birunthavanam-28

Birunthaavanam-782a0cdc

birunthavanam-28

பிருந்தாவனம் – 28

 மாதங்கி சொன்ன வார்த்தைகளை கிருஷ் சிந்தித்து கொண்டிருக்கையில், அவன் செவிகளை தீண்டிய காலடி சத்தம் அவன் கவனத்தை ஈர்த்தது.

மாதங்கி, “உள்ள வா…” அவன் அழைத்து செல்ல, “உள்ள தானே இருக்கோம்?” சலிப்பாக கூறினாள் அவள்.

அப்பொழுது, “டொம்…” என்று சத்தம் கேட்க, இருளில் அவன் அவள் கைகளை பிடித்து கொண்டு, உள் பக்கம் இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.

ஏ.சி அறை, ஜன்னல் இல்லை.

கிருஷ் அவளை உள்பக்கம் அறைக்கு அழைத்து செல்ல அந்த அறையின் இருட்டில், மாதங்கி தடுமாறினாள்.

தடுமாறிய அவளை அவன் இடையோடு சேர்க்க, அவள் அவன் மீது சாய்ந்தாள். பிடிமானமின்றி அவன் சாய, அவள் அவன் மீது சரிந்து விழுந்தாள்.

அவள் விழுந்த வேகத்தில் அவள் கூந்தல் அவனை வருடியது. கல்லூரி காலத்தில் மரத்தடியில் அவனை தீண்டிய அவள் ஸ்பரிசம். அவனை எங்கெங்கோ அழைத்து சென்றது.

அவன் இதழ்கள் பதித்து காதல் பரிசு கொடுத்து அவன் உரிமை கொண்டாட விரும்பிய அவள் கன்னம் அவன் அருகில்!

அவன் தோழனாக விலகி நிற்க, அவன் அறிவு உந்தினாலும், மனமோ காதலனாக நிற்கவே விரும்பியது.

அவன் சுவாசம், அவள் வாசத்தை உணர, ‘இல்லை… வேண்டாம்… வேண்டாம்…’ அவன் அறிவு உருபோட்டுக் கொண்டது.

‘நினைவுகளும் வேண்டாம். காதலும் வேண்டாம்.’ கிருஷின் கைகள் அவளை பிடிக்க எத்தனிக்க, அவன் தீண்டலுக்கு மனம் உரிமையை கொடுத்தாலும், அறிவு நட்பை மட்டுமே பாராட்ட அவன் கைகளுக்கு செய்தி அனுப்பியது.

வயதும், அனுப்பவமும் கற்பித்த பாடத்தில் மனதின் வேட்கைக்கு முற்று புள்ளி வைத்தான் கிருஷ். அறிவின் கட்டளைக்கு இணங்கி, அவளை நட்போடு தாங்கி பிடித்தான்.

மாதங்கி அந்த இருளில் விலகி அமரவே முயற்சி செய்தாள். ஆனால், அவள் அறிவு, மனம் இரண்டையும் கட்டுப்படுத்தியது அந்த ஓசை.

‘எங்கிருந்து வருகிறது?’ அவள் அதையே தேட முயற்சித்தாள்.

தன் கைகளை பார்த்தாள், ‘ஒரே ஒரு வளையல். ஆனால், நான் கேட்டது வளையோசை தானே?’ அவள் அங்கு வளையல்களை தேடினாள்.

‘கிருஷின் இதயத்தின் அருகே தான் நான் அந்த ஓசையை கேட்டேன்.’ அவள் குழம்பி போனாள்.

அந்த இருளில், அவளால் சட்டென்று விலக முடியவில்லை. பிடிமானமின்றி தவித்தாள்.

அதே நேரம், அவன் இதய ஓசை அவள் செவிகளை தீண்டியது. அவன், சுவாசம் அவள் கன்னங்களை வருட, பல வருடங்களாக அவளால் மறக்க முடியாத அவன் காதல் பரிசை நினைவுபடுத்தியது.

அவன் இதயத்தின் ஓசை, சுவாசத்தை தாண்டி அவளை ஈர்த்தது அந்த வளையோசை.

‘மாது… மாது… மாது…’ என்ற சொல்லோடு எழுந்த அந்த வளையோசை!

 அவள் உயிரை தொடும் கிருஷின் அழைப்பாய் அந்த வளையோசை. அவளுள் சொல்லில் வடிக்க முடியாத உணர்வு.

