birunthavanam-20

Birunthaavanam-fe6a7253

பிருந்தாவனம் – 20

மணமேடைக்கு அருகே ஒரு நொடி தன் கண்களை மூடி நின்றாள் மாதங்கி.

       அவள் கழுத்தில் விலை உயர்ந்த மாலை அதன் மணத்தை பரப்பிக் கொண்டு அழகாக காட்சி அளித்தது.

      ‘தான் செய்ய போவது சரியா?’ தன்னை தானே கேட்டு கொண்டாள்.

‘தெரியவில்லை…’ அவள் அறிவும் மனமும் ஒரு சேர பதில் அளித்தது.

அவள் கண்களை திறந்து கிருஷை பார்த்தாள். ‘உனக்கு கிருஷை பிடிக்காதா?’ மாதங்கியின் மனம் கேட்க, ‘பிடிக்காதுன்னு சொல்ல முடியாது. ஆனால், பிடிக்குமுன்னு சொல்ல முடியாது.’ அவள் அறிவு விழித்து கொண்டு பதில் சொன்னது.

மாதங்கியின் மனதில் நீதிமன்ற காட்சியே அரங்கேற ஆரம்பித்தது.

‘கிருஷ் செய்தது தவறு.’ அவள் அறிவும் மனமும் ஒரு சேர நம்பியது.

‘கிருஷை இப்பொழுது காட்டி கொடுத்தால்…’ அவள் மனம் சற்று தவியாய் தவித்தது. ‘என் மனதில் வன்மம் இல்லை. என் மனதில் கிருஷ் மீது கோபம் இல்லை. நான் கிருஷை பழிவாங்க இதை செய்யவில்லை. ஆனால், எனக்கு வேறு வழி இல்லை.’ அவள் கண்கள் கலங்கியது.

‘நான் திருமணம் செய்து கொண்டால்? என் படிப்பு…. என் எதிர்காலம்… என் கனவு… சரி இதை ஒதுக்கிவிட்டாலும், இப்படி என்னை திருமணம் செய்து கொண்டவனை நான் என்றாவது ஒரு நாள் விரும்ப முடியுமா? முடியாது… முடியாது…முடியாது…’ அவள் சர்வமும் ஒரு சேர கதறியது.

 

‘சில சமயம், நமக்காக நாம் சுயநலத்தோடு நடந்து கொள்ளத்தான் வேண்டும்.’ கிருஷின் மேல் எழுந்த பரிதாபத்தை மறைத்து கொண்டு, ‘தான் செய்ய போவது சரி.’ என்று தனக்கு தானே கூறிக்கொண்டு, மாலையை கழட்டி, கிருஷிற்கு  முன் வைத்தாள் மாதங்கி.

அவள் அதை அவன் பாதம் அருகே வைக்கையில், அவள் கண்ணீர் அவன் பாதம் தொட்டு சென்றது மன்னிப்பை யோசிப்பது போல்.  அவள் கண்கள் அவனை வலியோடு பார்க்க, அவன் விழிகளோ அவளை ஏமாற்றத்தோடு பார்த்தது.

அவனுக்கு கோபம் தான். அவனுக்கு வருத்தம் தான். அதை எல்லாம் தாண்டி, அவன் காதல் நழுவி செல்ல காரணமான அவள் மீதான ஏமாற்றத்தையே அவன் விழிகள் முதலில் பிரதிபலித்தது.

மொத்த கூட்டமும் அதிர்ச்சியோடு விழிக்க, கிருஷ் அவளை நிதானமாக பார்த்தான்.

மணமேடையின் முன் நடுநாயகமாக நின்று கொண்டு, “எனக்கு இந்த கல்யாணத்தில் விருப்பமில்லை.” அழுத்தம் திருத்தமாக சொன்னாள் மாதங்கி.

செய்வதறியாமல் அனைவரும் திகைத்து நிற்க, அங்கு நிசப்தமே நிலவியது. சில நொடிகளுக்கு நீடித்த மௌனம் மீடியாவிடமிருந்து வந்த கேள்வியில் கலைந்தது.

