Brindavanam-1

Birunthaavanam-c9ff0540

Brindavanam-1

பிருந்தாவனம் –  1

                 பிருந்தாவனம் பெயரை தாங்கி கொண்டிருந்த அந்த பிரமாண்டமான மாளிகையை அந்த விடியற்காலை பொழுதில் இன்னும் அழகாக காட்டியது வீட்டின் முன் பகுதியில் இருந்த அந்த கருநீல கண்ணனின் சிலை.

              ஒரு காலை மடக்கி பசு மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்த கண்ணனின் கழுத்தில் செம்மஞ்சள் நிறத்தில் பூமாலை. கண்ணனின் கண்களில் குறும்பும், அவன் உதட்டில் சிரிப்பும் மிக அழகாய். கண்ணன் சிலையை சுற்றி பலவண்ண பூக்கள் நிறத்தாலும், மணத்தாலும் மயக்கினாலும் அந்த இடத்தை இன்னும் ரம்மியமாக்கி கொண்டிருந்தது என்னவோ அந்த இனிய குரல் தான்.

கோபாலா ரதலோலா கோபாலா ரதலோலா

முரளி லோலா நந்தலாலா ஜெய முரளி லோலா நந்தலாலா

கோபாலா ரதலோலா கோபாலா ரதலோலா

கேஸவ மாதவ ஜனார்தனா கேஸவ மாதவ ஜனார்தனா

வனமாலா பிருந்தாவன மாலா

முரளி லோலா நந்தலாலா

ஜெய முரளி லோலா நந்தலாலா

            மெல்லிய பட்டு ஜரிகையில் அரக்கு நிறத்தில் சேலை உடுத்தி இருந்தார் வேதநாயகி. அவர் நெற்றியில் வைத்திருந்த குங்குமம் வட்ட நிலவுக்கு போட்டியிடுவது போல் இருந்தது.

 அவர் மனம் கண்ணனின் பக்கம் லயித்திருக்க, அவர் அதரங்களோ பாடலை முணுமுணுத்து கொண்டிருந்தது.  அவர் மூக்கிலும், காதிலும் வைரம் ஜொலிக்க, அதையும் தாண்டி அவர் கண்களில் அன்பும் பரிவும் ஜொலித்து கொண்டிருந்தது.

              பாடி முடித்து, கண்களை மூடி அவர் பிரார்த்தனையில் மூழ்கி இருக்க, அவரை ஒரு சத்தம் திடுக்கிட செய்தது.

              முகத்தை சுழித்து கொண்டு வீட்டிற்குள் சென்றார் வேதநாயகி.

   “கிருஷ், ஏன் இப்படி சத்தம் போடுற?” தன் மகனை பார்த்து கண்டிப்போடு கேட்க முயற்சித்தார்.

       “அம்மா, என்ன சாப்பாடு இது? சுந்தரமும் சரி இல்லை. அவன் பொண்டாட்டியும் வேலை சரியா செய்யறதில்லை. இதுகளை எல்லாம்…” என்று கிருஷ் சிடுசிடுக்க, “பெரியவங்களை மரியாதையா பேசு கிருஷ்” என்று சற்று அழுத்தமாக கூறினார் வேதநாயகி.

        “ஹா… ஹா…” பெருங்குரலில் சிரித்தான் கிருஷ்.

முழு நீள நீல நிற சட்டையை தன் முழங்கை வரை மடக்கிவிட்டிருந்தான். அவன் கேசம் அலையலையாய் அவன் சிரிப்போடு இசைந்து கொண்டது. அவன் உடற்கட்டு வாலிபப்பருவத்தையும், செல்வ செழிப்பையும் பறை சாற்றியது. அவன் கண்களில் மின்னிய குறும்பு, அவன் குணத்தை எடுத்து கூறியது.

     சிரிப்பை நிறுத்திவிட்டு,  “அம்மா, ஒரு கலெக்டர் போறாரு. வயசு முப்பதுன்னு வச்சிக்கோங்களேன். அங்க வேலை செய்யுற பியூன்க்கு வயது ஐம்பது. எனக்கு வயசு அதிகமுன்னு பியூன் உட்கார முடியுமா? இல்லை அவருக்கு வயசு அதிகமுன்னு கலெக்டர் தான் அவர் முன்னாடி நிற்பாரா?” என்று தட்டில் இருந்த சாப்பாட்டை ருசி இல்லை என்று ஒதுக்கி, ஆப்பிள் துண்டின் வில்லையை எடுத்து வாயில் போட்டான் கிருஷ்.

