birunthavanam- 34 (Prefinal Part – 2)

Birunthaavanam-f0938c6f

birunthavanam- 34 (Prefinal Part – 2)

பிருந்தாவனம் – 34

திலக், ஹென்றி இருவரும் முன்னே செல்ல கொஞ்சம் இடைவெளி விட்டு பின்னே வந்து கொண்டிருந்த மாதங்கியின் வாயை  ஒரு முரட்டு கை துணியால் மூடியது.

மாதங்கியால் சத்தமிட முடியவில்லை. அதில் மயக்க மருந்து இருக்குமோ என்று ஐயம் கொண்டவள், தன் மூச்சை உள்ளிக்கவில்லை. அவள் கால்களால் அவன் இடுப்பில் எட்டி உதைத்தாள்.

 வாயை மூடியவன் தடுமாற, வேறு ஒருவன் இவளை காட்டு பகுதிக்குள் இழுத்துவிட்டான்.

சட்டென்று சாலையை பிடிக்க முடியாமல் மாதங்கி ஓடினாள் தப்பிக்கும் எண்ணத்தோடு. அவள் கைகளில் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

“ஒரு பொம்பிளையை பிடிக்க ரெண்டு பேரு போதாது.” அவன் கூறிக்கொண்டே, அவள் தலை முடியை பிடிக்க, அவள் அவன் கைகளை அவள் பற்களால் தாக்கினாள்.

“ஏய்…” அவன் அலறிக்கொண்டே அவளை விட, “என்ன பொம்பிள்ளைன்னா அவ்வுளவு இளக்காரமா? நான் கராத்தேல பெல்ட் வாங்கினவ. உங்க ரெண்டு பேரை இந்த காட்டில் என்னால் புதைக்க முடியும்.” காட்டில் அவர்களிடம் சிறிதும் அஞ்சாமல் போராடினாள் மாதங்கி.

“முட்டாள் மாதிரி ரெண்டு பேரு தான் வந்திருக்கீங்க.” அவள் பேசி கொண்டே அவர்கள் கவனத்தை திசை திருப்பி, ஒவ்வொரு பக்கமாக தப்பிக்கும் வழியை நோட்டமிட்டு மூச்சை உள்ளிழுத்து நிதானித்து நடக்க ஆரம்பித்தாள்.

காட்டு பாதையில் அவர்களும் அச்சப்பட்டே நடந்தனர்.

“அது மட்டுமில்லை. என் மேல கையை வைக்க உங்களை அனுப்பின மிக பெரிய முட்டாள் யாரு? என் அண்ணன் போலீஸ், ஐ.பி. எஸ் ஆஃபிஸர். நீங்க கையில் சிக்குவீங்க. அப்ப, உங்களை என்ன செய்றாரு பாருங்க.” என்று மாதங்கி அவர்களை மிரட்ட, “அதை பார்க்க நீ உயிரோட இருக்கணுமே குட்டி.” என்று நக்கல் பேசினான் ஒருவன்.

மாதங்கிக்கு பக் என்று இருந்தது. அவர்கள் இருவரையும் பார்த்தாள். ‘என்னை இந்த காட்டுக்குள்ளையே கொன்னுடுவாங்களோ? இரண்டு பேரை நான் சமாளித்திருவேன். இன்னும் இருவர் வந்தால் கஷ்டம் தான்’ அவள் மௌனிக்க, “ஹா…. ஹா…. ஹோ…. ஹோ… என்ன குட்டி பயந்துட்டியா?” என்று ஒருவன் சற்று கொடூரமாக சிரித்தான்.

‘மாதங்கி பயப்படாத. இப்ப பயந்து ஒன்னும் வேலைக்கு ஆகாது.’ தன்னை சுதாரித்து கொண்டாள்.

“நல்லா சிரிச்சிக்கோ. இப்ப தான் நீ சிரிக்க முடியும்.  எங்க திட்டமே இது தான். உங்களை அனுப்பினது யாருனு பல வருஷமா தெரியமால் இருந்தது. உங்களை பிடிக்க தான் நானே உங்க கிட்ட சிக்கிருக்கேன்.” அவள் பேச்சுவாக்கில் காட்டு பாதையை கணக்கிட்டு கொண்டாள்.

“இந்த காட்டு ஐ.ஃபி.எஸ் ஆஃபீசருக்கு நான் யாருன்னு தெரியுமா. அவர் வந்து உங்களை பிடிப்பார் இப்ப கொஞ்ச நேரத்தில். நான் உங்ககிட்ட சிக்கிருக்க விஷயம், நான் எங்க இருக்கிறேன்னு விஷயம் கூட இந்நேரம் அவருக்கு போயிருக்கும்.” கூறிக்கொண்டு, அவள் கண்களில் தெரிந்த வழியில் ஓட ஆரம்பித்தாள் மாதங்கி.

