Birunthavanam-11

Birunthaavanam-b1909820

பிருந்தாவனம் – 11

       மாதங்கி விடுத்த சவாலில், அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. “உன் சுயகெளரவம் எனக்கு முக்கியம் பேப்ஸ். காதலியின் சுயகெளரவத்தை காக்க வேண்டியது காதலனின் கடமை இல்லையா? மரண வலியை தர்றது என் மாதுவா இருந்தால், அது எனக்கு மது தான்” அவன் இருபொருள் பட பேசி கண்சிமிட்டினான்.

“இப்படி உளறாம, என்னை விட்டால் ரொம்ப நல்லாருக்கும்” அவள் குரல் கடுகடுக்க, அவளை விடுவித்தான் அவள் காதலன்.

அவள் விலகி  செல்ல, அவள் கைகளை பிடித்து நிறுத்தினான்.

“நீ என்ன சொன்னாலும் நான் கேட்பேன் மாதங்கி. நான் உன்னை வருத்தப்படுத்த மாட்டேன். ஆனால், அது ஒரு காதலானாய் மட்டும் தான். காலத்தின் போக்கில் ஒரு கணவனாக மட்டும் தான். நான் நினைச்சது நினைச்சது தான். உன்னை யாருக்காகவும் நான் விட்டுக்கொடுக்க மாட்டேன். அது உனக்காகவே இருந்தாலும் சரி!”  அவன் குரலில் இருந்த உறுதி, அவளை அசைத்து பார்த்தது.

‘இப்பொழுது பேசி பயனில்லை.’ மடமடவென்று அறைக்குள் சென்று படுத்து கொண்டாள் மாதங்கி.

அவன் பார்வையிலிருந்து அவள் மறைந்ததும், அவன் மனதின் சலசலப்பு மட்டுபட்டிருந்தது. அவன் அறிவு, அவனை இப்பொழுது குற்றவாளி கூண்டில் நிறுத்தியது.

‘கிருஷ் என்ன பண்ணி வச்சிருக்க?’ அவன் மனம் இப்பொழுது பதில் கூற முடியாமல் தவித்தது.

‘மாதங்கி அண்ணன் கிட்ட நீ அப்படி சொன்னது முதல் தப்பு’ அவன் அறிவு கூற, மனம் இப்பொழுது ஆமோதிப்பாக தலை அசைத்து கொண்டது.

‘இப்படி தான் காதல் சொல்லுவியா? காதல் சொல்லும் பொழுது ரோஜா பூ கொடுக்கலாம்? ஏதாவது கிஃபிட் கொடுக்கலாம்? நீ என்ன கொடுத்த?’ அவன் அறிவு அவனை எதிர்பக்கம் நிறுத்தி கேட்க, தான் பதித்த இதழ்களை தடவி சிந்தனையில் ஆழ்ந்தான்.

அவன் மனமோ, அவள் கொழு கொழு கன்னத்தை குற்றம் சாட்டியது.

‘பெரிய தப்பு பண்ணிட்டேனோ?’ அவன் தன் நெஞ்சை தடவி யோசித்தான்.

‘மாதங்கி தோப்புக்கரணம் போடுன்னா போட போறேன். இதுல வில்லன் மாதிரி எனக்கு சவால் எல்லாம் ஒரு கேடா? எனக்கெல்லாம் ரெமோ தான் செட் ஆகும். நான் ஏன் அந்நியன் மாதிரி நடந்துக்கிட்டேன்?’ தன்னை தானே நொந்து கொண்டான் கிருஷ்.

‘அவளை பார்த்தால், காதலும் அருவி மாதிரி வருது. அவள் நான் சொல்றதை கேட்கலைன்னா கோபமும் பொத்துக்கிட்டு வருது.’ தன் கால்களை கோபத்தில் தரையில் எட்டி மிதித்தான்.

‘சீனியர்…’ அவள் அழைப்பு அவன் செவிகளில் விழ, ‘இனி அப்படி கூப்பிடவே மாட்டாளோ?’ அவன் மனம் பரிதவித்தது.

