birunthaavanam-29

Birunthaavanam-78de981d

பிருந்தாவனம் – 29

மாதங்கியின் முகத்தில் குழப்பம் இருக்க, குழம்பிய தன் தோழியின் முகத்தை பார்த்த பிருந்தாவின் முகத்தில் புன்னகை எட்டி பார்க்க, அதை மறைத்து கொண்டு, “யார் சொன்னான்னு கேட்டேன்?” என்றாள் பிருந்தா.

“இல்லை… இல்லை… அதை விடு. நமக்கு எதுக்கு தேவை இல்லாத பேச்சு. நாம நம்மளை பத்தி பேசுவோம்” என்றாள் மாதங்கி.

பிருந்தா மௌனம் காக்க, “பிருந்தா, நீ சொல்லு. நீயும், கிருஷ் குடும்பமும் ஒற்றுமையாகிடீங்களா?” என்று பேச்சை தன் தோழி பக்கம் திருப்பினாள் மாதங்கி.

“ஆமா, உன்னால் தான்” என்றாள் பிருந்தா புன்னகையோடு.

“என்னாலையா? நான் நல்லது கூட பண்ணிருக்கேனா?” என்று மாதங்கி கேலி போல் கேட்டு ஆச்சரியத்தில் கண்களை விரித்தாள்.

“ம்… நீ கல்யாணத்தை நிறுத்திட்டு போயிட்ட. அப்பன்னு பார்த்து ஆக்சிடென்ட் ஆகிருச்சு. அதுக்கு கிருஷ் காரணம் இல்லைனு நீயே சொல்லிட்ட. அப்பாவுக்கும், பெரியப்பாவுக்கும் இருந்த பிரச்சனையில் போலீஸ் எங்க குடும்பத்தை விசாரிக்க ஆரம்பிச்சிருச்சு” பிருந்தா நிறுத்த, “அய்யயோ…” பதறினாள் மாதங்கி.

“அப்புறம், பெரியப்பாவும், தாத்தாவும் வந்து எங்க அப்பா மேல எந்த தப்பும் இருக்காதுன்னு சொல்லிட்டாங்க. பாட்டி, இதையே சாக்கா வச்சி, எங்க அம்மாவை மிரட்டி மறுபடியும் பிருந்தாவனத்துக்கே கூட்டிட்டு போய்ட்டாங்க.” என்று பிருந்தா மகிழ்ச்சி பொங்க கூறினாள்.

“பிருந்தாவனம் தான் உங்க வீடில்லையா? நீ அங்க போகணும்னு தானே ஆசை படுவ?” என்று மாதங்கி கேட்க, பிருந்தா ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

“இப்படி எனக்கும் தெரியாமல் ஏதாவது நல்லது செய்தா தான் உண்டு” மாதங்கி கண்சிமிட்டி சிரிக்க, அங்கு சிரிப்பலை பரவியது.

“உங்க அம்மாவுக்கு இதில் வருத்தம் இல்லையா?” என்று மாதங்கி தன் தோழியை பார்த்தபடியே கேட்டாள்.

“முதலில் இருந்தது. ஆனால், இப்ப இல்லை. அம்மாவுக்கு எங்க அப்பாவை அரசியல் வாரிசா தாத்தா சொல்லலைன்னு தான் வருத்தம். இப்ப, பெரியப்பா, என்னை அரசியல் வாரிசுன்னு சொல்லிட்டாங்க. அம்மாவுக்கு அதில் சந்தோசம் தான். பழசை எல்லாம் மறந்துட்டாங்க” என்று பிருந்தா கூற, “ஓ…” என்ற மாதங்கியின் கண்கள் சுருங்கியது.

“என்ன ஓ?” என்று பிருந்தா புருவம் உயர்த்த, “உங்க அண்ணன்?” என்று நிறுத்தினாள் மாதங்கி.

