birunthavanam-24

Birunthaavanam-94d13328

பிருந்தாவனம் – 24

விழிநீரோடு மாதங்கி விலகி செல்ல, ‘இவ இப்படி எல்லாம் அமைதியா போகுற ஆளே கிடையாதே. ரொம்ப ஓவரா பேசிட்டோமோ?’ அவன் பார்வை அவளை கோபமாக தொடர்ந்தாலும், அவன் முகத்தில் சிந்தனை ரேகைகள்.

‘மாதங்கி பொறுமையா போ. பொறுமை… பொறுமை… பொறுமை…’ தனக்கு தானே கூறிக்கொண்டு தன் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தாள்.

“என்னை பார்த்து கிருஷ் எப்படி அப்படி கேட்கலாம்? என்னை பார்த்தா அப்படியா தெரியுது?” முணுமுணுத்து கொண்டே மெத்தை மீது படுத்தாள் மாதங்கி.

அவள் கண்களில் கண்ணீர் வடிந்தது. அத்தோடு, மெல்லிய விசும்பல் சத்தமும்.

கிருஷ் மாடியிலிருந்து கீழே இறங்கினான். வெளியிலிருந்து யாரும் வரமுடியாதபடி கதவை சாத்தியிருந்தாள் மாதங்கி. ஆனால், கீழே கிருஷ் வரக்கூடிய வழி திறந்து தான் இருந்தது.

அவள் கதவை திறந்து வைத்திருந்ததில், அவன் முகத்தில் புன்னகை வந்தது. அது நம்பிக்கை. அவளுக்கு அவன் மீதான நம்பிக்கை.

அவள் வீட்டிற்கு சென்றான். அங்கு அமைதி நிலவியது. சில நொடிகள் அமைதிக்கு பின் விசும்பல் சத்தமும். அவன் தன் நெஞ்சை தடவி கொண்டான். அவன் இதயத்தின் ஓசை அவனுக்கு புரியவில்லை.

அமைதிக்கும், அவள் விசும்பல் சத்தத்திற்கும் இடையே அவன் இதயமும் துடித்தது.

‘நான் அப்படி பேசி இருக்க கூடாதோ?’ அவன் சுவரில் சாய்ந்தபடி தன் கண்களை இறுக மூடினான்.

‘சமாதானம் செய்வோமா?’ அவன் கால்கள் முன்னே செல்ல எத்தனிக்க, ‘நல்லா அழட்டும், எத்தனை பேரை அழ வச்சிருக்கா’ அவன் அறிவு சட்டம் பேச, மடமடவென்று இறங்கி தான் தங்கி இருக்கும் கீழ் வீட்டிற்கு சென்று மெத்தையில் மல்லாக்க படுத்தான்.

அவனுக்கு உறக்கம் வரவில்லை. புரண்டு படுத்தான். அவள் விசும்பல் சத்தம் கேட்கவில்லை. ஆனால், அவன் மனம் அவளையே சுற்றி கொண்டு வந்தது.

தன் மெத்தையை ஓங்கி குத்தினான். ‘ஏன் வந்தாள்? என் நிம்மதியை குலைக்கவா?’ அவன் முகத்தில் ரௌத்திரம்.

அவன் இதயம் அவள் ஏற்படுத்திய ரணத்தில் கொதிக்க, அவன் இதயத்தின் ஓரமா, ‘இப்படிலாம் அழ மாட்டாளே?’ அவளை எண்ணிக்கொண்டு துடித்தது.

நொடிகள் நிமிடங்களாக கடந்து போக, அவன் நித்திரை வரமால் தவிக்க, அர்த்த ராத்திரியில் அந்த காலடி ஓசையில் அவன் கண்களில் கேலி மின்ன அலறினான்.

“என்ன கிண்டலா?” மாதங்கி, அந்த இருட்டில் தலை முடி ஆங்காங்கே தொங்கி கொண்டு, ரௌத்திரமாக நின்றாள்.

