birunthavanam-22
birunthavanam-22
பிருந்தாவனம் – 22
விமானம், சென்னையை நோக்கி பயணிக்க தயாராக இருக்க, மாதங்கி உள்ளே நுழைந்து கொண்டிருந்தாள். எகானமி கிளாஸ் என்பதால் கூட்டம் அதிகமாகத்தான் இருந்தது. தன் இடத்தில், அவள் தன் ஹேண்ட் லக்கேஜ்ஜை வைக்க, பக்கத்தில் ஒருவன் அவள் நெற்றியை இடிக்க, அவள் முகத்தை வலியில் சுளித்தாள்.
“சாரி… சாரி…” பதறியது அவன் குரல். தன் நெற்றியை தடவிக் கொண்டாள் மாதங்கி. அவள் தடவிய இடத்தில் ஒரு வடு. சற்று ஆழமான காயம் என்று காட்டுவது போல் அமைந்திருந்தது அந்த வடு. பல காயங்களை உள்ளடக்கி.
மாதங்கி அந்த இடத்தை தடவுகையில், பல எண்ணங்களும், அவள் மூளையை உரசி சென்றது.
தன் கண்களை மூடி, அப்பொழுது ஏற்பட்ட வலியையும், பல நினைவுகளையும் மறக்க முயன்றாள் மாதங்கி.
அவள் முக சுளிப்பு பார்த்து கொண்டிருந்த அவன், “சாரி… சாரி… ஐ அம் தி ரீஸன். ஐ…” அவன் பேசி கொண்டே போக, ‘நான் தான் காரணம்…’ என்ற பொருள் பட அவன் சொன்ன சொற்கள் மட்டுமே மனதில் பதிய, “இட்’ஸ் ஓகே” கூறி கொண்டு அந்த விமானத்தில் கண்மூடி சாய்ந்து அமர்ந்தாள்.
அவள் மனதில் வருத்தம் மட்டுமே மேலோங்கி இருந்தது.
‘எல்லாத்துக்கும் நான் தான் காரணமுன்னு சொல்லிடு…’ கிருஷ் கடைசியாக பேசி சென்ற வார்த்தைகள்.
அவள் காதில் இப்பொழுதும் ஒலித்து கொண்டு இருந்தது.
எல்லாரும் அவள் மீது வைத்த தொடர் குற்றச்சாட்டுகளும், அவள் மனதில் அலைமோதியது.
‘கிருஷின் காதலுக்கு நீ தகுகியானவள் இல்லை. அப்படி என்ன செஞ்சிட்டான்? உன்னை மிரட்டி கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல வச்சான். முடியாதுன்னு முன்னாடியே எங்க கிட்ட சொல்லிருக்க வேண்டியது தானே? அவன் செஞ்சதை விட பெருசா செஞ்சி, உங்க வீட்டையும் அவமான படுத்தி, அவன் வீட்டையும் அவமான படுத்தி. எல்லாரையும் உயிரோட சாகடிச்சிட’ தன் மேல் விழுந்த குற்றசாட்டு அவள் மனதை வாட்டியது.
‘உண்மை தான். கிருஷ் என் மீது வைத்தது அலாதி அன்பு தான். ஆனால்…’ இன்று வரை அவளால் மேலும் சிந்திக்க முடியவில்லை.
‘நான் செய்தது சரி தான். ஆனால், செய்த முறை… ஊரை கூட்டி, என் வாழ்க்கையும் கெடுத்து… அவன் வாழ்க்கையையும் கெடுத்து விட்டேனோ?’ அன்றைய கல்லூரி முடித்த வயதின் வேகத்தில் சிந்தித்து புரிந்து கொள்ள முடியாத அவள் அறிவு இன்று புரிந்து கொண்டது.
