birunthaavanam-26

Birunthaavanam-37cee2a3

பிருந்தாவனம் – 26

கிருஷ் அவளை பல இடங்களில் தேடினான். அவள் எங்கும் அகப்படவில்லை. அவனை சுற்றி இருந்த சிலரும் விஷயமறிந்து அவளை தேட தொடங்கினர். அப்பொழுது அங்கு யானையின் கால்கள் தடம் இருக்க, அவனுக்கு பொறி தட்டியது. அந்த கால்களை நோக்கி அவன் சற்று தூரம் செல்ல, அவன் அவளை கண்டு கொண்டான்.

கூட வந்தவர்களும் கண்டுகொள்ள, “இங்க தான் இருக்காங்க நான் பார்த்துக்கிறேன்.” அவன் நிதானமாக கூறி அவர்களை அனுப்பினான்.

மாதங்கி, அப்பொழுது கடந்து சென்ற யானையை மெதுவாக பின் தொடர்ந்து அதை படம் பிடிக்க சென்றிருந்தாள். குட்டி யானை, அதன் தாய் யானையோடு இணையவும் அவளுக்கு துள்ளாட்டம் போட்டது.

அந்த குட்டி யானை, தாய் யானையோடு தும்பிக்கையால் விளையாட, அதையும் காணொளியாக பதிவு செய்து கொண்டாள். அந்த யானை சென்று விடவே, மாதங்கி திரும்பவே எத்தனித்தாள்.

அவள் வேறு பக்கம் திரும்ப, அந்த தேநீர் மனமும் மண் வாசனையும் இயற்கையின் அழகும் அவளை ஈர்க்க, அவள் அந்த பாதையில் நடையை கட்டினாள்.

அங்கு ஒரு பச்சை பாம்பு செடியோடு பிண்ணி பிணைந்து பளபளவென்று காட்சியளிக்க, அதை படம்பிடிக்க முட்டியிட்டு அமர்ந்து கொண்டாள்.

பச்சை பாம்பு தன் கண்களை உருட்ட, நாக்கை நீட்ட, அதை மாதங்கி ஆர்வமாக படம்பிடிக்க கிருஷ் அங்கு வந்திருந்தான்.

“மாதங்கி…” அவன் கர்ஜித்ததில் பாம்பு மறைந்து கொள்ள, தன் காரியம் கெட்டதில் மாதங்கி தன் முகத்தை சுளித்து கொண்டே திரும்பினாள்.

தன் பல  நிமிட தேடலை, “பளார்…” என்று அறையோடு முடித்திருந்தான் கிருஷ்.

எதிர்பாராத அந்த அறையில், மாதங்கி தன் கையில் உள்ள விலை உயர்ந்த கேமராவை நழுவ விட்டிருந்தாள். அவன் கொடுத்த அறையின் வேகத்தில் அந்த கேமராவும் சற்று தள்ளி விழுந்து உடைந்திருந்தது.

மாதங்கிக்கு எதுவும் புரியவில்லை. கோபப்பட கூட அவகாசம் கொடுக்காமல் இருந்தது அவன் செய்கை.

“அறிவில்லை… என் உசிரை வாங்கவே நான் இருக்கிற இடத்துக்கு தேடி வருவியா?”அவன் பற்களை நறநறத்தான்.

“…” அவள் அவனை மௌனமாக பார்த்து கொண்டிருந்தாள்.

மழை, ‘சோ…’ வென்ன கொட்ட தொடங்கியது. எங்கும் பனி மூட்டம்.

அவன் முன்னே செல்ல, அவனை  அவள் பின் தொடர்ந்தாள். அவன் ஜீப்பை எடுக்க, பனிமூட்டமும் இருளும் சாலையை முழுதாக மூடி இருந்தது.

“ஐயா… வண்டியை இப்ப ஓட்டுறது சரியில்லைங்கய்யா. இப்படியே ஊரு வரைக்கும் போகிறது கஷ்டம்” பணிவாக வந்தது ஒரு முதியவரின் குரல்.

கிருஷிற்கும் நிலைமை புரிந்தது. அவன் கண்கள், மாதங்கியை கோபத்தோடும் குற்றம் சாட்டோடும் பார்த்தது.

கிருஷ் தலை அசைத்து கொண்டு, வண்டியை கிளப்பினான். ஊர்மக்கள், அவனை மரியாதையோடு வழி அனுப்பினர்.

மாதங்கி கடுங்கோபத்தில் இருந்தாள். ‘இவன் யார் என்னை அறைய? அதுவும் என் கேமரா உடஞ்சிபோச்சு’

கிருஷ் வண்டியை மிக ஜாக்கிரதையாக செலுத்தி கொண்டிருந்தான்.

