Brindhavanam-2

Birunthaavanam-57692090

Brindhavanam-2

பிருந்தாவனம் – 2

“க்ளுக்…” என்று சிரித்தாள் மாதங்கி.

“ஏன் சிரிக்கிற மாதங்கி?” பிருந்தா கேட்டு கொண்டே நடக்க, “இந்த ப்ரோபஃப்ஸர் , இதே மொக்கையை வருஷாவருஷம் போட்டிருப்பார்.” என்று மாதங்கி கூற, ஆமோதிப்பாக தலை அசைத்தாள்.

             “இதுல ஒன்னுரெண்டு கனவை தொட்டிருக்கும். பாதி பொண்ணுங்க கல்யாணமாகி குண்டாகிருபாங்க. இல்லைனா உண்டாகிருபாங்க.” மாதங்கி கண்ணடித்தாள்.

           “க்ளுக்…” என்று இப்பொழுது சிரிப்பது பிருந்தாவின் முறையாகிவிட்டது.

 “பசங்க நிலைமை என்னவோ?” என்று பிருந்தா இப்பொழுது சந்தேகம் கேட்டாள்.   

“கல்யாணம் பண்ண பசங்க, ஏன் கல்யாணம் பண்ணோம்முன்னு யோசிச்சிட்டு இருப்பாங்க. கல்யாணம் ஆகாத பசங்க நமக்கு ஏன் கல்யாணம் ஆகலை.  நாம்ம என்ன நைண்ட்டி கிட்ஸ்ஸான்னு யோசிச்சிட்டு இருப்பாங்க.” மாதங்கி மீண்டும் வளவளக்க “கண்டிப்பா யோசிப்பங்க.” ஒரு அழுத்தமான  குரல் பின்னாடி இருந்து ஒலித்தது.

“ம்… ம்… மேம்…” இருவரும் பின் பக்கமாக திரும்ப, அங்கு நாற்பது வயதில் ஒரு பெண்மணி தன் கண்ணாடியை சரி செய்தபடி நின்றார்.

“உன்னை மாதிரி ஒரு பொண்ணை கல்யாணம் செய்தா, நிச்சயம் ஏன் கல்யாணம் பண்ணோமுன்னு ஒருத்தன் யோசிப்பான்.” அவர் தன் கழுத்தை தடவியபடி பேசினார். அப்பொழுது, கிருஷ் அவன் நண்பர்களோடு மீண்டும் அங்கு வந்து சேர, அவர்கள் கூட்டத்தின் பார்வை இவர்களை தொட்டு மீண்டது.

பிருந்தா, மௌனமாக நிற்க, “ம்… மேம்…” என்று மாதங்கி தடுமாறினாள்.

“முதல் நாளே இவ்வளவு பேச்சு? ஐ டோன்ட் லைக் இட்”  என்று அவர் இன்னும் சத்தம் செய்ய, இரு பெண்களும் சற்று அவமானத்தோடு கூனி குறுகினர்.

இரு பெண்களின் முகத்தை பார்த்துவிட்டு, கிருஷின் கூட்டம் சற்று நகர்ந்துவிட்டது. கிருஷ் மட்டும் அங்கு நின்று கொண்டிருந்தான்.

அவன் கண்கள் இரு பெண்களை கூர்மையாக பார்க்க, அவன் எண்ணங்களோ, தன் நண்பர்கள் சொன்னத்தை எண்ணி பார்த்து கொண்டது.

     ‘இந்த பொண்ணு மாதங்கி, போலீஸ்காரன் தங்கச்சி. அப்புறம் அந்த மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் முகுந்தனுக்கு நெருக்கமான ஃபிரெண்ட்.’

             கிருஷின் முகத்தில் கணிக்க முடியாத யோசனை பரவியது மாதங்கியை பார்த்தபடி. நொடிப்பொழுதில், அவன் பார்வை இரு பெண்களையும் கண்டும் காணாதது போல் ஒதுங்கியது. இரு பெண்களின் பார்வையும் ‘இவன் மட்டும் ஏன் போகாமல் இங்கயே நிற்கணும்?’ என்ற கேள்வியோடு அவனை பார்த்தது.

“நான் இனி உங்களை சேர்த்து பார்க்க கூடாது.” அவர் அழுத்தமாக கூற, மாதங்கி சற்று முன் கூறிய, ‘அப்ப தனித்தனியா பாருங்க சீனியர்’ நினைவு வர, கிருஷ் நமட்டு சிரிப்பு சிரித்தான் இவர்களை பார்த்து.

