சின்ன நெஞ்சிலே
அத்தியாயம் 1
“ஆத்தா விடு ஆத்தா! என்ன செய்றே நீ?”
அவர் கையிலிருந்த அந்த பழமையான துப்பாக்கியைப் பறிக்க முயன்று தோற்றுப் போனாள் நிலானி!
“நீ சும்மா இருட்டி! பெரிய்ய கம்பியூட்டர் வேலை பார்க்குறியேன்னு உன்னைச் சப்பானுக்கு அனுப்பினா, நீ இந்த நன்றி கெட்ட குடும்பத்துப் பையனைக் கல்யாணம் செய்திட்டு வந்திருக்கிறியே, கூறுகெட்டவளே!”
அதிர்ந்தாள்.
ஆத்தாவுக்கு இவனை ஏற்கனவே தெரியுமா!
“நீ என்ன சொல்றே ஆத்தா? எனக்குப் புரியலை, முதலில் அந்த துப்பாக்கியைக் கீழே போடு”
“இவன் ஜோலியை முடிச்சிட்டு வாரேன். எட்டிப் போ புள்ள, குறுக்கே நிக்காதே!”
பாட்டி முறைத்த முறைப்பைச் சட்டை செய்யாமல் அந்த துப்பாக்கியின் முனையைப் பற்றினாள் நிலானி.
“ஆத்தா நான் சொல்றது உனக்கு புரியுதா இல்லையா, இப்ப இவர் என் புருஷன். ஆசிர்வாதம் வாங்க வந்தவங்களை நீ …”
நிலானிக்கு அழுகை சாமானியத்தில் வராது. ஆனால் இன்று நினைத்தாலும் நிறுத்த முடியவில்லை.
“நிலா நீ தள்ளி போ, பாட்டி கிட்ட நான் பேசுறேன்”
மனைவியின் தோள் அணைத்துச் சொன்னவன் இப்போது பாட்டியை நெருங்கி அந்த துப்பாக்கியைப் பறிக்க முயன்றான்.
அப்படியெல்லாம் முடியுமா? வேகமாய் அதைத் திருப்பி அவனைத் தடுமாறச் செய்தவர், சட்டென்று அவன் நெஞ்சில் குறி வைத்திருந்தார்.
“டேய் சங்காரா இவனை பிடில. இப்ப இங்க ஒரு பொணம் விழுகணும்!”
ஆங்காரத்திலிருந்தாள் ஆவுடை பாட்டி. அவர்கள் நின்று கொண்டிருந்தது பாட்டியின் வீட்டில்! முற்றம் வைத்து அழகாய் கட்டப்பட்டிருந்த மிகப் பழமையான வீடது! பாட்டிக்கும் அந்த வீட்டைப் போல் எழுபது வயது இருக்கலாம்! அவர் தோளின் சுருக்கங்களும், தலைமுடி நரையும் அவரின் அனுபவத்தைப் பறைசாற்றின. வயதானது என் தோற்றத்தில் மட்டுமே, என் மனதில் அல்ல என்பதாய் இருந்தது அவரின் பேச்சும், தோரணையும். அது அவர் எதிரிலிருந்த இருவரையும் பயம் கொள்ள வைத்ததென்னவோ உண்மை.
“ஆத்தா ப்ளீஸ், என்னன்னு எனக்கு புரியுற மாதிரி சொல்லு. உனக்கு இவரை ஏற்கனவே தெரியுமா? எப்படி?”
பதிலில்லாமல் அவனிடம் திரும்பியவள்,
“நீயாவது சொல்லு”
அவளைத் தொட்டுத் தாலி கட்டியவன் வாயைத் திறக்காமல் ஒரு குற்றவாளியைப் போல் நின்று கொண்டிருந்தான். வீரன், தீரன் என்ற அவளின் கற்பனையில் இப்போது மண் அள்ளிப் போட்டுக் கொண்டிருந்தான். தவறிழைத்தவன் போல் அவன் நின்ற கோலம் அவள் மனதை கலங்கடித்தது.
“அவனை என்னட்டி கேட்குறே! சொல்ற முகரையா இருந்தா முன்னமே சொல்லியிருக்க மாட்டானா? இவன் தான் உன் ஓடுகாலி மாமன் அந்த சேவியரோட மவன்”
அவன் இத்தனை நாளும் அவளுக்கு அளித்திருந்த நம்பிக்கையெல்லாம் இந்த ஒரு வாக்கியத்தில் வீணாகிப் போயிருந்தது. நிலானி அவனை வெறித்துப் பார்க்க அவள் பார்வையில் உள்ள வேறுபாட்டை உணர்ந்து,
“நிலா இந்த விஷயமா உன்கிட்ட நிறைய சொல்லணும், என் கூட வா. இவங்க சொல்றதை வச்சி இப்ப எந்த முடிவுக்கும் வராதே”
ஆதரவாய் அவள் கை பற்ற முனைய அவன் கையைத் தட்டிவிட்டாள். அவன் பதட்டமே அவளுக்குப் பாட்டி சொன்னவை அனைத்தும் மெய் என்றது.
“என்னைப் பார்த்து சொல்லு, ஆத்தா சொல்றது உண்மையா இல்லையா?”
தலைகுனிந்திருந்தவன் சற்று நேர மௌனத்தின் பின், ஆம் என்பதாய் தலையசைக்க, அவளின் மனம் சுக்குநூறானது!
“ஏன் டா, ஏன்? என்கிட்ட எதுக்கு இந்த விஷயத்தை மறைச்சே! என்னை ஏமாற்றி அப்படி நீ என்ன சாதிச்சிட்டே”
“இல்லடி! ஏமாத்தணும்னு எல்லாம் நினைக்கலை”
பாட்டியின் முறைப்பு அவனை மேலும் தொடர விடாமல் செய்ய,
“இங்க வச்சி அதையெல்லாம் பேச முடியாது. நீ என் கூட வா மா”
வலுக்கட்டாயமாய் மனைவியின் கரங்களைப் பற்றி அழைத்தவனை,
“சே, விடு லே அவ கையை. என் பேத்தி கையை தொட்டியோ சுட்டிடுவேன் ராஸ்கல்”
பாட்டி சொன்ன வார்த்தையில் நெஞ்சத்தில் அடி வாங்கினாள் நிலானி. கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொண்டவனிடம் பாட்டி என்ன பேசுகிறாள்!
“நீ கிளம்பு! எனக்கு இவங்க கிட்ட கொஞ்சம் பேசணும்” அவனை பாராமல் வேறு யாருக்கோ சொல்வதைப் போல் சொன்னாள் நிலானி.
பாட்டி ஆர்ப்பாட்டம் போட்டதில் வீட்டிற்கு வெளியிலிருந்தவர்கள் எல்லாம் வாசலுக்கு வந்து எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டனர். இவன் இன்னமும் இங்கே நிற்பது சரியில்லை எனப் பட்டது நிலானிக்கு!
“ஏலேய் என்ன லே இங்கன வேடிக்கை! போய் வேலையை பாருங்க லே. கூலியை மட்டும் சரியா வாங்கிட்டு அப்பப்ப சோமாரிகிட்டு திரியிறவ…!”
ஆவுடை பாட்டி போட்ட போடில் கூட்டம் கலைந்திருந்தது. இன்னமும் துப்பாக்கியை அவனை நோக்கி உசத்தி பிடித்திருந்தார்!
அவன் நிலாவைப் பார்த்த பார்வையில் ‘என்னை நம்பலையா நீ!’ என்பதாக இருந்தது.
“ஏலே சங்கரா இவனை சும்மா விட நினைச்சாலும் நவுராம நிக்கான். நீ ஈம காரியத்துக்கான ஆளுங்களை வரச் சொல்லு. இன்னிக்கி இவனை அவன் முறைப்படியே புதைச்சிடுவோம்”
“ஆத்தா நம்ம நிலா…” தயங்கியபடி பாட்டியை நெருங்கிய அந்த சங்கரன் அவர் சுதாரிக்கும் முன் அந்த துப்பாக்கியைப் பிடுங்கி விட்டார். கிழவி அவர் முதுகில் வைத்த அடியெல்லாம் ‘எனக்குப் பழக்கம் தான்’ என்பது போல் அந்த ஆயுதத்தோடு அடுத்த அறைக்குள் சென்று மறைந்தார்.
பாட்டி அத்தனை நேரம் கத்தியதில் அழுப்பாகி, இப்போது அவரின் சாய்வு நாற்காலியில் அமர, நிலானியோ செய்வதறியாது அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவள் கண்ட கனவெல்லாம் வீணாகிப் போனது! அதற்குக் காரணமானவனைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
“நிலா, வா போலாம்” அவன் மறுபடி அழைக்க,
“நிலா என்ன உன் வீட்டு நாய்குட்டியா லே? நீ கூப்பிட்டதும் உன் பின்னயே வர?”
அவன் பொறுமை பறந்திருந்தது!
“ஏய் கிழவி கொஞ்சம் சும்மா இருக்கியா, நான் என் பொண்டாட்டி கிட்ட பேசிட்டிருக்கேன்”
“அடி செருப்பால! யாரை பார்த்து கிழவிங்குறே! வெளியே போலே. என் பேத்தி பக்கம் இனி வந்தியோ உன்னையும் உன் குடும்பத்தையும் ஒழிச்சு கட்டிருவேன்.”
ஆவுடையம்மாள் ஆங்காரமாய் கத்த, இனியும் இங்கே நிற்பது அவன் தன்மானத்துக்கு இழுக்காய் தோன்றியது.
நிலானியை பற்றி அவனுக்குத் தெரியும்.
கட்டாயம் அவனிடம் திரும்ப வருவாள்! அந்த நம்பிக்கையில் ஒன்றும் சொல்லாமல் வெளியேறிவிட்டான். அவன் போவதை பார்த்த படியிருந்த அவன் மனைவியோ தன் அறைக்குள் ஒதுங்கிப்போனாள்.
தளர்ந்த நடையில், அழுகையை அடக்கிக் கொண்டு நிலானி போனதைக் கண்ட அந்த முதியவளோ தாயில்லா தன் பேத்தியின் நிலையைக் கண்டு செய்வதறியாமல் அமர்ந்திருந்தார்.
ஆனால் அவனின் நம்பிக்கையை மட்டும் வீணாக்காமல் அடுத்த நாளே அவன் இருப்பிடம் வந்தாள் நிலானி! காலை வேளையில் அவர்கள் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு வந்தவள் அவன் கதவைத் திறந்த நொடி,
“ஏன் டா இப்படி செஞ்சே?”
தன் புத்தம் புது மனைவி, கண்களில் கண்ணீரைக் தேக்கிக் கொண்டு கேட்ட கேள்வி அவன் மனதை நொறுக்கியது!
எதையும் வெளிக்காட்டும் நேரமில்லை!
“ஷ்…ஷ், இது காரிடர் இங்க வச்சி கத்தாதே! உள்ள வா” அவள் கைபற்றி அறையினுள் இழுத்தவன் கதவை அடைத்திருந்தான்.
ஏதோ அவளுக்குச் சற்றும் பொருந்தாத ஒரு சுடிதாரில் வந்திருந்தாள். அவன் இரண்டு நாட்களுக்கு முன் கட்டிய தாலி கழுத்தில் மின்னிக் கொண்டிருக்க, எப்போதும் அவனைக் கண்டால் சந்தோஷம் குமிழ ஆரம்பிக்கும் முகத்தில், இன்று சோகமும், கோபமும் மட்டுமே இருந்தது.
அவள் கண்களைப் பார்த்தபடி,
“நீதான் என் மனைவியா வரணும்னு முடிவெடுத்திருந்தேன் நிலா! அதுக்காக நான் எந்த பொய்யும் சொல்லலை. ஆனா…ஆனா உண்மையை உன் கிட்ட சொல்லாம மறைச்சது என் தப்புதான்!”
“நீ மட்டும் முடிவெடுத்தா போதுமா? அதுக்காக இப்படி திருட்டுத்தனம் செய்வியா?”
“என் நினைப்பு தப்பா இருக்கலாம் தான். ஆனா, நாம கல்யாணம் பண்ணிக்கலாமான்னு நானா கேட்டேன்? இரண்டு பேரில் அதை முதலில் சொன்னது யாருன்னு கொஞ்சம் யோசிச்சு பாரு”
அவளே தான் கேட்டாள், முந்திரிக்கொட்டை தனமாய்!
“எனக்கு நீ தாமு மாமா பையன்னு தெரியாது…நீ ஏன் அவர் பையன்ற விஷயத்தை என் கிட்ட மறைச்சே? தெரிஞ்சா அப்படிக் கேட்டிருப்பேனா?”
இதற்கு மேலும் என்னால் விளக்கமளிக்க முடியாது என்பது போல் வாயைத் திறவாமல் நின்றவனைப் பார்வையால் எரித்துக் கொண்டிருந்தாள். அவனைத் தாண்டி தன் பெட்டி பக்கம் போனவள், வெளியே கிடந்த அவளின் துணிகளையும், லாக்கரில் இருந்த நகைகளை எடுத்து அதனுள் வைத்தாள்.
“என் பாஸ்போர்டை எங்கே வச்சே?”
அவள் செய்கையை இத்தனை நேரமும் அமைதியாய் பார்த்திருந்தவன், இப்போது சலிப்பாய்,
“அது என் கிட்டையே இருக்கட்டும்! டிக்கெட் புக்கிங்கப்போ தேவைப்படும்!”
“என் டிக்கெட்டை வாங்க எனக்கு தெரியும், நீ உன் வேலையை மட்டும் பார். அதை இப்ப கொடு”
அங்கே எவரும் இல்லாததைப் போல அவன் பாட்டுக்கு தொலைக்காட்சியில் எதையோ பார்க்க ஆரம்பித்திருந்தான். நிலானி பொறுமை இழந்தவளாய்,
“சீக்கிரம் கொடு, நான் திருப்பி அம்பாசமுத்திரம் வரைக்கும் போகணும்!”
“உன்னை நானா அங்கேயிருந்து லெட்டர் போட்டு வரச் சொன்னேன்!? வந்த வேலை முடிஞ்சதா, அப்போ கிளம்பு!”
அவள் செய்வதறியாது அப்படியே நிற்க,
“என் பொண்டாட்டி பாஸ்போர்ட் என் கிட்டத் தான் இருக்கும்! நாம சேர்ந்து தான் ஊருக்கு போறோம்! அதில் எந்த மாற்றமுமில்லை! வேற ஏதாவது கேட்கணுமா?”
‘என்னை விரட்டுறியா! உன்னை!!!’
தூக்க முடியாத அந்த கனமான பெட்டியைத் தள்ளாடியபடி சுமந்தவள், விறுவிறுவென்று அறையின் வாசல் பக்கம் வந்தாள். அவனைத் திரும்பிப் பார்க்க எத்தனிக்க அதற்குள் அவளைப் பின்பக்கமாய் அணைத்திருந்தான் அவளவன்!
“என்னை விடுறா! ஃபிராடு, 420”
அவன் கையை பிரித்து விட முயன்றது, அவள் திமிறியது எதற்கும் அவன் அசரவில்லை!
அவளின் தோளில் தன் முகத்தை வைத்தவன்,
“நேத்தெல்லாம் நீ என் பக்கத்தில் இல்லாம நான் தூங்கவேயில்ல தெரியுமா டி! வாழ்நாள் முழுசுக்கும் என் கூட இருப்பேன்னு கோவிலில் சத்தியம் செய்ததை மறந்திட்டியா? என்னை விட்டிட்டு இருந்திடலாம்னு பிளான் பண்றியா நிலா?”
அதே குரல், அதே ஸ்பரிசம்!
அவளைக் கட்டிப் போட்டது அவன் உண்டாக்கியிருந்த அந்த சூழல்! கண் மூடி அவன் வார்த்தைகளில் லயித்திருந்தாள். அவளுக்கும் அவன் வேண்டும்!
ஆனால் இது எல்லாம் சற்று நேரம் தான்!
அவளின் மூடிய கண்ணுக்குள் ஆவுடை பாட்டி துப்பாக்கியுடன் காட்சியளிக்க எல்லாம் மாறிற்று!
“செய்றதை எல்லாம் செஞ்சிட்டு நடிக்கிறியா! என்னை விடுறா! நான் போகணும்!”
அவன் அப்போதைக்கு அவளை விடும் உத்தேசத்தில் இல்லை. நீண்ட நேரப் போராட்டத்தின் பிறகு அவனிடமிருந்து தன்னை விடுவித்தவள், அவனைத் திரும்பியும் பாராமல் வந்த வழியே கிளம்பிவிட்டாள்.
அத்தியாயம் 2
“இந்த பொட்டிக்குள்ள அப்படி என்ன தான்ட்டி இருக்கு? இதை எடுத்தாறேன்னு அவன் இருக்கிற இடத்துக்கு போகாதேன்னு சொல்லக் கேட்கியா? கொஞ்சம் கூட உனக்கு ஆத்தான்னு ஒரு மட்டு, மறுவாதை இல்லை. அந்த சண்டாளன் இப்படி ஏமாத்திபுட்டானே ஆவுடை பேத்தியை”
சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருந்தார் ஆவுடையம்மாள். வயதின் வேலை இது! இரும்பு மனத்துக்காரியான அவரையும் புலம்ப வைத்திருந்தது. சங்கரனுக்கு ஆத்தாவின் உடல் நிலை பற்றி நன்றாகத் தெரியும்! இப்படியே புலம்பிக்கொண்டிருப்பது அவருக்கு நல்லதில்லை. பல தடவை தென்னந்தோப்பில் வேலையுள்ளது போகலாம் என்று அழைத்தும் பாட்டி அவ்விடத்திலிருந்து நகருவதாய் தெரியவில்லை.
“ஆத்தா நீ தோப்புக்கு போயிட்டு வா, கஸ்தூரி இருக்குறால்ல என் துணைக்கு!” நிலானி சொன்னாலும் நம்பிக்கை இல்லாத முகபாவனை காட்டினாள் பாட்டி. அவன் திரும்ப வந்து பேத்தியின் மனதைக் கரைத்துவிடுவானோ! இவளும் அவனை நம்பிப் போய்விடக் கூடுமோ என்ற ஐயம் அவரை ஆட்கொண்டது!
“அவனை எங்கட்டி பார்த்தே! எப்படி உங்களுக்குள்ள பழக்கமாச்சு? இந்த சொத்துக்காக அவன் அப்பன் மவனை ஏவி விட்டிருப்பானோ, வெறும்பய!”
சற்று நேரம் தனக்குத் தெரிந்த அத்தனை வசவு சொற்களையும் கொண்டு, வந்தவன், அவனைப் பெற்றவர்கள், அவனைச் சார்ந்த அனைத்தையும் ஏசித் தீர்த்தார்.
“பொம்பளை புள்ள, அதிலும் பெரிய படிப்பு படிச்சவ சூசனமா இருப்பியேன்னு நினைச்சா, இப்படி ஒரு கிரகத்தை புடிச்சிட்டு வந்திருக்கியே ட்டி! நானும் வந்த நாளா அவன பத்தி கேட்கேன் வாயை திறந்து சொல்லுதியா புள்ள நீ”
நிலா ஆத்தாவின் கால்மாட்டில் எல்லாவற்றையும் கேட்டபடி அமர்ந்திருந்தாள்.
‘என்ன சொல்ல?’
பாட்டியிடம் அவனை எங்கே எப்படிச் சந்தித்தேன் என்று சொல்வது? உண்மையை அப்படியே சொல்ல முடியாது! அவரிடம் நிலா பொய் உரைக்கவும் பயந்தாள்.
என்றெல்லாம் பொய் சொல்லியிருக்கிறாளோ வசமாய் பாட்டி பிடித்துக் கொண்டிருக்கிறாள்.
அதற்காகவே இப்போது எதுவும் சொல்லாமல் நேரத்தைக் கடத்தினாள். வேண்டுமானால் சென்னையில் வேலை பார்த்த போது சந்தித்ததாய் சொல்லலாம். வெளிநாட்டில் அவர்கள் ஒரே பக்கம் இருப்பதை மட்டும் உளறிவிட்டால் இந்த பயணம், தன் வேலை எல்லாவற்றுக்கும் உலை வைத்தாகிவிடும். வேலைக்கும் போகாமல் இந்த ஊரிலிருந்து என்ன செய்ய?
தன் வாழ்க்கை இப்படி ஆனதே என்ற கழிவிரக்கம் மறுபடி தலை தூக்கியது. யோசனைக்கிடையே தலையை நிமிர்த்தி அந்த முதியவளைப் பார்த்தவள்,
“ஆத்தா நீ இப்ப கிளம்பு. மதியம் சாப்பிட வீட்டுக்கு வருவேயில்ல அப்போ நடந்த எல்லாத்தையும் சொல்றேன்”
பாட்டியின் கையை பற்றித் தூக்கி விட்டாள்.
“அதான் நிலா சொல்லுதால்ல வா ஆத்தா” சங்கரன் ஒரே பிடியாய் நின்றார்! வாசல் வரை போன ஆவுடையம்மாள்,
“ஏலேய் பாண்டி, காவலுக்கு இங்கனையே நில்லுலே. எம் புள்ள பத்திரம். ஒரு பயலையும் உள்ளே விட்டிராதே, பார்த்துக்கோ! கஸ்தூரி ஏட்டி கஸ்தூரி”
“என்ன ஆத்தா?”அடுக்களையிலிருந்து ஓடி வந்தாள் அந்த தாவணி போட்ட பெண்.
“என்ன ட்டி கையில் புத்தகம்? பள்ளிக்கூடத்துக்குப் படிக்க அனுப்பினா படிக்க மாட்டேனுட்டே! ஆனா எந்நேரமும் கையில் கதை புத்தகம்! கழுதை! உன்னை…எடுறீ அந்த விளக்கமாத்த!”
பாட்டி இருந்த மனக்குழப்பத்தில் பார்த்தவர்கள் அனைவரையும் குதறிக் கொண்டிருந்தார்.
“ஆத்தா இது சமையல் புத்தகம் தான் ஆத்தா” பயந்து கொண்டே நிலாவின் பின்னோடு போய் ஒளிந்து கொண்டாள் அந்த சின்ன பெண்.
“என்ன கன்றாவியோ! எதையாவது படிச்சிட்டு தூங்கி போனையோ, தொலைச்சிடுவேன் உன்னை. ஒழுங்கா நிலா கூடவே இரு! இன்னிக்கு சமையலை உங்கம்மா பார்த்துப்பா”
ஆத்தாவுக்கு தன் மீது நம்பிக்கை இல்லை என்பது அவர் செய்துவிட்டுப் போன ஏற்பாடுகளிலேயே நன்றாகப் புரிந்துவிட்டது நிலானிக்கு. அவள் செய்த காரியத்துக்கு இன்னுமா நம்பிக் கொண்டிருப்பார்கள்! இத்தனை பொறுமையாய் தன்னிடம் இருப்பதே அதிசயம்!
பாட்டி தயார் நிலையில் வைத்து விட்டுப் போன இத்தனை கெடுபிடிகளையும் உடைத்தே தீருவேன் என்பதாய் அவனும் வந்தான்.
கஸ்தூரியிடம் படுக்கப் போவதாகச் சொல்லி விட்டு தன் அறைக்குள் அடைந்திருந்தாள் நிலா. சற்று நேரத்துக்கெல்லாம் சலசலப்பு சத்தத்தில் அவர்கள் வீட்டின் வெளியே எட்டிப் பார்த்தாள்.
பாண்டி அங்கே வந்தவனை வீட்டிற்குள் விடாமல் வழிமறித்துக் கொண்டிருந்தான்!
இவனை என்ன தான் செய்ய!
“பாண்டி அவரை விடு” நிலாவின் சத்தம் கேட்டுத் திரும்பியவன்,
“நிலாம்மா ஆத்தா என்னை வையும்”
“நான் பார்த்துக்குறேன். நீ அவரை விடு என்னன்னு கேட்போம்”
வேக நடையில் அவளருகே வந்தான். வேர்வையில் நனைந்திருந்தான்! கைக்குட்டையைக் கொண்டு அவன் சாவகாசமாய் தன் நெற்றியைத் துடைத்துக் கொள்ள,
“எதுக்கு இங்கே வந்தே நீ. உன்னால பிரச்சனை செய்யாம இருக்க முடியாதா?”
வாசலிலேயே நிற்க வைத்திருந்தாள் அவனை. சுற்றியிருந்தவர்கள் பார்வையெல்லாம் இவர்கள் இருவரின் மேல்!
அவனோ இருக்கும் நிலவரம் அறியாது அவளை ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான்!
‘சைட் அடிக்கிற நேரமா இது! மாக்கான்’
அவன் பார்வையின் வித்தியாசத்தைக் கண்டவள் அவனை மனதில் வறுத்தெடுத்துக் கொண்டிருந்தாள்.
“இந்திரன், எதுக்கு வந்தே இங்கேன்னு கேட்டேன்!”
“புருஷன் பெயரை சொல்றது, நீ வா போன்னு பேசுறது எல்லாம் சரி கிடையாது நிலா. ஆத்தா உன்னை சரியாவே வளர்க்கலை!”
“இதைச் சொல்லத்தான் வந்தியா நீ? என்ன விஷயம்னு சொல்லிட்டு கிளம்பு”
அவள் தொணதொணத்தது எதுவும் அவன் காதில் விழவே இல்லை.
தலைக்குக் குளித்திருந்தாள். தோள் அளவுக்கு இருந்த முடி காற்றில் அசைந்தாடி அவளை மேன்மேலும் அழகாக்கியது. பேச வந்ததை மறந்துபோய் மனைவியைப் பார்த்துக் கொண்டு அப்படியே நின்றான்!
அவனின் செயல் இன்னமும் எரிச்சலைக் கிளப்ப,
“நீ சரி பட்டு வர மாட்டே, பாண்..”
அவள் வாயை தன் கையால் மூடியவன்,
“இதைத் தரத் தான் வந்தேன்” ஒரு பார்சலை அவள் கையில் திணித்தான்.
“நான் இன்னிக்கி சென்னை போறேன். இன்னும் மூணு நாளில் நமக்கு பிளைட், ஒழுங்கா வந்து சேரு!”
“யாரைக் கேட்டு டிக்கெட் வாங்கினே நீ? உன் கூட நான் எங்கையும் வரமாட்டேன்.”
“சரி வராதே. ஆவுடை கூடவே இரு!
நான் கிளம்புறேன்.”
போய்க் கொண்டேயிருந்தவனை,
“இந்திரன் நில்லு. என் பாஸ்போர்டை குடுத்திட்டு போ”
“அச்சோ ரூமில் வச்சியிருக்கேன்! வரியா எடுத்து தரேன்”
அவன் கண்ணடித்துச் சொல்ல, பதிலுக்கு முறைத்துவிட்டுத் திரும்பி வீட்டினுள் சென்றுவிட்டாள்.
“சீக்கிரம் போங்க தம்பி, ஆத்தா வந்திட போகுது”
பாண்டியன் வேறு படபடக்க அவனை ஆராய்ந்தான் இந்திரன். பாண்டியனின் இடுப்பு உசரம் தான் ஆவுடை பாட்டி, ஆனால் இவனானால் அவருக்குப் பயப்படும் நடுங்கியாய் இருக்கிறானே! பாட்டியின் திறமை அப்படி!
நிலாவைப் பார்த்தது வேறு அவனை உற்சாகமாய் மாற்றியிருக்க, விசிலடித்தபடி தான் வந்திருந்த காரில் ஏறிக் கிளம்பிவிட்டான்.
அறையினுள் வந்தவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. எத்தனை எளிதாய் அவன் கூட வரும்படி சொல்லிவிட்டான்! ஜன்னல் வழியே அவன் போவதைப் பார்த்துக் கொண்டு நின்றவளைக் கஸ்தூரி பிடித்துக் கொண்டாள்!
“அக்கா மாமா சூப்பர் கா. என்னா ஒசரம், என்னா நெறம்! இந்த கிழவி சும்மா புலம்பிட்டு கெடக்குது. அதை எல்லாம் மனசில் வச்சுக்காதே! நீ ஒரு தப்பும் செய்யலை! அவர் உன் மாமன் மவன் மட்டுமில்லை, உனக்கு ஏத்த ஆளா தான் கா தெரியுது”
அவள் பாட்டுக்கு இவளை ஏத்தி விட்டுக் கொண்டிருக்க நிலாவின் மனதில் ஒன்றும் ஒட்டவில்லை. போகலாமா வேண்டாமா என்ற யோசனையில் மூழ்கியிருந்தாள்.
அதைக் கலைப்பது போல் ஆத்தாவின் கார் வாசலுக்கு வந்துவிட்டது! அவரை பார்த்த நொடி,
“கஸ்தூரி இதை என் பெட்டிக்குள்ள வைச்சிடு, ஓடு…சிக்கிரம்”
அவன் கொடுத்ததை மறைத்து வைத்து விட்டு சாதாரணமாய் தன்னை காட்டிக் கொண்டாள் நிலா!
ஆத்தா வீட்டிற்குள் வந்ததும் வராததுமாய்,
“உன் கல்யாணத்தை பதிஞ்சாச்சா நிலா?”
திடுதிப்பென்று வந்து விழுந்த கேள்வியால்,
“இல்லை” என்றாள் பொய்யாய்!
பேத்தி கழுத்திலிருந்த தங்க சங்கலியை எடுத்துப் பார்த்தாள் பாட்டி. அவர்கள் குல வழக்குப்படி இருந்தது அதன் நுனியிலிருந்த அந்த பொன் தாலி!
“இதை கட்டிட்டா அவன் பொண்டாட்டி ஆயிடுவியா நீ? சம்பிரதாயம்னு ஒன்னு இல்ல? அடுத்த மொற அவன பார்கேலே இதைக் கழட்டி அவன் மூஞ்சியில் விட்டெறிட்டி”
ஆத்தா சொன்ன விதத்தில் நிலாவின் கை அவளையும் அறியாமல் அந்த தாலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டது.
அவளடைந்த பதட்டம் பாட்டியின் கண்களில் விழத் தவறவில்லை. சற்று நேர அமைதிக்குப் பின்,
“உனக்கும் அவனை பிடிக்குமாட்டி? எதுனாலும் ஆத்தா கிட்ட சொல்லு புள்ள. மனசிலே எல்லாத்தையும் வச்சிகிட்டு கஷ்டப்படாதே!”
தனக்கு இருக்கும் ஒரே உறவு பாட்டி தான். அவளின் இந்த ஆதரவான பேச்சில் மனம் இளகியது!
‘ஆமா ஆத்தா எனக்கு அவனை ரொம்ப ரொம்ப பிடிக்கும்! என் வாழ்க்கையே அவன் தான்’
தோன்றிய வாக்கியங்களை விழுங்கிவிட்டு,
“இல்ல ஆத்தா, இப்ப இல்லை! பொய்யில் என் வாழ்க்கை ஆரம்பிக்கிறதை நான் விரும்பலை. எனக்கு அவன் வேண்டாம்.”
கண்ணீர் வடிய நின்றிருந்தாள். கஸ்தூரி அவள் கையை ஆதரவாய் பற்றியிருக்க, பேத்தியின் கண்ணீரைப் பார்த்து ஆவுடை பாட்டியோ!
“எம் பேத்தி டி நீயி, இதுக்கெல்லாம் அழுவாதே”
“இதைக் காரணமா வச்சி என்னை வேலைக்கு அனுப்பாம விட்டிராதே ஆத்தா! எனக்கு என் வேலை முக்கியம் , நான் அதை ரொம்ப விருப்பப்பட்டு செய்றேன்”
“சரி சரி வேலைக்கு போலாம். ஒரு மாசம் போவட்டும் அனுப்பி வைக்கேன்”
“ஒரு மாசமெல்லாம் லீவ் இல்லை ஆத்தா. இரண்டு வாரம் தான். நான் வரச் சனிக்கிழமை சென்னையிலிருந்து கிளம்பணும். டிக்கெட் போட்டாச்சு.”
“காலில் சுடுதண்ணி ஊத்தின மாதிரி எப்பையும் பறப்பே நீயி…நெல்லையில் எதுவும் வாங்க வேண்டி இருந்தா இன்னிக்கு போயிட்டு வா. சங்கரா வெரசா சாப்பிடுலே. பேத்தியை அழைச்சிட்டு போயிட்டு வா. ஏட்டி கஸ்தூரி உனக்கு என்னவும் வேணுமின்ன போயிட்டு வாட்டி! அக்காக்கும் துணைக்கு ஆச்சு! சங்கரா எம் பேத்தி பத்திரம் லே!”
“சரி ஆத்தா! நான் போய் கிளம்புறேன்”
அறைக்குள் திரும்பப் போனவளிடம்,
“நிலா”
என்ற அழைத்து நிறுத்தினார். பேத்தி அவரை நிமிர்ந்து பார்த்த நொடி,
“அந்த பய பேரு என்னட்டி?”
இந்த கேள்வியெல்லாம் எதிர்கொள்ளும் துணிவில்லை நிலாவுக்கு! தலைகுனிந்தபடி,
“இந்திரன்” என்றாள்.
ஆசையாய் தன் தலை பேரனுக்குத் தான் வைத்த பெயர் மட்டும் இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கிறதே என்று எண்ணிக் கொண்டாள் ஆவுடை பாட்டி!
அத்தியாயம் 3
நெல்லை டவுணில் அந்த புகழ்பெற்ற ஜவுளிக் கடைக்கு வந்திருந்தனர் மூவரும். நிலானி இருந்த மனநிலையில் எதையும் வாங்கும் எண்ணமில்லை. ஆனால் அவள் தோழி நிவேதா பெரிய பட்டியலைத் தந்து அனுப்பியிருந்தாள்! அவையெல்லாம் தேர்ந்தெடுப்பதில் மூழ்கியிருக்க, இந்திரன் அங்கிருந்ததையோ, இவளையே நோட்டம் விட்டதையோ கவனிக்கவில்லை.
கஸ்தூரி இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள், உதட்டில் ஒரு சின்ன சிரிப்புடன். தாலி கட்டிய மனைவியைக் கூட ஒருவன் ஒளிந்திருந்து பார்ப்பதை வாழ்க்கையில் முதல் முறை பார்க்கிறாள்.
சற்று நேரத்தில் தனியே அமர்ந்திருந்த கஸ்தூரியிடம் வந்தான் இந்திரன். கையில் இரண்டு பெரிய பார்சல்களுடன்!
“இந்தா பொண்ணு, நிலா அக்காகிட்ட இதை கொடுத்திடுவியா. இப்ப இல்லை, வீட்டுக்குப் போனதும்”
“இதை நீங்களே அவங்ககிட்ட தரலாமில்ல?”
