சந்திராழினி – 3

அடுத்த வாரமும் கோவிலுக்கு உடன் வந்தான். ராமும் சந்தியாவும் வழக்கம் போல பொங்கல் வாங்கிக் கொண்டு பிரகாரத்தில் அமர, அவர்களிடம் இருந்து இரண்டடி தள்ளி யாழினியும், வசந்தும் அமர்ந்து கொண்டு கதை பேசினர்.

“அவனை பத்தி விசாரிச்சேன் சந்தூ….என் கிளாஸ் பசங்க கிட்ட…. நல்ல விதமாத் தான் சொல்லறாங்க…நல்லா படிப்பானாம். நல்ல அத்லெட்டாம்…. பாஸ்கெட்பால் நல்லா விளையாடுவானாம்…”

“டெய்லி ஈவினிங் ஸ்கூல் முடிஞ்சு வெளிய வந்தா பஸ் ஸ்டாப்ல வெயிட் பண்ணுவான் ராம். நீ தான் சைக்கிள்ள போயிருவ….அதனால பார்த்திருக்க முடியாது… எனக்கு ஒரு நாள் கேக், ஒரு நாள் சான்லேட்டுன்னு வாங்கிட்டு வந்தான்…”

“நல்லவனா தான் இருக்கான்…. உன் அக்கா என்ன சொல்லறா?”

“அவளுக்கு என்ன? சந்தோஷமா இருக்கா…என்னை ப்ளாக்மெயில் கூட பண்ணறா?”

“ஹ ஹ…. அதெல்லாம் சும்மா…. ஆனா நீ எதும் அம்மாட்ட சொல்லாத சரியா….”

“நான் ஒன்னும் சொல்லலை….சொன்னா என்னை பத்தி அக்கா நல்லா போட்டு குடுத்தூருவா….”

இதற்கும் ராம் சிரித்துக் கொண்டான். யாழினியும் வசந்தும் இன்னமும் கதை பேசிக் கொண்டு தான் இருந்தனர்.

“ராம் உங்கிட்ட ஒன்னு கேட்கட்டா?”

“ம்ம்ம்ம் கேளு சந்தூ….”

“நீ அக்காவோட பெஸ்ட் ஃப்ரெண்டு தான…அப்பறம் நீ ஏன் அக்காவை லவ் பண்ணலை…..”

“எதுக்கு லூசு மாதிரி கேட்கற?”

“இல்லை….அக்கா எவ்வளவு அழகா வெள்ளை இருக்கா…ஆனா வசந்த் கருப்பா இருக்கானே….அக்காவுக்கு பிடிக்காதேன்னு கேட்டேன்….”

“பிடிக்காமையா இப்படி சிரிச்சு சிரிச்சு பேசறா?”

“கேட்டதுக்கு பதில் சொல்லு ராம்? என் அக்காவை உனக்கு லவ் பண்ணனும் ஏன் தோணலை”

“இது லவ் பண்ணற வயசில்லை சந்தூ….”

“தெரியும்…சும்மா ஒரு பேச்சுக்கு கேட்கறேன்…சொல்லேன்….”

“உன் அக்கா என் ஃப்ரெண்டு சந்தூ…அதுவும் இல்லாம சின்ன வயசில இருந்தே தெரியுங்கறதால, அவ மேல ஒரு பாசம் இருக்கு…லவ் பண்ண தோணலையே…”

“ஓ…என் மேல அப்போ பாசம் இல்லையா ராம் உனக்கு?”

“சந்தூ….நீ சின்ன பொண்ணு…. உன்னை வெளிய கூட்டிட்டு வந்தா பத்தரமா பார்த்துக்கனும்னு பொறுப்பு தான் எனக்கு உண்டாகுது….”

“ம்ம்ம்ம்ம்….சரி…..”

“எதுக்கு இதெல்லாம் கேட்கற நீ இப்போ…”

“அக்கா, என் ஃப்ரெண்டு திவ்யா இவங்க எல்லோருமே ஆள் வச்சிருக்காங்க…என்னை மட்டும் யாருமே லவ் பண்ணலை….அதான் நான் அழகா இல்லையோன்னு டவுட்ல கேட்டேன்….”

“லூசு….. அந்த “யாரடி நீ மோகினி”படத்தில ஒரு தங்கச்சி கேரக்டர் வருமே அது மாதிரி தான் நீ….இப்போ சின்ன பொண்ணு….க்யூட்டா இருக்க…இன்னும் ஐஞ்சு வருஷத்தில நீ எத்தனை பேர சுத்தல்ல விட போறயோ….”

