Brinthaavanam-3

Birunthaavanam-e3aff804

Brinthaavanam-3

பிருந்தாவனம் – 3

 மாதங்கி கண்முன் தோன்றினாலும் கிருஷின் மனதை தைத்தது என்னவோ பிருந்தாவின் பார்வை தான். ‘பிருந்தாவை பத்தி அம்மா கிட்ட சொல்லலாமா?’ என்ற கேள்வி அவனிடம் எழுந்தது.

 ‘அந்த கண்கள் என்ன சொல்லுது. ஒருவேளை அந்த பொண்ணு என்னை சாதாரணமா தான் பார்த்திருக்குமோ? எனக்கே சரியா தெரியாத விஷயத்தை அம்மா கிட்ட சொல்லி ஏன் குழப்பணும்?’ குழப்பம் அவனுள் நீடிக்க, அவனிடம் மௌனம் மட்டுமே நீடித்தது.

 “என்ன கிருஷ், அம்மா உன் கிட்ட உண்மையை கேட்டுடேனா? இப்படி ஷாக் அடிச்ச மாதிரி உட்காந்திருக்க?” வேதநாயகி கேட்க, “அம்மா…” என்று புன்னகைத்தான் கிருஷ்.

 சிறிது நேரம், அவர்கள் பேச்சு சிரிப்பும், கேலியாக தொடர, அப்பொழுது அரவிந்தின் வருகை இவர்கள் பேச்சை தடை செய்தது.

 “வாங்க… வாங்க…” என்று வேதநாயகி அவனை உபசரிக்க, “ஐயா, வர சொல்லிருந்தாங்க ஏதோ பாதுக்காப்பு விஷயமா? ஐயா இருக்காங்களா?” என்று அரவிந்தன் மரியாதையோடு கேட்டான்.

 “ஐயா, வர நேரம் தான். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நான் உங்களுக்கு ஏதாவது குடிக்க கொண்டு வரேன்.” என்று வேதநாயகி சொல்ல, “அதெல்லாம் வேண்டாம் அம்மா.” மரியாதையோடு அழுத்தமாக மறுத்துவிட்டான் அரவிந்த்.

 வேதநாயகி உள்ளே சென்று விட, அரவிந்த் அந்த வீட்டை அளந்து கொண்டிருந்தான். ‘நம்ம வீடும் பெருசு தான். பிரமாண்டம் தான். ஆனால், இந்த பிருந்தாவனம், அரசியல் வாடை நிறைந்த வீடில்லாய்யா? அந்த செழிப்பு இருக்கத்தான் செய்தது. வேணுகோபாலன் நல்ல மனிதர் தான். அரசியலில் அத்தனை கெட்ட பெயர் கிடையாது. மனைவியை பார்த்தாலும், நல்லவங்க மாதிரி தான் தெரியுது.’ அரவிந்தின் எண்ணம் மெதுவாக அவன் போலீஸ்கார எண்ணத்தோடு ஓடியது.

 ‘நான் இப்படி எல்லாம் வரமாட்டேன். அவர் சொல்லியும், வராம இருக்க முடியலை. மரியாதையா கூப்பிட்டுட்டார்.’ அவர்கள் வீட்டுக்கு வந்தது பிடிக்கலைனாலும், தன்னை சமாதானம் செய்து கொண்டிருக்க, அவனுக்கு குடிக்க பெரிய கண்ணாடி கோப்பையில் பழச்சாறு வந்தது.

மறுக்க முடியாமல், அரவிந்த் குடிக்க ஆரம்பிக்க, அவன் முன் வந்து அமர்ந்தான் கிருஷ். அவன் உதட்டில் ஏளன புன்னகை வந்தது.

 கிருஷ் தன் கால்மேல் கால் போட்டு அரும்பு மீசையை தடவினான். அவன் கண்கள் அரவிந்தின் காக்கி உடையை ஏளனத்தோடு தொட்டு மீண்டது. அரவிந்தின் கண்கள் கிருஷின் உடல் பாவனையும், அவன் தோரணையில் வீசிய அரசியல் வாடையையும் கணக்கிட்டு கொண்டது.

 அவர்கள் இருவருக்கும் அன்றைய சம்பவம் மனதில் வந்தது.

 “வண்டியை நிறுத்து.” அரவிந்தின் போலீஸ் ஜீப், வேகமாக சென்ற கிருஷின் பைக்கை விரட்டி மடக்கியது.