“எதுக்கு, என் மூஞ்சியில் அவ விட்டெறியவா! சொல்றதை மட்டும் செய் மா”
அவள் வாங்கவும் கிளம்பிவிட்டான்.
நிலா ஊருக்குக் கிளம்பும் முன் பாட்டி கேட்டதற்கு ஏற்ப தான் தயாரித்து வைத்த பொய்கைகளை வரிசைக்கட்டி, அவளும் இந்திரனும் சந்தித்தது முதல் திருமணம் வரைக்கும் சொல்லி விட்டாள்.
வழக்கத்துக்கு மாறாய் எந்த குறுக்கு விசாரணையும் இல்லாமல் தப்பித்திருந்த நிலானிக்கு தெரியாது பாட்டி அதில் பாதியைக் கூட நம்பவில்லை என்பது.
பேருந்து பயணம் எப்போதும் பிடிக்கும் நிலானிக்கு. இப்பொது வெறுப்பாய் இருந்தது. எத்தனை ஆசையாய் தன் வெளிநாட்டு வாழ்க்கையை விரும்பியிருக்கிறாள். ஆனால் இப்போது அவனும் இருக்கும் இடத்திற்குச் செல்வது, நினைத்துப் பார்க்கவே இயலவில்லை! இனியும் தனக்கு இந்த வாழ்வில் என்னவெல்லாம் விதித்திருக்கிறதோ!
சங்கரன் மட்டுமே புது பேருந்து நிலையம் வரைக்கும் அவளை வழியனுப்ப வந்திருந்தார். இந்த முறை காலம் தாமதித்து பயணச்சீட்டு வாங்கியதன் விளைவால் ‘செமி- ஸ்லீப்பர்’ தான் கிடைத்தது!
“ஆத்தாவை பார்த்து கோங்க மாமா, நான் அடுத்த லீவுக்கு வரப்பார்க்குறேன்”
“சரி நிலாமா, நீ எதையும் நினைச்சு மனசு சங்கடப்படாதே! நடப்பதெல்லாம் நன்மைக்கே!”
ஜன்னல் ஓரத்திலிருந்து அவளைத் தாண்டி சென்ற வயல்வெளிகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஊரே எத்தனை மாறியிருந்தது! பைபாஸின் முகப்பில் எல்லாம் வணிக வளாகங்கள். பின்னால் மட்டும் ஒன்றிரண்டு வயல்கள். இன்னும் சில வருடங்கள் தான் அதுவும்! அதன் பின்னே எல்லாம் கட்டிடங்களால் நிரம்பிவிடும்!
நகரமயமாவது நல்லதா கெட்டதா, இன்னமும் அவளுக்குக் குழப்பமாய் இருந்தது. தன் விஷயத்தை விடுத்து இப்போது மனம் சகலத்தையும் அலச ஆரம்பித்தது.
நெல்லை சந்திப்பில் பேருந்து நின்ற சற்று நேரத்தில் இவள் பக்கம் அசைவை உணர்ந்தவள் யாரென்று திரும்பிப் பார்க்க, அவளைப் பார்த்துப் புன்னகைத்தவன் இந்திரனே!
‘இவன் இன்னமும் போகலையா!’
“இங்கே என்ன பண்றே நீ?”
“என்ன பண்றேன்?”
சுற்றி முற்றிப் பார்ப்பது போல் அவன் நடித்த நடிப்புக்கெல்லாம் நிலானி என்ன தான் சொல்வாள். எரிச்சலாகி தன் முகத்தை ஜன்னல் பக்கம் திருப்பிக் கொண்டாள்!
எப்படி அவனும் இதே பஸ்ஸில்! ஃபிராடு, இவனுக்குத் தன்னை பற்றி எல்லா விஷயமும் தெரியும், இல்லையானால் தன்னை தேடி வந்து…நினைப்பே கசந்தது!
என்ன யோசித்து என்ன! அவர்களின் பயணம் ஒன்றாய் நெல்லையிலிருந்து தொடங்கியது!
சென்னையில் அவள் கிரோம்பேட்டையில் இறங்க முற்பட அவள் கையை பற்றி அமர வைத்தான்.
“என் ஃபிரண்டு வீடு இங்கே தான் இருக்கு, வம்பு செய்யாம வழியை விடு இந்திரன்!”
“போன் வாங்கித் தந்தும் பேச மாட்றே! இங்கேயும் உன்னை விட்டிட்டு நான் எங்கே போய் தேடுவேன்! ஒழுங்கா என் கூடவே வா!”
“எங்கே!”
“என் பிளாட்டுக்கு!”
“முடியாது! நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்குறேன்!”
அவள் இறங்கிய கிண்டியில் அவனும் இறங்கினான்.
“நிலா ரோட்டில் வச்சு பிரச்சனை செய்யாதே ஒழுங்கா என் கூட வா!”
“இந்திரன் நீ செய்றது எதுவும் சரியில்லை. என்னை ஏமாத்தி கல்யாணம் செய்திருக்கே! அதை வசதியா மறந்திட்டு இப்ப கூட வான்னு சொன்னா எப்படி? என்னை விடு நான் என் வழியை பார்த்துக்குறேன்!”
“இந்த குற்றச்சாட்டுக்கெல்லாம் நான் பக்கம் பக்கமா விளக்கம் செல்லணும்! அப்படிச் சொன்னாலும் நீ ஒத்துக்க போறதில்லை! என் பொண்டாட்டியைத் தனியே விடவும் என்னால் முடியாது. அமைதியா வா நிலா!”
ஒரு ஆட்டோவை நிறுத்தி அவள் பெட்டியைத் தூக்கிக் கொண்டு போக பின்னாடியே வந்தாள்!
“உங்க அம்மா ப்பா அங்க இருக்க மாட்டாங்களா?”
பதிலில்லை!
“ப்ளீஸ் என்னால அங்கெல்லாம் வர முடியாது, என்னை விடு இந்திரன்”
“சும்மா வா நிலானி. இப்போ நான் தனியா தான் இருக்கேன்! அங்க நம்மை கேள்வி கேட்க யாரும் கிடையாது!”
வீட்டு வாசலில் வைத்தே கேள்வி கேட்டாள் பக்கத்து வீட்டுப் பெண்மணி! அவர் பொறுப்பில் தான் வீட்டை விட்டிருந்தான். அவனுக்குத் திருமணம் ஆகிவிட்டதைப் பற்றி விசாரித்தவளிடம்,
“என்னைக் கூட அழைக்கலையே நீ”
“என்ன செய்றது நீங்க எங்க அம்மாவுக்கு ஃபிரண்டா போயிட்டீங்களே!”
“இப்படி ஏதாவது சொல்லி சமாளிச்சிடு”
“சரி நான் வரேன் அத்தை! ஆபிஸ் போற வேலையிருக்கு! நைட் கிளம்புறப்போ உங்க போஸ்ட் பாக்சில் சாவியை வச்சிடுறேன்!”
“சரி இந்திரா! அம்மா வந்திருந்தா! இந்த விஷயம் அவங்களுக்கு…?!”
“தெரியாது! நீங்களும் நான் கிளம்பின பிறகு சொன்னா போதும்!”
விடைபெற்றுக் கொண்டான்.
நிலாவை இன்னும் சமாதானம் செய்யவில்லை, அடுத்து தன் பெற்றவர்களை! ஒன்றும் தோன்றாமல் வீட்டினுள் வர, நிலா குளித்து முடித்து வந்தாள். நைட்டியில் இருந்தாள். முடியை கொண்டையிட்டும் அந்த பாதி சுருட்டை முடி அவளைப் போலவே அடங்காமல் ஆங்காங்கே சுருண்டு வந்திருந்தது.
அவள் காதோரம் இருந்த முடிக்கற்றை ஒதுக்கி விட அவன் கை பரபரத்தது. இன்று அப்படிச் செய்தால் அவளிடமிருந்து ஒரு அடி நிச்சயம்! பார்த்திடுவோமே என்பதாய் அவளை நெருங்கியவன்,
“ஷப்பா என்ன வாசம், நானும் இதே சோப் தான் போடுறேன், ஏன் எனக்கு மட்டும் இப்படி வர மாட்டேங்குது!” அவள் கையை பற்றியவன் அசால்டாய் அதை தன் உதடுகளில் ஒத்திக் கொண்டான்.
மைக்ரோ விநாடிகளில் நடந்து விட்ட தாக்குதலில் நிலானியால் தப்பிக்க முடியவில்லை. ஆனாலும் ஒன்றுமே நடக்காததைப் போல்,
“இந்திரன் என்னோட பேப்பர்ஸ் எல்லாம் தா, நான் கிளம்புறேன்!”
கொடுத்துவிடும் எண்ணம் தான் அவனுக்கு இல்லையே! இதோ, அதோ என்று இரவு கிளம்பும் வரைக்குமே அவளுக்கு டிமிக்கி தந்துவிட்டான். விமான நிலையத்தில் ‘இமிகிரேஷன்’ அதிகாரி அவளுடையதை நேரிடையாய் அவள் கையில் தந்த பின்னரே அவற்றை அவளால் பெற முடிந்தது.
விமானத்தில் பக்கத்துப் பக்கத்து சீட் தான் என்றாலும் தூங்கியே நேரத்தைக் கடத்தினாள். ஒரு வழியாய் டோக்கியோ ஹனேடா விமான நிலையம் வந்து சேர, வேகமாய் தன் பணிகளை முடித்து வெளிவந்தவள், கிடைத்த முதல் பேருந்தில் வந்து சேர்ந்து விட்டாள் தன் இருப்பிடத்துக்கு!
அழைப்பு மணி அடித்துக் காத்திருந்தவளுக்கு ஆச்சரியம் அளிப்பது போல் கதவைத் திறந்து விட்டது நிவேதாவின் கணவர்!
“வாங்க நிலானி, நிவி அவங்க வந்தாச்சு பாரு!”
மனைவியிடம் குரல் கொடுத்த படி, உள்ளே விரைந்தார் அவர். நிலாவுக்குத் தர்ம சங்கடம்! இவர் வந்ததை பற்றி தோழி அவளிடம் சொல்லியிருக்கவில்லை.
சிரித்த முகமாய் வந்த நிவியும்,
“வாடி நிலா, உள்ள வா. அவர் எங்கே?”
“எவர்”
“ஏய், என்ன கேள்வி கேட்குறே. இந்திரன் எங்கே? போன் செய்தப்போ வந்திட்டு இருக்கோம்னு சொன்னாரே!”
கேட்டு முடிக்கவும்,
“ஹலோ நிவேதா!”
நிலாவின் பின்னோடு வந்தேவிட்டான்!
“சமையல் வாசனை தூக்குதே! அதான் இப்படி ஓடி வந்தியா நிலா”
அவன் சாதாரணமாய் தங்களைக் காட்டிக் கொண்டது கூட நிலாவுக்கு எரிச்சலைக் கிளப்பியது. இங்கேயே தங்கலாம் என்று வந்தால் நிவேதா கணவர் வேறு இருக்கிறார். இந்த ராத்திரியில் தங்குமிடம் தேடி எங்கே தான் போவது!
இவள் குழப்பத்தைத் தீர்த்து வைக்கும் நிலையில் யாருமில்லை. நிவியின் கணவரும் இந்திரனும் ‘சோறு கண்ட இடமே சொர்க்கம்’ என்பது போல் சாப்பிடுவதிலும் அரட்டையிலும் மூழ்க, நிலாவும் தோழியின் முகத்திற்காகக் கொஞ்சம் சாப்பிட்டு வைத்தாள்!
“கிளம்பலாம் நிலா, அவங்களுக்கும் லேட் ஆகுது பார். நாளைக்கு ‘டிரிப்’ போறாங்களாம்”
நிவேதாவுக்கு உதவியாக கிட்சனை ஒதுக்கிக் கொண்டிருந்தவள், இவன் சொன்னதைக் கேட்டு சற்று அதிர்ச்சியடைந்தது உண்மை! அவன் இடத்திற்கா! வேண்டாம் போகாதே மனசு அலற ஆரம்பித்தது!
“என்ன கல்யாணத்துக்குப் பிறகு ரொம்ப அமைதி ஆகிட்டா! மிரட்டி வச்சியிருக்கீங்களா இந்திரன்”
நிவேதாவின் கேள்விக்குச் சிரித்து மழுப்பினாள் நிலா! திருமணம் என்று முடிவானதும், ஊருக்குச் செல்லும் முன் தன் சாமான்களை அவன் வீட்டுக்கு மாற்றியதை இப்போது நினைத்து நொந்துபோயிருந்தாள்!
“மிரட்டினா பயந்துக்குற ஆளா? உங்களுக்குத் தெரியாதா நிவேதா!”
இது ஒரு ஜோக் என்பது போல் அனைவரும் சிரித்து வைத்தனர்! நிலாவோ தன் தலையை முட்டிக் கொள்ள சுவரைத் தேடினாள்! சிரிப்பினூடே அவளுடன் தன் கைகளைக் கோர்த்திருந்தவன் அப்படியே தன் இல்லம் வரைக்கும் அழைத்து வந்துவிட்டான். வீட்டினுள் வந்த பிறகே பற்றிய கையை விட்டிருந்தான்!
நிலாவின் இந்த ஒதுக்கம் அவனையும் வேதனைப் படுத்தியது! எப்படியாவது தங்கள் உறவைப் பழைய மாதிரி ஆக்கிவிட வேண்டும் என்ற துடிப்பிருந்தாலும், அதற்கான வழி எதுவும் புலப்படவில்லை!
“நிலானி இது தான் நம்ம வீடு. உன் கழுத்தில் நான் கட்டிய அந்த தாலி இருக்கிற வரை நீ இங்கே தான் இருக்கணும்! உன் விருப்பத்துக்கு மாறா நான் என்னைக்கும் நடந்துக்க மாட்டேன், என்னை நம்பு டி!”
கழுத்தில் கிடந்த மாலையை அவனிடம் காட்டியவள்,
“இதுவே என் விருப்பத்துக்கு மாறா நடந்தது தான்”
அவளை நெருங்கினான்! அவன் சுவாசக் காற்று அவள் மேல் படும் தூரத்தில்!
“எங்கே என் கண்ணைப் பார்த்து சொல்லு, நம்ம கல்யாணம் உன் விருப்பமில்லாம தான் நடந்ததா?”
இல்லைதான், ஆனால்…
“தள்ளி நில்லு இந்திரன்…!”
அவன் மேல் கைவைத்துத் தள்ளிவிட்டிருந்தாள்! அவள் சிணுங்கலை அவனும் ரசித்தபடி,
“இப்ப தூங்க போ, குட் நைட்”
அவளின் முன்னெற்றியில் முத்தமிட்டவன் அங்கிருந்து போய்விட்டான்!
அத்தியாயம் 4
நிலானி இரண்டு வாரங்களுக்குப் பிறகு அன்று தான் அலுவலகம் வந்திருக்கிறாள். டோக்கியோ நகரின் ‘ஹட்சுதாயில்’ அமைந்திருந்தது அந்த இருபது மாடிக் கட்டிடம்.
அவள் இருந்தது பதினாறாவது மாடி. பெரிய கண்ணாடி ஜன்னல்களுக்கு வழியே ஆங்காங்கே பட்டுத் தெரித்த சூரியனின் கதிர்களைப் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தாள். உணவு இடைவெளியில் ஏனோ அன்று வெளியே சாப்பிடப் போகும் எண்ணமில்லை.
காலையில் அவனுக்கு முன்பே தயாராகி விட்டவளிடம்,
“கிரானோலா, பிரட் இரண்டும் இருக்கு நிலா, சாப்பிட்டு போ”
அப்போது தான் கண் விழித்திருந்தான். கையில்லாத டி ஷர்ட்டும் முக்கால் பேன்டுமாய் அவள் முன் நின்றிருந்தான்.
‘இல்லை தாமதமாகிவிட்டது’ என்று மறுத்துவிட்டாள். அவனைப் பார்த்தாலே ஏனோ கோபமாய் வந்தது.
இப்போது தன் ஆபிஸ் இருக்கையில் அமர்ந்து ஏதேதோ யோசனையில் மூழ்கியிருந்தவள், தான் வாங்கி வைத்திருந்த பன் வகையறாக்களை சாப்பிட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டிருந்தாள். அவள் சிந்தனையைக் கலைத்தது அவள் கைப்பேசியின் ஒலி, பாட்டி தான்!
“ஊர் போய் சேர்ந்தியே அதை போன் போட்டுச் சொன்னா என்னட்டி?”
“சாரி ஆத்தா! சுத்தமா மறந்துட்டேன்! பத்திரமா வந்துட்டேன், ஒண்ணும் பிரச்சனையில்லை”
“அந்த பயலை அங்கன, சென்னைல திரும்பவும் பார்த்தியா? மறுபடி அவய்ன் வந்தா சேர்த்திடாதே”
சற்று தாமதித்து, சரி என்றாள்.
“நிலா உனக்கு அவனை பிடிச்சிருக்கா? நான் வேணா அவய்ன் அப்பன்ட்ட உனக்காகப் பேசட்டுமா ட்டி?”
நிலையாய் ஒரே பிடியில் நில்லாமல் வழக்கத்துக்கு மாறாய் மாற்றிப் பேசிக் கொண்டிருந்தார் பாட்டி. தனக்காகப் பார்க்கிறாளோ!
“அதெல்லாம் வேணாம் ஆத்தா! நீ சும்மா இரு! நானே மறந்த விஷயத்தைக் கிளறாதே!”
“என்னவோட்டி கிளம்பையில உன் மொகமே சரியில்லை! அதான் கேட்கேன். சரி அடிக்கடி எனக்கு போன் போடு! தனியா இருக்கேன்ல!! இந்த ஆத்தாக்கும் உன்னை விட்டா ஆரு இருக்கா?”
“சரி ஆத்தா! உடம்பை பார்த்துக்கோ, வச்சிடுறேன்”
அவர் வைத்தவுடன் நிவேதா அழைத்தாள்!
“நிலா நான் இங்கே ஓசாகா வந்திருக்கேன். எனக்கு நீ ஒரு விஷயம் செய்யணும்!”
“என்ன நிவி சொல்லு!”
“நான் ஒரு கதை எழுத ஆரம்பிச்சேன் உனக்கு ஞாபகமிருக்கா?”
‘நீதான் தினமும் ஒரு கதையை ஓட்டிகிட்டு இருந்தியே தாயே!’
“தெளிவா சொல்லு நிவி! எனக்கு எதுவும் ஞாபகமில்லை!”
“எதுவும் சட்டுன்னு புரிஞ்சிக்க மாட்டே நீயி!
ஆபிஸ் முடிஞ்சு போகும் போது எங்க வீட்டு போஸ்ட் பாக்ஸில் ஒரு நோட் இருக்கும், அதை எடுத்துக்கோ. அதில் எழுதியிருக்கிறதை சீக்கிரமா படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லு!”
“ம்ம்” மறுபடியுமா?
“புதுசா கல்யாணமாகியிருக்கு! ஐ நோ, யூ ஆர் பிஸி பட், எனக்கு நீதான் படிச்சு சொல்லணும் நிலானி!”
“சரி நிவி. நோட் எடுத்ததும் மெஸேஜ் செய்றேன். நீ அங்க நல்லா என்ஜாய் பண்ணிட்டு வா!”
பாட்டியிடம் பேசியபோது இருந்த மனநிலை தற்போதில்லை! தோழி அடிக்கும் கூத்தை நினைத்து மனதில் சிரித்துக் கொண்டாள். தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை. கணவனை ஊரில் தனியே விட்டு இங்கு ஒரு வருட ஆன்சைட் வேலைக்காக வந்திருக்கிறாள். பொழுது போகாமல் ஆரம்பித்த இந்த கதை எழுதும் பழக்கத்தை இப்போது வெகு சிரத்தையாய் செய்கிறாள். அவள் சிரமப்படுவதோடு நில்லாமல் கூட உள்ளவளையும் ஒரு வழி செய்து கொண்டிருந்தாள். நிவியைப் பற்றிய யோசனைகளின் ஊடே அலுவலக வேலைகள் அவளை இழுத்துக் கொண்டது.
மாலை வரவும் அதற்குள் வேலை நேரம் முடிந்து விட்டதா என்றிருந்தது நிலானிக்கு. அவன் இருக்கும் வீட்டிற்குத் திரும்பும் எண்ணம் சிறிதும் இல்லை. வேண்டுமென்றே ஊர் உலகம் எல்லாம் சுற்றிச் செல்லும் மெட்ரோ லைனில் ஏறியவள், இரவு எட்டு மணி வாக்கில் தான் இருக்கும் தெருவுக்குள் நுழைந்தாள்.
‘எடுத்திட்டியா?’
சரியாய் நிவியின் குறுந்தகவல் வரவும் தான் அந்த புத்தகத்தைப் பற்றிய நினைப்பே வந்தது! அவளின் பழைய இருப்பிடம் போகும் சாக்கில் இன்னமும் கொஞ்சம் நேரத்தைக் கடத்தினாள். எங்கையும் கொஞ்சம் உட்காரேன் என்று கெஞ்சிய தன் கால்களைக் கஷ்டப்பட்டு இழுத்துக் கொண்டு வீட்டினுள் நுழைய, சமையற்கட்டில் எதையோ கிண்டிக் கொண்டிருந்தான் இந்திரன்.
தனக்கென இருந்த அறைக்குள் நுழையப்போக,
“வந்துட்டியா நிலா, சாப்பிட வாயேன்” முகத்தில் ஒரு புன்னகையுடன் அவளை வரவேற்றான்.
“எனக்கு பசிக்கலை”
சட்டென்று மாறிவிட்ட அவன் முகத்தைப் பார்த்துக் கொண்டு அங்கே நிற்கவில்லை அவள். தன் பார்மல்ஸ் உடையிலிருந்து பஜாமாவுக்கு மாறி, படுக்க ஆயுத்தமானாள்.
அங்கு ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் கோடைக்காலம். வெப்பநிலை நம்மூர் அளவுக்கு அதிகம் இல்லையென்றாலும் ஏனோ ஏசி இல்லாத அந்த அறையில் மூச்சு முட்டிப் போனாள். கதவைத் தட்டி விட்டு உள் வந்தான் அவன்.
“நிலா நீ அங்க வந்து படுத்துக்கோ! இந்த ரூமில் ஜன்னலும் இல்லை, ஏசியும் இனிதான் வைக்கணும்!”
“இட்ஸ் ஓகே. எனக்குப் பிரச்சனை எதுவும் இல்லை”
“தெரியும் நீ இப்படி தான் சொல்வேன்னு! அஞ்சு நிமிஷத்தில் அங்கே வரே அவ்வளவுதான்.”
போய்விட்டான்.
‘இவன் என்ன தான் நினைச்சிட்டு இருக்கான். எல்லாத்துக்கும் மிரட்டுறான்!’
அவன் அதிகாரம் பிடிக்காமல் நகராது இருந்தவள் மறுபடி தன் அறைவாசலில் அவன் காலடி சத்தம் கேட்கவும், பஞ்சாயத்து வேண்டாம் என்ற எண்ணத்தில் எழுந்துவிட்டாள். அவன் அறைக்குப் போக, இரண்டு மெத்தைகளைப் பக்கம் பக்கமாய் விரித்து வைத்திருந்தான். இவள் அதையும் அவனையும் மாறி மாறி பார்த்துவிட்டு தன்னுடையதை தள்ளிப் போட்டுக் கொண்டாள்.
அந்த அறையின் மின்விளக்கை எரிய விட்டவள்,
“எனக்குக் கொஞ்சம் படிக்கிற வேலை இருக்கு! லைட் இருக்கட்டும்”
அவன் புறம் முதுகு காட்டி படுத்துக் கொண்டாள்.
‘ஹம், நம்ம கொடுப்பினை அவ்வளவுதான்’
மனைவியின் செயலில் சோகமானவன், இன்னொரு தலையணையை நிலாவாய் எண்ணிக் கட்டிக் கொண்டு கண் மூடினான்.
நிவி தன் அழகிய கையெழுத்தால், பக்கம் பக்கமாய் எழுதியிருந்த அந்த புத்தகத்தைப் படிக்க ஆரம்பித்தாள் நிலா.
சூரியன் முதலில் உதிக்கும் இடமான ஜப்பான் நாட்டில் இருந்தாள் நம் கதையின் நாயகி. அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகளில்லை. பிரம்மனே தன் படைப்பில் பெருமை கொள்ள வைக்கும் அழகு! மான் விழிகள், சுண்டிவிட்டால் இரத்தம் வரும் நிறம். இடையைத் தாண்டி நீண்டிருக்கும் கூந்தல். தேவலோகத்து இராஜகுமாரிகள் அவள் அழகுக்கு முன் தோற்றுப் போகக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம்.
நம் கதையின் நாயகி நிலானி இருந்தது டோக்கியோ மாநகரில். அவள் இங்கு வந்து இரண்டு வருடங்கள் கடந்திருந்தது. தனக்குப் பெற்றவர்கள் இல்லையென்றாலும் அந்த தனிமையைத் தெரியாத அளவுக்கு அவள் அம்மா வழி பாட்டி அவளை வளர்த்திருந்தார்.
இன்னமும் இந்த ஊரில் தனியாய் இருந்தது போதும், சென்னையில் ஏதாவது வேலை தேடிக் கொள்ளலாம் என்ற நிலானியின் நினைப்பை மாற்றவே தோழி ஒருத்தி வந்து சேருகிறாள் அன்று.
காலையிலிருந்தே நிலானியின் மனம் பரபரத்தது. நிவேதா வருகிறாள், அவளை அழைக்க விமான நிலையம் போக வேண்டும். அவசரமாய் தாயாரானவள் தன் வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாள்.
நரிட்டா விமான நிலையத்துக்கு இவள் வந்து சேரவும் பிளைட் தரையிறங்கவும் சரியாக இருந்தது. சற்று நேரத்தில் போன், அவள் தான்!
“நிவி வந்துட்டியா? நான் வெளியே தான் நிக்கிறேன். டிராவல் ஒண்ணும் பிரச்சனை இல்லையே? ஓகே வா”
சற்று நேரத்தில் ஒரு ஆணுடன் வெளியே வந்தாள். உயரமாய் இருந்தவனுடன் கடலையை வருத்துக் கொண்டு நடந்தவள், இவளைக் கவனிக்கவில்லை! கூட வந்தவனின் முகம் பார்க்கப் பரிட்சியமாய் இருந்தது. நிவி அவனுடன் வாய் மூடாமல் பேசிக்கொண்டே வந்தாள்.
‘இன்னும் நீ மாறவே இல்லை நிவி’
நினைத்தபடி அவளைப் பார்த்துக் கொண்டு நின்ற நிலாவை நோக்கி கை ஆட்டினாள் நிவேதா.
“இதுதான் என் பிரண்டு நிலானி. இவர் இந்திரன், நிலா”
பரஸ்பரம் அறிமுகப்படுத்தினாள் நிவேதா!
எதிரிலிருந்தவனை எடை போட ஆரம்பித்தாள் நிலா. பாட்டி மூலம் தனக்கு ஒட்டிக் கொண்டுவிட்டது! யார் எவரென்றாலும் அவர்களின் பேச்சில், செய்கையில் அவர்கள் எப்படிப் பட்டவர்களாய் இருப்பார்கள் என்று எடைபோடுவது நிலாவின் பழக்கம்!
இன்றும் அதே தான் நடந்தது. அவனை,அந்த இந்திரனை அழைக்க வரும் நண்பன் இன்னும் வரவில்லை என்பதால் இவளின் அலைப்பேசியில் நண்பனை அழைத்துக் கொண்டிருந்தான். இவள் அவனை ஆராய்வதைப் பார்க்க,
நிவேதாவும் அவர்கள் பக்கமில்லை.
சட்டென்று திரும்பியவன் இவள் பார்வையைச் சந்தித்துவிட்டான். அந்த சூழ்நிலையைச் சமாளிப்பதற்காக,
“நீங்க எந்த ஊர்!”
“நம்ம சென்னை தான் நிலா, கிண்டியில் தான் இருக்காராம்! ரொம்ப நெருங்கிட்டீங்க நீங்க இரண்டு பேரும்!”
அவனை நிலா கேட்க, இவர்கள் அருகில் வந்த நிவி பதில் சொன்னாள்!
“ஏன் அப்படி சொல்றீங்க நிவேதா!”
“நிலாவும் அங்கே தான் முன்னே வேலை பார்த்தா!”
இவளை விட்டா என் ஜாதகத்தில் உள்ள கட்டத்தைக் கூட அவனிடம் சொல்லிடுவா, எண்ணிய நிலானி,
“கிளம்பலாமா நிவி. இந்த டைமுக்கு ஒரு பஸ் இருக்கு!”
அவனிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற்றுக் கொண்டு போனவளைப் பார்த்துக் கொண்டே நின்றான் இந்திரன்!
அத்தியாயம் முடிவு பெற்றிருந்தது.
புத்தகத்தை மூடி வைத்தாள் நிலா.
நிவேதாவுக்கு எப்படித் தெரியுமாம் அவன் அவளைப் பார்த்துக் கொண்டு நின்றது? கற்பனையாய் அவள் எழுதியிருந்தாலும் அது உண்மை தான். அவன் பார்வையை உணர்ந்து அவள் திரும்பிப் பார்த்த பிறகும் அவன் அலட்டிக் கொள்ளவில்லை.
அவனும் அவன் முழியும்! மனதில் எண்ணியபடி அவ்விடத்தை விட்டு அகன்றிருந்தாள். இப்போது யோசித்துப் பார்த்தாலும் அந்த முதல் பார்வை நினைவில் வந்தது!
பழைய விஷயங்கள் மூளையை ஆக்கிரமிக்க, அவளின் உறக்கம் போன இடம் தெரியவில்லை. வயிற்றுப் பசியும் சேர்ந்து கொண்டு சுத்தமாய் தூங்க முடியவில்லை. எழுந்து கிட்சனுக்குள் வந்தாள்.
அவன் செய்து வைத்ததைத் திறந்து பார்த்தது மட்டும் தான் நினைவிருக்கிறது. அவள் பாட்டுக்கு அதனை சூடுபடுத்தி தட்டில் போட்டு உண்ண ஆரம்பித்திருந்தாள். என்ன அசட்டுத்தனம் இது என்று தோன்றியதெல்லாம் வெகு நேரத்திற்குப் பிறகு தான்!
அதிகாலையில் அவள் புலம்பலைக் கேட்டு கண் முழித்தான். வெகு நேரமாய் அவன் பெயரை ஏலம் விட்டுக் கொண்டிருந்தாள். தூங்கிக்கொண்டிருந்தவளின் அருகில் வந்தவன், விடியலில் கூட அழகாய் தெரிந்த தன் நிலாவைச் சற்று நேரம் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தான்.
“இந்திரன் ஏன் டா! எதுக்கு இப்படிச் செய்தே!”
அவள் சொன்னதையே இன்னமும் தொடர…
‘யம்மா தாயே…ரிப்பீட் மோடில் இப்படியே சொல்லிகிட்டிருந்தேன்னு வையி, எனக்கே தப்பு செய்த ஃபீலிங் வந்திடும்!’
“நிலானி…நிலா”
அவள் தோள் தட்டி எழுப்பிவிட்டான்.
அவனை இத்தனை கிட்டப் பார்த்து பேந்த பேந்த முழித்தவளை,
“தூக்கத்தில் புலம்பினது எல்லாம் போதும் எந்திரி, ஆபிஸ் நேரமாகுது பார்!”
“எதுக்கு இப்படி என்னை உரசிட்டிருக்கே! தள்ளிப்போ!”
அவள் சொன்னதும் உடனே கேட்பவனா அவன்!
அத்தியாயம் 5
நிலானி முன்தினம் தான் செய்துவிட்ட அதிகப்படிக்கு இன்று அவனுக்கும் சேர்த்து எதையாவது செய்து வைத்துப் பட்ட கடனை அடைத்து விடலாம் என்ற எண்ணத்தில் விரைவாக வீடு திரும்பியிருந்தாள்.
மடிக்கணினியில் தன் அபிமான பாடல்களை ஒலிக்க விட்டவள் தன் நளபாகத்தை ஆரம்பிக்க அந்த வீடே கமகம வாசனையில் மூழ்கியது. அவன் வந்தது கூட அறியாமல் அந்த பாடல்களில் லயித்திருந்தவள் தன் வேலைகளை முடித்துவிட்டு நிமிர இவளையே பார்த்துக் கொண்டிருந்தான் இந்திரன். ஒரு முக்கால் பேண்டும் அதற்கு ஏற்றார் போல் ஒரு மெரூன் டிஷர்ட் அணிந்திருந்தாள். முகத்தில் வேலை பார்த்த களைப்பு அளவுக்கு மீறித் தெரிந்தது.
“என்ன இன்னிக்கு சமையல் எல்லாம் பலமா இருக்கு? புருஷனை மன்னிச்சு ஏத்துகிட்டியா என்ன?”
பதில் பேசவில்லை அவள்.
இவர்கள் இருக்கும் நிலைமை புரியாமல்,
‘வாராயோ வெண்ணிலாவே, கேளாயோ எந்தன் கதையே’ பாடல் வேறு ஆரம்பித்திருந்தது.
“சூடு ஆறிப்போகிறதுக்குள்ள சாப்பிடு!” கடமைக்குச் சொன்னவள் உணவு மேஜையில் போய் அமர்ந்து கொண்டாள்.
அவன் எடுத்துக் கொள்ளவில்லை. அதைக் கண்டும் காணாததைப் போல் நிவேதாவின் புத்தகத்தில் மூழ்க ஆரம்பித்தாள்.
அத்தியாயம் இரண்டு:
நிலாவின் வாழ்க்கையில் நிவி வந்ததும் தனிமை போய் சந்தோஷமும், சண்டையும் குடி கொண்டது.
“நிவி வீடெல்லாம் ஏன்டி இப்படி கெடக்கு! இன்னிக்கி உன் டர்ன் தானே! சுத்தம் பண்ணா தான் என்ன? நீ வரும்போதே என் கண்டிஷன் எல்லாம் சொன்னேனா இல்லையா? அப்போ சரின்னு சொல்லிட்டு, எப்போ பாரு எதையாவது கிறுக்கிட்டிரு!”
