birunthavanam-21

Birunthaavanam-0f927dd2

birunthavanam-21

பிருந்தாவனம் – 21

பிருந்தாவனத்தில் மௌனம் சூழ்ந்திருந்தது. யாரும் ஒருவருடன் ஒருவர் பேசிக்கொள்ளவில்லை.

“அம்மா…” மௌனத்தை கலைத்தான் கிருஷ். அவர் கிருஷின் கன்னத்தில், “பளார்…” என்று அறைந்தார்.

“அம்மா…” அவன் கண்களில் கண்ணீரோடு தன் கன்னத்தின் அடுத்த பக்கத்தை காட்டிக்கொண்டு நின்றான்.

“அம்மா, நான் செய்தது தப்பு தான்.” அவன் அவர் கால்களில் விழுந்தான்.

வேதநாயகி விலகி நின்று கொண்டார்.

“அம்மா…” அவன் குரல் கெஞ்ச, “நீ என்னை அப்படி கூப்பிடாத.” சட்டென்று கூறினார் வேதநாயகி.

“அம்மாஆ…” கிருஷின் குரல் கதறியது.

“கூப்பிடாதன்னு சொன்னேன்.” அவர் கடினமாக கூற, “இப்படி எல்லாம் நடக்கும்முன்னு நான் நினைக்கலை.” கிருஷ் பரிதாபமாக கூறினான்.

“நினைச்சிருக்கணும்” வேதநாயகி நிலையாக நிற்க, “பெரியம்மா…” பிருந்தா இடைபுகுந்தாள்.

பிருந்தாவின் பெற்றோர் திருமணத்திற்கு வரவில்லை. பிருந்தா மட்டுமே வந்திருந்தாள். சொந்தபந்தம் அனைத்தும் கிளம்பிவிட தாத்தா, பாட்டி, அப்பா என அனைவரும் கிருஷை மௌனமாக பார்த்து கொண்டிருந்தனர்.

“உனக்கும் இது தெரியுமா பிருந்தா?” வேதநாயகி பிருந்தாவிடம் கேட்க, பிருந்தா மூச்சை உள்ளிழுத்து கொண்டாள்.

“உனக்கு தெரியுமா?” பாட்டி பதறிக்கொண்டு பிருந்தா அருகே வந்தார்.

“….” பிருந்தா திருதிருவென்று கிருஷை பார்த்தாள்.

“உங்க அம்மா வெளியிலிருந்து நாங்க அழியனும்முன்னு நினைப்பா. நீ கூட இருந்தே நாங்க அவமானப்படணும்னு நினைச்சிட்டியா பிருந்தா?” வேதநாயகியின் குரலில் வேதனை அப்பி கிடந்தது.

“ஐயோ பெரியம்மா…” பிருந்தா பதறினாள்.

“மாதங்கிக்கு இந்த காதலில் விருப்பம் இல்லைனு தெரியும். ஆனால், கல்யாணத்துக்கு விருப்பம் சொல்லிட்டான்னு தெரிஞ்சதுக்கு அப்புறம், அவ காதல் விஷயத்தை என்கிட்டே சொல்ல விருப்பப்படலைன்னு தான் நான் நினச்சேன் பெரியம்மா.” சற்று நிறுத்தினாள்.

“ஆனால், மாதங்கி இந்த கல்யாணம் நடக்காதுன்னு ஏதோ சொல்ல வந்தா. நான் காது கொடுத்து கேட்கலை பெரியம்மா. நான் அண்ணன் கல்யாணமுன்னு குஷிலேயே பேசி வச்சிட்டேன். அதுக்கு அப்புறம், அவ ரெண்டு மூணு தடவை பேச வந்தப்பவும் நான் அவளை பேச விடவே இல்லை பெரியம்மா. நான் வேணும்ன்னு செய்யலை. விளையாட்டாவே பேசி வச்சிட்டேன் பெரியம்மா. ஆனால், நான் செய்தது பெரிய தப்போன்னு எனக்கு இப்ப தோணுது பெரியம்மா.” பிருந்தா கண்கலங்கினாள்.