 கிருஷின் மீதும், அவர்கள் நண்பர்கள் மீதும் வீசிய மதுவின் வாடையில் அரவிந்த் முகம் சுழித்தான்.

 “ஓவெர் ஸ்பீட், ஹெல்மெட் இல்லை, இதுலே ட்ரிங்க்ஸ் வேற?” அரவிந்த் கேட்க, கிருஷின் பின்னே அமர்ந்திருந்த நண்பன் பதறிக்கொண்டு வண்டியில் இருந்து இறங்கினான்.

 கிருஷின் பார்வை, அரவிந்த் மீது தெனாவட்டாக விழுந்தது. “நான் யார் தெரியுமா?” என்று கிருஷ் கேட்க, “ம்… தெரியாமல் என்ன? காலேஜ் ஸ்டுடென்ட். ட்ரிங்க்ஸ் அடிக்கிற அளவுக்கு நண்பர்கள் சேர்க்கை. பணக்கார வீட்டு பையன். அதுக்கே உண்டான திமிர், ஒரு போலீஸ் கிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு கூட தெரியாத முட்டாள்.” என்று அரவிந்த் கிருஷின் சாவியை கைகளில் எடுத்து கொண்டான்.

 “போலீஸ்னா தலையில் என்ன கொம்பா இருக்கு. நான்…” என்று பேச ஆரம்பித்து, தன் அரசியல் பின்புலத்தை தெனாவட்டாக கூறினான் கிருஷ்.

“என் தலையில் இருக்கிற கொம்பு தெரியுது. ஆனால்…” என்று நக்கலாக நிறுத்தினான் அரவிந்த்.

கிருஷ், அவனை புரியாமல் பார்க்க, “உங்க அப்பா, தாத்தா அரசியல் பெரும்புள்ளினா உனக்கு ஆக்சிடென்ட் ஆகாதா? ஆக்சிடென்ட் ஆனால்  உயிர் போகாதா? இல்லை குடிச்சாலும் உங்க குடல் வேகாதா? இதெல்லாம் எனக்கு இத்தனை வருஷம் தெரியாம போச்சே.” அரவிந்த் சோகமாக மீண்டும் நக்கல் செய்தான்.

“என்ன நக்கலா? உங்களுக்கு வேண்டியது காசு தானே? ஐநூறா? ஆயிரமா?” என்று கேலி செய்யும் தொனியில் கேட்டான் கிருஷ்.

“அவ்வளவு எல்லாம் வேண்டாம். இந்த சாவி மட்டும் போதும். நாளைக்கி ஸ்டேஷன் வந்து வண்டியை வாங்கிக்கோ.” கூறிவிட்டு மடமடவென்று ஜீப்பில் ஏறி சென்றுவிட்டான் அரவிந்த்.

“போலீஸ்காரன்னு திமிர். இவனுக்கு நான் யாருன்னு நாளைக்கு அவன் இடத்துக்கு வந்தே காமிக்குறேன். நக்கலா பேசுறான்?” கிருஷின் உதடுகள் கோபத்தில் முணுமுணுத்து கொண்டது.

அன்று வண்டி இல்லாமல் சென்றது மட்டுமில்லை. வீட்டில் வேறு தந்தையிடம் திட்டு வாங்கி கட்டி கொண்டான் கிருஷ்.

மறுநாள், வண்டி வாங்க சென்ற பொழுது, கிருஷின் பின்புலத்தில் அவனை மரியாதையாக நடத்தினர் மற்ற காவல் துறையினர். கிருஷின் கண்கள் என்னவோ, அரவிந்தை தான் தேடியது. ஆனால், அவனை பார்க்க முடியவில்லை. அதன் பின் இன்று தான் இருவரும் சந்திக்கிறார்கள்.

அப்பொழுது கிருஷின் அலைபேசி ஒலிக்க, “என்ன டா கிருஷ் பண்ணிட்டு இருக்க” எதிர்முனை கேள்வியை தொடுத்தது.

“வழக்கமா நாய் வாலை ஆட்ட வரும். இந்த முறை, கொம்பு கொண்ட மிருகம், அதை சீவ வந்திருக்கு.” என்று அரவிந்தை பார்த்தபடி நக்கலாக கூறினான் கிருஷ்.

அரவிந்தின் கோபம் விர்ரென்று ஏறியது. ஆனால், அவன் உதடுகள் புன்னகையை மட்டுமே உதிர்த்தது.