“அவன் தான் அரசியல் வேண்டாம் அரசாங்க வேலை தான் வேணுமுன்னு இங்க வந்து உட்கார்ந்துட்டானே?” என்று பிருந்தா அசட்டையாக கூற, “ஏன்?” என்று மாதங்கி ஒற்றை வார்த்தையாக.

“இதை நீ கிருஷ் அண்ணா கிட்ட தான் கேட்கணும். நீ கேட்குறேன்னு நான் வேணுமின்னா கேட்கட்டுமா?” என்று பிருந்தா அலைபேசியை எடுக்க, “ஐயோ சாமி! வேண்டாம் டீ. யார் என்ன பண்ணினா எனக்கென்ன?” என்று மாதங்கி கூற, பிருந்தா தோள்களை குலுக்கி கொண்டாள்.

“நீ என்ன செய்திட்டு இருக்க மாதங்கி? ஏன் இங்க வந்த?” பிருந்தா கேட்க, “ட்ரோன் இங்க சில இடங்களில் இருக்கு பிருந்தா. இருந்தாலும், ஹை டெக்னாலஜி இல்லை. அப்புறம் ஒரு அனிமேட்டட் அனிமல் ஃபிலிம் பண்ணணுமுன்னு ஆசை. அதனால், ஒரு காட்டு பகுதியை தேடினோம்” என்று மாதங்கி நிறுத்த, பிருந்தா, “ம்…” கொட்டினாள்.

“என் கூட இன்னும் இரண்டு பேர். திலக், ஹென்றி. திலக்குக்கு இது தான் சொந்த ஊர். இங்க பக்கத்துலயே காடு இருக்குமுன்னு சொன்னான். சரி, எங்க வீட்டில் இன்னும் பிரச்சனை சரியாகலை. அம்மாவுக்கு இன்னும் என் மேல கோபம் தான். அது தான் நான் நேரா இங்க வந்துட்டேன். வந்த இடத்தில், உங்க அண்ணனை பார்த்தேன்.” என்று மாதங்கி தன் சில வருட கதையை சுருக்கமாக சொல்லி முடித்தாள்.

“அங்கிள் எப்படி இருக்காங்க?” என்று பிருந்தா வினவ, அப்பொழுது கிருஷ் இவர்களுக்கு காலை உணவு வாங்கி கொண்டு படியேறினான். கிருஷின் வருகையை தோழிகள் இருவரும் கவனிக்கவில்லை.

“அப்பாவுக்கு உடல் நிலை இடையில் கொஞ்சம் மோசமாகிருச்சு. என்னை நினைச்சி ஒரே கவலை. அம்மாவுக்கு, அதனால் என் மேல இன்னும் அதிக கோபம்” மாதங்கியின் குரலில் வருத்தம்.

கிருஷ் மேலே செல்லவும் முடியாமல், கீழே செல்லவும் மனமில்லாமல் அங்கே சுவரில் சாய்ந்தபடி நின்றுவிட்டான்.

“வருத்தப்படாத மாதங்கி. நீ அப்படி என்ன பெரிய தப்பு பண்ணிட்ட? கிருஷ் மேலையும் தப்பு இருக்கு தானே? உனக்கு வேண்டாமுன்னு நினைக்குற கல்யாணத்தை வேண்டாம்முனு சொல்லுற உரிமை உனக்கு இல்லையா?” என்று பிருந்தா தன் தோழியை சமாதானம் செய்தாள்.

கிருஷின் கைகள் இறுகியது மனதோடு.

“சொல்லுற உரிமை எனக்கு இருக்கு பிருந்தா. ஆனால், சொன்ன இடம் தப்பு இல்லையா? ஊரை கூட்டி, கிருஷை அவமானப்படுத்தி… உங்க அண்ணன் வாழ்க்கையை கெடுத்து… என் குடும்ப மானத்தை வாங்கி… உங்க குடும்ப சந்தோஷத்தையும் அழிச்சி… என் குடும்ப சந்தோஷத்தையும் அழிச்சி…” மாதங்கியிடம் மெல்லிய விசும்பல்.