“என்னோட வேலையா இன்னிக்கி! சுத்தமா மறந்துட்டேன் தங்கம். இதோ இப்போ செய்திடுறேன் டி, என் மூன் கேர்ள்”
“சீக்கிரம்…இன்னிக்கி சகுரா பார்க்க போறோம். அடுத்த வாரம் முழுசுக்கும் காத்து மழைன்னு வானிலை அறிக்கையில் போட்டிருக்கு! இந்த ஊர் காரனுங்க சொன்னா சரியா தான் இருக்கும், சோ இன்னிக்கு போயே ஆகணும் இல்ல பூவெல்லாம் உதிர்ந்து போயிடும்!”
“சரி மா தாயே…போலாம் போலாம்”
அடுத்த இரண்டு மணி நேரத்தில் தோழிகள் இருவரும் கிளம்பி சகுரா மலர்களைப் பார்க்க ‘யோயோகி’ பூங்கா வரை சென்றனர்! இப்படி ஒரு அழகான பூவை ஆண்டவன் படைத்திருக்கிறானே! இளஞ் சிவப்பிலும் வெள்ளை நிறத்திலும் அவள் இருந்த பூலோகத்தை அழகுபடுத்திக் கொண்டிருந்தது. அதனைத் தாங்கிக் கொண்டிருந்த மரத்துக்கெல்லாம் உயிர் இருந்திருக்கிறது. இத்தனை நாளும் பார்க்கப் பட்டுப் போன மரம் போல் இருந்து ஊரை ஏமாற்றி இருக்கிறது அந்த வாயில்லா ஜீவன். பெயருக்குக் கூட அதில் இலைகள் இல்லை. அதெப்படி பூ நேரடியாய் மரத்தில் வரும்? இதோ வந்திருக்கிறதே!
அந்த மரங்களின் வயதை மனக்கணக்கில் எண்ணிப் பார்த்துக் கொண்டே தன் ஐபோனில் பூவையும் மரத்தையும் விடாமல் பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டாள். எடுத்துவிட்டு அதை எடிட் செய்ய முனைகையில் ஒரு புகைப்படத்தின் பேக்கிரவுண்டில் தெரிந்தான் அவன், அந்த இந்திரன்!
அவனைப் பார்த்துப் பேசிவிடும் சந்தர்ப்பத்தைத் தடுக்க மறுபடியும் அந்த திசை பக்கம் திரும்பவில்லை அவள். நிதானமாய் ஒவ்வொரு இடமாய் நடந்தாள். ஆசை தீரப் பூக்களைப் பார்த்தும், முகர்ந்தும், கீழே விழுந்திருந்தவற்றைக் கொஞ்சம் சேகரித்தும் நிவேதா அமர்ந்திருந்த இடத்துக்கு வர,
இந்திரன் ஆண்ட் கோவுடன் ‘கடலையை வருத்துக்’ கொண்டிருந்தாள் அவள்.
அவனுடன் இரு நண்பர்கள் வந்திருந்தனர். ஏதோ நீண்ட நாள் பழகியவன் போல் நிலானியை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தான். சற்று நேரம் அவரவரின் வேலையைப் பற்றிய உரையாடல் தொடர்ந்தது. நிலாவுக்கு இந்த பேச்சில் விருப்பமில்லை என்பது அவள் முகத்திலேயே எழுதி ஒட்டியிருந்தது.
அவர்கள் சென்றதும்,
“ஒரு தடவை தான் பார்த்திருக்க. அப்படி அந்த ஆளு கிட்ட என்ன நிவி பேச்சு! இன்னும் காலேஜ் பொண்ணுனு நினைப்பா உனக்கு!”
“சும்மா பேசுறதில் என்ன இருக்கு? ஏன் இப்படி டென்ஷனாகுறே!”
“நான் உன்னை மாதிரி சிட்டியில் வளரலை, எனக்கு நீ செய்றது பிடிக்கலை நிவி!”
“உன் கிட்ட கேட்காம அவரை வீட்டுக்குக் கூப்பிட்டது தப்பு தான், ஆனா ப்ளீஸ் இந்த ஒரு முறை என்னை எப்படியாவது காப்பாத்தி விடு நிலா!”
ஆம் இந்த அவசரக் குடுக்கை இந்திரனை வீட்டுக்கு அழைத்து வைத்திருந்தாள்.
தங்கள் ஊரில் அப்போது ஆங்கில வழி பள்ளி இல்லை என்பதால் பாட்டி நிலாவை நெல்லையில் விடுதியில் சேர்த்திருந்தாள். நிவேதா அங்குச் சிறிது காலம் அவளுக்கு நெருங்கிய தோழி. ஆனாலும் இவர்களுக்கிடையில் வேறுபாடுகள் அதிகம்! யாரென்றாலும் சகஜமாய் பேசிவிடும் நிவேதா இன்று வரைக்கும் நிலானியின் ஆச்சரியமே!
அதைவிட ஆச்சரியம் அவள் அழைத்தமைக்கு நிஜமாகவே அவள் இல்லத்துக்கு வந்துவிட்டவனைப் பார்த்து.
புத்தகத்தை மூடிவிட்டு என்றோ நடந்த விஷயங்களை யோசித்துக் கொண்டிருந்தாள்.
படித்தபடியே படுக்கவும் வந்திருந்தாள்! விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தவள் பக்கம் திரும்பிப் படுத்தவன்,
“நிலா இன்னும் எத்தனை நாள் இப்படியே இருக்க போறோம்? என் பக்க விஷயத்தைக் கேட்க மாட்டியா நீ!”
பேச விருப்பமில்லை என்பதாய் கண்களை மூடிக்கொண்டாள்.
“எனக்கு நம்ம கல்யாணம் அவசியம்னு பட்டது நிலா”
அவன் பேச்சை இடையிட்டது அலைப்பேசி! அறைக்கு வெளியே போய் அதில் பேச ஆரம்பித்தான். இவன் பக்கமிருந்த உரையாடலை மட்டும் கேட்க முடிந்தது நிலாவால்.
“நீ எதுக்கு மா இப்ப அழறே! இப்ப அழுது எதுவும் பிரயோசனம் இருக்கா? மகனுக்குக் கல்யாணம் ஆனா எந்த அம்மாவாச்சும் அழுவாங்களா?!”
…
“எல்லாம் உனக்கு தெரிஞ்ச பொண்ணு தான்!”
…
“சரி சரி, போட்டோ அனுப்புறேன். இங்க மணி இப்ப பதினொன்னு! நாளைக்கு நான் வேலைக்கு போகணும். நீ இப்ப வை நான் அப்புறம் பேசுறேன்”
…
“உன் கண்ணீர் டேன்கை திரும்ப ஓபன் செய்யாதே, நான் கண்டிப்பா கூப்பிடுறேன் மா.”
எப்படி எடுத்தெறிந்து பேசுகிறான்! அன்னையிடம் பேசும் பேச்சா இது! அவன் வருமுன் கண்ணயர்ந்து விட்டதை போல் நடித்து விட்டாள்.
நிவியின் கணவர் அடுத்த வாரத்தில் இந்தியா திரும்பியிருந்தார். அதன்பின் அடிக்கடி அவளைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி ஒரு நாளில், இந்திரனைப் பற்றிய விஷயத்தை நிவேதாவிடம் சொன்னாள்.
“தில்லாலங்கடி வேலையெல்லாம் செஞ்சியிருக்காரா! ஆக, கடைசியில் உன் மாமா பையன் தானா அவர்”
“எல்லாம் உன்னால தான். வேலியில் போற ஓணானை எடுத்து வீட்டுக்குள்ள விட்டது நீ”
தோழியைச் சாடினாள் நிலானி!
“ஓ மறுபடியும் நானா? மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குது, என்னவோ அவரை பிடிச்சிருக்குன்னு ஏகப்பட்ட காதல் வசனமெல்லாம் பேசினது யாராம்!”
“ச்சே நான் அப்படி எல்லாம் சொன்னதே இல்லை”
“நான் என்ன உன் பார்வையை, உன் பேச்சை ரெக்கார்ட் செஞ்சு வைக்கவா முடியும்! அதுவுமில்லாம வார்த்தையால் சொன்னா தான் எனக்குப் புரியுமா என்ன?”
அவன் அழைத்தான் போனில். பல முறை எடுக்காமல் விட்டதால் அவனும் இப்போது இடைவிடாமல் தொந்தரவு செய்தான் அவளை.
“என்ன இந்திரன் டிரெயினில் போன் பேச கூடாது தெரியுமில்ல! விடாம கூப்பிடுறே!”
“நீ வந்த டிரெயினில் தான் நானும் வந்தேன். எதுக்கு என் கிட்ட கதை சொல்றே நிலா. எப்போ வருவே வீட்டுக்கு! எனக்கு பசிக்குது”
அவள் பேச்சை ஒட்டுக் கேட்டாள் நிவி,
“தள்ளிப்போ நிவி. கொஞ்சம் கூட உனக்கு மேனர்ஸ் இல்லை” அடிக்குரலில் அவளிடம் சீறிவிட்டு,
“எனக்கு தோண்றப்போ வருவேன்!”
அவன் பதிலைக் கேட்காமல் வைத்துவிட்டாள்.
“என்ன டி இரண்டு பேருக்கும் சண்டைன்னு சொன்னே? அவர் போன் செஞ்சி எப்போ வருவேங்குறார்? வாட்ஸ் குக்கிங் யா”
கண்ணடித்தபடி தோழி இவளைச் சீண்ட,
“இப்ப நான் என்ன கொஞ்சிட்டா இருந்தேன்? நீ என்னை எப்பவுமே நம்பிடாதே! உன் கிட்டப் போய் சொன்னேன் பாரு! நான் போறேன்”
எழப் போனவளை கைபற்றி தடுத்தாள்.
“ஏய் நில்லு நிலா முக்கியமான விஷயம். அந்த கதையை படிச்சியா? எப்படி இருக்கு!”
“என் கதையைச் சுட்டு என்னையே படிக்க சொல்றியா நிவி!”
“ஹி ஹி. கதைக்குப் பஞ்சம்…அதான்!”
“போட்டேன்ன தெரியும்! வர்ணனையா டி அது? அதில் ஏதாவது ஒரு உண்மையான விஷயமிருக்கா. எங்கே என் கையை சுண்டி பாரு இரத்தம் வருதான்னு பார்ப்போம். அவ்ளோ நீளமா யாருடி முடி வச்சியிருக்கா இந்த காலத்தில்? முடியலை உன்னோட! முதலில் என் பெயரை உன் கதாநாயகிக்கு வைக்காதேயேன்!”
தன் தோழியை வசைபாட ஆரம்பித்தாள்.
“இப்படி தான் ஒரு கதையை ஆரம்பிக்கணும் நிலா. தட் இஸ் ரூல் நம்பர் ஒன். எல்லா கதைக்கும் இப்படி ஒரு முன்னோட்டம் இருக்கும். உனக்குத் தெரியாதா, நீயே இதுவரை ஒரு ஐநூறு கதை படிச்சிருக்க மாட்டே?”
“ஆமா இவ அப்படியே எழுத்துலகில் உள்ள சட்ட திட்டங்களை கரைச்சு குடிச்சவ. வேணாம் நிவி, நானே மண்டை காஞ்சி போயிருக்கேன். என்னை இப்ப விட்டிரு”
“சீக்கிரம் படிச்சு பார்த்திட்டு சொல்லு டி. அதில் பாதி கதை தான் இருக்கு. மீதியை நடக்க நடக்க…”
“என்ன”
“யோசனை வர வர எழுதிட்டு இருக்கேன் டி”
நினைத்ததைச் சொல்லியிருந்தால் தொலைந்தாள்!
அத்தியாயம் 6
பேத்தியின் வாழ்க்கை ஆவுடை பாட்டிக்கு நிரம்பவும் முக்கியம்! நடந்து முடிந்த விஷயத்தில் இனி என்ன செய்வது என்ற யோசனை நீண்ட நாட்களாகவே அவரை அழுத்த ஆரம்பித்திருந்தது! அன்று அதற்கு ஒரு முடிவு வந்துவிட்டதைப் போல் சங்கரனை அழைத்தவர்,
“மெட்ராசுக்கு ஒரு டிக்கெட் போடுலே, நான் அந்த பயலே போய் என்னான்னு கேட்டாறேன்!”
“யாரை ஆத்தா?”
“அதான் நான் தவமிருந்து பெத்து போட்டேனே, அந்த நன்றிகெட்ட பய தாமுவை!”
“தனியா வா! நானும் கூட வாரேன்”
“நீ கூட வந்தா இங்க வயலை யாரு பார்ப்பா? எனக்கு அங்கன ஒத்தைலே போக பயமா என்ன?!”
“புரியாம பேசாதே ஆத்தா! மெட்ராஸ் முன்ன மாதிரியில்ல! இப்ப பெரிய ஊரு! அங்க போய் நீ ஒத்தையா என்ன செய்வே! போகணும்ன சொல்லு நானும் வாரேன்!”
சங்கரன் வீம்புக்கு மறுப்பு சொல்லும் ஆள் இல்லை.
“அவய்ன் வீட்டு விலாசம் இருக்கா லே!”
“விசாரிக்கணும் ஆத்தா!”
நெல்லையில் தனக்குத் தெரிந்த தாமுவின் நண்பர்களைக் கேட்டால் சொல்லப் போகிறார்கள்!
“எல்லாம் கேட்டு வெரசா டிக்கெட்டை போடு லே, போவோம்”
பாட்டி தன் சாய்வு நாற்காலியில் இருந்து எழுந்துவிட்டார். நிலாவின் விஷயத்துக்குப் பிறகு ஆவுடையம்மாள் மிகவும் சோர்ந்து போனது போல் தோன்றியது சங்கரனுக்கு.
“கஸ்தூரி” அவர் அழைத்த குரலுக்கு ஓடி வந்த பெண்,
“என்ன பா” என்க,
“ஆத்தாவுக்கு குடிக்க ஏதாவது கொடு! கொஞ்சம் சத்தானதா பார்த்து அப்பப்ப கொடு. அவங்களை நல்லா கவனிச்சிக்கோ புள்ள”
‘சரிப்பா’ என அவள் நகர்ந்துவிட்ட பிறகு யோசிக்க ஆரம்பித்தார்!
ஆத்தா தன்னிடம் சொன்ன விஷயங்களைத் தொடரலாமா, வேண்டாமா! நிலாவிடம் கேட்டு விட்ட பிறகே மேற்கொண்டு முடிவெடுக்க வேண்டும்!
அத்தியாயம் 3:
வீட்டு வாசலில் வந்து நின்ற இந்திரனைப் பார்க்க அத்தனை ஆச்சரியம் நிலானிக்கு!
அவனை வரவேற்கவும் மறந்து, ஏன் வந்தாய் என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றாள்!
அவளின் தயக்கத்தை உணர்ந்தவன்,
“ஹலோ நிலானி, நிவேதா இருக்காங்களா?”
“அவ…”
அலைப்பேசி அழைத்தது! அவனை அப்படியே வெளியவே நிற்க வைத்தவள் போய் தன் தொலைப்பேசியை எடுக்க, நிவி தான்!
“உன்னைத் தேடி யாரோ வந்திருக்காங்க! வரச் சொல்லிட்டு நீ எங்க போன?”
நிலானியின் குரலிலேயே அவள் கோபம் தெரிந்தது!
“இதோ வந்திட்டே இருக்கேன். அவரை உள்ள கூப்பிட்டு உட்கார வையேன், ப்ளீஸ்”
“அப்புறம் அப்படியே பஜ்ஜி, காபி எல்லாம் போட்டுத் தந்திடவா?”
“ஓ யெஸ்”
“செருப்பு!! பெரிய பருப்பு மாதிரி கூப்பிட்டியே நீயே வந்து இதெல்லாம் செய்!”
போனை அணைத்தபின் அவன் புறம் வந்தவள்,
“சாரி ஒரு அர்ஜெண்ட் கால், உள்ளே வாங்க, நிவேதா இப்ப வந்திடுவா!”
பேருக்கு அவள் வரவேற்ற அழகைப் பார்த்து, வரலாமா வேண்டாமா என்ற யோசனையில் தயக்கமாய் உள்ளே நுழைந்தான் இந்திரன்.
நிலாவுக்கு தன் வரவு பிடிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளாத அளவுக்கு அவன் ஒன்றும் முட்டாள் இல்லையே!
ஹாலின் நடுநாயகமாய் அமைந்திருந்த சோபாவில் அமர்ந்தவன், வீட்டை நோட்டமிட இவளோ தன் அறைக்குள் முடங்கிக்கொண்டாள்.
நிவேதா வந்தபின், அவர்கள் இருவருக்குள்ளும் அப்படி ஒரு அரட்டை.
“இந்த ஏரியாவுக்கே மாறிடலாம்னு இருக்கேன் நிவேதா! கலீங்ஸ் நிறைய இங்க இருக்காங்க, ஸோ!”
“ஆமா உங்களுக்கும் பிடிக்கும் இந்த இடம். நாளை பின்ன உங்க வைஃப் வந்தா கூட இங்க அவங்களுக்கு வசதியா இருக்கும்!”
‘இருக்கும் இல்லாம போகட்டும் உனக்கு என்ன டி முந்திரிக் கொட்டை!’ இவள் கூட இருந்து வீடு பார்த்துத் தராத குறை தான்.
இவர்கள் பேச்சு எல்லாம் காதில் விழுந்தாலும், நிலானி வெளியில் எட்டி கூட பார்க்கவில்லை!
சற்று நேரத்தில் அவன் கிளம்பிவிட்டதை உணர்ந்த பின்பே வெளிவந்தாள்.
நிவி அவனிடம் மிகவும் சாதாரணமாய் பழகுவது ஏனோ நிலாவுக்குப் பிடிக்கவில்லை. விமானத்தில் ஏற்பட்ட நட்பு என்றாலும் அதற்கு ஒரு எல்லையில்லையா என்பது அவள் வாதம்!
அன்றும் இந்திரனிடம் அவளுக்குத் தெரிந்த வாடகை வீட்டின் நிலவரங்களை நிவேதா தொலைப்பேசியில் அளந்து கொண்டிருந்ததில் கடுப்பான நிலா,
“நிவி நீ எதுக்கு உனக்குத் தேவையில்லாத விஷயத்தில் எல்லாம் தலையிடுறே?”
நிலானியின் கேள்வியில் நிவேதா எரிச்சலைடைந்தது அப்பட்டமாய் அவள் முகத்தில் தெரிந்தது!
“எனக்கு எது தேவை எது தேவையில்லைனு உனக்கு எப்படி தெரியும் நிலா?”
சற்றுக் காட்டமாகவே கேட்டாள்!
“இல்ல டி…” சொல்ல ஆரம்பித்த நிலாவின் பேச்சை குறுக்கிட்டவள்,
“உன்னை ஏதாவது தொந்தரவு செய்றேனா? உன் வேலையை மட்டும் பார். நீ தான் இப்ப தேவையில்லாம என் விஷயத்தில் தலையிடுறே!”
நிவியின் கோபத்துக்கும் இந்திரனையே குறை சொன்னது அவள் மனம்! ஒழுங்கே போய்க் கொண்டிருந்த நட்பில் பிணக்கம் உண்டாக்கவே எங்கிருந்தோ வந்திருக்கிறான் இவன்! அதன் பின் அவர்கள் விஷயத்துக்கே நிலா போகவில்லை!
நிலானி அலுவலகத்திலிருந்து திரும்புகையில், நிவி அதிசயமாய் வீட்டிலிருந்தாள் அன்று!
“என்ன நிவி இன்றைக்குச் சீக்கிரம் வந்தாச்சா! ம்ம்…உனக்கு என்ன மா…நல்ல ஆபிஸ், நிறைய இந்தியன்ஸ், ஜாலி”
அழுகையுடன் இவளிடம் ஓடி வந்த நிவேதா தோழியைக் கட்டிக் கொண்டு குலுங்கி அழுதாள்.
“என்ன டி ஆச்சு? ஏன் அழுறே!”
நிலாவுக்கும் பதட்டமானது, எதையும் சொல்லாமல் அழுகிறாளே!
“நிலா ஊரில் அவருக்கு ஆக்சிடெண்டாம். ரொம்ப சீரியஸா ஹாஸ்பிட்டலில் சேர்த்திருக்காம், அப்பா போன் செய்து சொன்னார்”
திருமணம் முடிந்து ஒரு வருடம் தான் ஆகியிருந்தது. இந்த பிரிவே அவளுக்குப் பிடிக்கவில்லை என்று எப்போதும் புலம்பியிருக்கிறாள். கல்லூரி காலத்திலேயே நிவேதாவின் கணவராய் வரப் போகிறவரைப் பார்த்திருக்கிறாள் நிலா! நிவேதாவின் முறைப்பையன் தான் அவர்.
“அச்சோ…ஒண்ணும் இருக்காது, நீ தைரியமா இரு நிவி”
சற்று நேரம் அவளை சமாதானப்படுத்தியவள்,
“நீ ஊருக்கு கிளம்புறியா? டிக்கெட் கிடைக்குமான்னு பார்க்கவா?”
லேப்டாபை உயிர்ப்பிக்க, அழுகையின் ஊடே,
“டிக்கெட் வாங்கிட்டேன் நிலா! நாளை காலை முதல் பிளைட்டில் போறேன். என் கூட ஏர்போர்ட் வரைக்கும் வர முடியுமா ப்ளீஸ்!”
“எதுக்கு டி ப்ளீஸ் எல்லாம்! நான் கண்டிப்பா வரேன். பஸ் டிக்கெட் வாங்கிடவா!”
“இல்லை நிலா வேணாம். இந்திரன் காரில் நம்மளை விடுறேன்னு சொன்னார்!”
தனக்கு முன்னமே அவனிடம் சொல்லி விட்டாளா?
“அவர் தான் டிக்கெட் எல்லாம் புக் செஞ்சித் தந்தது!”
“ஓ சரி! நீ இப்ப பெட்டியை அடுக்கு, உனக்குச் சாப்பிட ஏதாவது கொண்டு வரேன்.”
வேண்டாம் என்று பிடிவாதம் பிடித்தவளை,
“அழாதே நிவி, எதுவும் பிரச்சனை இருக்காது. எல்லாரும் தான் அவர் கூட இருக்காங்களே! நீ தைரியமா இரு!”
அடுத்த நாள் நிவேதாவின் காரணமாய் இந்திரனுடனான தன் பயணத்தை நிலானி ஆரம்பித்துவிட்டாள்!
‘தானா நடந்த விஷயத்தை என்னவோ பிளான் செஞ்சி நடக்க வச்ச மாதிரி எழுதியிருக்கா! கதையாம் கதை! என் கிட்ட கேட்டிருந்தா இதை விட நல்லதா எத்தனை ரொமாண்டிக் கதையெல்லாம் சொல்லியிருப்பேன்! இவளை வச்சிகிட்டு…’
நிலானியின் யோசனையைக் கலைத்தான் இந்திரன்.
“குட் மார்னிங் நிலா கண்ணு! என்ன இன்னிக்கி சீக்கிரமா கிளம்பி இருக்கீங்க! அப்படியே அத்தானுக்கு ஒரு காபி போடேன் பார்ப்போம்”
என்னவோ மனமொத்து வாழும் மனைவியிடம் கேட்பதைப் போல் அவள் ஈஷிக்கொள்ள, படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை மூடினாள். ஈர முடியைக் காய வைக்க மின்விசிறிக்கு எதிரில் இத்தனை நேரமும் அமர்ந்து கொண்டிருந்தாள்!
இவனும் வந்து அவளை ஒட்டிக் கொண்டு அமர சட்டென்று எழுந்துவிட்டாள்.
“நிலா கொஞ்சம் நில்லேன், உன் கூட கொஞ்சம் பேசணும். விலகிப் போனவளின் கரம் பற்றி நிறுத்தினான்.
“கையை விடு நீ”
இவள் எத்தனை முயன்றும் அதனை விடுவிக்க முடியவில்லை!
“ஏன்? எனக்கு உரிமையில்லையா? நான் உன் காதலன், உன் மாமன் மகன் இப்ப உன் புருஷன்! இன்னும்…”
“போதும் போதும்” அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது. அதெல்லாம் அவன் கண்ணில் பட்டால் தானே!
“இன்னிக்கு வெள்ளிக்கிழமையா அதான் இப்படி மங்களகரமா இருக்கியா?”
ரசனையாய் பார்த்துக் கொண்டிருந்தான் தன் மனைவியை! காலையில் நேரத்தில் எழுந்து கடவுளை வணங்கி, பூஜையில் வைத்திருந்த விபூதி குங்குமம் எல்லாம் சின்ன கீற்றாய் தன் நெற்றியில் தீட்டியிருந்தாள்!
“என் அம்மா கூட இப்படி தான் இருப்பாங்க! இப்ப இல்ல…அது ஒரு காலத்தில்!”
சட்டென்று அவன் குரல் மாறிவிட அவள் கையை விடுவித்தவன் கிட்சனுக்குள் புகுந்து கொண்டான்.
பல நாளாய் தன்னிடம் எதையோ சொல்ல வருகிறான், இப்பவாவது கேட்கலாமே!
அவன் பக்கம் அந்த அடுப்படிக்குப் போனவள்,
“இந்திரன் என் கிட்ட எதையோ சொல்லணும்னு சொன்னியே?”
“சொல்றேன், எனக்கு ஒரு காபி போட்டுத் தருவியா?”
“முடியாது!”
“அளவு மட்டுமாவது சொல்லு நிலா, எனக்கு நீ போடுறது தான் பிடிச்சிருக்கு!”
“என் காபியை நீ எப்ப குடிச்ச?”
ஆர்ப்பாட்டமாய் சிரித்தான்!
“காபியைச் சூடா குடிக்க மாட்டேன்னு ஆற வச்சியிருந்தியே அப்போ தான்!”
அடப்பாவி!
அவன் முதுகில் இரண்டு வைத்தாள்.
காலை காபி பல நாள் அளவு குறைந்தது போல் தோன்றியது அவள் பிரமை இல்லை போலவே! ச்சீ இவன் குடிச்ச காபியை…!
“ஏன் இவ்ளோ இண்டீசண்டா இருக்கே! கேட்டா போட்டுத் தரப் போறேன்!”
“அதான் இப்ப போட்டு கொடேன்!”
அவள் அதைக் கலந்து கொடுக்க, இவன் போய் சோபாவில் தன் அலைப்பேசியோடு ஐக்கியமானான்.
“எனக்கு லேட் ஆகுது, சீக்கிரம் சொல்லு இந்திரன்!”
“அது ஒரு பெரிய கதை நிலா! அவசரத்துக்கெல்லாம் சொல்ல முடியாது!”
“நீ சொல்லவே வேணாம் போ, நான் போறேன்!”
“நிலா…நீயும் பாட்டியும் நினைக்கிற மாதிரி நான் இன்னும் என் அப்பா மாதிரி மாறிடலை. பாட்டி வச்ச பெயரிலிருந்து எதையும் நான் மாத்திக்கலை. எப்போவும் நான் உங்களுக்கு இந்திரன் தான். சேவியர் இல்லை தாமுவோட மகன்! அதை நீ நம்பித் தான் ஆகணும்!”
நிலா அதே இடத்தில் அசையாமல் நின்றாள்.
அத்தியாயம் 7
இன்னமும் தாமுவுடைய மகன் தான் என்றால், இவனுக்கு அர்த்தம் புரியவில்லையா? தாமுவின் சொந்தம் என்பதால் தானே இந்த பிரச்சனையே! தாமு மாமா தான் ஆத்தாவை உறவே வேண்டாம் என்று விட்டாறே! இவன் என்ன சொல்கிறான்!
“தாமு மாமா பாட்டியை வேண்டாம்ன்னு…”
“அது அப்பா தன்னிச்சையா எடுத்த முடிவு! எனக்கு அதில் எந்த உடன்பாடுமில்லை”
“என்ன அதையே சொல்றே இந்திரன்? உன் அப்பாவை வச்சிதானே நீ? என்னவோ நீ தனியாள் மாதிரி பேசுறே!”
அவன் பதில் கூறும் முன்
அவளின் போன் அழைத்தது! இந்தியாவிலிருந்து பாட்டியோ என்ற நினைப்பில் அதை எடுக்க,
“நிலாம்மா நான் சங்கர் பேசுறேன்!”
“சொல்லுங்க, எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ஆத்தா நல்லா இருக்கா?”
இத்தனை அதிகாலையில் ஏன் போன் செய்கிறார்? பாட்டிக்கு என்னவோ என மனம் அடித்துக் கொள்ள,
“வயக்காட்டுக்கு வந்தேன் மா, இன்னிக்கி சீக்கிரம் மோட்டர் போட்டு தண்ணீ பாய்ச்சலாம்னு. ஆத்தாவுக்கு தெரியாம உன் கூட பேச வேண்டியிருக்கு, இப்ப பேசலாமா?”
எழுந்து இவள் பக்கம் வந்த இந்திரன் அவள் போனை வாங்கி, இல்லை பறித்து ஸ்பீக்கரில் போட்டான். இவள் எதிர்ப்புகளை எல்லாம் முறியடிப்பது எப்போதும் அவனுக்கு கை வந்த கலை!
“ஹலோ நிலா மா, லைனில் இருக்கியா?”
இவன் செய்த ராசா பாசாங்கில் அவர் சொன்னதைத் தவறவிட்டாள்.
“ஏதோ சிக்னல் பிராப்ளம், இப்ப சொல்லுங்க”
“ஆத்தா தாமு வீட்டுக்கு போகணும்னு சொல்லுது. அங்கே போறது சரின்னு எனக்குப் படலை! இன்னும் ரகளை அதிகமாகுமே தவிர என்னைக்கும் தீராது. நீ என்ன தாயி சொல்லுதே!”
நிலாவும் இந்திரனும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்!
“நிலா நிலா…”
“ஹாங் கேட்டிட்டு தான் இருக்கேன்…சொல்லுங்க”
“அந்த இந்திரன் தம்பியை மறுபடியும் ஆத்தா பார்த்தா என்ன செய்யும்மின்னு தெரியாது மா! நீயும் இங்கென இல்ல! எனக்கு அவுகளை அங்க அழைச்சிட்டு போக கொஞ்சமும் இஷ்டமில்லை. சொன்னாலும் கேட்குறாவுளா, ஒத்தையில போறேன்னு நிக்கிறாங்க! என்ன செய்யன்னு சொல்லு!”
“அவர்…வந்து அந்த இந்திரன் அங்க சென்னையில் இல்ல!”
அவனைத் தயக்கமாய் நிமிர்ந்து பார்த்து அவள் சொல்ல, அவனோ இல்லாத சட்டை காலரைத் தூக்கி விட்டுக் கொண்டான்!
“அப்படியா அந்த தம்பி இப்ப எங்க இருக்காப்ல, அவரை பத்தி உனக்கு எதுவும் தெரியுமா நிலாம்மா?”
என்ன பொய் சொல்லலாம் என்று அவள் யோசித்த அந்த நொடியில் அவனோ,
“அசோக், நான் இந்திரன் பேசுறேன். நீ எங்கே டா இருக்கே? ஜப்பான்லையா, நானும் அதே ஜப்பான்ல தான் டா இருக்கேன். தனியா இல்ல டா என் பொண்டாட்டி கூட தான்!”
வேண்டுமென்றே வராத போன் காலில் சத்தமாய் பேசியபடி அவ்விடத்திலிருந்து நகன்றான்.
‘டேய் சும்மா இருடா’ அவள் சின்ன குரலில் சொன்னது அவனுக்குக் கேட்கவில்லை! ஆனால் அந்த பக்கம் இருந்த சங்கரனுக்குக் கேட்டது! ‘பத்தவச்சிட்டு போயிட்டியே டா பாவி!’
அந்த பக்கமிருந்த அமைதியில் நிலாவின் இதயத் துடிப்பு எகிறிப்போயிருந்தது!
சூழ்நிலையைப் புரிந்து கொண்டார் சங்கரன்!
“நிலா மா, நீ இப்ப மாப்பிள்ளை கூடத்தான் இருக்கியா?”
பதில் சொல்லவில்லை அவள். ஏதோ அவளைச் சார்ந்தவர்களை ஏமாற்றிவிட்ட குற்ற உணர்வு தாக்கியது!
“இதைப் பத்தி உங்ககிட்ட சொல்லணும்! வந்து…”
“இல்ல, இனி சொல்லி சங்கடப் பட வேணாம், நான் அப்புறம் பேசுறேன்…வைச்சிடுறேன் மா!”
அவனைத் தேடிப் போனாள்.
“நீ என்ன வேலை செஞ்சியிருக்கே தெரியுமா!”
“என்ன!” ஒன்றுமே அறியாததைப் போல் தன் சட்டையை இஸ்திரி செய்து கொண்டிருக்க,
“நான் என்னவோ கள்ளத்தனம் செய்ற மாதிரி அவர்கிட்ட படம் போட்டு காட்டிட்டே! நான் விளக்கம் சொல்றதுக்கு முன்னாடி மனுஷன் போனை வச்சிட்டார்! ஏன் இப்படியெல்லாம் செய்றே இந்திரன். எல்லாமே உனக்கு விளையாட்டா போச்சா!”
“நான் விளையாடலை நிலா, என்ன நடக்கும்னு தெரிஞ்சி தான் இதை பண்ணேன்! எப்படியும் அவங்க என் அப்பாவைப் போய் பார்த்தா எல்லாம் சொல்லிட போறார்!”
“நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செஞ்சது தப்பு! நானா சொல்றதுக்கும் நீயா போட்டுக் கொடுக்கிறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு!”
“அப்படியா?”
“என்ன அப்படியா? முட்டாளா நீ”
கோபத்தில் சிவந்திருந்த அவளின் முகம் கூட அவனுக்கு அழகாய் தெரிந்தது. காலையிலிருந்தே சுத்தி சுத்தி வந்து என்னை இம்சை செய்றா. நினைத்த வாக்கில் இப்போது அவளை நெருங்கியிருந்தான்!
“நானா, நீயான்னு நீ பேசினதில் ஒரு உண்மை இருக்கு நிலா! நீயா எதுவும் செய்யப் போறதில்லை, ஸோ இப்பவும் நானா…”
அவள் முகத்தைக் கையில் ஏந்தியவன் அவள் என்னவென்று உணரும் முன் கன்னம் கன்னமாய் முத்தமிட்டான்.
அத்தியாயம் 4:
விமானம் கிளம்பும் வரைக்கும் காத்திருக்கலாம் என்று நினைத்திருந்தவளை போனில் அழைத்தான் இந்திரன்!
“நிலானி கார் பார்க்கிங் வந்திடுறீங்களா? நான் இன்னமும் அங்க தான் நிக்கிறேன்!”
இவன் கூட மறுபடியும் சென்றாக வேண்டுமா? வேண்டாமே!
