chakarainilave-9

chakarainilave-9

நிலவு – 9

கருமை போர்வையை உதறிய வானம், வெண்பட்டு சீலையை சூடி, வலம் வந்த விடியலின் நேரம் காலை ஆறுமணி. அந்தப் பொழுதிலேயே அன்றைய நாளின் பரபரப்பை சென்னை தன் வசப்படுத்திக் கொள்ள, அதனுள் தன்னை மூழ்கடித்துக் கொள்ளும் உத்வேகத்துடன் உறக்கம் கலைந்தான் தயானந்தன்.

எப்படியாவது மனைவியிடம் சமாதானப் புறாவை, இன்று பறக்க விட்டுவிட வேண்டும் என்ற உறுதியுடன், கீழே வந்தவனின் கண்களில், மிதுனாவும் பாஸ்கரும் பேசிக்கொண்டிருந்த காட்சி தென்பட, அப்பொழுதே ரௌத்திரமாகிப் போனான்.

வீட்டின் வெளிப்புறக் காலியிடத்தில் அவர்கள் நின்று பேசிக் கொண்டிருக்க, இவனைப் பார்த்தவுடன் இருவரது பேச்சும் தன்னாலேயே நின்று போனது.

உன் போக்கில், நான் தலையிட மாட்டேன் என்று மனைவியிடம் கூறிய வாக்குறுதிகள் சுலபமாய், கணவனின் மனதிலிருந்து விடைபெற்றிருந்தன.

தயானந்தன் இவர்களைப் பார்த்ததென்னவோ ஒரு நொடிதான். பின்பு என்ன நினத்தானோ, மனதில் மூண்ட கோபத்துடன் தனது அன்றாட வேலைகளை கவனிக்க, சென்று விட்டான்.

மகனின் வருகையை அறிந்து மரகதமும், காலை காபியை கலக்க ஆயத்தமானவருக்கு, வெளியே உடன்பிறப்புக்கள் இருவரும் நின்று பேசுவது நன்றாகத் தெரியும். மருமகளிடம் உள்ளே அழைத்துப் பேசு என, அவரால் மனமுவந்து சொல்லவும் முடியவில்லை.

காரணம், பாஸ்கர் வந்து நின்றதும் அழைத்தது அவனது அக்காவைத்தான். உடைமைபட்டவள் எதிரிலேயே இருக்க, அவளை ஏறிட்டும் பார்க்காமல், அவளைப் பற்றி விசாரிக்கவும் செய்யாமல் தயங்கியபடியே மிதுனாவை எதிர்பார்த்து வாசலில் இவன் நிற்க, மரகதத்திற்கு மனம் விட்டுப் போனது.

இவன் என்ன ஜடமா? நிறைமாத கர்ப்பவதியான, மனைவியை உரிமையாக அழைத்து பேசவும் யோசிப்பவனை, எப்படி மனிதனாய் நினைப்பது?’ என்றே மனம் சஞ்சலம் கொள்ள, நடப்பதை வேடிக்கை பார்ப்போம் என்று அமைதியாக இருந்தவர், மகனைப் பார்த்ததும் அவனைக் கவனிக்க தொடங்கி விட்டார்.

அவசரகதியில் பாஸ்கரை பேசி அனுப்பி வைத்த, மிதுனாவும் உள்ளே வர,

“தம்பிய கவனி மிதுனா! மத்தத அப்புறம் பார்க்கலாம்” முகம் பார்க்காமல் பேசிய மாமியாரின் பாவனையே, அவளுக்கு சுருக்கென்று தைத்தது. என்றைக்கும் இப்படியெல்லாம் பேசுபவர் அல்ல அவர்.

இன்று, தன்தம்பியுடன் பேசியதின் பிடித்தமின்மையை கணவன் கோபமுகத்தில் காட்டிவிட, மாமியாரும் தனது சுபாவத்தில் வெளிப்படுத்தி விட்டதை உணர்ந்தவள் பெருமூச்செறிந்தாள்.

கடவுளே! அவன கழுத்தப் பிடிச்சு தள்ளாத குறையா, விரட்டி விட்டுட்டு வந்திருக்கேன். இதுக்கே இவங்க மூஞ்சிய தூக்குறாங்க! இன்னும் நான் கீழே போய் பேசினா, எப்டி எடுத்துக்கப் போறாங்களோ?’ மனதில் எழுந்த கலக்கத்தோடு,

காபியை எடுத்துக் கொண்டு கணவனின் கைகளில் கொடுக்க, அந்த உற்சாக பானத்தை, அமைதியாக தனது வயிற்றுக்கு அனுப்பி வைத்தவன், எதுவும் சொல்லாமல், அடுத்த வேலையை பார்க்க சென்றான்.

அந்தக் காலைப்பொழுதில், அவனது தேவைகள் எல்லாவற்றையும் தங்கையை அழைத்து செய்து கொண்டவன், மனைவியை தவிர்க்க, இவர்களுக்கு இடையில் மாட்டிக் கொண்ட சிந்துவுக்கு, இப்பொழுது தர்ம சங்கடமாகிப் போனது.

வெளியே சென்று அமர்ந்து விடலாம் என்றால், அங்கே வெயில் எட்டிப் பார்த்து இம்சைப்படுத்தியது. வேறு வழியின்றி அண்ணனின் சாவி கொடுத்த பொம்மையாக, நடமாடிக் கொண்டிருந்தாள்.

“கண்ணாடி எடுத்துட்டு வா சிந்து!”

“நைல் கட்டர் கொண்டு வா!”

“குளிக்க துண்டு எடு!” என்று நிமிடத்திற்கு ஒருமுறை தங்கையை அழைக்க,

அதனைப் பார்த்த மிதுனா, உள்ளுக்குள் மனம் கனன்றாலும் என்னதான் நடக்கின்றது, பார்ப்போமே?’ என்று சமையலறையில் மாமியாருடன் வந்து நின்றுவிட்டாள்.