“நான் நினைச்சது நடந்திருச்சு பிருந்தா. நான் படிச்சிட்டேன். பெரிய பெரிய ப்ரொஜெக்ட்ஸ் எல்லாம் ஒர்க் பண்ணிட்டேன். ஆனால், நான் சந்தோஷமா இல்லை பிருந்தா. நான் அன்னைக்கு அந்த விஷயத்தை பொறுமையா கையாண்டிருக்கணும். பொறுமையா நடந்திருக்கணும்” மாதங்கி தன் தோழியின் தோள் சாய்ந்து கதறினாள்.

“அன்னைக்கு, பானையை போட்டு உடைக்கிற மாதிரி போட்டு உடைச்சிட்டேன். எனக்கு அன்னைக்கு பொறுமையும், நிதானமும் முக்கியமுன்னு தெரியலை பிருந்தா. இப்ப காலம் தந்த பக்குவம், எனக்கு எல்லாம் புரியுது.” மாதங்கி விசும்பினாள்.

“நீ ஆண்ட்டி கிட்ட பேசவே இல்லையா? ஆண்ட்டி என்ன சொல்றாங்க?” பிருந்தா அக்கறையோடு வினவினாள்.

“அம்மா, என் கிட்ட பேசுறதே இல்லை. அம்மா, முகுந்தனை கல்யாணம் பண்ண சொல்லறாங்க. கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னால் ஒருவேளை எங்க வீட்டில் நிலைமை சரியாகலாம்” மாதங்கி பிருந்தாவிடம் வீட்டின் நிலைமையை கூறினாள்.

“சரி, நீ கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வேண்டியது தானே?” பிருந்தா தன் தோழியை ஆழம் பார்த்தபடியே நிறுத்த, ‘இதற்கு மேல் இங்கே நிற்பது சரி இல்லை.’ என்று “க்… க்கும்…” குரல் எழுப்பினான் கிருஷ்.

அவன் வருகையில் இருவரும் அவர்கள் பேச்சை தற்காலிகமாக நிறுத்தி கொண்டனர்.

உணவை அவர்களிடம் கொடுக்க, “அண்ணா உனக்கு?” பிருந்தா கேட்க, “எனக்கு வேண்டாம்” அவன் குரல் தடுமாறியது. அந்த பேச்சை தவிர்ப்பவன் போல், பேச்சை திசை மாற்றினான் கிருஷ்.

“இன்னைக்கு, எனக்கு சைட் விசிட் தான். வரியா பிருந்தா?” என்று கிருஷ் கேட்க, பிருந்தா தன் தோழியை பார்த்தாள்.

“அவங்க டீம் வராங்க” கிருஷ் கூற, “அப்ப, நான் மட்டும் என்ன பண்ண போறேன்?” என்று பிருந்தாவும் அவர்களோடு தயாரானாள்.

திலக், ஹென்றி, மாதங்கி, பிருந்தா, கிருஷ் அனைவரும் பாணதீர்த்த அருவியை ஒட்டிய மலைஏற்ற காட்டு பகுதியை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

கிருஷ் அவர்களோடு நட்போடு பழகுவதற்கு, திலக் மற்றும் ஹென்றி பலமுறை நன்றி தெரிவித்து விட்டனர். மாதங்கியை நன்றி கூற, பலமுறை திலக் வற்புறுத்தியும் மாதங்கி மறுத்துவிட்டாள். இதில் திலக்கிற்கு மாதங்கி மேலே சற்று வருத்தம்.

அவர்கள் பயணம் ஒரே ஜீப்பில், தொடங்கியது.

சில தூரம் சென்றதும், “டீ, காபீ ஏதாவது சாப்பிடுவோமா?” என்று திலக் வினவ, அங்கு ஒரு தேநீர் கடையின் முன் வண்டியை நிறுத்தினான் கிருஷ்.