“ஏன் விருப்பமில்லை?” என்று அவர்கள் கேட்க, “….” மீண்டும் மௌனம்.

“மாதங்கி, மணமேடையில் உட்கார். அறிவில்லை  உனக்கு?” மரகதவல்லி அவளை அடிப்பதற்காக நெருங்க, “அம்மா…” அரவிந்த் தன் தாயின் கைகளை பிடித்து நிறுத்தினான்.

 

“மரகதவல்லி, மீடியா இருக்கு. பொறுமையா இரு.” சக்திபாலன் தன் மகளை பார்த்தபடி தன் மனைவியை அடக்கினார்.

“அதை ஏன் நீங்க முன்னமே சொல்லலை?”  மீடியா அடுத்த கேள்வியை மாதங்கியிடம் தொடுக்க, “எல்லாத்தையும் உங்க கிட்ட சொல்லனுமுன்னு அவசியமில்லை, இது எங்க குடும்ப விஷயம்” மாதங்கி எடுத்தெறிந்து பேசினாள்.

“அது நாங்க இங்க வரவரைக்கும் தான்.” மீடியா இப்பொழுது இவளை நெருக்கியது கேள்விகளால்.

அனைவரும் அங்கு மௌனமாகவே இருந்தனர். மீடியா, மக்கள் கூட்டம் என அனைத்தும் சூழ்ந்திருக்க என்ன செய்வது, என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தனர் இரு குடும்பத்தினரும்.

கிருஷ், தன் கண்களை மூடி அமர்ந்திருந்தான். ‘இவளால் என்ன செய்ய முடியும் என்று நினைத்தது எத்தனை தவறு?’ தன் முட்டாள்தனத்தை நொந்து கொண்டான்.

‘எல்லாரும் பார்க்குறாங்க. இவகிட்ட இப்ப என்ன பேச?’ மாதங்கியின் வீட்டாருக்கு ஒன்றுமே புரியவில்லை.

மாதங்கியின் பெற்றோர், முகுந்தனின் பெற்றோர் அவள் பாட்டி தாத்தா என அனைவரும் அவள் செய்கையில் சர்வமும் ஆடி நின்றனர்.

அரவிந்திற்கும், முகுந்தனுக்கும் கிருஷை பிடிக்காது தான். ஆனால், இதை இவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்களும் ஸ்தம்பித்து நின்றனர்.

சேலை கட்டி அழகு பதுமையாக இருந்த பிருந்தா ஓடி வந்தாள் மாதங்கியை நோக்கி, “மாதங்கி என்ன செய்யுற? மணமேடையில் உட்கார்” தன் தோழியை சமாதானம் செய்ய எத்தனித்தாள்.

 

மாதங்கி மறுப்பாக தலை அசைக்க, “நான் உன் ஃபிரென்ட் இல்லையா? நான் சொல்றதை கூட நீ கேட்க மாட்டியா ?” பிருந்தா அவள் காதை கடிக்க, “நீ கிருஷ்க்கு தங்கை” அழுத்தமாக கூற, பிருந்தா எதுவோ பேச எத்தனிக்க, கிருஷ் மணமேடையிலிருந்து எழுந்து வந்தான். 

கிருஷ் எழுந்ததில் பிருந்தாவின் கவனம் தன் சகோதரனின் பக்கம் திரும்பியது.

வேணுகோபாலன், தன்  அரசியல் வாழ்வும், மகனின் வாழ்க்கையும் எங்கோ சரிவதை உணர ஆரம்பித்தார்.

“இந்த கல்யாணாம் நடக்காது.” என்று கிருஷ் இப்பொழுது தன் மாலையை  கழட்டி கோபமாக எறிந்தபடி கூறினான்.

“ஏன் அவங்க அப்படி சொல்லறாங்க?” மீடியா இப்பொழுது கிருஷிடம் கேட்க, “ஏன்னா இது…” கிருஷ் மாதங்கியை க்ரோதமாக பார்த்து ஏதோ பேச எத்தனிக்க, கிருஷின் தாத்தா கோதண்டராமன் இடைபுகுந்தார்.

கோதண்டராமன்!

