Birunthavanam-10

Birunthaavanam-a7ff9f21

பிருந்தாவனம் – 10

மாதங்கி அவனுக்காக காத்திருந்த நொடியில், அவள் மனம் பல கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தது.

‘அண்ணா, என்கிட்டே எதுமே கேட்கலையே? நான் இப்ப கேள்விப்பட்டது உண்மையா? பொய்யா?’ அவள் சிந்திக்கையில், ‘ஒருவேளை ஒரு நாள் அண்ணனும், முகுந்தனும் சம்பந்தமில்லாம கல்யாணம், காதல்ன்னு இதனால் தான் பேசினாங்களோ?’ பொறி அவள் அறிவில் சாட்டையடியாக இறங்கியது.

‘அண்ணன் கிட்ட கேட்போமா?’ யோசிக்க, ‘வேண்டாம். எனக்கு தெரியவேண்டாமுன்னு தான் அண்ணன் சொல்லலை. இதை அவன் கிட்ட கொண்டு போக கூடாது’ நொடிகளில் முடிவு எடுத்து கொண்டாள் மாதங்கி.

கிருஷ் அவளை காத்திருக்க விடாமல் விரைவாக வந்துவிட்டான். அவன் உடலும், அவன்  மனமும் உல்லாசத்தில் குதூகலிக்க கிருஷின் கண்களில் தெரிந்த ஆர்வத்தில், மாதங்கி அவன் மனநிலையை பிடித்துவிட்டாள்.

‘இவன் சொல்லியிருப்பானோ?’ அவள் தன் கண்களை சுருக்க, மாதங்கியின் முகபாவத்தில், அவள் முகத்தில் இருந்த குறும்பு மறைந்திருந்ததில், அவள் புன்னகைக்கும் உதடுகள் புன்னகை மறந்து இறுக்கமாக மடிந்திருந்த விதத்தில் கிருஷ் தன்னை நிதானப்படுத்தி கொண்டான்.

“மாதங்கி” அவன் அழைக்க, “எங்க அண்ணன் கிட்ட என்ன சொன்னீங்க?” நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

இந்த கேள்வியை அன்று எதிர்பார்த்திருந்தான். ஆனால், இன்று எதிர்பார்க்கவில்லை. “அது…” அவன் தடுமாற, “என்ன சொன்னீங்கன்னு கேட்டேன் சீனியர்?” அவள் குரல் நிதானத்தை கஷ்டப்பட்டு பிடித்திருந்தது.

“காதலை சொன்னேன்” கிடைக்கும் சந்தர்ப்பத்தை இனி விடக்கூடாது என்று அழுத்தமாக கூறினான் கிருஷ்.

“ஓ… யார் காதலை?” அவள் கண்களை உயர்த்தினாள்.

அவனுக்கு அவளை பிடித்திருந்தது. அவள் தைரியாயத்தை, அவள் கேள்வி கேட்ட விதத்தை. அதையும் தாண்டி, அந்த சூரியன் மயங்கும் வேளையில் மயக்கும் அவளை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது.

பசுமை நிறைந்த இடத்தில், தென்றல் வீச தென்னங்கீற்று நீரை தொட, அந்த நீரின் சலசலப்பில் தைரியமாக சொன்னான் அவன் தன் காதலை.

“நம்ம காதலை…” அவன் முகத்தில் மெல்லிய புன்னகை கீற்று.

அவன் கூற்றில், “கேவலமா இல்லை” அவள் வார்த்தைகளை கடித்து துப்பினாள்.

அவள் பேசிய விதத்தில், அவன் முகம் சற்று இறுகியது.

“நான் சொன்னேனா, நான் உங்களை காதலிக்குறேன்னு? நம்ம காதல்ன்னு சொல்ல வெட்கமா இல்லை?” அவள் வார்த்தைகள் கணீரென ஒலித்தது.

“இதுல வெட்கப்பட என்ன இருக்கு? வெளிநாட்டில், இந்த வயதில் காதல் வரலைனா தான் கேவலம். எனக்கு காதல் வந்ததில் என்ன கேவலம்?” அவன் தோள்களை குலுக்கினான்.