தினமும் மனைவியை அருகில் வைத்துக் கொள்வதற்காகவே, ஒரு குண்டூசி தேவைக்கு கூட அவளை அழைத்துப் பழக்கப்பட்டவன், இப்பொழுது முற்றிலும் அவளை தவிர்த்திட, இதனை கவனித்துக் கொண்டிருந்த மரகதமும், ‘அவன் கூப்பிடமா, நீ போய் நிக்க மாட்டியா?’ என்கிற ரீதியில் குற்றப் பார்வை பார்க்க,

வரவர, நம்ம ரோசத்துக்கு கூட இங்கே ஆயுசு இல்ல… மனதின் பொறுமலோடு அங்கிருந்து நகன்றாள்.

குளித்து வந்தவன், துவைப்பதற்கென முந்தைய நாளின்  தனது துணிகளை எடுத்து, சிந்துவிடம் கொடுக்க, அவள் கைநீட்டி வாங்கும் முன்னரே, அதனை தட்டிப் பறித்த மிதுனா,

“நீ போ சிந்து! நான் பார்த்துகிறேன்” அவளை அனுப்பி விட்டு, கணவனைப் பார்க்க, அவனோ மனைவியை பொருட்படுத்தாமல், தன் முகத்தை கண்ணாடிக்குள் புதைத்துக் கொண்டான்.

இவன் கேட்க மாட்டான், நானாக விளக்கினால்தான் உண்டு என எண்ணிக் கொண்டவள்,

“இன்டர்வியூக்கு, பெங்களூர் வரைக்கும் போகணும்னு, வந்து பணம் கேட்டான். இல்லைன்னு சொல்லி அனுப்பி வச்சேன்! வேற எதுவும் பேசல…” காலையில் நடந்த பேச்சிற்கு விளக்கம் சொல்ல, அவன் எதிர்வினை காட்டாது இருந்தான்.

“உங்ககிட்டதான் சொல்றேன் தயா… நான் சொன்னதுக்கு ஏதாவது பேசுங்க, இல்லன்னா கேட்டுக்கிட்டதுக்கு அடையாளமா மண்டைய ஆட்டுங்க…” மெதுவான குரலில் அவனைக் கடிந்து கொள்ள,

“உன் குடும்பம், உன் தம்பி, உன் பணம், உன்னோட அபிப்பிராயம், இதெல்லாம் என்கிட்ட எதுக்கு சொல்ற?” அப்பொழுதும் மனைவியைப் பார்க்காமல் விட்டேற்றியாகப் பேசி வைக்க,

“எல்லாமே என்னோடது தான்… அப்போ நீங்க?” கேள்வியுடன், தலைவாரிக் கொண்டிருந்தவனை, தன்னை நோக்கித் திருப்பினாள் மிதுனா.

“நேத்து, என்னை வம்படியா தள்ளி விட்டுப் போனவள போய் கேளுடி, அவ சொல்வா?” முன்தின இரவில், அவளின் செயலுக்கும் சேர்த்து வைத்து கோபத்தை கொட்டியவன், தலைவாரிய சீப்பை, அவள் தலையில் மாட்டி விட்டதோடு, துண்டையும் அவள் கழுத்தில் போட்டுவிட்டு, மறுபக்கம் அகன்றான்.

“இந்த ஸ்டாண்ட் வேலைக்கு மட்டும், நான் தேவைப்படுறேனா? கடுகடுத்தபடியே அந்த சீப்பைக் கொண்டே அவனை தட்டியவள்,

“அவன்கிட்ட பேசினத, என்னமோ கொலகுத்தம் செஞ்ச மாதிரி, எதுக்கு பாக்குறீங்க?” மெல்லிய குரலிலேயே கணவனுடன் வாய்ச்சண்டைக்கு தயாராக,

“எனக்கு பிடிக்காதவன் கூட நீ பேசினது, எனக்கு பிடிக்கல! உன்னோட தம்பி, கம்பி உறவெல்லாம் எனக்கு ரெண்டாம் பட்சம்தான் அசிரத்தையான குரலில், சராசரி ஆண்மகனின் வாதம் தயாவின் பேச்சில் வெளிவர, அந்த சத்தத்தில் மரகதமும் சிந்துவுமே, இவர்களின் முகம் பார்த்து விட்டனர். தர்மசங்கடமான நிலையில் மிதுனாவும் அவர்களைப் பார்த்தாலும்,

“பேசினதுக்கு காரணம் சொல்லிட்டேனே! இன்னுமா கோபம்?”  தனது பேச்சிலேயே நிற்க,

“உன் நியாயத்த உன்னோட வச்சுக்கோ! இப்ப சண்டைய ஓரம் கட்டிட்டு டிபன் எடுத்து வைக்கிறியா, இல்ல வெளியே பார்த்துக்கவா?” கடுப்படித்த, கணவனின் வார்த்தைகள் வந்து விழுந்த வேகத்தில், விருட்டென்று விலகிச் சென்றாள்.

சண்டை போடவும் இட வசதியில்ல… நினைச்சத பேச முடியுதா? ச்சே… என்ன வீடோ இது? நல்லா வந்து மாட்டிக்கிட்டேன் மனதோடு புலம்பியவள், நொடியில் தன்னையே அதட்டிக் கொண்டாள்.

என்ன காரியம் பண்ணிட்டு இருக்கேன்? எல்லாம் இந்த பாஸ்கியால வந்தது, காலங்காத்தால இவன் வரலன்னு யார் அழுதா?” தனக்குள்ளேயே சமாதானமாகிக் கொண்டு, கணவனுக்கு உணவைப் பரிமாறும் நேரம்,

“சிந்தாசினி… சிந்தா…!” என்ற அழைப்புடன் மரகதத்தின் தாய் தேனரசி, கண்டாங்கி சேலையோடு, தாட்டியான சரீரத்துடன், சற்றே சத்தமான குரலில் உள்ளே வந்து கொண்டிருந்தார்.  

