அத்தியாயம் மூன்று

கனவுகள் அற்ற இரவுகளில்

கண்ணீரோடு கடக்கிறது

உன் நினைவுகள்

 -டைரியிலிருந்து

வருண் திடுக்கிட்டு ஆதிரையை பார்ப்பதை உணர்ந்த விசாலாட்சியும் வள்ளியம்மையும் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள, அதில் ஏதேதோ அர்த்தங்கள் தொனித்தது! அதை வெளிப்படையாக பேசிவிடத்தான் யாருக்கும் துணிவில்லை!

“நான் என்ன ஸ்பானிஷ் ஹீப்ரூவா பேசிட்டேன்? எல்லாரும் இப்படி பேயறைஞ்ச மாதிரி பார்க்கறீங்க?” ஆதிரை புரியாமல் கேட்க… மூவருமே சற்று சுதாரித்தனர்…

“நம்ம கம்பெனிக்கா? ஆதி ஆர் யூ ஜோக்கிங்?” சிரித்து கொண்டே கேட்ட வருணை பார்த்து முறைத்தவள்,

“ஏன் மாமா? நான் வரக்கூடாதா?எனக்கு வேலை கற்று கொடுக்க மாட்டீங்களா?” சிறுபிள்ளை போல முகத்தை சுறுக்கி வைத்து கொண்டு அவள் கேட்ட தொனியில் அவனது இறுக்கம் காணமல் போனது… அவளது வலது கையை தன்னுடைய இடக்கையோடு பிணைத்து கொண்டு , அவளை தட்டி கொடுத்து…

“கண்டிப்பா கற்று கொடுப்பேன் ஆதி ஆனால் நீ ஒழுங்காக கற்று கொள்ள வேண்டுமே!” கேலி புன்னகையோடு அவன் கூற ,

“மாமா… டோன்ட் ப்ளே… ” ஆதிரை சிணுங்க… விசாலாட்சி உதவிக்கு வந்தார்…

“வருண்… எப்படியும் ஆதி அங்க வந்து தானே ஆகவேண்டும்? வீட்டுக்குள்ள அடைந்து கிடக்கவா இவ்வளவு படித்தது?நீ வேலை கற்று கொடுக்காம வேற யார் செய்வாங்க?” விசாலாட்சி சற்று கறாராக கேட்கவும் வருணின் முகம் குழப்பத்தில் ஆழ்ந்தது… அவனது குழப்பம் என்னவென்பதை அறிந்த அவனது அன்னை, கண்களால் சமாதானப்படுத்த… , அதுவரையில் இருந்த விளையாட்டு தொனி தீவிரத்திற்கு மாறியது!

“ஆதி… சும்மா டைம்பாஸுக்கு ஆபீஸ் வருகிறேன் என்று இருக்க கூடாது… ஒன்ஸ் கமிட்டட் என்றால் கமிட்டட் தான்… நோ லுக்கிங் பேக்… அண்ட் நோ சில்லி எக்ஸ்கியுசஸ்… ” தீவிர மனோபாவத்தோடு கூறவும், அவளும் வேகவேகமாக தலையாட்டினாள்!

“கண்டிப்பாக… அப்புறம்… ”

“சின்சியாரிட்டி ரொம்ப முக்கியம்… ”

“ஓகே… டன்… அப்புறம்… ”

“முன் வைச்ச காலை பின்னாடி வைக்க கூடாது… ”

“ஓகே… உங்களை கேட்காமல் வாக்கிங் கூட போக மாட்டேன்… ஓகே வா… ?” புன்னகையோடு அவள் குறும்பாக கேட்டு வைக்க… வருணின் முகம் புன்னகையில் மலர்ந்தது… அதே புன்னகையோடு அவளது தலையில் தட்ட, முறைத்து கொண்டே தலையை தடவியவளை பார்த்து,

“மாங்கு மாங்கென்று தலையாட்டி விட்டு அங்க போக மாட்டேன், இதை செய்ய மாட்டேன் என்று சொல்ல கூடாது… என்ன மேடம்… ஓகே வா… ?”