“மச்சான், கொம்பு கொண்ட மிருகத்துக்கு சொரணை இருக்காதோ? அது சரி தான் இருகாதில்லை..” என்று தோழனிடம் பேசுவது போல் அரவிந்தை மட்டம் தட்டி கொண்டு தன் பேச்சை முடித்தான் கிருஷ்.

அப்பொழுது கிருஷின் தந்தை வேணுகோபலன் உள்ளே நுழைந்தார். வெள்ளை வேஷ்டி வெள்ளை சட்டை அணித்திருந்தார். கழுத்தில் தங்க சங்கிலி, கையில் தடியான தங்க நிறத்தில் வாட்ச் அணிந்திருந்தார்.

 “தம்பி மன்னிக்கணும். நான், தான் உங்களை நேரில் வந்து பார்க்கணும். அதீத வேலை, அது தான் உங்களை கூப்பிடுற மாதிரி ஆகிருச்சு. நேரம் வேற ஆகிருச்சு” வருத்தம் தொனிக்கும் குரலில் பேசினார் வேணுகோபாலன்.

 வருத்தம் தொனிக்கும் குரலில் அவர் பேசினாலும், ‘இதுவெல்லாம் போலி வருத்தம். இதை மாதிரி நான் எத்தனை பேரை பார்த்திருக்கேன்.’ என்ற எண்ணமே அரவிந்தின் மனதில் ஓடியது.

 ‘அப்பா, ஏன் இவன் கிட்ட இப்படி தழைந்து பேசணும்.’ கிருஷ் தன் தந்தையை கடுப்பாக பார்த்தான்.

 “பரவாலைங்க ஐயா. உலகத்தில் எத்தனை பேருக்கு கண்ணில்லை. எத்தனை பேருக்கு அறிவில்லைனு கணக்கெடுக்குற வேலை ஒன்னு பண்ணிட்டு இருந்தேன். நேரம் போனதே தெரியலை” கிருஷை மேலிருந்து கீழ் வரை ஏளனமாக பார்த்தபடி புன்னகையோடு கூறினான் அரவிந்த்.

 ‘யாருக்கு அறிவில்லை. யாருக்கு கண்ணில்லை. இவன் அடங்கமாட்டான். இவனை பாவம் பார்த்து நான் விட்டா, ரொம்ப பேசுறான். ஒருநாள் இவனுக்கு இருக்கு வேட்டு என் கையால்’ கிருஷ் மனதிற்குள் கருவிக்கொண்டே அவன் அறை நோக்கி சென்று விட்டான்.

அரவிந்த் தன் பேச்சை முடித்து கொண்டு கிளம்பிவிட்டான்.

 மாதங்கி, பிருந்தாவின் கல்லூரி நாட்கள் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் சீராக நகர்ந்தது ஒரு வாரத்திற்கு.

அன்று காலை, முகுந்தன் காரில் அவளுக்காக காத்திருந்தான். மாதங்கி அவசரமாக காரில் ஏறினாள். பளபளப்போடு, லேகங்கா அணிந்திருந்தாள்.

“எதுக்கு இந்த டிரஸ் போட்டிருக்க காலேஜ்க்கு?”முகுந்தன் முகத்தை சுழித்தான்.

“ஏன்?” மாதங்கி தன் உடையை சரி செய்து கொண்டு கார் சீட்டில் சாய்ந்தாள்.

“கல்யாண வீட்டுக்கு போற மாதிரி இருக்கு.” முகுந்தன் கூற, “இன்னைக்கு எங்களுக்கு வெல்கம் பார்ட்டி.” மாதங்கி சந்தோஷமாக கூறினாள்.

“எங்க டிபார்ட்மென்ட் எல்லாம் இப்படியா ஆட்டம் போடுது. உங்க சி.எஸ் டிபார்ட்மென்ட் தான் எப்பவும் இப்படி ஆட்டம் போடும்.” முணுமுணுத்தான் முகுந்தன்.

 “உங்களுது மெக்கானிக்கல் நிறைய பசங்க. கொஞ்சம் பொண்ணுங்க. எங்க சி.எஸ் டிபார்ட்மென்டல்ல பொண்ணுங்களும், பசங்களும் ஜாஸ்தி. அது தான் ஒரே என்டேர்டைன்மெண்ட்.” என்று மாதங்கி கண்சிமிட்டி சிரித்தாள்.