“ஏய்…” அவர்கள் கத்தி கொண்டு ஓடி வர, ‘இனி பேசுவது ஆபத்து.’ மரத்திற்கு பின்னாடி ஒளிந்து ஒளிந்து ஓடினாள். 

இருவரும் அவளை தொடர்ந்தனர். ஆனால், அவர்கள் கண்களில் மண்ணை தூவிவிட்டு, வேகவேகமாக ஓடி ஒரு சாலைக்கு வந்தாள். கண்ணை கட்டி காட்டில் விட்ட மாதிரி  என்ற பழமொழி உண்மை போல் உணர்ந்தாள் மாதங்கி. அவளுக்கு எதுவும் தெரியவில்லை. யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்று அறிய முடியாத சூழல்.

‘திலக், ஹென்றியை பார்க்கணும்…’ அவள் ஓட்டம் பிடிக்க, அவர்களை காணவில்லை. திலக், ஹென்றி ஒருபுறம் இவளை தேடி அலைந்தனர்.

மாதங்கி நடையும் ஓட்டமுமாக செல்ல, அந்த பாதையை பார்த்தாள். அவளுக்கு உயிர் வந்தது போல் இருந்தது. கிருஷும் மாதங்கியும் தங்கிய போலீஸ், குவர்ட்ஸ். ‘இங்க தானே இருந்தோம்…’ முன் வழியே செல்ல, அது பூட்டி இருந்தது.

சட்டென்று பின் பக்கம் ஏறி குதித்தாள் மாதங்கி. ‘வேலை செய்யும் அம்மா, வீட்டுக்கு வரும் வழி என்று கூறினானே கிருஷ்.’ அவள் உள்பக்கம் கையை விட, அது திறந்து கொண்டது.

யாரும் இல்லை என்று சரியாக பூட்டாமல் இருந்த கதவு. சட்டென்று உள்ளே சென்று கதவை மூடினாள் மாதங்கி.

உள்ளே சென்ற மாதங்கி, மின்விளக்கை போட எத்தனித்தாள்.

‘வேண்டாம், யாரும் என்னை கண்டுபிடித்துவிடுவார்களோ. வேண்டாம்… வேண்டாம். ஜன்னல் வழியாக வரும் வெளிச்சம் போதும்.’ மெதுவாக நடந்தாள்.

“டேய் எங்க டா போயிருப்பா?” ஒருவன் கேட்க,”இந்த வழியா தான் வந்தா.” மற்றோருவன் கூற, ‘இங்க தான் இருக்காங்களா?’ மாதங்கி இதயம் வேகமாக துடித்தது.

மெல்ல நடந்து அவள் தொலைபேசி இருக்கும் அறைக்கு செல்ல, அது பணி செய்யாமல் இவள் கழுத்தை அறுத்தது.

அவள் இதயத்தின் ஓசை அவளுக்கே கேட்டது. ‘நான் இவ்வளவு பயப்படுவேனா?’ மாதங்கி தனக்கு தானே கேட்டு கொண்டாள்.

கைகளில் வழிய ஆரம்பித்த இரத்தம் நின்று இருந்தது. ‘சின்ன காயம் தான் போல’ ஜன்னல் வெளிச்சத்தில் தன் கைகளை பார்த்து கொண்டாள் மாதங்கி.

கால்களில், அவளுக்கு எங்கோ சுருக்கென்று குத்தியது. ‘வரும் பொழுது ஏதாவது கீறி இருக்குமோ?’ எண்ணிக்கொண்டு அமர்ந்தாள்.

“மச்சான். அவ நம்ம கிட்ட தப்ப கூடாது டா. தப்பினாலும், கை, காலை எடுத்துட்டு தான் டா அவ தப்பிக்கணும்.” வெளியே ஒருவன் குரல் கேட்க, தன் கை கால்களை அச்சத்தோடு பார்த்தாள் மாதங்கி.

‘இல்லை, கிருஷ் என்னை காப்பற்றுவான். இந்நேரம் கிருஷ் என்னை தேட ஆரம்பிச்சிருப்பான். ஒரு பையன் இந்த காட்டில் இருந்து வெளிய போக முடியாது.’ நடக்க பயந்து, அன்று அவன் பதுங்க சொன்ன உள்பக்க அறைக்கு தவழ்ந்து சென்றாள் மாதங்கி.