“இப்படி பேச அசிங்கமா இல்லை?” அவள் கேட்க, “இதுல அசிங்க படுறதுக்கு என்ன இருக்கு? அதுவும் பொண்ணோட அண்ணன் கிட்டயே நேரடியா சொல்றதுக்கு தனி தைரியம் தான் வேணும். நான் பெருமை தான் படணும். அசிங்கமில்லை” அவன் பதில் தெனாவட்டாக வெளி வந்தது.

“ஏன் என் அண்ணன் கிட்ட அப்படி சொன்னீங்க?” அவ கேட்க, “அது தான் பிரச்சனையா பேப்ஸ்? இப்ப உன்கிட்ட சொல்றேன் என் காதலை.” அவன் அவளை ஆழமாக பார்த்தான்.

அவள் கொழுகொழு கன்னங்கள் அவனை மயக்க, சட்டென்று அவள் கன்னத்தில் இதழ் பதித்து, “லவ் யூ பேப்ஸ்…” என்று அவன்  உல்லாசமாக கூறி முடிக்கையில், “பளார்…” என்று அவன் கன்னத்தில் அறைந்திருந்தாள் மாதங்கி.

“ஏய், என்ன திமிரா?” அவன் அவள் கன்னத்தை பிடித்திருக்க, அவன் கைகளை சட்டென்று உதறினாள் அவள்.

“நீ என் கிட்ட காதலை சொல்லிருக்னும். நான் அதை மறுத்திருப்பேன். என் அண்ணன் கிட்ட சொல்லிருக்க. அதுவும் நான் உன்னை விரும்பறதா?” அவள் சீற, “நான் உன்னை விரும்பினா என்ன? நீ என்னை விரும்பினா என்ன? காதல் காதல் தானே” அவன் குரல் லகுத்தன்மையை விடுத்து கோபம் காட்ட ஆரம்பித்திருந்தது.

“இப்படி பேச நீங்க என்னை விரும்பியிருக்க கூடாது. ரோட்டில் போற எதையவாவது விரும்பி இருக்கணும். நீங்க சொல்றதை கேட்டு பூம் பூம்ன்னு தலையை ஆட்டி சந்தோஷப்பட்டிருக்கும். அதுவும் காதல் தான்…” என்று அவள் பேச, “ஏய்…” அவள் சங்கை பிடித்திருந்தான் கிருஷ்.

அவன் பிடித்த வேகத்தில் அவள் திரும்ப, அவள் தென்னைமரத்தின் மீது சாய்ந்து நின்றாள். அவன் அழுந்த பற்றவே விரும்பினான். ஆனால், அவன் விரல்கள் அவளிடம் மென்மையை மட்டுமே காட்ட துணிந்தது

“உன்கிட்ட மட்டும் தான் டீ நான் ஆரம்பத்திலிருந்து பொறுமையா போறேன். ஆனால், நீ ரொம்ப பேசுற. நான் யாரை காதலிக்கனுமுன்னு நீ சொல்ல கூடாது. அதை நான் தான் சொல்லுவேன்.” அவன் கண்களில் ரௌத்திரம்.

அவன் பேசிய விதத்தில், அவன் தொடுகையில், அவன் செய்கையில் வெகுண்டு அவள் எகிறினாள்.

“சொல்லிக்கோ, தெருத் தெருவா போய் சொல்லு. நான் மாதங்கியை காதலிக்குறேனு. பைத்தியம் மாதிரி சட்டையை கிழிச்சிகிட்டு போய் சொல்லு. நான் மாதங்கியை காதலிக்குறேன்னு. ஐ டோன்’ட் கேர்.” அவள் முகத்தை சுழித்தாள்.

“ச்சை… திமிர்… யார் கிட்டயும் இளகாத நான், உன்னை தேடி வந்து காதல் சொல்றேன் பார். அந்த திமிர்.” அவன் கைகளை உதறினான்.