கண்களில் சிரிப்போடு வருண் கூறியதில் தன்னையும் அறியாமல் அவனது வலையில் சிக்கி கொண்டிருக்கிறோம் என்பதும் , பின்னாளில் அவளது வார்த்தைகளை கொண்டே அவளை கார்னர் செய்ய போகிறான் என்பதும் புரியாமல் கடமையே முக்கியமாக தலையாட்டி கொண்டிருந்தவளை பார்த்து அடக்க முடியாமல் பக்கென்று சிரித்தாள் வள்ளியம்மை!

ஏன் சிரிக்கிறாள் என்பதை அறியாமல் அவளை முறைத்த ஆதிரையை ஆதரவாக அணைத்து கொண்டார் விசாலாட்சி…

“ஏய் அண்ணி… நீ பாட்டுக்கு வருண் அண்ணா சொல்றதுக்கு எல்லாம் தலையாட்டுறியே, அவன் ஏதாவது வில்லங்கமா சொல்லியிருந்தா என்ன பண்ணுவ? அதற்கும் இப்படித்தான் மாங்கு மாங்குன்னு தலையாட்டுவியா?”

“கண்டிப்பா… மாமா எனக்கு நல்லதை மட்டும் தான் சொல்லுவாங்க அண்ணி! தப்பாவா சொல்லிட போறாங்க? ஒரு தடவை மாமா சொன்ன பேச்சை கேட்காமல் நான் பட்ட கஷ்டம் எல்லாம் போதும்… நீயே பாரு அண்ணி… மீ எவ்வளவு குட் கேர்ள்லா வேலை கத்துக்க போறேன்னு… ” சற்று அப்பாவித்தனமாக கூறினாலும் ஆதிரையின் மன திடத்தையும் பிடிவாதத்தையும் அறியாதவர்கள் அல்ல அவர்கள்!

அவள் கூறியதை கேட்டவனுக்கு மனம் பனித்தது… ஒரு சிலவற்றை சாதிக்க, ஒரு சிலரை மண்ணை கவ்வ வைக்க, ஆதிரையின் வருகை துணை புரியும் என்பதை திண்ணமாக நம்பினான்… அதுவரையில் அது அவனது லாபம் தானே!

“எல்லாம் சரி… அப்பாவை பார்த்தியா இல்லையா?” விசாலாட்சியின் கண்டனைப்பார்வையை மீறி ஆதிரையை கேட்டான் வருண்… அதுவரையில் அவளது முகத்தில் இருந்த புன்னகை உறைந்தது… உணர்வுகளற்ற கற்சிலையாக நிமிர்ந்தவள் ,

“எனக்கு வேலை இருக்கு மாமா… பிருத்வி குட்டிய தூங்க வைக்கனும்… ” மடியில் படுத்தபடி உறக்கத்தில் ஆழ்ந்து கொண்டிருந்த மகனை காரணம் காட்டியவளை கண்டனப்பார்வை பார்த்தான் வருண்!

“இதுதான் தவறு ஆதி! மேனேஜ்மென்ட்டில் முதல் ரூல் இதுதான்… யாரும் பகைவனும் கிடையாது… நண்பனும் கிடையாது… புரிந்ததா?” கறாராக கேட்டவனின் தொனியில் சிரித்த ஆதிரையும் வள்ளியம்மையும்,

“கண்டிஷன்ஸ் அப்ளைன்னு ஒரு டாக்லைன் இருக்குமே?” ஒருவரை ஒருவர் பார்த்தபடி இருவருமாக சேர்ந்து கேட்க…

“ஹஹா கண்டிப்பா… வாலுங்க… ”என்று சிரித்து கொண்டவன் மனதில் ஓடிகொண்டிருந்தத எண்ணத்தை அவர்கள் அறியவில்லை!

கண்டிஷன்ஸ் அப்ளை என்பதற்கு முற்றும் முதலுமான தகுதியானவர்கள் ஜிகேவும் வருணும் தானே… ஆதிரை புன்னகையோடு பிருத்வியை வாரி எடுத்து கொண்டு அவனை உறங்க வைக்க அறைக்கு செல்ல , அவளை பின்தொடர்ந்த வருணின் விழிகளில் வலி படர்ந்தது… கடந்தகால நினைவுகளின் தாக்கத்தில்!