‘நான் கிருஷிடம் பக்குவமாக நடந்திருக்க வேண்டும். திருமணத்தை இதை விட லாவகமாக நிறுத்தி இருக்க வேண்டும். சற்று பொறுமையாக நடந்திருக்க வேண்டும். ஒரு பெண்ணுக்கு பொறுமை எத்தனை அவசியம். அவள் எத்தனை படித்திருந்தாலும், தைரியமாக இருந்தாலும் ஒரு விஷயத்தை சாதுரியமாக கையாள வேண்டும் என்பது எத்தனை முக்கியம். இதை எல்லாம் தெரிந்து கொள்ள நான் எத்தனை இழந்துவிட்டேன்.’ மாதங்கி பெருமூச்சை வெளியிட்டாள்.
அவள் சிந்தனையை கலைப்பவன் போல் அவன், “சாரி… ஐ அம் தி ரீஸன்.” மீண்டும் அவன் கூற, “நோ… ப்ரோப்லம்…” அவள் அவனிடம் கூறிவிட்டு, விமானத்திற்கு கீழே இருக்கும் மேகத்தை பார்த்தாள் மாதங்கி.
‘இந்த பரந்து விரிந்த வானத்தின் கீழ் தான் கிருஷ் இருக்கிறான். அவன் செய்தது தப்பு தான். ஆனால், நான் செய்ததும் தப்பு தானே. என்றாவது ஒரு நாள் கிருஷை பார்த்தால் நான் அவன் கிட்ட மன்னிப்பு கேட்கணும். அவன் குடும்பத்திற்கு நான் ஏற்படுத்திய அவமானத்திற்கு மன்னிப்பு கேட்கணும். அவன் மன்னிப்பானா?’ அவளுள் மெல்லிய யோசனை பரவியது.
‘எல்லாம் முடிஞ்ச பிறகும், நான் தான் காரணமுன்னு சொல்லுன்னு சொன்ன கிருஷ் என்னை நிச்சயம் மன்னிப்பான். நான் அவனை பார்த்த கடைசி நொடி வரைக்கும், என்னிடம் அன்பை மட்டுமே செலுத்திய கிருஷ் என்னை மன்னிப்பான்.’ அவள் முகத்தில் அவன் நினைவுகளில் மெல்லிய புன்னகை வந்து ஒட்டி கொண்டது.
அப்பொழுது, அவள் பக்கத்தில் வந்து அமர்ந்தார் ஒரு பாட்டி.
“தமிழா?” என்று கேட்டு வளவளக்க ஆரம்பித்துவிட்டார்.
“என்ன படிச்சிருக்க?” அவர் கேட்க, “இன்ஜினியரிங் இந்தியாவில் படிச்சேன். அப்புறம் ரோபோடிக்ஸ், அனிமேஷன் ஃபிலிம் மேக்கிங் யு.எஸ் இல் படிச்சிட்டு, யு.எஸ் இல் ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். இந்தியாவில் ஒரு ப்ரொஜெக்ட்காக போய்கிட்டே இருக்கேன்” மாதங்கி சிரித்த முகமாக கூறினாள்.
“ஓ… எங்க காலத்துல சீக்கிரமே கல்யாணம் செய்து கொடுத்திருவாங்க. இந்த காலத்தில் நீங்க நல்லா படிக்க முடியுது.” பாட்டி சிரித்து கொண்டார்.
‘கல்யாணம் செய்ய சொன்னாலும், செய்வோமா?’ மாதங்கி முகத்தில் ஒரு பெருமித புன்னகை வந்து அமர்ந்து கொண்டது.
அப்பொழுது பாட்டியிடம் அவர் கணவர், “காதில் பஞ்சு வச்சிக்கோ. இல்லைனா காது வலி வரும்” என்று என்றார் போக்கை வாயோடு.
“சும்மா நைநைன்னு ஏதாவது சொல்லிக்கிட்டு” தாத்தாவை கடிந்து கொண்டார் பாட்டி.
“நான் நைநைன்னு சொல்லலைனா, நீ நைநைன்னு சொல்லுவ” தாத்தாவும் விடாமல் பாட்டியோடு மல்லு கட்டினார்.
தாத்தா திரும்பி கொண்டதும், பாட்டி மாதங்கியிடம் காதில் கிசுகிசுத்தார்.