அவள் தவழ்கையில், அன்று கிருஷ் மேல் தான் சரிந்த இடத்தை கடக்க, அவள் மனம், ‘சீனியர்… சீனியர்…’ என்று துடித்தது.

‘இப்ப மட்டும் சீனியர் என் கூட இருந்தால், நான் இப்படி பதட்டப்படணுமா?’ அவள் கேட்டுக்கொண்டே அந்த இடத்தை கடக்க, அவளை உரசியது இரு வளையல்கள்.

அவள் அந்த வளையலை எடுக்க அதிலிருந்து மெல்லிய வளையோசை.

அவள் மென்மையாக அதை அசைக்க, அந்த வளையோசையில், “மாது… மாது…” என்று மெல்லிய கானம். இசையாய்… காதலாய்…

அந்த வளையலை அவள் நெஞ்சோடு அணைத்து கொண்டாள். “சீனியர்… சீனியர்…” அவள் உதடுகள் சத்தம் செய்ய அச்சப்பட்டு, அவனை அழைத்தது.

அவள் கைகள் அந்த வளையல்களை எடுக்க, அவள் கைகள் நடுங்கியது. அவள் கண்கள் கண்ணீரை சொரிய, அந்த வளையல்கள் அவள் கண்ணீரை விரும்பாதது போல், உருண்டோட, அவள் அதை எட்டி பிடித்தாள்.

“மாது… மாது…” என்றே அந்த வளையல் தன் ஓசையை எழுப்பியது.

‘எத்தனை வருஷமா இதை வச்சிருக்கான் கிருஷ். இது நான் எப்பவோ தொலைத்த வளையல்கள். அது சீனியர் கிட்ட தான் இருக்கா?’ அவள் ஆசையாய் அதை வருடினாள்.

அந்த வளையல் தன் ஓசையில் அவளுக்கு அவன் காதலை கூறியது.  காதலை மட்டுமில்லை, ‘நான் வருவேன்…’ என்ற ஆறுதலையும் கூற, அவள் இருவளையல்களையும் ஒரே கையில் போட்டு கொண்டு, தன் கைகளை நெஞ்சோடு அணைத்து கொண்டு விம்மினாள்.

‘எனக்கு ஆபத்து இருக்குனு தெரிந்தும், ஏன் சீனியர் இன்னைக்கு நீங்க என் கூட வரலை.’ அவள் கேட்க, கதவு மடார் மடார் என்று தட்டப்பட, அவள் சுவரோடு சாய்ந்தாள். வேகவேகமாக பின்னே நகர்ந்து, அன்று அவன் இருக்க சொன்ன இடத்தில் சாய்ந்து அமர்ந்து கொண்டாள்.

அவள் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது. அவள் மூளை, இதயம் என அனைத்தும், ‘சீனியர்… சீனியர்…’ என்ற ஒற்றை சொல்லை மட்டுமே சொல்லி துடிக்க ஆரம்பித்தது.

அவள் கைகள் அச்சத்தில் நடுங்க ஆரம்பித்தன. அவன் வசம் இருந்து, அவன் காதலை உணர்ந்த அவள் வளையல்கள், இன்று அவள் வசம் சிக்கி கொண்டு வளையோசையாய் அவன் காதலை அவளுக்கு உணர்த்தியது.

‘சீனியர் வருவாங்க… சீனியர் வருவாங்க… என்னை காப்பாதிருவங்க…’ அவள் இதயம் நம்பிக்கையாய் துடிக்க, ‘எவன் சொன்னான் காதலுக்கு இலக்கணம் இல்லை என்று? இந்த நம்பிக்கை தான் காதல். இது தான் காதல்.’ வளையோசை காதல் பேசியது.

‘என்னை சீனியர் கஷ்டப்பட விடவே மாட்டாங்க. வந்துருவாங்க. சீனியர் என்னை கஷ்டப்டுத்த மாட்டாங்க. என்னை ஒருநாளும் அழவே விடமாட்டாங்க.’ கிருஷின் எண்ணம் அவள் அழுகையை கூட கட்டுப்படுத்தி இருந்தது.

அவள் இதயம்  அவன் நேசத்தை பேச, ‘எவன் சொன்னான் காதலை வார்த்தைகளில் சொல்ல முடியாது என்று? தன்னவளின் நலனை விரும்புவது மட்டும் தானே காதல். இது தான் காதல்.’ அவன் உள்ளம் தொட்ட வளையோசை, அவள் உள்ளம் தொட்டு காதலை பேசி கொண்டிருந்தது.