ஒட்டன்சத்திரத்தில் உள்ள வலையப்பட்டி கிராமத்தை பூர்வீகமாகக் கொண்டவர். கிராமத்து வைத்தியம் பார்ப்பதில் தேர்ந்தவர். இவரது கைராசிக்கு சுற்றி இருக்கும் கிராமத்தில் இருந்து இன்றும் மக்கள் இவரைத் தேடி வருவர்.

ஊரெல்லாம் இவரைக் கொண்டாடிக் கொள்ள, தங்களுக்கு சமதையான அந்தஸ்தில் இல்லாதவர் என தேனரசியின் குடும்பத்தை அடியோடு ஒதுக்கி வைத்தார் கோமளவல்லி. மருமகளாக மரகதத்தை ஏற்றுக் கொண்டவருக்கு, சம்மந்தி உறவு முறையை இவர்களுடன் தொடர விருப்பமில்லை.

இந்த அந்தஸ்து பேதத்தில் பிரசவத்திற்கென மருமகளை, தாய் வீட்டிற்கும் அனுப்பாமல், தன்பொறுப்பில் வைத்துக் கொள்ள, மிகுந்த வெறுப்பு கொண்டார் தேனரசி. மகள் பக்கத்து ஊரில் இருந்தும், அழைத்து வந்து சீராட்ட முடியவில்லையே என்ற ஆற்றாமை இன்றளவும் அவருக்கு உண்டு.

இதனாலேயே அவருக்கு, இவரும் சளைக்காமல் தர்க்கம் செய்து, ஒவ்வொரு விடயத்திலும் ஒத்துப் போகாமல், பின்னால் பேசுவதை வாடிக்கையாக்கிக் கொண்டவர்.

‘சிந்து’ என்று கோமளவல்லி வைத்த பெயரில், தனக்கு விருப்பமில்லை என்று கூறி ‘சிந்தாசினி’ என்றழைத்து கோமளவல்லிக்கு கடுப்பை கூட்டும் அளவிற்கு, அவருடன் மனச்சுணக்கம் கொண்டிருந்தார் தேனரசி.

தொழில் நலிவடைந்ததிற்கு, சிந்து பிறந்த வேளைதான் காரணம் என்று மருமகளையும் பேத்தியையும் கோமளவல்லி சாடிக் கொண்டிருக்க, வெகுண்டு போய் ஆறுமாத குழந்தையான சிந்துவை தன்னுடன், கொண்டு வந்து வளர்த்து வந்தார்.

சிந்து பூப்படையும் வரை, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்திட, மகன் வயிற்றுப் பேரன் தமிழ்செல்வன் வாலிப வயதில் அங்கேயே வலம் வர, ஒன்றுக்குள் ஒன்று ஆகிவிடக் கூடுமோ என்ற தவிப்பில், கோமளவல்லி சிந்துவை தன்னுடனேயே அழைத்துக் கொண்டார்.

“வளர்த்த பாசம்னு ஒன்னு இருக்கு, அது எப்பவும் மாறாது. எங்கே, என் பேத்திக்கும் பேரனுக்கும் கல்யாணம் முடிச்சு வச்சிருவேனோனு அவ மனசுல பயம் வந்தது, எனக்கு தெரியாமயா போகும்! அப்டி நடக்கணும்னு விதி இருந்தா நடந்துட்டு போகுது. அந்த ராங்கிக்காரிக்கு என்னைக்கும் கொறைஞ்சவ இல்ல, இந்த சிங்காரி!” வக்கனையாய் பேசி மார்தட்டிக் கொண்டவர். 

கடன்சுமையால் மகள் ஊரை விட்டு செல்லும் போதும் பேரனிடம், தனது ஆதரவை நீட்டி உதவி செய்ய முன்வந்தாலும், அதனை தவிர்த்த காரணத்தால் தயானந்தன் மீது தீராத கோபத்தில் இருப்பவர்.

“பாவிப்பயலே! உன் அப்பத்தா மாதிரியே, நீயும் என்னை தள்ளி வச்சு பாக்குற… அவளோட குணத்த அப்டியே புடம்போட்டு உனக்கு தாரை வார்த்துக் குடுத்திருக்கா! சதிகாரி!” அதற்கும் சம்மந்தியை முடிந்த மட்டும் வைது(திட்டி) தனது கோபத்தை தனித்துக் கொண்டவர்.

மகன் நாராயணன், மருமகள் அலமேலு, பேரன் தமிழ்செல்வன் என அனைவரும் முழு மூச்சாய் விவசாயம் பார்க்க, அவர்களோடு இன்றளவும் இணைந்து வாழ்பவர்.  

பேத்தியின் வளைகாப்பு விழாவிற்கு மகனையும் மருமகளையும் அனுப்பி வைத்தவர், தற்பொழுது பேரனுடன் மகள் குடும்பத்தை பார்க்க வந்திருக்க, ‘சிந்தாசினி’ என்ற ஒற்றை அழைப்பிலேயே வீட்டில் உள்ளவர்கள் அவரை இன்முகத்துடன் பார்க்க, மரகதம் முதலில் வரவேற்றார்.

“ஆத்தா! சுகமா இருக்கியா? யார் கூட வந்த? உன்னோட பை எங்கே?” என்று கேள்வி கேட்க, மூச்சு வாங்கிக் கொண்டே நின்றவர், வழக்கமான தனது பாணியில் ஆரம்பித்தார்.