காதல் என்னை பிழிகிறதே

கண்ணீர் நதியாய் வழிகிறதே

நினைப்பதும் தொல்லை

மறப்பதும் தொல்லை

வாழ்வே வலிக்கிறதே!

காட்டில் தொலைந்த மழைத்துளி போல்

கண்ணே நீயும் தொலைந்ததனால்

நீரினை தேடும் வேரினை போல

பெண்ணே உனை கண்டெடுப்பேன்!

**********

சோளிங்கநல்லூர் ப்ரத்யங்கிரா கோவில்!

உக்கிர நரசிம்மரின் ஆணவம் என்னும் மாயாரூபத்தை அழித்த உக்கிர ரூபிணியான பிரத்தியங்கிரா தேவி சாந்தசொருபியாக வீற்றிருக்கும் தலம்! சரபேஸ்வரரின் மனைவியாக வீற்றிருந்து,பக்தர்களை பயங்களில் இருந்து காத்து ரட்சித்து, ஸ்ரீசக்ர தத்துவ விளக்கத்தின் மறைபொருட்களில் ஒன்றாக விளங்கும் அதர்வண வேத நாயகி கருணையோடு அருள் புரியுமிடம்!

ஆணின் ஆணவத்தை அழித்த பெண் என்றும் மனதில் பதிந்து விட்ட காரணத்தாலோ என்னவோ விசாலாட்சிக்கு அந்த தலம் மிகவும் பிடித்தமான ஒன்றானது!

வள்ளியம்மையோடு வருணும் ஆதிரையும் உடன் வந்திருந்தனர்… கோவிலில் அன்றைக்கு சற்று கூட்டம் அதிகமாக இருக்க, அர்ச்சனைக்கு பழம் தேங்காய் முதலியவற்றை ஆதிரை நிரப்பி கொண்டிருக்க, வள்ளியம்மையின் வாண்டுகளோடு சேர்ந்து கொண்டு சேட்டையில் இறங்கினான் பிருத்வி…

ரோஷன் துரத்த ரக்ஷாவோடு ஓடியவனை பார்த்து…

“டேய் பிருத்வி… இப்போ ஒழுங்கா உட்கார போறியா இல்ல அடி வாங்கறியா?” ஆதிரை உச்சஸ்தாயில் சப்தமிட, அவளது மகனோ அழகு காட்டிவிட்டு விளையாட்டில் மும்முரமாக இருந்தான்… அவளால் இப்போதெல்லாம் பிருத்வியின் குறும்புத்தனங்களை பொறுமையாக சகிக்க முடிவதில்லை…

அவனுமே வளர்ந்து வருவதால் தோழமைகள் கிடைத்த மகிழ்ச்சியில் அளவுக்கு மீறி குறும்பு செய்வதாக ஆதிரைக்கு அவ்வப்போது தோன்றும்… ஒற்றையாக லண்டனில் வளர்ந்த காரணத்தால் பிடிவாதமும் அளவுக்கு மீறி இருப்பதாக தோன்றியது அவளுக்கு! அவளையும் மீறி மனம் அவ்வப்போது சலித்து போனது தான் உண்மையென்ற உண்மை அவளால் இப்போதும் ஒத்துக்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை!

“சப்தமிடாதே அண்ணி… நம் பிபி தான் எகிறும்… ரோஷன் இருக்கான் இல்லையா? அவன் பார்த்துக்குவான்… ” வள்ளியம்மை சிரிப்போடு கூற…

“அவனுக்கு இந்த கூட்டம் எல்லாம் புதிது அண்ணி… லண்டனில் இப்படியெல்லாம் பார்க்க முடியாதுதானே! அதனால் தான் அய்யா தலை கால் புரியாம ஆடுறார்… ”

தனது மகனின் இயல்பை எடுத்து கூறியவளை பார்க்கையில், பிருத்வியை பெற்று கொள்ளவே முடியாது என்று பிடிவாதமாக ஆதிரை முரண்டு பிடித்த காட்சிகள் வள்ளியம்மையின் கண்முன்னே வந்து போனது… புன்னகையை பூசிக்கொண்டது அவளது முகம்!

