birunthavanam-25

Birunthaavanam-43ccc4e7

birunthavanam-25

பிருந்தாவனம் – 25

மாதங்கியின் விழியில் தெரிந்த பயத்தில், அவள் பார்வை சென்ற பக்கத்திற்கு தன் முகத்தை திருப்பினான்.

அந்த அடர்ந்த கானகத்தில், இடையில் அவர்கள் சென்று கொண்டிருந்த சாலை. இரு பக்கமும் மிகப்பெரிய மரங்கள் பச்சை பசேலென்று. அடர்த்தியான மரம் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டிருந்தன.

தூரல் விழுந்ததன் அடையாளாமாய் மரத்திலிருந்து மெல்லிய சாரல்.

மழைக்காலம்!  மாலை நேரம்!

மேகங்கள் குழந்தை போல் தவழ்ந்து கொண்டு சற்று கரிய நிறத்தில் காட்சி அளிக்க, அவை யானையோ என்ற சந்தேகம் எழ, ‘அது  யானை இல்லை… நான் தான் யானை’ என்பது போல் ஒரு கரிய உருவம் தலை அசைத்து அசைத்து தன் தும்பிக்கையை ஆட்டியபடி, இவர்களை நோக்கி மெல்ல மெல்ல நடந்து இவர்கள் அருகே வந்துவிட்டது.     

     மிக பெரிதும் இல்லாத, சிறிதும் இல்லாத ஒரு சின்ன யானை அவர்கள் வழியை மறைத்தபடி நின்று கொண்டிருக்க, அவன் முகத்தில் மெல்லிய புன்னகை வந்தமர்ந்து கொண்டது. அவனுக்கு இதெல்லாம் சகஜம் என்பது போல் இருந்தது அவன் செய்கை.

‘கரிய யானை போன்ற ராட்ச மரங்கள்…’ நேற்று இரவில் அவள் எண்ணிக்கொண்ட யானை இப்பொழுது அவள் முன்னே முறம் போன்ற அதன் காதுகளை ஆட்டியபடி நிற்க, அவள் இதயம் வேகமாக துடித்தது.

அவன் கைகளை  அவள் இறுக பற்றிக்கொண்டாள். அவள் கைகளை தன் கைகளுக்குள் பொதித்து கொண்டான் அவளுக்கு தைரியம் அளிப்பது போல். அவள் கைகள் வரை எட்டிய இதயத்துடிப்பு, அவள் பயத்தை கூற, “ஒன்னும் செய்யாது” அவன் அவள் பக்கம் சரிந்து, அவள் செவியோரம் கிசுகிசுத்தான். சத்தம் வெளியே கேட்டுவிட கூடாது என்பதை மட்டுமே நோக்கம் என்பவன் போல.

அவன் மூச்சுக்காற்றும் அவன் அருகாமை மட்டுமே பலம் என்பவள் போல்  மௌனமாக தலை அசைத்து கொண்டாள் மாதங்கி.

அந்த யானை சற்று பக்கவாட்டில் காலை மடக்கி கொண்டு இவர்கள் ஜோடி பொருத்தத்தை உற்று பார்ப்பது போல் நிற்க, “அப்படி என்ன பார்க்குது , நம்ம வழியை விடாம?” அந்த நேரத்திலும் அவளால் வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாமல், அந்த சின்ன யானையின் முகத்தை பார்த்து கேட்டாள் மாதங்கி.

“இறங்கி போய் கேட்டுட்டு வா.” என்று அவன் கூற, அவள் அவனை முறைத்து பார்த்தாள்.

அவள் கைகள், அவன் கைகளுக்குள் தான்!  அதில் நட்பும் இல்லை. அதை தாண்டியும் எதுவும் இல்லை போன்றதோர் தீண்டல்.

“இப்படி எல்லாம் முறைச்சு பார்க்காத. நீ கேட்ட இடக்கு மடக்கான கேள்விக்கு தான் இப்படி இந்த யானை இங்க வந்திருக்கு” அவன் சிரியாமல் கூறினான்.

“நான், அப்படி என்ன கேட்டுட்டேன். நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துக்கலைனு கேட்டேன். அது ஒரு தப்பா?” அவள் அந்த சின்ன யானையை மறந்து  அவனிடம் சண்டையிட தயாராக, அந்த சின்ன யானை ஒரு எட்டு முன்னே நடந்து இவர்கள் ஜீப் அருகே வந்தது.

