சாக்லேட் பாய் – 04
தர்ஷினியோட சிஸ்டமில் சாக்லேட் பாய் என்ற பெயரில் ஒரு கோப்பை கண்டவன், அதை திறந்தான். அந்த கோப்பு முழுவதும் மீம்ஸ் (memes) நிறைந்திருந்தது. முதலில் ஹர்ஷாவிற்கு எதுவும் விளங்கவில்லை.
ஒவ்வொன்றையும் நிதானமாக ஆராய அதன் பொருள் புரிந்தது.
அன்றைய நாளில் அவள் உருவாக்கியிருந்த மீம்மை பார்த்தான். ஒரு ஆசிரியை ஒரு மாணவனை காதை திருகி கண்டிப்பது போல் இருந்தது அந்த படம். அந்த ஆசிரியையின் அருகில் தர்ஷினி என்றும், அந்த மாணவனின் அருகில் சாக்லேட் பாய் என்றும் எழுதப்பட்டிருந்தது.
அந்த படத்தின் கீழே ‘எனக்கு ஒரு மெசேஜ் கூட அனுப்புனது இல்ல ஆனா அந்த சாருக்கு மட்டும் இன்னைக்கு புல்லா மெசேஜ் பண்ணுவியா?” என எழுதப்பட்டிருந்தது.
இதை படித்ததும் ஹர்ஷாவிற்கு ஒன்றும் புரியவில்லை. புருவங்களை நெரித்து யோசித்தவனுக்கு உண்மை மெல்ல புரிந்தது.
“ஹே….. இன்னைக்கு நாம தானே சாருகிட்ட இன்னைக்கு புல்லா மெசேஜ் பண்றேன்னு சொன்னோம். ஸோ…. ஸோ…. நாம தான் அந்த சாக்லேட் பாயா? என் குட்டிம்மா எனக்கு இப்படி தான் பேர் வைச்சிருக்காளா? அடிப்பாவி! இத சொல்லும் போது தானே நீ உள்ளையே வந்த? அப்போ உள்ளே வரும் போதே என்னை நோட் பண்ணிட்டே தான் வருவியா?” என எண்ணியவனுக்கு சொல்ல முடியாத ஓர் உணர்வு தோன்றி அவனை காற்றில் மிதக்க வைத்தது. அதிலிருந்த அனைத்து மீம்ஸூம் ஹர்ஷா பேசியதற்கு தர்ஷினி மனதிற்குள் பதில் பேசியது.
காதலாக, பாசமாக,கோபமாக,ஆசையாக, குறும்பாக, ஏக்கமாக, நக்கலாக அவனிடம் மீம்ஸின் வாயிலாக பேசியிருந்தாள் அவளது செல்ல தேவதை.
நிச்சயம் பெண்ணின் காதலுக்கும், ஆணின் காதலுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டுமே உயர்ந்தது தான் என்றாலும் அதை உணர்வதில் வேற்றுமை இருக்கும்.ஆணின் காதல் அறையில் வைத்த தீபம் போல அதன் ஒளி எங்கும் நிறைந்திருக்கும் ஆனால் ஒரு பெண்ணின் காதல் ஆழ்கடலில் அமிழ்ந்திருக்கும் சிப்பிக்குள் இருக்கும் முத்தை போல. அதை தேடி வருபவர்களுக்கு மட்டுமே ஒளி கொடுக்கும்.
கண் நிமிர்த்தி அவனை கண்டது கூட இல்லை….. இதழ் பிரித்தும் ஒரு வார்த்தை பேசியதில்லை…… கை கோர்த்து நடந்ததும் இல்லை……… இருந்தாலும் தன் மீது இத்தனை காதல் எப்படி துளிர்த்தது என வியந்து போனான் அந்த காதல் மன்னன்.
அதற்கும் ஒரு பதிலாக அவளது மீம் ஒன்றை கண்டான் ,
“When you know why you like him,
Its crush…..
When you have no reason y you like him
Its LOVE ?????
அவன் மனதில் தோன்றிய அனைத்து கேள்விகளுக்கும் மீம்ஸின் மூலமான பதிலுரைத்திருந்தாள் அவனது மௌன தேவதை.
ஒவ்வொரு மீம்ஸையும் பார்த்து பரவசபட்டவனின் கண்களில் கடைசியாக இருந்த கோப்புறை (folder) பட்டது. அதை திறந்து பார்த்தான். சென்ற மாதம் அலுவலக விழாவின் போது எடுத்த புகைப்படங்கள் இருந்தது.
“அன்னைக்கு வீடியோஸ் மட்டும் தானே எடுத்தாங்க…. போட்டோஸ் எடுக்கலயே” என எண்ணியவாறு ஆராய்ந்தவனின் இதயம் ஒரு நொடி துடிக்க மறந்தது. அவை அனைத்திலும் தர்ஷினி ஹர்ஷாவை பார்த்தபடி இருந்தாள். விழாவின் போது எடுத்த காணொலியில் தர்ஷினி ஹர்ஷாவை பார்த்த நொடிகளை மட்டும் படமாக்கி வைத்திருந்தாள்.
“ வாவ்…. நீ என்னை சைட் அடிக்கும் போது எவ்ளோ அழகா இருக்கிற பேபி. சே….. கண்ணா அது? என்னை முழுசா சுருட்டி இழுத்துடுவா போலயே????? இந்த பார்வையை மட்டும் அன்னைக்கே கவனிச்சியிருந்தா என் லவ்வ அன்னைக்கே சொல்லியிருப்பேனே. கள்ளி! எவ்ளோ ரகசியமா சைட்டடிச்சிருக்கா.” தர்ஷினியின் காதலில் திக்குமுக்காடி போனான் ஹர்ஷா.
தர்ஷினியின் சாக்லேட் பாய்க்கு அவனது உணர்வுகளை சொல்ல தெரியவில்லை. இப்படியொரு காதல் வழியை அவன் கண்டதில்லை. இதயம் பனிக்க அவளது காதலை அழகாய் உணர்த்தியிருந்தாள் தர்ஷினி.
“ பட்…. தர்ஷி பேபி! உன் லவ்வுக்கு என்னோட லவ் ஒன்னும் சளைச்சது இல்லை” என்றான் கர்வமாக.