“என் மேல அவுகளுக்கு அலாதி பிரியம். எங்களது காதல் கல்யாணம். எனக்கு விருப்பம் இல்லை தான். ஆனால், கட்டினா என்னை தான் கட்டுவேன்னு ஒத்தை காலில் நின்னு கட்டினாக” பாட்டி முகத்தில் பெருமிதம்.
“ம்…”, ‘நமக்கு நல்ல பொழுது போக்கு’ மாதங்கி கதை கேட்க ஆரம்பித்தாள்.
“நானும், அவுக என்னை சுத்தி சுத்தி வந்ததும் விரும்ப ஆரம்பிச்சிட்டேன்.” பாட்டி, கள்ளங் கபடமில்லாமல் பேசி கொண்டிருந்தார்.
“அவுக காதல் அப்படி” பாட்டி கூறிய வார்த்தையில் இந்த வார்த்தை மட்டுமே மாதங்கி காதில் எதிரொலித்து கொண்டே இருந்தது.
‘கிருஷின் காதலை விடவா?’ மாதங்கி மனதில் யார் காதலை பற்றி பேசினாலும், கிருஷ் பற்றிய எண்ணம் மட்டுமே சுழலும்.
‘கிருஷ் என் வாழ்வில் முடிந்த அத்தியாயம். அவனும் தன் காதலுக்கு முற்று புள்ளி வைத்துவிட்டு சென்றுவிட்டான். ஆனால், நான் செய்த காரியத்தால், அவன் நினைவுகளை முழுதாக மறக்க முடியாமல், ஓடி கொண்டே இருக்கிறேன்.’ மாதங்கி சுயபச்சாபத்தில் இறங்கினாள்.
“ரொம்ப போர் அடிக்குறேன்னா? நீ தூங்கு” பாட்டி கூற, மறுப்பாக தலை அசைத்தாள். ஆனால், மாதங்கியின் மனதை புரிந்து கொண்டவர் போல் பாட்டி பேச்சை நிறுத்தி கொண்டார்.
“என்னை தவிர, நீ பேசுறதை யார் கேட்பா?” தாத்தா பாட்டியை கேலி பேச, அவர்கள் அன்பு சண்டை ஆரம்பமானது.
மாதங்கியின் மனதையோ வேறு கேள்வி குடைய ஆரம்பித்தது.
‘இந்தியா போனதும் கல்யாணம் செய்யனுமுனு சொல்லுவாங்க. கல்யாணம்முனு யோசிச்சாலே, நின்னு போன கல்யாணம் தான் நினைப்புக்கு வந்து தொலைக்குது. இதை சொன்னா, காதலான்னு கேட்பாங்கா. இல்லை, காதல் இல்லைனு அன்னிக்கு சொன்னியேன்னு கேட்பாங்க. இதுவா காதல்?’ அவள் மனம் அங்கு சுற்றி, இங்கு சுற்றி அதே கேள்வியில் நின்றது.
“ம்…ச்…” கொட்டி கொண்டாள். வெளிநாட்டிற்கு வந்து பட்டப்படிப்பு படிச்சாலும், என் கேள்விக்கு பதில் கிடைக்க மாட்டேங்குது என்ற சலிப்பு அவள் முகத்தில்.
‘கிருஷ் கல்யாணம் பண்ணிகிட்டானா? அவன் வாழ்க்கையை அழிச்சிட்டோமேன்னு குற்ற உணர்ச்சி என் மனசை குடையுது. இதை எல்லாம் சரி செய்யாம நான் எப்படி கல்யாணம் செய்யறது?’ மாதங்கி பல எண்ணங்களோடு சென்னை வந்து சேர்ந்தாள்.
சென்னை விமான நிலையம்.
“அண்ணா…” அரவிந்தை கட்டி கொண்டாள் மாதங்கி.
அவள் கண்கள் அவன் பின்னே தேடியது. யாரும் வரவில்லை.
“முகுந்தன் வந்திருக்கான். இப்ப வந்திருவான்” அரவிந்த் கூற, மாதங்கியின் குரல் உள்ளே சென்றிருந்தது.