‘நான் காதலிலும் அவளுக்கு சீனியர்ன்னு எப்படி புரியவைப்பேன்?’ அவனை மீறி அவன் கண்கள் காதலில் பளபளக்க, தன் கண்களை மூடி கொண்டான். மூடிய விழிகளிலும், அவன் இதயத்தை நிறைத்து கொண்டு மாதங்கியே சர்வமுமாய் நின்றாள்.

அதே நேரம் மாதங்கியில் கண்களில் கண்ணீர்.

‘நான் ஏன் அழுகிறேன்?’  தன் கண்ணீரை உள்ளிழுத்து கொண்டாள்.

‘சீனியர் எனக்கு ஒரு நல்ல நண்பன் இல்லையா? சீனியர் எப்படி என்னை பற்றி இப்படி சொல்லலாம்? அதுவும் என் கன்னத்தில்… ‘ அவள் தன் கன்னத்தை தடவி கொண்டாள்.

‘எல்லாரும் கிருஷ் பத்தி என்னவெல்லாம் சொல்லிருக்காங்க? நான் நம்பினது இல்லையே. இன்னைக்கு மட்டும் ஏன் இப்படி சீனியர்? நான் தான் அதிகம் இடம் கொடுத்துவிட்டேனோ?’ அவள் மனம் ஓலமிட்டது.

‘நீங்க சொல்றது பொய். என் சீனியர் அப்படி எல்லாம் என்னை பத்தி சொல்லிருக்கமாட்டாங்கன்னு, அவங்க முகத்தில் கரியை பூசணும்னு உங்களை தேடி வந்தேன். நீங்க…’ மேலும் சிந்திக்க முடியாமல், அவள் கண்கள் மீண்டும் கலங்கியது.

“சாப்பிட போலாம் வாங்க.” தோழி ஒருத்தி குரல் கொடுக்க, மாதங்கி தன் முகத்தை தலையணையில், தேய்த்து சரி செய்து கொண்டாள்.

பிருந்தா சற்று தெளிவாக எழுந்து வந்தாள். “மாதங்கி போலாமா?” அவள் கேட்க, மாதங்கி தன் தோழியின் முகம் பார்ப்பதை தவிர்த்து, “முகம் கழுவிட்டு வரேன்” விறுவிறுவென்று முகம் கழுவ ஆரம்பித்தாள்.

மாதங்கி வெளியே வந்ததும், “மாதங்கி உனக்கும் உடம்பு சரி இல்லையா? ஏன் உன் முகம் ஒரு மாதிரி இருக்கு?” பிருந்தா தான் தோழி என்று நிருபித்தாள்.

“ஏன் ட்ராவல் பண்ணா உனக்கு மட்டும் தான் டயர்டா இருக்குமா? எங்க உடம்பை மட்டும் என்ன இரும்பிலா பண்ணிருக்காங்க? எனக்கும் டையார்ட்” சரளாமாக பொய்யை அள்ளி வீசினாள் மாதங்கி.

“அது சரி…” இருவரும் உணவகத்தில் உணவு வாங்கி கொண்டு அமர்ந்தனர்.

இவர்களை சுற்றி பெரிய கூட்டம் இருந்தாலும், பிருந்தா பெரிதாக கூட்டத்தை விரும்புவதில்லை. மாதங்கியோடு மட்டும் தான் நெருங்கி பழகுவாள். மாதங்கியின் கட்டாயத்தில் தான் இவர்கள் கூட்டத்தோடு அமர்வது.

இன்று மாதங்கி எதுவும் கூறாததால், இருவரும் தனித்தே வந்து அமர்ந்தனர்.

கிருஷ், ‘பொறுமை… பொறுமை…’ என்று தன் மனதை அடக்கி வைத்திருந்தான்.