அவள் நிமிர்ந்து அவனை பார்த்தாள். அவனும் அவளை தான் பார்த்து கொண்டிருந்தான். பார்வைகள் மோதிக்கொண்டன. விழிகள் என்ன பரிமாறிக்கொண்டனவோ? அவர்களுக்கு தெரியவில்லை.

உரிமையோடு பேசும் அவன், மறுக்கப்பட்ட உரிமையில் மௌனித்து கொண்டான். ‘இதுவல்ல காதல்!’ அவன் அறிவு அவனுக்கு எடுத்துரைத்து கொண்டிருந்தது. மூச்சை உள்ளிழுத்து நிதர்சனத்தை கிரகித்து கொண்டிருந்தான் அவன்.

படபடவென பேசும் அவள், படபடத்து கொண்டிருந்த அவள் இதயத் துடிப்புக்கு பதிலறியமால் திணற, “இதுவா காதல்?’ அவள் அறிவு அவளுக்கு எடுத்துரைக்க முயற்சித்தது.

 நிதர்சனம் புரிந்தாலும், அறிந்தாலும் அவள் அறிவும், அவள் மனமும் அவளை ஆட்டுவிக்க ஆரம்பித்தது.

சில நொடிகளில் இருவரும் சுதாரித்து கொண்டனர். கிருஷ், தன் இதயத்தை தடவி கொண்டான். அவன் கைகளுக்கு தட்டுப்பட்டது, அந்த வளையல்.

‘கண்டு கொண்டிருப்பாளோ?’ அவன் இதயம் படபடத்தது. ‘இத்தனை நடந்தும், இது ஏன் என்று மாதங்கி கேட்டால், நான் என்ன சொல்லுவேன்?’ அவனிடம் தடுமாற்றம்.

முதலில் சுதாரித்து கொண்ட மாதங்கி, “ஏன் கிருஷ்? அங்க இயற்கை காத்து, மரம் செடின்னு நல்லா இருந்ததே.” கூற, கிருஷ் அவளை விட்டுவிட்டு செல்ல, “எங்க போற கிருஷ்?” என்றாள் கண்களை சுருக்கி.

“எங்கையும் போகலை. கொஞ்சம் ஃபோன் பேசிட்டு வரேன். நீ இங்கையே இரு” அவன் கூற, மாதங்கி மறுப்பாக தலை அசைத்தாள்.

“பயமா இருக்கா?” அக்கறை மட்டுமே ஏந்தி கொண்ட குரலில் அவன் அவள் முன் மண்டியிட, அவளிடம் மௌனம்.

“உனக்கு ஒன்னும் ஆகாது” அவன் புன்னகைக்க, “அது எனக்கு தெரியும். உனக்கு ஏதாவது ஆகிருமோன்னு தான்…” அவள் தயங்கினாள்.

அவன் கண்கள் சுருங்கியது. “நீ என் பக்கத்தில் இருந்தா, எனக்கு அவ்வளவு நல்லது செய்து என்னை காப்பாத்திருவியா?” அவன் இப்பொழுது அவனுக்கு துணையாய் கேலியை எடுத்து கொள்ள, அவள் மறுப்பாக தலை அசைத்தாள்.

“உன் பக்கத்தில் நான் இருந்தால், உனக்கு கெட்டதை நான் தான் பண்ணுவேன். அப்ப, வேற யாரும் பண்ண முடியாதில்லையா?” அவள் சிரிக்க, அவன் புன்னகைத்து கொண்டான்.

“ப்ளீஸ் மாதங்கி… நான் இப்ப வந்திடுறேன்.” கூறிக்கொண்டு, தொலைபேசி இருக்கும் அறைக்கு சென்றான்.

சில நிமிடங்களில் கதவு தட்டும் சத்தம் கேட்க, மாதங்கியை அங்கே இருக்கும்படி செய்கை காட்டிவிட்டு, வாசல் நோக்கி சென்றான்.

அங்கு தன் கண்களை சுழல விட்டான். கிருஷை நோக்கி யாரோ வருவது தெரிந்து, அனைவரும் பதுங்கி கொண்டனர். வந்தவர்களிடம், கிருஷ் எதுவோ பேசி அனுப்பி வைத்தான்.