“அப்பா எப்படி இருக்காங்க?” மாதங்கி தன்னை சமன் செய்து கொண்டு கேட்க, “முன்னைக்கு இப்ப பரவால்லை” அரவிந்த் கூறினான்.
“மாதங்கி எப்படி இருக்க?” கலகலப்பாக கேட்டபடி வந்தான் முகுந்தன்.
“எல்லாரையும் சாகடிச்சாலும் நான் நல்லா தான் இருக்கேன்.” பழைய குறும்பு எட்டி பார்க்க அவள் பதில் சொல்ல நினைத்தாலும், அவள் குரல் வெறுப்பை, கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தியது.
“என்ன பேச்சு?” அரவிந்த் அவள் தலையை தட்ட, “உங்க அம்மா அப்படி தானே சொல்லுறாங்க” மாதங்கி தன் உதட்டை சுழித்து கொண்டாள்.
“எனக்கு அம்மான்னா, உனக்கு யாரு?” அரவிந்த் கேட்க, “அதை நீ உங்க அம்மா கிட்ட தான் கேட்கணும்.” மாதங்கி கூற, பெருங்குரலில் சிரித்தான் முகுந்தன்.
“என்ன சிரிப்பு?” மாதங்கி கடுப்பாகி கேட்க, “வீட்டுக்கு போனதும், நீ இதை கேட்டா என்ன நடக்கும்னு யோசிச்சேன். சிரிச்சேன்” தோள்களை குலுக்கினான் முகுந்தன்.
“அதுக்கு வாய்ப்பே இல்லை. நான் வீட்டுக்கு வரவேயில்லை. எனக்கு இன்னும் சில மணி நேரத்தில், திருநெல்வேலிக்கு பஸ் இருக்கு. நான் கிளம்புறேன்” மாதங்கி கூற, “மாதங்கி…” கர்ஜித்தான் அரவிந்த்.
முகுந்தன், மாதங்கியை யோசனையாக பார்த்தான்.
“நான் வீட்டுக்கு வரலை அண்ணா. நான் செய்தது தப்பு தான்.” மாதங்கி ஆரம்பிக்க, “நீ செய்தது தப்பே இல்லை” அரவிந்த் தன் தங்கையை சமாதானம் செய்ய முயற்சித்தான்.
“இல்லை அண்ணா. தப்பு தான். ஆனால், அதுக்குன்னு அம்மா செய்றது எல்லாம் ரொம்ப ஓவர். நீ உள்ள இருக்கும் பொழுது என்னை வெளிய அனுப்பிட்டாங்க. நான் மகளே இல்லைன்னு சொல்லிட்டாங்க. என் பிள்ளை… என் பிள்ளை… உன்னை மட்டும் தான் சொன்னாங்க. என்னை என்ன தவிட்டுக்கா வாங்கினாங்க?” மாதங்கி கேட்க, முகுந்தனுக்கு அந்த சூழ்நிலையிலும் சிரிப்பு வந்ததது.
“என்ன சிரிப்பு?” அவள் முகுந்தனை பார்த்து கேட்க, “இல்லை, தவிட்டுக்கு வாங்கியிருந்தாலும், கொஞ்சம் பார்த்து நல்ல பொண்ணா வாங்கியிருக்கலாம்” அவன் சிரியாமல் கூற, “டேய்…” மாதங்கி அவனிடம் சீறினாள்.
‘ஏண்டா? நீ வேற?’ அரவிந்த் முகுந்தனை பரிதாபமாக பார்த்தான்.
“மாதங்கி, இவ்வளவு நாள் நீ வெளி நாட்டில் இருந்த, இப்ப இங்க வந்திட்டு வீட்டுக்கு வரமால் போனா நல்லாருக்காது.” அரவிந்த் கூற, “வேண்டாம் அண்ணா. நான் வந்தாலும் ஆயிரம் பிரச்சனை வரும். அப்பா, இப்ப தான் உடம்பு தேறிக்கிட்டு வராங்க. என்னை பார்த்தா, நாசமாகிரும்முனு அம்மா சொல்லுவாங்க” மாதங்கி கண்கலங்க கூறினாள்.