எது காதல்? எது காதல்? என்று திணறிய அவளுக்கு, ‘இது தான் காதல்… இது தான் காதல்…’ என்று அவன் தூது அனுப்பிய வளையோசை இன்று அவன் அருகில் இல்லை என்றாலும் அவளை வாஞ்சையோடு வருடியது.

அப்பொழுது கதவு திறப்பது போல் சத்தம் எழ, அவள் தலையை சட்டென்று நிமிர்த்தினாள். அவள் கண்கள் பெரிதாக விரிய அவள் கருவிழிகள் பயபந்தாய் உருண்டது. நொடிக்கும் குறைவான நேரத்தில், “மாது… நான் தான்…” கிருஷ் கூற, அவன் குரலில் அவள் பாய்ந்து சென்று அவனை கட்டி கொண்டாள்.

வெளியே நின்று கொண்டிருந்த மீடியா, இவர்களை “டக்…” என்று படம் பிடித்து கொண்டது.

மீடியாவின் பார்வை இவர்கள் மேல், ஆனால், இவர்களோ வேறு உலகில்.

“சீனியர்… சீனியர்… சீனியர்…” அவள் அவன் மார்பில் சாய்ந்து ஆசுவாசப்பட, அவன் அவள் தோளை தட்டி கொடுத்தான்.

கலைந்திருந்த அவள் முடியை சரி செய்தான். “பயந்துட்டியா?” அவன் அவள் முகத்தை உயர்த்தி நெற்றியில் இதழ் பதித்து, ‘நான் இருக்கிறேன்’ என்று கண்களால் சமிங்கை காட்டி, அவள் செவியோரம் கிசுகிசுத்தான்.

“இல்லை சீனியர். நீங்க வந்திருவீங்கன்னு எனக்கு தெரியும் சீனியர்” அவள் மறுப்பாக தலை அசைத்து கொண்டே, அவனோடு ஒட்டி கொண்டாள். 

“சாரி மாது… ” அவன் கூற, “எதுக்கு சீனியர் சாரி? பல வருஷத்துக்கு முன்னாடி என் வளையலை திருடினதுக்கா?” அவள் கேட்க, அவன் கண்களில் கண்ணீர் பெருகியது, முகத்தில் புன்னகையோடு.

“நான் உன்னை தனியா அனுப்பி இருக்க கூடாது மாது. நான் ரொம்ப பயந்துட்டேன் மாதங்கி” அவன் அவளை உரிமையோடு இறுக்கி கொள்ள, “எதுக்கு சீனியர் பயந்தீங்க? என்னை யார் என்ன செய்ய முடியும். ஆனானப்பட்ட, கிருஷ்க்கே நான் தண்ணி காட்டுவேன். இவங்கெல்லாம் எனக்கு ஜுஜுபி.” அவள் அவன் முகம் பார்த்து சிரித்தாள்.

அவள் முகம் சோர்வை காட்டியது.

“மாது… ஒரு மாதிரி இருக்க மாது.” அவன் அவள் கன்னங்களை தட்டினான். 

“அது பாடம் படித்த டையர்டு சீனியர். எது காதல்னு தேடி படிச்சுக்கிட்டு இருத்தேனா? அது தான்” அவள் சோர்வாக பேசினாள்.

அவள் பேச்சை ரசித்து சிரித்தான் அவள் காதலன்.

“நீங்க ஒரு மக்கு சீனியர். இது தான் காதல்ன்னு எனக்கு கத்து கொடுக்க இத்தனை வருஷமா எடுத்துப்பீங்க?” அவள் அவன் சட்டையை இறுக்கி பிடிக்க ஆரம்பித்தாள்.

‘எனக்கு எல்லாம் நீ தான். என் வாழ்வும் நீ தான். என் சாவும் நீ தான்.’ என்பது போன்ற அழுத்தத்தை அவன் உணர, “மாது… எதுவோ தப்பா இருக்கு. உனக்கு என்ன செய்து ?” அவன் கேட்க, “இல்லை சீனியர். இப்ப தான் எல்லாம் சரியா இருக்கு. இல்லை தப்பா தான் இருக்கு. மத்த வளையல் எங்க சீனியர்?” அவள் குறும்பாய் கேட்க, அவன் அவளை கூர்மையாக பார்த்தான்.

அவளிடம் தெரிந்த மாற்றத்தில், அவன் இதயம் “மாது… மாது… ” என்று துடிக்க ஆரம்பித்தது.

“சீனியர் இந்த துடிப்பு தான் காதலா?” அவள் அந்த சூழ்நிலையிலும், அவன் செவியோரம் ரகசியமாய் சந்தேகம் கேட்டாள்.