“சூடா இட்லி, சட்னி, சாம்பார் இருக்கு. சாப்பிடலாம்” அவன் கூறிக்கொண்டே அமர, “வாவ்! இந்த இருட்டில் கூட டின்னர் உஷார் பண்ணிட்டியா? பயங்கரம் பசி. இப்ப சாப்பாடு கேட்டா கேவலமா இருக்குமேன்னு கம்முன்னு இருந்தேன்.” என்றாள் மாதங்கி ஆர்வமாக.

“என்கிட்ட கேட்குறத்தில் உனக்கு என்ன பிரச்சனை?” கிருஷ் உரிமையோடு சிடுசிடுக்க, “நீ தான் பழைய கிருஷ் இல்லையே?” என்று மாதங்கி உதட்டை சுளித்தாள்.

“மாதங்கி, நம்ம நட்பு என்னைக்கும் மாறாது” அவன் ஆழமான குரலில் கூறி கொண்டே, அவள் பக்கம் இட்லியை நகர்த்தினான்.

“யார் வந்தாங்க? என்ன பேசிட்டு வந்த?” மாதங்கி அவன் பேச்சை ஒதுக்கி கேட்க, “ஏதோ பிரச்சனை, அது தான் கிராமத்து மக்கள் கிட்ட சொல்லி வச்சேன். அவங்க கவனமா இருப்பாங்க.” அவன் சாப்பிட்டுக்கொண்டே கூறினான்.

“நீ தான் பெரிய பொசிஷன்ல இருக்கியே. சொன்னால், சட்டுபுட்டுனு போலீஸ் படை வந்திராது?” அவள் விழி உயர்த்த, “வரும். வந்து உன் கூட இருக்கிற இந்த பொண்ணு யாருன்னும் சேர்த்து கேட்கும்” அவன் நமட்டு சிரிப்போடு கூறினான்.

அவள் அவனை யோசனையாக பார்க்க, “வீட்டுக்கே வந்து சமையல் செய்து கொடுக்குற சமையல் அம்மா கூட கூப்பிட்டா இப்ப வந்துருவாங்க. ஆனால், நம்மை இப்படி சேர்த்தும் பார்ப்பாங்க. அமைதியா இருந்துட்டு நாளைக்கு காலையில் நாம கிளம்பி போய்ட்டா பிரச்சனை வராது.” அவன் தன் உணவை முடித்து கொண்டான்.

‘ஊரை கூட்டி, நான் இவனை அவமானப்படுத்தியும், இவன் என்னை ஊருக்கு முன் காக்கவே விரும்புகிறான்’ அவளிடம் மௌனம்.

‘நட்பு என்று கிருஷ் சொன்னாலும், நட்பு என்று அவன் தனக்கு வரையறை வகுத்து கொண்டாலும், அவன் செய்கைகளில் நட்பை தாண்டி ஏதோவொன்று இருக்கிறது.’ மாதங்கியின் மனம் அதை உணர ஆரம்பித்தது.

அறிவோ, வருடங்கள் பல ஓடினாலும், ‘இது தான் காதலா?’ என்று கேட்டுக்கொண்டே அவளை நிந்தித்தது.

கிருஷின் மனதில் மாதங்கியை பற்றிய பாதுகாப்பு உணர்வு மட்டுமே இருக்க, மாதங்கியின் மனமோ கிருஷை சுற்றியே வந்தது.

காட்டு பகுதிக்குள் வாழும் மக்கள் சற்று பாதுகாப்பு பணியில் ஈடுபட, தாக்க வந்தவர்கள் வேறு வழி இல்லாமல் திரும்பி சென்றுவிட்டனர்.

மறுநாள் காலையில் இருவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

மாதங்கி தன் மாடி பகுதியில் தன் ப்ராஜெக்ட் விஷயமாக மும்முரமாக வேலையில் ஈடுபட்டிருக்க, கிருஷ் தன் அலுவலகத்திற்கு கிளம்பி வாசலுக்கு வந்தான்.

அங்கு, பிருந்தா உள்ள நுழைய, அவன் கண்கள் விரிந்தது.

“பிருந்தா…” அவன் சத்தமாக பேச ஆரம்பித்து, அவள் செய்கையில் மெதுவாக பேசினான்.

“மாதங்கி எங்க?” பிருந்தா ஆர்வமாக கேட்டாள்.

‘மாடி…’ அவன் செய்கை காட்டினான்.

“இந்த அண்ணனை பார்க்க இத்தனை நாளில் ஒரு நாளாவது வந்துருக்கியா? உன் ஃபிரெண்டு இருக்கான்னு சொன்னது ஓடியாந்துட்ட?” கிருஷ் தன் சகோதரியை வம்பிழுத்தான்.