இயற்கையும் சாதகமாக இல்லை. மிருகங்களும் இந்நேரம் எப்படி நடந்து கொள்ளும் என்று சொல்ல முடியாத நிலை அவன் தன் போக்கில் யோசித்தபடி வண்டியை ஒரு பாதையில் திருப்பினான்.

இருளும், அந்த கானகத்தின் மயான அமைதியும் அவளை கொஞ்சம் அச்சுறுத்தியது.

“இது நம்ம வந்த பாதை மாதிரி தெரியலையே?” மாதங்கி துடுக்காக கேட்டாள்.

“எல்லார் பாதையும் நினைச்ச மாதிரியா போகுது?” குத்தலாக கேட்டான் கிருஷ்.

அவன் வண்டி காட்டு பகுதிக்குள்  இருந்த ஒரு வீட்டின் முன் நின்றது.

‘கிருஷிற்கான கவர்மெண்ட் கெஸ்ட் ஹவுஸ்’ மாதங்கி எண்ணியவாறு இறங்க, “இறங்காத” அவன் குரலில் கர்ஜனை.

பின்னே சென்று குடையை எடுத்து வந்தான். அவளுக்கு அவன் குடை பிடிக்க, அவள் குடையை பிடிக்க கைகளை நீட்டினான்.

“ஒன்னும் தேவை இல்லை. தண்ணி ஓடுது. நீ குடையை பிடிச்சி வழுக்கி விழுந்துட்டா, உன்னை எல்லாம் என்னால பிடிக்க முடியாது. நான் நனைஞ்சிட்டா இங்க எனக்கு டிரஸ் இருக்கு. உனக்கு இங்க டிரஸ் கிடையாது. அது தான் உனக்கு குடை எடுத்துட்டு வந்தேன். அப்புறம் உடம்பு சரி இல்லைனா எவன் பார்க்குறது. அக்கறை, காதல் அப்படின்னு நீ வேற ஏதாவது கற்பனை பண்ணிக்காத. அப்படி ஒரு மண்ணும் என் மனசில் கிடையாது.” அவன் வார்த்தைகள் ஊசி போல்  வெளிவந்தன.

மாதங்கி வீட்டிற்குள் சென்றுவிட்டாள். கிருஷ் தன் உடையை மாற்றி கொண்டு வந்தான்.

மாதங்கியின் அலைபேசி, சிக்னல் இல்லாமல் தவித்து கொண்டிருந்தது.

‘நான் அண்ணன் கிட்ட பேசணும். இப்பவே குதிகுதின்னு குதிக்குறான். இதுல அண்ணன் கிட்ட பேசணுமுன்னு சொன்னா ஏறுஏறுன்னு ஏறுவானோ?’ அவள் அவனை யோசனையாக பார்த்தாள்.

“என்ன?” அவன் குரலில் எரிச்சல் மட்டுமே இருந்தது.

“அண்ணன், ரொம்ப நேரமா கூப்பிடறான். நான் பேசணும். நான் உன் கூட வரேன்னு யாருக்கும் தெரியாது. திலக் கிட்ட கூட நான் சொல்லலை.  நான் பேசலைன்னு, அண்ணன் அங்க கூப்பிட்டுட்டா சிக்கல் ஆகிரும்.” அவள் நிலைமையை விலக்க முயற்சித்தாள்.

‘நீ பேசியது போதும்’ என்பது போல் அவன் கைகளை உயர்த்தினான்.

தொலைபேசி இருந்த அறைக்கு அவளை அவன் அழைத்து செல்ல, ‘ஓ… மொபைல் இல்லைனா கூட இங்க லண்ட்லைன் ஃபோன் இருக்கு.’ அவள் எண்ணிக் கொண்டிருக்கையில், அவன் அவளுக்காக அரவிந்தின் எண்களை தட்டினான்.

அவன் அறியவில்லை அவளுக்காகத்தான் எல்லாம் செய்கிறோம் என்று. அவளும் அறியவில்லை அவன் அவளுக்காகத்தான் செய்கிறான் என்று!

ஆனால், அவள் மூளை, ‘இவனுக்கு என் அண்ணன் நம்பர் பார்க்காமலே தெரியுமா?’ என்று மட்டும் யோசித்தது.

“ஹலோ…” எதிர்பக்கம் அரவிந்தின் குரலில் பதட்டம்.

சட்டென்று விலகி, அந்த குரலில் முகத்தை சுழித்தான் கிருஷ்.