“இல்லை, இந்த ஊரில் புலி பயம் மட்டும் தான் நேத்து வரைக்கும் உண்டு. ஊருக்குள்ள ரொம்ப வராது. ஆனால், இந்த வீடு கொஞ்சம் ஊரிலிரிருந்து வெளிய தள்ளி தானே இருக்கு? அதனால, எப்பவாது ராத்திரி நேரம் முண்டந்துறை புலி வரும். புலி நம்மளை ஒன்றும் செய்யாது. ராத்திரி நேரம் வந்தாலும், பகல் நேரம் காட்டுக்கு போய்டும். அதனால், நான் புலிக்கெல்லாம் பயப்பட மாட்டேன்.” மின்விளக்கை உயிர்பித்தபடியே , அவன் பேசினான்.

“நான் உன் கிட்ட புலி கதை கேட்க வரலை.” அவள் வெடுக்கென்று கூற, “பேய் கதை கேட்க வந்தியா? நீ வந்ததும் நான் ஒரு நிமிஷம் தப்பா நினைச்சிட்டேன். பேய் மேல எனக்கு பெரிய நம்பிக்கை கிடையாது. இருந்தாலும் நான் கேட்ட கதை வச்சி, பேய்க்கு நல்ல மனசு இருக்கும். அடிச்சி போட்டா கூட, தனியா இருக்கும் பொழுது தான் அடிக்கும். ஊரை கூட்டி, அடிக்காது. ஊரை கூட்டி அசிங்க படுத்தாது. தப்பு பண்ணினவனை மட்டும் தான் அடிக்கும். மொத்த குடும்பத்தையும் அடிக்காது. அது தான் உன்னை பேய்ன்னு சொல்லி பேய்யை சங்கட படுத்த நான் விரும்பலை.” அவன் கேலி போல் ஆரம்பித்து தீவிரமாக முடித்தான்.

“நீ என்னை என்ன வேணும்ன்னாலும் சொல்லு. நான் ஏத்துக்குறேன். நீ செய்ததுக்கு நான் திரும்பி செய்தேன்” அவள் கூற, அவன் அவள் சங்கை பிடித்திருந்தான்.

“என்கிட்ட நீ சொல்லிருக்கலாமே?” அவன் கேட்க, “நான் சொல்லலியா கிருஷ்?” அவள் கேட்க, “இப்படி செய்வேன்னு சொல்லலியே டீ” அவன் ஒரு கையை அவள் ஒரு பக்கத்தில் வைத்து, மறுகையால் அவள் கழுத்தை பிடித்தபடி கர்ஜித்தான்.

“நான் இப்படி செய்வேன்னு நீ நினைக்கவேயில்லையா?” அவள் கண்களை சுருக்கி கேட்க, “சத்தியமா நினைக்கலை மாதங்கி. உன் அம்மா கிட்ட சொல்லுவா, உங்க அண்ணன், முகுந்தன் கிட்ட சொல்லுவ… இல்லை, எங்க வீட்டில் சொல்லுவ… எல்லாத்தையும் எப்படி சமாளிக்கணுமுன்னு யோசிச்சி வச்சேன். ஆனால், நீ செய்தது என்னை பழி வாங்க.. நீ என்னை பழி வாங்கிட்ட மாதங்கி. நான் என் மொத்த குடும்பத்தையும் இழந்து இங்க நிற்குறேன்” அவன் குரலில் வேதனை இருந்தது.

‘நான் பழிவாங்க இதை செய்யவில்லை. எனக்கு அப்ப அது சரின்னு தோணுச்சு’ அவள் வேதனையை போக்கும் வழி தெரியாமல் அவனை பார்த்தாள்.

“அழகான ராணி கிட்ட ஒரு ராஜா தோற்க மாட்டான். அறிவான ராணி கிட்டயும் ஒரு ராஜா தோற்கமாட்டான். அழகும், அறிவும் சேர்ந்து வஞ்சம் செய்யும் பொழுது, அந்த ராஜ தோற்று அவன் ராஜ்ஜியத்தயே இழந்து நிற்பான்” கிருஷ் கூற, “நான் செய்தது வஞ்சமா?” மாதங்கி பரிதாபமாக கேட்டாள்.