“அதெல்லாம் அப்படி தான். அண்ணா, நீ ஆஃபீஸ் கிளம்பு. நான் மாதங்கி கிட்ட தனியா பேச தான் வந்திருக்கேன்.” பிருந்தா, தன் சகோதரனை வெளியே தள்ளினாள்.

“அடிப்பாவி, அவ இருக்கிறது மாடி வீட்டில், அதுக்கு எதுக்கு என்னை வெளிய தள்ளுற?” கிருஷ் அலுவலகத்திற்கு கிளம்பாமல் அழிச்சாட்டியம் செய்தான்.

“தாத்தா, பாட்டி, அப்பா, சித்தப்பா, சித்தி எல்லாரும் எப்படி இருக்காங்க?” கிருஷ் கேட்க, “அனைவரும் நலம்” என்றாள் பிருந்தா மடல் பாணியில்.

“அ…ம்…மா… அம்மா….” கிருஷின் கண்கள் கலங்கியது. அவன் தொண்டை கரகரத்தது.

“பெரியம்மா ரொம்ப நல்லாருக்காங்க” தன் சகோதரனை சமாதானம் செய்யும் விதமாக கூறினாள் பிருந்தா.

“என்னை பத்தி ஏதாவது கேட்பாங்களா? என்னை பத்தி ஏதாவது பேசுவாங்களா?” கிருஷின் குரலில் ஆர்வம் மிதமிஞ்சி இருக்க, “….” பிருந்தா பொய் கூற விரும்பாதவளாக தன் தலையை குனிந்து கொண்டாள்.

மேலும் கேள்வி கேட்டு தன் தங்கையை சங்கடப்படுத்த விரும்பாதவனாக, “வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லையே?” தன் பேச்சை மாற்றினான் கிருஷ்.

“நீ இல்லைங்கற குறை தவிர, வேறு எதுவும் இல்லை” என்றாள் பிருந்தா புன்னகையோடு.

“சரி… சரி… நீ உன் ஃபிரெண்டை பாரு. நான் உன்னை போர் அடிக்க விரும்பலை.” கூறிக்கொண்டு கிருஷ் அலுவலகத்திற்கு கிளம்பினான்.

மாதங்கி தன் வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்க பிருந்தா பூனை போல் மெதுவாக சென்று மாதங்கியின் கண்களை மூடினாள்.

பிருந்தாவின் தீண்டலில், மாதங்கி ஸதம்பித்து நின்றாள். அவள் கைகள் அசையவில்லை. அவள் உடலில் மின்சாரம் பாய்ந்தது போன்ற இன்ப அதிர்ச்சி. அவள் இதழ்கள் பேச்சை மறந்தன.

‘மாதங்கி, ஏன் இப்படி இருக்கா? என்னை மறந்துட்டாளா?’ பிருந்தாவின் சிந்தை ஓட்டத்தை தடை செய்தது, அவள் கைகள் உணர்ந்த பிசுபிசுப்பு.

“மாதங்கி…” அவள் தோழியை தன் பக்கம் திருப்ப, தன் தோழியின் தோள் சாய்ந்து கதறினாள் மாதங்கி.

பிருந்தாவின் கண்களிலும் நீர் வழிந்தது.

“ஏன் டீ அழற?” பிருந்தா மாதங்கியை அதட்ட, “நான் உன்னை என் பக்கமே வர கூடாதுன்னு சொன்னேன் தானே? ஏன் வந்த?” தன் தோழியை கட்டிக்கொண்டே கோபமாக கேட்க நினைத்து பாசமாக கேட்டாள் மாதங்கி.

“நான் ஓன்னும் உன்னை பார்க்க வரலை. என் அண்ணனை பார்க்க வந்தேன். வந்த இடத்தில் உன்னை பார்த்துட்டேன்.” பிருந்தா கண்ணீரோடு கூற, “ம்… பார்த்த மட்டுக்கும் சும்மா போக வேண்டாம். கட்டிப்பிடிச்சு அழுதுட்டு போலாமுன்னு என்னை கட்டிபிடிச்சி அழறியா?” மாதங்கி விசும்பலோடு கேட்டாள்.

தன் கண்ணீரோடு சிரித்து கொண்டு தன் தோழி எதிரே அமர்ந்தாள் பிருந்தா.