“என் மேலையும் தப்பு இருக்கு பெரியம்மா” பிருந்தா மேலும் மேலும் கலங்க, “நடக்கணும்னு இருக்கு நீ என்ன பண்ணுவ?” வேதநாயகி சலிப்பாக கூறி சோர்வாக அமர்ந்தார்.

“அந்த பொண்ணு சரி இல்லை. நான் தான் முதலிலேயே வேற இடம் பார்க்கலாமுன்னு சொன்னேனே” வேணுகோபால் கூற, “அந்த பொண்ணு சரியா தான் இருந்திருக்கு” அழுத்தமாக கூறினார் வேதநாயகி.

“நீங்க கடத்தல் முயற்சி செய்ய பார்த்திருக்கீங்க. நான் பெத்த பிள்ளை. என் வளர்ப்பு அவளை மிரட்டிருக்கு. அந்த பொண்ணு நம்ம குடும்பத்தை எப்படி நம்பும்? அவ அண்ணன் கிட்ட சொல்லிருக்கலாம். ஆனால், அவனும் அவசர குடுக்கை மாதிரி தான் தெரியுது. அது மட்டுமில்லை, அரவிந்துக்கும், உங்களுக்கும் அவ்வுளவு ஆகாது. அரவிந்துக்கும் கிருஷ்க்கும் அவ்வளவு ஆகாது. அப்படி இருக்க அந்த பொண்ணு எப்படி இதை அவ அண்ணன் கிட்ட சொல்லுவா?” வேதநாயகி நியாயத்தை பேசினார்.

“அந்த பொண்ணு அவ அம்மா அப்பா கிட்ட சொல்லிருக்கலாம். அது தான் அவ ஏன் செய்யலைனு எனக்கு தெரியலை?” சத்தமாகவே சிந்தித்தார்.

“இந்த காலத்து பொண்ணு இல்லையா?  அதுவும் அமைதியான பொண்ணா இருந்திருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிருப்பா. அவ அப்படியும் இல்லை. அது தான்…” நடந்ததை வாய் கொண்டு கூற முடியாமல், வேதநாயகி முகம் மூடி அழுதார்.

“நான் வாழ்ந்த வாழ்க்கை. என் வளர்ப்பு எல்லாம் இப்படி சரிஞ்சி விழுமுன்னு நான் நினைக்கவே இல்லை.” வேதநாயகி கதற, “அம்மா….” கிருஷ் தன் தாயின் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

“பாட்டி, அம்மா கிட்ட சொல்லுங்க பாட்டி. அப்படி எல்லாம் இல்லை பாட்டி. நான்…” என்று பேச ஆரம்பித்த அவன், ரங்கம்மாள் அவனை பார்த்து கொண்டிருந்த பார்வையில் பேசாமல் நின்றான்.

“இத்தனை பாட்டி சொல்லுற நீ, ஒரு வார்த்தை… ஒரே ஒருவார்த்தை… பாட்டி, நான் அந்த பொண்ணை விரும்பறேன். அவ என்னை விரும்பலை. நீங்க பேசி இந்த கல்யாணத்தை முடிச்சி கொடுங்கன்னு கேட்டிருக்கலாமே? நான் முன்ன நின்னு பேசி முடிச்சி வச்சிருப்பனே” பாட்டி தன் பேரனை பார்த்து கேட்டார்.

“நீயே காதலை சொல்லி, நீயே மிரட்டி அவளை சம்மதம் சொல்ல வைக்க நாங்கல்லாம் எதுக்கு டா இன்னும் உயிரை கையில பிடிச்சிட்டு இருக்கோம்?” பாட்டி கேட்ட கேள்வியில் உடைந்து போனான் கிருஷ்.

அங்கு மயான அமைதியே சூழ்ந்தது.

“முடிந்ததை பேசி என்ன ஆக போகுது. அடுத்த முகூர்த்தத்தில்  இவனுக்கு வேற பொண்ணை பார்த்து கல்யாணம் பண்றோம்.” வேணுகோபால் கூற, “முடியாது அப்பா.  எனக்கு காதல், கல்யாணம் அப்படிங்குற வார்த்தையே எரிச்சலா, வெறுப்பா இருக்கு” கிருஷ் அந்த நிலையிலும் உறுதியாக நின்றான்.