சந்தியாவும் ராமும் சேர்ந்து சிரித்துக் கொண்டனர். அவர்கள் சேர்ந்து கள்ளமில்லாமல் சிரித்துக் கொண்டது சில காலம் தான். வாழ்க்கை ஓடை அவர்கள் இருவரையும் இழுத்துக் கொண்டு வெகு தொலைவுக்கு சேர்ந்தது என்பதை இருவரும் அப்போது உணரவில்லை.

அடுத்து வந்த சில மாதங்கள் இதே கதை தொடர்ந்தது. இப்போதெல்லாம் வசந்தை அக்காவின் லவர் என்ற முறையில் இல்லாவிடினும், ஒரு நண்பன் என்ற முறையில் சந்தியா ஏற்றுக் கொண்டாள்.

அடுத்த மாதம் தொடங்கும் பொது பரிட்சைக்கு ராம், யாழினி, வசந்த் மூவரும் வெகுவாக தயார் செய்யத்துவங்கினர்.

“டீ போட்டுத் தரவா யாழூ?” என்று விழுந்து விழுந்து படித்த அக்காவிற்கு சந்தியா ஒத்தாசை கூட செய்தாள்.

அடுத்த மாதம், பரிட்சை காய்ச்சலிலேயே உருண்டு ஓடியது. பொதுப்பரிட்சை முடிவுற்ற அன்றைய தினம் மாலை, ராம், சந்தியா, யாழினி மூவரும் முருகன் கோவிலுக்குச் சென்றனர்.

யாழினி வசந்தையும் வரசொல்லியிருந்தாள். நால்வரும் சாமி தரிசனம் முடிந்ததும் பிரகாரத்தில் அமர்ந்தனர்.

“உங்க மூனு பேர்த்துக்கு ஒன்னு கொண்டு வந்திருக்கேன்….”என்று சந்தியா ஆரம்பித்தாள். கையுடன் வைத்திருந்த மணிபர்ஸில் இருந்து, மூன்று கீசெயின் களை வெளியே எடுத்தாள்.

“இது உனக்கு…. யாழூ” என்று ஒரு மிகவும் அழகாக வடிக்கப்பட்டிருந்த சிறிய முருகர் விக்ரகம் கொண்ட செயினை அக்காவிடம் கொடுத்தாள்.

“இது ராம்க்கு” என்று அதே போல் வர்ணமிட்ட, வினாயகர் சிலை கொண்ட கீசெயினை ராமிடமும், “இது வசந்துக்கு”என்று சின்ன சிலுவை போட்ட கீசெயினை வசந்திடமும் கொடுத்தாள்.

“எதுக்கு பாப்பா இதெல்லாம்..”என்று வசந்த் கூறிய போதும், சிலுவையை ஆர்வமாக பார்வையிட்டான்.

“என்னடீ வசந்துக்கு முருகர், வினாயகர்ன்னு குடுக்காம, சிலுவை குடுத்திருக்க…”என்று யாழினி கேட்கவும், “வசந்த் அன்னைக்கு முருகரைப் பார்த்து கிராஸ்பண்ணி குப்பிட்டான்..பார்த்தேன்…” என்று கூறிய சந்தியாவை ஆச்சர்யமாக பார்த்தான் வசந்த்.

“கொஞ்சம் கூட மரியாதையே இல்லாம, அவன் இவன்னுட்டு, உன்னை விட மூனு வயசு பெரியவன்….” என்று யாழினி மீண்டும் வசை பாடத்துவங்கினாள்.

“ராம அப்படித்தானே கூப்பிடறேன்….”என்று சந்தியா மென் குரலில் மொழிந்தாள்.

“ஏ..திட்டாத யாழூ…. ஐ டோண்ட் மைண்ட்……எவ்வளவு நோட் பண்ணற நீ பாப்பா…. கிரிஸ்டியன் ஸ்கூல்லியே சின்ன வயசில இருந்து படிச்சதால, ஜீசஸ் மேல ஒரு ஸ்பெஷல் இன்டிரெஸ்ட் எனக்கு..”என்று கேள்வியாய் நோக்கிய யாழினியிடம் மொழிந்தான் வசந்த்.