மாதங்கியை அழைக்க கிளம்பும் பொழுது, அரவிந்திடமும், முகுந்தனிடம் மரகதவல்லி கூறிய அதே வார்த்தைகளை, மாதங்கி இப்பொழுது கூற, இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
“என்ன அம்மா இப்படி தானே சொன்னாங்க?” மாதங்கி கேட்க, அவர்களிடம் மௌனம்.
“எனக்கு தெரியும் அண்னா” மாதங்கி அசட்டையாக கூற, “எத்தனை நாளைக்கு இப்படி ஒருத்தரை ஒருத்தர் பார்க்காம இருக்க முடியும். காலம் எல்லா காயத்தயும் ஆற்றும்.” அரவிந்த் கூற, “அதெல்லாம் அப்புறம் பாப்போம் அண்ணா. நான் வீட்டை கூட ரொம்ப மிஸ் பண்ணலை அண்ணா. என்னை அடிச்சி பத்திட்டாங்க. ஆனால், நான் ரோடு ஓரமா இருக்கிற கரும்பு சாறு, சர்பத், இளநீர் இதை எல்லாம் யு.எஸ் யில் ரொம்ப மிஸ் பண்ணினேன். வாங்கி குடு” மாதங்கி சூழ்நிலையை சகஜமாக்கினாள்.
“இப்பவும் சாப்பாடு மட்டும் தானா? சமைக்க தெரியாதா?” முகுந்தன் அவள் பெட்டியை எடுத்தபடி, தீவிரமாக கேட்க, “சமைக்க படிக்கவா அமெரிக்கா போனேன். அதை இங்கயே படிக்க முடியாது?” அவளும் அவனிடம் தீவிரமாகவே பதில் சொன்னாள்.
பல தடவை அழைத்தும் மாதங்கி வீட்டிற்கு வர மறுத்துவிட்டாள். “உன் திமிரும், கொழுப்பும் கொஞ்சம் கூட அடங்கவே இல்லை.”முகுந்தன் கடுப்போடு, அவள் வீட்டிற்கு வராத கோபத்தை வெளிப்படுத்தினான்.
“தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ… தேங்க் யூ… அது கூடவே பிறந்தது” அவள் படையப்பா ரஜினி போல கூற, முகுந்தன் தலையில் அடித்து கொண்டான்.
அவர்கள் வாங்கி கொடுத்த கரும்பு சாறை அவள் ருசிக்க, “அரவிந்த், இவ மாறவே இல்லை” முகுந்தன் கூற, “இல்லை முகுந்தன் ரொம்ப மாறி இருக்கா. இவ்வளவு யோசிக்க மாட்டா. இப்ப ரொம்ப யோசிக்குறா. அம்மா, இவ மேல கோபமா இருக்கிறதை, பழைய மாதங்கி நேரில் போய் பார்த்து சண்டை போடுவோமுன்னு சொல்லுவா. அதே பிடிவாதம் தான். ஆனால், ரொம்ப யோசிக்குறா. ஏதோ ஒரு வகையில் ரொம்ப காயப்பட்டிருக்கா. அவ போக்கில் விடுவோம்.” அரவிந்த் கூறி, அவளை அவள் விருப்பத்திற்கு இணங்க பேருந்து நிலையத்திற்கு அழைத்து சென்றான்.
“திருநெல்வேலியில் என்ன பண்ண போற?” முகுந்தன் கேட்க, “அங்க இருக்கிற ஃபாரஸ்டில் ரோபோடிக்ஸ் சம்பந்தமா ஒரு ப்ராஜெக்ட். அப்புறம், நான் ஒரு அனிமேட்டட் மூவி பண்ணணும்முனு யோசிச்சிருக்கேன். அதுவும் அங்க தான்.” மாதங்கி கூற, இருவரும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்.
ஆனால், எதுவும் பேசவில்லை. அவள் கேட்டுக்கொண்ட படி பேருந்தில் வழியனுப்பிவிட்டு அவர்கள் வீட்டை நோக்கி சென்றனர்.