ஆனால், அவன் கண்கள் மாதங்கியை கண்டதும் அவன் மனம் துள்ளாட்டம் போட்டது. அவன் கால்கள் தன்னை போல் அவள் பக்கம் செல்ல எத்தனிக்க, கால்களை நிறுத்தி, மனதை கட்டுப்படுத்தி சற்று தள்ளி அமர்ந்து கொண்டான் தன் நண்பர்கள் குழாமோடு. அவன் கண்கள் பிருந்தாவின் நலனை மனதில் குறித்து கொண்டது. மாதங்கியின் மனதை அளவிட ஆரம்பித்தது.

மாதங்கி மறந்தும் கிருஷ் இருக்கும் பக்கம் திரும்பவில்லை. அவள் முன் இருந்த ஆப்பத்தில் தன் முழு கவனத்தை செலுத்தினாள்.

“ஹலோ கிருஷ். என்னை ஞாபகம் இருக்கா?” அவன் முன் வந்தமர்ந்தாள் சேலை கட்டிய ஒரு இளம்பெண். கிருஷை விட சற்று உயரம் கம்மி.  சாமுந்திரிகா லட்சணம் பொருந்திய அழகு. பல மாணவர்களின் கண்கள் அவள் பக்கம். அவள் கண்களோ கிருஷின் பக்கம்.

குரல் வந்த திசையில் அவளை பார்த்தான்.”இல்லைங்க சாரி.” அவன் குரல் பேச்சில் ஓட்டுதல் இன்மையை காட்டியது.

“நான் சந்தியா” அவள் கைகளை குலுக்கினாள். “உங்க அப்பா ஃபிரெண்டோட பொண்ணு. நான் ஜர்னலிஸ்ட், உங்களையும் உங்க அப்பாவையும் இன்டெர்வியூ எடுத்தேன்னே?” அவள் கண்களை விரித்தாள்.

நெற்றியை சுருக்கி யோசித்தான் கிருஷ். அவனுக்கு எதுவும் ஞாபகம் இல்லை. அவன் இருக்கும் மனநிலையில் அவன் மேலும் சிந்திக்க விரும்பவில்லை.

‘இந்த மாதிரி நான் எத்தனை பேருக்கு இன்டெர்வியூ கொடுத்திருக்கேன். இதுல நான், எப்படி இவளை ஞாபகம் வைத்திருப்பேன்’ அவன் மனம் சலிப்பு தட்டியது. 

“சாரி எனக்கு ஞாபகம் இல்லை” அவன் பேச்சை முடித்து கொள்ளவே விரும்பினான். “என்ன கால்லேஜ் டூரா? உங்க அப்பா நீங்க கம்பெனியை  பார்க்கறீங்கன்னு சொன்னாங்க? நான் யூ.ஜி முடிச்சிட்டு ஜாப்க்கு வந்துட்டேன்” என்று சந்தியா தான் வளவளத்து கொண்டிருந்தாள் கிருஷிடம்.

 தந்தைக்கு நெருக்கமானவரின் குடும்பம் என்பதால் கிருஷ் தன் பொறுமையை இழுத்து பிடித்து கொண்டிருந்தான்.

கிருஷின் கண்களோ மாதங்கியை சுற்றி வளைத்து கொண்டிருந்தது. சந்தியாவின் முகத்திலோ, ஓர் ஏளன புன்னகை வந்தமர்ந்து கொண்டு அவர்களை கணக்கிட்டு கொண்டது.

சந்தியாவை கிருஷ் மனதில் நிறுத்திக் கொள்ளவில்லை. அவளை கண்டுக்கொள்ளவும் அவன் மனம் விரும்பவில்லை. ‘நிறுத்தி கொண்டிருக்க வேண்டுமோ? கண்டுகொண்டிருக்க வேண்டுமோ?’ என்ற எண்ணம் காலம் தாழ்ந்து அவன் மனதில் வரப்போவது அறியாமல்!

“யாரிந்த பொண்ணு? நம்ம காலேஜ் இல்லையே?” பிருந்தா மாதங்கியிடம் கிருஷை பார்த்தபடி கேட்க, “யாரு?” என்று கேட்டாள் மாதங்கி.