“அப்பனே… பழனியாண்டி! உன் கோவிலுக்கு படியேறியிருந்தா, போற வழிக்கு புண்ணியம் சேர்ந்திருக்கும். மெச்சு(மாடி) படி ஏறி, கிழவிக்கு மேல்மூச்சு, கீழ்மூச்சு வாங்கினதுதான் மிச்சம். எம்பூட்டு உசரமா இருக்கு! ஆத்தா… மரகதம், இம்பூட்டு ஒசக்க(மேலே) ஏறி இறங்கியா, பொழுதுக்கும் அவதிப் பட்டுட்டு இருக்க? எங்கே என் சீமத்தொர? உங்கள கண்ணுல வச்சு தாங்குவேன்னு கங்கணம் கட்டிட்டு வந்த, என் ஊமைத்தொர!?” மூச்சு விடாமல் பேத்தி, மகள், பேரன் என அனைவரையும் நொடியில் தனது பேச்சில் இழுத்தவர், பெருமூச்சு விட்டபடியே கீழே அமர, நொடியில் வந்த சிந்து, அவரைக்  கட்டிக் கொண்டாள்.

“அம்மாச்சி! எப்படி இருக்க? ஏன் விசேசத்துக்கு வரல?” தொடர்ந்து கேட்டு, மூச்சு விட்டவளை, அணைத்துக் கொண்ட தேனுபாட்டி,

“இந்த மாதிரி நேரத்துல, இப்டி உணர்ச்சி வசப்பட்டு பேசக்கூடாது சிந்தா கண்ணு! அந்த சமயம் வர்றதுக்கு தோது இல்லமா போச்சுடி ராசாத்தி! நீ சுகமா இருக்கியா?” ஒட்டுமொத்த அன்பையும் தனது கேள்வியில் பாட்டி வெளிப்படுத்திட, அவரை பார்த்து,

“உங்களுக்கு காபியா? டீயா? பாட்டி” என்று மிதுனா கேட்க,

“வேணாம் ராசாத்தி! செத்த(சற்று) நேரத்துக்கு முன்னாடிதான் ரெயிலு வண்டியில, ஏதோ ஒரு கழனித் தண்ணிய, இதே பேரு சொல்லிக் குடுத்தான், சகிக்கல!” என்று முகத்தை அஷ்ட கோணலாக்கியவர்,

“சௌக்கியமா ராசாத்தி! என் பேராண்டி உன்னை நல்லா வச்சுருக்கானா?” மிதுனாவையும் குசலம் விசாரிக்க,

“உங்க ஆசீர்வாதத்துல, நாங்க சுகமா இருக்கோம் பாட்டி! உங்க பேரன நான் நல்லா வச்சுக்கிட்டா போதும், அவர் என்னை எப்பவும் நல்லாவே கவனிக்கிறார்” மலர்ந்த சிரிப்பில் கணவனை விட்டுக் கொடுக்காமல் பேசி வைக்க, அதில் உள்ளம் பூரித்த பெரியவரும்,

“ஆத்தி! அந்த தொரைக்கு ஏத்த மகராசிதான், அவன மாதிரியே பேசுறா, இந்த மீனா குட்டியும்” நெட்டி முறிக்க,

“அரசி! என் பொஞ்சாதி பேரு மிதுனா… மீனா இல்ல” இடையினில் வந்து தயானந்தன் திருத்த,

“ஒத்த எழுத்த விட்டுபுட்டேன்! சிலுப்பிட்டு வந்துட்டான், என் பேராண்டி… வயசான காலத்துல, தினுசு தினுசான பேரெல்லாம் எனக்கு நுழையாது. உரிமைபட்டவன் கணக்கா அரசினு கூப்பிடுறத விட்டுட்டு, அழகா அம்மாச்சின்னு கூப்பிடு ராசா!” முகத்தை சுளுக்கிக் கொண்டு சொல்ல,

“என் அப்பத்தா, எனக்கு சொல்லிக் குடுத்த மாதிரிதான் கூப்பிடுவேன் அரசி!” விடாமல் சீண்டலில் இறங்கினான் தயானந்தன்.

“அட போடா! வயசானவகிட்ட உன்னோட அலப்பறைய காமிச்சுட்டு, லந்து பண்ணிட்டு இருக்க! சரியான கூறுகெட்டவன், செத்துப்போன சித்ராங்கி(கோமளவல்லி) என்னோட வாய்க்கா சண்டைபோட, உன்ன வளர்த்து விட்டிருக்கா ” என்று பேரனை சடுதியில் இறக்கி விட்டதில் மிதுனா வாய்விட்டுச் சிரித்து விட, மனைவியை பொய்யாய் முறைத்து விட்டு,

“இப்போவாவது வயசாயிடுச்சுன்னு ஒத்துக்கோ கிழவி!” தனது கேலியைத் தொடர்ந்தவன்,

“ம்மா… உன் குடியிருந்த கோவில், தூரத்தில இருந்து உனக்கு  தரிசனம் குடுக்க வந்திருக்கு, நல்லா கவனிச்சு அனுப்பு” மரகதத்திடம் தனது பேச்சினை முடிக்க,

“இந்த பகுமானம் எல்லாம், நாங்களே கேட்டு வாங்கிக்குவோம் ராசா! நீதான் இப்போ, நான் சொல்றதுக்கு மண்டைய ஆட்டி, ஆமா சாமி போடணும், சொல்லிபுட்டேன்!” வந்தவர் புது உத்தரவைப் போட,

“நடவுக்கு கூப்பிட்டா, அறுவடைக்கு வந்து நின்னுட்டு, என்ன ஆர்டர் போடப் போற? எங்கே உன்னோட பொன் மனச் செல்வன்?” என்று பேரன் தமிழ்செல்வனைக் கேட்டான்.