மாதங்கியின் கோபம் சுறுசுறுவென்று ஏறியது.

“யு மே கோ நவ்.” என்று கூற, அவர்கள் இருவரும் வேகவேகமாக நடக்க ஆரம்பித்தனர்.

கிருஷ் அந்த பேராசிரியரிடம் தான் கையில் வைத்திருந்த குறிப்புகளை கொடுத்துவிட்டு, அவர்கள் பின்னே நடக்க ஆரம்பித்தான்.

“நான் அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?” மாதங்கி தன் பற்களை நறநறத்து பிருந்தாவிடம் கேட்டாள்.

“அப்படி ஒன்னும் பெருசா நீ தப்பா சொல்லலை.” பிருந்தா கூற, “சிறுசா சொன்னேனா?” மாதங்கி மீண்டும் சந்தேகம் கேட்டாள்.

“நம்ம நட்பை பிரிக்க முதல் நாளே சதி பண்றாங்க. நாம இனி ரொம்ப பிரெண்டா இருக்கனும் சரியா?” மாதங்கி கேட்க, “எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு.” என்று பிருந்தா புன்னகையோடு கூறினாள்.

“எனக்கும்…” என்று மாதங்கி கூறிக்கொண்டே வேகமாக நடந்தாள்.

“நீ எப்ப பாரு இப்படி தான் பேசுவியா?” என்று பிருந்தா கேட்க, “நான் என்ன ரொம்பவா பேசுறேன்? கொஞ்சமா தானே பேசுறேன்?” கேட்டுக்கொண்டே, அவர்கள் வகுப்புக்கு செல்ல வேண்டிய மாடிப்படியில் ஏறினாள்.

“ரொம்ப கொஞ்சமா தான் பேசுற.” என்று பிருந்தா கண்சிமிட்ட,”ம்… இப்படி தான் உண்மை பேசணும்” என்று சிரிப்பினோடு வேகமாக நடந்தாள் மாதங்கி.

“அந்த மேம் பெயர் என்னவா இருக்கும்?” பிருந்தா கேட்க, “டார்லிங்…” என்றாள் மாதங்கி.

“இப்படி ஒரு பெயரா? அதுவும் உனக்கு எப்படி தெரியும்?”  என்று பிருந்தா கேட்க, “நம்ம கிட்ட டார்லிங் பட டெவில் மாதிரி தாட் பூட்ன்னு கத்திட்டு, அந்த மொக்கை ஹீரோவை பார்த்து அப்படியே சிரிச்சி சிரிச்சி டார்லிங் மாதிரி பேசினா டார்லிங் தானே?” மாதங்கி நியாயம் பேசினாள்.

“டார்லிங் நீ வச்ச பேரா?” பிருந்தா கேட்க, “நல்லாருக்கில்லை? இனி அந்த மேம் எனக்கு டார்லிங் தான்.” என்று அழுத்தமாக கூறிக்கொண்டே மாதங்கி அடுத்த படியை ஏறினாள்.

“அது என்ன மொக்கை ஹீரோ?” என்று அடுத்த கேள்வியை கேட்டாள் பிருந்தா.

“ஒருத்தன் தன்னை தானே ஹீரோன்னு நினைச்சிகிட்டா அவன் தான் மொக்கை ஹீரோ. காலையில் என்னவோ ஹீரோ மாதிரி, நம்மளை கூப்பிட்டு கலாய்க்க வேண்டியது. அவனை சுத்தி மொக்கையா ஒரு கூட்டம். அப்புறம், இவர் பெரிய இவர் மாதிரி நமக்கு அட்வைஸ் பண்ண வேண்டியது. அப்புறம், நம்மளை திட்டும் பொழுது, பல் தெரியுற மாதிரி ஒரு சிரிப்பு. பெரிய புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்னு நினைப்பு. சரி அவன் பெயர் என்னவா இருக்கும்?” என்று பேசி கொண்டே போன மாதங்கி  சட்டென்று நிறுத்தினாள்.

“தெரியாது” உதட்டை பிதுக்கினாள் பிருந்தா.