“உன் சீனியர் கூட பேசிட்டு இருக்கிற பொண்ணு?” பிருந்தா கேட்க, “யார் யார் கிட்ட பேசினா நமக்கென?” தோள்களை குலுக்கினாள் மாதங்கி.

“உனக்கும் சீனியர்க்கும் என்ன பிரச்சனை?” பிருந்தா நேரடியாக கேட்டாள்.

“எங்களுக்குள்ள என்ன சம்பந்தம் பிரச்சனை வர்ற அளவுக்கு?” மாதங்கி நழுவினாள்.

“உன் சீனியர் வந்ததில் இருந்து உன்னையே தான் பார்த்துட்டு இருக்கிற மாதிரி இருக்கு. நீ மறந்தும் அங்க திரும்பலை. எதுவும் பிரச்சனையா?” பிருந்தா தன் கண்களை சுருக்கினாள்.

“உங்க அண்ணனை நான் அடிச்சிட்டேன்” தன் தவறை முதலில் சொன்னாள் மாதங்கி.

“ஓ…” பிருந்தாவின் முகத்தில் அதிர்ச்சி. “ஏன்னு கேட்க மாட்டியா?” என்று மாதங்கி பிருந்தாவிடம் கேட்க, “காரணம் இல்லாம அடிச்சிருக்க மாட்ட” தன் தோழியின் பக்கமே பேசினாள் பிருந்தா.

“உங்க அண்ணன் என் கிட்ட லவ் ப்ரொபோஸ் பண்ணார்.” மாதங்கி கடுகடுத்தாள்.

கிருஷ்க்கு எதிரே, சந்தியா அமர்ந்து பேசி கொண்டிருந்தாள். கிருஷின் கவனமோ மாதங்கியிடமும் பிருந்தாவிடமும் இருந்தது.

“லவ் ப்ரொபோஸ் பண்ணதுக்கு அடிச்சியா?” மெதுவாக கேட்டாள் பிருந்தா.

“எப்படி ப்ரொபோஸ் பண்ணார் தெரியுமா?” என்று மாதங்கி தன் கண்களை விரிக்க, “ரோஜா பூ கொடுத்து, சாக்லேட் கொடுத்து?” பிருந்தா யோசனையாக கேட்க, “அதெல்லேம் உன் அண்ணனுக்கு ஓல்ட் ஸ்டைல் அவர் கிஸ் பண்ணி ப்ரொபோஸ் பண்ணினார்” மாதங்கி சிடுசிடுத்தாள்.

“அப்ப, அடி வாங்க வேண்டியது தான்” பிருந்தா பரிதாபமாக தலை அசைத்தாள்.

“அது தான் பளார்ன்னு ஒன்னு கொடுத்தேன்” மாதங்கி கோபமாக கூற, “அவனும் வாங்கிக்கிட்டானா?” பிருந்தா கேட்க, மாதங்கி ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

‘எப்படியும் கல்யாணத்துக்கு அப்புறம் வாங்கணும்முன்னு இப்பவே பழகிக்கிட்டான் போல’ பிருந்தாவின் மனம் எண்ணிக்கொள்ள, மாதங்கியை மனதில் கொண்டு பிருந்தா எதுவும் பேசவில்லை.

“அவனும் என்னை அடித்தான்” மாதங்கி இப்பொழுது சொல்ல, ‘ஜாடிக்கு ஏத்த மூடி’ மீண்டும் பிருந்தாவிடம் மௌனம்.

மாதங்கி எதுவும் பேசாமல் உண்ண, “நீ என்ன சொன்ன?” என்று பிருந்தா கேட்க, “செருப்பு பிஞ்சிருமுன்னு சொன்னேன்.” தன் முன் இருந்த ஆப்பத்தை ருசித்தபடி கூறினாள்.

பிருந்தா எதுவும் பேசவில்லை. “இன்னும் கூட கோபத்தில் தாறுமாறா திட்டினேன்” மாதங்கி கூற, “என்ன கோபம்?” பிருந்தா தன் தோழியின் முகத்தை தீவிரமாக பார்த்தாள்.