இத்தனை நேரம் மனைவியிடம் சிடுசிடுத்த கணவன், புன்னகை முகத்துடன் பாட்டியை வரவேற்று, கிராமத்து வழக்கில் பேசிட, இது போன்றதொரு பரிமாணத்தில் பார்க்காத, கணவனை ஆச்சரியப் பார்வை பார்த்தாள் மிதுனா.

“உன் சோக்காளி, பின்னாடியே வந்துகிட்டு இருக்கானப்பு!” – பாட்டி.

“இந்த அரசிளங்குமரிக்கு குடை பிடிக்கிறத விட, அப்டி என்ன அவசர சோலி அவனுக்கு?” விடாமல் கேலி பேசிக்கொண்டே இருக்க, கேட்பவர்களுக்கு சிரித்து முடியவில்லை.

“இருயா… அத சொல்லதானே போறேன்…” பேரனின் கேள்வியில் பாட்டி நொந்து போக,

“வந்த சூடு போக, கொஞ்சம் ரெஸ்ட் எடு அம்மாச்சி! மதியம் சாப்பாட்டுக்கு வர்றேன், அப்போ பேசுவோம்” தயா அவரை ஆசுவாசப் படுத்த,

“நான் இன்னைக்கு நாலு மணிக்கே கிளம்பாலம்னு வந்துருக்கேன் ராசா! என் மகளையும் பேத்தியையும் கையோட கூட்டிட்டு போறேன். நீயும் அங்கே வந்து சேரு!” தலைப்பு செய்திகளில் முதன்மை செய்தியை வாசித்தவர், நொடி நேரமும் இடைவிடாமல்,

“என் கொள்ளுப் பேரன, எங்கையால வாங்கி, சீராட்டனும்னு கொள்ளை ஆசையில இருக்கேன். இத்தன நாளும், பெரிய வூட்டுக்காரி(கோமளவல்லி) இடைஞ்சலா இருந்து, எதுக்கும் சம்மதிக்கல… என் பொண்ணுக்கு செய்யாம விட்டத எல்லாம், என் பேத்திக்கு செஞ்சு அழகு பாக்க போறேன். இதுக்கு மறுப்பு சொல்லாதே ராசா!” தேனுபாட்டி, தான் வந்த காரணத்தை விளக்கி முடிக்க,

“நிறைமாசத்துல எங்கேயும் கூட்டிட்டு போக வேணாம்” எடுத்த எடுப்பிலேயே தயா தடை விதித்தான்.

“நெறமாசக்காரிக்கு, இன்னும் பிள்ள தலை இறங்கி இருக்காதுனு, ரெண்டு தலைமுறையா வைத்தியம் பாக்கிறவளுக்கு தெரியும்யா, அப்டிதான் இருக்கு. ஒருவாரம் கழிச்சுதான் புள்ள தல இறங்கும். நீ வெசனப்படாம அனுப்பி வை!”

அனைவரும் குழப்பமான மனநிலையுடன் தேனுபாட்டியை பார்க்க, அவரோ திடமாய் கர்ப்பிணியின் நிலவரத்தை சொல்லி, தன் பேச்சிலேயே நின்றார்.

“ஆத்தா! ஆரம்பத்துல இருந்தே இங்கிலீஷ் டாக்டர்கிட்ட காமிச்சுட்டு, இப்போ வைத்தியத்த மாத்தினா சரியா வராது! பிரசவம் முடியட்டும் ஒரு பத்துநாள் போல வந்து இருக்கோம்” மரகதம் தற்போதைய நிலவரத்தை கூற,

“அங்கேயும் போயி, இதே இங்கிலீஷ் வைத்தியத்த பார்க்க ஏற்பாடு பண்ணிக்கலாம் மரகதம்” அதற்கும் பாட்டி தீர்வைக் கூறினார்.  

“அங்கே வசதியெல்லாம் எப்டி இருக்கோ? அதுவும் பாக்கணும்… வேணாம் அம்மாச்சி” தயா திட்டமாய் கூற,

“சட்டுனு சீதோஷணம் மாறினா, கஷ்டமாகிடும் பாட்டி” என்று மிதுனாவும் மறுத்திட,

“நான் உங்கூட வர்றேன் பாட்டி! எனக்கு எல்லாமே ஒத்துக்கும் கூட்டிட்டுப் போங்க!” சிந்து உறுதியாக கூறிவிட்டாள்.

பேத்தியின் பதிலில் உள்ளம் நிறைந்த பெரியவர், இப்பொழுது அனவைரையும் பார்த்து புன்னகைத்து,

“என் பேத்திக்கு தெரியும்யா, என் மனசு!” சிந்துவை நெட்டி முறித்தார்.

“என்ன சிந்து சொல்ற? இந்த நேரத்துல ரிஸ்க் எடுக்க வேணாம்!” மிதுனா சொல்ல,

“இல்லண்ணி… அம்மாச்சி வீடு நான் வளர்ந்த இடம். அந்த சீதோஷணம் எனக்கு நல்லாவே ஒத்து வரும். இங்கேயும் வேற வீடு பாக்குற சூழ்நிலை இருக்குதானே அண்ணி!”

“அது நம்ம பிரச்சன சிந்து! இதுக்காக நீ பாட்டி வீட்டுக்கு போறத, நான் அனுமதிக்க மாட்டேன்” தயா தன்முடிவில் உறுதியாக நிற்க,

“உண்மைய சொல்றேண்ணே… எனக்கு இங்கே இருக்க இருக்க, மனசுல பாரம் ஏறிக்கிட்டே போகுது. என் ஒருத்தியால, எல்லாரும் கஷ்டபடுறோம் அண்ணே! இப்போ எம் மனசுக்கு அமைதி வேணும். அது இங்கே கிடைக்கிறது சந்தேகம்தான்.” உள்ளத்தில் இருப்பதை சிந்து மறைக்காமல் சொல்லி விட்டாள்.