எதிர்பாராமல் யானையை பார்த்த பொழுது இருந்த பயம் இப்பொழுது மாதங்கியிடம் இல்லை. சில நொடிகளில் தன்னை நிதானித்து கொண்டு, நடப்பது நடக்கட்டும் என்பது போல் அவன் கைகளிலிருந்து தன் கைகளை உருவி கொண்டு , “நான் ஃபோட்டோ எடுக்கட்டுமா?” அவள் கண்களில் ஆர்வம் மின்ன கேட்டாள்.

‘இவள் தான் மாதங்கி.’ அவன் கண்கள் மெச்சுதல் பார்வையை எடுத்து கொண்டாலும், “எல்லா யானையும் அமைதியா இருக்காது. சில சமயம் அமைதியா போய்டும். சில சமயம் எக்குத்தப்பா கூட நடந்துக்கும். இது காட்டு யானை!” அவன் எச்சரிக்க, “அது தான் நீ பக்கத்துல இருக்கியே” அவள் நாக்கை வெளியே நீட்டினாள்.

“அந்த யானை உன்னை மிதிச்சா, என் வாழ்க்கையில் கஷ்டம் இந்த பெண்ணால் மட்டுந்தான். என்னால், தான் மிதிக்க முடியலை. நீ என் சார்பில் கூட இரண்டு மிதி கொடு இல்லை தும்பிக்கையால் தூக்கி போடுன்னு சொல்லி, நான் வேடிக்கை மட்டும் தான் பார்ப்பேன்” அவன் அவளை ஆழமாக பார்த்தபடி கூறினான்.

கிருஷ் பின்னே சொன்னது எதுவும் அவளுக்கு உரைக்கவில்லை. ‘இவனுக்கு என்னால் மட்டுந்தான் கஷ்டமா? அப்படின்னா எனக்கு யாரால் கஷ்டம்?’ என்ற கேள்வியோடு  அவள் முகம் வாடி போனது.

அவள் எதுவும் பேசவில்லை. அங்கு மௌனம் மட்டுமே சூழ்ந்திருந்தது.

 யானையும் அசையாமல் அங்கு நின்று இவர்களை கூர்மையாக பார்க்க, அவள் கண்களில் மெல்லிய சோகம்.

அவன் கோபம் வார்த்தைகளாய் வெடித்துவிட, அவன் கண்கள் அவளை உற்று பார்த்தன. அதில் தெரிந்த மெல்லிய சோகம் அவனை வாட்ட, ‘இப்படி எல்லாம் பேசி என்னவாக போகுது?’ தனக்கு தானே நொந்து கொண்டான்.

“இந்த மாதிரி காட்டில் ஒரு சம்பவம். யானை வந்த டூரிஸ்ட்டை அது தும்பிக்கையால் தூக்கி போட்டிருச்சுன்னு. பொதுவா ஒரு யானை அப்படி செய்யாது. அதுவாட்டுக்கும் போகும். என்னனு விசாரிச்சு பார்த்தா, சும்மா போன யானை முன்னாடி இவன் தான் பக்கத்தில் நின்னு செல்ஃபி எடுத்திருக்கான்” கிருஷ் பேச்சின் திசையை மாற்றினான்.

மாதங்கி சிரித்துக் கொண்டாள். அந்த யானையை ஜீப்பில் இருந்தபடியே புகைப்படம் எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த யானை தும்பிக்கையை உயர்த்திக்கொண்டு, இப்பொழுது இவர்கள் அருகில் வந்தது.

அந்த யானையின் உடல் ஜீப்பை தொட, ஜீப் ஒரு எட்டு பின்னே நகர்ந்தது.

அவள் இதயம் வேகமாக துடித்தது. ஆனால், இந்த முறை அவள் அவன் கைகளை பிடிக்கவில்லை.  அசைவற்று அவள் அமர்ந்திருக்க, அவன் அந்த யானையை அவள் கேமராவில் படம்பிடித்தான் அவளுக்காக!

அந்த யானை இவர்களை ஆசிர்வதிப்பது போல் செய்துவிட்டு வழிவிட, அவன் அதையும் படம் பிடித்திருந்தான்.

அதன் பின் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. அவன் மெளனமாக காரை செலுத்தி கொண்டிருந்தான்.