அவள் அதரங்கள் அவன் செவிகளை தீண்டவில்லை. ஆனால், அவள் சிரமப்பட்டு விடும் சுவாசம் அவன் செவிகளை தீண்டி அவள் உடல் நிலையை கூறியது.

அவள் தைரியம், அவள் துடுக்கான பேச்சு இது தான் அவனை ஈர்த்தது. இன்றும் மாதங்கி தைரியமாக தான் இருக்கிறாள். அவள் பேச்சு துடுக்காத்தான் இருக்கிறது. ஆனால், அவனால் ரசிக்க முடியவில்லை.

‘உன்னை காப்பாதிருவேன்னு எனக்கு தெரியும். ஆனால், இது என்ன புது பிரச்சனை?’  அவன் கண்களில் கண்ணீர் பெருக, அவன் நெற்றியில் இதழ் பதித்து, கன்னத்திலும் இதழ் பதித்தாள்.

“மாதங்கி கறார் பேர்வழி. நீங்க செய்ததை இரண்டு மடங்கு திரும்ப செய்வா. கெட்டதா இருந்தாலும் சரி. நல்லதா இருந்தாலும் சரி. நீங்க என் மேல் வைத்த அன்பை நான் திரும்ப வைக்க வேண்டாமா?”  அவள் சோர்வாய் கண்சிமிட்டினாள்.

“மாது, எதுவோ சரி இல்லை.” அவன் முணுமுணுத்து கொண்டே,  அவளை தூக்கி கொண்டு ஜீப்பில் ஏறினான்.

மீடியா அவர்களை சூழ, ” மீடியாவா கிருஷ்? நம்ம கல்யாணம் பத்தி சொன்ன மீடியா கிட்ட சொல்ல வேண்டியது தானே. இது ஒரு காதல் கதை அப்படின்னு. இல்லை சீனியர்… இது காதல் கதை அல்ல, ஒரு காதலனின் கதை. பிருந்தாவனத்து கிருஷின் காதல் கதை அப்படின்னு?” அவள் சற்று மயக்கத்தில் உளற ஆரம்பிக்க அவன் கண்களில் கண்ணீர் மட்டுமே.

“பேசுங்க சீனியர்.” அவள் அவன் கைகளை பிடிக்க, “உனக்கு ஒன்னும் ஆகாதில்லை?” அவன் குரல் உடைய, கிருஷ் ஜீப்பின் டிரைவர் கிருஷை சற்று ஆச்சரியமாக பார்த்தான்.

மறுப்பாக தலையசைத்த மாதங்கி, “எனக்கு ஏதாவது ஆகிட்டா? நீங்க இன்னொரு ஜோடியை பார்க்கலாமுன்னு பார்க்குறீங்களா? பெயரில் கிருஷ் இருந்தாலும், உங்களுக்கு எழுதப்பட்டது என்னவோ ராமரின் வாழ்க்கை தான். கூட இருந்தாலும், பிரிந்து போனாலும் நான் மட்டுந்தான். அந்த சீதைக்கே பொறுமை கம்மியாம். இந்த மாதங்கிக்கு கொஞ்சம் கூட பொறுமை கிடையாது” அவள் நாக்கு குளறுவது போல் இருக்க, அவன் அவளை நெஞ்சோடு அணைத்து கொண்டான்.

அவள் நெஞ்சோடு சாய்ந்திருந்த அவள் செவிகளை ‘மாது…’ என்ற அவன் இதய துடிப்பு தீண்ட, “பொண்ணுங்க அவசரப்பட கூடாது. எடுத்தோம் கவுத்தோமுனு எதையும் செய்ய கூடாதுன்னு நான் இத்தனை வருஷத்தில் கத்துக்கிட்டேன் சீனியர். அதனால் நான் அவசரப்பட்டு உங்களை விட்டுட்டு எங்கையும் போக மாட்டேன் சீனியர்…” அவன் வருத்தம் தாளாமல் அரை மயக்கத்திலும் அவனை ஆறுதல் படுத்தினாள்.

‘இவள் கற்று கொண்ட பாடம் தான் இப்பொழுது முக்கியமா? இவள் இந்த பாடத்தை கற்று கொள்ளவில்லை என்றால் என் மாதுவை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேனா?’  அவளுக்காக அவன் இதயம் அவள் மேலே கோபம் கொண்டு, ‘மாது… மாது… மாது…’ அவன் இதயம் அவளை மட்டுமே எண்ணி துடித்தது. அவளுக்காக மட்டுமே துடித்தது.

அவன் துடிப்பு எங்கோ விலகி செல்வதை உணர்வது போல் அவள் அவன் கைகளில் மயங்கி சரிந்தாள்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!