“….” கிருஷ்  தொலைபேசியை மாதங்கியிடம் நீட்டினான்.

“அண்ணா, நான் இங்க ஃபிரென்ட் கூட வந்திருக்கேன்” மாதங்கி கிருஷை பார்த்தபடி கூறினாள்.

கிருஷ், அவளுக்கு எதிரே தன் கைகளை குறுக்கே கட்டியபடி அவளை பார்த்தபடி நின்றான். 

“ம்…” அரவிந்தின் குரலில் இப்பொழுது நிதானம்.

“கிருஷ் கூட இருக்கானா?” அரவிந்தின் குரலில் கேள்வி இருக்க, “அண்னா” என்று பதறினாள் மாதங்கி.

அரவிந்த் பேசியது கிருஷிற்கும் தெளிவாக கேட்க , கிருஷின் உதடுகள் ஏளனத்தில் மடிந்தன.

“பதில் சொல்லுமா” அரவிந்தின் குரலில் அக்கறை மட்டுமே இருந்தது.

“ஆமா அண்ணா.” அவள் கூற, “சரி மாதங்கி. நாளைக்கு கூப்பிடு” அரவிந்த் பேச்சை முடித்துவிட்டான்.

‘அண்ணாவுக்கும், முகுந்தனுக்கும் கிருஷ் இங்க இருக்கிறது தெரியுமா? அதனால் தான் நான் இங்க வரேன்னு சொன்னதும் அன்னைக்கு அப்படி பார்த்தாங்களா?’ மாதங்கி யோசனையோடு அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.

கிருஷ் எதுவும் பேசாமல், அவள் எதிரே வந்து அமர்ந்தான். அப்பொழுது மின்சாரம் தடைப்பட கிருஷ் முகத்தை சுழித்தான்.

அங்கிருந்த மெழுவர்த்தியை ஏற்றினான் கிருஷ்.

“உன்னால எப்பவும் வினைன்னு தெரிஞ்சே, உன்னை கூப்பிட்டு வந்தேன் பாரு என் புத்தியை எதுவானாலும் அடிக்கலாம்” கிருஷ் கோபமாக அங்கிருந்த நாற்காலியை குத்தினான்.

“உங்க நொண்ணன் நான் கூட இருக்கேனான்னு கேட்டிருப்பானே? நான் இங்க இருக்கேன்னு தெரிஞ்சி அவன் ஏன் டீ உன்னை இங்க அனுப்பினான்?” கிருஷ் மாதங்கியின் முன் நின்று கட்டமாக கேட்டான்.

‘பொறுமையா இரு மாதங்கி. அண்ணனை வைத்து சண்டை வேண்டாம்.’ தன் முகத்தை குனிந்து கொண்டு தனக்கு தானே கூறிக்கொண்டாள்.

“இல்லை, நான் தெரியாமல் தான் கேட்குறேன். மண்டபத்தில் இருந்து போய் தொலைஞ்சியே அப்படியே போக வேண்டியது தானே? ஏன் திரும்பி இங்க வந்த? அதுவும் நான் இருக்கிற வீட்டுக்கே ஏன் டீ வந்த?” அவன் முகம் பார்க்காமல் தலையை குனிந்து கொண்ட அவள் முகத்தை நிமிர்த்தி கடுப்பாக கேட்டான் கிருஷ்.

அவள் பொறுமை பறந்து போயிருந்தது. அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள்.

“நானும் வந்தன்னையிலிருந்து பார்த்துகிட்டே இருக்கேன். நீ ரொம்ப பேசுற” மாதங்கி அவன் முன் வீராவேசமாக நின்றாள்.

“நான் தப்பு பண்ணினேன். கல்யாணத்தை நிறுத்தியது தப்பில்லை. நிறுத்தின விதம் மட்டுந்தான் தப்பு. ஊரை கூட்டி நிறுத்திட்டேன். இது ஒன்னு தான் நான் செய்த தப்பு. நான் இல்லைன்னு மறுக்கவே இல்லை. இப்ப என்ன பண்ணலாம் சொல்லு.” அவள் கோபமாக கேட்டாள்.

“என்னவோ நீ ரொம்ப யோக்கியன் மாதிரி பேசுற? இந்த விஷயத்துக்கு இன்னைக்கு இங்க ஒரு முற்று புள்ளி வைக்கணும். சும்மா, வளவளன்னு என்ன பேச்சு?” அவள் அவன் சட்டையின் பிடிமானத்தை இறுக்கி இருந்தாள்.

அவன் அருகாமை அவள் சிந்தையை தொடவில்லை. ஆனால், அவள் அருகாமை அவன் சிந்தனையை தொட்டது.