“காலையில பாஸ்கர் வந்து பேசினத வச்சு சொல்றியா, சிந்து? அவன் கேட்ட பணம் இப்போதைக்கு என் கையில இல்ல… அப்படி குடுத்தாலும் அவனுக்கு யூஸ் ஆகுமாங்கிறது சந்தேகம்தான்” மிதுனா விளக்கம் சொல்ல,

“நான், உங்கள தப்பா நினைக்கலண்ணி!… உங்க எல்லாருடைய பலவீனமா நான் மாறிடக் கூடாது. போதும்… இன்னும் பேசுறதுக்கு எந்த பேச்சும் பாக்கி இல்ல! கேக்க எனக்கும் தெம்பில்ல…“ மனம் வெறுத்துப் பேசியவளின் பாவனையில் அனைவரின் மனதும் கலங்கிப் போனது.

“நீயா எதையாவது, மனசுல போட்டு குழப்பிக்காதே சிந்து!” மரகதம் சொன்னாலும்

“நான் தெளிவான முடிவுலதான் இருக்கேன்ம்மா… நான் வளர்ந்த ஊருல, என்னால சுயமா தைரியமா நடமாட முடியும்னு நினைக்கிறேன். கிராமத்து சூழ்நிலை எப்போவும் மனசுக்கு அமைதியா குடுக்கும். பிடிக்காததை எல்லாம் மறக்க செய்யும்” அன்னையிடம் தன் எண்ணப்போக்கை கூறியவள், தயாவிடம் திரும்பி,

“என்னை அனுப்பி வைண்ணே! நிச்சயமா இதனால உனக்கு எந்த சங்கடமும் வராது” என்று வாக்குறுதியாக கேட்க, யாராலும் மறுக்க முடியவில்லை.

“நீ சொல்லிதான், அம்மாச்சி வந்திருக்காங்களா, சிந்து?” மனதில் எழுந்த சந்தேகத்தில் தயா கேட்க,

“ஆமாண்ணே! உனக்கு இடைஞ்சலா இருக்கேன்னு எனக்கு தெரியுது. அதே சமயம் யாருடைய உதவியும் இல்லாம இந்த சமயத்துல என்னால இருக்க முடியாது. அதான் அம்மாச்சிய ஃபோன் பண்ணி வரச் சொன்னேன்” தயக்கமின்றி பதில் வந்தது. 

“நான், உன்ன பாரமா நினைக்கிறேன்னு கண்டதையும் கற்பனை பண்றேடாம்மா! உன் ஆசைக்கு, என் பொறுப்ப தட்டிக் கழிக்க வைக்கிற…” மனதில் எழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு, தயா அமைதியாகப் பேச,  

“அப்படியெல்லாம் நினைக்காதண்ணே! நாம எதிர்பார்க்காத, விரும்பாத ஒரு விஷயம், நொடியில நம்ம வாழ்க்கையில நடந்து, அது மாத்தவே முடியாத மாதிரி ஆகிடுது. அதுல இருந்து வெளியே வந்து, எப்படியாவது நம்மள சீர்படுத்திக்கணும். அதுக்கு உன் குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாகுறத என்னால ஏத்துக்க முடியலண்ணே!” கரகரத்த குரலில் சொல்லியவாறே சிந்து தலை குனிந்திட,

“என் தங்கச்சி தங்கத்துக்கு எவ்வளவு பக்குவம் வந்துருச்சு? பார்த்தியா மிது! எனக்கே புத்தி சொல்ற அளவுக்கு, பெரிய மனுஷி ஆயிட்டா!” தங்கையின் பேச்சில், சிலிர்த்துக் கொண்டவனின் மனம் மகிழ்ந்தாலும், அவளின் நிலையில் இருந்து தவிக்ககத்தான் செய்தது.

‘இத்தனை அருமையான பெண்ணை புரிந்து கொண்டு, என் தம்பி வாழ்ந்தாலே போதுமே! எப்பொழுது இதெல்லாம் நடப்பது?’ ஆதங்கமாக மிதுனாவும் மனதோடு நொந்து கொண்டாள்.

“உன் வார்த்தைய, தட்டிக் கழிக்கிறதுக்கு, என்னை மன்னிச்சிடுண்ணே! இந்த ஒருதடவ மட்டும், என்னை, என் போக்குல விடு! அடுத்து உன் பொறுப்புல நான் வந்தா, நீ சொல்றபடியே நான் கேக்குறேன்” அசைக்க முடியாத பிடிவாதத்தில், அமைதியாக தனது முடிவினை சொல்லி அனைவரையும் ஒத்துக் கொள்ள வைத்தாள்.

“உன் பேச்சே, உன்னோட வலிய சொல்லுது சிந்தா கண்ணு! என் பேத்திய புரிஞ்சுக்காம வாய்க்கு வந்தத பேசினவங்கள, நாலு வார்த்த கேட்டாதான் எனக்கு மனசு ஆறும், என்னை கீழே கூட்டிட்டு போ மரகதம்” தன்போக்கில் தேனுபாட்டி, கோபம் கொண்டு பேச,

“அம்மாச்சி! இந்த மாதிரி நெனைப்போ, இல்ல அவங்களப் பத்தியோ, பேசுறதா இருந்தா நான், உன்கூட வரல… எனக்கு மட்டுமில்ல… அண்ணிக்கும் மனசு சங்கடப்படுற மாதிரி யார் பேசினாலும் நான் கேட்டுட்டு சும்மா இருக்க மாட்டேன்!” உறுதியான குரலில் சிந்து, தன்உத்தரவாக சொல்லிவிட்டு,

“சீக்கிரம் கிளம்பனும்னு சொன்னேதானே… வா சாமான் எடுத்து வைக்க, எனக்கு ஒத்தாச பண்ணு!” மேற்கொண்டு எந்த பேச்சும் வளரும் முன்னே வெட்டி விட்டவள் பாட்டியை தன்னோடு அழைத்துக் கொண்டாள்.