“ராம்க்கு வினாயகர் பிடிக்கும், உனக்கு முருகர்…..அவங்கவங்களுக்கு பிடிச்சதா தேடி வாங்கினேன்..” என்றாள் சந்தியா சிரிப்புடன்.

“கீசெயின் காஸ்ட்லியா இருக்கு?ஏது இவ்வளவு காசு உனக்கு?”என்று அக்கா என்ற பொறுப்பு மேலோங்க கேட்ட யாழினியிடம் சந்தியா பதில் ஏதும் சொல்லவில்லை.

“நீ ஹாஸ்டல் எப்போ வெகேட் பண்ணற வசந்த்?”என்று பேச்சை மாற்றி ராம் வசந்திடம் கேட்கவும், யாழினிக்கு தன் கேள்வி மறந்து போயிற்று.

“இன்னும் டூ டேஸ்ல…”

“அப்போ நாமெல்லாம் சேர்ந்து கோவில்லுக்கு வர்றது இன்னைக்கு தான் கடைசி தடவையா?” என்று சந்தியா உண்மையான வருத்தத்துடன் கூறினாள்.

“சீ அபசகுனமா பேசாத லூசு….”என்று யாழினி தங்கையை முறைத்தாள்.

“வசந்த் காலேஜ் போயிட்டா, நினைச்சப்போல்லாம் கொடைக்கானல் வரமுடியாதில்லை அதனால சொன்னேன்..”என்றாள் சந்தியா, அக்கா தன்னை அனைவர் முன்னிலையிலும் லூசு என்று கூறிவிட்ட கோபத்துடன்.

“நான் எப்படியும் மதுரை இல்லை, கோவைல தான் பி.பி.ஏ ஜாயின் பண்ணாலாம்னு இருக்கேன்… லீவ் கிடைக்கறப்போ கண்டிப்பா கொடைகானல் வருவேன் பாப்பா…ஃபீல் பண்ணாத சரியா..”

“நானும் பி.எஸ்ஸி மேக்ஸ் படிக்கலாம்னு இருக்கேன்…முடிஞ்சா வசந்த் எந்த காலேஜோ அங்கேயே சேர்ந்துக்குவேன்…. ராம் எஞ்சினியரிங்க…எடுப்பான்..இல்லை..எப்படியும் லீவுக்கு ஊருக்கு வரத்தானே வேணும்….இல்லை ராம்…”என்ற யாழினி அதுவரையில் பேசாமல் அமைதியாக இருந்த ராமிடம் வினவினாள்.

“இல்லை சந்தூ சொல்லறது ஒரு விதத்தில உண்மை…. நானும் இனிமே இந்த முருகர் கோவிலுக்கு வரமுடியுமான்னு தெரியலை…”

“ஏன் ராம்…. காலேஜ்க்கு வேற ஊருக்கு போனாலும், லீவ்ல வருவல்ல…”என்று கண்களை உருட்டிக் கொண்டு சந்தியா கேட்ட போதும், இவ்வளவு பெரிய செய்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

“என் எக்ஸாம் முடிஞ்சதும் நாங்க மதுரைக்கே போலாம்னு இருக்கோம்…”என்றான் ராம் திக்கித்திணறி.

“அப்பா கூட லீவுக்கு இருக்கப் போறியா?”என்றே யாழினி விசாரித்தாள். ராம் விஷயத்தை திக்கித் திணறி கூறிய விதமே யாழினிக்கு அவன் என்ன சொல்ல வருகிறான் என்று உணர்த்தியது.

ராம் இல்லை என்பது போல தலை அசைத்தான். “அப்பாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை..பழைய மாதிரி தானே சமைச்சு சாப்பிட்டுக்க முடியலை…அதனால அம்மா மதுரைக்கு டிரான்ஸ்ஃப்ர் கேட்டிருந்தாங்க..”

“போன மாசமே ஆடர் வந்திருச்சு….எனக்கு எக்ஸாம் இருக்கறதால நடுவுல போக வேண்டாம். பரிட்சை முடிஞ்சு போயிக்கலாம்னு இருந்தோம். இனிமே காலேஜ், வீடு எல்லாமே மதுரையில தான்”என்று சொல்லிக் கொண்டிருந்த போதே ராமின் குரல் உடைந்து பிசிறடித்தது.

யாழினிக்கும் வசந்திற்கும் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. சந்தியா அழுதுவிட்டிருந்தாள். மகிழ்ச்சியாக உரையாடிக்கொண்டிருந்த நிலை நிமிடத்தில் மாறிவிட்டது.