திலக், ஹென்றி, கிருஷ் மூவரும் செல்ல, பிருந்தா மாதங்கி இருவரும் இறங்க மறுத்துவிட்டனர்.

திலக், ஹென்றி இருவரும் ஏதோ சாப்பிட, கிருஷ் எதுவும் சாப்பிடாமல் அவர்களுக்காக காத்திருந்தான்.

“பிருந்தா, அது என்ன பசங்க மட்டும் மொக்குமொக்குன்னு மொக்கறது. வா, நாமளும் போய் சாப்பிடுவோம்” என்றாள் மாதங்கி.

“இல்லை மாதங்கி, நான் வரலை. எனக்கு வேண்டாம்” என்று பிருந்தா மறுக்க, “இரு நான் ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்று மாதங்கி குதித்து இறங்கினாள்.

 மாதங்கி சற்று சந்தோஷமாகவே இருந்தாள். பல நாட்கள் கழித்து தன் தோழியை பார்த்த சந்தோசம். அவளுடன் வெளியே சுற்ற கிளம்பியது இன்னும் சந்தோஷமாக இருக்க, ‘மெல்ல சென்று மூணு பேரையும் பயம் புடுத்துவோமா?’ என்று எண்ணியவாறே அவள் மெதுவே கடையை ஒட்டி நடக்க ஆரம்பித்தாள்.

அப்பொழுது தான் அவள் செவிகளில் அவர்கள் பேசுவது விழுந்தது.

“கிருஷ் சார் சாப்பிடுங்க. டீ , காபி கூட சாப்பிட மாட்டீங்களா?” திலக் கேட்க, “அப்படி இல்லை. எனக்கு எதுவும் வேண்டாம்” கிருஷ் மறுத்து விட்டான்.

‘இன்னைக்கு காலையிலும் சாப்பாடு வேண்டாமுன்னு பிருந்தா கிட்ட சொன்னானே. ஏன்?’ மாதங்கி அவர்கள் பேச்சை கவனிக்க ஆரம்பித்தாள்.

“அட்லீஸ்ட் வாட்டர்” என்று தனியாக சாப்பிட விருப்பம் இல்லாத ஹென்றி கிருஷை உபச்சாரம் செய்ய, “இல்லை, நான் இன்னைக்கு சாப்பிட மாட்டேன்.” வேறு வழி இல்லாமல் அவர்களிடம் கூறினான்.

“ஏன்?” திலக் ஆர்வம் தாங்கமால் கேட்டுவிட, “…” கிருஷிடம் மௌனம்.

“சொல்ல வேண்டாம்முன்னா சொல்ல வேண்டாம்.” திலக் கூற, “அப்படி எல்லாம் இல்லை” கிருஷ் மறுப்பாக தலை அசைத்தான் .

“இன்னைக்கு என் கல்யாண நாள். அது தான்…” கிருஷின் குரலில் வருத்தம்.

‘இன்னைக்கு என்ன நாள்?’ மாதங்கி சிந்திக்க, அவள் உடல் நடுங்கியது.

‘நான் சில வருடங்களுக்கு முன் திருமணத்தை நிறுத்திய அதே நாள். கிருஷ் எதையும் மறக்கவில்லை.’ மாதங்கியின் இதயம் வலியில் துடித்தது.

‘கிருஷ் என்னை மறக்கவில்லையா? இல்லை , அந்த நாளில் ஏற்பட்ட வலியை மறக்கவில்லையா? இல்லை, அந்த பிரச்சனையை மறக்கவில்லையா?’ மாதங்கியின் மனம் தவித்தது.

‘இல்லை நான் அவனுக்கு ஏற்படுத்திய அவமானத்தை மறக்கவில்லையா?’ அவள் தன் தலையை பின்னோடு சுவரில்  முட்டி கொண்டாள்.