 வேதநாயகி  ‘ங்கே…’ என்று விழிக்க, “அம்மா… படிப்புக்கு மரியாதை. பதவிக்கு மரியாதை. நம்ம கிட்ட ஒருத்தர் கை நீட்டும் பொழுதே நாம்ம மேல, அவங்க கீழ. பார்த்து நடந்துக்கோங்க அம்மா.” அவன் தன் வெண் பற்கள் தெரிய கம்பீரமாக சிரித்தான்

     “என் மரியாதை உங்க கிட்டயும், அப்பாகிட்டயும் மட்டும் தான் அம்மா. ஊரு உலகத்துக்கு இல்லை..” தன் தாயை கன்னம் தொட்டு கொஞ்சினான் அந்த கட்டிளங் காளை.

வேதநாயகியின் எண்ண போக்கை மாற்றும்படி, “அம்மா, இன்னைக்கு எங்க காலேஜுக்கு ஜூனியர்ஸ் வராங்க.” கண்சிமிட்டினான் தன் தாயை பார்த்து.

     “டேய்…” என்று வேதநாயகி தன் மகனை முறைக்க, “கரெக்ட் அம்மா. என் மைண்ட் வாய்ஸ் சரியா கேட்ச் பண்ணிடீங்க. சும்மா சூப்பரா ஜில்லுன்னு…” என்று  சீட்டியடித்தபடி எழுந்தான்.

    “டேய், அம்மா கிட்டயேவா?” என்று தாய் மகனை முறைக்க, “அம்மா, நான் உங்க கிட்ட சொல்லலைனா தான் தப்பு. அம்மா கிட்ட சொல்ற வரைக்கும் எதுவும் தப்பில்லை” அவன் தன் தாயின் முறைப்புக்கு சமாதானம் செய்து கொண்டு, “டோன்… டோன்…” என்று அவன் பைக்கை  கிளப்பி கொண்டு சென்றான்.

 அவன் செல்வ செழிப்புக்கு ஏற்றார் போல் இருந்தது ராஜவம்சம் போல் இருந்தது அந்த பைக்.

 கிருஷ் கல்லூரிக்குள் செல்ல, அவனை ஒரு பட்டாளம் சூழ்ந்தது.

“மச்சான் செம்ம பிகர் டா…” அவன் காதில் ஒருவன் கிசுகிசுக்க, அப்பொழுது அவர்களை கடந்து செல்ல எத்தனித்தாள் ஒரு இளம்பெண்.

“ஒய், இங்க வா.” கிருஷின் கூட்டத்தில் ஒருவன் அழைக்க, கிருஷ் அவளை பார்த்தான்.

 அவளின் பார்வை கிருஷின் மீதே விழுந்தது. “உன் பெயர் என்ன?” அவர்கள் கேட்க, அவள் உதடுகள் கிருஷை பார்த்தபடி, “பிருந்தா…” என்று முணுமுணுத்தது.

“ஆ… சத்தமா சொல்லு. எங்களை பார்த்து சொல்லு” வேறு ஒருவன் கேலி போல் கேட்க, “பிருந்தா…” என்று நிமிர்ந்து அவர்களை பார்த்து அவள் சற்று அழுத்தமாக சொனாள்.

 சுடிதார் அணிந்திருந்தாள். கட்டுக்கோப்பான உடல் தேகம்.  அவள் உடை அவள் அங்க வடிவை அழகாக எடுத்து காட்டியது. அவள் கண்கள் மீன் போல் வளைந்து, நீரில் நீந்துவது போல் பாவனை காட்டியது. அங்கிருந்த கூட்டத்தில் ஒரு சிலரின் கண்கள், அவள் அங்க வடிவையும் கண்களையும் ரசித்து கொண்டது.

 கிருஷின் கண்களோ, அவள் முகவடிவை கணக்கிட்டு, அவள் கண்களை ஊடுருவி பார்த்தது.

 “டேய், அவளை போக சொல்லுங்க டா.” கிருஷ் எங்கோ பார்த்தபடி கூறினான். பிருந்தாவின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்க்க எத்தனித்து மறைந்து கொண்டது.

 ‘ஹீரோவாக முயற்சி செய்யறானோ?’ அவளுள் ஒரு கேள்வி வம்படியாக வந்து அமர்ந்தது.

 அப்பொழுது அவர்களை கடந்து வேறு ஒரு பெண் செல்ல, அவளை சொடக்கிட்டு அழைத்தான் ஒருவன்.

 “ஏய், இங்க வா?” என்று ஒருவன் அழைக்க, “‘ஏய்’ அங்க போ…” என்று கூறிவிட்டு மேலும் நடந்தாள் அந்த பெண்.