கோவிலை விட்டு நால்வரும் வெளியே வந்தனர். முகத்தில் சோகமும் சங்கடமும் நிறைந்திருந்தது. சந்தியாவின் கண்கள் கலங்கியே தான் இருந்தன. எப்போதும் யாழினியுடன் நடக்கும் வசந்த் கூட அன்று, அழுது கொண்டிருந்த சந்தியாவை தேற்றும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.

“இதெல்லாம் லைஃப்ல ஒரு பார்ட் பாப்பா…. எல்லாரும் எல்லார் கூடவும் எப்பவுமே இருந்திட முடியாது. சின்ன சின்ன பிரிவுகள் தான் உறவுகளை பலமா வச்சிருக்கும்…. பெருசானா நீயே புரிஞ்சுக்குவ….. சீயர் அப்..”என்று தனக்குத் தோன்றிய வார்த்தைகளால் சந்தியாவை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான்.

கோவில் வாசலில் அனைவரிடமும் எப்போதும் விடை பெற்றுச் செல்லும் வசந்த், அன்று பீஸ்பேலஸ் காட்டேஜ் வரையில் உடன் நடந்து வந்தான்.

அடுத்த ஏற்றம் ஏறி இறங்கினால் வீடு வந்துவிடும். முன்னால் மெதுவாக நடந்து கொண்டிருந்த ராமும், யாழினியும் நின்றனர்.

“யாழினிகிட்ட என்னோட காண்டேக்ட்ஸ் இருக்கு…. வாங்கிகோங்க ராம்….. நைஸ் நோயிங் யூ…. கீப் இன் டச்…காலேஜ் சேர்ந்தப்பறம் சொல்லுங்க…ஒரு ட்ரிப் ப்ளான் பண்ணலாம்..”என்று ராமின் கையை பிடித்து குலுக்கினான் வசந்த்.

“குட் லக் வசந்த்…”என்று ராம் பதிலளித்தான்.

“இது உனக்காக….” என்று அதுவரையில் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய நிளவாக்கில் இருந்த பெட்டியை எடுத்து சந்தியாவிடம் நீட்டினான் வசந்த்.

“எதுக்கு …வேணாம் வசந்த்” என்று மறுத்த சந்தியாவின் கைகளில் பெட்டியை திணித்தான். பிரித்து உள்ளே இருந்த பொருளைப் பார்த்த சந்தியாவிற்கு மேலும் அழுகை வந்தது.

உள்ளே பெட்டியில், “அழகிய நீல வண்ண இறக்கை ஒன்று பட்டு விரிப்பில் மிளிர்ந்தது. கிங்ஃபிஷர் பறவையின் இறக்கை. அழகாய் கத்தரிக்கப்பட்டு, இழைகளில் “பெஸ்ட் விஷஸ்…பாப்பா” என்று சில்வர் நிற எழுத்துக்களால் பொரிக்கப்பட்டிருந்தது.

“தேங்கஸ் வசந்த்..ஐ வில் மிஸ் யூ” என்று அழுகையினூடே கூறினாள் சந்தியா. வசந்தின் கண்களும் சிறிது குளம் கட்டினார் போல் தெரிந்தது. மூவரிடமும் விடை பெற்ற வசந்த், யாழினியிடம் கோன் செய்கிறேன் என்று ஜாடை காட்டிவிட்டு நகரத் துவங்கினான். வசந்தின் தலை மறையும் வரையில் மூவரும் அங்கேயே நின்றிருந்தனர்.

பீஸ்பேலஸ் வாசலில் அமர்ந்து இதை எல்லாம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த குல்லா தாத்தா, “பிள்ளைகளா பனி பேயிது பாருங்க…வீட்டுக்கு கிளம்புங்க….” என்று கூறினார். தாத்தா சொன்னது போலவே வெகுவாக குளிரத் துவங்கியது.

சந்தியாவும், யாழினியிம் அவர்கள் வீட்டிற்குள் சென்றுவிட்ட பின்னர், வழக்கம் போல ராம் அவன் இல்லம் நோக்கி நகர்ந்தான். ராமின் மனம் வெகுவாக குழம்பிப் போயிருந்தது.