“இன்னைக்கு நான் உனக்கு கல்யாணத்தை பேசி முடிப்பேன். உனக்கு உடனடியா கல்யாணம் நடக்கணும். எனக்கு போன மானம் திரும்பி வரணும்” வேணுகோபால் அழுத்தமாக கூற, “அம்மா, எனக்கு கல்யாணம் வேண்டாம் அம்மா” கிருஷ் தாயிடம் கெஞ்சினான்.

“நீ எனக்கு பிள்ளையே இல்லை. என்கிட்டே ஏன் பேசுற?” வேதநாயகி யாரிடமோ பேசுவது போல பேசினார்.

“நான் சொல்லுற பொண்ணை கட்டிக்கலைனா, உனக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. வீட்டை விட்டு வெளிய போய்டு” வேணுகோபால் கூற, பாட்டியும், தாத்தாவும் செய்வதறியாமல் திகைத்து நின்றனர்.

அப்பொழுது அவர்கள் சூழ்நிலையை கலைத்தது வேணுகோபாலின் அலைபேசி ஒலி.

“ஓ…” என்று அவர் அதிர்ச்சியாக நிற்க, அனைவரின் கவனமும் அங்கு திரும்பியது.

அவர் அலைபேசியை வைத்ததும், மாதங்கி சென்ற காரின் விபத்தை பற்றி கூற,  அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

“கிளம்புங்க போகணும்” வேணுகோபால் கூற, “நாம எதுக்கு போகணும்? நம்ம குடும்பத்துக்கு செஞ்ச பாவத்துக்கு அவ அனுபவிப்பா. இன்னும் அனுபவிப்பா.” வேதநாயகி கூற, கிருஷ் தன் தாயை பரிதாபமாக பார்த்தான்.

கிருஷ்க்கு கோபம் தான். வருத்தம் தான். காதல் என்ற வார்த்தை கசக்கிறது தான். அவன் அவளை ஆயிரம் பேசினான் தான். ஆனால், தன் தாய் மாதங்கி பற்றி கூறிய வார்த்தையில் அவன் இதயம் வலிக்க தான் செய்தது.

காதலித்தவர்கள் தவறு செய்து விட்டால் கிழித்து போட, காதல் என்ன காகிதமா?

‘மாதங்கிக்கு என்ன ஆகியிருக்கும்?’ அவன் மனம் அந்த நேரமும் அவளுக்காக யோசித்தது.

“நாம போகணும் வேதநாயகி. நாம தான் இதை செய்தோமோன்னு நம்மளை மீடியாவும், போலீசும் சந்தேகபடுறாங்க. அவங்க குடும்பம் சொல்ற வார்த்தையும் அதில் அடங்கியிருக்கு” வேணுகோபால் கூற, “கிளம்புங்க…” என்றார் கோதண்டராமன்.

“…” அனைவரும் மௌனம் காக்க, “நாம கல்யாணம் தள்ளி போயிருக்குனு தான் மீடியா கிட்ட சொல்லிருக்கோம். எல்லா பிரச்சனையும் நமக்கு மட்டுந்தான் தெரியும். நாம அங்க இப்ப போகணும்.” கோதண்டராமன் கூற, அனைவரும் கிளம்பினர் மருத்துவமனை நோக்கி.

“அவங்க வீட்டில் விழுந்திருக்கிறது பெரிய அடி. அவங்க தாறுமாறா தான் பேசுவாங்க. என்ன நடந்தாலும் எல்லாரும் அமைதியா இருக்கனும். என் வார்த்தைக்கு எல்லாரும் மதிப்பு கொடுப்பீங்கன்னு நினைக்குறேன்” அவர் எச்சரித்தே தன் குடும்பத்தை அழைத்து சென்றார் வீட்டின் பெரியவராக.

மருத்துவமனை வாசலில் அவசர பகுதியில்  மாதங்கி நெற்றியில் ரத்தம் வழிய  நின்று கொண்டிருந்தாள்.

கிருஷ் குடும்பம் உள்ளே நுழையும் பொழுது தான் வேறு ஒரு காரில் சென்று கொண்டிருந்த மாதங்கி வீட்டினரும் முகுந்தன் வீட்டினரும் மருத்துவமனைக்குள் நுழைந்தனர்.