மெழுவர்த்தி இருளில் அவள் முகம். பளபளவென்று மின்னிய அவள் தேகம். அவள் சுவாசம். அவள் வாசம். அவள் இத்தனை அருகாமையில்!

“வளவளன்னு என்ன பேச்சு? நீ சொல்றது சரி தான். நானும், நீயும் மட்டுந்தான். என்னால் உன்னை என்ன வேணும்ன்னாலும் பண்ண முடியும். நான் செய்தது தப்பு தான். ஆனால், நான் செய்த விஷயம் உன்னை மட்டுந்தான் பாதிச்சிருக்கும். நீ செய்த விஷயம், என்னை அசிங்கப்படுத்தி, என் குடும்பத்தை கேவலப்படுத்திருக்கு. உன்னையும் அதே மாதிரி கேவலப்படுத்த எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்?” அவன் விழியில் கோபத்தோடு கேட்டான் கிருஷ்.

அவன் கோபத்தில் அவள் முகத்தில் கேலி புன்னகை வந்து அமர்ந்தது.

“ஏன் கிருஷ் என்னை காயப்படுத்த, என்னை அசிங்க படுத்த உன்னை திரும்ப திரும்ப தரம் தாழ்த்திக்குற?” கேட்டு கொண்டே விலகி நின்றாள் மாதங்கி.

அவன் பேச்சு அவளை விலக்கி நிறுத்தியது. அவள் விலகலில் அவன் பேசியதன் முழு அர்த்தம் அவனுக்கு புரிய அவனும் முகம் சுளித்தான்.

“இந்த உலகமே நான் தான் தப்புன்னு சொல்லுது. அதில் நீ மட்டும் என்ன விதிவிலக்கா?” அவள் அவனை பார்த்து தலை சரித்தாள்.

“எனக்கு எல்லாரும் தண்டனை கொடுத்துட்டாங்க. எங்க அம்மா, அப்பா என்கிட்டே பேசுறதில்லை. பாட்டி, தாத்தா, முகுந்தன் வீடு எல்லாரும் என்னை ஒதுக்கி வச்சிட்டாங்க. என் அண்ணனும், முகுந்தனும் பேச வேண்டிய நேரத்தில் ஹாஸ்பத்ரியில் படுத்து என்னை தண்டிச்சிட்டாங்க. சொந்தபந்தம் முழுக்க நான் திமிர் பிடிச்சவன்னு சொல்லுது.”

“நான் செய்தது தப்பு தான். ஆனால், இவ்வளவு பெரிய தப்பா? எனக்குன்னு ஒரு ஃபிரெண்ட். அவ கூட பேசமுடியாமல் என் விதி என்னை தண்டிச்சிருச்சு” அவள் மூச்சு விடாமல் பேச, அவள் நிலையை எண்ணி அவனுக்கு தான் மூச்சு முட்டியது.

தொடர்ந்து பேசிய மாதங்கி சோர்வாக ஓர் இடத்தில அமர்ந்தாள்.

அதே நேரம், அவர்கள் தங்கிரியிருந்த வீட்டிலிருந்து சற்று  தூரத்தில் நான்கு பேர் பேசி கொண்டார்கள். “மச்சான், அந்த ஃபாரஸ்ட் ஆஃபிசரும் பொண்ணும் காட்டு பகுதியில் தான் இருக்காய்ங்க போல?” என்று ஒருவன் மீசையை முறுக்க, மற்றோருவன் தன் துப்பாக்கியை சரி பார்த்து கொள்ள, அவர்கள் நான்கு பெரும் மாதங்கி தங்கியிருக்கும் வீட்டை நோக்கி கிளம்பினர்.

 “நீ கேட்டியே கல்யாண மண்டபத்திலிருந்து போனவ போக வேண்டியது தானேனு? நான் போனவ தான். நீ இங்க இருக்கிறது தெரியாமல்  தான் இங்க வந்தேன். உன் மனசில் ஒன்றும் இல்லைனா, என்கிட்டே சாதாரணமா பேசிருக்கணும். இல்லை, கோபமா பேசிருக்கணும். தெரிஞ்சும் தெரியாதவன் மாதிரி ஏன் நடிக்கணும்?” அவள் நிறுத்த, “…” அவனிடம் மௌனம் மட்டுமே.

“சும்மா போனவளை, காட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு என்னவோ நான் தப்பு பண்ணின மாதிரி புலம்புற?” அவள் தலை அசைத்து அசைத்து கேள்வி கேட்டாள்.