பெரிய மனிதர். பெரிய அரசியல்புள்ளி. சூழ்நிலையை தன் கையில் எடுத்து கொண்டார்.

“பொண்ணும் மாப்பிள்ளையும் விரும்பி ஏற்பாடு செய்த கல்யாணம் தான். ஏதோவொரு சின்ன பிரச்சனை. ஆனால், இது குடும்ப பிரச்சனை. இந்த விஷயத்தை நாங்க எங்களுக்குள்ள பேசி முடிக்க விரும்பறோம். மீடியா பத்தி எங்களுக்கு நல்லா தெரியும். நீங்க, பிரைவசி கொடுக்க வேண்டிய இடத்துல கண்ணியம் காத்து ஒததுங்குவீங்கன்னு தெரியும். உங்க உதவிக்கு நன்றி” கையெடுத்து அனைவரையும் கும்பிட்டு, சாப்பிட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொண்டார்.

“வேணுகோபலன் வீட்டு கல்யாணமுன்னு நியூஸ் போட்டிருக்கோம். இப்ப என்ன போடுறது?” என்றது ஒரு மீடியா.

“தவிர்க்க முடியாத காரணத்தினால், கல்யாணம் ஒத்திவைப்பு. விரைவில் கல்யாண தேதி அறிவிக்கப்படும். இப்படி போட்டிருங்க” என்று அனைவரும் அனுப்பி வைத்தார்.

வந்திருந்த பலரும், ‘பெரிய இடத்து விவகாரம்…’ என்று தங்களுக்குள் முணுமுணுத்தபடி அங்கிருந்து விலகி சென்றனர்.

கிருஷ், அங்கிருந்த நாற்காலியில் சாய்ந்து சோர்வாக அமர்ந்துவிட்டான். அவன் மேலே எதுவும் பேச தயாராகவில்லை. இல்லை, பேச வேண்டியதை அனைத்தையும் மாதங்கி பேசுவாள், என்ற எண்ணம் கொண்டவன் போல தன் கண்களை இறுக மூடி இருந்தான்.

மொத்த கூட்டமும் விலகியவுடன், மரகதவல்லி தன் மகள் அருகே வந்து, அவள் கன்னத்தில், “பளார்… பளார்…” என்று அறைந்தார்.

அந்த சத்தம் கிருஷிற்கு வலியை கொடுத்தாலும், அதை தடுக்கும் எண்ணம் கிஞ்சித்தும் அவனுக்கு வரவில்லை.

அரவிந்த் குறுக்கே வந்து, “மாதங்கி ஏன் இப்படி பண்ணான்னு கேட்போம்?” என்று தன் தாயை தடுத்தான். முகுந்தன் கைகளை பிசைந்தபடி அங்கு நின்று கொண்டிருந்தான்.

பிருந்தா, கண்களில் கண்ணீர் மல்க தன் தோழியை பார்த்தாள். தோழி என்ற சொல்லே அர்த்தமற்று போன உணர்வோடு.

“என்ன காரணம் சொல்லுவா இவ? எவ்வளவு செலவு செய்து ஊரை கூட்டி கல்யாணம் ஏற்பாடு பண்ணினா, மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்திட்டு நிக்குறா இவ.” தன் தலையில் அடித்துக்கொண்டு, தரையில் அமர்ந்தார் மரகதவல்லி.

‘எங்கோ தப்பு நடந்திருக்கிறது.’ வேணுகோபால் எதையோ கணித்துக்கொண்டார். தன் மகனின் மௌனம், அவருக்கு சில செய்தி சொல்லாமல் சொல்லியது. தாத்தா, பாட்டியின் கண்களும் தன் பேரனை தான் கணக்கிட்டு கொண்டது.

கிருஷின் காதலை அறிந்த பாட்டி, அவனை யோசனையாக பார்த்தார்.

“அப்படி என்ன நடந்தது மாதங்கி?” பாட்டி நிதானமாகவே கேட்டார்.