இவர்கள் பேசி கொண்டிருக்க, விசாலாட்சி தேங்காய் பழம் அடுக்குவதிலிருக்க, வருணின் பார்வையில் பட்டார் அவர்!

முகம் கறுத்து கைகள் இறுகியது!

“பிருத்வி ஓடாதடா… நில்லு… ”

ரோஷன் அவனை நோக்கி சப்தமாக குரலெழுப்ப ரக்ஷாவை துரத்தி கொண்டு ஓடினான்… ரக்ஷா அவனுக்கு பழிப்பு காட்டி கொண்டு ரோட்டை கடந்திருக்க, பிருத்வி ரோட்டின் நடுவிலிருக்க, வெகு வேகமாக வந்து கொண்டிருந்தது ஒரு கார்…

சட்டென்று கவனித்த வருணுக்கு உள்ளம் பதறியது!

“பிருத்வி… ” குழந்தையை தடுக்கும் விதமாக கத்தினான்…

அந்த வினாடியில் அவனுக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை… அவன் கத்துவதை உணர்ந்து நிமிர்ந்து பார்த்த ஆதிரைக்கு உலகம் தட்டாமாலை சுற்றியது! அதீத வேகத்தில் வந்த அந்த காரை அந்த ஒட்டுனராலும் சட்டென்று சமாளிக்க முடியவில்லை… ஹாரனை முழங்கவிட்டு வேகத்தை குறைக்க முயல… சமீபத்து விட்ட காரை கவனித்து சட்டென்று பிருத்வியை இழுத்து கொண்டார் அவர்!

அந்த ஐந்து வயது சிறுவனை நெஞ்சோடு அணைத்து கொண்டவருக்கு உடல் நடுங்கியது… யாருடையதாக இருந்தால் என்ன? குழந்தையல்லவா!

ஆதிரையின் பார்வையில் வேறு எதுவுமே தெரியவில்லை… தன் மகனை தவிர..!

ஓடி சென்று மகனை அணைத்து கொண்டவளுக்கு கண்களில் கண்ணீர் வெள்ளம்!

அந்த நொடியை அவன் கடந்திராவிட்டால்? அவளால் அதை நினைத்து பார்க்கவும் முடியவில்லை… உடல் நடுங்கி கொண்டிருந்தது… தாயின் தவிப்பையும் அருகில் இருந்தவர்களின் பதட்டத்தையும் உணர்ந்த அந்த குழந்தை ஆதிரையை நெருங்கி கண்ணீரை துடைத்து விட்டது…

“ம்மா… வாட் ஹேப்பன்ட்?” ஒன்றும் புரியாமல் கேட்ட பிள்ளையை கண்ணீரோடு அணைத்து கொண்டாள்…

அதுவரையில் மகனை மட்டும் பார்த்து கொண்டிருந்தவள் அதன் பின்னரே சுற்றுப்புறத்தை உணர்ந்தாள்…

ஏதோ மாறுபாடாய்!

வருண் இறுகி போய் நின்றிருக்க, ஆதிரை தலை நிமிர்ந்து எதிரில் பார்க்க,… அபிராமி நின்றிருந்தார்!

ஆயிரம் வாட்ஸ் மின்சாரம் தாக்கிய உணர்வு!

இவரா பிருத்வியை காப்பாற்றியது? ஆதிரைக்கு ஏனோ தலை சுற்றுவது போல இருந்தது!

அவருமே சற்று குழப்பத்தில் இருந்தாலும் ஆதிரையை கண்டத்தில் முகம் மகிழ்ச்சியில் விகசித்தது! ஆனால் யாரிடமும் பேச முனையவில்லை… விழிகள் மட்டும் ஏக்கமாக ஆதிரையை தழுவியது!