“ஆமா” அவன் குரலில் உறுதி இருந்தது.

“நீ என்னை காதலனாய் பார்க்கலை. எனக்கும் அது தெரியும். ஆனால், ஒரு நண்பனா பார்த்தது நிஜமன்னா கூட நீ அப்படி பண்ணிருக்க மாட்ட. ஒரு நண்பனுக்கு நீ இப்படி ஒரு நிலைமை வர விட்டிருக்க மாட்ட. இப்படி ஒரு நண்பனை ஊரை கூட்டி அவமான படுத்திருக்க மாட்ட. நீ ஒரு சுயநலம் புடிச்சவ. நீ என்னை நண்பனா கூட பார்க்கலை.” அவன் நிறுத்தினான்.

“இந்த சுயநலத்தில் என்ன சாதிச்சிட்ட? உங்க வீட்டுக்கும் கஷ்டம். என் வீட்டுக்கும் கஷ்டம். எனக்கும் கஷ்டம். நீ மட்டும் நல்லா இருக்க . நீ நினைச்ச படிப்பை படிச்சி சாதனை செய்திருக்க. அப்படி தானே. நீ… நீ மட்டும் நல்லாருக்கணுமுன்னு இதை எல்லாம் பண்ணின?” அவன் அவள் கழுத்தை இன்னும் அழுத்தினான்.

அவளுக்கு மூச்சு விட சிரமமாக இருக்க, “நான் நல்லாருக்கேன். இப்படியே, என்னை கொன்னுடு. ஆனால், மாடியில் வச்சி பேசின மாதிரி… என்னை காயப்படுத்த நீ தப்பா பேசி, உன்னை தரம் தாழ்த்திக்காத. என்னால், அதை தாங்கிக்கவே முடியலை.அதுவும் நீ அப்படி பேசுறது, எனக்கு சுத்தமா பிடிக்கலை” அவள் அழுத்தமாக கூறினாள்.

‘என்னை உன் பின்னாடி வரவச்சி என் வாழ்க்கையை அழிச்சாச்சு. இப்ப எதுக்கு அந்த திலக் உன் பின்னாடி சுத்தறான். அவன் வாழ்க்கையை அழிக்க போறியா?’ கிருஷ் மாடியில் பேசிய வார்த்தையை எண்ணி பார்த்தான்.

‘நான் அப்படி பேசி இருக்க கூடாது.’ அவன் கைகள் கீழே இறங்கியது.

“இதை சொல்ல தான் கீழ வந்தேன்.” அவன் அறையிலிருந்து செல்ல எத்தனித்தாள்.

கொஞ்சம் தூரம் சென்று, அவனை பார்த்து திரும்பி, “அப்பவே உன் கிட்ட பேசியிருந்தா நான் இவ்வளவு பொறுமையா பேசி இருக்க மாட்டேன்.” அவள் கூற, “இத்தனை வருஷத்தில், பொறுமை வந்திருக்கு” அவன் கேலியாகவே கேட்டான்.

“தெரியலை…” தோள்களை குலுக்கிவிட்டு சென்றவள், ஒரு நொடி நின்றாள். அவள் கண்களில் ஆசை. “பிருந்தா எப்படி இருக்கா?”

“சாரி…” அவன் ஒற்றை வார்த்தையில் முடித்துவிட, அவள் ஏமாற்றமாக மாடிக்கு சென்றாள்.

மறுநாள் காலையில் கிருஷின் அலுவலகத்தில்.

திலக், ஹென்றி, மாதங்கி மூவரும் அவனை சந்திக்க காத்திருந்தனர்.

கிருஷ் அவர்களை உள்ளே அழைத்து அமர சொன்னான்.