“எங்க அண்ணன் கிட்ட சொல்லு. உங்க அப்பன் கிட்ட சொல்லு. நான் மாதங்கியை காதலிக்குறேன்னு. ஐ டோன்’ட் கேர். ஆனால், நான் உன்னை காதலிக்குறேன்னு இனி எங்கயாவது  சொன்ன, செருப்பு பிஞ்சிரும்.” அவள் பேச, அவன் அவள் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தான்.

“மரியாதை…” அவன் தன் ஆள்காட்டி விரலை உயர்த்தி மிரட்டினான்.

அவன் அடித்ததும் ஒரு நொடிக்கும் குறைவான நேரத்திற்கு அவள் கண்கள் மிரட்சியை எடுத்து கொள்ள, அவன் தன் கண்களை இறுக மூடி கொண்டான்.

‘ஐயோ… என் மாது’ அவன் மனம் கதறியது.

அவள் அவன் அடிக்கும் பொழுது வலித்ததை விட, இப்பொழுது அவன் மனம் இன்னும் வலித்தது.

“என்ன திமிர் இருந்தா என்னை அடிப்ப? நான் யாருனு தெரியுமா? என்ன பண்ணுவேன்னு தெரியுமா?” அவள் சவால் விட, அவன் அவளை மரத்தோடு சாய்த்து  அவளை நெருங்கினான்.

அவள் தப்பித்து செல்ல எத்தனிக்கையில், “நான் என்ன பண்ணுவேன்னு தெரியுமா?” அவன் எகத்தாளமாக கேட்டான்.

அவள் மீது கோபம் தான். ரௌத்திரம் தான் எகிறி கொண்டிருந்தது. அவன் விழிகள் ரௌத்திரத்தோடு அவள் விழிகளை நெருங்க, அவள் விழிகள் அவன் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருக்க, அவன் கண்களுக்கோ அவள் கண்களில் அன்று தோன்றிய காதலே மின்னியது.

“உஸ்…” என்ற காற்று வீச, அந்த தென்றல் அவனையும் தீண்டி அவளையும் தீண்டி சென்றது.

தென்றல் அவனை அசைத்ததா? இல்லை அவளின் சுவாசம். இல்லை வாசம் அவனை அசைத்ததா அவனுக்கு தெரியவில்லை. அவன் அவளை இன்னும் நெருங்கி நின்றான்.

அவள் விலகி செல்ல வழி இல்லாமல்…

அவன் கைகள் இருப்பக்கமும்…

     அவளுக்கு அரணாய்! அவன் பார்வையில்…

     அவளுக்கு தடைகளாய்! அவள் பார்வையில்…

அவன் அவளை தீண்டவில்லை. மிக மெல்லிய இடைவெளி. இடைவெளி, அவன் கண்களுக்கும் புலப்படவில்லை. அவள் கண்களுக்கும் புலப்படவில்லை.

மெல்லிய இடைவெளியை, அவர்களுக்கு இடையே புகுந்து சென்ற தென்றல் அறுதியிட்டு கூறியது.

அவள் கொழுகொழு கன்னங்கள் அவனுக்கு மீண்டும் அழைப்பையே கொடுத்தது. அவன் உள்ளமோ, அவன் கொடுத்த காதல் பரிசை மறந்து, அவன் கைவிரல் தடங்களை பார்த்தது.

அவன் தொடுகையை விரும்பாமல், அவள் தன் முகத்தை திருப்பிக்கொண்டு முகம் சுழித்தாள். தன் கைகளை அசைத்தால், அவனை தீண்டிவிடுவோமா என்ற தயக்கத்தில், இல்லை கோபத்தில் மீண்டும் அறைந்து விடுவோமோ? என்ற எண்ணத்தில் தன் கைகளை இறுக மூடி நின்றாள் மாதங்கி.

அவள் திரும்ப, அவன் சுவாசக்காற்று அவள் கன்னத்தை தீண்ட, அவள் மூச்சு காற்று அவனுக்கு அவள் கோபத்தை கூறியது.