“அவன் முகத்தில், அந்த பல் கீழே விழுற மாதிரி, ஒரு குத்து. ஒரே ஒரு குத்து.” அவள் பிருந்தாவின் பக்கம் திரும்பி செய்கை செய்து காட்ட, மாதங்கியின்  கைகள் தூக்கியவாறே நின்று, கண்கள் பெரிதாக விரிந்து அவள் நெற்றியில் வியர்வை துளிகள்.

மாதங்கியின் முகமாற்றத்தில், பிருந்தா பின்பக்கம் திரும்பி பார்க்க அங்கு நின்று கொண்டிருந்தான் கிருஷ்.

கிருஷ் படிக்கட்டின் கைப்பிடியில் சாய்ந்து நின்று கொண்டு, “எங்க குத்து பாப்போம்” என்றான் அசட்டையாக.

ஒரு படி கீழே நின்றாலும், இவர்கள் உயரத்திற்கு இருந்தான். கிருஷை பார்த்தப்படி, “இன்னைக்கு எனக்கு நேரம் சரியில்லை.” முணுமுணுத்தாள் மாதங்கி.

‘இவன் மொக்கை ஹீரோவா?’ அவள் அறிவு ஆராய முற்பட்டது.

“என்ன?” என்று அவன் ஒற்றை புருவம் உயர்த்த, “மாதங்கி வா நாம போயிரலாம்.” அவள் கைகளை பிடித்து இழுத்தாள் பிருந்தா.

“நான் பேசிட்டு இருக்கேன்” அவன் குரல் இப்பொழுது பிருந்தாவை கண்டிப்பது போல ஒலித்தது.

“வா பிருந்தா போகலாம். ” இப்பொழுது மாதங்கி முன்னே நடக்க, பிருந்தா அவன் குரலுக்கு கட்டுப்பட்டு அங்கு நின்றாள்.

“நான் பேசிட்டு இருக்கேன்” அவன் கூற, “நீங்க எங்களை ஃபாலோவ் பண்ணறீங்களா?” மாதங்கி சட்டென்று கூறினாள்.

“ஃபாலோவ் பண்ற அளவுக்கு நீங்க ரெண்டு பேரும் அழகா எனக்கு தெரியலியே.” அவன் உதடுகள் இப்பொழுது மடிந்தது ஏளன புன்னகையில்.

“எல்லா பொண்ணுங்களும் அழகு தான். அதை ஒத்துக்குற மனசு தான் ஆண்களுக்கு இல்லை.” பிருந்தா பட்டென்று கூற, “ஐயோ பிருந்தா, சூப்பர் டீ” தன் தோழியின் தோள்களை கட்டி கொண்டாள் மாதங்கி.

“ரெண்டு பேருக்கும் கிளாஸ் போகுற எண்ணமில்லையா?”அவன் சுருக்கென்று பொத்தம் பொதுவாக கேட்டான்.

“நீங்க தான் எங்களை கூப்பிட்டு ராக்கிங் பண்ணிட்டு இருக்கீங்களே?” மாதங்கி புன்னகையோடு கேட்க, அவன் முகத்திலும் புன்னகை பரவியது.

“நீங்க இப்படி சொன்னலும் யாரும் இங்க நம்ப மாட்டாங்க.” என்று கூறி அடுத்த கேள்வியை தொடுத்தான் கிருஷ்.

“நான் யாருனு தெரியுமா?” என்று கேட்டான் புன்னகையில் மடிந்த உதட்டின் மேல் இருந்த தன் அரும்பு மீசையை தடவியபடி.

‘மொக்கை ஹீரோ!’ மாதங்கி சற்று முன் வைத்த பெயர் நினைவு வர, இருவர் முகத்திலும் சிரிப்பு பரவியது.

அப்பொழுது எதிரே வேறொரு பேராசிரியர் வர, “ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ்க்கு இங்க என்ன வேலை? நீங்க தானே இப்ப ஹெச். ஓ. டீ கிட்ட திட்டு வாங்கிட்டு இருந்தீங்க?” என்று அவர் கேட்டார்.

‘நாம்ம, திட்டு வாங்கினது ஹெச். ஓ. டீ யா?  வந்ததும் மோதிர விரலில் கொட்டு வாங்கியாச்சு. சிறப்பு!’ மாதங்கியின் எண்ணம் வேகமாக ஓடியது.

“இங்க என்ன பண்ணறீங்க?” அவர் இப்பொழுது கர்ஜிக்க, இரு பெண்களும் தடுமாறினார்.