“சரி, நான் எங்கயோ போனா உனக்கு என்ன? செத்து ஒழி நீ தானே அன்னைக்கு சொன்ன? அப்ப, நான் இந்த காட்டில் செத்து ஒழியட்டும்முன்னு விட வேண்டியது தானே? என்னை எந்த உரிமையில் அடிக்குற? நீ யார் என்னை அடிக்க?” அவள் அவனை பார்த்து கேள்வியாக நிறுத்தினாள்.

“அந்த இடத்தில யார் இருந்தாலும் நான் இப்படி தான் நடந்திருப்பேன். இந்த காட்டு பகுதி ஏன் பாதுகாப்பு. என்னோட ஏரியாவில் எந்த தப்பும் நடக்க கூடாது” அவன் பட்டென்று கூறினான்.

“நீ கடமை வீரனாவே இரு. எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.” அவள் பேச ஆரம்பிக்க, “ஏன் உன் அண்ணன் மட்டும் தான் கடமை வீரனா? நாங்க கடமை வீரனா இருக்க கூடாதா?” அவன் இடக்காக கேட்டான்.

“எதுக்கு தேவை இல்லாத பேச்சு. எல்லாரும் தண்டிச்சாச்சு. பாதிக்கப்பட்டவன் நீ மட்டும் ஏன் சும்மா இருக்கணும். நீ மட்டும் ஏன் கோபத்தை சுமந்துக்கிட்டு கஷ்டப்படணும்? நீயும் சந்தோஷமா இரு. நீயும் தண்டனை கொடு. வா” அவள் நிதானமாகவே அழைத்தாள்.

“உன் காதல் என்னை வாழ்க்கையை திசை மாற்றியதை விட, உன் தண்டனை என்னோட வாழ்க்கையை புதுசா பாதிக்க போறதில்லை. வா” அவள் அவனை கை நீட்டி அழைத்தாள்.

அந்த கூட்டம் அவர்கள் வீட்டை நெருங்க, கிருஷின் கைகளை பிடித்து கொண்டு அவனை வெளியே அழைத்து வந்தாள் மாதங்கி.

மழை நின்றிந்தது. அவள் வரும் பொழுது  பார்த்த அந்த வீட்டின் எதிரே  இருந்த அம்மன் முன் அழைத்து வந்திருந்தாள்.

அந்த அம்பாள் கழுத்தில் இருந்த தாலியை தன் கைகளில் எடுத்து கொண்டு கிருஷிடம் நீட்டினாள்.

“எதுக்கு சும்மா சும்மா சண்டை போட்டுட்டு, கட்டு தாலியை என் கழுத்தில். இது தான் எனக்கு சிறந்த தண்டனையா இருக்கும். என் குடும்பத்திற்காக தானே உன்னை வேண்டாமுன்னு சொன்னேன். இப்ப அந்த குடும்பமே இல்லை. அவங்க இல்லாம நீ தாலியை கட்டு. உனக்கும் என்னை தண்டிச்ச திருப்தி இருக்கும்”  அவள் பேச அவன் கண்களை இடுக்கி அவளை பார்த்தான்.

“யோசிக்காத கிருஷ். உனக்கு என் மேல அக்கறை இருக்குனு தெரியும். புதுசா, இந்த சம்பவம் என்னை பாதிக்காது. ஏற்கனவே, எங்க வீட்டில் என்னோட பேச மாட்டாங்க. இதனால், எனக்கு எந்த கஷ்டமும் வந்திராது. என் அண்ணனையும் முகுந்தனையும் நான் சமாளிச்சிப்பேன். எனக்கு இருக்கிற கஷ்டத்தோட இன்னும் கொஞ்சம் பிரச்சனை. அதுவொரு பெரிய விஷயமில்லை. உனக்கும் உன் கோபத்தை தீர்த்துக்கிட்ட திருப்தி கிடைக்கும். நீ சந்தோஷமா இரு. நம்ம சண்டைக்கும், ஒரு முற்று புள்ளி” அவள் அவன் முன் தாலியை நீட்டியபடி பேசினாள்.

கிருஷ் அவள் செயலில் சிலை போல் நிற்க, அவள் அவன் கைகளை பிடித்து அதில் தாலியை திணித்தாள்.

“கட்டு. என்னை தண்டிக்கணும். என்னை காயப்படுத்தனும். அது தானே. கட்டு தாலியை. நம்ம பிரச்னையை முடிச்சிப்போம்.” அவள் அவன்  முன் அவன் செய்கைக்காக காத்து கொண்டிருந்தாள்.

அவன்!

அவன் காதலி!

அவன் கட்ட நினைத்த தாலி!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!