அவன் அவள் சுவாசத்தை மட்டுமே உணர்ந்தான். அவள் அருகாமையை மட்டுமே ரசித்தான்.

மெலிதாக அவள் கன்னத்தை தடவினான். “சாரி…” அவன் உதடுகள், அவள் பேசியதை, அவள் அறைந்ததை மறந்து மன்னிப்பை யாசித்தது.

அவள் அவனை க்ரோதமாக பார்த்து கொண்டிருந்தாள்.

“கையை எடுறா ராஸ்கல். உன்னை பத்தி பலர் சொல்லும் பொழுது கூட நான் நம்பலை. உன் யோக்கியதை என்னனு நான் பார்த்துட்டேன்.” விலக வழி இல்லாமல், அவனை விலக்க வழி தெரியாமல் அவள் உறுமினாள்.

“நான் உன்னை விரும்பறேன் மாதங்கி. உன் படிப்பு முடியும் வரை நான் உன்னை தொந்திரவு பண்ண மாட்டேன். அப்புறமும், நான் உன் கிட்ட காதலை யாசிக்க மாட்டேன். நேரா உன் வீட்டில் வந்து கல்யாணம் தான் பேசுவேன்.” அவன் நிதானமாக கூறினான் அவன் பிடியில் உறுதியாக.

“….” மாதங்கி முகத்தில் புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.

“எதுக்கு சிரிக்குற?” அவன் அவள் புன்னகையில் சந்தேகமாக  கேட்க, “நீ கல்யாணம் பேச வா. நான் அப்ப உன்னை வேண்டாமுன்னு சொல்லுவேன்.” அவள் கூற, அவன் கோபம் விர்ரென்று ஏறியது.

“உனக்கு பொறுமையா சொன்னால் புரியாதா? உன்னை கடத்திட்டு போய் கல்யாணம் செய்ய வச்சிருவ போல?” அவன் அவளை குறும்நகையோடு சற்று விலகி நின்று கேட்க, “சபாஷ்…” என்று கைகளை தட்டினாள் மாதங்கி.

“உன் அப்பன் புத்தி தானே உனக்கும் இருக்கும். அன்னைக்கு கடத்தல்  விஷயம் பத்தி சொல்லி, அதில்  உனக்கும் பங்கு இருக்குனு முகுந்தன் சொன்னப்ப நான் நம்பலை. இப்ப நீ உன் அரசியல் புத்தியை காட்டிட?” அவள் குரலில் ஏளனம் மிதமிஞ்சி இருந்தது.

“ஏய்!” அவன் விரலை உயர்த்த, “என்ன குதிக்குற? இது தான் நீ. இது தெரியாம, பிருந்தாவும் அண்ணன், அண்ணன்னு  உன் பின்னாடி இத்தனை வருஷம் இழையுறா? என் பின்னாடி சுத்த தெரிஞ்ச உனக்கு, அவ மனசை புரிஞ்சிக்க தெரியலை. அதுக்கெல்லாம் ஒரு மனசு வேணும். இது தான் உன்  யோக்கியதை.” அவள் சீறினாள்.

“என்ன டீ? அண்ணனும், தங்கச்சியும் என் யோக்கியதை பத்தி பேசறீங்க? நாங்க காசு போட்ட, வாலாட்டிட்டு வரது தான் உங்க அண்ணன் பொழப்பு.” அவன் கூற, “டேய்…” அவள் அவன் சட்டையை கொத்தாக பிடித்திருந்தாள்.

“உங்க அண்ணனை சொன்னா வலிகுத்துல? எங்க அப்பாவை நீங்க சொல்லறீங்க?” அவன் ஏளனமாக சிரித்தான்.

“ஐ லவ் யு பேப்ஸ். வருங்கால புருஷன் கிட்ட இப்படி எல்லாம் சண்டை போடாத” அவன் காதலை சொல்ல, “என்னை பத்தி தெரியாமல் நீ பேசிக்கிட்டே இருக்க” அவள் கடுப்பாக கூறினாள்.