யாழினி தான் ராமின் முதல் சினேகிதி. ஒன்றாக ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் பத்து வருடங்களுக்கும் மேல் படித்தவர்கள். இருந்தாலும் இன்று யாழினியை விட்டு பிரியப்போகிறோம் என்ற துக்கத்தை விடவும், சந்தியாவை விட்டு தள்ளியிருக்கப் போகிறோம் என்ற வருத்தம் மேலோங்கியது ஆச்சர்யமாக இருந்தது.

“ஏன் இப்படி எல்லாம் நான் தடுமாறுகிறேன்…. யாழினி தானே என் இத்தனை வருட இணைபிரியா தோழி…அவளை பிரிவதை நினைத்தல்லவா நான் நிறைய வருந்த வேண்டும்?”

“ஆனால் மனம் சந்தியாவைப் பற்றியே நினைக்கிறதே…” சின்ன கண்களை அகலவிரித்து, தெற்றுப் பல் தெரிய கழுத்தை பின் நோக்கி வளைத்து சிரிக்கும், கைகளை ஆட்டி ஆட்டி பேசும் சந்தியாவின் முகமே ராம் படுக்கையில் விழுகையில் நினைவில் நின்றது.

அடுத்த இரண்டு வாரங்கள் சொல்லும்படியான விஷயங்கள் ஏதும் இன்றி கழிந்தது. நடுவில் ஒரு நாள் சந்தியாவின் வீட்டீற்கு ராமின் பெற்றோர் விஜயாவும் ராஜேந்திரனும் வந்தனர்.

சந்தியாவின் தந்தை சிவராஜன் வீட்டில் இருந்த நேரமாய் பார்த்து வந்தனர். “வாங்க…வாங்க… உள்ள வாங்க…”  என்று படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து இருவரையும் வரவேற்றார் சிவராஜன்.

“ராமும், ரம்யாயும் வரலையா? கூட்டிட்டு வந்திருக்கலாமே?” என்று டீ கோப்பைகளுடன் எதிர் கொண்டார் சந்தியாவின் அம்மா மகேஸ்வரி.

“அவங்க ரூம் திங்கஸ் எல்லாம் எடுத்து வச்சிட்டு இருக்காங்க….” என்று ராமின் அப்பா பதிலளித்தார்.

“ஆமா இவங்க அம்மா சொன்னாங்க….வெகேட் பண்ணறீங்கன்னு….கஷ்டமா தான் இருக்கு..என்ன பண்ணறது நிலைமை அப்படி இல்லையா?”

“ஆமாங்கண்ணா….இவருக்கும் பழைய மாதிரி உடம்பு ஒத்துழைக்கறது இல்லை. தனியா சமைச்சே இவ்வளவு நாள் காலந்தள்ளிட்டார்…” என்றார் அதிசயமாக எப்போதாவது சிரித்து பேசும், ராமின் அன்னை விஜயா.

“அதுவும் சரிதான்…பையனும் அடுத்த வருஷம் காலேஜ் போயிருவான். ரெண்டு பேரும் சேர்ந்து இருக்கறது தான் கரெக்ட்…” என்றார் சிவராஜன்.

“அடுத்த சண்டே வெகேட் பண்ணறோம். அதனால வர்ற சனிக்கிழமை இங்க அக்கம் பக்கம் ரொம்ப பழகுனவங்களுக்கு மட்டும் சின்னதா ஒரு டின்னர் ஏற்பாடு பண்ணியிருக்கோம்…நீங்க அவசியம் குடும்பத்தோட வரனும்….”

“கண்டிப்பா கண்டிப்பா…நாங்க இல்லாமலா?”என்று சிவராஜன் பதிலளித்தார். நான்கு பெரியவர்களும் சிறிது நேரம் பொதுவிஷயங்களை பேசிக் கொண்டிருந்துவிட்டு விடை பெற்றுச் சென்றனர்.

அந்த வார சனிக்கிழமையும் அழகாய் விடிந்தது. லேசான பனிமூட்டத்துடன் வானம் பளீரென்று இருந்தது. மாலை விருந்திற்குத் தேவையான ஆயத்தங்கள் பக்கத்து வீட்டில் நடந்த வண்ணம் இருந்தன.

மதியம் யாழினியும், சந்தியாவும் ராமின் வீட்டிற்குச் சென்று கொஞ்சம் போல் விருந்திற்கு உதவி செய்துவிட்டு வந்தனர்.