“தேங்க்ஸ்… ” மெல்லிய குரலில் அவரிடம் நன்றியுரைத்தவளை இன்னதென்று அறியாத பாவனையில் ஆதூரமாக பார்த்தார் அபிராமி!

“உன் பையனா ஆதி?” மென்மையாக அவர் கேட்டது ஆதிரையின் மனதில் எந்த பாகத்தையோ தாக்கியது…

“ம்ம்ம் ஆமா… ” அவரது முகத்தை பாராமல் உரைத்தவளின் கண்களில் வருண் எதை கண்டான்? அவனது மனதில் அடக்கி வைத்திருந்த கோப அலைகள் மேல் எழுந்தன! அவனது வெறுப்பு அபிராமியின் மீதல்ல என்பதை அவரும் அறிவாரே!

“எப்படி இருக்கிறாய் அபி?”

அதுவரை அமைதியாக இருந்த விசாலாட்சி பெரியவராக கேட்க, ஆதிரை மற்றும் பிருத்வியின் முகத்தில் இருந்து வலுகட்டாயமாக பார்வையை விலக்கிய அபிராமி, அவரை பார்த்து புன்னகைத்தார்!

“சர்வம் கிருஷ்ணார்ப்பணம்… சுற்றிலும் நல்ல மனுஷங்களா இருக்கும் போது சௌக்கியத்துக்கு என்ன குறை? ரொம்ப நல்லா இருக்கேன் சாலா… ” தன்னை விட விசாலாட்சி சில மாதங்கள் மூத்தவராக இருந்தாலும் சிறு வயது முதலே பெயரை சொல்லி அழைத்த பழக்கம்…

“இவர்கள் சௌக்கியத்துக்கு என்ன குறைச்சல் வந்துவிட்டதாம்? அவர்கள் மகன் இருக்கிறானே… அவன் ஒருவன் போதாதா?” மனதில் அர்ச்சனை செய்து கொண்டிருந்தான் வருண்… ஆனால் வாய் திறந்து கூறி விட மாட்டான்… அது தன்னுடைய அன்னைக்கு அவன் தரும் மரியாதை!

பிருத்வியை பார்த்து கொண்டே பதிலிறுத்த அபிராமிக்கு உள்ளுக்குள் ஏதோ பரபரப்பு… அவனை அணைத்து உச்சிமோர்ந்து முத்தமிட வேண்டும் போல!அதை உணர்ந்த விசாலாட்சி உள்ளுக்குள் மனம் நெகிழ்ந்தார்…

“இன்னைக்கு பேரனுக்கு ஸ்கூல் அட்மிஷன் போடறோம் அபிராமி… அதான் மருமக குட்டி பேர்ல அர்ச்சனை பண்ணலாம்ன்னு சொன்னா… ” அமைதியான புன்னகை முகமாக பதிலளிக்க… அபிராமியின் முகம் மேலும் மென்மையை தத்தெடுத்தது…

“ரொம்ப சந்தோஷம் சாலா… சார் அவ்ளோ பெரியவராகிட்டாரா?” என்றபடி முட்டிகாலிட்டு அவனது உயரத்திற்கு இறங்கி அவனது கையை பற்றி கொண்டு அபிராமி கேட்க… அந்த புதிய முகம் ஆதிரையின் மகனை தயங்க செய்தது.

“பிருத்வி கண்ணா… ஆச்சி கேக்கறாங்க பாரு… பதில் சொல்லு… ” என்று விசாலாட்சி ஊக்குவிக்க,வருணோ எரிச்சலில் தத்தளித்தான்…

குட்டி பகை பாராட்ட , ஆடு உறவென பாசப்பயிரை வளர்த்து கொண்டிருக்கும் தன் தாயை முறைக்க மட்டுமே முடிந்தது… ஆதிரையோ இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லையென்பதை போல நின்று கொண்டிருக்க, வள்ளியம்மை நடப்பவற்றை சுவாரசியமாக பார்வையிட துவங்கியிருந்தாள்…

ஆரம்பம் என்று ஒன்று உண்டென்றால் முடிவு என்பதும் உண்டல்லவா!