மீண்டும் பசுமை பசுமை மட்டுமே. அவர்கள் சென்ற வழியை ஒட்டி, ஒரு நீரோடை வளைந்து நெளிந்து சலசலவென்று சத்தம் எழுப்பிக்கொண்டு அவர்களை தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.

அவள் கண்கள் அந்த இடத்தை ஆசையாக தழுவ, அவள் இறங்குவதற்கு ஏதுவான இடத்தில வண்டியை ஓரங்கட்டினான்.

அவள் துள்ளி குதித்து இறங்கி மடமடவென்று செல்ல, சரேல் என்று அவளை தன் பக்கம் இழுத்தான் கிருஷ்.

அவன் இழுத்த வேகத்தில், அவள் அவன் மீது மோதி நின்றாள்.

அவன் ஸ்பரிசம், அவள் பழைய நினைவுகளை தொட்டு, அவன் தோழமையை நினைவூட்டியது. இடைப்பட்ட காலம் அதன் நீட்டிப்பை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து கொள்ள முயற்சிக்க ஆரம்பித்தது.

“பார்த்து… தண்ணியில் இறங்காத. பார்க்க மட்டுந்தான் நிறுத்தினேன்.” அவன் குரலில் எச்சரிக்கை இருக்க, அவள் அவள் நிமிர்ந்து அவன் முகம் பார்த்து தலை அசைத்தாள்.

அப்பொழுது அவன் அலைபேசி ஒலிக்க, அந்த அருகாமை அவளுக்கு மெல்லிய உரிமையை கொடுக்க, அதில் ‘பிருந்தா…’ என்ற பெயர் மின்ன, அனைத்தையும் மறந்து அவன் அலைபேசியை பிடுங்கி அதை அவள் உயிர்ப்பிக்க அலைபேசியோடு ஸ்பீக்கரும் உயிர் பெற்றது.

“ஹலோ அண்ணா…” பிருந்தாவின் குரல் அந்த கானகத்தில் ஒலிக்க, அந்த குரல் மாதங்கியின் உயிரை தொட்டு சென்றது. அவள் அந்த குரலை ரசித்தாள்.

‘என்றுமே கேட்க முடியாமல் போய்விடுமோ? என்ற நான் அஞ்சிய என் தோழியின் குரல்.’ மாதங்கியின் கண்கள் கலங்கியது.

“ஹலோ அண்ணா…” மீண்டும் அவள் குரல்.  சட்டென்று அலைபேசியை பிடுங்கி, ஸ்பீக்கரை அணைத்தான் கிருஷ்.

“பிருந்தா, நான் வேலையா இருக்கேன்” அவன் பேச்சை முடித்துவிட்டான்.

பிருந்தாவின் குரலை கேட்ட மாதங்கி, கண்களில் கண்ணீர் வடிந்தது.  அந்த சாலையில் அனைத்தையும் மறந்து மொந்தென்று அமர்ந்தாள்.

அவள் மடியில் முகம் புதைத்து கண்ணீர் வடித்தாள். அவனுக்கு அவளை பார்க்க பாவமாக இருந்தது. அவள் தலை கோத, அவன் கைகள் அவள் தலை அருகே சென்றது.

மெல்லிய இடைவெளியில் அவன் கைகள் சட்டென்று நின்றது.

அவன் கைகள் நடுங்கியது. ‘இவளை சமாதானம் செய்ய இவள் யார்? நீ யார்?’ என்ற கேள்விக்கு பதிலறியமால் தவித்தான் அந்த கம்பீரமான அதிகாரி.

அவன் கம்பீரம் அவள் முன் தோற்று தான் போனது. காதலில் அவன் அழுத்தமும் கரைந்து தான் போனது. மனமோ இருதலை கொள்ளியாய் தவித்தது.

ஆனால், அவன் எண்ணம் அவளை எதிர்ப்பக்கமே நிறுத்தியது.

“நான் ஒரு கவர்ன்மெண்ட் சேர்வேன்ட். உன் வீட்டு சேர்வேன்ட் இல்லை. நீ என் மொபைலை எடுக்க. புரியுதா?” அவன் கண்டிப்போடு அவள் கண்ணீருக்கு முற்று புள்ளி வைத்தான்.

‘இதை இவர் என் கையை பிடித்து இழுக்கும் பொழுது தெரியலையா?’ என்ற எண்ணத்தோடு, அவள் தன் கண்ணீரை மறந்து விழுக்கென்று எழுந்து அவன் வண்டியில் ஏறினாள்.