“இல்லை பேப்ஸ்… தெரியும். நீ எகிறுவ. என்னை எதிர்த்து நிற்ப. ஐ லைக் இட்.” என்று அவன் கண்களில் காதல் ரசம் வழிய கூற, “எங்க அண்ணன் கிட்ட சொன்னேன்னு வை.” என்று அவள் தன் விரல்களை உயர்த்தி மிரட்டினாள்.

“அந்த கஷ்டத்தை உனக்கு கொடுக்க வேண்டாமுன்னு தான் நானே சொல்லிட்டேன்.” அவன் புன்னகைத்தான்.

மாதங்கி சலிப்பாக உணர்ந்தாள். “மாது…” அவன் குரலில் குழைவு மிதமிஞ்சி இருந்தது.

“இப்ப நடந்ததை மறந்திரு. என் காதலை மட்டும் மனசில் வச்சுக்கோ” அவன் குரல் இப்பொழுது அவளிடம் காதலை தான் யாசித்தது.

“கட்டாயத்தில் வராது காதல்.” அவள் அழுத்தமாக கூறிவிட்டு விலகி செல்ல, “என் மேல வரும்” அவன் அவளை வழிமறித்து நின்றான்.

“உன்னை மாதிரி திமிர் பிடித்தவன் மேல் வரவே வராது.” அவள் கூற, “உன்னை மாதிரி திமிர் பிடித்தவளுக்கு நிச்சயம் வரும்.” கூறுகையில், அவன் கண்களுக்கு அவளின் காதல் பார்வை மின்னலாக வந்து போனது.

“இப்படியே உளறிக்கிட்டே இரு.” அவள் விலகி செல்ல, அவன் அவளை வேகமாக இழுக்க, அவன் மீது சாய்ந்து நின்றாள் அவள்.

அவள் விலக எத்தனிக்கையில், அவன் கைகள் அவள் இடையை சுற்றி வளைத்தது.

அதில், காதல் , உரிமை அதை தாண்டிய அழுத்தம் இருந்தது. அவள் முகம் சுழிக்க, அவன் அவளை கன்னத்தை மென்மையாக நிமிண்டினான்.

அவன் அவளை நெருங்க, அவள் இமைகள் படபடத்தது. அவன் அவளை ரசித்து பார்த்தான். அவன் கண்கள் அவள் விழிகளிடம் காதல் மொழி பேசியது. ஆனால், அவள் விழிகள் அதை கவனிக்க விருப்பமில்லாமல், வேறு பக்கம் திரும்பி கொண்டது.

 “என் காதல் உண்மைனா நீயே என்னை தேடி வருவ? நம்ம கல்யாணம் நடக்கும்” அவன் அவளை ரசித்தபடி கூறினான்.

“சவாலா?” அந்த நெருக்கத்திலும், அவள் முகத்தில் சிறிதும் பயமில்லை.

“சவால்ன்னு வச்சுக்கோயேன். காதலியிடம், காதலன் விடும் சவால். நம்ம காலத்திற்கும், இந்த சவால் காதலை பேசும்” அவன் காதல் மொழி பேசினான்.

“நான் விடுற சவாலை கேளுங்க சீனியர்.” என்று அவள் நக்கலாக ஆரம்பிக்க, ‘நம்ம காதலிலும், நான் தான் உனக்கு சீனியர்’  அவன் கைகள் அவள் இடைக்கு அழுத்தம் கொடுத்து, அவன் உரிமையை காதலை பறைசாற்றிக்கொண்டே, அவன் மனம் அவளின் காதல் அளவை கணக்கிட்டு கொண்டது.

“எனக்குன்னு ஒரு சுயகெளரவம் இருக்கு. அது உண்மைனா நீ நினைக்குறது ஒரு நாளும் நடக்காது. உன் திமிருக்கு, உனக்கு நான் மரணவலியை காட்டுவேன் ” அவன் கைவளைவுக்குள், அவன் கொடுத்த அழுத்தத்தின் வலியை தாங்கி கொண்டு சவால்விட்டாள் மாதங்கி.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!