“எனக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லை. நான் இந்த கல்யாணத்தை நிறுத்த சொல்லி கிருஷ் கிட்ட ஆயிரம் தடவை சொல்லிருப்பேன். கிருஷ் எங்க அண்ணன் வேலைக்கு நெருக்கடி கொடுத்து, முகுந்தன் ப்ரொஜெக்ட்க்கு நெருக்கடி கொடுத்து, என்னை மிரட்டி இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க வெச்சான்.” மாதங்கி அழுத்தமாக கிருஷை பார்த்தபடி கூறினாள்.

‘இவள் சொல்லுக்கு நான் மதிப்பு கொடுத்திருக்க வேண்டுமோ?’ காலம் தாழ்ந்து கிருஷின் அறிவு அவள் கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.

அரவிந்திற்கும், முகுந்தனுக்கும் தன் பல நாள் சந்தேகம் தீர்ந்தது, இந்த இக்கட்டான சூழ்நிலையில்.

“உனக்கு பிடிச்சிருக்கு, பிடிக்கலை அது ரெண்டாவது விஷயம். ஆனால், இதை என் கிட்ட சொல்லிருக்கணுமா வேண்டாமா?” மாதங்கியின் தந்தை சக்திபாலன் அவள் கன்னத்தில், ‘பளார்… பளார்…’ என்று அறைய, “அங்கிள்….” முகுந்தன் இடைபுகுந்து, தன் தோழியை காப்பாற்றினான்.

தன் தோழி அடிவாங்குவது பாவமாக இருந்தாலும், பிருந்தா திக் பிரமை பிடித்தவள் போல் நின்று கொண்டிருந்தாள்.

மாதங்கி வீட்டில் வருத்தம், கோபம் என்றால் கிருஷ் வீட்டில் கொலைவெறியில் இருந்தார்கள்.

“சரி என் பையன் தான் உன்னை மிரட்டினான்னு வச்சிப்போம். நான், உன்னை பொண்ணு பார்க்க வந்தன்னைக்கு கேட்டனே, உனக்கு சம்மதமான்னு. ஊமை கோட்டான் மாதிரி நின்னையேடீ அன்னைக்கு.  அப்ப, என் கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாமே. அப்பவே விஷயம் முடிஞ்சிருக்குமே. இப்படி அவன் ஒருத்தன் செய்த வேலைக்கு மொத்த குடும்பத்தையும் நம்ப வச்சி கழுத்தை அறுத்துட்டியே டீ பாவி.” எகிறினார் வேதநாயகி.

கிருஷ் தன் கண்களை திறந்து மாதங்கியை பார்த்தான். அவன் கண்கள் கலங்கியது. ‘எல்லாருக்கும் நான் என்ன பதில் சொல்வேன். இப்படி மொத்த குடும்பத்தையும் அவமானப்படுத்திட்டேனே. இவ இப்படி செஞ்சி தொலைப்பான்னு நான் நினைக்கலை. கல்யாணம் முடிந்தால் எல்லாம் சரியாகிருமுன்னு நினச்சேன்.’ கிருஷ் அவமானத்தில் கூனி குறுகினான்.

“உங்க கிட்டயும் சொல்லலை. எங்க கிட்டயும் சொல்லலை. என்ன பிள்ளை வளர்த்து வச்சிருக்கீங்க. இவளாம் ஒரு பொண்ணு. ச்சீ…” வேதநாயகி, சக்திபாலனையும், மரகதவள்ளியையும் பார்த்து பேச, கிருஷ் பதறி எழுந்தான்.

மாதங்கியின் பெற்றோர் அவமானத்தில் தலைகுனிய, மற்றவர்கள் கண்கலங்கி நின்றனர்.

“இப்படி ஒரு பொண்ணை பெத்து வளர்த்தத்துக்கு நீங்கலாம் செத்து…” என்று வேதநாயகி பேசிக்கொண்டே போக, “போதும் நிறுத்துங்க.” மாதங்கி, அவரை குறுக்கிட்டாள்.

 

“மாதங்கி…” என்று அனைவரும் அவளை கட்டுப்படுத்த முயன்று தோற்றனர்.