“எஸ் ஆச்சி… ஐ அம் வெரி பிக்… சீனியர் கிண்டர்கார்டன் ஜாயின் பண்ண போதேன்… ” மிகப்பெரிய படிப்பை படிக்க போகும் பாவனையை அவன் வெளிப்படுத்த, வருணையும் ஆதிரையையும் தவிர மற்றவர்கள் பக்கென சிரித்து வைத்தனர்! வள்ளியம்மையை முறைத்தான் வருண்!

“அச்சோ! அவ்ளோ பிக்கா… சரி இந்த பிக் பாய் படித்து என்னவாக போறீங்க?” சிரித்தபடியே,கண்களை விரித்து கொண்டு பேசிய பிருத்வியை போலவே பாவனை செய்து பேசிய அந்த அழகான ஆச்சியை அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது…

“பச்சு… ம்ம்ம்… பச்சு… ” என்று மோட்டுவளையை தட்டி கொண்டு யோசித்த பிருத்வியை புன்னகை மாறாமல் அபிராமி பார்த்து கொண்டிருக்க,

“ம்ம்ம்… பைலட்டாக போதேன்… ” கண்டுபிடித்துவிட்டவனாக பிருத்வி குதிக்க… ஆதிரைக்கும் சிறு புன்னகை இதழோரம் மலர்ந்தது…

“ஹப்பா… பைலட்டா? அப்போ குட்டி பெரிய பெரிய ப்ளைட் எல்லாம் ஓட்டுவீங்களா?” வியப்பாக கேட்பது போல கேட்ட அபிராமியிடம் பிருத்விக்கு எக்கச்சக்க சுவாரசியம் பிறந்துவிட்டது!

“எஸ் ஆச்சி… வ்ரூம்ம்ம் வ்ரூம்ம்ம்… ஐ ல் டிரைவ் ஆல் பிக் ப்ளைட்ஸ்… ” ஆக்ஷனோடு சொல்லிகாட்டிய பிருத்வியை அணைத்து கொண்ட அபிராமி…

“அந்த ப்ளைட்டில் இந்த வயதான ஆச்சியை அழைத்து கொண்டு போவாயா குட்டி?” என்று கேட்க , பதில் கூறத்தெரியாமல் ஆதிரையை பார்த்தான் அந்த குட்டி பட்டாம்பூச்சி!

விசாலாட்சி இருவரும் பேசிக்கொண்டிருந்ததை ரசித்து கொண்டிருந்தார் என்பதை அவரது மலர்ந்த முகமே கூற , அதை பார்த்து கொண்டிருந்த வருண் உள்ளுக்குள் கனன்ற எரிச்சல் மிகுதியில்,

“மா… லேட் ஆகுது… ” விசாலாட்சியை பார்த்து முறைத்தபடி கூற…

“கோவிலுக்கு தானே வந்த அபிராமி… வாயேன் சேர்ந்தே போகலாம்… ” விசாலாட்சி அவரையும் அழைக்க, வருணோ கோபத்தில் முகம் சிவந்தான்… அபிராமி மிகவும் தயங்கி விட்டு ஒரு பெருமூச்சோடு அவர்களோடு கோவிலுக்குள் நுழைந்தார்… ஆதிரையின் முகமோ பதட்டத்தில் ஆழ்ந்திருந்தது… தான் மீண்டும் இந்த மண்ணை மிதிக்க வேண்டி வந்துவிட்டதே என்பதை விட பார்க்கவே கூடாது என்று நினைத்தவர்களை எல்லாம் பார்க்க நேர்ந்து விடுமோ என்ற எரிச்சலில் மீண்டும் லண்டனுக்கே ஓடி விடலாமா என்ற அவசர ஆலோசனையில் இறங்கினாள் மனதுக்குள்!