வேகமாக உள்ளே நுழைந்தவர்கள் அரவிந்தின் நிலையையும், முகுந்தனின்  நிலையையும் கேட்டறிந்தனர்.

இருவரும் அபாய கட்டத்தில் இருப்பதை அறிந்து கொண்ட மாதங்கியின் தாயார் கோபம் மேலோங்க, “படுபாவி, நான் எது நடக்க கூடாதுன்னு நினைச்சனோ, அது நடந்திருச்சே. நான் சுமந்து பெத்த பிள்ளையை, இப்படி என் கண்முன்னாலே படுக்க வச்சிட்டியே.” மாதங்கியை கன்னத்தில் அவர்  வேகவேகமாக அறைந்தார்.

 நெற்றியில் ரத்தத்தோடும் கண்களில் கண்ணீரோடும் பல அறைகளை வாங்கி கொண்டு வலிதாளாமல் தன் முகத்தை மூட, அவள் முதுகில் அவர் அடிக்க, மாதங்கி சரிந்து விழ, அதற்கு மேலே தாள முடியாமல் கிருஷ் அவளை நோக்கி செல்ல முற்பட அவன் கைகளை பிடித்து நிறுத்தினார் வேதநாயகி.

“இது அவங்க குடும்ப விஷயம்.” அவர் குரல் கர்ஜித்து, அவன் கைகளை இறுக பற்றியிருந்தது.

“ஆண்ட்டி… போதும் ஆண்ட்டி. அரவிந்த் அண்ணாவும், முகுந்தனும் இருந்திருந்தா இப்படி இவளை அடிக்க விட்டிருப்பங்களா?” பிருந்தா இடையில் புக, “அது தான் இப்படி படுக்க வச்சிட்டாலே. படுபாவி.” அவர் குலுங்கி அழுதார்.

மாதங்கி எதுவும் பேசவில்லை. மௌனமாக கண்ணீர் மட்டுமே வடித்து கொண்டிருந்தாள்.

காலையில் கொழுகொழு கன்னங்களோடு, மணப்பெண் அலங்காரத்தோடு வதனமின்ன அழகு புதுமையாய் அவன் காதலோடு கண்டு ரசித்த மாதங்கியை இப்பொழுது பரிதாபமாக பார்த்தான் கிருஷ்.

அதே மணப்பெண் கோலம். ஆனால், நாராய் கிழித்து போடப்பட்டவள் இருந்தாள். அவளுக்கும் நெற்றியில் ரத்தம் வழித்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால், அதை யாரும் பொருட்படுத்துவது போல் தெரியவில்லை. கிருஷின் மனம் அதையும் குறித்து தள்ளியே நின்று கொண்டது. அவன் யாரோ தானே? அவன் அறிவு அவனுக்கு பாடம் புகட்டியது.

மாதங்கி யாரையும் ஏறெடுத்து பார்க்கவில்லை. ஒரு வார்த்தை யாரையும் எதிர்த்து பேசவில்லை. அவள் மனதிலிருந்து அழவில்லை. ஆனால், அவள் கண்கள் வலி தாளாமல், வழியறிமால் விழி நீரை சொரிந்து கொண்டு இருந்தது.

‘இந்த விபத்து இவளுக்கு ஆபத்தை கொடுத்திருக்க கூடாதா? இப்படி இவளை காப்பாற்றி நிற்கதியில் நிறுத்தி விட்டதே’ பிருந்தா தன் தோழியை ஆதரவாக தன் மேல் சாய்த்து கொண்டாள்.

‘நான் இவள் பேசியதை கேட்டிருக்க வேண்டுமோ?’ பிருந்தாவின் மனதில் குற்ற உணர்ச்சி.

காவல்துறையினர் அங்கு வந்து விசாரணையை ஆரம்பித்தனர்.

“உங்களுக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?” அவர் கேட்க, அரவிந்தின் தாயும் முகுந்தனின் தாயாரும் ஒரு சேர பதில் கூறினர்.

“சந்தேகம் என்ன சந்தேகம் உறுதியாவே தெரியும். அதோ நிக்குறானே, அவன் தான் மொத்தத்திற்கும் காரணம்” கிருஷை கைகாட்ட, கிருஷின் குடும்பம் காட்டிய அதிர்ச்சியை விட மாதங்கி அதீத அதிர்ச்சியை காட்டினாள்.