‘இல்லை கிருஷிற்கு மத்ததெல்லாம் நியாபகம் இருந்திருந்தால், என்னுடன் பேசி இருக்கவே மாட்டான். கிருஷ் என்னை மறக்கவில்லை. அவன் மனதில் நான் மட்டுமே இருக்கேன். அவன் இன்னும் என் மேல் காதலை சுமந்து கொண்டிருக்கிறான்’ அவள் மனம் அவன் பக்கம் பேசியது.

‘அன்று நான் வேண்டாம் என்று சொன்னேன். அவனும் விலகி நின்றான். ஆனால், இன்று என்ன தடை. நான் ஏன் என் மேல் காதல் கொண்டவனை மறுக்க வேண்டும்?’ அவள் மனம் அவனுக்காக சிந்தித்தது.

‘கல்யாணம் நாள்னா ஏன் சாப்பிடாமல் இருக்கணும்?’ திலக், ஹென்றி இருவரும் அவனை புரியாமல் பார்த்தனர்.

அவர்கள் பார்வையின் பொருள் புரிந்தவன் போல்,”அவ மனைவியா இப்ப என் கூட இல்லை. ஆனால், காதலியா என் மனசில் நிறைஞ்சி இருக்கா” என்றான் மெல்லிய புன்னகையோடு.

திலக், ஹென்றி இருவரும் தர்மசங்கடமாக விழித்தனர் .

“இந்த நாளில் ஏனோ, எனக்கு பச்சை தண்ணீர் கூட குடிக்க தோன்றதில்லை” கிருஷ் கூற, மாதங்கியின் கண்களில் கண்ணீர் வடிந்தது.

வழக்கமாக கிருஷ் இதை சொல்லி இருப்பானோ என்னவோ மாதங்கியை பார்த்ததிலிருந்து அவன் மனமும் சற்று இளகியிருந்தது.

அதற்கு மேல் நிற்க வலுவில்லாமல், மாதங்கி தன் கண்களை துடைத்து கொண்டு ஜீப்பிற்கு சென்று மௌனமாக அமர்ந்துவிட்டாள்.

“எதுவும் வாங்கலை?” பிருந்தா கேட்க, “நீ வேண்டாமுன்னு சொல்லிட்ட… சரி எனக்கும் வேண்டாமுன்னு வந்துட்டேன்” மாதங்கி சமாளித்தாள்.

மீண்டும் ஜீப் கிளம்பியது. மாதங்கியின் முகம் வாடி இருக்க, “என்ன ஆச்சு? ஃபிரெண்ட்ஸ் சண்டை போட்டுக்கிட்டிங்களா?” கிருஷ் மாதங்கியை பார்த்தபடி பிருந்தாவிடம் கேட்டான்.

“நான் எல்லாம் சண்டை போடலை” பிருந்தா தன் சகோதரனிடம் பாய, “சண்டை எல்லாம் எப்பவும் மாதங்கி தான் ஆரமிப்பா…” திலக் நேரம் காலம் பாராமல் தன் தோழியின் காலை வாரினான்.

“மாதங்கி கடைக்கு வந்துட்டு, எதுவும் வாங்காமல் திரும்பி வந்தா. நான் நீ தான் அவளை திட்டி அனுப்பிட்டியோன்னு நினச்சேன்” பிருந்தா சாதாரணமாக கூற, மாதங்கியின் உடல் இறுகியது.

கிருஷ் ஒரு நொடி ஸ்தம்பித்து வண்டியை சடார் என்று நிறுத்தினான். ‘நான் பேசினதை கேட்டிருப்பாளோ? ச்… ச்ச… இருக்காது’ தன்னை சாமதானப்படுத்த, “என்ன ஆச்சு?” திலக் , ஹென்றி, பிருந்தா வினவ, “ஒண்ணுமில்லை…” எதுவும் கேட்காத மாதங்கியிடம் அவன் பார்வை சென்றது.