மாலை வேளையில் சென்னையில் இறங்கி இருந்தாள் மாதங்கி. சுமார் பதினான்கு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்து மறுநாள் காலையில், திருநெல்வேலி வந்தடைந்தாள்.
அவளை அழைத்து செல்ல ஒரு கார் வந்திருக்க, திருநெல்வேலியிலிருந்து நாற்பத்தி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள களக்காடு நோக்கி அவள் பயணம் ஆரம்பித்தது.
சில்லென்ற காற்று அவள் முகத்தில் மொத, அவள் ஆர்வமாக வெளியே பார்த்தாள்.
சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக அமைந்திருந்தது அந்த பாதை.
அவள் மனம் அமெரிக்காவையும், தான் பயணித்து கொண்டிருக்கும் இடத்தையும் ஒப்பிட்டு கொண்டது. ‘உயர்ந்த கட்டிடங்கள் இருந்தாலும், அமெரிக்காவிலும் பல இடங்கள் பசுமையாகவும் காடு போலவும் இருக்கும். நீர் நிலைகள் கூட மனிதனால் உருவாக்கப்பட்டது போல ஓடும். அங்க அழகா இருக்கும்.’
‘ஆனால், நம்ம ஊரில் குளத்தை பார்க்கும் பொழுது, குதிச்சு விளையாடணுமுன்னு தோணுது. இயல்பு மாறாத மக்கள். இந்த பசுமை, இந்த காற்று தர உரிமையும், சுந்தந்திரமும் தனி சுகம் தான்.’ அவள் மனம் அனைத்தையும் மறந்து அதில் லயிக்க தொடங்கியது.
அரவிந்த் அழைக்க, “அண்ணா திருநெல்வேலி வந்துட்டேன். இன்னும் கொஞ்ச நேரத்தில் களக்காடு போய்டுவேன். அங்க என் ஃபிரென்ட் அவன் வீட்டில் தான் தங்க சொன்னான். பாட்டி தாத்தா கூட இருக்கான் போல. நான் தான் எனக்கு வேற வீடு தனியா வாடைகைக்கு பார்க்க சொல்லிட்டேன்.” தன் சகோதரனிடம் நேற்று கூறியிருந்தாலும் மீண்டும் கூறினாள் மாதங்கி.
வீட்டில் பலரும் ஸ்பீக்கரில் கேட்பார்கள் என்று அவளுக்கு தெரியும்.
“அம்மா நீ வீட்டுக்கு வரலைன்னு ரொம்ப கோபப்பட்டாங்க.” அரவிந்த் கூற, “ஏன் வந்தா எனக்கு ஆரத்தி எடுத்து வரவேத்திருப்பாங்களா?” இடக்காக கேட்டாள் மாதங்கி.
“காலப்போக்கில் எல்லாம் சரியாக மாதங்கி.” அரவிந்த் தனி அறைக்கு வந்து பேசினான்.
“ம்…” தன் பேச்சை முடித்து கொண்டாள் மாதங்கி.
‘காலம் பலவற்றை மாற்றும். உண்மை தான். குற்ற உணர்ச்சியால், நான் ஓடும் ஓட்டத்தை என்றாவது காலப்போக்கில் நிறுத்த முடியுமா?’
‘என்னால் கிருஷின் குடும்பத்திற்கு ஏற்பட்ட நிலை மாறி இருக்குமா? என்னால், ஒரு நாளாவது கிருஷ் குடும்பத்திற்கு செய்த அநீதியை மறந்து வாழ முடியுமா? கிருஷ் தப்பு பண்ணினான். நானும் செய்தேன். அவள் அறிவு அவளுக்கு அந்த நொடி ஆதரவாக பேசினாலும், மனம் அவளை சுருக்கென்று தைத்தது. நான் எல்லாத்தையும் மறக்கணும். காலம் மறக்கடிக்கும்.’ நம்பிக்கையோடு தன்னை மீட்டு கொண்டாள் மாதங்கி.