“சீனியர் இதை பண்ணிருக்கமாட்டாங்க” இத்தனை நேரம் பேசாத மாதங்கி தன் வாயை திறந்தாள்.

“மாதங்கி…” மரகதவல்லியும், சக்திபாலனும் அலற, “எனக்கு தெரியும் அம்மா. எனக்கு தெரியும் அப்பா. சீனியர் இதை பண்ணிருக்க மாட்டாங்க. நிச்சயம் பண்ணிருக்க மாட்டாங்க” அவள் உறுதியாக கூற, “ச்ச்சீ…” அவர்கள் இவளை வெறுப்பாக பார்த்தனர்.

“எங்களை அப்படி கூப்பிடாத. உன் அண்ணன் மேல பாசம் இருந்தா இப்படி பேசுவியா? உன்னை இத்தனை நேரம் செய்த தப்புக்கு கூட மன்னிப்போம். ஆனால், இப்ப செய்யுற தப்பை மன்னிக்கவே மாட்டோம்” அவர்கள் மாதங்கியை ஒருசேர திட்டினர்.

“என்ன, இவன் உன்னை மிரட்டிட்டான?” முகுந்தனின் தாயார் கேட்க, “யாரும் என்னை மிரட்டலை” அவள் அழுத்தமாக கூறினாள்.

அவள் கண்கள் இருட்டில் சுழல ஆரம்பிக்க, கிருஷின் கால்கள் அவளை நோக்கி செல்ல எத்தனிக்க, அவன் மனம் அவள் பக்கம் துடிக்க, அவன் கண்களுக்கு அவள் மட்டுமே தெரிந்தாள்.

காதல் கொண்ட அவன் மனம் அவள் மேல் உள்ள கோபம் வருத்தம் என அனைத்தையும் மறந்து அவளுக்காக மட்டுமே துடித்தது.

பிருந்தா அவளுக்கு தண்ணீர் கொடுக்க, “நாங்க திரும்ப வருவோம்.” காவல் துறையினர் அங்கிருந்து சென்றனர்.

கிருஷின் தந்தை, தாத்தா இருவரும் நம்பிக்கையோடு இருந்தனர். அரசாங்கமே அவர்கள் பக்கம். அதனால், காவல் துறை பற்றி அவர்களுக்கு பயமில்லை. மீடியாவின் வாயிற்கு அவல் ஆக வேண்டாம் என்றே அங்கு அமர்ந்திருந்தனர்.

காவல் துறை அகன்றதும், “என்ன டீ, பெரிய இவளாட்டம் காதல் எனக்கு இல்லைன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திட்டு, இப்ப சீனியர் சீனியர்ன்னு உருகுற?” மரகதவல்லியின் கோபம் கட்டுக்கடங்கவில்லை.

மருத்தவர், செவிலியர் என அனைவரும் அமைதி காக்க எடுத்து கூறியும் அவர்கள் சண்டை நீண்டு கொண்டே போனது .

கிருஷின் குடும்பம் மாதங்கியின் பேச்சில் அவளை விசித்திரமாக பார்த்தது.  அதே நேரம் கோதண்டராமனின் சொல்லுக்கிணங்கி மௌனமே காத்து கொண்டிருந்தனர்

“அம்மா…” மாதங்கி அழைக்க, அப்படி கூப்பிடாத, “என் பிள்ளையை படுக்க வச்சிட்டு, அப்படி கூப்பிடாதா.” இந்த வார்த்தையில் மாதங்கி நொறுங்கி போனாள்.

“நான் பொய் சொல்லலை. நான் கிருஷை காதலிக்கலை.  கிருஷ் என்னை கட்டாயப்படுத்தினது உண்மை. நான் உங்க வளர்ப்பு எங்கையும் தப்பாக கூடாதுன்னு நான் காதல்ன்னு யோசிச்சதே இல்லை. இது உண்மை” அவள் சத்தியம் செய்வது போல் பேசினாள்.