‘கேட்டுட்டா….’ கணித்து கொண்டான் கிருஷ். மேலும் சிந்திக்க, அவன் மனம் விரும்பவில்லை.

‘எத்தனை வருஷம்? இந்த நாளில் பச்சை தண்ணீர் கூட குடிக்க மாட்டானா?’ மாதங்கி பதறினாள்.

எல்லோரும் ஏதேதோ பேசி கொண்டிருக்க, அவள் கண்கள் அவனையே வட்டமிட்டது.

‘காலையில் இருந்து ஒன்னுமே குடிக்கலை… ஒன்னுமே சாப்பிடலையா?’ அவள் மனம் வலித்தது.

கிருஷின் முகத்தையே கூர்மையாக பார்த்தாள் மாதங்கி. ‘கிருஷின் முகம் வாடி இருக்கிறதோ?’ அவள் விழி நீர் திரண்டு, அவள் ஆராய்ச்சியை தடுத்தது.

‘இப்படி சாப்பிடாமல் இவன் எதை சாதிக்க போகிறான்? அறிவில்லை. இவங்க வீட்டில் யாரும் கிருஷை பார்க்கலியா? இவெல்லாம் ஒரு தங்கச்சியா?’ மாதங்கி பிருந்தாவை முறைத்து பார்த்தாள்.

‘இவ ஏன் என்னை முறைச்சு பார்க்குறா?’ பிருந்தா மாதங்கியை யோசனையாக பார்த்தாள்.

‘என் மேல் இவனுக்கு எதற்கு இத்தனை அன்பு? இது தான் காதலா? இவன் என் மேல் வைத்திருப்பது தான் காதலா?’ அவள் தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள். அவள் நெஞ்சத்தில் அவனை எண்ணி உதிரம் கொட்டியது. அவள் உணர்ச்சிகளும், அவள் துடிப்பும் தன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்தது

அவர்கள் பாணதீர்த்தம் அருவியை நெருங்கி இருந்தனர்.

படகில், ஏற்கனவே சிலர் இருக்க மூவர் செல்ல மட்டுமே இடம் இருந்தது.

“நானும், மாதங்கியும் இங்க இருக்கோம். நீங்க மூணு பேரும் போயிட்டு வாங்க.” பிருந்தா கூற, “இல்லை நாம தனி போட் கூட எடுத்துக்கலாம்” கிருஷ் கூறினான்.

“கொஞ்ச நேரம் ஆகும் அவ்வுளவு தான். இல்லைனா, நீங்க யாராவது ஒருத்தர் போயிட்டு வாங்க” என்று கிருஷ் கூற, “நான் வரலை பிருந்தா. நீ போயிட்டு வா” மாதங்கி கூற, அவர்கள் மூவரும் கிளம்பி செல்ல, கிருஷ் மாதங்கி தனித்து விடப்பட்டனர்.

கிருஷ், எதுவும் பேசாமல் நடக்க மாதங்கியும் அவனோடு நடக்க ஆரம்பித்தாள்.

ஆள் அரவம் இல்லாத ஒற்றையடி பாதை. இருபக்கமும் மரங்கள். மெல்லிய தென்றல் காற்று. ஆங்காங்கே பறந்து கொண்டிருந்த பட்டாம்பூச்சிகள்.

இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ‘நான் பேசினதை கேட்டுட்டா. சண்டை போடுவாளோ?’ கிருஷ் தன் நெஞ்சை தடவியபடி நடந்தான். நடந்து கொண்டே இருந்தான்.

“எவ்வுளவு தூரம் என்னை இப்படி கூட்டிட்டு போவ கிருஷ்?” மாதங்கி நிற்க, “காலம் முழுக்க… அப்படின்னு பழைய கிருஷ் சொல்லிருப்பான்.” என்று கிருஷ் நிறுத்த, “சீனியர்…” மாதங்கியின் குரல் உணர்ச்சியின் பிழம்பாய் ஒலித்தது.