“இல்ல நான் வேற இடத்துக்கு கிளம்புறேன். நீங்க எனக்காகக் காத்திருக்க வேண்டாம்!”
“அப்படியா சரி! ஆனா, உங்க ஹேண்ட்பேக் வேண்டாமா? வண்டியில் விட்டிட்டு போயிட்டீங்களே”
“அச்சோ! சுத்தமா மறந்துட்டேன். இதோ வந்து எடுத்துக்குறேன்!”
அத்தனை பெரிய விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடமும் அதைப் போலவே பெரியது. வாரக்கணக்கில் ஜப்பானின் பயணிகள் அவர்களின் சொந்த வாகனத்தைக் கூட அங்கே பாதுகாப்பாய் விட்டுவிட்டுச் செல்லவும் வழிவகை செய்திருந்தனர்.
அவள் அவன் இருக்குமிடம் கண்டுபிடித்துப் போகையில் காரின் மேல் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.
“நீங்க வருவீங்கன்னு தான் இத்தனை நேரமும் காத்திருந்தேன். வரலைன்ன முதலிலேயே சொல்லியிருந்தா இந்நேரம் வீட்டுக்கே போயிருப்பேன்…ம்ம்ச்”
அவள் முகம் பார்க்காமல் அவன் சொல்ல அவளுக்குச் சங்கடமானது நிஜம். அவன் கூடப் போவதை தவிர்ப்பதற்காகவே அப்படிச் சொன்னது, இப்போது தவறோ எந்த தோன்றியது. வராதவளுக்காக இரண்டு மணி நேரம் நின்றிருக்கிறான், எரிச்சல் வரத் தானே செய்யும்.
“நீங்க போற வழியில் என்னை விட்டிருங்க. உங்களால் முடியுமா?”
“ம்ம்…வாங்க”
அவன் எதிர்பார்த்ததை போல் பின்னிருக்கையில் போய் அமர்ந்து கொண்டாள். சற்று நேரம் அமைதியாகப் போய்க் கொண்டிருக்க, அதை விரும்பாதவன் போல் பாடல்களை ஒலிக்க விட்டான்.
வந்த முதல் பாடலே வினையைக் கூட கூட்டி வரும் போலிருந்தது.
‘எந்திர லோகத்துச் சுந்தரியே’
அவள் அதனைக் கண்டுகொள்ளாமல் விட்டாலும், ஏனோ அப்பாட்டை மாற்றிவிட்டான்.
அடுத்து வந்தது அதை விடக் கொடுமை!
‘ஒரே ஒரு பார்வை தந்தாலென்ன தேனே!
ஒரே ஒரு வார்த்தை சொன்னாலென்ன மானே!’
அந்த வரியோடு பாட்டையே நிப்பாட்டி விட்டான். அவன் செய்கையில் தனக்குள் சிரித்துக் கொண்ட நிலானி, வெளியில் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
எப்போது தூங்கினாளோ தெரியாது.
‘நிலானி…நிலா’ அவன் தோள் தட்டி எழுப்பவும் தான் வீடு வந்த விஷயமே அவளுக்குப் புரிந்தது.
அரக்கப் பறக்க எழுந்தவள், இறங்கியதும் “ரொம்ப நன்றி இந்திரன்” என்றாள். அவன் தலையசைக்கவும் அடுத்த வார்த்தை பேசாமல் கிளம்பிவிட்டாள்.
அதன் பின் இரண்டொரு நாளில் மெஸேஜ் செய்தான், நிவேதாவின் கணவரின் நிலை என்னவென்று அறிந்து கொள்ள! பதில் சொன்னதுடன் நிவேதாவின் இந்திய நம்பரையும் அவனுக்கு அனுப்பிவிட்டாள்!
இந்திரனைப் பற்றிய நிலாவின் எண்ணம் இந்த சில நாளில் சற்று வேறுபட்டிருந்தது. நிவேதாவுடனான ஒரு நாள் நட்புக்காக இத்தனை மெனக்கெடுவானேன்! ஒரு வேளை நல்லவன் தானோ! சந்தேகமாய் பார்த்தது அவள் தவறோ! தன்னிடமும் அளவுக்கு அதிகமாய் பேச முயல்வதில்லை, காரண காரியங்களுக்கு மட்டும் தான்!
நிவேதாவின் கணவருக்குக் கொஞ்சம் அடி பலம் தான்! ஹாஸ்பிட்டலில் ஒரு மாதம் வரைக்குமே இருந்தார். நிவேதா அது வரையிலும் விடுப்பெடுத்து, அதன் பின்பும் சென்னை அலுவலகத்தில் சில மாதங்கள் பணிக்கு வருவதாக ஒத்துக் கொண்டாள்!
மறுபடியும் தனியாக இருக்க வேண்டிய நிலையில், நிலாவுக்குப் போர் தான்! கிடைத்த இந்த நேரத்தில் எதையாவது ஒழுங்கே செய்வோம் என்ற எண்ணம் தோன்ற, இந்த ஊரின் லைசன்ஸ் வாங்கினால் தான் என்ன என்ற சிந்தனை!
பல டிரைவிங் ஸ்கூல்களில் போன் செய்து விசாரித்தால், அவர்கள் சொல்லும் காசை கட்டி அப்படி இந்த காரை ஓட்டத் தான் வேண்டுமா என்ற எண்ணம்!
அதே யோசனையில் ஒரு சனிக்கிழமை மாலை நடைபயிலப் போக, அங்கே இந்திரனைக் கண்டாள். இவன் எங்கே இங்கே! எல்லாம் நிவேதா வீடு பார்த்து வைத்த வேலை என்பது மெதுவாய் புரிந்தது!
அவளைப் பார்த்து சினேகமாய் புன்னகைத்தவன்,
“ஹலோ நிலானி, நல்லாயிருக்கீங்களா?”
“ஃபைன். இந்த ஏரியாவுக்கு வந்தாச்சா?”
“ஆமாங்க…ஓகே…பார்போம்”
அதன் பின் பல நாள் அவனை மெட்ரோவிலும், கடையிலும் பார்த்துவிட்டு ஒரு புன்னகையோடு கடந்திருக்கிறாள்!
ஓட்டுநர் உரிமம் பற்றிய சிந்தனை அதிகமானதில் அவனிடம் கேட்க முடிவெடுத்தாள்!
“இங்கே லைசன்ஸ் வாங்க நான் ஹெல்ப் பண்றேன் நிலானி! எனக்குச் சொல்லித் தந்தவர் ஜாப்பனீஸ் தான் ஆனா அவருக்கு இங்லிஷ் கூட தெரியும். இரண்டு கிளாஸ் போனா போதும் பிராக்டிக்கல் கிளியர் பண்ணிடுவீங்க! அவர் போன் நம்பர் உங்களுக்கு அனுப்புறேன், பேசி பாருங்க!”
முதல் நாள் அவளுடன் அந்த இடம் வரையிலும் கூடப் போனதும் அவனே!
“டெஸ்டுக்கு வர சூப்பர்வைசர்ஸ் எல்லாம் முன்னால் காவல்துறை அதிகாரிங்க! கொஞ்சம் ஸ்டிரிக்டா தான் இருப்பாங்க!”
முதல் முறை டிரைவிங் டெஸ்ட் போய் மண்ணை கவ்விவிட்டு வந்திருந்தாள், அதை மெசேஜில் அறிந்து அவளுக்கு போன் செய்தவன்,
“முதல் தடவை கிடைக்கிறது ஈசி இல்லைங்க. பரவாயில்லை அடுத்த முறை வாங்கிடலாம்!”
அவள் மாட்டேன் என்றா சொன்னாள்! விட்டால் தானே! ஏற்கனவே நடுங்கிப் போய் அடுத்த டெஸ்டுக்கு போயிருப்பவளை,
“ஏன் இத்தனை மெதுவா போறே!
லேன் மாத்து! கண்ணாடி பாரு!
நில்லு என்ன அவசரம்!” இப்படியெல்லாம் சொல்லி இரத்த கொதிப்பை ஏற்றிவிட்டனர் அங்குள்ளவர்கள்!
எல்லாம் முடித்து கடைசியில் பாஸ் என்பதற்கு அறிகுறியாய் அந்த பிங்க காகிதத்தை வாங்கிய பின் தான் நிம்மதி!
அந்த திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போட்ட பின்னரே கிளம்பினாள். மகிழ்ச்சியாய் இருந்தது, ஏதோ பெரிய சாதனை புரிந்தது போல்!
இத்தனை கெடுபிடி செய்து இந்த லைசன்ஸ் கொடுப்பதால் தான் இந்த ஊரில் எல்லாருமே ரூல்ஸ் ராமானுசம் போல் இருக்கின்றனர் போலவே.
“ஏதோ உங்க உதவியால் சீக்கிரம் வாங்கிட்டேன், ரொம்ப தான்க்ஸ் இந்திரன்”
“என்னங்க தான்க்ஸ்னு சிம்பிலா முடிச்சிட்டீங்க!”
“வேற என்ன செய்யணும்?”
“லன்சுக்கு வெளியே போலாமே, உங்க டீரிட்!”
அத்தியாயம் 8
அத்தியாயம் 5:
‘செய்த உதவியை ஒரு காரணமாய் வைத்து தன்னிடம் நெருங்க முயல்கிறான்!’
அவளின் உள்ளுணர்வு தன் எச்சரிக்கையை மறுபடியும் ஆரம்பித்திருந்தது. என்னதான் அவனைப் பற்றிய எண்ணங்கள் சற்று மாறுபட்டிருந்தாலும், அவளுக்கு இருந்த சந்தேகம் முழுவதுமாக மறையவில்லை!
அதனால் அவனுடன் வெளியே போகும் எண்ணமில்லை. ஆனால் இருவரும் விரைவில் சந்தித்துக் கொள்ளும் நிலை வந்தது!
வழக்கமாய் அவள் போகும் காபி ஷாப்புக்கு அவனும் வந்திருந்தான். தீவிரமாய் காபி குடிப்பதில் மூழ்கியிருந்தவளுக்கு,
“ஹாய் நிலா” திடீரென்று கேட்ட தமிழ்க் குரலில் சற்று திடுக்கிட்டுத் தான் போனாள் நிலானி!
“நீங்க எங்கே இங்கே!”
அவன் உடனே பதில் சொன்னானில்லை. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் கேசுவல் உடையில் இருந்தாள்! முழுக்கை வைத்த காட்டன் சுடிதார் அவளுக்கு மிகவும் பாந்தமாய் பொருந்தியிருந்தது! கடைசியாய் அவன் பார்வை அவள் முகத்தில் பதிய அவள் குடித்த பானத்தின் தடம் இன்னமும் அவள் உதட்டின் நுனியில்!
“காபி குடிச்சா மீசை வளருமா நிலானிக்கு?!”
அவளுக்கு எதிரிலிருந்த சேரில் தன் மடிக்கணினிப் பையை வைக்கக் குனிந்தவன் அதே நிலையில் அவளின் முகம் பார்த்து, என்னவகை என்று கணிக்க முடியாத குரலில் சொல்லிவிட்டு தனகானதை வாங்கச் சென்றுவிட்டான்!
தன்னை சரி செய்தபடி கவுண்டரில் நின்றிருந்த இந்திரனின் மேல் தன் பார்வையைச் செலுத்தினாள்! வழமை போல் இப்போதும் கண்ணுக்கு லட்சணமாய் தெரிந்தான். எப்போதும் அதை ஒற்றுக் கொள்ளாத அவள் மனம் இப்போது ஒரு மாறுதலாய் அவனின் தோற்றத்தை மெச்சிக் கொண்டிருந்தது!
வாங்கிக் கொண்ட கோப்பையுடன் இவர்கள் மேஜையை நெருங்கியவன்,
“நிலானி நம்ம கிட்ட போகலாம்னு சொல்லிட்டு ஏமாத்திட்டாங்களேன்னு நினைச்சேன்! கடவுளுக்கு என் வேண்டுதல் கேட்டிருக்கு போல!”
உதடு பிரியாமல் சிரித்து வைத்தாள். தான் நினைத்தது என்ன! இப்போது நடப்பதென்ன!
“நிவேதா கிட்டப் பேசினேன். இப்போதைக்கு அங்க தான் இருக்க போறாங்களாமே!” என்றான்.
“ஆமா, என் கிட்டையும் சொன்னா! அவ அவர் கூட அங்க இருந்து தானே ஆகணும். உடனே இங்க வந்தாலும் வருத்தப்பட்டிட்டு இருப்பா!”
“பரவாயில்லை, அவங்களுக்கு ஆபிஸில் அந்த மாதிரி ஆப்ஷனும் இருக்கு! நீங்க எப்படி நிலா? இந்த ஊரிலேயே உங்க வேலையைத் தொடரப் போறீங்களா?”
பேச்சுவார்த்தையை வளர்க்கிறான்…
“தெரியலை…பாட்டி எப்போ வர சொல்றாங்களோ அப்போ ஊருக்கு கிளம்பிடணும்! நீங்க?”
அவளுக்குப் பெற்றவர்கள் இல்லை என்பதை நிவேதா எப்போதோ சொல்லியிருந்ததால் அவனும் எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை!
“எனக்கு ஊருக்கு போற ஐடியா இல்லைங்க! நான் இப்ப இருக்கிற கம்பெனியில் இன்னும் கொஞ்சம் ஸ்கோப் இருக்கும்னு தோணுது, ஸோ ஐ விஷ் டு கண்டினியூ ஹியர்!”
சற்று நேரம் அவன் குடும்பம், படிப்பு பற்றிப் பேசிக்கொண்டிருந்தான். அவனின் புதிய பார்வையிலும், நகைச்சுவையான பேச்சிலும் தொலைந்து போவாள் என்று அவள் அறியவில்லை! நீண்ட நாட்களுக்குப் பிறகு அந்த நாள் இனிய நாளாக அமைந்து போனது!
எந்த விஷயத்திலும் ஆரம்பத்தில் இருக்கும் தயக்கம் அதன் பின் இருப்பதில்லையே! நிலானிக்கும் அது தான் நடந்தது! இப்போதெல்லாம் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர்!
இந்திரனுடன் பழக ஆரம்பித்த பிறகு அவனே எப்போதும் அவள் மனதில் நின்றான். எத்தனை வேலையானாலும் அவனை நினைக்காமல் இருக்க முடியவில்லை. அவள் வயதின் கோளாறா, அவளுக்கே புரியவில்லை!
ஏனோ அவனுடன் இருக்கையில் தன்னை ஸ்பெஷலாக உணர்ந்தாள். அவளைப் பார்க்கும் போதெல்லாம் அவன் கண்களில் தெரிந்தது என்ன என்று அவளால் கணிக்க முடியவில்லை!
‘பாறையின் இடுக்கில் வேர் விட்ட கொடியாய் நீ நெஞ்சில் முளைத்துவிட்டாய் ‘
அப்பாடல் வரிகளில் எத்தனை உண்மை!
————-
அவன் பார்வையே அன்று சரியில்லை! அதை உணர்ந்த பின் ஒதுங்கிப் போயிருக்க வேண்டும், ச்சே! வேண்டுமென்றே வம்பு செய்கிறவனிடம் நியாயம் எதிர்பார்த்துப் போனது அத்தனை புத்திசாலித்தனமில்லை!
‘எத்தனை பட்டாலும் உனக்கு ஏன் விளங்க மாட்டேங்குது!’
பல நாட்களுக்கு முன் நடந்ததை இன்னமும் நினைத்து தன்னையே நொந்துக் கொண்டாள்!
அந்த சிந்தனையிலிருந்து வெளியே வந்தாலும், சங்கரனிடம் என்ன செய்யச் சொல்ல? அவர்கள் அங்கே இந்திரன் வீட்டுக்குப் போனால் இனி என்னவாகும்!
இந்திரன் அவன் பெற்றோரை அவளுக்கு முன்பு புகைப்படத்தில் காட்டியிருக்கிறான்! தாமு மாமா முகத்தில் கொஞ்சம் முரட்டுத் தனம் தெரிந்தாலும், அத்தை கொஞ்சம் பரவாயில்லை. அப்போது தெரியாது இந்த மனிதன் பெற்ற தாயைக் கூட ஒதுக்கி வைத்து விட்டவன் என்பது!
சங்கரன் இரண்டு நாளில் மறுபடியும் கூப்பிட்டார்,
“ஆத்தா தொல்லை தாங்க முடியாம இங்கே சென்னை அழைச்சிட்டு வந்துட்டேன் மா! நமக்கு தெரிஞ்ச பையன் வீட்டில் இப்ப இருக்கோம், அடுத்து தாமு வீட்டுக்கு…”
அவர் பேச்சை குறிக்கிட்டது ஆத்தாவின் குரல்!
“ஏலேய், எப்ப பாரு அந்த வெளங்காத போனிலேயே இரு. வெரசா போவலாம், கிளம்பு லே!
“வந்துட்டேன் ஆத்தா” என்றவர்
போனை கட் செய்திருந்தார்!
நிலாவுக்கு இப்போது இருப்புக் கொள்ளவில்லை! ஐயோ இனி என்ன நடக்குமோ! இவனிடம் பேசி எதையாவது செய்யலாம் என்ற நினைப்பில் இந்திரனை அழைத்தாள்!
“ஒரு முக்கியமான விஷயம்!”
“சாரி இன் மீட்டிங்” என்றான் நிலைமை புரியாது!
“ரொம்ப முக்கியம்! ப்ளீஸ்!”
அவள் பேசப் பேச போனை வைத்தவன் நீண்ட இடைவெளியாய் தோன்றிய அடுத்த பத்து நிமிடத்தில் அழைத்தான்.
“இந்திரன் இப்ப ஆத்தா சென்னையில் இருக்காங்க. உன் வீட்டுக்குப் போகப் போறாங்க!”
“இந்த சின்ன விஷயத்துக்குத் தான் போன் செய்ய சொன்னியா?”
“இது உனக்குச் சின்ன விஷயமா? நாம ஒண்ணா தான் இருக்கோம் ஆத்தாவுக்கு தெரிஞ்சா என் நிலைமை என்ன ஆகும்!”
“தெரிஞ்சா தெரியட்டும்! இது என்ன மறைக்க வேண்டிய விஷயமா? நீயா சொல்லமாட்டே! இப்படி யாராவது சொன்னா தானே நம்ம விஷயமும் மேற்கொண்டு நகரும்!”
“என்ன பேசுறே நீ!”
“உனக்கு இதை விட விளக்கமா போனில் சொல்ல முடியாது! நேரில் இருந்தா சுலபமா புரிய வைக்கலாம்!”
“உன் கிட்ட போய் கேட்டேன் பாரு! எல்லாத்துக்கும் காரணமே நீ தானே!”
அத்துடன் தொடர்பைத் துண்டித்தாள்.
இந்திரன் என்னவோ தெளிவாகத் தான் இருந்தான், எதற்காகவும் வருந்துவதில்லை என்பதில்!
இந்த ஏக குழப்பத்திலிருந்த நிலானியை வீட்டுக்குப் போகும் வழியில் நிவேதா பார்த்தாள்.
“பார்ரா கல்யாணம் ஆனா சில பேருக்குக் கண்ணு கூட தெரியமாட்டேங்குதே!”
தோழியுடன் பேச ஆரம்பித்து அப்படியே நிவியின் இல்லம் வரை வந்துவிட்டனர்.
இரண்டு பெண்கள் சேர்ந்தால் பேச விஷயமா இல்லை! அதிலும் நிலாவின் விஷயமே பேச எக்கச்சக்கமாய் இருக்கையில்!
நிவேதா எதுவும் கருத்துச் சொல்ல முனையவில்லை! ஊரில் அவனால் நடந்ததாக நிலா சொன்ன புகார்களைக் கேட்டுக் கொண்டாள். இங்கு நடக்கும் கூத்தை நிலா எரிச்சலாய் சொல்ல, நிவி ஆர்வமாய் கேட்டாள். அவளுக்குள் இருந்த கதாசிரியை நிலானி சொன்னதை வைத்து அதற்குள் இரண்டு அத்தியாயங்களைத் தயாரித்து விட்டிருந்தது!
“கொஞ்சம் ஏதாவது ஜாலியா பேசேன் நிலா! எப்போ பார்த்தாலும் இப்படி சோகப் பாட்டே பாடுறது நல்லாவா இருக்கு!”
அவள் சொன்னது உண்மைதான் என்றாலும் நிலானிக்கு இப்போது முடியவில்லை!
“நீயே ஏதாவது சொல்லு நிவி!”
“எப்போ என்னோட கதையை படிச்சு முடிப்பே? உனக்காக அடுத்த நாலு அத்தியாயத்தை ஏற்கனவே ரெடி செஞ்சிட்டேன்!”
“எப்படி வேலையும் செஞ்சிகிட்டு இத்தனை வேகமா எழுதுறே நீ”
‘அப்படி எழுதித்தானே ஆகணும், இல்ல சிட்டுவேஷன் மறந்து போயிடுமே’ நினைத்ததைச் சொல்லவில்லை அவள்!
“எல்லாம் ஒரு திறமை தான்னு வச்சிகோயேன்”
“நீ கஷ்டப்பட்டு எழுதுற அளவுக்கு இந்த கதையில் எதுவுமே இல்லை நிவி! உனக்கு என் சென்னை ஆபிஸில் நடந்த ஒரு காதல் கதையை சீன் பை சீன் சொல்றேன், அதை வேணா நீ எழுது!”
“இதில் எதுவுமே இல்லைன்னு நீ எப்படி சொல்லுவே? கதாசிரியை நான் தான் அதை முடிவெடுக்கணும்!”
“எதையோ செஞ்சு தொலை! நான் சொன்னா கேட்கவா போறே! ஆனா அந்த கதையில் எனக்கு ஒரு டவுட்!”
‘உன் கதையில் உனக்கே டவுட்டா’ என எண்ணியபடி
“சொல்லு” என்றாள் நிவேதா.
“என்னவோ ஒரே அத்தியாயத்தில் பேச ஆரம்பிச்சு, உடனே சேர்ந்து வெளியே போன மாதிரி எழுதியிருக்கியே, அதையெல்லாம் ஒத்துக்க முடியுமா?என்னவோ பார்த்த மாதிரி எழுதியிருக்க? அதுவும் போக, நீ ஊரில் போய் இருந்தது 4 மாசம், நியாபகமிருக்கா?”
“பல மாசமா பேசினாங்க பார்த்தாங்கன்னு எழுதினா, நீ படிப்பியா இல்லை எனக்குன்னு வரப் போற வாசகர்கள் தான் படிக்க முடியுமா? வாட் நான்சென்ஸ் ஆர் யூ டாக்கிங் யா”
“இந்த வாய் இருக்கே…” என்றவள் அவளை மொத்த ஆரம்பித்தாள்.
இரவு பதினொரு மணி வரையிலும் கதையடித்துக் கொண்டிருந்த நிலானியை அழைக்க வந்துவிட்டான் இந்திரன்!
“இங்க என்ன பயமா? நானே தான் வருவேனே நீ எதுக்கு வந்தே இந்திரன்? என்னைக் கொஞ்ச நேரம் கூட நிம்மதியா விட மாட்டியா நீ”
அவளைச் சலிப்புடன் ஒரு பார்வை பார்த்தான்.
“ஜாஸ்தி பேசாதே நிலாக்கண்ணு! வீட்டுக்கு வா உனக்கே தெரியும்”
ஏன் எப்போதும் தன்னிடம் வில்லன் மாதிரியே பேசி கிலியூட்டுகிறான்
என்பது வீட்டுக்குப் போனதும் அவளுக்குப் புரிந்தது. அவன் தந்தையும் அவளின் மாமனாருமான உயர்திரு தாமு வந்திருந்தார் அங்கே!
அத்தியாயம் 9
“இப்படி ஒரு கல்யாணம் செய்யணும்னு உனக்கு என்ன தலையெழுத்தா கெவின்? அதுவும் அனாதை மாதிரி ஒரு கோவிலில்! என்னை சேர்ந்தவங்களுக்கு மத்தியில் நான் அவமானப் பட்டு நிக்கணும்னு உனக்கு ஆசையா?”
அவர்கள் இருவரும் உள்ளே வந்ததும் வராததுமாய் தாமு மாமா மகனைச் சாட ஆரம்பித்து விட்டார். முதன் முதலில் அவரை நேரில் பார்க்கிறாள் நிலா! தன் தாயின் தமையன். அந்த பாசம் எல்லாம் அவருக்கு இல்லை. தன்னைப் பெற்ற அன்னையான ஆவுடையம்மாளை யாருமற்றவளாய் விட்டுச் சென்ற கல் செஞ்சக் காரனிடம் இதை எதிர் பார்க்கவும் முடியாது. நிலா அவ்விடத்தில் அவரை பார்த்துக் கொண்டு நிற்கவில்லை. உடைமாற்றும் சாக்கில் தன் அறைக்குள் போயிருந்தாலும் இவர்கள் பேச்செல்லாம் துல்லியமாய் அவளுக்குக் கேட்டது.
“அப்பா, உங்களுக்கு நடந்து முடிஞ்சதை ஏத்துக்க முடியலைன்ன விடுங்க. எனக்கு நிலா வேணும். அவளும் என்னை விரும்பினா, அதுனால கல்யாணம் செய்துகிட்டோம். தேவையில்லாம நீங்க இதில் டென்ஷனாகாதீங்க!”
“எவ்ளோ சாதாரணமா இருக்குல்ல உனக்கு? உன் அம்மா இதை எல்லாம் என் கிட்ட முதலிலேயே சொல்ல மாட்டா! ஊமை மாதிரி இருந்துட்டா! உங்களுக்கெல்லாம் நான் சம்பாதிக்கிற பணம் வேணும் ஆனா என் பேச்சை கேட்டு என் விருப்பப்படி நடந்துக்க மாட்டீங்க, அப்படிதானே”
அவர் சொன்னதில் குழம்பினான்.
“அம்மா சொல்லாம உங்களுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது?”
“போனில் பார்த்தேன்! நீ அவளுக்கு அனுப்பின உன் கல்யாண போட்டோவை! இப்படி ஒருத்தியை கல்யாணம் செஞ்சி நீ என்னத்தை சாதிக்க போறே கெவின்!”
புகைப்படத்தைப் பார்த்ததும் அழிக்கச் சொல்லியிருந்தான் தன் அன்னையிடம். அப்பா மனைவியின் போனை வேவு பார்க்கும் ஒரு அசட்டு ஆசாமி என்பது அவனுக்குத் தெரியும்!
“நான் அத்தனை முறை இவ யாருன்னு சொல்லியும் நீ என் பேச்சை மீறியிருக்கே! ஆவுடையம்மாவை பத்தி உனக்கு தெரியாது! தேவையில்லாம உன் வாழ்க்கையை நீயே வீணாக்கிட்ட! உனக்காகப் பேசி வச்சியிருந்த சாலமன் பொண்ணுக்கு என்ன பதில் சொல்ல போறேன்?”
அவர் நிறுத்துவது போல் தெரியவில்லை. நிலாவுக்கு அவர் பேச்சைக் கேட்டதில் ஏகப்பட்ட கேள்விகள். இந்திரன் பெயர் கெவினா? இவனுக்கு நான் யார் என்பது முன்னமே தெரியுமா, தெரியாதா? தன் மகன் தன் பேச்சை கேட்கவில்லை என்று குதிக்கிறாறே, இவர் கேட்டாராமா?
அவர்கள் பக்கம் இவள் வந்து நின்ற நொடி,
“அப்பா போதும்! நீங்க எப்போ ஊருக்கு கிளம்புறீங்க?” என்றான் இந்திரன்.
தாமு மாமா இவளை முறைத்தபடி,
“இன்னும் இரண்டு நாளில்!” என்றார்.
“வீட்டில் நாங்க யாரும் இருக்க மாட்டோம், நீங்க எப்படி…” அவர் அங்கே இருப்பது அவனுக்கு விருப்பமில்லை என்பது போல் பேசினான்.
“நானும் தான் இருக்க மாட்டேன், ஒரு பிசினஸ் விஷயமா தான் இந்த ஊருக்கு வந்திருக்கேன்!”
எள்ளும் கொள்ளும் வெடித்தது அவர் முகத்தில். இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தார்.
சூழ்நிலையை மாற்றுவதற்காக,
“நிலா அப்பாவுக்கு சாப்பிட ஏதாவது கொடு!” என்றான் அவளிடம்.
“அதெல்லாம் வேணாம்! நான் உன் வீட்டில் சாப்பாட்டுக்கு வந்து நிக்கலை! என் பேச்சை மீறினவன் வீட்டு வாசப்படியை மிதிச்சதே தப்பு!”
தாமு மாமா இப்போது அவள் இருக்கிறாளே என்ற இங்கிதம் கூட இல்லாமல் மகனை அவன் மனைவியின் முன் சாடிக்கொண்டிருந்தார்! இவரால் ஒரு நல்ல மகனாகவும் இருக்க முடியவில்லை! இப்போது தகப்பனின் வேலையும் ஒழுங்கே செய்யவில்லை! அவர் மீது இன்னமும் கோபம் அதிகமானது நிலாவுக்கு!
இந்திரன் முகத்தை இறுக்கமாய் வைத்திருந்தான்! நிலாவுக்கு அவனைக் காணக் கொஞ்சம் பாவமாகக் கூட இருந்தது! மத்தளம் போல் இரண்டு பக்கமும் அடி என்றால் அவனும் பாவம் தானே!
‘அப்போ நீயும் அடிக்கிறேன்னு ஒத்துக்குறே!’ அவள் மனசாட்சி வேறு சமயம் புரியாமல் அவளைச் சீண்டியது!
தலைக்கனம் கொண்டிருக்கும் இந்த மனுஷனை தனக்கு இயன்ற வகையில் ஏதாவது செய்ய வேண்டும்!
“இந்திரன் நீ சாப்பிட்டியா?” என்றாள் கணவனிடம்!
“இல்ல நிலா!”
அங்கு ஒருவர் நின்றிருப்பதை அறியாததைப் போல் இருவரும் பேசிக் கொண்டிருந்ததில் தாமு மாமா கடுப்பானது நிஜம்! அவர் முகத்தைப் பார்த்தவளுக்கு அவரை இன்னமும் வெறுப்பேற்றும் ஆவல் வந்தது!
அவரை மேலும் கடுப்பேற்றுவதைப் போல் வகை வகையாய் சமைத்து இந்திரனை மட்டும் உணவருந்த அழைத்தாள்.
இந்திரனுக்கே அவள் செய்கையில் ஆச்சரியம்!
‘நல்லா தானே இருந்தா? என்ன ஆச்சு!’
தந்தை படுக்கப் போவதாகச் சொன்னாலும் உறங்காது இவர்கள் மீது பார்வையைப் பதித்திருந்தார்.
“ப்பா வாங்க சாப்பிடலாம்!”
மரியாதை கருதி அவன் மறுபடி அழைக்க,
“கெவின் வேண்டாம்னு சொன்னா விடு, டோண்ட் கம்பெல் மீ”
அவரின் உடல்மொழியால் விளைந்த கோபத்தில், நிலாவும்
“சும்மா விடுங்களேன் இந்திரன்! நீங்க மட்டும் வந்து சாப்பிடுங்க!” என்றாள்.
திருமணமாகி இத்தனை நாளில் இந்திரனுக்குக் கிடைக்காத பாக்கியம்! இனியும் கிடைக்குமா தெரியவில்லை. இதற்காக வேணும் தந்தைக்கு தன் நன்றியைச் சொல்லியே தீர வேண்டும். நிலா தன் கையால் பரிமாறிய உணவை ஆசையாய் சாப்பிட்டான்! நிலா அவள் காரியத்தில் கண்ணாய் இருந்ததால் அவனின் முக மாறுதலைக் கவனிக்கவில்லை! தாமு மாமாவை வெறுப்பேற்ற நினைத்தாளே ஒழிய, இந்திரனின் மனம் குளிர வைத்ததாய் அவளுக்குத் தோன்றவில்லை! மகன் மருமகளின் அன்னியோன்யத்தை பார்த்து ஏரிச்சலடையும் பெற்றோர் வெகு சிலரே, அந்த வெட்டி சங்கத்தில் இப்போது தாமுவும் சேர்ந்திருந்தார்.
நிலாவின் மனம் இந்திரனுக்காய் வருந்தியது. அவன் தெரிந்தே தன்னை ஏமாற்றியதாக இத்தனை நாளும் நினைத்திருந்தாள்! அது எத்தனை சதவீதம் உண்மை என்பது இப்போது தெரியவில்லை.
மாமனார் பெரிய அறையில் உறங்கிவிட இவன் ஹாலில் படுத்துக் கொள்வான் என்ற நினைப்பில் முன்னறைக்கு வந்தாள்! அவள் நினைத்தவற்றிற்கு மாறாய் சற்று நேரத்தில் இவள் பின்னோடு வந்தான்!
“இங்கேயா வந்து படுக்க போறே!”
பதில் கூறும் முன் அறைக்குள் வந்து கதவடைத்தான்.
“ம்ம். என் அப்பாவுக்கு பாம்பு காது! கேள்வி கேட்காதே. நகரு!”
உள்ளே வந்தாலும் உடனே தூங்கினானில்லை! ஒரே நிலா பாடலாய் பாடிக் அவள் காதுகளை ஓட்டையாக்கிக் கொண்டிருந்தான்.
“கெவின் வாயை மூடிட்டு தூங்கு!”
தூங்க முடியவில்லை அவளாலும், ஏதேதோ சிந்தனைகள்.
“ஏய் என்ன டி! என் பெயர் கெவின் இல்லை! ஒழுங்கா இந்திரன்னு கூப்பிடு!”
“அப்படியா? ஆனா உங்க அப்பா அப்படி தானே சொன்னார்! அப்போ பெயரில் கூட பிராட் வேலை செஞ்சியிருக்கே நீ?”
“என்ன பேசுறே நிலா! என் பெயர் இந்திரன் தான்! எங்க அப்பா நடுவில் மாத்தினதை எல்லம் கெசட்லையே இப்ப நான் மாத்தியாச்சு! என்ன செஞ்சாலும் அவர் இந்த பெயரைச் சொல்லி என்னைக் கூப்பிட மாட்டார்!”
மணி இரவு ஒன்று! இன்னும் யோசனையில் இருந்தான்! விளக்கெல்லாம் அணைத்திருந்தாலும் ஜன்னல் வழியே தெரிந்த வெளிச்சத்தில் அவன் முகம் பார்த்தபடி படுத்திருந்தாள் நிலா. இருவருக்குள்ளும் கொஞ்சமே கொஞ்சம் இடைவெளி.