சந்தியா சில நிமிடங்கள் கிருஷிடம் பேசிவிட்டு கிளம்ப, ‘ஹப்பா, சந்தியா கிளம்பினால் போதும்’ என்ற நிறைவோடு அவளுக்கு விடை கொடுத்தான் கிருஷ்.

கிருஷ் சாப்பிட்டு கொண்டிருந்தாலும், அவன் கவனம் முழுதும் மாதங்கி பிருந்தவிடமே இருந்தது.

நடந்ததை முழுதாக பிருந்தாவிடம் கூறினாள் மாதங்கி. தன்னை பற்றிய பேச்சு தான் என்று கண்டுகொண்டான் கிருஷ்.

முழுவதையும் கேட்ட பிருந்தா, “உன் சீனியர் என்ன சொன்னால் என்ன? நீ எதுக்கு இவ்வளவு கோப பட்ட? கொஞ்சம் பொறுமையா பேசிருக்கலாமே?” பிருந்தா கேள்வியாக நிறுத்தினாள்.

“அது சரி, நீ உன் அண்ணனுக்கு தான் சப்போர்ட் பண்ணுவ? நான் யாரோ தானே?” மாதங்கியின் குரல் உடைய எத்தனித்தது.

மாதங்கியின் இடது கையை, தன் இடது கைக்குள் வைத்து அழுத்தினாள் பிருந்தா. “எனக்கு என் ஃபிரென்ட் தான் முக்கியம். எனக்கு உன் சீனியர் யாரோ தான்? நான் என்னைக்கும் உன் பக்கம் தான் இருப்பேன்” என்று பிருந்தா கூற,   மாதங்கியின் முகத்தில் ஒரு மெல்லிய புன்னகை.

“ஆனால், எனக்கு ஒரு சந்தேகம். கேட்கலாமா?” பிருந்தா கேட்க, ‘கேள்…’ என்பது போல் கண்ணசைத்தால் மாதங்கி.

“உன் சீனியர் சொன்னது தப்பா இருந்தாலும், நீ இதை இல்லைன்னு சாதாரணமா மறுத்திருக்கலாம். எதுக்கு இவ்வளவு எமோஷனல் ஆனா? ஒருவேளை உன் மனதில் உள்ள உண்மையை சீனியர் கண்டுபிடிச்சிட்டதாலா?” என்று பிருந்தா கூர்மையாக கேட்க, “நீ கேட்கறது புரியலை” என்று மாதங்கி தன் தோழியை பார்த்தாள்.

“நீ சீனியரை லவ் பண்றியா?” பிருந்தா கேட்க, “பிருந்தா, நீயும் அப்படி நினைக்குறியா?” இப்பொழுது மாதங்கியின் குரல் உடைந்திருந்தது.

“என்னை பத்தி எப்படி சீனியர் அப்படி சொல்லலாம்? அதுவும் என் அண்ணன் கிட்ட? அண்ணன் என்னை பத்தி என்ன நினைச்சிருப்பான்? நமக்கு லவ் பண்ற வயசா? நான் ஜாலியா இருப்பேன். ஆனால், படிப்பை தவிர வேற ஏதாவது யோசிச்சிருப்பேனா? நாம, இதுவரை இப்படி எல்லாம் பேசிருக்கோமா?” மாதங்கி படபடத்தாள்.

அவள் படபடப்பில் உண்மை இருக்க, பிருந்தா தன் தோழியை பரிதாபமாக பார்த்தாள்.

“இந்த விஷயம் எங்க அம்மாவுக்கு தெரிஞ்சா என் தோலை உரிச்சு உப்பு கண்டம் போட்டிருவாங்க. நான் மேல படிக்கணும்னு நினைக்குறேன். இதெல்லாம் எனக்கு தேவையா? சீனியர் அவர் பெயரை மட்டும் சொல்லாம, என் பெயரையும் சேர்த்து சொல்லி வச்சா என்ன அர்த்தம்?” மாதங்கி கடுப்பாக கேட்டாள்.