“நீ மாறவே இல்லை மாதங்கி” பிருந்தா கூற, “பிறவி குணம் மாறுமா என்ன?” மாதங்கி தன்னை சமன் செய்து கொண்டு சாதாரணமாக பேச முயற்சித்தாள்.

இருவரும் சில நிமிடங்களில் உணர்ச்சி பிடியிலிருந்து வெளி வர முயற்சித்தனர்.

“வீட்டில் அத்தனை பிரச்சனையிலும், நான் உன் பக்கம் தானே நின்னேன் மாதங்கி. அப்புறம் ஏன் மாதங்கி, என்கிட்டே கூட சொல்லாம, வெளிநாட்டுக்கு போன? எல்லா சோசியல் மீடியால இருந்தும் வெளிய போயிட்டு, நம்பர் கூட மாத்திட்டு?” என்று பிருந்தா மனத்தாங்களோடு கேட்டாள்.

“கோபமா பிருந்தா?” மாதங்கி தன் தோழியின் கைகளை பிடிக்க, “…” மறுப்பாக தலை அசைத்தாள் பிருந்தா.

பிருந்தாவின் கண்ணீர் மாதங்கியின் கைகளை நனைத்தது. “வருத்தம்… என் தோழிக்கு, நான் வேண்டாதவளா போய்ட்டேன்னேனு வருத்தம்.” பிருந்தா குரலில் ஆதங்கம்.

“வேண்டாம்ன்னு நான் நினைப்பேனா பிருந்தா. என்னால், உனக்கு பிரச்சனை வேண்டாமுன்னு நினச்சேன். அவ்வுளவு தான். உனக்கு தெரியாதது எதுவுமே இல்லை. அரவிந்த் அண்ணாவும், முகுந்தனும் ரொம்ப நாள் கண் முழிக்கலை. என்னையே என் வீட்டில் சேர்த்துக்காத நிலைமை. உன்னை வேற மறைமுகமா அம்மா, உங்க வீடு தான் ஆக்சிடென்ட்க்கு காரணமுன்னு பேசினாங்க. அன்னைக்கு உன்னை வராதன்னு சொன்னேன். அப்படியே கிளம்பிட்டேன். ” மாதங்கி வருத்தத்தோடு தன் பேச்சை நிறுத்தினாள்.

“இதெல்லாம் எனக்கு தெரிந்த கதை தானே. நீ செய்தால், அதுல சரியான காரணம் இருக்கும்னு நினைப்பேன். இருந்தாலும், அரவிந்த் அண்ணாவும், முகுந்தனும் சரியான பிறகாவது என் கிட்ட பேசிருக்கலாமே?” பிருந்தா முறுக்கிக்கொள்ள, மாதங்கி புன்னகைத்து கொண்டாள்.

‘உங்க வீட்டு உறவே வேண்டாமுன்னு நினச்சேன். ஆனால், விதி?’ மாதங்கி மனதிற்குள் எண்ண, தன் தோழியின் மனதை படித்தவள் போல சிந்தனையில் ஆழ்ந்தாள்.

“உன்கிட்ட கேட்க நிறைய கேள்வி இருக்கு பிருந்தா” பேச்சை மாற்றினாள் மாதங்கி.

“கேளு… கேளு… உன்னை பத்தி ஆல் டீட்டைல்ஸ் ஐ நோவ்” என்று பிருந்தா கண்சிமிட்டினாள்.

“உங்க அண்ணன் வேலையா?” மாதங்கி கேட்க, “நான் உனக்கு ஃபிரென்ட் அப்புறம் தான் அவனுக்கு தங்கை. அதை நீ ஒரு நாளும் மறக்க கூடாது.” பிருந்தா தன் தோழியின் தோள்களில் தன் கைகளை மாலையாக கோர்த்துக்கொண்டு கூறினாள்.

மாதங்கி அமைதி காக்க, “கேளு மாதங்கி” பிருந்தா தன் தோழியை பார்த்து புருவம் உயர்த்தினாள்.

“உங்க அண்ணன் ஏன் இன்னும் கல்யாணம் செய்யலை?” மாதங்கி கேட்க, “அப்படி யார் சொன்னா உனக்கு?” பிருந்தா தன் தோழியை பார்த்து புன்னகையோடு கேட்டாள்.

‘கிருஷ் சொன்னானா? இல்லையே அப்படியெல்லாம் சொல்லவே இல்லையோ? நானே தான்… நானே தான்…’ மாதங்கி குழம்பி போனாள்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!