“வெளியில இருந்து தான் சாப்பாடு ஆடர் குடுத்திருக்கோம்…. சோ கொஸ்ட் வந்தவுடனே ஜூஸ் தர்றது மட்டும் தான் நம்ம வேலை” என்று ராம் யாழினியிடம் கூறிக் கொண்டிருந்தான்.

ரம்யாயும் சந்தியாவும், வந்தவர்களுக்கு எல்லாம் ரிடர்ன் கிஃப்டாக வழங்கப்படவிருந்த, ஹைட்றேஞ்சியா, பான்ஸி செடிகளை லேபிளில் உதவியுடன் கலர் வாரியாக அடுக்கும் பணியில் இருந்தனர்.

வெளி வராண்டாவின் படிகளில் சந்தியா அமர்திருந்தாள். அவள் அருகில் ஸ்டூல் போட்டு ராமின் தங்கை அமர்ந்திருந்தாள். காலில் பச்சை புற்களுக்கு மத்தியில் பல பான்ஸி செடிகளும், ஹைட்றேஞ்சியா செடிகளும் குவிக்கப்பட்டிருந்தன. சில செடிகளில் கத்தைப் பூக்களுடன் தென்றலில் மெல்லமாய் அசைந்து கொண்டிருந்தது. ஒன்றாக அமர்ந்து வேலை செய்து கொண்டிருந்த போதிலும் இருவருக்குள்ளும் ஒரு சின்ன நெருடல் இருக்கவே செய்தது.

“ஒரு கவர்ல ஒரு ஹைட்றேஞ்சியா, ஒரு பான்ஸி போட்டு, பின் செஞ்சிரு..”என்று சந்தியாவின் முகத்தைப் பாராமலேயே அமர்ந்திருந்த ரம்யா உத்தரவிட்டாள். சந்தியாவிற்குத் தான் மனம் கிடந்து அடித்துக் கொண்டது.

“என் மேல உனக்கு என்ன கோவம் ரம்யா…” என்று வாயை கட்டுப்படுத்த முடியாமல் சந்தியா கேட்டேவிட்டாள்.

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லையே…”என்று சாதாரணமாக ரம்யா தோழைக் குலுக்கிய போதும், நிமிர்ந்து சந்தியாவின் கண்களை சந்திக்கவில்லை.

“நாளைக்கு நீ இங்க இருந்து போயிடுவ..அப்பறமா நாம எப்ப பார்க்கப் போறோமோ…. என்மேல ஏதாவது கோவம்னா…. மன்னிச்சிரு…..ப்ளிஸ்…ஐ வாண்ட் அஸ் டு பி ஃப்ரெண்ட்ஸ்…” என்றாள் சந்தியா வந்துவிடுவேன் என்ற அழுகையை கட்டுபடுத்திக் கொண்டு.

ரம்யா பதிலேதும் சொல்லாவிடினும் பான்ஸி செடிகளை, பலமுறை தடவிக் கொண்டே அமர்ந்திருந்தாள். சிறிது நேர அமைதிக்குப் பின், ரம்யா பேசத் துவங்கினாள்.

“ஆமா எனக்கு கோவம் தான் உன் மேல. ஏன்னு எனக்கும் தெரியலை…நீ என்னை விட அழகா இருக்கறதால இருக்கலாம், கலரா இருக்கறதால இருக்கலாம், நீ என் பக்கத்து வீட்டில இருக்கறதால இருக்கலாம்…”

“ஆனா ரம்யா..நான்..”

“இரு….நான் பேசி முடிச்சடறேன்…. என் அண்ணா உன் மேல ரொம்ப அக்கறையா இருக்கறதுனால கூட எனக்கு உன் மேல கோபம் இருக்கலாம்.”

“ஆனா….ராம், யாழினிக்கு தானே பெஸ்ட் ஃப்ரெண்டு நீ யாழூட்ட உன் கோவத்தைக் காமிக்காம, எங்கிட்ட மட்டுமே தான் காட்டற..”

“என் அண்ணா உன் அக்காவோட ஃப்ரெண்டா இருக்கலாம்..ஆனா வீட்டில எப்போ பாரு சந்தியா புராணம் தான்..சந்தூ அதை செஞ்சா…இதை செஞ்சான்னு உன்னைப் பத்தி நிறைய பேசினா எனக்கு கோவம் வராதா?”

“ஆனா…நான்…”என்ன சொல்ல வருகிறோம் என்று சந்தியாவிற்குமே புரியவில்லை.