“சரி விடு, அரவிந்த் அண்ணா ஒன்னும் நினைக்க மாட்டாங்க. நினைச்சிருந்தா, இந்நேரம் உங்கிட்ட கேட்டிருப்பாங்க இல்லை?” பிருந்தா தன் தோழியை சமாதானம் செய்தாள்.

“என் காதுக்கு எட்டின மாதிரி எங்க வீட்டில் மத்தவங்க காதுக்கு இந்த விஷயம் எட்டுச்சு, நான் அவ்வுளவு தான். நான் மேல படிக்கணும்னு ஆசை படுறேன். எனக்குன்னு பல கனவு இருக்கு. எல்லாம் நாசமா போய்டும்” மாதங்கி சலிப்பாக கூறினாள்.

“சரி விடு… நடக்கும் பொழுது பார்ப்போம்” பிருந்தா ஆறுதல் கூற, தன் மனதில் உள்ளதை தோழியிடம் கொட்டி முடிக்கவும், “நான் இன்னைக்கு கொஞ்சம் ஓவர் ரியாக்ட் பண்ணிட்டேனோ?” என்று மாதங்கி பழைய மாதங்கியாக குறும்பு மின்ன நாக்கை கடித்தாள்.

“உன் சீனியர் புரிஞ்சிப்பார்” என்று பிருந்தா கண்சிமிட்ட, “உன் அண்ணனை நீ விட்டு கொடுப்பியா?” மாதங்கி இப்பொழுது கண்சிமிட்டி சிரித்தாள்.

“இனி இந்த விஷயத்தில் பொறுமையா போ மாதங்கி. எதிர்த்து நின்னு விஷயத்தை பெருசு பண்றதை விட, தழைந்து போய் விஷயத்தை முடிக்கறது நல்லது” தோழியாக, தன் விளையாட்டை விடுத்து, தீவிரமாக அறிவுரை கூறினாள் பிருந்தா.

தன் கோபம் குறைந்ததால், தன் தோழியின் கூற்றுக்கு ஆமோதிப்பாக தலை அசைத்தாள் மாதங்கி

இருவரும் உணவை முடித்து கொண்டு, அவர்கள் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி செல்ல, அவர்களுக்காக காத்திருந்தான் கிருஷ்.

“நான் உன்கிட்ட பேசணும்” அவன் வழி மறித்து கூற, “உங்க கிட்ட பேச எனக்கு ஒண்ணுமில்லை…” மாதங்கி விலக முயன்றாள்.

“நான் உன்கிட்ட பேசணும்” அவன் வழியை மறித்தபடியே நின்றான்.

சந்தியாவின் கண்கள், இவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு எதிர்பக்கமாக இருந்து இவர்களை கண்காணித்து கொண்டு இருந்தது.

“பேசிட்டு வா மாதங்கி” நான் உனக்காக இங்க தான் வெயிட் பண்றேன்” பிருந்தா விலகி சிறிய இடைவெளி விட்டு நின்று இயற்கையை ரசிக்க ஆரம்பித்தாள்.

“சாரி” அவன் குரல் இறங்கியே வெளிவந்தது. மாதங்கி தரையை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

“மாதங்கி ப்ளீஸ்…” அவன் குரல் இன்னும் இறைஞ்ச, “நீங்க இப்படி பேசுறது எனக்கு பிடிக்கலை” அவள் அவன் முகம் பார்த்து கூறினாள்.

‘நான் செய்வது பிடிக்கலைன்னு சொல்ற தைரியம், அன்று முதல் இன்று வரை இவளுக்கு மட்டும் தான்’ அவன் கண்கள் அவளை ஆசையாக தழுவ ஆரம்பித்தது.

“பேசணும்னு சொன்னீங்க” அவள் அவன் பார்வைக்கு தடை விதிக்க, “கடத்தல் விஷயத்திற்கும் எனக்கும்…” அவன் ஆரம்பிக்க, ” ஒரு சம்பந்தமும் கிடையாது” அவள் முடிக்க, அவன் முகத்தில் புன்னகை.