“சீக்கிரம் தூங்கு இந்திரன், நாளைக்கு வேலைக்கு போகணும்!”
“நிலா நான் தூங்கணும்ன ஒரே ஒரு வழி தான் இருக்கு!”
‘என்ன’ என்பதாய் அவள் அவனைப் பார்க்கச் சம்மதமெல்லாம் எதிர்பார்க்காமல் அவளை நெருங்கி இடையோடு அணைத்துக் கொண்டான்.
அவன் மீது தோன்றிய இரக்கம் எல்லாம் அவளை அனுமதிக்க வைத்தாலும்,
“என்ன செய்றே நீ? கையை எடு இந்திரன்”
அதே நிலையிலிருந்தவன் பதில் பேசவில்லை! இருந்த மனக்குழப்பத்தில் ஒரு ஆறுதல் தேவைப்பட்டது இருவருக்கும். சற்று நேரத்தில் அவனின் குறட்டை சத்தம் கேட்டபடி நிலாவும் உறங்கியிருந்தாள்.
ஆத்தா மகன் வீட்டு வாசலில் போய் இறங்கியிருந்தார். வாசலிருந்தே ஆரம்பித்த அவனின் ‘புது’ மத நம்பிக்கையைப் பறைசாற்றும் அறிகுறிகளைப் பார்த்தபடி முன்னேறினார்.
தாமுவின் மனைவி தேன்மொழி, பாட்டியின் வரவேற்று அவர் தந்த வசவுகளையெல்லாம் ஒரு அழுகையுடன் வாங்கிக் கொண்டார்.
“புருஷன் தான் கூறுகெட்டவன்ன, புள்ளையும் அப்படி தான் வளர்த்து வச்சியிருக்க தேனு! எம் பேத்தி என்ன பாவம் செஞ்சா, இப்படி ஏமாத்தி அந்த புள்ளையை கல்யாணம் செய்துட்டானே!”
நிலவரம் புரியாமல் ஆத்தா பழைய கதையே பேசுகிறாளே என்று நினைத்தபடி நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் சங்கரன்.
“அத்த எனக்கு இது எதுவுமே தெரியாது. ஒரு பொண்ணை விரும்புறதா சொல்லிகிட்டிருந்தான். கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் அது நம்ம நிலான்னே எனக்கு தெரியும் அத்த. என் நிலையில் இருந்து என்னைக்கும் நான் வெளியே வர முடியாது. உங்க மவன் வச்சது தான் இங்க சட்டம். உங்களுக்குத் தெரியாது அவரோட நியாயமெல்லாம். இருக்கிற ஒரே பிள்ளையும் எனக்கு இல்லாம ஆக்கிடுவாரு”
அழுத தன் மருமகளைப் பார்த்து ஆத்தாவுக்கும் மனம் கனத்து போனது!
அந்த வீட்டில் ஒரு சொட்டு தண்ணி கூட குடிக்க மாட்டேன் என்று போனவர் மருமகளின் கையால் சாப்பிட்டிருந்தார்.
“இப்படி ஒருத்தனை வளர்த்து உன் வாழ்க்கையை பாழாக்கிட்டேன், என்னை மன்னிச்சிடு தாயி” என்றாள் தாங்கமாட்டாது.
பேரனைப் பற்றிய பேச்சு வரவும் அவன் வெளிநாட்டில் இருப்பதாகத் தேன்மொழி சொல்ல ஆத்தா நம்பிவிட்டாள்! ஆத்தா அந்த வீட்டுத் தோட்டத்தை வலம் வந்த நேரம் பார்த்து, சங்கரன் தேன்மொழியிடம் இருவரும் ஒன்றாய் இருக்கும் விஷயத்தை தற்போது சொல்ல வேண்டாம் என்று மன்றாடியதில் விளைந்த பொய்!
“இந்த பிள்ளைக வாழ்க்கையில் இதுக்கு பிறவு என்ன செய்றதா உத்தேசம்!”
“அத்த இந்திரன் அவன் அப்பா மாதிரி இல்லை! நிலாவை நல்லா பார்த்துப்பான். அவளும் விரும்பியிருக்கான்னு சொல்றீங்க, அவங்க பிரிச்சுடாதீங்க அத்த. என் மகன் பாவம், அவன் வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டிருக்கான். அவனுக்காவது நீங்க எல்லாரும் வேணும்”
தாமு இருந்திருந்தால் என்ன நடந்து இருக்குமோ தெரியாது, ஆனால் மருமகள் அந்த முதியவளை அன்பால் சாய்த்துவிட்டாள்!
“அதெல்லாம் நான் யோசிக்கிறேன்! உன் புருஷன் எப்போ வருவான்?”
“எனக்குத் தெரியாது அத்த. இன்னிக்கு வந்திருக்க வேண்டியது, இரண்டு நாள் கூட ஆகும்னு சொல்லிட்டார்”
ஆவுடையம்மாள் தன் மருமகளை எப்போதும் நெற்றி நிறையப் பொட்டுமாய் பார்த்திருக்கிறார். இப்போது எதுவும் தீட்டிக் கொள்ளாது அவள் இருந்த கோலத்தை அவரால் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை!
“நான் கிளம்புறேன் தேனு!” ஆவுடையம்மாளும் சங்கரனும் அவரிடம் ஒரு தலையசைப்புடன் விடைபெற இத்தனை வருடங்களாய் மனதை அழுத்திக் கொண்டிருந்த பாரம் சட்டென்று குறைந்தது போல் இருந்தது தேன்மொழிக்கு!
சங்கரன் நிலாவை தொலைப்பேசியில் அழைத்து அங்கு நடந்த அனைத்தையும் சொல்லிவிட்டார்!
அத்தியாயம் 10
கதவு தட்டும் சத்தம் கேட்டு எழ முயன்றவனை நகர விடாது அவன் மார்பின் மீதே சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் நிலானி. அவனை நெருங்கவிடாமல் இத்தனை நாள் இருந்தவள் இன்று எவ்வித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருந்தாள். சற்று நேரம் அவ்வணைப்பை ரசித்தவன் கதவொலி தொடரவும் எழுந்து வந்தான்.
வெளியே தாமு தயாராய் நின்று கொண்டிருந்தார்.
“எங்கே பா கிளம்பிட்டீங்க?”
“எனக்குக் காபி வேணும் வெளியே போய் குடிச்சிட்டு அப்படியே கிளம்புறேன்!”
“இத்தனை காலையில் எங்க இருக்கும் காபி ஷாப்? இங்க எந்த நாயர் டீ கடை போட்டிருக்கார்! வாங்க நான் போட்டு தரேன்”
“உன் வீட்டில் எனக்கு…”
“அப்படி நினைச்சவர் இங்கே வந்திருக்கவே கூடாது, பேசாம இருங்க. காலையிலேயே மூடவுட் செய்யதீங்க!”
அவனே அவருக்குப் பிடிக்கும்படி ஒரு காபியைப் போட்டுத் தந்தான்!
“நான் குளிச்சிட்டு வந்து பிரட் போட்டு தரேன்” என்றவன், நிலாவுக்கு ஒரு கப்பை எடுத்துக் கொண்டு அங்குப் போக அப்போது தான் எழுந்திருந்தாள்!
அவள் பக்கம் குனிந்து அவள் முகத்தை மறைத்த முடிக்கற்றை காதோரம் ஒதுக்கிவிட்டபடி,
“இந்தா நிலா, இதை குடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பு! நான் அப்பா கூட போறேன்” சம்மதமாய் தலையசைத்தவளை, ஒரு பார்வை பார்த்த பிறகே அவ்விடத்திலிருந்து விலகினான்.
அவர்கள் போகும் வழி முழுவதற்கும் தந்தை அமைதியாக வந்தார். அவர் இறங்க வேண்டிய இடத்தில் இந்திரனையும் தன்னுடன் அழைத்தவர்,
“ஏதோ அந்த பொண்ணு பார்த்த பழகினே! பார்க்கவும் லட்சணமாய் இருக்கு, கல்யாணம் செய்துகிட்டே! ஆனா இந்த உறவைத் தொடர நினைக்காதே கெவின்! லீகலா பிரிஞ்சிடுங்க! அதுக்கு என்ன செய்ய முடியுமோ அதைப் பிரச்சனை வராதபடி செஞ்டிடலாம்.”
அவன் தோளில் ஆதரவாய் தட்டி, என்னவோ அவன் இந்த விஷயத்துக்காக அவரிடம் வருந்தியதைப் போலப் பேசினார். அவர்கள் இப்போது இருந்தது ஒரு பூங்கா. பேசியபடி அங்கு வந்து சேர்ந்திருந்தனர். காலை பரபரப்பில் இவர்களைப் போல் யாரும் அங்கு அமர்ந்திருக்கவில்லை.
தந்தையின் பேச்சில் இந்திரனுக்கு எல்லையில்லா கோபம். இவருக்குப் புத்தி எதுவும் கெட்டுவிட்டதா! தாங்கமாட்டாமல்,
“அப்பா இதுக்கு மேல் ஒரு வார்த்தை பேசுனீங்க நல்லா இருக்காது. உங்க கிட்ட எத்தனை தடவை சொல்றது நிலா மட்டும் தான் எனக்குன்னு!”
சொன்னவன் விடுவிடுவென்று அங்கிருந்து கிளம்பிவிட்டான். ‘இவர் கிட்டப் பேச்சு வச்சிகிட்டதே தப்பு. அவருக்கு என்னைக்கும் பாட்டியையோ, அவங்களை சேர்ந்தவங்களையோ பிடிக்காது.’
போன முறையும் அவர் இங்கு வந்திருக்கையில்,
நிலானியை புகைப்படத்தில் பார்த்திருக்கிறார், எதேச்சையாய் அவன் போனில்! இவனிடம் யாரென்று விசாரிக்க, தோழி என்றிருக்கிறான்! அவரடைந்த அதிர்ச்சி இன்னமும் ஞாபகம் இருக்கிறது இந்திரனுக்கு!
“இது…இது…உன் அத்த பொண்ணு தான் கெவின்!”
சொல்வதற்கு தயக்கமிருந்தாலும் சொல்லிவிட்டார்!
“என்ன பா சொல்றீங்க?”
“ஊர் அம்பாசமுத்திரம் தானே சொன்னே?”
“ஆமா”
“அவ பாட்டி பேர் ஆவுடையம்மாள் தானே?”
“அப்பா அதெல்லாம் எனக்குத் தெரியாது”
“அச்சு அசல் என் தங்கையை உரிச்சு வச்சியிருக்கா. இது கண்டிப்பா நிலானிதான்”
அவன் சொல்லாமலே அவள் பெயரைச் சரியாகச் சொல்லியிருந்தார்.
“எனக்கு அது பத்தி தெரியலை! அவ கிட்ட வேணா கேட்டு பார்க்குறேன்!”
“இதைப் பத்தி பேசின அடுத்த நிமிஷம் உன்னை ஒதுக்கிடுவா கெவின். உனக்கு பிரண்ட்ஷிப் முக்கியமுன்ன இப்போதைக்கு நீ யாருன்னு அவளுக்கு தெரியாம பார்த்துக்கோ!”
தருணம் பார்க்கவில்லை இந்திரன்!
“பிரண்ட் மட்டுமில்லை பா!”
மகன் மென்று விழுங்கியதைப் பார்க்க அவருக்கு எப்படி இருந்ததாம்!
“எனக்கு அவளை பிடிச்சிருக்கு, கல்யாணம் செய்ய நினைக்கிறேன்.”
“ஆர் யூ எ ஃபூல். நம்ம ஆளுங்க கிட்ட இல்லாத பொண்ணா! அவங்களையெல்லாம் விட்டிட்டு எவளையோ கல்யாணம் செய்ய நினைக்கிற!”
“அப்பா நீங்க முட்டாள்தனமா நினைப்பை வளர்த்து கிட்டா நான் பொறுப்பு கிடையாது . யார் நம்ம ஆளுங்க? உங்க மனசைத் தொட்டு சொல்லுங்க பார்போம்”
“கெவின் செபாஸ்டியன்…” அலறியிருந்தார்.
இதை எல்லாம் யோசித்தவனுக்கு அலுவலகம் வந்த பின்பும் வேலையில் மனம் லயிக்கவில்லை. தூக்கமின்மை, மனக்குழப்பம் எல்லாம் சேர்ந்து கொள்ள மதியம் வரை தாக்குப் பிடித்துப் பார்த்து, செய்த வரை போதும் என்று வீடு திரும்பிவிட்டான்.
மறுபடியம் தந்தையின் சொற்களே அவனை சுழட்டியடித்தது! இந்த எண்ணங்களைத் தூக்கி எரிய முதலில் தூங்க வேண்டும் என்று படுத்தவனை, தொந்தரவு செய்தது நிலானி.
“நீயும் சீக்கிரமா வந்திட்டியா?” கதவைத் திறந்த சத்தம் கேட்டு அவளருகில் வந்தான்.
“இங்க பக்கத்துக் கடைக்குத் தான் போயிட்டு வரேன். நான் இன்னிக்கு ஆபிஸ் போகவே இல்லை. நீ என்ன பாதியில் வந்திட்டே?”
“அது…” அவன் முடிக்கும் முன் தொலைப்பேசி அலறியது.
தாமு தான் மகனை அழைத்தார். புது ஊரில் அவர் நிலை என்னவோ என்றபடி அவன் அந்த அழைப்பை ஏற்க,
“கெவின், நரிட்டா ஏர்போர்டில் இருக்கேன். ஊருக்கு கிளம்புறேன். போய் சேர்ந்திட்டு போன் செய்றேன்!”
“சரி”
“நான் சொன்னதைக் கொஞ்சம் யோசி கெவி…”
“அப்பா கொஞ்சம் நிறுத்துறீங்களா. கொஞ்சம் விட்டா பேசிட்டே போறீங்க? என்னால அவ இல்லாம வாழ முடியாது. உங்களை மாதிரி சந்தர்ப்பத்துக்கு மாறிடும் ஆள் நான் இல்லை. என்னோட இந்த ஜென்மத்துக்கு அவ மட்டும் தான். அவ இல்லாம எனக்கு வாழ்க்கையே கிடையாது. உங்களுக்கு புரிஞ்சாலும் புரியலைனாலும் இதுதான் உண்மை!”
அவர் பதிலைக் கேட்காமல் போனை வைத்திருந்தான். சோபா மீது அந்த செல்பேசியை அவன் கோபமாய் தூக்கிப் போட்டுவிட்டு நிமிர, நிலானி அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.
அத்தியாயம் 6:
நிவேதா ஊரிலிருந்து திரும்பும் நாளில், அவளை அழைக்கப் போயிருந்தனர் நிலாவும் இந்திரனும்! நிவிக்கு அவ்விருவரையும் சேர்த்துப் பார்த்ததே முதல் ஆச்சரியம்! இதெல்லாம் எம்மாத்திரம் என்பது போல் நிலானி காரின் டிரைவர் சீட்டில் அமர,
“நிலா உனக்கு விளையாட வேற நேரமே கிடைக்கலையா? வீட்டுக்கு போகணும் சீக்கிரம், இறங்கு அவர் வண்டி ஓட்டட்டும்!”
“ஹேய் நான் தான் டி இந்த ரெண்டல் காரை எடுத்திட்டு வந்தேன், இந்திரன் என் துணைக்கு மட்டும் தான் வந்தார்!”
ஆங்… எல்லாவற்றையும் தன்னிடம் ஒப்புவிப்பவள் இந்த விஷயத்தைச் சொல்லவே இல்லையே! சமீபமாய் அதிகம் பேசாமல் விட்டதற்கு இதுவும் ஒரு காரணமா? ஆச்சரியத்தில் அசராமல் நின்ற நிவி மெதுவாய் முன்பக்கம் வந்து அமர முயல,
“நிவி நீ கொஞ்சம் பின் சீட்டில் உட்காரேன். அவர் என் பக்கமிருந்தா கொஞ்சம் வழி சொல்ல வசதிப்படும்!
‘ஹா இப்பவே கண்ணைக் கட்டுதே!’
“நீங்க வேணா ஒண்ணா முன்னாடி போங்க, நான் வேணா பஸ்ஸில் வந்திடவா?” நிவேதாவின் கடுப்பை புரிந்து கொள்ளாமல்,
“ப்ளீஸ் நிவி, நான் ஏதாவது தப்பு பன்ணிட்டா லைசன்சில் எனக்கு பாயிண்ட் போயிடும்! அதைத் திருப்பி எடுக்குறது எவ்ளோ கஷ்டம் தெரியுமில்ல!”
பாவமாய் கேட்பவளிடம் கோபம் கொள்ள முடியவில்லை நிவிக்கு!
இந்திரன் தோழிகளின் இந்த சம்பாஷனைகளைப் பார்க்கவில்லை! அப்போது தான் டிராலியை அதனிடத்தில் வைத்துவிட்டுத் திரும்பியிருந்தான்!
“போலாமா நிலா?”
வழியெங்கும் அவர்கள் இருவரும் சகஜமாய் பேசிக் கொண்டதில் இன்னமும் குழம்பிப் போனாள் நிவி. அவன் அவளை ஒருமையில் அழைப்பதும், நிலா தன்னிடம் போல் இந்திரனிடம் சாதாரணமாய் பேசியதும் நிவியை யோசிக்க வைத்தது!
‘என்னடா நடக்குது இங்கே!’
வீட்டிற்கு போன பிறகும்,
“இந்திரன் இன்னிக்கு எங்க கூட டின்னர் சாப்பிடுங்க” என்றழைப்பு விடுத்தது இம்முறை நிவி இல்லை, நிலானி!
அந்த காட்சியைத் திறந்த வாய் மூடாமல் வினோதமாய் பார்த்துக் கொண்டு நின்றாள் நிவி!
“இட்ஸ் ஓகே! இன்னொரு நாள் பார்க்கலாம்” என்றவனை விடும் எண்ணம் இல்லை நிலாவுக்கு!
நிரம்பவும் வற்புறுத்தி அழைத்தாள்!
“ஓகே ஓகே…நான் வண்டியைத் திருப்பிக் கொடுத்திட்டு வரேன்!”
நிவியை அதன் பின் கண்டுகொள்ளவே இல்லை நிலா! வந்தவனை விழுந்து விழுந்து கவனித்த அழகைப் பார்த்துக் கடுப்பாகிப் போன நிவேதா, உணவருந்திவிட்டு சீக்கிரமே தூங்குகிறேன் என்றபடி அறைக்குள் சென்றவள் அங்கிருந்து அவர்கள் பேச்சை ஒட்டுக்கேட்க ஆரம்பித்தாள்!
“ஊரில் உங்க அப்பா என்ன செய்றாங்க இந்திரன்?”
“பிசினஸ். சொந்தமா ஷாப்பிங் காம்லெக்ஸ் வச்சியிருக்கார்.”
“ஓ ஹோ”
“அடிக்கடி டிராவல் செய்வார். சீனாவுக்கு மாசத்தில் ஒரு தடவையாவது வந்திடுவார்! இந்த முறை இங்கே வரேன்னு சொன்னார்! இன்னும் தெரியலை!”
அவளிடம் பதிலுக்கு எதுவும் கேட்கவில்லை! அவள் மனதைச் சங்கடப்படுத்த விருப்பமில்லை!
“என் அம்மாவுக்கு அலங்கார பொருட்கள் எல்லாம் ரொம்ப இஷ்டம்! ஆனா என்ன வாங்கிறதுன்னு தெரியலை நிலா. அப்பாகிட்ட ஏதாவது கிப்ட் கொடுத்து விடணும்”
ஏற்கனவே எல்லாம் தயார். தந்தை வந்தாலும் வராவிட்டாலும் அன்னைக்கு வேண்டுமென்று முதலிலேயே வாங்கி வைத்துவிட்டான். ஆனாலும் நிலாவுடன் வெளியே போகும் சந்தர்ப்பத்தை வலிய ஏற்படுத்திக் கொண்டான்!
“நீ கொஞ்சம் என் கூட ஷாப்பிங் வாயேன் நிலா!”
சற்று தயங்கினாள். பல முறை சென்றபோதெல்லாம் தோன்றாத தயக்கம் இப்போது அளவுக்கு அதிகமாய்! நிவியும் உள்ளறையில் அவள் பதிலுக்காகக் காத்திருக்க,
“யோசிச்சு மெசேஜ் செய்றேன் இந்திரன்!”
அதன் பிறகும் ஏதேதோ விஷயங்கள் பேசிக்கொண்டிருந்தவர்கள் எப்போது முடித்தார்களோ! நிவி தூங்கியிருந்தாள்.
நிவேதாவுக்கு பல விஷயங்கள் பிடிபட்டிருந்தது! எப்படியும் நேரடியாகக் கேட்டால் நிலா ஒத்துக் கொள்ளப் போவதில்லை! ஆனாலும் ஆர்வக்கோளாறு யாரை விட்டது? அடுத்த நாள் காலை,
“என்ன டி நான் போகும் போது நிலைமை வேற மாதிரி இருந்தது! திடீர்னு இப்ப என்ன ஆச்சு? ஊரில் வெயில் பொசுக்குதேன்னு இங்க வந்தா, இங்க அதுக்கும் மேல எனக்கு மண்டை காயுது!”
நேற்றிலிருந்து தோழியின் சந்தேக பார்வை இப்படிக் கேட்பாள் என்பதைப் புரிய வைத்திருந்தாள் நிலாவும்,
“நீயா ஏதாவது கற்பனை செஞ்சுக்காதே! ஜஸ்ட் பிரண்ட்ஸ்”
“பிரண்ட்ஸா! சும்மா அவர் கூட பேசுறதையே தப்புன்னு சொன்னியே நீ!”
“அது…அவரைப் பத்தி தெரியாம சொன்னது! இப்ப தான் சரியா புரியுது! சரி இந்த பழைய விஷயத்தையெல்லாம் எங்கையாவது உளறி வைக்காதே! நான் அப்படிச் சொன்னதையெல்லாம் அழிச்சிடு!”
நிலாவின் செய்கையில் நமுட்டு சிரிப்பு சிரித்தபடி தன் பணிக்குக் கிளம்பினாள் நிவேதா!
அத்தியாயம் 11
ஆர்வகோளாரில் நிவியிடம் உளறியதெல்லாம் தவறோ! புத்தியற்று தன்னுடன் இருந்தவளிடம் எல்லாவற்றையும் சொல்ல அதை அச்சு பிழறாமல் அச்சில் வடித்திருந்தாள் நிவேதா!
படித்து முடிக்கவும் அவன் தன் தந்தையிடம் பேசியதும் அதன் பின் நிகழ்ந்ததும் வேறு இப்போது நிலானிக்கு ஞாபகத்துக்கு வந்தது!
அவன் பேச்சைக் கேட்டு ஸ்தம்பித்து நின்றவள் எதுவும் சொல்லாமல் கிட்சனுக்குள் நுழைய பின்னோடு வந்திருந்தான்,
“வழக்கத்துக்கு மாறா பேசாம போறே, நான் உனக்காக என் அப்பா கூட சண்டை போட்டிட்டு இருக்கேன் தெரியுதா!”
அவன் சொன்னதில் கண்களில் இத்தனை நேரமும் தேங்கியிருந்த கண்ணீர், அவள் கன்னங்களில் தன் பாதையை தேர்ந்தெடுத்து வழிய ஆரம்பித்தது.
“எனக்குத் தெரியும் இந்திரன்” என்றாள் சின்ன குரலில்!
“என்ன தெரியும்?”
“நீ என் மேல் உயிரே வச்சியிருக்கேன்னு! என்னை ஏமாத்திட்டேன்னு கோபம் மட்டும் தான்” அவனுக்கு எதிரிலிருந்தவள் தலைகுனிந்தபடி சொல்லிவிட்டு எதிர்பாராமல் அவனைக் கட்டிக் கொண்டாள்!
சற்று நேரம் இருவரும் பேசவில்லை!
“இப்போ கோபம் போயிடிச்சா?” என்றவன் அவன் பங்குக்கு அவளை அணைத்திருந்தான்!
“ம்ம்ஹும்…இன்னுமில்லை”
தன் அணைப்பை இன்னமும் இறுக்கியவன்,
“அப்போ என்னை என்ன செய்றே நீ!”
இன்னும் ஆழமாய் அவனுக்குள் ஒடுங்க முயன்றவளின் முகத்தை நிமிர்த்தியவன், குனிந்து அவளின் சின்ன உதடுகளைச் சிறை செய்தான்.
இருவரின் மோன நிலையைக் கலைப்பது போல் ஆவுடை பாட்டி சரியாய் அந்த நேரத்தில் நிலானியை அவள் தொலைப்பேசியில் அழைத்தாள். சென்னை போய் வந்ததிலிருந்தே அடிக்கடி அழைக்கிறாள். வீட்டில் அவனும் இருந்தால் போனை எடுப்பதே இல்லை நிலானி!
வம்பா! இப்போதும் தொலைப்பேசியைப் பார்த்தபடி சைலண்டில் போட்டுவிட, அவன் அழைப்பை ஏற்று அவளிடம் நீட்டினான்!
‘ஏன் டா எடுத்தே’ என்பது போல் சைகையில் திட்டியவள்,
“சொல்லு ஆத்தா எப்படி இருக்கே?”
“ஏட்டி ஒரு போன போட்டா என்னட்டி! கிழவி ஒருத்தி இங்க தனியா இருக்கேன்னு உனக்கு ஏதாவது நெனப்பு இருக்கா!
இல்ல இருக்கான்னு கேட்கேன்”
பாட்டி சரியான கோபத்திலிருந்தாள்!
அவள் என்ன பதில் சொல்ல என்று யோசித்துக்கொண்டிருக்க இத்தனை நேரமும் அவளின் செய்கைகளில் லயித்திருந்தவன் அவளை விட்டு அகலாமல் இடையோடு கட்டிக் கொண்டான்! நிலாவுக்கு நிஜமாகவே இப்போது மூச்சு முட்டியது!
ஒற்றைக் கையை வைத்து எத்தனை தான் அவனைத் தடுக்க முடியும்! பாட்டி பேச்சுக்குப் பதிலும் பேசமுடியவில்லை! பேசிக்கொண்டிருந்த போனை ஸ்பீக்கரில் போட்டவள், தன் இரண்டு கைகளால் அவனை விலக்கி விட அதற்குள் பாட்டி அடுத்த வில்லங்கத்தை ஆரம்பித்தாள்!
“நிலா உனக்கு வேற ஒரு நல்ல மாப்பிள்ளையைப் பார்க்க ஆரம்பிக்கேன் புள்ள! சீக்கிரமா ஒரு கண்ணாலத்தை முடிஞ்சோம்ன்ன வையி, அந்த கிரகம் பிடிச்சவன் உன் வழிக்கே வர மாட்டான்”
அவளிடம் அவனின் பிடி இப்போது தளர்ந்திருந்தது. பாட்டி என்ன பேசினாள் என்று அவள் கிரகிக்கும் முன்பே,
“ஏய் கிழவி! என் பொண்டாட்டிக்கு வேற மாப்பிள்ளை பார்ப்பியா நீ! என்ன நின்னைச்சிட்டு இருக்கே உன் மனசில்! வயசாயிடிச்சேன்னு பார்க்கிறேன்! இல்லைன்ன உன்னை வச்சி வாங்கிடுவேன்!”
“யார் லே அது? எம் பேத்தி போனில் குறுக்கே பேசுறது!”
அவன் வாயை கைகளால் மூட முயன்ற நிலாவின் முயற்சியைத் தடுத்தவன்,
“யாரா! நான் அவ புருஷன். ஒண்ணா குடும்பம் நடத்திட்டு இருக்கிறவளைக் கூப்பிட்டு வேற கல்யாணம் பண்ணுவியா நீயி! உன்னையெல்லாம்…”
அதற்குள் நிலானி தொலைப்பேசியைக் கட் செய்திருந்தாள்! ஆவுடை பாட்டி மீது சரியான ஆத்திரத்திலிருந்தான்!
“எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசாதே இந்திரன். அவங்க வயசானவங்க! மனசு கஷ்டபடுவாங்க!”
“பின்ன அவங்க எப்படி அப்படி சொல்லலாம்! நான் இப்ப உன் பக்கத்தில் இல்லைன்ன அவங்க சொன்னதுக்கு சரின்னு சொல்லியிருப்பியோ!”
“இந்திரன்!”
அவளை எரித்து விடுவதைப் போல் முறைத்தவன் கோபித்துக் கொண்டு அந்த இடத்திலிருந்து போயிருந்தான்!!
ஆசியக் கண்டத்தில் இன்னொரு பக்கமிருந்த ஆவுடை பாட்டிக்கு ஏக குழப்பம்! தன் பக்கமிருந்த சங்கரனிடம்,
“என்னலே வேற யாரோ பேசுறாங்க! சங்கரா இந்த போனில் கொஞ்சம் என்னன்னு பாரு!”
சங்கரனுக்கு நிலைமை கொஞ்சம் பிடிபட்டது!
“அந்த தாமு மவன் எங்கன இருக்கான்?”
தன் நாற்காலியில் அமர்ந்த ஆவுடையம்மாள் யோசனையாய் அவரிடம் கேட்டார்!
“ஆத்தா! நீ இப்ப நிலா கூடத் தானே பேசின?”
“இல்ல லே! நிலா புருஷன்னு எவனோ எடுபட்டவன் குறுக்கே பேசினான். போன் வேற கட் ஆகிட்டு!”
இன்னமும் இந்த விஷயத்தை மறைத்து என்ன தான் ஆகப் போகிறது! ஒரு முடிவுக்கு வந்தவராய் தீவிர யோசனையிலிருந்த ஆவுடையம்மாளிடம்,
“ஆத்தா” மெதுவாய் இழுத்தார்!
“என்ன லே”
“ஆத்தா நான் எனக்கு தெரிஞ்ச விஷயத்தை உனக்கு சொல்லணும் ஆத்தா!”
“என்ன லே பம்முதே! விஷயத்தை சொல்லு!”
“நிலா அங்க சப்பான்ல அவ மாப்பிள்ளை கூட தானிருக்கா”
பாட்டி யோசனையாய் அவரையே நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்!
அத்தியாயம் 7
“என்ன இன்னிக்கு இன்னமும் போன் வரலை? இந்த வாரம் ஊர் சுத்துறதும் கொஞ்சம் குறைஞ்ச மாதிரி தெரியுது! திருந்திட்டியா என்ன!?”
பொய் கோபத்துடன் நிவியைப் பார்த்தவள்,
“அவர் அப்பா வந்திருக்காராம், அதுனால பேச நேரமில்லை போல!”
“பார்ரா! அப்போ மாமனாரைப் போய் நேரில் பார்த்துட்டு டமால்னு ஆசீர்வாதம் வாங்கினா உங்க லைன் கிளியர் ஆகுமில்ல! உனக்குக் கொஞ்சம் கூட விவரம் பத்தாது நிலா!”
சோபாவில் அலங்காரமாய் இருந்த தலையணை அப்படிச் சொல்லியிருந்தவளை நோக்கிப் பறந்து வந்தது!
“ஏய் குணமா வாயால சொல்லணும்னு எத்தனை முறை சொல்லியிருக்கேன்!”என்ற நிவியை,
“நிவி! சும்மா ஓட்டாதே! எங்களுக்குள்ள அப்படியெல்லாம்…அப்படியெல்லாம் எதுவுமில்லை! நான் தான் பல தடவை சொல்றேன்னில்ல, நம்பமாட்டியா நீ!”
‘இதைத் திக்காமல் சொல்லவே இத்தனை திணறுகிறாயே உன்னை நம்புவாளா நிவேதா!’ நிலானியின் மனசாட்சி வேறு குறுக்கே பேசியது.
“நீ எல்லாம் தான் சொல்றே! அவரோட பேச்சைப் பார்வையைப் பத்தியும் தான் கதை கதையா சொல்றே… எனக்கு என்னவோ இப்ப உங்க இரண்டு பேர் மேலையும் சந்தேகமாவே இருக்கு!” நிவேதாவுக்கு இதை நிறுத்திவிடும் எண்ணமில்லை!
“அந்த தலையணையைக் கொஞ்சம் இப்படி தாயேன்!”
வசமாய் நிவி கட்டிக்கொண்டிருந்ததை நிலானி கேட்க,
“எதுக்கு மறுபடியும் என் மேல போடவா! போடி!” என்றாள் நிவேதா!
“பிடிச்சிருந்தா ஒத்துக்கோ நிலா, அதை மறைச்சு என்ன சாதிக்க போறே! நாளைக்கு விட்ட பிறகு வருத்தப்படக் கூடாது இல்ல!”
இந்திரன் ஏனோ இப்போதெல்லாம் முன்பு போல் அவளிடம் பேசுவதே இல்லை!
தந்தை கிளம்பியாயிற்றா என்று இவள் குறுந்தகவலாய் கேட்டதற்கும் ஆம் என்று பதில் அனுப்பினானே ஒழிய அதன் பின் அவனாய் எதுவும் அவளிடம் கேட்பதில்லை!
என்ன நடந்தது என்பது நிலாவுக்குத் தெளிவில்லை! ஆனால் ஏனோ ஒரு வெறுமை! நிவியிடம் மறைத்தாலும் அவள் உண்மை நிலை அவள் மாத்திரம் அறிந்ததே!
பாட்டி வேறு ஊரிலிருந்தபடி அடிக்கடி இவளின் கல்யாண பேச்சை எடுக்க ஆரம்பித்தாள்.
“சின்ன வயசுன்னு நினைப்பா உனக்கு? உன் கூட சுத்திட்டு இருந்தவ எல்லாம் இப்ப அவளுக பிள்ளைங்க பின்னாடி திரிஞ்சிட்டு இருக்காளுக, நீ இன்னமும் அந்த லப்டப்பைப் பிடிச்சிட்டு தொங்கிட்டிருக்கவ!”
“எனக்கு இன்னும் வேலை பார்க்கணும் ஆத்தா! கல்யாணமெல்லாம் இப்ப வேணாம்!”
பல முறை சொல்லிவிட்டாள்!
“அந்த பேச்சே பேசக் கூடாது! உன்னை இத்தனை வருஷம் வளர்த்து ஆளாக்கியிருக்கேன், எனக்குத் தெரியாதா உனக்கு எப்போ எதை செய்யண்ணு! ஊருக்கு வான்ன வெரசா வந்து நில்லு! நான் சொல்றது வெளங்குதாட்டி?”
“ஆத்தா…”
“பேசாதே! அப்பன் ஆத்தா இல்லைன்னு உனக்கு ரொம்பத்தான் செல்லம் கொடுத்திட்டேன்! விட்டு பிடிப்போம்னு பார்த்தா, உன் இஷ்டத்துக்கே இந்த கிழவிய இழுக்கே நீயி!”