 ‘அந்த கிருஷும் ஒரு காரணம். அவன் கேட்டா, காலேஜில் உடனே அனுமதி கிடைச்சிரும். புத்திசாலி. நல்லா படிப்பான். அதே நேரத்தில் அரசியல் செல்வாக்கும் அதிகம். அவன் விருப்படி அவங்க டிபார்ட்மென்ட் ஆடுது.’ மனதிற்குள் எண்ணி கொண்டான் முகுந்தன்.

 “என்ன அமைதியாகிட்ட, உங்க டிபார்ட்மென்ட்க்கு எதுவும் பிளான் பண்ணறியா?” மாதங்கி , தலை சாய்த்து கேட்க, அவள் ஜிமிக்கி ஆடியது.

 “இல்லை மாதங்கி, அதுக்கெல்லம் எங்களுக்கு நேரமில்லை. ப்ராஜெக்ட் நிறைய இருக்கு.” அவன் கூற, “எங்க சீனியர்ஸ்க்கு ப்ராஜெக்ட் இருக்காதா?” மாதங்கி அடுத்த கேள்வியை தொடுத்தாள்.

 “எனக்கும் அதே சந்தேகம் தான்.” அவன் அந்த பேச்சுக்கு அங்கு முற்று புள்ளி வைத்தான்.

கல்லூரிக்குள் கார் செல்ல, “ரொம்ப ஆட்டம் போடாத மாதங்கி.   ப்ரோஇஃபஸோர்ஸ் சீனியர்ஸை ரொம்ப பார்க்க மாட்டாங்க. உங்களை நோட் பண்ணுவாங்க. கொஞ்சம் அடக்கி வாசி.” அவன் அவளுக்கு எச்சரித்தான்.

 மாதங்கி, வேகமாக ஆமோதிப்பாக தலை அசைக்க, அவள் ஜிமிக்கி கிடுகிடுவென்று ஆட, அவள் உடையில் தொங்கி கொண்டிருந்த அத்தனை வேலைப்பாடுகளும் கிடுகிடுவென்று ஆடி, மாதங்கி ஆடப்போகும் அளவை கூறுவது போல் உணர்ந்தான்  முகுந்தன்.

 அப்பொழுது பிருந்தா வண்டியை நிறுத்திவிட்டு வந்தாள். அமைதியாக, தன்மையாக நடந்து வந்தாள். “ஹாய் பிருந்தா…” என்று அவளோடு இணைந்து கொண்டாள் மாதங்கி.

 ‘எப்படி இந்த அமைதியான பொண்ணு, மாதங்கியோட ஃபிரெண்டா இருக்கா?’ என்ற சந்தேகம் எழ முகுந்தன் அவர்களை பார்த்து கொண்டிருந்தான்.

அவர்கள் இருவரும் முகுந்தனை கடந்து செல்ல, பிருந்தாவின் முகம் அவனின் அறிவு பொறியை தட்டியது. கண்மூடி ஒரு நொடி சிந்தித்தான். அவனால் எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. பிருந்தாவின் எண்ணத்தை ஒதுக்கிவிட்டு, தன் வகுப்புக்கு சென்றான் முகுந்தன்.

    மாதங்கி, பிருந்தாவின் வரவேற்பு விழா தொடங்கியது.  “சி. எஸ். ஈ. (கம்பியூட்டர் சைன்ஸ் டிபார்ட்மென்ட்) வெல்கம் பார்ட்டி” என்ற பலகை அவர்கள் செமினார் ஹாலில் நின்று கொண்டிருந்தது.

  “சீனியர்ஸ் டேன்ஸ்…” என்று கூக்குரலோடு, ஆண்களின் நடனம் தொடங்கியது. “ஒவ்…. ஒவ்… வாவ்… வாவ்…” என்ற சத்தத்தோடு கீழிருப்பவர்களின் நடனமும் அரங்கேறியது. சீனியர்ஸ், ஜுனியர்ஸ் நட்புக்கரம் கை குலுக்க ஆரம்பித்தது. சில இடங்களில் நெருங்க கூட ஆரம்பித்தது.

 ஆசிரியர்கள் பலர் வெளியே சென்று விட்டனர். சிலர், அவர்களை கண்காணிக்க உள்ளே இருந்தனர்.