மாதங்கி தான் வசிக்க போகும் வீட்டின் முன் கார் நின்றது.
மேற்கு தொடர்ச்சி மலை அருகே இருப்பதால், அதற்கு ஏற்ப இதமான காற்று அவள் உடலை வருடியது. நீரின் சத்தமும் அவள் காதில் ஒலிப்பது போலவே இருந்தது.
‘படிப்பு, படிப்பு, வேலை வேலைன்னு இருந்துட்டோம். இந்த ரம்மியமான இடம், மனசுக்கு மாற்றம் தரும்.’ நம்பிக்கையோடு அந்த வீட்டிற்குள் நுழைய, தன் எண்ணம் அனைத்தும் ஒரு நொடியில் பொய்ப்பித்து போனதை அந்த நொடியே உணர்ந்தாள் மாதங்கி.
எதை மறக்க நினைத்தாளோ, அந்த எண்ணத்தில் நாயகன் அவள் கண்னமுன்னே உயரமாக நின்று கொண்டிருந்தான் கைகளில் குழந்தையை ஏந்தியபடி!
பல வருடங்கள் கழித்து, அன்று மருத்துவமனை சந்திப்புக்கு பின் இன்று கிருஷை பார்க்கிறாள்.
அவன்! முன்னை விட கம்பீரமாக, சற்று அடர்ந்த மீசையோடு முறுக்கேறிய உடலோடு அழுத்தம் நிறைந்த கண்களோடு குழந்தையோடு நின்று கொண்டிருந்தான். அந்த குழந்தை அவனை கொஞ்சி கொஞ்சி விளையாடி கொண்டிருந்தது.
பெண்கள் பார்க்க விரும்பும் தோற்றம். ஆனால், நெருங்க அஞ்சும் அழுத்தம்.
அவன் முகத்தில் கண்ணியம். அதே நேரம் கண்டிப்பு.
‘சீனியர்… சீனியர்…’ அவள் கண்கள் விரிந்தது. அவள் அதரங்கள் பேச்சை மறந்தன. அவள் இதயம் துடிப்பை மறந்தது.
‘என்ன பேசுவது? அவன் பேசுவானா?’ அவள் குழம்ப, அவன் பேசினான்.
“ஹலோ, யார் வேணும்? என்ன வேணும்?” அவன் உதட்டில் ஒரு முகமன் புன்னகை மட்டுமே. அவன் கண்கள் புதியவர்களை அளவிடும் பார்வை.
‘இவனுக்கு என்னை அடையாளம் தெரியவில்லையா? வருடங்களில் என்னை மறந்திருப்பானா? இல்லை மண்டையில் அடிகிடி பட்டு எல்லாத்தையும் மறந்துட்டானா?’ அவள் குறும்புக்கார மூளை கொஞ்சம் ஏடா கூடமாகவும் யோசித்தது.
‘யார் குழந்தை? அவனுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் பிறந்திருச்சா?’ அவள் மூளை இன்னும் இன்னும் கேள்விகளை தொடுக்க, பதில்வராமல் போக, கிருஷின் முகத்தில் சற்று கடினம் வந்து அமர்ந்து கொண்டது.
“யார் வேணும்? என்ன வேணுமுன்னு கேட்டேன்?” அவன் குரலில் அழுத்தம் கூடி இருந்தது.
‘இவன் என்ன என்னை மிரட்டறது? திமிர் பிடிச்சவன். திமிர் பிடிச்சவன்… உன்னால் தொலைந்த என் நிம்மதி வேணுமுன்னு கேட்டா என்ன பண்ணுவான்?’ அவன் அழுத்தத்தில், அவள் கோபம் கனன்றது.
“…” மாதங்கியிடம் மௌனமே இருக்க, “காது கேட்காதா? இல்லை வாய் பேச வராதா?” கிருஷ் கடினமாக கேட்டான்.
அவனுக்கு பதில் கொடுக்க, அவள் விழைந்தாலும் பல கேள்விகள் அவள் சிந்தையை அடைத்து கொண்டு அவளை மௌனிக்கவே செய்தது.
பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…