“சார், நம்ம டிபார்ட்மென்ட் தான். கிளாஸ்க்கு வழி தெரியாம திணறிட்டு இருந்தாங்க. நான் வழி சொல்லிட்டு இருந்தேன்.” என்று கிருஷ் சூழ்நிலையை தனதாக்கினான்.

“ஓ…” என்று அவர் மெல்லிய சத்ததில் கூற, “அப்புறம், நான் தான் காலேஜ் கிளாஸ்ஸஸ் பத்தி கேட்டுட்டு இருந்தேன். ஃபீட் பேக் அனுப்ப” என்று அவரை நம்ப வைத்து அனுப்பினான்.

அவர் சென்றதும்  அவர்கள் பெருமூச்சு விட, “எல்லார் கண்ணும் ஃபர்ஸ்ட் இயர் ஸ்டுடென்ட்ஸ் மேல தான் இருக்கும். எப்பவும் காப்பாற்ற நான் வர மாட்டேன்.” என்று கூறி அவர்களை தாண்டி வேகமாக நடந்தான்.

முன்னே சென்றவன் சற்று பின்னே திரும்பி, “நீ உன் பேச்சை குறை.” என்று மாதங்கியை பார்த்து கூறிவிட்டு, “நீ உன் நட்பை குறை.” என்று பிருந்தாவிடம் கூறிவிட்டு அவன் செல்ல, “சீனியர்…” என்று அவனை கண்களில் குறும்போடு அழைத்தாள் மாதங்கி.

அவன் திரும்பி பார்க்க, “தேங்க்ஸ் சீனியர்…” என்று மாதங்கி புன்னகைக்க, “மொக்கை ஹீரோ இல்லையா?” அவன் கழுத்தை மட்டுமே திருப்பி அவர்களை அளவிட்டபடி கேட்டான்.

மாதங்கி நாக்கை கடித்து முகத்தை சுழிக்க, பிருந்தா கண்களை சுருக்கி அவனை பரிதாபமாக பார்த்தாள். அந்த விழியின் பார்வையிலிருந்து தன்னை மீட்டுக்கொண்டு விறுவிறுவென்று நடந்தான் கிருஷ். 

அன்றைய வகுப்பு முடிந்து, பிருந்தா மாதங்கி இருவரும் வீட்டை நோக்கி பயணிக்க ஆரம்பித்தனர்.

      பிருந்தா வீட்டை அடைந்தாள். பிருந்தாவின் வீடு, பெரிய வீடாக பங்களா போல் தான் இருந்தது. ஆனால், பிரமாண்டம் இல்லை.

 “காலேஜ் எப்படி மா இருந்தது?” ருக்மணி தன் மகளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தபடியே கேட்க, “நல்லாருந்தது அம்மா. ஒரு புது ஃபிரென்ட். பெயர் மாதங்கி. ரொம்ப நல்லா பழகுறா. வீட்டுக்கு வர சொல்லிருக்கா. நானும் அவளை நம்ம வீட்டுக்கு கூப்பிட்டுருக்கேன்.” என்று கூறி, அன்று நடந்த சிலவற்றை தன் தாயுடன் பகிர்ந்து கொண்டாள் பிருந்தா.

சில நிமிட பேச்சுகளுக்கு பின், “அம்மா, கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கறென்.” என்று கூறி, தன் அறைக்குள் நுழைந்து கொண்டாள்.

‘ஹப்பா, என் ரூமுக்கு வந்தால் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.’ என்ற எண்ணம் அவளுக்கு வரத்தான் செய்தது.

‘நான் ஏன் இன்னைக்கு அவனை அத்தனை முறை பார்த்தேன். நான் என்ன லூசா? அவன் நான் பார்த்ததை பார்த்திருப்பானோ? என்னை பத்தி எதுவும் நினைச்சிருப்பானோ?’ அவளுள் கேள்விகள் துளைத்து கொண்டு வெளியே வந்தது.

     “மாதங்கி நல்லா தான் பழகுறா. ஆனால், ரொம்ப வாய் ஜாஸ்தியா இருக்கு. எல்லா பிரச்சனையும் விலைக்கு வாங்கிருவாளோ?” தனக்கு தானே கேட்டுக்கொண்டாள் பிருந்தா.

     ‘இருந்தாலும், அவ கூட பேசும் பொழுது சந்தோஷமா இருக்கு. நல்லாருக்கு. எனக்கு அவளை பிடிச்சிருக்கு.’ பிருந்தாவின் மனசாட்சி பேச, பிருந்தா தன் மூளையை வசதியாக ஒதுக்கிவிட்டாள்.