“நான் பிரச்சனையை உங்க கிட்ட சொல்லிருந்தா, உங்க யாருக்காவது என்னால பிரச்சனை வந்திருமோன்னு தான் நானே சமாளிக்க நினச்சேன். நான் மண்டபத்தில் உண்மையை மட்டும் தான் சொன்னேன். என் மனசாட்சிக்கு சரின்னு பட்டத்தை தான் நான் செய்தேன்.” தன்னிலை விளக்கம் கொடுக்க முற்பட்டவளை, அவள் குடும்பத்தினர் தடுத்தனர்.

“உன் கதையை யாரும் கேட்கலை. கிருஷ் தான் எல்லாத்துக்கும் காரணமுன்னு நீ சொல்லணும்.” முகுந்தனின் தாயார் கூற, கிருஷின் குடும்பம் தாத்தாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு கடினப்பட்டு மௌனம் காத்தது.

“முடியாது. கிருஷ் இதை செய்யலை. எனக்கு கிருஷை பத்தி தெரியும்.” மாதங்கி கூற, மரகதவல்லி, மாதங்கியை அடிக்க முற்பட, அவள் நிமிர்ந்து நின்றாள்.

“நீங்க என்னை அடிச்சே கொன்னாலும் சரி. நான் கிருஷிற்கு எதிரா ஒரு வார்த்தை இல்லாததை தப்பா சொல்ல மாட்டேன். நான் மண்டபத்தில் சொன்னதும் உண்மை. இப்ப சொல்றதும் உண்மை.” மயங்குவது போல் இருந்தவளுக்கு எப்படி தான் இப்படி ஒரு குரல் வந்ததோ என்று அனைவரும் அவளை அதிர்ச்சியாக பார்த்தனர்.

கிருஷின் கண்கள் இமைக்க மறந்து அவளை பார்த்தது.  இதை தான் நான் விரும்பினேன். இதை தான் நான் காதல் என்று நம்பினேன். இந்த பிடிவாதம் தான் என்னை ஈர்த்தது.  ஆனால், இதே பிடிவாதம் என்னை அழித்தது. இப்பொழுது அவளை அழித்து கொண்டிருந்தது.

‘காதல்… காதல்… காதல்…’ என்று அவளுக்காக துடித்த அவன் மனம், இப்பொழுது துடிக்க மறந்து அவளை எண்ணி அவளுக்காகவே ஸ்தம்பித்து நின்றது.

பாட்டியின் பார்வை மாதங்கியை வண்டாய் துளைத்தது. தன் பேரனின் காதலுக்கு அவருக்கு அந்த நொடி காரணம் புரிந்தது. ஆனால் சூழ்நிலையை சரி செய்ய, அவருக்கு வழி தான் தெரியவில்லை.

சக்திபாலன் கோபம் தலைக்கு ஏறி மாதங்கியை நெருங்கினார்.  தன் மகனின் நிலைக்கும், தன் நண்பனின் மகனுக்கும் ஏற்பட்ட நிலைக்கு காரணமானவர்களை பழிதீர்க்கும் வெறி அவர் கண்களில் இருந்தது.

“கிருஷ் தான் காரணமுன்னு நீ சொல்ற. மொத்த குடும்பமும் இங்க வந்து அமைதியா நின்னு நாடகம் போடுது. நாங்க சொல்றதை நீ கேட்குற.”  தன் மகளின் தலை முடியை கொத்தாக பிடித்து அவர் கேட்க, “முடியாது அப்பா. நான் கிருஷ்க்கு எதிரா எதுவும் சொல்ல மாட்டேன்.” அவள் உறுதியாக கூறினாள்.

“பாட்டி… என்னால முடியலை பாட்டி. மாதங்கி இப்படி கஷ்டப்படுறதை பார்க்க, நான் அவளை காதலிக்கலை. இதை பார்க்க நான் இங்க வரலை. ஏதாவது பண்ணுங்க பாட்டி” கிருஷ் கெஞ்சினான்.

“நீ இதுவரைக்கும் செய்த குழப்பம் போதும். இந்த பொண்ணு உன்னை வாழவும் விட மாட்டா. சாகவும் விட மாட்டா போல” வேதநாயகி வெறுப்பை உமிழ்ந்தார்.