“நான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இந்த காட்டில் உன் பாதுகாப்புக்கு நான் பொறுப்பு. அதுக்கு தான் உன்னை பார்த்துக்கிறேன். மத்தபடி உனக்கு ஏதாவது ஆனாலும் எனக்கு கொஞ்சமும் அக்கறை கிடையாது. கவலையும் கிடையாது” அவனது தீண்டலுக்கு விளக்கம் கொடுப்பவன் போல் அழுத்தமாக கூறிக்கொண்டு, வண்டியை கிளப்பினான்.

“ஒரு கவர்ன்மெண்ட் சேர்வேன்ட் உங்க சொந்த வண்டியில் தான் வேலைக்கு வருவீங்களா?” அவள் குறுக்கு விசாரணை போல் கேள்வியை தொடுத்தாள்.

“அது என் இஷ்டம்” அவன் பட்டென்று கூற, “ஒரு கவர்ன்மெண்ட் சேர்வேன்ட் எதுக்கு என்னை கூட்டிட்டு வரணும்” அவள் கடுப்பாகவே கேட்டாள்.

‘இவளை கூட்டிட்டு வந்த என்னை அடிக்கணும். ஆனால், இவளை பார்த்ததும் கூப்பிடணுமுன்னு தோணுச்சே’ அவன் நொந்து கொண்டே, “நான் கூப்பிட்டா நீ ஏன் வந்த?” அவன் வெடுக்கென்று கேட்டான்.

“நீ கூப்பிடன்னு நான் வரலை. நான் ஒரு அனிமேட்டட் மூவி எடுக்கணும். அதுக்கு ஏதாவது உபயோகமா இருக்குமுன்னு வந்தேன்.” அவளும் வெடுக்கென்றே கூறினாள்.

‘வேலை என்றாலும் இப்படி யார் கூப்பிட்டாலும் போய்விடுவாளா இவள்?’ அவன் உதட்டில் அவள் வாதத்தை எண்ணி புன்னகை மலர்ந்தது.

“உன்னை எல்லாம் அந்த யானை கிட்டயே பிடிச்சி குடுத்திருக்கணும். இப்பயும் ஒன்னும் பிரச்சனை இல்லை. அடுத்தால, புலி வரும் அது கிட்ட பிடிச்சி கொடுக்கறேன்” அவனும் அவளுக்கு சளைக்காமல் பதில் சொன்னான்.

அவள் அவன் பேச்சை கண்டுகொள்ளவில்லை.

“பிருந்தா குரலை ரொம்ப நாளைக்கு அப்புறம் கேட்குறேன்” மாதங்கியின் குரலில் கொஞ்சம் மகிழ்ச்சி. கொஞ்சம் இயலாமை. கொஞ்சம் கவலை.

“பேச வேண்டியது தானே?” அவன் அவள் பக்கம் திரும்பி கேட்க, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“எல்லாம் முடிஞ்சி போச்சு.” அவள் குரலில் விரக்தி.

அவன் அவளை ஆழமாக பார்த்தான். ‘ஆரம்பித்து வைத்தது நானாக இருக்கலாம். ஆனால், அனைத்தையும் இத்தனை கொடூரமாக முடித்து வைத்தது இவள் தான். ‘ அவன் கண்கள் இப்பொழுது குற்றசாட்டை எடுத்து கொண்டது.

காட்டிற்குள் ஒரு பகுதிக்கு வந்திருந்தான்.

“இங்க மக்கள் இருக்காங்களா?” அவள் ஆச்சரியமாக கேட்க, “ம்… டீ எஸ்டேட் இருக்கு. வர பாதை தான் கொஞ்சம் காட்டு பாதை. இன்டீரியர் ஃபாரஸ்ட்க்கு இன்னும் போகணும்.” அவன் கூற, “இங்க எதுக்கு வந்திருக்கீங்க” அவள் அக்கறையோடு கேட்டாள்.

“இங்க அவங்க தேவையை பார்க்க வந்தேன். சரி உன் ப்ரொஜெக்ட்க்கு உபயோகமா இருக்குமேன்னு தான் உன்னையும் கூட்டிட்டு வந்தேன்”  அவன் கூற, “தேங்க்ஸ்” அவள் முகத்தில் புன்னகை.