“என் அண்ணா உன் மேலயும் உன் அக்கா மேலயும் ரொம்ப கேர் எடுத்துக்கறது எனக்கு பிடிக்கலை…முக்கியமா உன் மேல….”என்று ரம்யா அருகில் கல்படியில் அமர்ந்திருந்த சந்தியாவிடம் கூறிமுடித்தாள்.

ராம் இப்படியெல்லாமா நடந்து கொள்கிறான் என்ற சந்தேகத்துடன் ராமும் யாழினியும் நின்றிருந்த இடந்தைப் திரும்பி பார்த்த சந்தியாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது. ஏனென்றால் அவள் பார்த்த அதே நேரம், சட்டென்று திரும்பிய ராமும் சந்தியாவைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

“என்ன சந்தூ?”என்று கேட்கவும் சந்தியா ஒன்றும் இல்லை என்பது போல தலையை அசைத்து பார்வை திருப்பிக் கொண்டாள்.

இதையும் சேர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ரம்யா, இப்போ தெரியுதா என்கிற ரீதியில் வேகமாக கவர்களில் செடிகளை இடுவதில் மும்மரமானாள்.

ஆறு மணிவாக்கில் யாழினியும் சந்தியாவும் அவர்கள் இல்லம் திரும்பி, மாலை நடக்கவிருந்த விருந்திற்கு தயாராயினர். அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள், அலுவகத்தில் தெரிந்தவர்கள் என்று சுமாராக முப்பது குடும்பம் வந்திருந்தது. சந்தியா, பெற்றோர், அக்கா சகிதம், குறிப்பிட்ட நேரத்திற்கு சற்று முன்னரே சென்று உணவு பறிமாற உதவியாக இருந்தாள்.

வெளியே காற்று இதமாகவும் இருந்ததால், வீட்டின் வெளிப்பக்கம் சில டேபிள்களும் போடப்பட்டிருந்தன. வந்தவர்களுக்கு குளிர்பானம் கொடுக்கும் பணியில், ரம்யா, சந்தியா மற்றும் யாழினியும் ஈடுபட்டிருந்தனர்.

பெரியவர்கள் பேச்சில் மும்மரமாக இருக்க, பப்ஃபே உணவு முறை ஏற்பாடு செய்திருந்த படியால் பெரிதாக வேலை என்று எதுவும் இருக்கவில்லை.

ராமின் வீட்டிற்கு எத்தனையோ முறை வந்திருந்த போதும், சந்தியாவிற்கு என்று மிகவும் நெருடலாக இருந்தது. ராமிற்கு சந்தியாவின் இந்த பற்றற்ற நிலை எரிச்சலை உண்டாக்கியது.

“என்னாச்சு….உடம்பு சரியில்லியயா?”என்று ஒரு முறை வினவினான்.

“எல்லோரும் போறோம்னு ஃபீல் பண்ணறியா சந்தூ…” என்று இன்னொரு முறை வினவினான்.

சந்தியா சரிவர பதிலேதும் சொல்லவில்லை.

“சந்தியா ஒரு நிமிஷம் இங்க வா” என்று யாழினியுடன் வெளியே செல்ல முற்பட்ட சந்தியாவை ரம்யா உள்ளே அழைத்தாள்.

“எப்படி சொல்லறதுன்னு தெரியலை…. “என்று ரம்யா கொஞ்சம் திணறினாள். சந்தியாவிற்கு ஆயாசமாக இருந்தது. இந்த ஒரு தினத்தில் தான் எத்தனை அனுபவங்கள். சந்தியா ஏதும் சொல்லாமல் ரம்யாயையே பார்த்துக் கொண்டு இருந்தாள்.

“உனக்காக நான் ஒரு கிஃப்ட் தரப்போறேன்…. ஐம் சாரி ஃபார் எவ்ரிதிங்க….நாம ஃப்ரெண்ட்ஸா இருக்க முடியாட்டியும் எனிமீஸா பிரிய வேணாம்..இந்தா…” என்று சந்தியாவின் கையில் அந்த சின்ன பரிசு பொட்டலைத்தை நீட்டினாள்.

சந்தியாவும் யாழினியும் ஏற்கனவே ராமிற்கு ஒரு டீசர்ட்டும், ரம்யாக்கு ஒரு சுடிதார் செட்டும் வாங்கி பரிசளித்திருந்தனர். அதனால் ரம்யாக்கு என்று தனியாக எந்த பரிசு பொருளும் சந்தியா வாங்கியிருக்கவில்லை.