  கூப்பிட்டவனோ கடுப்பாக, அவனை சுற்றி இருந்தவர்களோ, “கொல்…” என்று சிரித்தனர்.

  “பிருந்தா, அவளை கூட்டிகிட்டு வா” இவளுக்கு ஆணை செல்ல, பிருந்தா அவள் முன்னே சென்று நின்றாள்.

 “அவங்க கூப்பிடுறாங்க.” பிருந்தா கூற, “ஏவுங்க? அவங்க என்ன உனக்கு மாமனா மச்சானா?” நக்கலாக கேட்டாள் அந்த புதியவள்.

 பிருந்தாவுக்கு சுள்ளென்று கோபம் ஏறியது. “அவங்க கூப்பிட சொன்னாங்க, நான் கூப்பிடுறேன். நானும் உன்னை மாதிரி ஜூனியர் தான். சீனியர்ஸ் கூப்பிட சொன்னங்க. கூப்பிட்டாங்க” பிருந்தா தன் மனதை கண்ணாடி போல் வெளிப்படுத்தினாள்.

“ஒரு கேலிக்கு எதுக்கு இவ்வளவு கோபம். ” அவள் புன்னகைக்க, “நாங்க கூப்பிட சொன்னா, நீங்க என்ன நட்புகரம் நீட்டிக்கிட்டு இருக்கீங்களா?” அந்த கூட்டத்திலிருந்து ஒரு கேலி குரல்.

“எதுக்கு வம்பு? வா போய் பதில் சொல்லிட்டு கிளாசுக்கு போவோம்.” என்று பிருந்தா கூற, அவளும் அருகே சென்றாள்.

 “பெயர் என்ன?” என்று அவர்கள் கேட்க, “மாதங்கி” என்று கூறினாள்.

சற்று பூசினார் போல் உடல் தோற்றம். அவள் கன்னங்கள் மாம்பழம் போல் சிவந்திருக்க, அவள் கண்கள் கருவண்டு போல் அங்குமிங்கும் உருண்டு கொண்டிருந்தது.

“என்னது மங்கியா?” என்று ஒருவன் கேலி பேச, மொத்த கூட்டமும், “ஹா… ஹா…” என்று சிரித்தது.

அந்த கூட்டத்திற்கு தலைவன் போல இருந்த கிருஷாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை.

 எல்லாரும் சிரித்து முடிக்க, இப்பொழுது மாதங்கி, “ஹா… ஹா…” என்று வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள்.

எல்லாரும் அவள் சிரிப்பின் காரணம் புரியாமல் பார்க்க, பிருந்தாவும் மாதங்கியை பார்த்தாள்.

 “எதுக்கு சிரிக்குற?” சுள்ளென்று கேள்வியை கேட்டான் கிருஷ்.

“மங்கி கூட்டத்துக்கு மாதங்கின்னு சொன்னால், மங்கின்னு தான் கேட்கும்ன்னு சொல்லிருக்காங்க.” என்று மாதங்கி புன்னகையோடு கூறினாள்.

 “யாரு சொல்லிருக்காங்க?” பிருந்தா அப்பாவி போல் கேட்டு வைத்தாள் கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல்.

“ஆ…. கம்பராமாயணத்தில் கம்பர். வேணுமின்னா எல்லாரையும் படிக்க சொல்லு” என்று மாதங்கி மற்றவர்களுக்கு பதிலை பிருந்தாவிடமே கூற, பிருந்தாவுக்கும் இப்பொழுது புன்னகை எட்டி பார்த்தது.

 அந்த இளைஞர்கள் கூட்டம் விழித்து நிற்க, அந்த இளம் பெண்கள் அங்கிருந்து சென்றனர்.

  “மங்கி கூட்டம். அதுவும் செவிட்டு மங்கிஸ்… மாதங்கின்னு சொன்னா மங்கின்னு கேட்குதா? மொக்கையா ஒரு கூட்டம். ஒரு கூட்ட தலைவன்.பார்க்க அழகா இருந்தா, அவன் பெரிய தலைவனகிருவனா?” மாதங்கி பிருந்தாவின் காதில் கிசுகிசுத்தாள்.

 பிருந்தா மெல்ல திரும்பி பார்த்தாள்.  அனைவரும் இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தனர். கிருஷின் கண்கள் இன்னும் இவர்களை கூர்மையாக பார்த்து கொண்டிருந்தது.

“என்ன  பார்க்குற?” மாதங்கி வினவ, “இல்லை, அழகுன்னு சொன்னியே, அது தான் பார்த்தேன்.” பிருந்தா விளையாட்டாகவே பேசினாள்.