அந்த நேரத்தில் தமிழ்செல்வன் உள்ளே வர,

“வாடா மாப்ளே! போருக்கு தளபதிய முன்னாடி அனுப்பிட்டு, பின்னாடி ராஜாவாட்டம் தனியா வர்ற!” தயானந்தன், கேலிபேச்சில் வரவேற்று, தன் மனதை முயன்று இயல்பு நிலைக்கு திருப்பியிருந்தான்.

ஏறக்குறைய தயானந்தனின் உயரம் மற்றும் உடற்கட்டை ஒத்திருந்தவன், நிறத்தில் சற்றுக் கூடுதல் கருமையை வசப் படுத்தியிருந்தான். அக்மார்க் விவசாயி என்ற முத்திரை தமிழ்செல்வனின் முகத்தில் அம்சமாய் பொருந்தி இருந்தது. மறந்தும் தன்பேச்சில் பிறரை நோகடிக்க விரும்பாதவன். இவனை தயாவின் அடுத்த வார்ப்பு எனலாம். ஆறுமாதம் தயாவிற்கு இளையவன் இவன்.

“உறவுமுறை எல்லாம், பேச்சுலதான் இருக்கு மச்சான், செயல்ல காமிக்க மாட்ட நீயி!” அங்கலாய்ப்பில் ஆரம்பித்த தமிழ்செல்வன்,

“மதியம் ஊருக்கு போறதுக்கு டெம்போ டிராவலர் புக் பண்ணிருந்தேன், அதுக்கு அட்வான்சும், அட்ரசும் கொடுத்துட்டு வர்றேன் மச்சான், பெருச இங்கே இறக்கி விட்டுட்டு, கையோட இந்த வேலைய முடிச்சிட்டு வந்துட்டேன்” என்று தாமதத்திற்கு காரணத்தையும் கூறினான்.

சிந்துவை மணந்து கொள்ளலாம் என்ற முடிவை, இவன் தயாவிடம் மட்டுமே சொல்லி, மனதோடு வைத்திருக்க, அது கைநழுவிப் போனதில் வந்த ஆதங்கத்தில் பேச்சினை ஆரம்பித்திருந்தான் தமிழ்செல்வன்.

“முடிஞ்சு போனத பேசி, பிரயோஜனம் இல்ல மாப்ளே! இந்த வாரம் அரசிக்கு என்ன படம் கூட்டிட்டு போன?” தயா பேச்சை நடப்பிற்கு கொண்டு வர,  

“அதை ஏன் கேக்குற, மச்சான்? தியேட்டர்காரன் எம்ஜிஆர் சிவாஜி படத்தை வாங்கவே மாட்டேன்னு சபதம் போட்டுட்டான். அதனால வீட்டுல பெரிய 60 இன்ச் டீவியும் ஹோம் தியேட்டரும் வச்சு குடுத்திட்டேன். டெய்லி மூணு படத்த, பென்-ட்ரைவ்ல ஏத்தி, சொருகி வச்சுருவேன். அது எதையாவது அமுக்கி பார்த்துக்கும்” பாட்டியின் செயலை அலுத்துக் கொண்டே, பெருமையுடன் சொன்னான் பேரன்.

பழைய படங்களை தினமும் பார்த்தே ஆகவேண்டும் என்பது தேனரசி பாட்டியின் எழுதப்படாத சட்டங்களில் ஒன்று. இளம் பிராயத்தில் ஆரம்பித்த பழக்கம் போதையாக மாறி, இன்றைய நாள் வரையிலும் அவர் குடும்பத்தாரை, பாட்டி நச்சரித்து வைக்க, பெரியவரின் ஆசையை தவிர்க்காமல் அனைவரும் ஒத்துக் கொண்டு வாழ பழகி விட்டனர்.  

“பாருடா… அரசிக்கு வந்த வாழ்வ! லேட்டஸ்ட் டெக்னாலஜி எல்லாம் யூஸ் பண்ணுது. சும்மாவாடா உன்ன பொன்மனச்செல்வன்னு கூப்பிடுறாங்க? யார் மனசும் நோகாம நடந்துக்க, உன்கிட்ட இருந்துதான் கத்துக்கிடனும் மாப்ளே! நல்லவேல நான் குடியிருந்த கோயிலோட கழண்டுக்கிட்டேன், இல்லன என் கதி என்ன ஆகுறது?” தயா பொய்யாய் பயந்து கொள்ள,

“உங்க சுபாவத்தை இவருக்கும் சொல்லிக் குடுங்கண்ணா” ஓரப்பார்வையில் கணவனை முறைத்துக் கொண்டே, இருவரின் பேச்சில் இடைபுகுந்த மிதுனா,

“இவரே பயப்படுற மாதிரி, அப்படி என்னண்ணா நடந்தது?” அறியும் ஆர்வத்தில் தமிழிடம் கேட்க,

“எங்க அப்பத்தாவுக்கு பழைய சிவாஜி எம்ஜிஆர் படம்னா உசுரு, தங்கச்சி! டெய்லி ஒரு படத்தையாவது கொட்டகையில போயி பார்த்துடனும். அப்படிதான் சின்ன வயசுல, இவன் ஒருநாள் அதுக்கிட்ட மாட்டி, படம் பாக்க போக, இவங்கிட்ட எம்ஜிஆர் பெருமை பேசியே, காத பஞ்சர் ஆக்கிடுச்சு! அதுல இருந்து இவன் உசாராயிட்டான். பயபுள்ள இன்னமும் சினிமா கொட்டகைய பார்த்த வெறுப்பா முறைச்சு வைப்பான்.” என்று விளக்கம் சொன்னவன்,