“தேங்க்ஸ் ரம்யா..” என்று முறுவலித்துவிட்டு அறையில் இருந்து வெளியே வந்தாள். வீட்டில் விருந்தாளிகள் நிரம்பியிருந்ததால் வரவேற்பறை கூச்சலாக இருந்தது. சந்தியாவிற்கு லேசாக தலை விண்ணென்று தெறிக்கத் துவங்கியது

வீட்டில் இருந்து வெளியே வந்து புல்தரையில் நின்று கொண்டாள். மலைப் பிரதேசமானதால், மாலை சூரியன் மறைந்து இருள் படியத் துவங்கியிருந்தது. எங்கிருந்தோ யூகலிப்டஸ் இலைகளின் வாசம் சுகந்தமாய் வீசியது. தூரத்தில் நிழல்களாய் தெரிந்த மலைமுகட்டையும், அதன் சமீபத்தில் மினுமினுக்கும் நட்சத்திரக் கூட்டங்களையும், பார்த்த வண்ணம் நின்றிருந்தாள்.

சந்தியாவின் மனம் குழப்பத்தில் அமிழ்ந்திருந்தது. வீட்டில் இதற்கு மேல் நின்றிருக்கப்பிடிக்கவில்லை. ஆனால் பாதியில் விருந்தில் இருந்து சென்றால் பலவித கேள்விகள் எழுமோ, அப்பா அம்மா என்ன சொல்வார்களோ என்ற தவிப்பில் வெளியே நின்றிருந்தாள்.

பின்னால் ஆள் அரவம் கேட்டு திரும்பிப் பார்த்தாள். ராம் நின்று கொண்டிருந்தான். அவன் முகத்திலும் பலவித குழப்பங்கள் இருந்தன. இருப்பினும் இயல்பாக பேச முயற்சி செய்வது தெரிந்தது.

“இங்க ஏன் நின்னுட்டு இருக்க சந்தூ…. பனி விழுறது தெரியலை…? கையில என்ன பார்சல்?” என்று கேட்டுக் கொண்டே அருகில் வந்தான்.

“உன் தங்கை கொடுத்த கிஃப்ட் பார்சல்” என்று மெலிதான குரலில் பதிலளித்தாள்.

“ஓ. பிரிச்சு பார்க்கலையா?” என்று ராம் அருகில் வந்து நின்றான்.

“அப்பறமா பிரிச்சுக்கறேன்….”

“என்ன இருக்குன்னு பார்த்து ரம்யாட்ட ரெண்டு வார்த்தை பேசினா அவ சந்தோஷப்படுவால்ல….” என்று ராம் மீண்டும் மொழியவும் வேறு வழியில்லாம பார்சலை பிரித்தாள்.

உள்ளே அழகிய சின்ன செராமிக்கால் செய்யப்பட்ட இரு சிறுமிகளின் சிலை இருந்தது. சிலையின் கீழே “to my lost friend” என்று சீரான கையெழுத்தில் பொடிசாக எழுதியிருந்தது. சந்தியாவிற்கு கண்களை கரித்துக் கொண்டது. இவ்வளவு நாட்கள் பேசாமல், விரோதி போல் நடத்திவிட்டு, பிரியப்போகும் போது எதற்கு இந்த பாசம் என்று ஆயாசமாக இருந்தது.

“உள்ள வந்து ரம்யாட்ட பேசு….” என்ற ராமின் மீது தேவையில்லாமல் எரிச்சல் எழுந்தது.

“நான் கொஞ்ச நேரம் கழிச்சு வர்றேன்…”

“நாங்க எல்லாம் விட்டுட்டு போறது உனக்கு கஷ்டமாத்தான் இருக்கு….கொஞ்ச நாள்லே சரியாகிடும்…..ஃபீல் பண்ணாத சந்தூ… என்ன யோசிச்சிட்டே இருக்க?”  என்று தோழைப் பிடித்து ராம் திருப்பும் முன்னர் சட்டென விலகிக் கொண்டாள் சந்தியா.அடிபட்டவன் போல கையை பின்னிழுத்துக் கொண்டான்.

“நான் கொஞ்ச நேரம் நின்னுட்டு வர்றேன்…நீ போ…”என்று திரும்பவும் அதே பல்லவியை பாடினாள் சந்தியா.

 

error: Content is protected !!