“எனக்கு உங்களை தெரியும். நான் உங்களை மூணு வருஷமா பார்க்குறேன். அண்ணன் சொன்னாலும், முகுந்தன் சொன்னாலும் நான் அவங்களை நம்ப மாட்டேன்.” அவள் தன்மையாக கூறினாள்.

“அப்புறம் ஏன் மாதங்கி அப்ப அப்படி சொன்ன?” அவன் வருத்தத்தோடு கேட்க, “அது கோபத்தில்…. நீங்க மட்டும் என்னவெல்லாம் பேசினீங்க?” அவள் கண்களை உருட்ட, “சாரி…” அவன் குரல் மீண்டும் மன்னிப்பை யாசித்தது.

“நீங்க பேசினது, நீங்க நடந்துக்கிட்டது எதுவும் எனக்கு பிடிக்கலை” அவள் கண்கள் கலங்க எத்தனிக்க, அவன் கைகள் தன்னை போல் அவள் பக்கம் நீண்டது.

‘இந்த உரிமையை உனக்கு யார் கொடுத்தது?’ என்று அவள் கண்கள் ஒரு நொடி அவனை பார்த்த பார்வையில், அவன் விரல்கள் அவள் விழிநீரை தொடாமல் அவள் சுவாசத்தை உணர்ந்தபடி அங்கே நின்று கொண்டாலும், அவள் அசைவில் அவள் விழிநீர் அவன் விரலை தட்டி சென்றது.

     அவள் விழி நீர் தெறித்த அதிர்ச்சியில் அவன் விரலும், அவள் வலி அவனை தாக்க அந்த வலியில் அவன் மனமும் நொடிப்பொழுது ஸ்தம்பித்து நின்றது.

“நான் இனி அப்படி நடந்துக்கவே மாட்டேன்.” அவன் அவள் முகம் காட்டும் வேதனை தாளாமல் வாக்குறுதியை அள்ளி வீசினான். அரசியல்வாதியின் மகன் அல்லவா?

“இன்னைக்கு நடந்ததை மறந்திரு. நாம நிறைய நேரம் பேசிக்கலைனாலும், நமக்குள் ஒரு நட்பு உண்டு. நாம் பழைய மாதிரி ஃபிரெண்ட்ஸ்” அவன் கைகளை நீட்ட, மறுப்பாக தலை அசைத்தாள் மாதங்கி.

அவன் கைகள் அவள் தீண்டலை ஆர்வமாக எதிர்பார்த்து நீண்டு தான் இருந்தது.

“நட்புங்கிற பெயரில் உங்களையும், என்னையும் ஏமாத்திக்க நான் விரும்பலை. உங்க மனசில் என் மேல ஏற்பட்ட சலனம் இல்லைனு மனசை தொட்டு சொல்லுங்க.” என்று நிதானமாக கேட்டாள் மாதங்கி.

அவன் கைகள் அவன் மனசை தொட வலுவில்லாமல், தானாக கீழே இறங்கியது.

இருவரும் இப்பொழுது உணர்ச்சிவசப் படவில்லை. நிதானமாக இருந்தனர்.  அவளும் தெளிவாக பேசினாள். அவனும் நிதானமாக கேட்டான்.

“நான் காதலிக்க மாட்டேன். என் குடும்பத்துக்கு காதல் சரிப்பட்டு வராது. நான் படிக்கணும். என்னை நம்பி என் வீட்டில் என்னை படிக்க அனுப்பிருக்காங்க. எனக்கு இந்த காதல் வேண்டாம். எனக்கு வாழ்க்கையில் படிப்பு, வேலைன்னு ஆயிரம் கனவுகள்  இருக்கு. இந்த காதல்ங்கிற பேச்சே என் கனவுக்கு முற்று புள்ளி வச்சிடும். ” அவள் குரலில் உறுதி இருந்தது.