தன் தாயின் வார்த்தைகள் அவனை கூர்வாள் கொண்டு தாக்கியதை போல் உணர்ந்தான் கிருஷ்.

“வேதநாயகி…” என்று பாட்டி, மருமகளை கண்டித்தார்.

“அவ செய்த காரியத்துக்கு அவ அனுபவிக்குறா அத்தை” வேதநாயகி கூற, கிருஷ் அங்கிருந்து விலகி செல்ல, சக்திபாலன் தன் மகளின் முடியை விட, மாதங்கி சரிந்து கிருஷின் காலில் விழுந்தாள்.

இதை எதிர்பார்க்காத கிருஷ் பதறினான். அவன் அனைத்தயும் மறந்தான். அவன் திருமணம். அவன் குடும்பம். அவள் குடும்பம். அவள் செய்கை.  அவன் முன் அவள் மட்டுமே நின்றாள். காதலின் வடிவமாய் அவள். அவன் காதலால் அவள் படும் அவஸ்த்தையை அவள் கோலம் கூறியது.

மாதங்கி எதுவும் யோசிக்கும் நிலையில் இல்லை. ஆனால், மாதங்கி மனதில் மண்டி கிடந்த கேள்வி,  ‘எது காதல்?’  இப்பொழுது கிருஷின் மனதில் வந்து அமர்ந்து கொண்டது.

‘எது காதல்?’  அவளின் அருகாமையும் அவள் பேச்சும் அவள் பாடிய பாடலும் அவளின் கேலி பேச்சும் நினைவு வந்து அவன் காதலில் கசிந்து உருகி நின்ற இடம் நினைவு வந்து, ‘இது தான் காதலா?’ என்று அவன் முன் கேட்டது. 

‘இல்லை… இல்லை…. அது காதல் அல்ல!’ அவன் மனமும், அறிவும் ஒரு சேர கதறியது.

அவள் கோலம் அவனை மனதோடு தாக்கி கண்களால் வலியை இறக்கியது.

‘இப்படி தோற்று வலியை தருவதா காதல்?’

அவளுக்கு சில நொடிகள் அங்கு நடப்பதே தெரியவில்லை.

நிராகரிக்கப்பட்ட அவன் காதலும், அவன் திருமணம் சில நிமிடங்கள் அவனுக்கு மறந்து தான் போயின. காதல் பரிசாக அவன் இதழ் பத்தித இடங்கள் இன்று பலர் அடித்து கைத்தடங்களோடு பரிதாபமாக காட்சி அளித்தது.

அன்று சின்ன முத்தத்திற்கு அத்துணை ஆர்ப்பாட்டம் செய்தவள், இன்று அத்தனை அடியையும் மரத்து போனவள் போல் வாங்கி கொண்டு நிற்கும் தன் முன்னாள் காதலியின் மேல் அவனுக்கு கோபம் வந்தது.

அவன் அவளை தூக்கி நிறுத்தியதில் அவள் மூச்சு காற்று, அவன் கழுத்தை தீண்டி அவள் உயிரோடு இருக்கிறாள் என்று சொல்லாமல் சொல்லியது.

அவன் மனவலிக்கு, அவள் மூச்சு காற்றே மருந்தென்பது போல் அவன் இதயம் அவளை நெருங்க வேகமாக துடித்தது. அவளை ஆறுதல் படுத்த அவன் கைகள் பரபரக்க, ‘இவள் யார் எனக்கு? இவள் எனக்கு முன்னாள் காதலி அவ்வளவு தானே?’ அவன் அறிவு வலியுறுத்த, அவன் அவளை விலக்கி நிறுத்தினான்.

‘சிரிப்பின் அடையாளமான அவள், நம்பிக்கையின் நாயகியான அவள் அனைத்தையும் இழந்து நிற்க என் காதல் தானே காரணம்?’ குற்ற உணர்ச்சியோடு பேசினான் கிருஷ்.

“மாதங்கி உங்க பொண்ணு தான். இப்ப என்ன நான் இதுக்கெல்லாம் காரணமுன்னு அவ சொல்லணும், அவ்வளவு தானே? அவ சொல்லுவா. அதுக்காக நீங்க அவளை அடிக்காதீங்க.” அவன் அவர்களை பார்த்து கையெடுத்து கும்பிட்டான்.