 அவளை அழைத்து கொண்டு, அங்கு தங்கியிருக்கும் மக்களை நோக்கி சென்றான் கிருஷ். மக்களோடு பேசி அவர்களுக்கு தேவையானதை கேட்டறிந்து கொண்டான். அவனையே பார்த்து கொண்டிருந்தாள் மாதங்கி.

அவர்களையே சில கண்கள் பார்வியிட்டு கொண்டிருந்தது.

சிலர், இவர்கள் சேர்ந்து வந்திருப்பதை ஆச்சரியத்தோடு பார்க்க, ஒரு சில கண்கள் வன்மத்தோடு பார்த்து கொண்டிருந்தன.

கிருஷ் அக்கறையோடு மக்களின் தேவைகளை கேட்டுக்கொண்டிருந்தான். கிருஷின் செய்கை அவளை ஈர்த்தது. ‘திலக் சொல்றது போல, எப்பவும் ஃபுல் ஃபார்மல்ஸ் தான் போல?’ அவள் முகத்தில் நமட்டு சிரிப்பு.

‘கிருஷ் ரொம்ப மாறிட்டான், எப்படி திமிரா இருப்பான். இப்ப என்னான்னா, கவர்ன்மென்ட் வேலை பார்க்குறான். மக்கள் நலனை மட்டும் தான் யோசிக்குறான்.’ அவள் சிந்தையை கலைத்தது அவள் அலைபேசி அழைப்பு.

“அண்ணா… அண்ணா…” அலைபேசி துண்டிக்கப்பட்டது.

‘ம்..ச்… சிக்னல் இல்லை’ சலிப்பாக எண்ணியபடி விலகி நடந்தாள்.

“அண்ணா… அண்ணா…” சத்தம் செய்து கொண்டே விலகி நடக்க, கிருஷ் மக்களோடு பேசி கொண்டே எதிர் பக்கமாக நடந்தான்.

கிருஷின் கவனம் மாதங்கியிடம் இல்லை. மாதங்கியின் கவனமோ  அலைபேசியில் இருந்தது.

சில நிமிடங்களுக்கு பின்…

            தன் பேச்சை முடித்துக்கொண்டு திரும்பினான் கிருஷ். மாதங்கியை காணவில்லை.

‘இங்கு தான் இருப்பாள்’ அவன் எண்ணிக்கொண்டு கண்களை சுழல விட்டான்.

அவன் பார்வைக்குள் அவள் வரவில்லை. அவன் கண்கள் அலைப்புறுதலை ஏந்தி கொண்டது. அவன் மனம் துடிப்பை அதிகரிக்க ஆரம்பித்தது.

‘மாதங்கி… மாதங்கி…’ அவன் மனம் சற்று தவிக்க ஆரம்பித்தது.

அந்த கானகத்தில் மழை துளி விழ ஆரம்பித்திருந்தது. காலத்தின் காரணத்தில் கானகம் கரிய நிறத்தில் மாற ஆரம்பித்திருந்தது.

“மாதங்கி… மாதங்கி…” அவன் அழைக்க பதிலில்லை.

அவன் மனம், ‘மாதங்கி…’ என்ற அழைப்பை விடுத்து, ‘மாது… மாது…’ என்று துடிக்க ஆரம்பித்தது.

அவன் சற்று முன் பேசிய பேச்சுக்கள் நினைவு வந்தன. ‘யானை வந்தால் மிதிக்க சொல்வேன். உனக்கு என்ன ஆனால், எனக்கு என்ன? உன் மேல் அக்கறை இல்லை…’ போன்ற வார்த்தைகள் அவன் செவிகளில் மீண்டும் மீண்டும் விழுந்து அவனை கொல்லாமல் கொன்றன.

வாய் வார்த்தைக்கும் மனதிற்கும் துளி சம்பந்தம் இல்லை. அந்த நொடி அவனை அவனுக்கே புரிய வைத்து வாள் கொண்டு அறுத்தது.

அவன் அந்த இடம் முழுதும் தேடினான்! தேடினான்! தேடினான்!

அவனுக்கும் அனைத்தும் மறந்து போயின. ‘மாது… மாது… மாது…’ என்ற அழைப்பு மட்டுமே மனதோடு மிஞ்சி இருந்தது. 

சேர்ந்தால் தான் காதலா?

பிரிந்தாலும் காதல் தானே!

வாழ்ந்தால் தான் காதலா?

மறைந்தாலும் காதல் தானே!

காதல்! காதல்! காதல்!

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!