 ஆட்டம், பாட்டத்தோடு விழா முடிவை நெருங்க, “கிருஷ், வெல்கம் சாங்… வெல்கம் சாங்…” என்ற சத்தம் செமினார் ஹால் முழுக்க ஒலித்தது. வருடா வருடம் அரங்கேறும் நிகழ்வு என்பதை அவர்கள் செய்கை அப்பட்டமாக கூறியது.

 கிருஷ் கம்பீரமாக பாட ஆரம்பித்தான். பல டிபார்ட்மென்ட் மாணவர்களும் குழுமி இருந்தனர்.  இவர்களை பார்க்க! ரசிக்க!

“பிருந்தா நித்யா வெண்பா பவித்ரா வேதா

அட நம்ம மாதங்கி வராடா

அடடா அடடா பாத்துக்கோடா”

           கண்சிமிட்டினான் கிருஷ், பெண்களை நோக்கி. “ஓ… ஓஹ்…” என்று மாணவர்களின் சத்தம் எழுந்தது.

“அடடா ஆட்டம் போட்டா

படிப்பு வருமா

வேலை கிடைக்குமா

நீங்க எல்லாம் நல்ல இருப்பேளா

உங்கள எல்லாம் சரஸ்வதி தாண்டா ரட்சிக்கணும்…”

                      இன்னொரு மாணவன் இவர்களை கேலி செய்தான்.

“அட மன்மதன் ரட்சிக்கணும் இந்த மங்கையர் காளைகளே

மங்கையை மயக்கும் மந்திர பூஜை என்னென்ன சொல்லடா

இளம் பெண்களை வெல்லடா”

      மாணவர்கள் பாடிக்கொண்டே தாளத்தோடு ஆட, “ஹோ.. ஹோ.. ஹோ…” என்ற கேலி சத்தம் அங்கு அலையலையாக பரவியது.   ஆசிரியர்கள் தலையில் அடித்து கொள்ள, மாணவ கூட்டம் வாய் பொத்தி சிரித்தது.

மாடி வீட்டு ஸ்மிதா மயங்கி நின்னா அழகா

போலீஸ் வீட்டு பைங்கிளி

என் சொர்கத்தை காட்டும் சுந்தரி

மனதை தைக்கும் பிருந்தா

என் நந்தவனத்து தேவதையா?”

                         பிருந்தா ஒரு நொடி ஆடிவிட்டாள். மாதங்கி முகத்தில் கேலி புன்னகை வந்தமர்ந்தது.

       இப்படியாக்கப்பட்ட, அந்த வருடம் வந்த பெண்களை வைத்து பாடல் அரங்கேற, சில பெண்கள் வெட்கத்தில் சிரித்தனர். சில பெண்கள் கோபத்தில் முறைத்தனர். சில பெண்கள் இவர்களை  கண்டு கொள்ளவே இல்லை.

              பாடல் முடிய, “உஷ்…” என்று அவர்கள் சத்தம் செய்ய, அங்கு மௌனம் நிலவியது. அப்பொழுது அங்கு உள்ளே நுழைந்திருந்தான் முகுந்தன். கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டு அங்கு நடப்பதை பார்த்து கொண்டிருந்தான்.

“பாட்டு எப்படி?” என்று அவன் கேட்க, “வெரி ஓல்ட். இதெல்லாம் நாங்க எய்ட்டிஸ் படத்துலயே பார்த்துட்டோம்.” நக்கலாக ஒலித்தது ஒரு குரல்.

   மொத்த கூட்டமும், அந்த குரலை நோக்கி திரும்பியது. முகுந்தன், திரும்பாமலே அறிந்து கொண்டான் அது மாதங்கியின் குரல் என்று.

‘இந்த பசங்க என்ன பண்ண போறாங்களோ?’ என்ற கேள்வியோடு அவளை பார்த்தான் முகுந்தன் கூட்டத்தின் ஓரமாக நின்று கொண்டு.

முகுந்தனின் மனம் படபடப்பாக துடித்தாலும், அவன் அறிவு மாதங்கி சமாளிப்பாள் என்று நம்பிக்கை ஊட்டியது.

“அப்ப, டுகே கிட்ஸ் ஸ்டைல்ல ஒரு பாட்டு பாடுறது.” என்று கிருஷின் குரல் செமினார் ஹால் முழுக்க ஒலிக்க, மாதங்கி முன்னுக்கு தள்ளப்பட்டாள்.