“நான் சொல்லி நீ எதையும் கேட்கலை. இப்ப உன் கிட்ட ஒண்ணே ஒண்ணு கேட்குறேன்.  எல்லாத்துக்கும் நான் தான் காரணமுன்னு சொல்லிடு. என்னை காப்பாத்த நீ எனக்கு தேவையில்லை. என்னை காப்பாத்திக்க எனக்கு தெரியும்.” அவன் குரலில் கட்டளை இருந்தது.

“கிருஷ் எங்க வீட்ல என்னை அடிக்கிறாங்க. அது என் பிரச்சனை. நான் என்னை காப்பாத்திக்க பொய் சொல்லனுமா? விளையாட்டா நான் ஆயிரம் பொய் சொல்லுவேன். நான் இப்ப இதை சொன்னால், உங்களை பழிதீர்த்த மாதிரி ஆகிடாதா? நான் கல்யாண மண்டபத்தில் செய்தது, என் விருப்பமின்மையை காட்ட. ஆனால், இது…” சலிப்பாக கூறினாள் மாதங்கி.

“அங்க என்ன பேச்சு?” அவள் தாயார் அவளை கோபமாக நெருங்க, கிருஷ் எதையும் காண சகியாமல், ‘இவள் எதையும் கேட்கப்போவதில்லை…’ வெறுப்போடு வெளியே சென்றுவிட்டான்.

கிருஷ் வெளியே செல்ல, அவன் குடும்பத்தினர் அவனோடு சென்றுவிட்டனர். பிருந்தா மட்டும் மாதங்கிக்கு துணையாக அங்கு தங்கிவிட்டாள்.

அவர்கள் காரை எடுத்து கொண்டு வெளியே வர, மருத்துவமனை வாசற்படியில் அமர்ந்திருந்தாள் மாதங்கி சோகமே வடிவாய்!

அவள் குடும்பத்தினர் அவளை உள்ளே அனுமதிக்கவில்லை. அரவிந்தும் முகுந்தனும் கண்விழிக்க அவள் அவர்களுக்காக காத்திருந்தாள் மருத்துவமனையின் வாசற்படியில்.

கிருஷ் காரில் சென்றபடி அவளை பார்த்தான்.

காதலி முன்னாள் காதலியாகிவிட்டாள் ஒரே நாளில். அவன் அறிவு அப்படி தான் கூறியது. முன்னாள் காதலி என்று அறிவு அறிவுறுத்த, முன்னால் இருக்கும் சோகவடிவான தன் காதலியை எண்ணி அவன் மனம் வருந்தியது.

ஆனால், காலமும், விதியும் அவனை எதிர்பக்கமாக அழைத்து சென்றது. அவனுக்கும் அது தான் சரி என்று தோன்றியது. விரும்பியே தன் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்தான் சில கேள்விகளோடு.

‘அவரவர் குடும்பம் அவரவருக்கு பிருந்தாவனம். காதல் ஜெயித்தால்  காதலிப்பவர்கள் மகிழலாம். ஆனால் அவர்கள் குடும்பம்? ஆக, ஜெயித்தாலும் வலி தருவதா காதல்?’

காதல் இன்றும் பல குடும்பத்தில் அவமானம். ஆக, ‘அவமானத்தை தேடி தருவதா காதல்?’

பதில் தேட தெம்பில்லாமல் தன் கண்களை இறுக மூடினான் கிருஷ். அவன் மனதில் அனைத்தும் இழந்தவள் போல் அமர்ந்திருந்த அவள் சோக சித்திரமே இருந்தது.

காலத்தின் போக்கில்!

காதலில் கசிந்துருகிய அவன் தோல்வி, அவமானம், வலி, நிராகரிப்பு மட்டுமே தந்த அவன் காதலை முழுதாக  வெறுத்தான். அவளை வெறுத்தானா? அவன் மனதிற்கு மட்டுமே வெளிச்சம்.

அவள் அவனை நினைத்தாளா? அவளுக்கு மட்டுமே வெளிச்சம்.

சில வருடங்களுக்கு பின்….

பிருந்தாவனத்தில்  விரைவில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!