அதே நேரம், கார் அருகே தன் வண்டியை நிறுத்தினாள் மாதங்கி.

 “ப்பே…” என்று கத்தி கொண்டே வீட்டிற்குள் நுழைந்தாள்.

“ஏன் டீ ப்பேன்னு கத்திகிட்டே உள்ள வர?” என்று மரகதவல்லி கேட்க, “நாளைலருந்து ம்மான்னு கத்திட்டு வரேன்” என்று கூறிக்கொண்டு தன் தந்தை அருகே சோபாவில் அமர்ந்தாள் மாதங்கி.

“எப்படி இருந்தது ஃபர்ஸ்ட் டே?” என்று தன் மகளை பார்த்து கண்டிப்போடு கேட்டார் மரகதவல்லி.

“வெரி பேட் ம்மா. சீனியர்ஸ் ரொம்ப மோசம். பயங்கர ராக்கிங். அப்புறம் எல்லாரும் ஸ்கூல் டீச்சர்ஸ் மாதிரி இருக்காங்க. பிரம்பு மட்டும் தான் இல்லை. நான் அவங்களை எல்லாம் பார்த்து, ரொம்ப பயந்து போய்ட்டேன்” என்று கண்களை உருட்டி மாதங்கி சலித்து கொண்டாள்.

 “ம்… அப்படி இருந்தா தான் நீயெல்லாம் ஒழுங்கா இருப்ப” என்று கரகரப்பான குரலில் மரககதவல்லி கூற, “ஹா… ஹா…” என்று பெருங்குரலில் சிரித்தார் சக்திபாலன் மாதங்கியின் தந்தை.

“அப்பா சிரிக்காதீங்க. உங்க பிரென்ட் பையன் முகுந்தன் இன்னைக்கு காலேஜ் வரலை. அவனை கூப்பிட்டு என்னன்னு கேளுங்க.” என்று மாதங்கி புகார் கடிதம் வாசித்தாள்.

அப்பொழுது அவள் தலையில் நொட்டென்று ஒரு அடி விழுந்தது. அவள் திரும்பி பார்க்க, மாதங்கியின் பின் கட்டுக்கோப்பான உடற்கட்டோடும் காவல்துறையின் உடையோடும் அவள் சகோதரன் அரவிந்தும், கவர்ச்சிகரமான புன்னகையோடு முகுந்தனும்  நின்று கொண்டிருந்தனர்.

‘இன்னைக்கு காலையிலிருந்து எனக்கு பிரச்சனை பின் பக்கமாவே எட்டி பார்க்குது.’ எண்ணியபடி அசடு வழிந்தாள்.

“என்ன, வந்த உடனே என்னை போட்டு கொடுக்கறியா?” முகுந்தன் அவளை முறைத்து பார்த்தான்.

“அண்ணா, முகுந்தன் இன்னைக்கு காலேஜ்க்கு வரலை. அவன் என்ன சொன்னான். என் காலேஜ்க்கு வா, நான் உன்னை பத்திரம்மா பாத்துக்குறேன்னு சொன்னானில்லை. அவன் இன்னைக்கு வரவே இல்லை. சீனியர்ஸ் என்னை அழ அழ கேலி பண்ணிட்டாங்க ” மாதங்கி முகுந்தனை முறைத்து கொண்டு புகார் செய்தாள்.

“உன்னை அழ அழ?” என்று முகுந்தன் அவளை பார்த்து கேள்வியாக நிறுத்த, “ஆமா, உன் மேல் சத்தியம் பண்ணட்டுமா?” மாதங்கி முகுந்தன் தலையை எட்டி தொட முயல, எட்டடி ஓடினான் முகுந்தன்.

“தாயே, நீ சின்ன வயசுல இருந்து என் தலையில் பண்ணிய சத்தியத்துக்கு, நான் இவ்வளவு நாள் உயிரோட இருக்கிறதே பெரிய விஷயம். இனியும் வேண்டாம் மாதங்கி” என்று அவன் கெஞ்ச, “அந்த பயம்…” மாதங்கி அவனை மிரட்டினாள்.