நிலானியின் மறுப்பை இந்த முறை ஆவுடை பாட்டி சட்டை செய்யவில்லை!
தொலைப்பேசியை வைத்தபின் தன் அடுத்த முடிவு என்ன என்பது நிலானிக்கு புரியவில்லை. இந்திரன் மீது இஷ்டம் இருக்கிறது, அவனுக்கும் தன் மீது உண்டு என்பதும் தெரிந்தது! அதை அவன் மூலமே தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும்! அவன் குடும்பம் பற்றி எதையும் ஆராயாமல் தான் மட்டும் இப்படி மனதில் ஆசையை வளர்த்து விட்டது தவறோ என்ற ஐயமும் ஒரு பக்கம் இருந்தது.
இதில் யோசனையாய் இருந்தவளிடம் வந்தாள் நிவேதா.
“என்ன நிலா, ஏதோ கல்யாணம்னு பேச்சு அடிபட்டது!”
கேட்டிருக்கும். வேண்டுமென்றே மறுபடியும் கேட்கிறாள். விளக்கம் சொல்லும் எண்ணமில்லை!
“ஒண்ணுமில்லை!”
அவள் கண்களைச் சந்திக்க தயங்கினாள்.
‘என் கிட்ட சொல்லாம எங்கே போயிட போறே நிலானி’ நினைத்தபடி தோழியை அப்போதைக்கு விட்டாள் நிவேதா!
அடுத்த நாள் அலுவலகத்திலிருந்து அவனை அழைத்தாள் நிலா,
“இந்திரன் நான் நிலா! இன்னிக்கி உங்களைப் பார்க்க முடியுமா?”
என்னவோ டீனேஜ் பருவத்தில் இருப்பதைப் போல் படபடப்பாயிருந்தது. எப்போதும் பேசும் நபர் தான் என்றாலும் எண்ணம் இப்பொழுது வேறுபட்டிருந்ததே!
“நிலா கொஞ்சம் வேலையிருக்கு! லேட்டா தான் வரமுடியும், பரவாயில்லையா!” என்றபடி சந்திக்கும் இடத்தை முடிவு செய்திருந்தனர்!
அவள் கண் முன் தெரிந்த இயற்கை அழகையெல்லாம் ரசிக்கும் மனநிலை தற்போதில்லை நிலானிக்கு. ஆரஞ்சு நிறத்தில் மாறிய சூரியனும், அதன் ஒளியில் மின்னிக் கொண்டிருந்த கட்டடங்களும் இவள் ரசனையைப் பார்த்து நொந்து போயிருக்கும்!
அவர்கள் இருவரும் சேர்ந்து வெளியே செல்லும் பலமுறையும் அவளுக்கு முன்பு வந்து காத்திருப்பவன் இன்று இன்னமும் வரவில்லை. அவன் வரவை எதிர்பார்த்து அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்தவள், பள்ளி சிறுமியைப் போல் என்ன, எப்படிப் பேச என்று மனதுக்குள் ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்தாள்.
இல்லாத சந்தேகமெல்லாம் தோன்றியது!
‘அவனிடம் எப்படிச் சொல்ல?’
‘தலைகுனிந்து சொல்லணுமா?’
‘வெட்கப்படணுமா?’
“வெட்கமா… அப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை!” இவள் நிலைமை புரியாத அவளின் மனசாட்சியே அவளிடம் தன் அழிச்சாட்டியத்தைக் காட்டியது!
‘இத்தனை தூரம் வந்திட்டு உனக்கு என்ன டி பிரச்சனை! கமான் நிலானி’
முடிவெடுத்து நிமிர்ந்த நொடி அவனும் வந்திருந்தான்!
‘இன்னிக்குன்னு பார்த்து ஏன்டா இம்புட்டு அழகா இருக்கே’
அவன் போட்டிருந்த அந்த நீல நிற சட்டை அவனை இன்னமும் எடுப்பாய் காட்ட அவனையே பார்த்திருந்தாள் நிலானி, சொல்ல வந்ததை எல்லாம் மறந்தபடி!
அத்தியாயம் 12
“உனக்கு யாரு லே சொன்னது!”
ஆவுடை பாட்டியின் முறைப்பை எதிர்கொண்டிருந்த சங்கரனோ எந்த யோசனையுமில்லாமல்,
“நிலா தான் ஆத்தா!” என்றார்.
“அவளுக்கு அத்தனை தைரியம் எங்கேயிருந்து லே வந்தது! ஆமாமா…ஆவுடை பேத்திதானே, இல்லாமலா போகும்!”
தனக்குள் பேசிக் கொண்டார் சங்கரனுக்கும் கேட்கும்படி,
“நான் தான் அத்தனை தரம் கேட்டேனே அவனை பிடிச்சிருந்தா நான் போய் அந்த தாமு கிட்ட பேசுறேன்னு, இந்த புள்ள என்கிட்ட வாயை தொறக்கலையே!”
“நிலா என்ன நினைக்கான்னு தெரியலை ஆத்தா! ஆனா தேன்மொழி சொன்ன மாதிரி அந்த பையன் நம்ம நிலா மேல ரொம்ப உயிரா இருக்கான் போல ஆத்தா!”
“தேனு அப்படிச் சொன்னாளா லே! அப்போ அவளுக்கும் எல்லாம் தெரியும், அப்படிதானே!”
“ஆமா! நாம போனப்ப தாமு அங்கன இருந்திருந்தா விஷயத்தைப் போட்டு உடைச்சிருப்பான். நானும் அவன் மூலமா உனக்கு வர வரைக்கும் சொல்ல வேணாம்னு இருந்தேன் ஆத்தா!”
சிந்தனையில் மூழ்கினாள் பாட்டி!
“மறு கல்யாணம்னு நான் பேசப்போக எம் பேரனுக்கு இன்னிக்கு ரோஷம் வந்திருக்கு, அப்படிதானே லே!”
ஆம் என்பதாகச் சங்கரன் தலையசைத்தார்! பாட்டி வைத்திருக்கும் பழைய காலத்து நோக்கியா போனில் ஒருவர் பேசினால் சுற்றி நிற்கும் எட்டு பேருக்கும் கேட்கும்! அவருக்கும் கேட்டிருக்கிறது.
“எல்லாத்தையும் கேட்டிட்டு கேட்காத மாதிரியே நடிக்கே நீயி! எடுபட்ட பயலே!”
சொல்லிக் கொண்டிருந்தவர்,
“அந்த டாக்டரை கொஞ்சம் கூப்பிடுலே, என்னவோ படபடப்பா இருக்கு” என்றபடி நாற்காலியில் சாய்ந்து கண்ணை மூடினார்!
தன் படுக்கையில் படுத்திருந்த நிலானி கையிலிருந்த புத்தகத்தை மூடி வைத்திருந்தாள். அந்த அத்தியாயத்தோடு முடிந்திருந்தது நிவியின் கதை. சில மணி நேரத்துக்கு முன்பு வீட்டில் நடந்த கதையை யோசிக்க ஆரம்பித்தாள்.
இந்திரன் பாட்டியிடம் பேசியதில் கோவப்பட்டு வெளியே போயிருந்தான். இவள் சமாதானமாய் அழைத்தும், போன் செய்தும் அவன் பேசவில்லை.
இந்திரனுக்கு இத்தனை கோபம் வரும் என்பதை முதல் முறை பார்க்கிறாள். எளிதில் முகம் தூக்கும் ஆள் இல்லை அவன். இன்றோ அவளை ஒரு வழி செய்து விட்டான்!
“என் கிட்ட ஏன் இந்த கோபம்! இந்த விஷயத்தில் நான் என்ன செஞ்சேன்”
“கிழவி சொன்னதுக்கு நீ ஏன் டி அமைதியா இருந்தே! உனக்கு அப்படி ஏதும் நினைப்பு இருக்கா?”
அவனை ஒட்டி வந்து நின்றாள்,
“எங்க, என்னை நேரப் பார்த்து கேளு! நான் பேசுறதுக்கு முன்னாடி நீ பேசிட்டு என்னைக் குற்றம் சொல்றியா”
“போடி தள்ளி! சும்மா என்னை கடுப்பேத்திட்டு! உன் ஆத்தா கிட்டையே போ நீ!”
அவள் அவன் கையை பிடிக்க வர உதறிவிட்டவன், தன் படுக்கைக்குப் போய் அவளுக்கு முதுகைக் காட்டி திரும்பிப் படுத்துக் கொண்டான்!
“சாப்பிட வா இந்திரன்! பசியோட படுக்காதே!”
பல முறை அவள் அழைத்தும் பதில் இல்லை!
இவளுக்குப் போன தூக்கம் போனது தான்.
அதற்காகக் கதை படிக்க ஆரம்பித்து இப்போது இந்த கதையின் தாக்கத்தில் அவனை அன்று சந்தித்ததை நினைத்து தனக்குள் சிரித்துக் கொண்டாள்! இனிமையான நினைவுகள்! எத்தனை தூரம் தன் மனதுக்கு நெருங்கியவனாய் இருந்திருக்கிறான்! இன்னமும் இருக்கிறான் தான். ஆனால் எப்படி ஏற்பட்டது இந்த இடைவெளி! இனியும் இதைத் தொடர வேண்டுமா! தன்னின் ஒதுக்கமே அவனைக் கண்டதையும் யோசிக்க வைக்கிறது! தூங்கிக் கொண்டிருந்தவனை நெருங்கிப் படுத்தவள் அவனைக் கட்டிக் கொண்டபடி தானும் இப்போது உறக்கத்தைத் தழுவினாள்!
அடுத்த நாளில் நிவியை வீட்டுக்கு வரச் சொன்னவள்,
“அந்த புக்கை முடிச்சிட்டேன் நிவி. இந்தா! ஆனா ஒன்னு இதுக்கு ராயல்டி எனக்குத் தான் நீ தரணும்!”
“அதெல்லாம் முடியாது! கையொடிய எழுதுறது நான், உனக்கு எப்படித் தருவேன்!”
“அப்போ சொந்தமா ஒரு சொந்த கதையை எழுது டி!”
“ம்ம் பார்க்கலாம் பார்க்கலாம்! இந்தா அடுத்த அத்தியாயம் இருக்கு இதையும் படி!”
“இன்னுமா! என்னால முடியலை நிவி! நீ நல்லா தான் எழுதுறேன்னு நான் வேணா பத்திர பேப்பரில் ஒத்து கிட்டு கையெழுத்துப் போட்டு தரேன்! என்னை விட்டிறு ராசாத்தி!”
“நோ டி செல்லம். எனக்கு கிடைச்சதே நீ ஒருத்தி தான், அவ்ளோ சீக்கிரம் உன்னை விடுறதா இல்லை”
“ஆண்டவா! எனக்கு உருப்படியா தெரிஞ்சதே அந்த தமிழ் மொழி தான்! உன் கதையில் வேற ஏகப்பட்ட எழுத்துப் பிழை, முடியலையே!”
“எழுத்துப் பிழை தானே, டோண்ட் வொர்ரி அதான் கூகிள் ஆண்டவர் இருக்காரே எனக்கு அருள் புரிவார்!”
“ஜாப்பனீஸ் கிட்ட இதைச் சொல்லி பாரேன்…”
“இந்த அவமானத்தை எல்லாம் யாராவது வெளியே சொல்லுவாங்களா. விடுறி!” என்றாள் நிவேதா!
இவர்கள் பேச்சின் ஊடே இந்திரன் வீடு திரும்பியிருந்தான்! உர்ரென்று முகத்தை வைத்திருந்தவன் நிவியைப் பார்த்ததும் வலிய வரவழைத்த ஒரு புன்னகையைக் கொண்டு வந்தான்!
“வாங்க நிவேதா! எப்படி இருக்கீங்க? ஊரில் அவர் நல்லா இருக்காரா?”
“எல்லாரும் நலம் இந்திரன்! நீங்க தான் கல்யாண டீரீட் தரேன்னு ஏமாத்திட்டு இருக்கீங்க!”
“டிரீட் தானே!”
ஓரக்கண்ணால் தன் மனைவியைப் பார்த்தவன்,
“கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இரண்டு டிரீட்டா சேர்த்து தரேன்!” என்றான்.
நிவி அதைச் சரியாய் தப்பான அர்த்தம் எடுத்துக் கொண்டாள்!
“வாவ் கங்கிராட்ஸ்! ஏன் நிலா எனக்குச் சொல்லவே இல்லை.”
அவன் என்ன சொல்கிறான் என்பதைப் புரிந்து கடுப்பாகியிருந்த நிலா தோழியின் வாழ்த்தில் மேலும் எரிச்சலாகியிருந்தாள்.
தோழியின் கைப்பற்றி வாழ்த்து சொல்ல வந்த நிவி கணவன் மனைவி இருவரும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டு நிற்பதைக் கண்டு குழம்பிப் போனாள்…
‘என்னவோ சரியில்லை. நீ வேற கரடி மாதிரி குறுக்கே நின்னுகிட்டு! கிளம்பு டி’
நிவியின் மனசாட்சி அவளை உசுப்பிவிட,
“நான் கிளம்புறேன் நிலா” என்றவள் சிட்டாக அவ்விடத்திலிருந்து பறந்திருந்தாள். இங்கிதம் தெரிந்தவள்!
“ரொம்ப ஓவரா போறே நீ!
இரண்டு கல்யாணம்ற அர்த்தத்தில் தானே அவ கிட்ட அப்படி சொன்னே! உனக்கு எத்தனை திண்ணக்கம் இருக்கணும் இந்திரன்!”
இவள் கேட்டுக் கொண்டிருந்தாலும் அவன் பாட்டுக்கு அவனறையில் போய் உடைமாற்ற ஆரம்பித்தான்! இவள் அவன் பதிலை எதிர்பார்த்து அங்குப் போய்,
“கேட்குறேன்ல பதில் சொல்லு”
“என்ன இப்ப! உண்மையைத் தானே சொன்னேன்!”
“உனக்கு அப்படி எல்லாம் ஆசை இருந்தா நீ செஞ்சுக்கோ இந்திரன். ஏன் என்னை சொல்றே நீ! அதுக்கு உனக்கு என்ன உரிமையிருக்கு!”
“செஞ்சிப்பேன் டி! நீ போனதும் தாடி வளர்த்திட்டு உன்னையே நினைச்சிட்டு இருப்பேன்னு நினைச்சியா? நானும் என் அப்பா சொன்ன புள்ளையை சர்ச்சில் வச்சு கல்யாணம் பண்ணிக்க தான் போறேன்!” என்றவன் அவன் முகத்தைக் கழுவி அதனைத் துடைக்க ஆரம்பித்திருந்தான்.
எங்கே இருந்து தான் அப்படி ஒரு கோபம் வந்ததோ நிலானிக்கு! அவன் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
“எப்போவோ அதைச் செஞ்சி தொலைச்சிருக்க வேண்டியது தானே, ஏன் டா என் வாழ்க்கையோடு விளையாடின!”
இத்தனை ஆக்ரோஷத்தை அவன் எதிர்பார்க்கவில்லை,
“நிலா நானே டையர்டா வந்திருக்கேன் கையை எடு”
“எதுக்கு அப்படி சொன்னே நீ? என் விஷயத்தில் தினமும் மாத்தி மாத்தி பேசுறே! என்ன தான் ஆச்சு உனக்கு!”
அவன் சட்டை இன்னமும் அவள் கையில்!
“எனக்கு என்ன ஆச்சுன்னு கேட்காதே, என்ன காரணம்னு மட்டும் யோசி! உனக்கே புரியும்! இப்ப கையை எடு”
அவள் கைகளை விலக்கி விட்டவன் தன் இடத்தில் போய் தஞ்சமடைந்தான். அடுத்த இரண்டு நாளும் அந்த வீடு வீடாய் இல்லை!
அடுத்து நாள் பாட்டியிடம் பேசலாம் என்று போன் செய்யச் சங்கரன் எடுத்தார். ஆத்தா மருந்தின் உதவியால் தூங்குவதாக நிலாவிடம் சொன்னவர்,
“பாட்டிக்கு மனசு தான் சரியில்லை, உடம்பு நல்லாயிருக்குன்னு நினைச்சேன் நிலாம்மா. இப்ப அதுலையும் கொஞ்சம் கோளாறாம்!”
பாட்டிக்கு சக்கரை நோய், இரத்த கொதிப்பு எதுவும் இருந்ததில்லை! முழுநேரமும் ஏதாவது ஒரு வேலை, சத்தான சாப்பாடு என்று அவரே அவருக்கான டையட்டீஷியனாக இருந்திருக்கிறார்.
“நான் அவங்க கிட்ட பேசுறேன் மாமா!”
“கொஞ்ச நாள் நீ அவங்க கூட இருந்தா எல்லாம் சரியா வந்திடும் மா. வயசாகுதில்ல கண்டதையும் நினைச்சு குழம்புது ஆத்தா!”
“ஏற்கனவே இந்த வருஷத்துக்கான லீவ் எல்லாம் எடுத்திட்டேன், இனி வருவது ரொம்ப கஷ்டம்…”
“ஏதாவது செய்யப் பாரு நிலாம்மா! நாளப்பின்ன ஆத்தாவுக்கு ஏதாவதுன்ன அப்புறம் வருத்தப்பட்டு பிறையோசனம் இல்ல!”
சங்கரன் அவருக்குத் தோன்றியதைச் சொல்லி இன்னும் கொஞ்சம் பாரத்தை நிலாவின் மேல் ஏற்றி வைத்தார்!
இரண்டு நாட்களாய் இந்திரன் முகம் கொடுத்துப் பேசுவதில்லை, தன் ஒரே உறவான பாட்டியின் உடம்புக்கும் தற்போது முடியவில்லை, இந்த காரணங்களால் நிலா ஒரு நிலையில் இல்லை!
அன்றிரவும் சாப்பிட எதுவும் வேண்டாம் என்றவனை விடும் எண்ணமில்லை அவளுக்கு! பீட்ரூட் சப்பாத்தியில் சொட்டச் சொட்ட நெய் ஊற்றி அதன் பக்கத்தில் பன்னீர் கிரேவியை வைத்து, அந்த தட்டோடு அவனருகில் போனாள்!
“இந்தா இந்திரன் சாப்பிடு!”
அவளையும் தட்டையும் பார்த்தவன்,
“உனக்கு ஒரு தடவை சொன்னா புரியாதா? எனக்கு எதுவும் வேண்டாம் நிலா! எதையும் பழகிக்க நான் விரும்பலை!”
பேசிக்கொண்டிருந்தவன் வாயில் ஊட்டி விட்டாள், அவன் விக்க கொஞ்சம் தண்ணீர் தந்தாள்…வேறு எந்த பேச்சும் இல்லை.
முதல் கொஞ்சம் பிகு செய்தவன், ‘புலி பசித்ததும் சப்பாத்தியைச் சாப்பிடும்’ என்ற கணக்காய் அவள் தந்ததை முழுவதுமாக உண்டு முடித்தான்.
“ஆத்தாவுக்கு உடம்பு சரியில்லையாம் இந்திரன்!”
இறங்கி வந்து வலியப் பேசுகிறாளே என்னவாக இருக்கும் என்ற அவன் யோசனைக்குப் பதில் கிடைத்தது!
“எனக்கும் தான் மனசு சரியில்லை” என்றான்.
“நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசுறே?”
“என் பிரச்சனை தீர்ந்தா தான் மத்தவங்களை பத்தி யோசிக்க முடியும்”
“எப்படித் தீரும் நம்…உன் பிரச்சனை?”
“உனக்குத் தெரியாதா…”
அவன் பார்வையில் சகலமும் புரிய, தன் கண்களைத் தாழ்த்திக் கொண்டாள் நிலா!
அத்தியாயம் 13
ஆழ்ந்த உறக்கத்திலிருந்தான் இந்திரன்! அவன் கேசத்தை வருடிக் கொடுத்தபடி அவன் பக்கமிருந்த நிலானி அவனை ஆராய்ந்தாள்… ஆத்தாவை விட இவனுக்கு எத்தனை அதிகமாய் கோபம் வருகிறது! பரம்பரை குணமா இல்லை ஒரே பிள்ளையென்ற செல்லமா!
மெதுவாய் கண் முழித்தவன் அவளின் அருகாமையை உணர்ந்து இன்னமும் அவளை நெருங்கிக் கட்டிக் கொண்டான்!
“கோபம் வந்தா கண்டதையும் பேசுறது அப்புறம் ஒண்ணுமே நடக்காத மாதிரி மாறிடுறது!”
சம்பிரதாயத்துக்காகச் சொன்னாலும் அவன் அணைப்பை ஏற்றுக் கொண்டாளவள். நிலாவின் மனதை மயக்குவது போல் ஒரு புன்னகையை வீசியவன் அவள் கன்னத்தில் முத்தமிட்டான். தாமதமாய் பின்னிரவில் உறங்கப் போன இருவரும் அன்று அலுவலகம் மட்டம் போட்டிருந்தனர்!
“என் சம்பாத்தியம் வேணும் என்னோட எல்லாம் வேணும் ஆனா என் மத நம்பிக்கையை மட்டும் அம்மாவும் மகனும் ஒத்துக்க மாட்டீங்க, அப்படிதானே!”
“ஒத்துக்காம தான் என்னை இந்த கோலத்தில் நிற்க வச்சியிருக்கீங்களா!”
அன்று தேன்மொழி ஒரு முடிவோடிருந்தார்! குட்டக் குட்ட குனிந்து போகும் நிலையில் அவர் இன்னமும் இருக்க விரும்பவில்லை!
“என்ன இத்தனை நாள் அடங்கியிருந்த வாய் இன்னிக்கு நீளுது? நீ இப்படி எதையோ பேசித்தான் அவன் நம்மை மதிக்கலை. அத்தனை தூரம் சொல்லியும் அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிகிட்டான். என் கூட சேர்ந்தவனுக்கெல்லாம் இனி நான் என்ன பதில் சொல்வேன்? சாலமன் முகத்தில் எப்படி முழிப்பேன்! இனி ஒரு பொதுச்சபையில் என்னை எவரும் மதிப்பானுங்களா!”
கூப்பாடு போட்டிருந்தவரின் வீட்டின் மடிக்கணினி சத்தமிட்டது. மகன் தாயை ஸ்கைப்பில் அழைக்கும் நேரமது. கணவரைத் திரும்பிப் பார்த்த தேன்மொழி அவர் கோபம் எதற்கும் அசராமல் போய் இந்திரனின் அழைப்பை ஏற்க,
“என்ன மா பிஸியா இருந்தியா?”
பேசியவன் கண்ணில் பட்டார் தாமுவும். திரையில் பார்க்க அன்னைக்குப் பின் பக்கம் நின்றிருந்தவர் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது!
“பஞ்சாயத்தா ஓடிட்டிருக்கு நம்ம வீட்டுல”
ஏற்கனவே கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பில் பெட்ரோலை ஊற்றியது போலானது இந்திரனின் பேச்சு!
“ஆமாம் டா ஆமா! எல்லாம் உன்னால வந்தது! உன் முட்டாள்தனமான முடிவால் ஒழுங்கா போயிட்டிருந்த உன் அம்மாவும் இப்ப எதிர்த்துப் பேச கிளம்பிட்டா! இன்னிக்கி நான் சொல்றேன் கேளு, நீ அந்த பொண்ணு கூட வாழ மாட்டே. பெத்தவங்க மனசை புண் படுத்திட்டு உன்னால ஒரு காலமும் நிம்மதியா இருக்க முடியாது கெவின், பார்த்திட்டே இரு!”
“என்னங்க” தேன்மொழி கணவரிடம் பதற மறுமுனையில் இந்திரனோ நகைத்தான்!
“அப்பா நீங்க என்ன கடவுளா! நீங்க சொன்ன சொல்லுக்கு நான் பயப்படணுமா! இந்த விஷயத்தில் நானா எதுவும் செய்யலை, நீங்க ஏற்கனவே செஞ்சதுக்கான கர்ம வினை இது”
கோவப்படாமல் நிறுத்தி நிதானமாக மகன் சொன்னவைக்கு பதிலில்லை அவரிடம்!
“அம்மா இவர் இருப்பாருன்னு தெரிஞ்சா நான் கால் செஞ்சியிருக்க மாட்டேன்! நான் அப்புறம் பேசுறேன்”
லைனை கட் செய்வதற்கு முன்,
“இந்த ஆளோட இன்னமும் இருந்து உன் வாழ்க்கையை வீணாக்காதே மா. சீக்கிரமா தப்பிக்கிற வழியை பாரு!” மடிக்கணினியை அணைத்து வைத்த தேன்மொழி திரும்பி தாமுவை முறைத்துவிட்டு தன் அறைக்குள் சென்று முடங்கிக் கொண்டார்!
அவன் பேசிய எல்லாமும் நிலானி கேட்டுக் கொண்டு தானிருந்தாள்.
“என்ன இந்திரன், பெத்தவங்க கிட்ட இப்படியெல்லாம் பேசுறே! அவர் தப்பே செஞ்சியிருந்தாலும் உன்னோட அப்பா! அதுக்கான மரியாதையை நீ கொடுத்துத் தான் ஆகணும்!”
சலிப்பாய் ஒரு பார்வை பார்த்தவன், எழப் போக அவன் கைபற்றி அமர வைத்தாள். எல்லா வேலையும் முடித்தாயிற்று, உறங்கப் போகும் நேரத்தில் இவன் பேசிய பேச்சு தூக்கத்தைத் துரத்தி விட்டிருந்தது!
“அவர் அடிச்ச கூத்தெல்லாம் உனக்குத் தெரியாது நிலா. எதையும் யோசிக்காம என் வாழ்க்கையை எத்தனை சிக்கலாக்கியிருக்கார் தெரியுமா!”
“அப்படி என்ன செஞ்சார்? என்ன விஷயம்னு எனக்கும் சொல்லு இந்திரன். ஏன் உனக்கும் பாட்டிக்கும் மாமா மேல இத்தனை கோபம்!”
“இப்பவே சொல்லணுமா!”
ஆமாம் என உறுதியாய் தலையசைத்தவள் சோபாவில் அமர்ந்திருந்தவனின் மடியில் கதை கேட்கும் முடிவோடு தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்!
“வெள்ளையர்கள் நம்ம மக்களை எப்படி ஆட்சி செய்தாங்க தெரியுமா?”
“எப்படி?”
“நமக்கு எதுவுமே தெரியாதுன்னு ஒரு தோற்றத்தை உருவாக்கி, அவனுங்க எல்லாம் மெத்த படிச்சவங்கன்னு ஒரு பொய்யான மனோபாவத்தை நம்ம கிட்ட திணிச்சி வச்சாங்க!”
“ம்ம்…இப்ப எதுக்கு இந்த பழைய கதையெல்லாம் பேசுறே இந்திரன்”
“பொறுமையா கேளு நிலானி. என் அப்பாவும் அப்படி ஒரு ஆளா மாறிவிட்டது தான் எங்க பிரச்சனையும். பரம்பரை பரம்பரையா நாம கட்டிக் காத்த விஷயங்களை எல்லாம் எதுவுமில்லைன்ற மாதிரி தூக்கி போட்டுட்டார்!”
“அவருக்கு அவரோட ஊர் பிடிக்கலை, செய்ற விவசாயம் பிடிக்கலை! எல்லாத்துக்கும் மேல பெத்த தாயையும் கும்பிடுற கடவுளையும் பிடிக்காம போன ஒரு மனுஷன் எடுத்த முடிவின் பலனால் இந்திரனாகிய நான் கெவின் செபாஸ்டியனாக மாறிட்டேன்!”
நிலா என்ன பதில் சொல்லவென்று தெரியாமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“எப்படி இதெல்லாம் ஆரம்பிச்சதுன்னு எனக்கு இன்னிக்கு வரைக்கும் தெரியலை நிலா, திடீர்னு ஒரு நாள் அப்பா என் கிட்ட வந்து இனி உன் பெயர் இந்திரன் இல்லைன்னு சொன்னார். நான் படிச்சிட்டு இருந்த ஸ்கூலிலும் பெயரை மாத்திவிட்டிட்டார். எதுக்கு பா இதெல்லாம்னு கேட்டதுக்கு பதிலில்லை.
எனக்கு இதெல்லாம் பிடிக்கலைன்னு சொன்னதுக்கு அப்பா கிட்டயிருந்து அடி தான் பதிலா கிடைச்சது!
அம்மாவுக்கும் என் நிலை தான். அம்மாவுக்குன்னு கேள்வி கேட்க அவங்க பக்கம் எவருமில்லை! இன்னொரு பக்கம் ஆவுடை பாட்டியைத் தவிர அப்பாவை யாரும் கேள்வி கேட்க முடியாது!
“எத்தனை நாள் என் அம்மா அழுது இருப்பாங்க தெரியுமா நிலா! நாங்க சென்னைக்கு மாத்தி வந்ததே இந்த கொடுமையெல்லாம் அனுபவிக்க தான்ங்கிற விஷயம் எங்களுக்கு மெதுவா தான் புரிய ஆரம்பிச்சது!”
அவனுக்குக் கண்களெல்லாம் கலங்க ஆரம்பித்தது!
“வேண்டாம் இந்திரன் இதைப் பத்தி இன்னமும் பேசாதே!!”
தேவையில்லாமல் அவனை வருத்தப்பட விட்டுவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவளைத் தாக்கியது!
“உனக்கு இதெல்லாம் தெரியணும் நிலா! கூடிய சீக்கிரம் சொல்றேன்!” மனபாரத்துடன் உறங்கச் சென்றனர் அன்று!
ஆவுடை பாட்டிக்கும் அன்று பழைய விஷயங்கள் பலதும் மனதைப் போட்டு குடைந்து கொண்டிருந்தது! அவருக்குத் தான் பெத்து வளர்த்த மகனின் மனதைப் பற்றி நன்றாகத் தெரியும்! பகட்டானவன், எந்த வித ஒட்டுதலுக்கும் தன்னை மாற்றிக் கொள்ளும் எண்ணமில்லாதவன்! இப்படி ஒருவனுக்குப் பிறந்த அந்த இந்திரன் மாத்திரம் எப்படி இருப்பானோ என்ற கவலை இந்த சில நாட்களாய் அவரை படுத்திக் கொண்டிருந்தது!
பேத்தி உண்மையெல்லாம் தெரிந்தும் அவனை இன்னமும் விரும்புகிறாள் என்பதை அறிந்த ஆவுடையம்மாளுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை! அதையே சிந்தித்துக் கொண்டிருக்க இப்போது பழைய விஷயங்களும் நினைவுக்கு வந்தது!
தாமுவை தேடி ஆவுடையம்மாள் மட்டும் தனியாய் சென்னை சென்றிருந்தார்!
“எதுக்கு இந்த முறை கோவில் திருவிழாவுக்கு வரலை நீயி?”
“தலைக்கு மேல வேலையிருந்தது! அப்படி எல்லாம் இருக்கிற எல்லா வேலையையும் விட்டுவிட்டு வரமுடியாது மா.”
வந்ததிலிருந்தே ஒரு தினுசாய் பேசிக்கொண்டிருந்தான் தன் தாயிடம்! அவர் முகத்தை நேராகப் பார்க்கவில்லை! மருமகளோ, ஆவுடையம்மாள் முன் நிற்கவே இல்லை.
“சரி அங்கன தான் வரலை அது கூட பரவாயில்லை! கோவில் வரிப்பணம் கட்டலையாமே! இனி கட்ட போறதில்லைன்னு சொன்னியாமில்ல. ஏன்லே!”
அவர் பெருங்கோபத்திலிருந்தார்! அவர் கேட்கும் எந்த கேள்விக்கும் தன் மகனிடமிருந்து சரியான பதில் வரவில்லை!
“தாமு என்ன லே பம்முதே! ஆம்பலையா நிமிர்ந்து நில்லு. என்ன விவரம்னு சொல்லுலே!”
எதுவும் பேசாமல் தன் சட்டைக்குள்ளிருந்து சிலுவையுடன் கூடிய சங்கிலியை எடுத்து வெளியே விட்டார். அதைப் பார்த்த பெற்றவளுக்கு எப்படி இருந்ததாம்! ஆவுடையம்மாள் தன் கலக்கத்தை வெளியே காட்டாமல்,
“நீ இன்னமும் எத்தனை சாமி வேணாலும் கும்பிட்டுக்கோ, நம்மளதை மட்டும் விட்டுவிடாதே!”
மகனின் செயல் தொண்டை அடைக்கச் செய்தது தான்! அதையும் மீறி தன் மகனிடம் சொன்னார் அந்த பெரியவள்!
“இல்ல மா அது சரிவராது”
“தாமு என்ன லே சொல்லுதே! தேனு…தேன்மொழி…ஏட்டி இங்க வா புள்ள”
மருமகளை இப்போது தான் உற்றுப் பார்த்தார். நெற்றியில் குங்குமமில்லை! தங்கம் என்று பேருக்கு ஒரு கம்மலை மட்டும் மாட்டியிருந்தாள்!
ஆவுடை பாட்டிக்கு எல்லாமே புரிந்தேவிட்டது!
“மதம் மாறிட்டியா?”
மகனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்தார்!
“யாரைக் கேட்டு லே மாறினே! உன் இஷ்டத்துக்கு அப்படி மாறிட முடியுமா. என் வம்சம் ஒண்ணு இருக்கு உன் கூட, நெனைவு இருக்கா லே!”
தாமு பதில் சொல்லாமல் இறுகிய முகத்துடன் நிற்க, தேன்மொழியோ கண்ணீர் சிந்தினார்!
“உனக்கு அறிவு இருக்கா லே, பட்டப்படிப்பு படிச்சா மட்டும் போதுமா? மாடு மாதிரி வளர்ந்து நிக்கியே, பெத்த ஆத்தாவை எப்படி மாத்த முடியாதோ அதே போலத் தான் உன் தாய்மதமும். நீ இதுக்கு என்ன சாக்குப் போக்கு சொன்னாலும் என்னால ஏத்துக்கிட முடியாது”
விளக்க முற்படவில்லை தாமு. சொந்தம் வேண்டும் என்ற நினைப்பில்லை! அப்படியே நின்றிருந்தான்!
ஏதாவது விளக்கம் சொல்லி மன்னிப்பு கேட்பான் என்ற ஆவுடையம்மாளின் எண்ணத்தில் மண் விழுந்தது!
“எனக்கு நீ மவனே இல்லை, ஒழிஞ்சி போயிடு! இனி ஒட்டும் கிடையாது, ஒறவும் கிடையாது. என் மவனுக்கு காரியம் செய்ததா நினைச்சுக்குறேன்.