“எங்க அம்மா, அப்பாவை பார்த்து நீங்க பேச வேண்டாம். உங்க பையன்  என்னை கட்டாயப்படுத்தி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சிருக்கான். அதை ஒரு வார்த்தை கேட்கலை. உங்க புருஷன்  அவர் அரசியல் ஆதாயத்துக்கு என்னை ஒரு தடவை கடத்த பார்த்தார். அவர் லட்சணம் உங்களுக்கு தெரியுமான்னு தெரியலை. புருஷன் இப்படி, நீங்க வளர்த்த பிள்ளை இப்படி. நான் உங்களை மட்டும் எப்படி நம்பறது?” காட்டமாக கேட்டாள் மாதங்கி.

புருஷன் பற்றிய செய்தியில் வேதநாயகி அதிர்ந்து நிற்க, “பெரிய அரசியல் குடும்பம். உங்க பையனை வேண்டாமுன்னு சொன்ன கோபத்தில் எங்களை ஏதாவது பண்ணிடீங்கன்னா? எனக்கு மீடியா சப்போர்ட் வேணும். உங்க குடும்பம் எங்க குடும்பத்தை எதுவும் பண்ணிட கூடாது.”

மூச்சு விடமால் தொடர்ந்தாள் மாதங்கி. “இப்பவும் இதை எல்லாம் மீடியா முன்னாடி சொல்லி உங்களை அசிங்க படுத்திருக்க முடியும். என் எண்ணம் அதுவில்லை. உங்க குடும்பத்தை அவமான படுத்துறது என் நோக்கமில்லை. எனக்கு தேவை என் குடும்பத்திற்கு பாதுகாப்பு மட்டுந்தான். ஒரு அரசியல்வாதி குடும்பத்தை எதிர்க்கும் பொழுது நான் தக்கபாதுகாப்போடு இருக்க வேண்டாமா?” பேசிக்கொண்டே போனாள் மாதங்கி.

 

“இவ்வளவு அகம்பாவம், அழுத்தம் ஒரு பொண்ணுக்கு ஆகாது” இந்த பேச்சு…” வேதநாயகி தலையசைக்க, “நானா பேசலை. தப்பை உங்க மேல வச்சிக்கிட்டு, என் அம்மா அப்பாவை பேசுற யோக்கியதை உங்களுக்கு இல்லை. நீங்கள்லாம்…” மாதங்கி, பேசி கொண்டே போக, “மாதங்கி…” அலறினான் கிருஷ். அவன் குரலில் கோபம். அவன் முதல் முறையாக அவளிடம் காட்டும் இத்தகைய கோபம்.

 

“இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசின, நடக்குறதே வேற. நான் உன்னை காதலிச்சது மகா பெரிய குற்றம். என்னை மன்னிச்சிரு” அவன் கை எடுத்து கும்பிட்டான்.  கைகள் மட்டுமே இறைஞ்சும் மொழி பேசியது. அவன் குரலோ அவளை கொல்லும் வெறியில் பேசியது.

“என்னை என்னவேணுமினாலும் பேசு. அந்த உரிமையை,  உன்னை காதலிக்கிற பாவத்தை செஞ்சி நானே உனக்கு கொடுத்துட்டேன். என் அம்மாவை பத்தி பேசின…” கிருஷ், அவன் கண்களில் ரௌத்திரத்தோடு அவள் சங்கை பிடிக்க எத்தனிக்க, முகுந்தன் அவர்கள் இடையில் வந்தான்.

அரவிந்த், கிருஷின் கைகளை பிடித்திருந்தான். “நீ தப்பானவன். நீ தப்பு பண்ணறன்னு எனக்கு தெரியும். ஆனால், எங்க வீட்டு பொண்ணு சப்போர்ட் இருந்தது உனக்கு. அது தான் உன்னை விட்டுவெச்சேன். மவனே, எங்க வீட்டு பொண்ணு மேல கையவெச்சு பாரு தெரியும் சேதி. என் தங்கை உன்மேல பாவம் பார்த்துட்டா. நான் அப்படி எல்லாம் இருக்க மாட்டேன். உங்க அப்பனையும் எனக்கு தெரியும். உன்னையும் எனக்கு தெரியும். சந்தி சிரிக்க வைக்கவும் எனக்கு தெரியும்.” அரவிந்த் அடிக்குரலில் கிருஷை மிரட்டினான்.