“முகுந்தன் என் கூட வந்திருந்தான் ஒரு ப்ராஜெக்ட் விஷயமா?” என்று அரவிந்த் தன் தங்கையிடம் கூற, “நீ போலீஸ். முகுந்தன் இன்ஜினியரிங்! ஏதும் கொலை பண்ணிட்டியா முகுந்த்?” மாதங்கி அவனை பார்த்து மிக தீவிரமான முகத்தோடு கூர்மையாக கேட்டாள்.

“என்ன கொழுப்பா? மாதங்கில இருந்து மங்கி கதை வரை எனக்கு எல்லாம் தெரியும். எங்க போட்டு கொடுக்கணுமுன்னு எனக்கும் தெரியும்.” என்று யாருக்கும் கேட்காதவாறு, மாதங்கியின் அருகே நின்று கொண்டு அவளை மிரட்டினான் முகுந்தன். குரல் தான் அவளை மிரட்டியது. அவன் கண்களில் நட்பும், அன்பும் வழியத்தான் செய்தது.

அவன் மிரட்டலில், மாதங்கி சர்வமும் அடங்கி, ‘என்னை என் அம்மா கிட்ட போட்டு கொடுத்திருவேன்னு மிரட்டுறியா? இரு உன்னை வேற மாதிரி கவனிக்குறேன்.’என்று மனதிற்குள் சூளுரைத்து கொண்டாள். அவள் மனம் சூளுரைத்தலோடு,அவன் மீது உரிமையும் கொண்டாடியது.

கல்லூரி வகுப்பு முடிந்தபின், சில இடங்களில் சுற்றி விட்டு தாமதமாக பிருந்தாவனத்திற்கு வந்து சேர்ந்தான் கிருஷ்.

    “என்னடா இவ்வ்ளவு லேட்?” என்று கேட்டார் வேதநாயகி. “ப்ராஜெக்ட் சம்பந்தமா கொஞ்சம் நேரம். அப்புறம் ஃபிரெண்ட்ஸ்  கூட கொஞ்ச நேரம் பேசிட்டு இருந்தேன் அம்மா. பாட்டி, தாத்தா வந்தாச்சா?” என்று தன் தாயிடம் கேள்வியாக நிறுத்தினான் கிருஷ்.

   “நாளைக்கு வரதா சொன்னாங்க கிருஷ். கோவிலில் ஏதோ நேரமாகிருச்சு போல. ஃபோன் பண்ணிருந்தாங்க.உன்னை தான் உன் பாட்டி ரொம்ப தேடினாங்க.” என்று புன்னகைத்தார் வேதநாயகி.

ஒரு பெருமித புன்னகையோடு, “அம்மா, நான் ரெஃபிரேஷ் பண்ணிட்டு வரேன்.” கூறிக்கொண்டு சென்றவன், சில நிமிடங்களில் ஷார்ட்ஸ், டீ-ஷர்ட்ஸில் வந்தான்.

அவனுக்கு சாப்பிடுவதற்கு சிற்றுண்டியை கொடுத்தவர், “எப்படிடா இருந்தது இன்னைக்கு கிளாஸ்? எந்த வம்பும் வளர்க்காம இருந்தீங்களா?” என்று கேள்விகளை தொடுத்தார்.

“அம்மா, என்னை பார்த்தா வம்பு வளர்க்குறவன் மாதிரியா இருக்கு?” என்று கிருஷ், தாயிடம் செல்லமாக கோபித்து கொள்ள, அவனை மேலிருந்து கீழ் வரை பார்த்தார் வேதநாயகி.

    “ஆமா டா, அப்படி தான் இருக்கு.” என்று நெற்றியடியாக அடித்தார் அவன் தாயார்.

“அம்மா, உங்களுக்கு பொண்ணு இல்லை. இருந்தா நீங்களே சொல்லிருப்பீங்க, நான் அமைதி. என்னா வாய்… என்னா வாய்…” என்று கண்களை சுருக்கி தன் தாயிடம் சரணாகதி என்பது போல் பாவனை செய்தான் கிருஷ்.

“எந்த பொண்ணாவது உனக்கு பயங்கர மொக்கை கொடுத்திருச்சா?” என்று தன் மகனின் மனதை படித்தது போல் கேட்க, அவன் கண் முன்னே மாதங்கி தோன்றினாள்.

              அதே நேரத்தில், அவன் மனதை தைத்தது பிருந்தாவின் பார்வை. அந்த பார்வையோடு, அவன் மனதில் ஒரு கேள்வியும் வந்து அமர, குழப்பத்தில் மௌனத்தில் ஆழ்ந்தான் கிருஷ்.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!