அந்த அறையில்லா?இல்லை அவன் மனதிலா?என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்று அந்த கல்லூரி காற்று சிந்தித்து கொண்டது.

    மாதங்கி அவர்களை அசட்டையாக பார்த்தாள். மாணவிகளின் ஆர்வம் கூடியது. பிருந்தா சற்று சங்கடமாக மாதங்கியை பார்த்தாள்.

      மாதங்கி, கூறுகையில் அந்த அரங்கமே அமைதியாகி இப்படி அவள் குரல் மட்டும் ஓங்கி ஒலிக்கும் என்று அவள் நினைக்கவில்லை.

   ‘சரி சமாளிப்போம்…’ தன்னை தானே தட்டி கொடுத்து கொண்டாள் மாதங்கி.

“டுகே கிட்ஸ் ஸ்டைல்ல ஒரு பாட்டு…” கிருஷ் தன் சட்டை பையில், கைகளை சொருகி கொண்டு ஒற்றை புருவத்தை ஏற்றி இறக்கினான்.

“அதெல்லாம் பாட தெரியாது” அவன் நண்பனின் குரல் நக்கலாக மாதங்கியை கிண்டல் செய்தது.

முகுந்தன் தன் விரல்களை கோபத்தில் இறுக்கமாக மூடினான்.

“கேசவா மாதவா நந்தா சங்கரா

அட நம்ம கிருஷ் வாரண்டி

அடடா அடடா பாத்து போங்கடி”

   அங்குள்ள கிருஷின் கூட்ட நண்பர்களை வைத்து பாட ஆரம்பித்தாள் மாதங்கி.  முகுந்தன் முகத்தில் கேலி புன்னகை அரும்பியது. அந்த கூட்டத்தில் இப்பொழுது மாணவிகளின் சத்தம் “ஓ… ஓஹ்…” என்று  எழுந்தது.

“அடடா ஆட்டம் போட்டா

படிப்பு வருமா

வேலை கிடைக்குமா

கல்யாணத்துக்கு பொண்ணு கிடைக்குமா?

உங்களை வேலை இல்லாமல் மன்மதன் ரட்சிப்பான?

 அட… அட … அடடா…

கேனை கேசவா   மண்ணாந்தை மாதவா

கலகல கிருஷ்   சரவெடி சங்கரா

கேலி வேண்டாம்டா…” தன் கைகளை அசைத்து ராகம் இழுத்தாள் மாதங்கி.

“கேலிக்கு அஞ்சும் அப்பாவி அடடா…

 அடடா அப்பாவி பெண்கள் காணுமேடா.

 அவங்க  நாங்கள் இல்லைடா

 இல்லடா…   நாங்கள் இல்லைடா”

 “ஹோ… ஹோ…” என்ற சத்தம் இப்பொழுது எழும்ப, மாதங்கியின் முகத்தில் பெருமிதம் குடிகொண்டது.

   “இன்னும் படவா? நான் இன்னும் பாடவா?” மாதங்கி ராகத்தோடு கேட்க, “மைக்கை கொடு” கேட்டுக்கொண்டே படக்கென்று அவள் கைகளில் இருந்து அதை பிடுங்கினான் கிருஷின் தோழர்களில் ஒருவன்.

பாட்டு முடியவும் கூட்டம் கலைய ஆரம்பித்தது.

           கிருஷின் தோழமைகளோ, பேச்சை மாதங்கியிடம் வளர்க்க, முகுந்தன் முன்னே சென்றான். “மாதங்கி, நேரமாச்சு. வீட்டுக்கு போகலாமா?” அவள் கைகளை உரிமையோடு பிடித்து கொண்டு கேட்டான்.

   மாதங்கி சிரிப்பினோடு தலை அசைக்க, கிருஷின் கண்கள் முகுந்தன் கைகள் அவளிடம் காட்டிய உரிமையை படம் பிடித்து கொண்டது. அவன் உரிமையை அவள் ரசிப்பதையும் படம் பிடித்து கொண்டது.

“நாங்க மாதங்கியிடம் பேசிட்டு இருக்கோம்.” கூட்டத்தில் ஒருவன் குரல் கொடுக்க, கிருஷின் செய்கை வேறு விதமாக இருந்தது.

 அந்த கூட்டமே கிருஷை அதிர்ச்சியாக பார்க்க, முகுந்தனின் கண்கள் அவனை கூர்மையாக பார்த்தது.

பிருந்தாவனத்தில் வலம் வருவோம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!