கிருஷ் அரவிந்தின் கைகளை வேகமாக உதறினான். ‘போடா…நீயெல்லாம்’ என்ற பாவனை கிருஷிடம். அவன் கவனம் முழுதும் மாதங்கியிடமே இருந்தது.

‘என் அண்ணனும், முகுந்தனும் எனக்கு பலம்…’ மாதங்கி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இன்று அவன் முன் விஸ்வரூபம் எடுத்து நின்றது. 

அவன் அவளை பார்த்தான். அவள் கொழுகொழு கன்னங்கள் அவனை ஈர்க்கவில்லை. அவள் கண்கள் இன்று தோழமை காட்டவில்லை.

 

காதல் கொண்ட அவன் மனம் சுக்குநூறாக உடைந்து, மரத்து நின்றது.

 

மாதங்கி அவனுக்கு எதிர்பக்கம் நின்று கொண்டிருந்தாள். இடத்தில் மட்டுமில்லை, மனதில் வாழ்க்கையில் என அனைத்திலும் என்று எடுத்துரைத்தது அவன் மனம்.

 

‘மிரட்டினா ஒரு பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிக்கணுமா? என் குடும்பத்தை பணயம் வைத்தா நான் உன் காலில் விழணுமா? இந்த மாதங்கி மாட்டா?’ அவள் கண்களில் இருந்த சாவல் மட்டுமே இன்று கிருஷிற்கு தெரிந்தது.

அரவிந்தின் செய்கையில், அரவிந்திடம் தோற்றத்தில், மொத்தத்தில் காதல் என்ற மாயையில் அவன் வாழ்க்கையை தொலைத்தது போல் உணர்ந்த கிருஷ்  தன் கட்டுப்பாட்டை இழந்தான்.

 அவன் கோபம் கட்டுக்கடங்காமல் எகிற தன் நிதானத்தை கைவிட்டான்  கிருஷ்.

“இன்னைக்கு சொல்றேன் கேட்டுக்கோ. எந்த குடும்பம் முக்கியமுன்னு என் குடும்பத்தை நீ அவமானப்படுத்தனியோ, அந்த குடும்பத்தின் அழிவு என் கையில் தான். அதுக்கு நீ தான் காரணமுன்னு, அந்த குடும்பம் உன்னை விரட்டி அடிக்கும். உன் பலம், பாசம் எல்லாம் எதுவுமே இல்லாமல், உன்னை நடுத்தெருவில் நிற்க வைப்பேன்” கிருஷ் சவால் விட, மாதங்கியின் குடும்பம் அதிர்ந்து நின்றது.

“போடா… என் தங்கையை பார்க்க எனக்கு தெரியும்.” அரவிந்த் தன் தங்கையின் தோள் மீது கைபோட்டு அவளை வெளியே அழைத்து வந்தான். 

பிருந்தாவனம் ஷோபை இழந்து பரிதாபமாக காட்சி அளித்தது.

மாதங்கி வீட்டினர் பிருந்தாவனத்தை விட்டு வெளியே வர, மீடியா இவர்களை இவர்களுக்கு தெரியாமல் கண்காணித்து கொண்டிருந்தது.

மாதங்கி, தன் தாய் இருக்கும் காரில் ஏற எத்தனிக்க, “இவ என் முகத்தில் முழிக்க கூடாது. இப்படி பட்ட குடும்பத்தோடு பழக்கம் கூட வைக்க பயப்படுவேன். சம்பந்தம் இவ சரின்னு சொன்னான்னு தான் செய்தேன். இப்படி பட்ட குடும்பத்தை பகைச்சிட்டு வந்திருக்காளே. இந்த குடும்பம் நம்மளை வாழ விடுமா? அந்த பையன் எப்படி எல்லாம் பேசுறான் பாரு.” மாதங்கியின் தாய் அவளை அடிக்க முற்பட்ட, அரவிந்த் தன் தாயை தடுத்தான்.