“நீங்க வனப்பகுதிக்காக ட்ரோன் சொல்றீங்க. இப்ப நிறைய சின்ன சின்ன ட்ரோன் இந்தியாவில் உபயோகத்துல இருக்கு. நீங்க சொல்றது அடுத்த லெவல். ஒரு ட்ரோனை பறக்க விட முதலில் நாம பர்மிஷன் வாங்கணும். ட்ரோன் பறக்க விட அவ்வளவு சீக்கிரத்தில் ஒரு வெளிநாட்டவருக்கு பர்மிஷன் கிடைக்காது.” அவன் நிறுத்த மூவரின் முகத்திலும் சிந்தனை பரவியது.

“அதை அடுத்ததா யோசிப்போம். அதுக்கு முன்னாடி, நீங்க என்னவெல்லாம் செய்யறதுக்காக…” அவன் கேள்வியாக நிறுத்த, “காட்டுக்குள் விதை விதைக்க, மரம் சரிந்து விழுந்தா உடனே கண்டுபிடிக்க, மிருகங்கள் எப்படி இருக்குன்னு பார்க்க, மிருங்களுக்கு உணவு, தண்ணீர் தேவை இருந்தா கொடுக்க, டிம்பேர் திருட்டை தடுக்க, தீவிரவாதி நடமாட்டம் இருந்தா பார்க்க… இப்படி பல காரணங்கள்…” திலக்கும் ஹென்றியும் அடுக்கி கொண்டே போனார்கள்.

அவர்களை இடைமறித்து, தன் பார்வையை அவள் மீது வைத்து, “இங்க இதுல பல பிரச்சனை இல்லையே…” என்று அலுவலக கேள்வி போல் நிறுத்தினான் அவன்.

“உங்களை மாதிரி ஆஃபிசரை கடத்திட்டு போனால் கூட, எங்க ட்ரோன் கண்டுபிடிக்கும்” அவள் பட்டென்று கூற, “ஹா… ஹா…” அவன் பெருங்குரலில் சிரித்தான்.

“அப்ப, எனக்காக நிச்சயம் பர்மிஷன் குடுத்து தான் ஆகணும் போல” அவன் கேலியாகவே நிறுத்த, திலக், ஹென்றி இருவரும் மாதங்கியிடம் கண்களால் செய்கை காட்டினர்.

மாதங்கி மறுப்பாக தலை அசைக்க, அவர்கள் மௌன சம்பாஷணையை கண்டுகொண்ட கிருஷ், “என்ன?” என்று மாதங்கியிடம் கேள்வியாக நிறுத்தினான்.

“நான் இங்க ஒரு அனிமேட்டட் ஃபிலிம் பண்ணனுமுனு நினச்சேன்.” அவள் நிறுத்த, ‘அவள் கேட்க வேண்டும்’ அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

“அதை பத்தி இப்ப எதுவும் கேட்க தேவை இல்லை. மத்த வேலைக்கெல்லாம் பர்மிஷன் கிடைச்சா இதை யோசிக்கிறேன். இல்லைனா, நான் எங்க ஊர்க்கு சீக்கிரம் போகணும்.” அவள் முடித்து விட, அவன் தோள்களை குலுக்கி கொண்டான்.

கிருஷ் தன் அலுவலக வேலையில் மூழ்கி விட்டான்.

திலக், ஹென்றி, மாதங்கி மூவரும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு, அவர்களுக்கு தேவையானதை வடிவமைக்க ஆரம்பித்தனர்.

அன்று மதியத்திற்கு மேல், கிருஷ் ஜீப்பை எடுத்துக்கொண்டு கிளம்பினான். வழியில் மாதங்கி வர, அவன் வண்டியை நிறுத்தினான்.

மாதங்கியும் நின்றாள். ‘எத்தனை நாள் சண்டைபிடிப்பது?’ அவர்கள் முகத்தில் சண்டையிட்ட ஒரே நாளில் சலிப்பு.

மாதங்கிக்கு அவன் மேல் எந்த கோபமுமில்லை. அதை அவள் முகம் அப்பட்டமாக காட்டியது. அதை கிருஷும் அறிவான். அதே நேரம் இறங்கி வந்து பேசுவாள் என்றெல்லாம் சொல்ல முடியாது. அதை அவள் அலட்சியம் அப்பட்டமாக கூறியது.