உன்னை பெத்த ஆத்தா செத்திட்டா லே. இனி என் மூஞ்சியில் முழிக்காதே!”
ஆவுடையம்மாளின் ஆவேச பேச்சுக்கு எவ்வித பதிலும் சொல்லாத தாமு, தன் தந்தையின் இறுதி காரியத்துக்குக் கூட வராமல் இருந்து விட்டார்! தன் குலம் வளர பெற்றுவைத்த தன் மகனும் அவன் மூலம் வந்த பேரனும் இல்லாமல், இறந்த அந்த மனிதருக்குக் கொள்ளி வைத்து காரியங்கள் செய்தது ஆவுடையம்மாளுக்கு இன்று வரையிலும் தத்துப் பிள்ளையாய் இருக்கும் சங்கரன்!
அத்தியாயம் 14
நிவேதாவிடம் இந்திரன் சொன்ன ‘லேட்டஸ்ட்’ விஷயங்களைப் பகிர்ந்து கொண்டிருந்தாள் நிலானி! தோழிக்குப் பிடித்ததைச் சமைக்க முனைய நிவியும் இவள் பக்கமிருந்து நிலானிக்கு உதவிக் கொண்டும், கதையைக் கேட்டுக் கொண்டும் இருந்தாள்.
“இப்படி ஒரு டர்னிங் பாயிண்ட் இருக்குன்னு தெரியாம கதையை முடிக்க பார்த்துட்டேன் நிலா. நீ இப்ப இதைச் சொல்லி என் அறிவுக் கண்ணைத் திறந்து வச்சிட்டே!”
“நீ இன்னும் எழுதுறதை விடலையா?! அச்சோ! தெரியாம இதையெல்லாம் உன் கிட்ட சொல்லிட்டேனே!”
தோழியின் கன்னத்தைக் கிள்ளிய நிவி,
“என் செல்லம் நீயி! நான் என்னைக்கு எல்லாம் பாயிண்ட் கிடைக்காம ஜாம் ஆகி நீக்கிறேனோ அப்போ கரெக்டா ஏதாவது சொல்லிடுவே! சரி நான் கிளம்புறேன்!”
தான் சொன்னதை எப்படியெல்லாம் இட்டுக்கட்டி இந்த புதிய எழுத்தாளினி எழுதப்போகிறாளோ என்ற நினைப்பில் தன் அடுத்த வேலைகளை கவனிக்கலானாள் நிலா!
அன்று இந்திரன் அலுவலகத்திலிருந்து திரும்ப, வீடே பக்தி மயமாயிருந்தது. கதவைத் திறந்து வீட்டினுள் வந்தவனுக்கு இது தன்னுடைய வீடு தானா என்ற சந்தேகமே! ஊதுபத்தி புகையின் நடுவே அழகாய் சேலை கட்டி, நெற்றியில் சின்ன கீற்றாய் குங்குமமிட்டுச் சிரித்த முகமாய் கணவனை வரவேற்றாள் நிலா! அவளின் இந்த புதிய அவதாரம் அவன் உதட்டிலும் மெல்லியதொரு புன்னகையைக் கொண்டு வந்தது!
“சாரி மேடம் நான் வீடு மாறி வந்துட்டேன்” சிரித்தபடி வெளியே செல்வது போல் பொய்யாய் நடித்தவனின் கைப்பற்றி வீட்டின் உள்ளே அழைத்தாள்.
அவள் செய்திருந்த கேசரியைச் சுவைத்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருக்க, என்ன என்பதாய் கண்ணசைவில் கேட்டாள்!
“என்ன விஷயம் நிலா! ஏதோ பெருசா என்கிட்ட கேட்க போறே போல!”
அமைதியாக இருந்தவளை ஆசையுடன் பார்த்தவன்,
“சும்மா சொல்லு என்ன விஷயம்”
ஆவுடை பாட்டிக்கு உடம்பு முடியவில்லை என்பதையும், அவரை கொஞ்சக் காலமேனும் தன்னுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நினைப்பையும் அவனிடம் சொன்னாள்.
“ஆக…”
“ஆக…”
மேடைப் பேச்சைப் போல் ஆரம்பித்தவனைப் பார்த்து அவள் நகைக்க,
“ஏதோ காரியம் சாதிக்கத் தான் இத்தனை ஏற்பாடும் அப்படிதானே!”
“சே அப்படியெல்லாம் இல்லை இந்திரன், நான் கேட்டா நீ வேணாம்னு சொல்ல மாட்டேன்னு எனக்குத் தெரியுமே!”
“நல்ல பேசுறே நீ!”
சொன்னவன் தன் பக்கம் அமர்ந்திருந்த மனைவியின் கன்னத்தில் முத்தமிட்டு அவள் கேட்டதற்கான தன் சம்மதத்தைத் தெரிவித்தான்.
அடுத்த நாளே அதற்கான வேலைகளை ஆரம்பித்தாள் நிலா, முதலில் ஆவுடை பாட்டியிடமும் பேசினாள்!
“ஆத்தா கொஞ்ச நாள் ஜப்பான் வந்திடுறியா?”
“அந்த குளிரில் என்னால இருக்க முடியாது புள்ள!”
“இப்ப குளிரில்லை ஆத்தா. வெயில் மண்டையை பிளக்குது. வாயேன் ப்ளீஸ், எனக்கு உன் கூட இருக்கணும் போலிருக்கு!”
பேத்தியின் பாசம் முதியவளை அசைத்துப் பார்த்ததென்னவோ நிஜம்.
“நீ ரொம்ப நாளா அங்கன தனியா தானே இருக்கே! அதான் அப்படி நெனப்பு உனக்கு!”
வழக்கமான தன் வக்கில் முறையைப் பாட்டி ஆரம்பிக்க, நிலா தடுமாறினாலும் உண்மையைச் சொல்லலானாள்.
“நான்…நான் இப்ப தனியா இல்ல ஆத்தா!”
“ஆமாமா… அந்த மெட்ராஸ் புள்ள இருக்காளா இன்னமும்! அவ போயிருப்பானுல்ல நெனைச்சேன்!”
நேரடியாகச் சொல்ல நேரம் வந்திருந்தது. சிறு அமைதிக்குப் பின் நிலா,
“நான் இப்ப இங்க இந்திரன் கூட இருக்கேன் ஆத்தா”
பதில் சொல்லவில்லை ஆவுடையம்மாள்!
ஏனோ இந்த விஷயமாய் இருவரும் மனம் திறந்து பேசவில்லை, இன்னமும்! தெரிந்த விஷயத்தில் இதற்கு மேலும் விளக்கம் கேட்காத ஆவுடைபாட்டி,
“நான் வந்தா உனக்கு…உங்களுக்கு தொந்தரவு இல்லையாட்டி!”
“அப்படியெல்லாம் எதுவுமில்லை ஆத்தா! நீ இங்க வந்து பாரு, உனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிச்சு போகும்!”
“எதுக்குட்டி பிடிக்கணும்? எதுக்குங்குறேன்! கண்டதும் பிடிச்சி போறதால தான் வாழ்க்கையில் பாதி பிரச்சனையே! எனக்கு என்னோடதை தவிர வேற புதுசா எதையும் புதுசா பிடிக்காதுட்டி!”
விதண்டாவாதமாய் பேசியவரை ஒரு வழியாய் இவளும் சங்கரனும் சேர்ந்து சம்மதிக்க வைத்து ஊரை விட்டுக் கிளப்பினர். பயணத்துக்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்து பாட்டியைச் சென்னை வரைக்கும் கூட அலைக்கழித்து விடாமல், திருவனந்தபுரத்திலிருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பிளைட்டில் ஏற்றி விட்டார் சங்கரன்!
ஆவுடையம்மாளுக்கு இது முதல் விமான பயணம்! நிலானி அதற்காக தன் பாட்டிக்கு போனில் அத்தனை பத்திரம் சொல்கையில்,
“என்ன சும்மா நையி நையின்னுட்டிருக்க! அம்புட்டும் நான் பார்த்துப்பேன். நான் என்ன தனியாளாவா வாரேன்! அதான் விமானத்துல அத்தன பேர் கூட இருப்பாவுல, பெறவு என்ன! சும்மா இருட்டி! பெரிசா வந்திட்டா ஆத்தாவுக்கு புத்திமதி சொல்லன்னு”
மூக்கு உடைக்கப்பட்ட தன் மனைவியைப் பார்த்து வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தான் இந்திரன்! போனில் பேசிய அத்தனையும் அவனுக்கும் கேட்டிருக்கிறது! நிலானி முறைத்தும் அவன் அடங்கவில்லை!
“ஆத்தா உனக்காகத் தான் சொல்றேன்! கேட்டுக்கோயேன்!”
“அதெல்லாம் எனக்கு தெரியும்டி! பொல்லாத ஏரோபிளேனு, அந்த காலத்தில் என் அப்பாரு சிங்கப்பூருக்கு கப்பலில் போயிருக்காக, தெரிஞ்சிக்கோ!”
மானசீகமாய் தன் தலையில் அடித்துக் கொண்டாள் நிலானி! இன்னமும் கப்பலும் பிளேனும் ஒரே மாதிரின்னு நினைச்சிட்டிருக்கு! இந்த ஆத்தாகிட்ட பத்திரம்னு சொன்னது என் தப்பு தான். இவர்களைச் சுத்தி இருக்கிறவங்க தான் பத்திரமா இருக்கணும்!
அப்படியெல்லாம் தைரியமாய் கிளம்பியும் அத்தனைக்கும் மாறாய் நடந்தது ஆவுடையம்மாளுக்கு! விமான நிலையத்தில் நடந்து வருகிறேன் என்றும் கூட விடாமல் அவரை சக்கர நாற்காலியில் வைத்து விமானத்தின் வாசல் வரைக்கும் அழைத்து வந்தார் அந்த ஊழியர்!
அதன் பின் ஆவுடைபாட்டி விமானப்பெண்ணின் வசமில்லை, அவள் தான் பாட்டியின் வசம். பாட்டியின் தேவைகளைக் கவனித்து வந்தவளுக்கு வேறு பக்கம் போகவே கொஞ்சமே கொஞ்சம் தான் இடைவெளி கிடைத்தது!
சிங்கப்பூரில் இரண்டு மணிநேர காத்திருப்பில் அங்கேயும் பாட்டிக்கு ஏற்ப ஒரு தமிழர் பாட்டியின் உதவிக்குக் கிடைத்தார். சொந்த ஊர், பிள்ளை, சம்பளம் வீட்டு வாடகை வரைக்கும் அவரிடம் விசாரித்த பாட்டி,
“இந்த சம்பளத்துக்கு ஊருக்கு வந்து நீ விவசாயம் பார்க்கலாமில்ல தம்பி” என்றார்.
“இல்லம்மா பசங்க எல்லாம் இங்க வளர்ந்துட்டாங்க, இனி ஊருக்கு வருவது அவங்களுக்கும் சிரமம்” என்றார்.
“பசங்களை குறை சொல்ல முடியாது, நாம காட்டுற வழி தானே அவங்களுக்கு! பார் நான் வளர்த்த எம் பேத்தியை நேரில் பார்க்க இத்தனை தூரம் போவணும்! ஒரு ஆத்திர அவசரத்துக்கு இப்படியெல்லாம் முடியுமா!”
இன்னும் பல பேச்சில் நேரம் போனது. விமானத்தில் எற்றி விட்டு அவர் கிளம்புகையில், தன் பையிலிருந்த முறுக்கு பொட்டலத்தில் ஒன்றை எடுத்துத் தந்தார்.
“எம் பேராண்டிக்குக் கொடு தம்பி!”
“இதெல்லாம் வேண்டாம் மா, நான் செஞ்சது என் வேலை தான்!”
அவர் எத்தனையோ தடுத்துப் பார்த்தும் ஆவுடைபாட்டி தான் நினைத்ததைச் சாதித்துவிட்டார்!
பல முசுடுகளையும், அதிகார தோரணையில் திரிபவர்களையும் பார்த்த மனிதருக்கு ஆவுடைபாட்டியின் சந்திப்பு மறக்கமுடியாத விஷயமாய் அமைந்து போனது!
சிங்கப்பூரிலிருந்து டோக்கியோ நரிட்டா விமான நிலையத்துக்கு எட்டு மணி நேரப் பயணம்! பாட்டி நன்றாக உறங்கிவிட்டார்! விமானம் தரையிறங்கும் நேரமே கண்விழித்தவர் பேத்தியை உடனே காணும் ஆர்வத்திலிருந்தார்.
விமான நிலையம் வரும் சாலையில் அன்று சரியான வாகன நெரிசல். அதன் காரணமாய் இந்திரனும் நிலானியும் சற்று தாமதமாய் வந்து சேர்ந்தனர்! பதட்டத்திலிருந்தாள் நிலா,
“பாட்டி எங்கே என்னை தேடிட்டு இருக்காங்ளோ! அவங்ககிட்ட இப்ப போன் கூட இல்லை!”
வண்டியை நிறுத்திவிட்டு ஓடோடி வந்தனர் இருவருமே!
பயணிகள் வருகைக்கான இடத்தில் போட்டிருந்த இருக்கையில் தன் பெட்டிகளைச் சுற்றி வைத்துக் கொண்டு நடுவில் ஒரு ராணி போல் அமர்ந்திருந்தார் ஆவுடை பாட்டி! எவ்வித சோர்வும் முகத்தில் இல்லை. தன் கையிலிருந்த முறுக்கை உண்டபடி தன்னை சுற்றித் தெரிந்த புது மனிதர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் ஆவுடை பாட்டி!
நிலானிக்கு அந்த காட்சியைப் பார்த்து முதலில் சிரிப்பு தான் வந்தது! பாட்டியிடம் நெருங்கிச் சென்றவள்,
“வா ஆத்தா! பிரயாணமெல்லாம் வசதியா இருந்ததா?”
தன் பக்கம் வந்த நிலானியை விரிந்த கண்களுடன் பார்த்தவர்,
“நிலானி” என்ற அழைப்பின் ஊடே
கஷ்டப்பட்டு இருக்கையிலிருந்து இறங்கினார்! தன் பேத்தியை ஆசையுடன் கட்டிக் கொண்டு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்! சில மாதங்களுக்கு முன்பு பார்த்ததை விட நிலா இன்னும் பொழிவுடன் காட்சிதர, வளர்த்தவளுக்கு அவள் இப்போது சந்தோஷமாய் இருக்கிறாள் என்ற உண்மை புரிந்தது!அதை மறுக்கத் தோன்றவில்லை!
இவர்களின் பாச பரிமாற்றங்கள் முடிந்த பின்னரே இவர்கள் பக்கம் வந்தான் இந்திரன்! அவனும் பாட்டியும் ஒருவரையொருவர் பார்த்து முறைத்துக் கொண்டனர்!
காரில் விரைவாய் இல்லம் வந்துவிட்ட ஆவுடை பாட்டி சங்கரனுக்கு போன் செய்து பேசினார்!
“நிலா வீட்டுக்கு வந்துட்டேன் லே! ஆமாமா பிரயாணமெல்லாம் சுகம்தான்!”
வீடு குருவி கூடாட்டம் இருந்தாலும் நல்லா சுத்தமா வச்சியிருக்கா எம் பேத்தி!”
இந்திரன் காதில் எல்லாமே விழுந்தது. ‘பாட்டி வராங்க ப்ளீஸ் இதை மட்டும் செய்யேன்’ என்று சொல்லியே முன்தினம் முக்கால்வாசி வேலையை அவனைச் செய்ய வைத்திருந்தாள் நிலா!
‘விஷயம் தெரியாமல் கிழவி பெருமை பேசுறதை பாரேன்’
“அவ சம்பாத்தியத்துக்கு ஏன் இம்புட்டு சின்ன வீட்டில் இருக்கா! இனி தான் அவட்ட கேக்கணும்! நீ வயலுக்கு போனையா? அறுப்பு முடிச்சிட்டு நான் கிளம்புறேன்னா கேட்கியா நீ! ஒத்தையிலே என்னவெல்லாம் பார்ப்பே! கூறுகெட்ட பயலே!”
அவர் என்ன சொன்னாரோ!
“சரி சரி! உம் பிள்ள கஸ்தூரி பத்திரம் லே! தனியா எங்கனையும் அனுப்பாதே! பார்த்துக்கோ! நான் தெனமும் போன் போடுதேன்! இப்ப வைக்கவா லே!”
சங்கரனுக்குப் பேச வாய்ப்பே தரவில்லை இந்த பாட்டி. இந்திரன் அவரையே பார்த்துக் கொண்டு சோபாவில் அமர, பேத்தி தந்த உணவைச் சாப்பிட ஆரம்பித்தார்!
“இட்லி நல்லா மல்லிப்பூ மாதிரி இருக்குட்டி! வெங்காய சட்னி ருசியா இருக்கு! நல்லா சமைக்கியே நிலா புள்ள!”
நிலா பெருமையாய் அதற்குச் சிரித்து வைக்க,
“அந்த மாவை அரைச்சது நான்!” எழுந்து போனவன் போகிற போக்கில் ஆவுடைபாட்டி கேட்கும்படி சொல்லிவிட்டுப் போனான்.
பாட்டி பேத்தியைப் பார்க்க, நிலாவும் இப்போது அசடு வழிந்தாள்!
“சுமாராத் தான் இருக்கு. உன் கைப்பக்குவம் எப்படின்னு ஆத்தாவுக்கு தெரியாதாட்டி!”
அவர்கள் பேச்சை தன் அறையிலிருந்து கேட்ட இந்திரன், தானே தன் தலையில் அடித்துக் கொண்டு படுக்கப் போனான், இன்னும் எத்தனை காலம் இந்த கிறுக்குத்தனத்தை எல்லாம் தாங்க வேண்டுமோ என்று நொந்தபடி!
அத்தியாயம் 15
அடுத்து ஒரு வாரத்துக்குக் கணவன் மனைவி இருவருக்கும் பேசிக் கொள்ளக் கூட நேரமில்லை! நிலானி காலையில் அவனுக்குப் பின் தாமதாக வேலைக்குப் போவதும், மாலை விரைவாக வீடு திரும்பி பாட்டியை அழைத்துக் கொண்டு வெளியே போவதுமாய் பொழுதை ஓட்டினாள். பாட்டியும் பேத்தியும் ‘ஷாப்பிங் மால்களை’ சுற்றி விட்டு வீடு திரும்புவதற்குள் இந்திரன் பாதி தூக்கத்தில் இருப்பான்.
காதல் கணவனாயிற்றே, அவனின் மனநிலை புரியாதவளா நிலா! அன்று காலை அவனுடனே கிளம்பி ரயில் நிலையம் வரை வந்துவிட்டாள்!
டிரெயினுக்காக காத்திருக்கும் நேரம், “ஏன் ஒரு மாதிரி இருக்கே? ஒழுங்கா என் கூட பேச மாட்டேங்கிறே! பாட்டி இங்க வந்தது உனக்கு பிடிக்கலையா இந்திரன்!”
விடையைத் தெரிந்து வைத்துக் கொண்டே கேட்பதில் மனைவிகள் வல்லவர்களாயிற்றே! தான் பார்த்துக் கொண்டிருந்த போனை அணைத்து பாக்கெட்டில் போட்டவன் விட்டேற்றியாய்,
“அதெல்லாம் ஒண்ணுமில்லை!”
என்றதுடன் நில்லாமல் சிறுப்பிள்ளை போல் தன் முகத்தை இன்னமும் தூக்கி வைத்துக் கொண்டான்!
அதன் பின் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவள் அவனை மட்டுமே பார்த்தபடி அந்த நெரிசலான டிரெயினில் நிற்க, அவனோ இவளைத் திரும்பியும் பார்த்தானில்லை!
கடைசியாய் நிலா அவள் நிறுத்தத்தில் இறங்கிவிட்டாளா எனப் பார்த்தவனின் அருகில் வந்தவள் அங்கே இறங்காமல் அவன் கைப்பற்றி அவன் பக்கம் நின்று கொண்டாள்!
“உன் ஸ்டாப் வந்தாச்சு, இறங்கு நிலா”
அவன் அனுப்பிவிட நினைத்தாலும் முடியவில்லை!
“நோ! நீ என்னென்னு சொல்ற வரைக்கும் உன் கூடத் தான் வருவேன்!”
அவள் செய்கையில் சுற்றுப்புறம் மறந்திருந்தான்!
“என் அறிவுக் கொழுந்தே! எனக்கு முக்கியமான மீட்டிங் இருக்கு தாயே! லேட் செய்ய முடியாது! நீ கண்டதையும் யோசிக்காம ஆபிஸ் போ! அடுத்த ஸ்டாப்பிலாவது இறங்கிக்கோ!”
பிடித்திருந்த அவன் கையை விட மனசில்லாததைப் போல் அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தபடி இறங்கிப் போனாள் அவனின் மனையாள்!
தாமுவுக்கு அவரின் நெல்லை நண்பர்கள் மூலம் ஆவுடையம்மாள் பற்றி தகவல் போயிருந்தது. தன் பிசினஸ் விஷயங்களில் மூழ்கியிருந்த வரைக்கும் இதெல்லாம் ஒரு பெரிய காரியமாய் நினைக்காதவருக்கு, வீட்டினுள் நுழைந்ததுமே மகன் செய்த காரியம் எரிச்சலை ஏற்றியிருந்தது. பாட்டி மேல் என்ன திடீர் பாசம், அங்கே அழைத்துச் செல்லும் அளவுக்கு!
“தேன்மொழி, ஏய் தேனு… ஒரு காபி கொண்டா!”
தன் சபாரி சூட்டிலிருந்து வேறு உடைக்கு மாறியிருந்தவர் வழக்கமாய் அமரும் சாய்வு நாற்காலியில் அமர்ந்து மனைவி தந்ததை ருசிக்க ஆரம்பித்தார்!
“பாஸ்போர்ட் ஆபிஸ் போறேன், நாளைக்கு வீட்டில் இருக்க மாட்டேன். சாவியை எடுத்திட்டு போயிடுங்க!”
மனைவியைச் சந்தேகமாய் பார்த்தார்.
“இப்ப அதுக்கு என்ன அவசியம்!”
ஏற்கனவே கேள்விப்பட்ட விஷயத்துடன் இதையும் சேர்த்து நடக்கப் போவதை யூகித்திருந்தார்.
தேன்மொழி பதில் சொல்லாமல் நிற்க,
“மகன் கூட சேர்ந்துகிட்டு ஆட்டமா ஆடுறியா நீயும்! இங்கே இருந்து தனியா ஜப்பான் போகிற அளவுக்கு வளர்த்துடீங்களோ!”
இவருக்கு எல்லாமே கூடிய விரைவில் தெரிய வருமென்பது தேன்மொழிக்கும் தெரியும்! அவர் கேட்டதற்குப் பதில் தராமல் சென்றுவிட்டிருந்தார். ஆவுடையம்மாள் அங்கேயிருந்தபடி இவருக்குத் தரும் தலைவலி பத்தாதென்று இவளும் இப்போது அங்கே போவதா, விடக்கூடாது!
வந்த நாள் முதல் பார்க்கிறார் பாட்டி, தன் பேரன் நிலானியை தாங்குவதை. வீட்டில் பாதி வேலை இவனும் செய்கிறான், மனைவியை அதிகாரம் செய்யும் பழக்கமெல்லாம் அவனிடம் இல்லை! தன் சக மனுஷி தான் அவளும் என்பதை நன்கு உணர்ந்திருக்கிறான்.
‘எல்லாம் தேன்மொழி வளர்ப்பு’
தன் மகன் தாமுவை போல் தலைக்கணம் பிடித்தவனாய் தன் பேரன் இந்திரன் இல்லை என்ற உண்மை கொஞ்சம் கொஞ்சமாய் பாட்டிக்குப் புரிந்திருந்தது!
நிலானியும் கணவனைப் பற்றி அவரிடம் எப்போதும் பெருமையாகவே சொன்னாள்!
“இந்திரன் பாவம் ஆத்தா. சின்ன வயசில் மனசளவில் ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான்.”
பாட்டி இதையெல்லாம் இஷ்டமில்லாமல் கேட்பதைப் போல் முகத்தை வைத்திருந்தார்!
“என்ன நல்லா பார்த்துக்குறார் ஆத்தா! வீட்டுச் செலவெல்லாம் அவரோடது தான்! என் சம்பளமெல்லாம் தொடுவதே கிடையாது, அப்படியே ஊருக்கு அனுப்பிடுறேன். என் கிட்டக் கோபமே பட மாட்டான் தெரியுமா! இத்தனைக்கும் அவரை எத்தனை பாடு படுத்துறேன் பாரு…நீ தான் அவரை சந்தேகமாகவே பார்க்குற”
“போதும் போதும் உன் புருஷன் புராணம். நான் அந்த திருச்சிக்காரி கிட்டப் பூங்காவுக்கு நடக்க வாரேன்னு சொன்னேன். கிளம்புதேன்!”
செருப்பை மாட்டிக்கொண்டிருந்தவர்,
“புருஷனைப் பேர் சொல்லிக் கூப்பிடுறதும் அவன் இவன்னு சொல்றதும் நல்லாவா இருக்கு! வளர்த்த என்னைத் தான் குத்தம் சொல்லும் உலகம்! அதை மாத்துற வழியைக் காணோம், சும்மா வியாக்கினம் பேசிட்டு அலையிறவ!”
பாட்டி போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போனதில் நிலாவின் முகத்தில் புன்னகை அரும்பியது!
‘ம்ம் இந்த ஆத்தாவுக்கு அவனை ச்சே அவங்களை பிடிக்கலைனாலும் எம் மக்கள் மென் மக்கள்னு சப்போர்ட் மட்டும் பண்ணுது’
சமையலறையில் மும்முரமாய் சமைத்துக் கொண்டிருந்தவளைப் பின்பக்கமிருந்து அணைத்தான் இந்திரன்! திடீர் தக்குதலில் கொஞ்சம் நடுங்கித் தான் போயிருந்தாள் நிலானி!
“இப்படிதான் சத்தமில்லாம வரதா! போய் டிரஸ் மாத்திட்டு வாங்க, காபி தரேன்”
“என்ன திடீர்னு மரியாதை கூடுது! என்ன டி ஆச்சு உனக்கு! ஆர் யூ ஓகே பேபி!”
“இனி அப்படிதான்”
மனைவியின் கழுத்தில் தன் கைகளை மாலையாய் கோர்த்துக் கொண்டவன்,
“வீடு அமைதியா இருக்கு, எங்கே அந்த கிழவி!”
“ஆத்தா வாக்கிங் போயிருக்காங்க!”
“நீ போகலையா!”
“ம்ம்ஹும்”
“அத்தானுக்காக காத்துகிட்டிருந்தியா!”
அவன் ஒரு நிலையில் இல்லை. கிடைத்த தனிமையில் மனைவியைக் கொஞ்சிக் கொண்டிருந்தான். கதவு திறக்கும் சத்தம் கூட இருவருக்கும் கேட்கவில்லை!
தண்ணீர் குடிக்க கிட்சனுக்குள் வந்த பாட்டி பேத்தியைக் கட்டிக் கொண்டு நின்ற இந்திரனைப் பார்த்து தொண்டையை செருமினார்! நிலா விலக நினைத்தாலும் அவன் பிடி இறுகியிருந்தது! நகரவில்லை அவன்!
“ச்சே தள்ளிப் போலே! சமைக்குற இடத்தில் வந்து அட்டூழியம் பண்ணிகிட்டு!”
அவன் முதுகில் கரண்டியால் இரண்டு அடி வைத்தவரைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்!
நிலா என்னவென்று உணரும் முன் அவளை விட்டு விலகியவன் பாட்டியை அலேக்காய் தன் இரு கைகளால் தூக்க,
“ஏலேய்…யம்மா…ஐயோ” என அலற ஆரம்பித்த ஆத்தாவைப் பார்த்து நிலாவுக்குப் பதற்றமானாலும் வந்த சிரிப்பை அடக்க முடியவில்லை! ஆனாலும் பாட்டிக்காக இந்திரனிடம்,
“என்ன செய்றே இந்திரன் விடு அவங்களை” சொல்லத்தான் செய்தாள்!
கஷ்டப்பட்டு தன் முகத்தை சீரியஸாய் வைத்துக் கொண்டாள்! அவளுக்கு இந்த பாட்டி பேரனின் சண்டையைப் பார்க்கச் சுவாரசியமாய் இருந்ததென்னவோ உண்மை!
முதல் முறையாய் பாட்டி இப்படி பயங்கொண்டு கத்துவதைப் பார்க்கிறாள்!
“பாவி மவனே! விடு லே என்னை! யம்மா என் குறுக்கு சுளுக்கிட்டு! வயசானவன்னு நினைப்பு இருக்காலே உனக்கு! கூறுகெட்ட பயலே!”
ஒருவாறு பாட்டியைக் கீழே போட்டுவிடாமல் சோபாவில் அமர வைத்திருந்தான்!
“நானும் உன் பேரன் தான் கிழவி, அதை அடிக்கடி மறந்திடுறே நீயி! தேவையில்லாம என் விஷயத்தில் மூக்கை நுழைச்சேன்னு வையி உன் கதி அதோ கதி தான்!”
“யார லே மிரட்டுதே! பிளேனில் துப்பாக்கியை எடுத்தாற கூடாதுன்னு சொல்லிட்டானுங்க, இல்லைன்ன என்னைத் தொட்டதுக்கு சுட்டிருப்பேன் ராஸ்கோல்!”
‘இந்த பூச்சாண்டியெல்லாம் என்கிட்ட காட்டாத கிழவி’ என்பதாய் ஒரு பார்வை பார்த்தவன் உள்ளே போய்விட பாட்டிமுன் தன் முகத்தில் எவ்வித மாறுதல்களையும் காட்டாமல் நிற்கவே நிலானி மிகவும் சிரமப்பட்டுப் போனாள்!
அடுத்த நாளில் ஸ்கைப்பில் தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருந்தார் பாட்டி. பேரன் பேத்தி இருவரும் பகல் பொழுதில் அலுவலகம் சென்றதும் ஆவுடையம்மாளுக்கு பெரும் சோதனை! அவளைக் காப்பாற்ற வந்ததை போல் தேன்மொழி நித்தமும் பேச ஆரம்பித்தாள்!
“நல்லா நெய்யும் பாலுமா போட்டு வளர்த்தியோ! யானை மாதிரி ஒரே தூக்கால்ல தூக்கிபுட்டான் உன் மவன்! அவனை அடிச்சு என் கையி தான்ட்டி வலிக்கிது!”
தன் மாமியார் சொன்ன விதத்தில் தேன்மொழி விழுந்து விழுந்து சிரித்தாள்!
“ரொம்ப சிரிக்காதேட்டி பல்லு சுளுக்கிக்க போவுது!”
தேன்மொழியின் சிரிப்பு அடங்கவும்,
“தேனு உன் வீட்டுக்கு இனி நான் வர முடியாது! அம்பைக்கும் இனி நீ வருவியோ தெரியல!
இங்கன வாட்டி, ஊரு நல்லா இருக்கு! நம்ம பிள்ளைக குடும்பம் நடத்துற அழகை நீ வந்து நேரில் பார்க்கணும் ட்டி!”
“உங்களுக்குத் தான் என் மவனை பிடித்தாதே! இன்னிக்கு என்ன புகழுதீங்க!”
யாரிடமாவது தன் மனதின் போக்கைச் சொல்லித் தானே ஆக வேண்டும். இத்தனை நேரம் திட்டிக் கொண்டிருந்ததை மறந்து போனார்!
“உண்மையை ஒப்பு கிட்டு தானே ஆவணும்! நல்லா வளர்த்திருக்கே தேனு உம் பிள்ளையை! ஆம்பிளையோட லட்சணம் பொண்டாட்டியை அடக்குறதில் இல்லட்டி, அவளை பத்திரமா பாதுகாக்கிறதில் இருக்குன்னு நான் தான் எம் புள்ளைக்கு சொல்லித் தரலை போலட்டி!”
“என்ன சொல்லித் தந்தாலும் ஒட்டுறது தான் ஒட்டும் அத்தை! உங்க மவனை பத்தி இப்ப பேசாதீங்க!”
மாலையில் அனைவரும் திரும்பவும் வழக்கம் போல் சங்கரனுக்கு போன் செய்தார்! வயலை பற்றி பேச்சு முடியவும், தன் மகனைத் திட்ட ஆரம்பித்தார் ஆவுடை பாட்டி!
“இவனால நமக்கு தொந்தரவு வேணாமுன்னு தானே ஒதுங்கிப் போனோம்! அவய்ன் மவனை ஏவி விட்டு என் கிட்டயிருந்து எம் பேத்தியைப் பிரிக்க பாக்கான் லே. நான் விடுவேனா, அவனுக்கு முன்னமே சப்பானுக்கு வந்துட்டேனுல்ல! இந்த ஆவுடையை யாருன்னு நினைச்சான் அவய்ன்!”
‘அப்பா இங்கே வந்ததில்லைன்னு கற்பனையில் திரியுது கிழவி’
அதே யோசனையில் இந்திரன் பாட்டியைப் பார்க்க, பாட்டி தன் பேச்சை மாற்றினார்!
“கூமுட்ட பயலை பெத்தது என் தப்பு! அதுக்கு நிலாவுக்குப் பிரச்சனை வரக் கூடாது! எம் பேத்தி வாழ்க்கையாவது நல்லா இருக்கணும் சங்கரா!”
பேரனிடம் சொல்ல வேண்டியதை மறைமுகமாய் சொன்னார்! தொலைப்பேசியை வைத்த பின்பு அந்த இடத்தில் நீண்ட அமைதி! ஆபிஸ் வேலையில் மூழ்கியிருப்பதைப் போல் பாவனை காட்டிக் கொண்டிருந்த நிலானி இவ்விருவரின் அடுத்த அடி என்ன என்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“மத நம்பிக்கையை எங்க மேல திணித்ததைத் தவிர எங்க அப்பா கிட்ட எந்த தப்பும் இல்லை பாட்டி! ஒரே ஒரு தப்பு செய்திட்டார்னு அவரை ரொம்ப ஜாஸ்தி பேசுறே நீ!”
“ஒரு தப்போ ஒன்பது தப்போ! தப்பு தப்பு தான்லே! வந்துட்டான் இவய்ன் அப்பனுக்கு சப்போட்டு பண்ண! உன் ஜோலியை பார்த்திட்டு போலே!”
மறுபடியும் பாட்டி இருந்த இடத்திற்கு அவன் நெருங்கி வரப் பாட்டி இப்போது அலற ஆரம்பித்தார்.