“அப்படி எல்லாம் எதுவும் அவங்க பண்ண கூடாதுன்னு தான் நான் இப்படி பண்ணினேன். பேசத்தான் முடியும். யாரும் எதுவும் பண்ணமாட்டாங்க. நம்மளை எதுவும் செய்யவும் முடியாது.” மாதங்கி உறுதியாக கூற, “வீட்டில் போய் பேசிக்கலாம் மாதங்கி.” அரவிந்த் குடும்பத்தை வேறொரு காரில் ஏற்றிவிட்டு, மாதங்கியை தன்னோடு இருத்தி கொண்டான்.

முகுந்தன் கொண்டு வந்த காரில் அரவிந்தும், மாதங்கியும் ஏறினர்.

அரவிந்த், முகுந்தனும் முன்னே அமர்ந்திருக்க மாதங்கி பின்னே அமர்ந்து கொண்டாள்.

“மாதங்கி, நீயும் தப்பு பண்ணிருக்க. அம்மா, கடுமையா திட்டுவாங்க. பொறுமையா இரு. அப்பாவும் திட்டுவாங்க. உன் எதிர்காலம் பற்றிய கவலை இருக்கும் அவங்களுக்கு” அரவிந்த் கூற, “மாதங்கி, ஒரு வார்த்தை நீ எங்க கிட்ட சொல்லிருக்கலாமில்லை?” வருத்தத்தோடு கேட்டான் முகுந்தன்.

 

மாதங்கி பதில் பேசவில்லை. “இப்படி பேசாமலே, எங்களுக்கு பிரச்சனை வருமுன்னு… உன் இஷ்டப்படி செய்தே விஷயத்தை பெரிசு படுத்திட்டே.” முகுந்தன் சலிப்பான குரலில் கூற, “விடு முகுந்தன். முடிந்ததை பேசி என்ன பயன். கொஞ்ச நாளைக்கு நாம யாராவது மாதங்கியோடு இருக்கணும். வீட்டிலும் கொலைவெறியில் இருக்காங்க. அவங்க வீட்டிலும் அப்படி தான் இருப்பாங்க.” அரவிந்த் கூற, முகுந்தன் ஆமோதிப்பாக தலை அசைத்தான்.

“இந்த மாப்பிள்ளை இல்லாமல் போனதும் நல்லது தான்.” அரவிந்த் முடித்துவிட அங்கு மௌனமே சூழ்ந்தது.

அப்பொழுது பின்னே ஒரு லாரி வேகமாக வர… கண்ணாடி வழியாக அதை பார்த்த முகுந்தன், எதையோ கண்டுகொண்டவன் போல, “அரவிந்த்…” என்று அலறினான்.

“நம்மளை நோக்கி தான் வருது. வண்டியை திருப்பு முகுந்த்” அரவிந்த் கூற, முகுந்தன் பதட்டத்தில் வேகத்தை அதிகரித்து தப்பிக்க முயன்றான்.

வேகம் உதவில்லை. லாரி நெருங்கிட, வீடு எதுவும் இல்லாத இடத்தில் இடது பக்கமாக மரத்தை நோக்கி வண்டியை செலுத்தினான் முகுந்தன்.

செலுத்திய வேகத்தில் அவர்கள் சென்ற கார் மரத்தில் மோதி உருண்டது.

விதி செய்த நன்மையா, இல்லை கெடுதலா என்று தெரியவில்லை. மாதங்கி சுயநினைவோடு இருந்தாள். சில இரத்த காயங்களோடு. ஆனால், முகுந்தன், அரவிந்த்  இருவரும் பலத்த காயம் ஏற்பட்டு சுயநினைவை இழக்க ஆரம்பித்தனர்.

மாதங்கி யாரை பலம் என்று எண்ணினாளோ, அந்த பலம் இப்பொழுது பலமற்று பலவீனமாய் மாதங்கியை காக்கும் கடமையை மறந்து ரத்தம் வழிய காருக்குள் கிடந்தனர்.

அப்பொழுது, “காரியம் வெற்றி…” என்ற குறுஞ்செய்தியை பார்த்து ஒரு முகத்தில் வெற்றி புன்னகை எட்டி பார்த்தது.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!