு பட்டாளத்தைக் கண்டு இவன் நொந்தே போனான். “இவங்க எல்லாருக்கும் நான் என்ட்ரி பாஸ் எடுத்தா, எங்க பிளைட் டிக்கெட்டை விட அதிகமாகுமே?”, என்று த்ரிவிக் மனதுக்குள் கவலைப்பட, அதற்கெல்லாம் எங்கே நங்கைக்கு நேரம்?, ஆளாளுக்கு புத்திமதி, தலைநகரத்தைப் பற்றி அவரவர்க்கு தெரிந்ததை இவளின் மூளைக்குள் அவசரமாக திணித்துக் கொண்டிருந்தனர்.

நங்கை அனைவர்க்கும் தலையாட்டினாலும், அப்பாவின் கைகளை மட்டும் விடவேயில்லை.அவரும் எதுவும் பேசவெல்லாம் இல்லை. அமைதியாய் மகளைப் பார்த்திருந்தார்.

ஒருவழியாய், நான்கு மணி நேரத்தில், டெல்லி வந்துவிட, நங்கை அவளுக்கே அவளுக்கான வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். ஏசி-யில் இருந்து கெய்ஸர் வரை, அத்தனை வசதிகளும், தேவையான அனைத்து பொருட்களும் மளிகை உட்பட [பாக்கெட்டில் பிரிக்கப்படாமல் ]இருக்க, அனைத்தையும் ஏற்பாடாய் செய்திருந்த மாமியாரை மெச்சாமல் இருக்க முடியவில்லை.

பூஜையறை என்று தனியாக இல்லாமல், சின்னதாய் அழகான மண்டபம் போல அமைந்திருந்தது. சுற்றி மணிகள் தொங்க, அந்த மணியோசையும், வேலைப்பாடும் கண்களையும் காதுகளையும் இனிமையாக்கியது.

உடனடியாய் அதனை துடைத்து, கையோடு எடுத்து வந்திருந்த சுவாமி படங்களை உள் வைத்து, விளக்கேற்றினாள். விக்ரமனையும் உடனழைத்து நமஸ்கரித்தாள். இதற்கே ஒரு மணிநேரத்திற்கு மேலாகிட, இரவு சாப்பாடை வெளியில் இருந்து வரவைக்கலாம் என்று கணவன் கூற, மனைவியோ, இரண்டு காய் வாங்கினால், வீட்டிலேயே உணவு தயாராகிவிடும் என்று கூறி, சிறிது யோசனைக்கு பின் ‘சரி உங்க இஷ்டம்’, என்றாள்.

புதிதாய் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைப்பவனுக்குத் தெரியாது, உங்க இஷ்டம் என்ற வார்த்தைக்கு.. பெண்களின் அகராதியில்.. இன்னொரு பொருள், ‘என்னவோ பண்ணித்தொலை ‘, என்பது.

அரிவை அறிவானா?

error: Content is protected !!