அவளை பற்றி அவனுக்கு தெரியாதா?

கிருஷின் மனநிலை. அவள் மேல் கோபம். அந்த இடத்தில் ஒரு ஆண் இருந்திருந்தால் அடித்து துவைத்திருப்பான். வேறு பெண் இருந்திருந்தால், அவளை தன் முகத்தில் முழிக்க கூடாது என்றிருப்பான். ஆனால், எதிரில் நிற்பவள் மாதங்கி ஆகிற்றே!

அவனின் மாதங்கி! இல்லை… இல்லை.. அவன் மனம் அடித்து கூறியது. அவள் அவனின் முன்னாள் காதலி மாதங்கி.

இணைந்தால் மட்டும் தான் காதலா? விலகி நின்றாலும், விலகி போனாலும் அது காதல் தானே? அவன் மனம் அவனை சமாதானம் செய்தது.

‘பேச வேண்டாம் என்றால் போக வேண்டியது தானே?’ மாதங்கி யோசித்தபடியே அங்கு நின்றாள்.

‘பேச வேண்டாமுன்னா போக வேண்டியது தானே?’ அவனும் அவளை பார்த்தபடி நின்றான்.

அவள் கண்களில் ஒரு மெல்லிய ஆர்வம் எட்டி பார்த்தது.

” பிருந்தாவுக்கு கல்யாணம் ஆகிருச்சா?” அவள் கேட்க, “அதை நீயே கேட்க வேண்டியது தானே உன் ஃபிரென்ட் கிட்ட.” அவன் பளிச்சென்று கேட்டான்.

அவள் கண்களில் சொல்லி வடிக்க முடியாத வேதனை வெளிப்பட்டது. அவன் கண்கள் அவளை கண்களை உற்று நோக்கியது. அவள் வருத்தத்தை தனதாக்க துடித்தது.

அவன் பார்வை, அவள் நெற்றியை வருடியது. அவன் கண்கள் அன்றைய நினைவில் கலங்கியது.

‘எல்லாம் இவள் தேடி கொண்டது. நான் தப்பு செய்திருந்தா, கல்யாணம் செய்து கொண்டு என்னை தண்டிக்க வேண்டியது தானே? இப்படியா இவளும் கஷடப்படுவா?’ அவன் இளக ஆரம்பிக்க, சுதாரித்து கொண்டான் கிருஷ்.

‘பழசு வேண்டாம். நினைக்க கூடாது. பேச கூடாது.’ தனக்கு தானே உறுதி எடுத்து கொண்டான்.

“நான் வேலையா போறேன் என் கூட வரியா?” அவன் சூழ்நிலையை சரி செய்தபடி கேட்க, “அது தான் வேலையா போறேனேன்னு சொல்றீங்களே. அப்புறம் நான் எப்படி?” அவள் முகம் திருப்பிக் கொண்டாள்.

“சைட் ஒர்க் தான். என்ன உன்னை கடத்திருவேனோன்னு பயமா?” அவன் கேலி பேச, அவள் வண்டியில் அமர்ந்து கொண்டாள்.

“நீ விடலை பையனா இருக்கும் பொழுதே அந்த மாதிரி தப்பு பண்ற ஆள் கிடையாது. இப்ப நீங்க பெரிய ஆஃபிஸர். அப்படிலாம் செய்ய மாட்டீங்க.” அவள் கூறிக்கொண்டு அவன் வண்டியில் ஏறி மாதங்கி சாய்ந்து அமர, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை.

அவள் வார்த்தையில் இருந்த நம்பிக்கை, அவனை அசைத்து பார்த்தது. அவன் ஒரு பெருமூச்சை வெளியிட்டு தன் வண்டியை செலுத்தினான்.

காட்டு பகுதிக்குள் வண்டியை செலுத்தினான். இருபக்கமும் பச்சை பசேல் என்று இருந்தது. அது மழை காலம் என்பதால் இலைகளில் நீர் துளிகள் ஆங்காங்கே சொட்டிக் கொண்டிருந்தது.