‘சீனியர்…’ அவள் அழைப்பில், உருகி நின்றான். தன்னை மறந்து நின்றான். காதலை மட்டுமே தேக்கி நின்றான்.

‘எத்தனை வருடம் கழித்து, மாதங்கியின் அழைப்பு…’ அவன் சற்று ஸ்தம்பித்தும் நின்றான்

ஓடி சென்று அவன் தோளில் சாய்ந்து கதறினாள். அவள் வேகத்தில் அவன் சற்று தடுமாறினான். அவன் கண்களும் கலங்கியது அவள் கதறலில். அவள் தோள்களை தட்டி கொடுத்தான் அவளுக்கு ஆதரவாக.

‘என் தோள் சாய வா’ என்று அவன் அழைத்த காலத்தில் மறுத்த அவள் இன்று அவளாக வந்து சாய்ந்தாள்.

‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று அவன் கூறியதை, இத்தனை வருடங்கள் கழித்து உணர்ந்தவள் போல், ‘எனக்காக நீ இருக்கிறாய்…’ என்பவள் போல் நடந்து கொண்டாள் மாதங்கி.

அவள் கண்ணீர் அவன் சட்டையை நனைத்து அவன் இதயத்தை தொட்டது.

“மாதங்கி…” அவன் அழைக்க, அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள்.

அவள் ஏதோ பேச தொடங்க, அவன் தன் ஆள் காட்டி விரலால் அவள் இதழ்களை மூடினான். அவள் இதழ்கள் துடித்தது. அவள் விழிகள் அவன் கண்களை பார்க்க, அவன் மறுப்பாக தலை அசைத்தான்.

“நான் எதுவுமே பேசலியே சீனியர்.” அவள் கூற, “நீ என்ன பேச போறேன்னு எனக்கு தெரியும்.” அவன் கூற, “சீனியர்…” அவள் தடுமாறினாள்.

“நான் எதுமே சொல்ல மாட்டேன்.” அவள் உறுதியாக கூறினாள்.

“தெரியும்… சொல்லாத மாது…” அவன் அவளை உரிமையோடு மாது என்று அழைத்தான். அவள் அவன் தோள்வளைவில் தான் நின்று கொண்டிருந்தாள்.

அந்த தொடுகை நட்பு மட்டுமே பாராட்டியது.

“உன் இதழ்கள் பேசாத உன் காதலை உன் கண்கள் பேசுது.” அவன் கூற, மாதங்கி தன் விழிகளை மூடி கொண்டாள்.

“நான் தவறியது ஒரு முறை தான். எனக்கு தோல்வியும் ஒரு முறை தான்.” அவன் கூற, அவள் உடல் நடுங்கியது.

அவளுக்கு ஆதரவாக அவளை அணைத்தான். அரவணைத்தான் கிருஷ்.

“உன் காதலை சொல்லிடாத மாதங்கி. நம்ம காதல் இனி ஒரு நாளும்…” வார்த்தைகளை முடிக்க முடியாமல் அவன் தடுமாறினான்.

“உன் காதலுக்கு என்னை மறுப்பு சொல்ல வச்சிடாத. காதல் மறுக்கப்படும் பொழுது வலி அதிகம். அந்த வலியை நான் உனக்கு தர மாட்டேன். அதை தர வச்சிராத மாதங்கி. காதலை சொல்லிடாத மாதங்கி” அவன் குரலில் காதல் வழிந்து, வார்த்தைகளோ அறிவின் வியாக்கியானத்தை பேசியது.

“நான் எதுவுமே சொல்லலியே சீனியர்…” அவள் அங்கிருந்த பாறையில் அமர்ந்தாள் விசும்பியபடி. அவள் காதலை சொல்லவில்லை. அவள் கண்கள் தான் காதல் மொழி பேசியது. அவள் குரல் தான் காதலை காட்டியது.