“எம் மேல இன்றைக்குக் கையை வச்ச நான் என்ன செய்வேன்னு தெரியாது இந்திரா”
உதட்டில் ஒரு புன்னகையுடன் தன் பாட்டியைப் பார்த்தவன் சோபாவில் அவர் பக்கம் அமர்ந்து அவர் சுதாரிக்கும் முன் ஆவுடையம்மாளின் மடியில் தலைவைத்துப் படுத்துக் கொண்டான்.
ஆவுடையம்மாளுடன் சேர்ந்து நிலானியும் அவனைத் திகைப்பாய் பார்த்திருந்தனர்!
அத்தியாயம் 16
“எனக்கான வெளி அடையாளங்களை மாத்த மட்டும் தான் என் அப்பாவால் முடிஞ்சது! மத்தபடி என் மனசில் எந்த தெய்வத்தை கும்பிடணும்னு அவர் முடிவு செய்ய முடியாது பாட்டி! நானும் அம்மாவும் என்னைக்கும் நாங்க கும்பிடுற சாமியை மாத்திகிட்டது இல்ல!”
நிலாவிடம் கூட பகிர்ந்திடாத விஷயங்களைப் பாட்டியிடம் சொல்ல ஆரம்பித்தான் இந்திரன்.
“நிலானியை கல்யாணம் செய்யணும்றது என்னோட தனிப்பட்ட முடிவு! என் அப்பாவுக்கு அவளைப் பத்தி தெரிய வந்து, என் கிட்ட இதெல்லாம் வேண்டாம்னு சொன்னார்! என்னால அவளைத் தவிர யாரையும் என் வாழ்க்கைத் துணையா நினைச்சு பார்க்க முடியலை பாட்டி!”
பேரனின் கூற்றில் நிஜம் இருந்தது அந்த அனுபவசாலியான ஆவுடைபாட்டிக்கு தெரிந்தது!
“நீ நினைக்கிற மாதிரி நானும் என் அப்பாவும் எதையும் முன்னமே திட்டம் போட்டெல்லாம் செய்யலை!”
“நிலானியை கல்யாணம் செய்துகிட்டதால் எனக்கு என் அப்பா கூடவும் பிரச்சனை தான்! அவர் சம்மதம் இல்லாம செய்துகிட்டதில் இன்னைக்கு வரைக்கும் அவர் கூட பேச்சுவார்த்தை இல்லை! எதையும் தெரிஞ்சுக்காம சும்மா தொட்டதுக்கெல்லாம் அவரை குற்றம் சொல்லாதே பாட்டி!”
“உன் சொத்தை எதிர்பார்த்து அவரில்லை! அவர் பிசினஸில் நிறையச் சேர்த்து வச்சியிருக்கார்! அவருக்கு அண்ணா நகரில் வீட்டு வாடகையும், கடை வாடகையும் மட்டும் லட்சமா வருது! அது பத்தாதுன்னு இன்னமும் உழைக்கிறார்! அவரால் இன்னைக்கு தேதிக்கு எத்தனை குடும்பம் முன்னேறியிருக்கு தெரியுமா!”
அவன் நிறுத்துவதைப் போல் தெரியவில்லை! ஆவுடைபாட்டிக்கு இதற்கு மேல் மகனைப் பற்றிக் கேட்கப் பொறுமை இல்லை!
“போதும்ல உன் அப்பன் பெருமை! சும்மா பெருமையில் எருமை மேய்ச்சிகிட்டு!” பாட்டி முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க ஆரம்பித்தது!
“சரி உன் புள்ள பேச்சை விடுறேன். ஆனா இன்னொரு விஷயமும் இருக்கு! உன் பேத்தியை நான் நல்லா பார்த்துப்பேன். என்னையும் கொஞ்சம் நம்பிப் பாரேன்!”
அவர் மடியிலிருந்து எழுந்தவன் ஆவுடைபாட்டியின் கண்களை நேராகப் பார்த்துச் சொல்ல, அவன் பேச்சில் மனசு இளகினாலும் வெளிக்காட்டவில்லை அந்த முதியவள்!
“நம்புற முகரையா இருந்தா நம்பிக்கை தானா வரும்லே. உன்னையும் உன் அப்பனையும் நம்பத் தோணலை எனக்கு! என்னை நம்பு, நம்புன்னு வந்து கெஞ்சுறவ!”
அந்த இடத்திலிருந்து நகர முயன்றவரை இத்தனை நேரமும் முகத்தில் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தவன்,
“ஏய் கிழவி இன்னிக்கும் உன்னை ஏதாவது செஞ்சா தான் நீ அடங்குவே!” சொன்னபடி அவனிடத்திலிருந்து எழ, சிரித்துக் கொண்டிருந்த தன் பேத்தியின் மேல் பார்வை போனது ஆவுடைபாட்டிக்கு!
“நிலா என்னட்டி இளிப்பு, உன் புருஷனை என்னான்னு கேளு! ஒரே அட்டூழியமா இருக்கு இவனோட! இந்த கொடுமைக்கு தான் என்னை இங்க வரச் சொன்னையா நீ!”
பாட்டியின் பதட்டத்தைக் கண்டதும் அந்த கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் பார்த்து நகைக்க ஆரம்பித்தனர்!
அடுத்த நாள் காலை, பாட்டியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர் அதே தம்பதி.
“என்ன இது திடீர்னு! நேத்து செஞ்ச தப்புக்கு இராத்திரியே மன்னிப்பு கேட்காம…எந்திரிங்க!”
“ச்சோ, அதுக்கு இல்ல! ஆசிர்வாதம் பண்ணு ஆத்தா, இன்னிக்கு அவருக்குப் பிறந்தநாள்”
சொன்ன நிலானி இன்று நிரம்பவும் அழகாய் தெரிந்தாள் அந்த பாட்டியின் கண்களுக்கு!
தலைப் பேரன் அவன் இந்த பூமியில் பிறந்த தினம் தான் அடைந்த மகிழ்ச்சி இன்னமும் நினைவு இருக்கிறது ஆவுடைபாட்டிக்கு! அதே நினைவோடு,
“நல்லா இருங்க இரண்டு பேரும்! எம் பேத்தியைப் பத்திரமா பார்த்துக்கோ லே!”
பாட்டியின் கண்கள் கலங்கியது!
அவனுக்குத் திருநீறு வைத்து விட,
“அவ கிட்டயும் சொல்லேன் பாட்டி உன் பேரனை பார்த்துக்க சொல்லி!”
“யாருக்கு என்ன சொல்லணும்னு எனக்குத் தெரியும், நவருலே!”
பேத்தியின் உச்சிமுகர்ந்தவர்,
“நிறைய புள்ளைகளை பெத்துக்கோ நிலானி! ஆத்தா இருக்கேனில்ல நான் வளர்த்து தாரேன்”
“அதை நீ என் கிட்ட சொல்லணும் கிழவி”
பாட்டியும் நிலாவும் ஒன்றாய் அவனை முறைக்கப் பேச்சை மாற்றினான்!
“ஆசீர்வாதம் வாங்கியிருக்கேன், விபூதி மாத்திரம் தானா உன் பரிசு!”
“இந்தா…!”
அவர் தந்த இரண்டாயிரம் இந்திய ரூபாய் நோட்டுக்களைப் பெற்றுக் கொண்டவன்,
“இதெல்லாம் வேணாம், எனக்கு என் சின்ன வயசில் செஞ்சி தந்த மாதிரி கறி குழம்பு வச்சி கொடு! இட்லியும் கறி குழம்பும்!”
பாட்டிக்கு வியப்பாய் இருந்தது! இன்னமும் அதையெல்லாம் நினைவில் வைத்திருக்கிறானா இவன்? எத்தனை வருடங்களானாலும் நாம் உண்ட உணவின் ருசியை மட்டும் மறப்பது கடினம் என்பது பாட்டிக்குத் தெரியவில்லை போலும்!
பெயர் ஊர் தெரியாதவர்களுக்குக் கூட உணவளிக்கும் ஆவுடைபாட்டி பேரன் இப்படிக் கேட்டால் சும்மா இருப்பாரா! அடுத்த நாளே அந்த வீட்டில் கறிகுழம்பு தயார்!
தாமு எத்தனை முட்டுக்கட்டை போட்டும், மடையை உடைத்து ஓடும் நீரைப் போல் தேன்மொழி தன் வழியில் குறுக்கே வந்தவரைச் சட்டை செய்யாது போய்க் கொண்டே இருந்தார்! மனைவியின் இந்த புதிய மாற்றம் அவரையும் குழப்பியது! விமான நிலையம் வரைக்கும் கூட வந்து அவரை அனுப்பாமல் தன் எதிர்ப்பை பிடித்துக் கொண்டு நின்றுவிட்டார் தாமு!
அவரின் நிலையோ கீழே விழுந்து மண்ணை கவ்வியது போன்றது தான்! ஆனால் அதை எவரிடமும் வெளிக்காட்ட முடியாதே! இருபது மணிநேரம் பொறுத்துப் பார்த்தவர் மனைவியின் தற்போதைய நிலையை அறிய எண்ணி மகனை ஸ்கைப்பில் பிடித்தார்!
அந்த ‘ஸ்கைப் காலை’ எடுத்தது ஆவுடையம்மாள்! பேரப்பிள்ளைகள் இருவரும் அங்கே வந்திருந்த தேன்மொழியிடம் பேசிக் கொண்டிருக்க, ஆவுடையம்மாள் லேப்டாப்பை உயிர்ப்பித்திருந்தார்! மண்வெட்டி, அரிவாள் என்று பழகிய கை இன்று ‘மெளசை’ வைத்துப் பல வருடங்களாய் பழகியது போல் அசத்திக் கொண்டிருந்தது!
“ஊருக்கு போறப்ப எனக்கு ஒரு லப்டப்பு வாங்கி கொடுட்டி நிலா! இது இல்லாம இனி எனக்குச் சிரமம் ட்டி!” என்று சொல்லி நிலானியை திகைக்க வைத்திருந்தார்!
இப்போது அன்னை ஸ்கைப்பில் வரவும் எதிர்புறம் இருந்த தாமு தன் மொத்த எரிச்சலையும் அவர் மீது காட்டினார்!
“திட்டம் போட்டு என் பொண்டாட்டியையும் மகனையும் என்கிட்ட இருந்து பிரிக்கிறியா மா?
நாங்க தான் நீ வேண்டாம்னு ஒதுங்கி இருக்கோமே, ஏன் வலிய வந்து வம்பு செய்றே!”
அத்தனை நேரம் இருந்த மகிழ்ச்சியான சூழ்நிலை மாறிவிட்டது அந்த வீட்டில்!
ஆவுடையம்மாள் பெருங்குரலில் ஆரம்பித்தார்!
“பல்லை தட்டிருவேன் ராஸ்கோல்!
யாருலே நீ, யாரு! கண்ட கண்ட அநாத பயலும் என்னை அம்மான்னு கூப்பிடுறதா! எனக்கு ஆயிரம் வேல வெட்டி கிடக்குலே! ஒவ்வொருத்தன் பின்னாடியே போய் அவன் மனசை மாத்துறது தான் என் பொழப்புன்னு நினைச்சியா!”
குடும்பத்தினர் அனைவரும் இண்டர்நெட் வழியே அங்குச் சண்டையிட்டுக் கொண்ட மகனையும் தாயையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தனர்!
“கெவினை அந்த புள்ளையோட சேர்த்து வைக்க முடிவு செஞ்சிடீங்கல, இதுக்கான பலனைக் கூடிய சீக்கிரம் அனுபவிப்பீங்க!”
“என்ன லே மிரட்டுதே! இந்திரன்னு அழகா சாமி பெயரை வச்சியிருக்கிற பயலை, சும்மா வேற மாதிரி கூப்பிட்டுகிட்டு இருக்கே! என்ன அனுபவிப்பேனா, நான் தானே… ஏற்கனவே நல்லவிதமா அனுபவிச்சாச்சு லே! என் பேரன் என் கிட்ட அன்பை பொழியுறான், தெரிஞ்சுக்கோ!”
பாட்டி மகனைக் கடுப்பேற்ற அது தப்பாமல் தன் காரியத்தைச் செய்தது!
“இதெல்லாம் எத்தனை நாளைக்குன்னு பார்க்கத் தான் போறேன்!”
“எத்தனை நாளா! எத்தனை வருஷமுன்னு சொல்லு! என் பேரன்லே! என் பரம்பரை அவய்ன்! ஒரு நாளும் உன்னை மாதிரி தடம் மாறிப் போக மாட்டான்!”
குரல் இடறியது அவருக்கு!
“பெத்தவயிறு பத்தி கிட்டு எரியுதடா!
உனக்குச் சோறு போட்டு வளர்த்த அப்பன் ஆத்தாளுக்குக் கடமை செய்ய கூடாதுன்னு எந்த மதத்திலேயும் சொல்லலையே! எதை எதையோ காரணம் காட்டி இத்தனை வருஷம் ஏமாத்திட்டியா எங்களை! தகப்பனுக்குக் கொள்ளி போடக் கூட வரலையே நீயி! அது எத்தனை பெரிய பாவம் தெரியுமா லே! எந்த ஆலயத்தில் போய் இதைச் சுத்தம் செய்வே!”
அழுக ஆரம்பித்திருந்தார் ஆவுடையம்மாள்!
மகன் தன்னை காயப்படுத்தியது இத்தனை வருடங்களுக்குப் பிறகு வலித்தது அவருக்கு, அதுவும் அளவுக்கு அதிகமாய்!
“நீ உன்னை பெத்தவங்களுக்கோ, உன் மதத்துக்கோ, உன் பொண்டாட்டிக்கோ உண்மையா இல்லையே லே! சாமியை மாத்திட்டே! உன்னைச் சுத்தியுள்ள ஆசாமி மேல பாசமில்லை! எல்லாத்தையும் விட்டிட்டு இப்ப காசுக்குப் பின்னே ஓடுதியே! உன் கடைசிக் காலத்தில் அந்த காசா உன் துணைக்கு வரும்னு நினைக்கே?”
தாமு எதற்கும் பதில் பேசாமல் இருந்தது தேன்மொழிக்கு ஆச்சரியமே!
“எங்குலத்தை நாசம் செய்யப் பார்த்த பாவிபய நீ! உன் கிட்ட இன்னும் என்ன பேச்சு வேண்டிகிடக்கு! ஒண்ணு சொல்றேன் கேட்டுக்கோ, எதுவானாலும்
ஆரம்பிச்ச இடத்துக்கு வந்து தான் லே சேரும்! அது மழையானாலும் சரி நீ செய்த பிழையானாலும் சரி! அப்போ உன்னை பெத்தவ பேச்சை உணர்வே நீயி! ரொம்ப வருத்தப்படுவே”
தாமு பேச வந்ததைக் கைகாட்டி தடுத்தவர்,
“எல்லா கடவுளும் அன்பைப் போதிக்கச் சொல்லிக் கொடுத்தா நீ வெறுப்பை உமிழ்ந்திட்டு இருக்கே! உன்கிட்ட போய் இதை சொல்றேன் பாரு! செவிடன் காதுல சங்கை ஊதுகிறதைப் போல! சை கட் செய்யிலே இதை! என் மருமவ என்னைத் தேடிப் பல ஆயிரம் மைல் வந்திருக்கா, அவளை கவனிக்கணும் நான்!”
அழுகை கோபம் சாபம் எல்லாம் கலந்த கலவையாய் ஆவுடையம்மாளின் பேச்சைக் கேட்டு தாமு பதிலளிக்காமல் சிலையாய் நிற்க, இணைப்பைத் துண்டித்தார் ஆவுடையம்மாள்!
வருத்தத்துடன் அந்த பெரியவள் தன் படுக்கையில் போய் விழ அந்த குடும்ப உறுப்பினர் எவரும் அவரை தொந்தரவு செய்ய முயற்சிக்கவில்லை!
அத்தியாயம் 17
“நிலா, நான் ஒண்ணு கேட்பேன், மாட்டேன்னு மட்டும் சொல்லக் கூடாது.”
பீடிகையுடன் ஆரம்பித்தாள் நிவி. அவளிடம் பேசி நிறைய நாள் ஆனதே என்று நிலானியே தான் அப்போது அவளை போனில் அழைத்திருந்தாள்.
“அப்படி நான் மாட்டேன்னு சொல்லாத அளவுக்கு எதுவாயிருந்தாலும் கேளு நிவி.”
“ஹேய் என் டார்லிங் அப்படியெல்லாம் சொல்லக் கூடாதடி என் தங்கம்!”
“யம்மா தாயே ஆத்தா வேற வெட்டியா பேசிகிட்டிருக்கேன்னு நினைச்சு ரொம்ப நேரமா என்னையே முறைச்சிட்டு நிக்கிது. நீ சீக்கிரமா விஷயத்தை சொல்லு”
“வந்து…அந்த…வந்து…உங்க பிரபோசல் சீனை கொஞ்சம் ஃபீல் பண்ணி எனக்கு இன்னொரு தடவை சொல்லேன். நானும் இது வரை நாலு வாட்டி அதை அழுச்சி அழுச்சி எழுதிட்டேன், சரியா வர மாட்டேங்கிது டி!”
“போட்டேன்ன தெரியும் உனக்கு நிவி! நிஜமா என் கிட்ட ஒரு நாள் செம உதை வாங்கப் போற நீ. என் வாழ்க்கை உனக்கு விளையாட்டா இருக்கா நிவி?”
“நிலானி ப்ளீஸ் மா, கதையில் முக்கியமான கட்டம் இப்ப. என் வாழ்க்கையில் குத்துவிளக்கை ஏத்தி வை டி என் தங்கமே! நான் உன் ஃபிரண்டு தானே, என் கிட்ட இதைக் கூடச் சொல்ல மாட்டியா!”
“நீ ஊருக்கே சொல்ற ஐடியாவில் இருக்கியே ராசாத்தி, அதனால் சொல்லமாட்டேன். திரும்பத் திரும்ப கேட்காதே. இப்பவரை நீ பேசினது போதும் போனை வைடி!”
கோபமாய் சொன்னது போல் சொல்லிவிட்டாள், இல்லையானால் நிவி இவளிடம் விஷயத்தை வாங்காமல் விட்டிருக்க மாட்டாள்.
நிவியின் தற்போதைய பேச்சினால் வந்த விளைவு, நிலானி அந்த பழைய நாட்களுக்கு இழுத்துச் செல்லப்பட்டாள். நிலானியின் மனம் அவளும் இந்திரனும் சந்தித்த இடத்தின் சூழ்நிலையை என்றுமே மறக்காது! மறக்க நினைத்தாலும் முடியாது. அதெல்லாம் நிவியின் புத்தகத்திற்காக அவளால் சொல்ல முடியாத விஷயம். நிலானி தன் மன பெட்டகத்தில் பொக்கிஷமாய் பூட்டி பத்திரமாக வைத்திருப்பவை! அவள் மாத்திரமே மீண்டும் மீண்டும் அதனை ரசித்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறாள் இன்றளவும்.
அவனைப் பற்றிய கற்பனைகளும் ஆசைகளும் அளவுக்கு அதிகமாய் முற்றி மோதிக் கொள்ள ஆரம்பித்திருந்த சமயம் அது. தன்னால் என்றுமே இந்திரனை மறக்க இயலாது என்று உணர்ந்த தருணமது. அவனுக்கும் அதே போல் அவளிடம் எண்ணமுண்டு என்பதையும் அவள் நன்கு அறிவாள்.
அவனை அன்று சந்தித்தே தீர வேண்டும் என்ற முனைப்பில் இந்திரனுக்கு போன் செய்து அந்த குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லியிருந்தாள் நிலானி! எப்படி தன் விருப்பத்தை அவனிடம் சொல்லப் போகிறோம் என்பது தெரியவில்லை அவளுக்கு, பலவிதமாய் ஒரு படபடப்பு.
அவனுக்கு முன்பே இவள் போய் அங்கே காத்திருக்க ஆரம்பித்திருந்தாள். வரேன் என்றவன் சொன்ன நேரத்தை விட அரைமணிநேரம் கடந்தே வந்தான். இவன் ஆபிஸில் வேலை பார்ப்பானா என்று இவள் வியக்கும் அளவுக்குப் படு ஃபிரஷாக வந்திருந்தான், முகத்தில் களைப்புமில்லை ஒன்றுமில்லை.
நிலானிக்கு தான் அவள் நினைத்து வைத்திருந்த வார்த்தைகள் எல்லாம் மறந்து போயிருந்தது. எப்படிச் சொல்ல? என்னவென்று அவனுக்கு விளக்க! இத்தனை சீக்கிரத்தில் காதல் வருமா என்றெல்லாம் கேட்டுவிடுவானோ!
ஏக சிந்தனைகள் அவளுக்கு.
“என்ன நிலானி வர சொல்லியிருந்தீங்க? எனி பிராப்ளம்?” என்றவன் சாதாரணமாய் வந்து அவள் பக்கம் அமர,
“யெஸ் பிராப்ளம் தான் இந்திரன்”
அவன் முகத்தைப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருந்தவள், இப்போது அவனின் கண்களைச் சந்திக்க முடியாமலிருந்தாள்.
“சொல்லுங்க நிலானி, உங்களுக்கு என்ன பிரச்சனை?”
அவனுக்கு அவளின் தற்போதைய எண்ணம் புரிந்திருந்ததோ, அவளுக்குத் தெரியவில்லை!
“இந்திரன், நான் உங்களை விரும்புறேன். யெஸ் ஐயம் இன் லவ் வித் யூ.”
சொல்லிவிட்டவள் அவனை பாராமல் தலைகுனிந்தபடி அப்படி அமர்ந்திருந்தாள். இந்திரன் யோசித்தது எல்லாம் சற்று நேரம் தான்.
அவள் கைமேல் தன் கைகளை வைத்தவன்,
“ஐ லவ் யூ டூ நிலானி” என்றவன் அவளைப் பார்த்து ஒரு புன்னகை புரிய அதில் முழுவதுமாய் வீழ்ந்துவிட்டாள் நிலானி.
“என்னாட்டி பகல் கனவு கண்டுட்டிருக்க, விரசா வேலையை முடிச்சா தான் என்னவாம். கொஞ்சம் கூட உனக்குப் பொறுப்பே இல்ல நிலா புள்ள”
ஆத்தா திட்டிய திட்டுக்களில் நிகழ்காலத்துக்கு வந்தாள்.
அவனும் தன்னை விரும்புகிறான் என்றதும், பாட்டியின் சம்மதத்திற்குக் கூட காத்திராமல் அவனைத் திருமணம் வரைக்கும் இழுத்துச் சென்றதில் எல்லாம் அவளுக்கும் பங்குண்டு.
ஆனால் அவனை மாத்திரம் திட்டியிருக்கிறாள், தன்னை ஏமாற்றிவிட்டான் என்று சாடியிருக்கிறாள்.
முன்தினம் பாட்டி தன் மகனிடம் பேசியவை ஏனோ சட்டென்று நினைவுக்கு வந்தது அவளுக்கு. ஆத்தா இப்போது எல்லாம் மறந்து போயிருக்க அதைப் பற்றிப் பேசி அவர் மனதைப் புண்படுத்தக் கூடாது என்பதில் தெளிவாய் இருந்தாள் நிலானி!
மாமனைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தாள். எதற்காகவோ அவர் மனம் மாறியிருக்கிறது, அவர் சொன்ன வழியே துணை போக அவரின் இரத்த சொந்தங்கள் கூட விரும்பவில்லை! தனியே அவ்வழியே போயே தீருவேன் என்று அவரும் இன்றளவும் போய்க் கொண்டிருக்கிறார்! இது சரியா தவறா என்பதை அவருக்குக் காலம் உணர்த்தும்! அதற்கு இன்னும் எத்தனை ஆண்டுகள் எடுக்கும் என்பது பெரிய கேள்வி! தாமு மாமா இன்று வரை மாறவில்லை இனியும் மாறமாட்டார் என்று நினைத்துக் கொண்டாள்!
தாமு போல் எத்தனையோ பேர், வந்த பாதை மறந்து போகிற பாதை புரியாமலும் இருக்கிறார்கள்! ஆனால் ஆவுடை பாட்டி வீட்டில் இப்படி ஒன்று நடக்காமலிருந்திருக்கலாம்!
‘பாவம் ஆத்தா’ என நினைத்தவள் தன் அடுத்த காரியங்களில் மூழ்கிவிட்டாள்.
இந்திரனோ அந்த வீட்டில் எந்த ஒரு விஷயமும் நடக்கவில்லை என்பதுபோல் தன் கல்லூரி கதைகளை தன் அன்னையிடமும் பாட்டியிடம் இப்போது அளந்து விட்டுக் கொண்டிருந்தான். சமையலறையிலிருந்தபடி அவன் மீது ஒரு பார்வை வீசியவள்,
‘இவனை வைத்துக் கொண்டு! இந்த ‘டீடெயில்ஸ்’ எல்லாம் அவங்களுக்கு இந்த வயசில் எதுக்காம்!’
“எங்கையாவது வெளியே போலாமா?” தாங்கமாட்டாமல் அனைவரிடமும் கேட்டாள்!
“தெனமும் என்னட்டி வெளியே சுத்திகிட்டு! இன்னிக்கு சும்மா வீட்டிலேயே இருப்போம்!”
வழக்கம் போல் அதிகாரமாய் பேத்தியிடம் சொன்ன ஆவுடை பாட்டி, அடுத்த நிமிடம் இந்திரனிடம் திரும்பி,
“பெறவு என்ன லே ஆச்சு? மீதி கதையை நிப்பாட்டாம சொல்லுலே”
பேரனின் மீது தன் மொத்த பார்வையையும் திருப்பிக் கொண்ட பாட்டியைப் பார்க்க நிலாவுக்குப் பற்றிக் கொண்டு வந்தது! இப்போதெல்லாம் சதா சர்வ காலமும் இந்த ‘புது’ பேரனுடனே சுற்றிக் கொண்டிருக்கிறாள்!
“ஆத்தா இன்னும் ஒரு வாரத்தில் நீ ஊருக்கு கிளம்பணும், உனக்கு அது ஞாபகமிருக்கா? இந்திரன், ஒருத்தங்க கிடைச்சா இப்படி தான் அவங்க காதை ஓட்டையாகுற அளவுக்கு பேசுவியா! இப்ப வெளியில் கூப்பிட்டு போறியா இல்லையா!”
இந்திரன் என்ன நினைத்தானோ! மனைவிக்கு ஏற்றார் போல் இப்போது ஒத்து ஊதி, ஒரு வழியாய் பெரியவர்கள் இருவரையும் கிளப்பி விட்டான்.
அவள் அனைவரையும் அழைத்து வந்தது அதே இடம்! அவர்கள் இருவராலும் என்றுமே மறக்க முடியாத இடம். அவள் தன் காதலைச் சொன்ன இடம். கல்யாணம் செய்ய வேண்டும் என்று அவனிடம் யாசித்த இடம்.
இந்த தரணியில், பரப்பளவில் பெரிய நாடு என நாம் எண்ணியதை கூட சின்ன துகள்களாய் காண்பிக்கும் சாட்டிலைட் புகைப்படங்களெல்லாம் நமக்கு ஒரு அத்தாட்சி, மனிதன் எத்தனை சிறியவன் என்பதற்கு!
அப்படி இருக்கும் ஒவ்வொரு மனிதனின் சின்ன நெஞ்சிலும் எத்தனை கோடி ஆசைகள்! அதில் பாதிக்கு மேல் நிறைவேறினாலும், நிறைவேறாமல் போனவற்றை நினைத்தும், வருந்தியும், வன்மம் வளர்த்தும் எத்தனை காலங்களை வீணாகின்றன!
ஆவுடை பாட்டிக்கு தன் பேத்தியின் நல்வாழ்வுக்கு ஆசை, இந்திரனுக்கு தன் மனதுக்கு இனியவளான நிலானியுடன் காலம் முழுவதற்கும் வாழ ஆசை, தாமுவுக்கு தன் குடும்பத்தினர் தன் வழியை மட்டுமே பின்பற்ற வேண்டுமென்ற ஆசை! ஆண்டவன் பார்வையில் எவரின் ஆசை நியாயமானதோ அவை மட்டுமே நிறைவேறக் கூடும் சாத்தியக்கூறுகள் அதிகம்! வம்படியாய் சிலவற்றைப் பொருள் பலத்தாலோ, அதிகாரம் கொண்டோ நிறைவேற்றிக் கொள்பவர்களுக்குத் தெரியாது அதன் ‘அற்பாயுசை’ பற்றி!
அது ஜப்பானின் இலை உதிர் காலம்! ஒரே இடம் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு அழகில் இருக்கும் என்பதை நிலானி அறிந்திருந்தாலும் இன்று ஏனோ அதைப் புதிதாய் பார்ப்பது போல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதில் மெய் மறந்தும் போயிருந்தாள்.
ஆவுடைபாட்டிக்கும் அந்த இடம் மிகவும் பிடித்திருந்தது.
“எல்லாமே இந்த ஊரில் அழகு தான். ரசிக்கலாம் அதிலேயே ஐக்கியம் ஆகிட முடியாது, ஆகிடவும் கூடாதுட்டி நிலா!” என்றாள் பேத்தியிடம்.
“அதெல்லாம் எனக்கும் தெரியும் ஆத்தா!”
இருவருக்கும் நடுவில் இருந்த இந்திரன் கிடைத்த வாய்ப்பை விடாது,
“பெரியவங்க சொல்றதுக்கு இப்படிதான் பதில் சொல்லுவியா நிலா, சரி பாட்டின்னு மரியாதையா சொல்லு!”
அவளைப் பார்த்துக் கண்ணடித்துச் சொன்னவனைக் கிழவி கவனிக்கவில்லை.
“தேனு வளர்ப்பு சரியாத்தேன் இருக்கு! நான் தாய்ன் சரியா வளக்கலை, அதிகமா செல்லம் கொடுத்தேன் போலிருக்கு” பேத்தியிடம் தன் முகத்தை நொடித்துக் கொண்டாள் பாட்டி.
தனிமை வேண்டும் என்பதுபோல் இந்திரன் நிலானியை தனியே அழைத்துக் கொண்டு போனான். ‘உர்’ ரென்று இருந்தவளின் கன்னத்தில் சட்டென்று முத்தமிட்டவன்,
“இதையெல்லாம் கண்டுக்காதே டி பொண்டாட்டி” என்றவாறு அவள் தோளில் கைபோட,
அந்த கைகளில் இரண்டு அடி வைத்தவள்,
“நீங்க இரண்டு பேரும் சமரசம் ஆக என்னை ஏன் டா டேமேஜ் செய்யுது அந்த ஆத்தா!”
“சத்தியவான் சாவித்திரி கதையெல்லாம் படிச்சிருக்கியா நீ? அவங்க எல்லாம் கட்டின கணவனுக்காக என்னவெல்லாம் செஞ்சாங்க தெரியுமா! எனக்காக ஒரு சின்ன இன்சல்ட், அதுவும் வளர்த்த பாட்டி கிட்ட வாங்க மாட்டியா என் நிலானி குட்டி!”
அவன் கொஞ்சியதில் சமாதானமானவள் அவனுடன் கைகோர்த்துக் கொள்ள,
“என்ன இன்னிக்கு நிலானிக்கு என்ன ஆச்சு! எனக்கு எதுவுமே புரியலையே!”
கணவனை கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன நல்லா பார்த்துப்பியா இந்திரன்! உனக்காக நான் என் பாட்டியைக் கூட விட்டிட்டு வந்திருக்கேன்!
சண்டை எல்லாம் போட மாட்டியே!”
“புருஷன் பொண்டாட்டின சண்டை இல்லாமலா! அதெல்லாம் போடத் தான் செய்வேன்!
“நீ இல்லாம என்னால வாழ முடியும்னு இன்னுமா நினைக்கிறே இந்திரன்?”
அவள் ஒரு நிலையில் இல்லை இன்று.
“நான் எங்கே டி நினைச்சேன்! நீ தான் அடிக்கடி இப்படியெல்லாம் உளறிகிட்டு இருக்கே!”
அவளைப் பலவாறு சமாளித்தவன் மற்றவர்கள் இருந்த பக்கம் அழைத்து வந்தான்!
இரு பெரிய மலைகளின் ஊடே ஒரு காட்டாறு! அது பாய்ந்து செல்லும் பாதையின் இரண்டு பக்கமும் மரங்கள்! மரம் பச்சை நிறம் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்கும் நம்மவர்களுக்குக் கொஞ்சம் சிவந்த இலையும், கொஞ்சம் மஞ்சள் நிறமும் சேர்ந்திருந்தது நிரம்பவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது! அந்த காட்சியைப் பார்த்து ரசிப்பது போல் இருந்த மர இருக்கையில் அமர்ந்திருந்த பாட்டியும் தேன்மொழியும் அதில் மெய்மறந்திருந்தனர்!
இந்திரன் அங்கே வந்ததைக் கண்டவர்,
“எம்புட்டு அழகு லே! இயற்கையைப் பத்திரமா பாதுகாக்க தெரிஞ்சவங்க கிட்டத் தான் அதுவும் தங்கும்! இந்த மக்களுக்கு அது நல்லா தெரியுதுலே!” பேரனிடம் தன் எண்ணத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார் ஆவுடை பாட்டி.
“ஆமா பாட்டி!”
“நம்ம ஊரிலும் மாற்றம் வரும்லே! இப்ப எல்லாம் பட்டம் படிச்சிட்டு சம்பாதிச்சிட்டு தான் பயலுக விவசாயம் செய்ய வந்திடுறாங்க லே! பழைய மாதிரி நஷ்டத்துக்கு செய்யாம லாபமும் பாக்காய்ங்க!”
“ஆமா பாட்டி!”
“என்ன லே எல்லாத்துக்கும் ஆமா போடுதே! இந்திரா…”
பாட்டியால் அமர்ந்தபடியே திரும்பி தன் பேரனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை, வயதின் வேலை! தேன்மொழி மகனைப் பார்க்க அவன் சற்று தள்ளி நின்றிருந்த நிலானியின் மீது கவனமாய் இருந்தான்!
“ஏலேய் இந்திரா…” பாட்டி மறுபடியும் அதட்ட.
அதற்கு அந்த ஆமாம் கூட வரவில்லை.
தன் அத்தையைப் பார்த்து நமுட்டு சிரிப்பு சிரித்துக் கொண்டார் தேன்மொழி!
இந்திரனும் நிலானியும் ஆவுடைப்பாட்டியின் ஆசிகளுடன் நீண்ட நாட்கள் நீடூழி வாழ்க வளமுடன்.