மாதங்கி அந்த இடத்தை ரசித்து கொண்டிருந்தாள். கிருஷின் கவனம் சாலையில் மட்டுமே இருந்தது.

அதே நேரம்…

“கிருஷ், மாதங்கி ரெண்டு பெரும் திரும்ப சந்திச்சிக்கிட்டாங்க.” ஒரு குரல் உறுமியது.

“ஆனால், சண்டை தான் போடுறாங்க.” ஒரு குரல் அவர்கள் புகைப்படத்தை காட்டியபடி யோசனையோடு பேசியது.

“மணமேடையில் கல்யாணத்தை நிறுத்திக்கிட்டு இப்ப சந்திக்கிறவங்க, சண்டை போடாம கொஞ்சவா செய்வாங்க?” மற்றோரு குரல் கேலி போல கூறியது.

“சமாதானம் ஆகிடுவாங்களா?” என்று ஒரு குரல் யோசனையாக கேட்க, “சமாதி ஆகுவாங்க. ரெண்டும் காட்டுக்கு போயிருக்குங்க இன்னைக்கு. காட்டில் கதையை முடிக்கிறோம். இன்னைக்கு முடிக்கிறோம். ” என்று ஒரு குரல் உறுதியாக கூறியது.

“இன்னைக்கே முடியுமா?” ஒரு குரலில் ஆர்வம்.

“இன்னைக்கு இல்லைனா, சீக்கிரம் முடிக்குறோம். அவ சாவு நம்ம கையில் தான். காலம் மாறினாலும், காட்சிகள் மாறுவதில்லை. இந்த முறை திட்டம் தப்பாது.” அந்த குரலில் அழுத்தம்.

“அது எப்படி?” மற்றோரு குரல் கேட்க, “எப்படி ரெண்டு பேரும் சேர்ந்து தான் சுத்துவாங்க. அவன் அவளை விடமாட்டான். நாமளும் அவங்களை விட போறதில்லை” அந்த குரலில் உறுதி இருந்தது.

அதே நேரம், கிருஷின் ஜீப் சற்று காட்டின் உட்பகுதிக்கு சென்றிருந்தது. ஆள், அரவமில்லை. அங்கு அமைதி சூழ்ந்திருந்தது. ரம்மியமாக இருந்தாலும், அந்த தனிமை சற்று அச்சுறுத்தும் வகையாக இருந்தது.

கிருஷ் எதுவும் பேசவில்லை. உண்மையில் என்ன பேசுவதென்று அவனுக்கு தெரியவில்லை. எதிரில், வருபவளை அழைத்து வரவேண்டும், என்ற எண்ணம் அவனுள் எழ அழைத்து வந்துவிட்டான்.

ஏதாவது பேசினால், மாதங்கியை காயப்படுத்தி விடுவோம் என்ற எண்ணம் தோன்ற மௌனம் என்னும் ஆயுதத்தை கையில் எடுத்து கொண்டான்.

‘பேசிட்டே போனால், பயமா இருக்காது.’ என்று எண்ணியபடி அப்படியொரு கேள்வியை கேட்டாள் மாதங்கி.

அவள் கேட்ட கேள்வியில் அவன் கைமுஷ்ட்டி இறுகியது. வண்டியை சட்டென்று நிறுத்தி, தன் கண்களை இறுக மூடிக்கொண்டான்.

அதே நேரம் அவள் எதிரே தான் கண்ட காட்சியில், “….” அவளுக்கு பேச்சு வரவில்லை.

அவன் கைகளை இறுக பற்றி கொண்டாள். அவள் ஸ்பரிசம், அவனை நிதானிக்க செய்தது. அவள் கைகளில் வந்த வியர்வை துளிகள், அவள் இதய துடிப்பை கூறியது.

அவன் சினம் மறந்து, அவள் முகத்தை கேள்வியாக பார்த்தான். அதில் அக்கறை மட்டுமே இருந்தது.

அவள் முகத்தில் வியர்வை துளிகள். பயத்தின் ரேகைகள் மட்டுமே!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!