ஆனால் வருணை நினைத்தும், அவனுக்கு தான் கொடுத்திருக்கும் உறுதியை மனதில் கொண்டும் அந்த யோசனையை கைவிட்டவள், வள்ளியம்மையின் கையை பிடித்து கொண்டு கோவிலுக்குள் நுழைய, வள்ளியம்மையின் முகம் யோசனையில் ஆழ்ந்தது…

எவ்வளவுதான் ஆதிரை அவளது உணர்ச்சிகளை மறைக்க நினைத்தாலும் அவளது கை நடுக்கம் அவளது மனதை வள்ளியம்மைக்கு காட்டிக்கொடுக்க, நடுங்கிய அந்த கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டாள் வள்ளியம்மை… உனக்கு நான் இருக்கிறேன் என்று அவள் கூறாமல் கூறுவதை ஆதிரையும் உணர்ந்து கொண்டாலும் வள்ளியம்மையை வெறுமையான பார்வை பார்க்க, அந்த பார்வையின் அர்த்தங்கள் புரிந்தவளோ கண்களால் சமாதானப்படுத்தினாள்!

விசாலாட்சி குழந்தைகளின் பெயரை கூறி அர்ச்சனை செய்ய, அனைவருமே கண்களை மூடி பிரார்த்தனையில் ஆழ்ந்திருந்தனர்… ஆதிரை பிருத்விக்கு எப்படி வணங்குவது என்பதை தீவிரமாக சொல்லி கொண்டிருக்க, அபிராமியின் செல்பேசி அழைத்தது…

எடுத்து யாரென பார்த்தவர், திடுக்கிட்டு சுற்றியும் பார்த்தார்… அவரது பார்வையில் பயம் கவ்வியது!

மகன் தான் அழைத்தது!

அதை பார்த்து கொண்டிருந்த விசாலாட்சி என்னவென்று புருவத்தை உயர்த்தி கேட்க , அபிராமி வெகு தயக்கமாக தலையசைத்தார்…

விசாலாட்சி குழப்பமாக புருவத்தை சுருக்கி ஓரக்கண்ணில் வருணை பார்த்தார்…

அப்போதுதான் அபிராமிக்கு மகனை கோவிலுக்கு வந்து தன்னை அழைத்து கொள்ள சொன்னது நினைவுக்கு வர பதட்டமாக காதுக்கு கொடுத்தார் செல்பேசியை, அவனை வர வேண்டாம் என கூற வேண்டும் என்று நினைத்து கொண்டு!

“சொல்லு கண்ணா… ” மெல்லிய குரலில் பேச, ஆதிரையின் காதில் அவரது வார்த்தைகள் விழுந்து அவளை விதிர்விதிர்க்க செய்தது…

“மா எங்க இருக்க?”

“மூலவர் சன்னதில இருக்கேன்பா… கண்ணா… நான் வர கொஞ்சம்… ” நேரமாகிவிடும் என்பதால் டாக்சி பிடித்து வந்து கொள்கிறேன் என்று அவர் கூற நினைக்கும் போதே செல்பேசி இணைப்பு துண்டிக்கப்பட நிமிர்ந்து பார்த்தவர் அதிர்ந்து நின்றார்…

வந்து கொண்டிருந்தது அவரது மகன்… ஜிகே!

இவர்களோடு தன்னையும் சேர்த்து வைத்து பார்த்தால்… ?

பின் விளைவுகளை எண்ணி பார்த்தவருக்கு தலை சுற்றியது!

மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறி விட்டால்?

தேவி காப்பாற்று என்று அவர் முன் வீற்றிருந்த ப்ரத்யங்கிரா தேவியை வணங்கி விட்டு அவசரமாக இடம் பெயர முயல…

பார்த்து விட்ட ஜிகேவின் கண்களில் விழுந்தது தன் தாயோ… வருணோ… விசாலாட்சியோ… வள்ளியம்மையோ… அல்ல!

ஆதிரை!

எதேச்சையாக நிமிர்ந்து பார்த்த ஆதிரையின் கண்களிலும் வேக நடையிட்டு வந்தவன் பட,கால்கள் வேரோடி போய் உச்சபட்ச அதிர்ச்சியில் நின்றாள்!

“கௌதம்… ”

அவளையும் அறியாமல் அவளது வாய் முணுமுணுத்தது!

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!