“அன்னையில இருந்து பழைய படம் பேரு சொல்லியே, கேலி பண்ணிட்டு கிடக்கான். இந்த பயலுக்கு என் அப்பத்தாவ பேசலைன்னா தூக்கம் வராது. பெரிய நியாயஸ்தன் கணக்கா எல்லாத்தையும் தன்னோட தலயில போட்டுட்டு, அவன் ஒரு சரித்திரம்னு நிரூபிச்சிட்டு இருக்கான்” நண்பனின் போக்கை அவன் மனைவியிடமே, குறையாக சொல்லிட,

“அதை ஏன் கேக்குறீங்கண்ணா? இந்த உத்தமராசா, சாவ்டால் எல்லாம், என்னை மாதிரி ஒன்னுந்தெரியாத அப்பாவிங்ககிட்டதான் காமிப்பாரு. வெளியே எப்போவும் இவர் சாந்திநிலையம் ஹீரோதான்!” என்றே மிதுனாவும் தயாவை வாரிவிட,

“மிஸ்டர்.தமிழ்செல்வன், உங்க ஆப்ரேஷன் சக்ஸஸ் ஆகிடுச்சா? உள்ளே போய் கொட்டிக்கிட்டு, அடுத்த ரவுண்ட் ஆரம்பிக்கலாம், வா!” பொய் கோபத்தில் நண்பனை உள்ளே அனுப்பியவன்,

“நான் கம்பெனிக்கு போய் ஆள் மாத்தி விட்டுட்டு வர்றேன் மிது! என்ன வேணும்னு கேட்டு ஃபோன் பண்ணு!” என்ற சகஜ வார்த்தையில், மனைவியுடனான சுணக்கத்தை மறைத்துக் கொண்டான்.  

தமிழ்செல்வனும் சிந்துவும் ஒன்றாக வளர்ந்த பழக்கத்தில் பேசிக் கொண்டிருக்க, அன்றைய பொழுது ஆனந்தமாகக் கழிந்தது.

பல பாதுகாப்புகளையும், சமையலின் பக்குவங்களையும் மருமகளிடம் சொல்லிய மரகதம், மகனைப் பிரிய மனமின்றியே பயணத்திற்கு தயாராகிட,

“இந்த சின்னஞ்சிறுசுகள இந்த சாக்குல தனியா விடு ஆத்தா! ரெண்டும் சேர்ந்து எதையாவது வேகவைச்சு சாப்பிட்டுக்கும். நீ வெசனப்படாம கிளம்புற வழியப் பாரு!” என்று பாட்டியும் அறிவுறுத்த,

“நல்லா சொல்லு அம்மாச்சி! உன் மகள விட்டு அசையாம, உன் பேரனும் பொண்டாட்டிய கவனிக்க ரொம்பவே யோசனை பண்ணுவாரு! அண்ணனுக்கும் சொல்லி வை!” சிந்துவும் பாட்டியுடன் இணைந்து கொள்ள, 

“ஏன் சிந்தா நீ சொல்ல வேண்டியதுதானே? எங்க அரசிக்கு அடுத்த பெரிய மனுஷின்னு உன்னை, என் மச்சான் சொல்லிட்டு இருக்கான். அது பொய்யா?” கேலியோடு தமிழ் கேட்க,  

“என் அண்ணன் உன்னோட சேர்ந்த பிடிவாதக்காரன் தமிழ்மாமா! உனக்கு எப்படி பாட்டி பேச்சு மட்டும் காதுல ஏறுதோ, அப்படியேதான் உன் மச்சானுக்கும்… இதுல என்னை கேலி பேச வந்துட்டீக!” முகத்தை சுளித்துக் கொண்டவள், தன் குறும்புப் பேச்சை தொடங்கியிருந்தாள்.

“இத்தனை நாள் இந்தப் பேச்ச, சிரிப்ப எல்லாம் எங்கே ஒளிச்சு வச்சிருந்த சிந்து? எனக்கு தெரிஞ்சு நீ வாய்விட்டு சிரிச்சும் நான் இதுவரைக்கும் பார்த்ததில்லையே?” வியப்புடன் கேட்ட மிதுனாவிற்கும், சிந்து எடுத்த முடிவு தற்பொழுது சரிதான் என்ற எண்ண வைத்திருந்தது.

“பாட்டியும் பேத்தியும் சேர்ந்தா வலையபட்டி கிராமத்தை பட்டா போட்டு, வித்துட்டு வந்துருவாக தங்கச்சி! தப்பிப் போயி அமைதிக்கு பெயர்தான் சிந்துன்னு நினைச்சுட்டியே?” தமிழும் உடன் கோர்த்து விட,

“பாரு அம்மாச்சி! இந்த மாமன் கல்யாணத்துக்கு, நீயும் நானும்தான், விசாரணை கமிஷன் வச்சு, இவரோட பொறுமை எருமை எல்லாத்தையும் பட்டா போட்டு பொண்ணுக்கு அனுப்பி வைக்கிறோம் சரியா?” சிந்து வீரமாய் சிலிர்த்துக் கொண்டு பேசிவிட,

“அதுக்குதானே ராசாத்தி! உன்னை கூட்டிட்டு போறதே!” தேனுபாட்டியும் கேலியில் இறங்கினார்.

மதிய உணவிற்கு பிறகு, தமிழ்செல்வனோடு, பாட்டி, மகள், பேத்தி என மூன்று தலைமுறையும் கிளம்பிவிட, அவர்களை சந்தோசத்துடன் அனுப்பி வைத்த தயானந்தனுக்கும் மிதுனாவிற்கும், இனிவரும் நாட்களை அமைதியாக மகிழ்ச்சியுடன் கடக்க வேண்டும் என்ற ஆசையும் ஊக்கமும் மனதோடு இருந்தாலும் அதை நடைமுறைப் படுத்துவார்களா?      

 

 

 

 

 

 

Leave a Reply

error: Content is protected !!