 “தேறுமா?” மாதங்கி கேட்க, “அடிப்பாவி…” பிருந்தா கண்களை விரித்தாள்.

“அந்த பசங்க நம்மளை கூப்பிட்டு கடலை போடலாம். நாமா பேசினா  தப்பா?” என்று மாதங்கி சட்டம் பேசினாள்.

 “அது தானே?” இருவரும் அவர்கள் கைகளை ஹைபை செய்து கொண்டனர்.

 அவர்கள் அறியாமல், அந்த முதல் சந்திப்பில் அவர்களுக்குள் மெல்லிய நட்புணர்வு முளைக்க ஆரம்பித்தது.

   “ஒரே கிளாஸ் தான் போல நாம… இப்படி வந்ததும் பார்த்துக்கிட்டோமே?” என்று அதிசயித்து கொண்டனர்.

 முதல் நாள் வகுப்பு வழமை போல் அரங்கேறியது. சிலர் ஆர்வமாகவும், சிலர் கடமையே என்றும் சிலர் பயத்தோடும் கவனித்து கண்டிருந்தனர்.

 பிருந்தா, மாதங்கி இருவரும் அவர்கள் மதிய உணவை முடித்து கொண்டு திரும்ப அவசரமாக வந்து கொண்டிருந்த கிருஷ் பிருந்தாவின் மீது மோதி நின்றான்.

“அறிவில்லை. முதல் நாளே ஏன் இப்படி சுத்திட்டு இருக்கீங்க. படிக்க வந்தீங்களா இல்லை…” என்று சுள்ளென்று விழுந்தான் கிருஷ்.

பிருந்தாவின் கண்கள் சற்று கலங்கியது. “அய்யயோ, உங்களுக்கு அறிவில்லையா? வேணுமின்னா நான் தரேன். ” பரிதாபம் போல் கண்களை விரித்தாள் மாதங்கி.

 “என்ன திமிரா?” கிருஷ் கேட்க, “இல்லை சீனியர் அறிவு.” மாதங்கி முகத்தில் போலி பவ்யம்.

 கிருஷின் முகத்தில் மெல்லிய புன்னகை எட்டி பார்க்க எத்தனித்தது.

‘சிரிச்சா இவ ரொம்ப பேசுவா.’ அவன் அறிவு கூற, “கிளாசுக்கு போங்க.” அவன் மிரட்டலாக கூறினான்.

இருவரும் வேகவேகமாக செல்ல, “ஒய்…” என்று அவன் அழைத்தான்.

“திரும்ப வேண்டாம்… திரும்ப வேண்டாம்… நம்ம பெயர் என்ன ஒய்யா?” இருவரும் ஒன்று போல் கிசுகிசுத்து கொண்டே செல்ல, அவன் அவர்களை சொடக்கிட்டு அழைத்தான்.

 “திரும்ப வேண்டாம்… திரும்ப வேண்டாம்…” இருவரும் மீண்டும் கிசுகிசுத்து கொண்டே நடக்க, அவர்கள் முன் வழிமறித்து நின்றான் கிருஷ் இரெண்டே எட்டில்.

 “இனி நான் உங்க ரெண்டு பேரையும் சேர்த்தே பார்க்க கூடாது” அவன் குரலில் எச்சரிக்கை இருந்தது.

  “தனி தனியா பாருங்க சீனியர்.” மாதங்கி குரலில் சட்டென்று கேலியோடு பதில் வந்தது.

  “அது என்ன சீனியர்?” அவன் சிடுசிடுக்க, “…” பிருந்தா எதுவும் பேசவில்லை.

“மரியாதை…” பட்டென்று கூறினாள் மாதங்கி.

“இதை நான் நம்பணுமா?” அவன் புருவம் உயர்த்தினான்.

“நம்பிக்கை தானே வாழ்க்கை?” பிருந்தா இப்பொழுது எங்கோ பார்த்தபடி  கூற, கிருஷ் அங்கிருந்து நகர்ந்துவிட்டான்.

அப்பொழுது அருகே இருந்த வகுப்பறையில், “நீங்க எல்லாரும் பல கனவோடு கல்லூரிக்கு வந்திருப்பீங்க.” என்று பேராசிரியர் ஒருவர் பேச, அனைவரின் எண்ணங்களும் ஒரு நொடி அவர்கள் கனவை நோக்கி ஓட ஆரம்பித்தது.

இந்த இளம் கன்றுகளின் கனவுகள் என்ன?

அவை ஈடேறுமா?

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!