மாதங்கி படும்வேதனை தாளாமல் அவள் முன் மண்டியிட்டு அமர்ந்து அவள் தலை கோதினான் கிருஷ்.

“நீ நேத்து நடந்த சம்பவத்திலும், இன்னைக்கு நான் பேசினதை கேட்டதிலும் உணர்ச்சி வசப்பட்டிருக்க மாதங்கி.” அவன் அவள் மனதிற்கு கடிவாளமிட முயற்சித்து, அவளை அறிவின் பாதையில் நடக்க வைக்க முயற்சித்தான்.

“நான் எதுவுமே சொல்லலியே சீனியர்…” அவள் தன் காதலை சொல்லாமல் சொன்னாள்.

“இந்த பார் உன் குடும்பத்தை என் குடும்பத்தை யோசித்து பார். இந்த காதல் எல்லாம் சரிப்பட்டு வராது. என் கஷ்டம் உனக்கு வேண்டாம். நானே எல்லாத்தையும் மறந்துட்டு வாழ நினைக்குறேன். இந்த காதலின் எண்ணத்தை வளர்த்துக்காத.” அவன் தன் காதலியின் வலி தாங்காமல், தன் காதலியின் வலியை போக்க, அவன் தான் காதலனே இல்லை என்று அவளை சமாதானம் செய்ய முயற்சித்தான்.

வார்த்தைகள் கிடைக்காமல், அதே வார்த்தையில் சிக்குண்டு, “நான் எதுமே சொல்லலியே சீனியர்…” அவள் அவனை கழுத்தோடு கட்டிக்கொண்டு கதறினாள்.

“எனக்கு தெரியலை சீனியர். எது காதல்ன்னு அன்னைக்கு தெரியலை. இன்னைக்கும் தெரியலை இது தான் காதலான்னு? நான் ஏன் இப்படி நடந்துக்குறனேன்னு தெரியலை சீனியர். இது தான் காதலான்னு தெரியலை சீனியர். ஆனால் இப்படி நடந்துக்கணுமுன்னு தோணுது சீனியர்.” அவள் அவனை கட்டி கொண்டு கதற, அவன் செய்வதறியாமல் திகைத்து நின்றான்.

“வேண்டாம் மாதங்கி…” அவன் அவளை இடையோடு அணைத்து அவளுக்கு ஆறுதலே கொடுத்தான். அவளுக்கு புரிய வைக்க வேண்டும் என்று எண்ணினான்.

“நான் எதுமே சொல்லலியே சீனியர்…” அவள் அவன் மீது சாய்ந்தபடியே அவன் சட்டையை இறுக பிடித்து கொண்டு விசும்பினாள். அறிவு அவளை தூர நிறுத்த விரும்பினாலும், அவன் மனம் விரும்பவில்லை.

‘எதுவும் நடக்காது… எதுவும் நடக்காது… வீட்டுக்கு தெரிஞ்சா விஷயம் காலி. மாதங்கி இப்ப உணர்ச்சியின் பிடியில் இருக்கா. சொன்னால் புரிந்து கொள்வாள்.’ அவன் எண்ணிக்கொண்டிருக்க, “மாதங்கி… இது வேண்டாம்… விட்டுரு” அவன் அவள் செவியோரம் கிசுகிசுத்தான்.

“நான் எதுவுமே சொல்லலியே சீனியர்… எதை வேண்டாமுன்னு சொல்லறீங்க? நான் சொன்னேனா நான் உங்களை காதலிக்குறேன்னு? நீங்க கொடுத்த காதல் பரிசு தான் எல்லா பிரச்சனைக்கும் காரணம். இந்தாங்க நீங்களே நீங்க கொடுத்த காதல் பரிசை திரும்ப வச்சிக்கோங்க. எனக்கு அது வேண்டாம்.” கூறிவிட்டு, எம்பி அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள் மாதங்கி.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!