பிருந்தா கூறிய அறிவுரை நினைவு வர, பிரச்சனையை சரி செய்யும் விதத்தை கையில் எடுத்தாள் மாதங்கி.

“நான் காலையில் ஏதோ உணர்ச்சிவசப்பட்டு கோபப்பட்டுட்டேன். நீங்க அத்தனை சாரி கேட்டுடீங்க. நான் இப்ப உங்க கிட்ட மன்னிப்பு கேட்குறேன். எனக்கு காதல் வேண்டாம். உங்க கூட நட்பும் வேண்டாம். என்னை விட்டருங்க” அவள் கையெடுத்து கும்பிட்டாள்.

அவள் செய்கையில் அவன் மனம் சுக்குநூறாக உடைந்து போனது. அவளுடைய எந்த கம்பீரம் அவனை ஈர்த்தததோ, அவளுடைய எந்த குறும்பு அவனை மயக்கியதோ, அவளுடைய எந்த தைரியம் அவனை அவள் பக்கம் சாய்த்ததோ, அனைத்தையும் இழந்து அவன் முன் இறங்கி நின்றாள் மாதங்கி.

அவளை அனைத்தையும் இழக்க செய்த அவன் காதல் இப்பொழுது அவளை மட்டுமின்றி அவனையும் சுட்டது.

“நான் போகட்டுமா?” அவனிடமிருந்து விலக, அவனிடமே கேள்வி கேட்டு நின்றாள் அவள். அவள் முகத்தில் இருந்த உறுதி, அழுத்தம் அவனை ஏதோ செய்தது

‘என் தோளில் சாய்ந்து கொள். நான் அனைத்தையும் சரி செய்வேன்.’ என்று கூற அவன் விரும்ப, ‘உன் தோளே எனக்கு பாறாங்கல். அதில் முட்டிக்கொண்டு நான் சாகவா?’ என்று கேட்பது போல் அவள் நிற்க, வேறுவழியின்றி அவன் அவள் கேள்விக்கு தலை அசைத்தான்.

‘காலம் அவள் மனதில் காதலை விதைக்கும். லவ் அண்ட் லவ் ஒன்லி (Love  & love only)’ என்ற எண்ணத்தோடு அவன் அவளை விலகி செல்ல அனுமதிப்பவன் போல் தலை அசைத்தான்.

‘காலம் அவன் மனதை மாற்றி விடும். தர் இஸ் லவ் தர் இஸ் பெயின் (There is love there is pain)’ என்ற எண்ணத்தோடு விலகி செல்லவே அவள் விரும்பினாள்.

காலம்? உணர்ச்சிவசப்பட்டு கோபமாக என்றாலும்  அவர்கள் பேசிய வார்த்தைகளும் அவர்கள் விட்டு கொண்ட சவாலும் அவர்களை காலத்திற்கும் துரத்தும் என்று அவர்கள் அப்பொழுது அறியவில்லை!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

அன்பான வாசகர்களே,

    என்னுள் ஒரு கேள்வி. ஒருவன் நல்லவனாகவே இருக்கட்டும். அவன் அவளுக்கு தகுதியானவனாகவே இருக்கட்டும். அவன் அவள் மேல் கொண்ட காதலும் உண்மையாகவே இருக்கட்டும்.  

   இதற்காகவெல்லாம், அவள் அவனை விரும்பி விட வேண்டுமா? தேடி வந்து காதலை சொல்லும் பொழுது ஒரு பெண் அதை புறக்கணித்தால், அவள் திமிர் பிடித்தவளா?

வேண்டும் என்று கேட்கும் உரிமை அவனுக்கு இருக்கும்பொழுது வேண்டாம் என்று சொல்லும் உரிமை அவளுக்கு இல்லையா?

உங்கள் பதிலை எதிர்பார்த்து நான்!

இன்னும் பல கேள்விகளோடும், கேள்விகளுக்கு  பதில் தேடியும் பிருந்தாவனத்தில் வலம் வருவோம்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!