Chocolate pakkangal 4

Chocolate pakkangal 4

அத்தியாயம் நான்கு

வற்றிய விழிகளுக்குள்

பாளம் பாளமாய்

வெடித்து கிடக்கிறது

உன் நினைவுகள்…

 -டைரியிலிருந்து

கட்டுமானம் நடந்து கொண்டிருந்த அந்த பத்து மாடி கட்டிடத்தில் வேகமாக ஏறி கொண்டிருந்தான் ஜிகே… எதிரில் யார் வருகிறார்கள் என்பதை கூட பார்க்க விரும்பாத ஓட்டம்… மேல் பூச்சு பூசாமல் கைப்பிடியும் இல்லாத அந்த படிகளில் அவன் ஏறிய அந்த வேகம் பின்னால் ஓடி வந்து கொண்டிருந்த பிஏ மகேஷுக்கு பயத்தை தருவித்தது… ஜிகேவின் இயல்பறிந்த அவனுக்கு இது புதியதாக இல்லை… ஆனாலும் இன்று ஏதோ அதீத கோபத்தில் ஜிகே செயல்பட்டு கொண்டிருப்பதாக அவனுக்கு பட்டது!

எதையும் கவனிக்காதது போல அவன் வேக நடையிட்டாலும் அவனது கண்களிலிருந்து எதுவுமே தப்ப முடியாது என்பதை பல்வேறு சமயங்களில் மகேஷ் உணர்ந்திருக்கிறான்…

பறந்து கொண்டிருந்தவனின் கண்களில் மிதமான வேகத்தில் வேலை செய்து கொண்டிருந்த கொத்தனார்கள் பட, கோபமாக அவர்களை நோக்கி சென்றான்…

“இந்த ப்ளாக் கட்ட ஆரம்பித்து ஒரு வாரமாகிவிட்டது இல்லையா?”

“ஆமாங்க… ”

“இன்னும் தடவிகிட்டே இருந்தா எப்போ முடிக்கறதா இருக்கீங்க?”

“சார்… நாங்களும் வேலை செய்துட்டு தானே இருக்கோம்… இதை விட வேகமா செய்யனும்னா எப்படிங்க? நாங்க என்ன மிஷினா?”

அவர்களது மேஸ்த்திரி கேள்வி கேட்க… ஒன்றும் கூறாமல் சட்டையை கழட்டியவன் மகேஷிடம் கொடுத்து தனியே வைக்க சொல்லிவிட்டு, ப்ளை ஆஷ் கல்லையும் சிமென்ட் கலவையையும் வைத்து மின்னல் வேகத்தில் நான்கு லைன்களை கட்டி முடிக்க, அந்த மேஸ்திரி என்ன சொல்வதென்று தெரியாமல் தலைகுனிந்து நின்றார்…

“இந்த வேலையெல்லாம் தெரியாமல் நாங்க இவ்வளவு பெரிய கட்டிடம் கட்ட வரவில்லை… செய்யற வேலைய ஒழுங்கா செய்தா போதும் மேஸ்திரி… இப்போ வேலைய பாருங்க… இந்த ப்ளாக் இன்றைக்கு இரவுக்குள் ரெடி ஆகிடனும்… ” மிக மிக கறாராக கூறியவனின் தொனியில் தானாக சுறுசுறுப்பு தொற்றி கொள்ள, மளமளவென வேலை ஆகியது!

அவனது வேக நடைக்கு ஈடு கொடுக்க முடியாமல் கிட்டத்தட்ட ஓடினான் மகேஷ்… முக்கால்பாகம் முடிந்த அந்த அறை, கட்டிடம் ஆரம்பித்தது முதல் ஜிகே அமர்ந்து கணக்கு பார்க்கும் அறையாக இருந்தது… அந்த அறைக்குள் நுழைந்து அங்கு இருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தவனுக்கு மனதில் எரிச்சல் அடங்குவதாகவே இல்லை…

மனம் எனும் குரங்கு ஆட்டம் காட்டி கொண்டே இருக்க,அதை அடக்கும் வழி தெரியாமல் தவித்து கொண்டிருந்தான்… முன்தினம் மாலையோடு உலகம் நின்றது போல ஒரு உணர்வு!

யாரை பார்க்கவே கூடாது என்று நினைத்திருந்தானோ அவளை கண்டதில் உடலெங்கும் தீக்கங்குகள் பட்டது போன்ற எரிச்சல்! உடன் தன் தாயும் சேர்ந்து நின்றதை பார்த்ததில் உள்ளத்து வெம்மை அவனை படுத்தி எடுத்தது…

யாருடைய ஆதரவும் தனக்கில்லை என்றாலும் கவலையே இல்லையே! ஆனால் தன் தாயே தன்னை புரிந்து கொள்ளாமல் இருப்பது அவனது மனதின் ஓரத்தில் இருந்த காயத்தின் வடுவை கீறி விட்டது! வழிந்த குருதியில் நனைந்த நினைவுகளின் தாக்கம் அவனை மேலும் காயப்படுத்தி விட்டு சென்றது!

மனம் முதல் நாள் மாலை வேளையை தாண்ட மாட்டேன் என்று அடம் செய்து கொண்டிருந்தது…

“மா… கிளம்பு… ” இறுகிய முகத்தோடு யாரிடமும் பேசாமல் தாயை அழைத்தவனின் தொனி விசாலாட்சியையும் நடுங்க வைத்தது…

“கெளதம்… ” என்றார் தயங்கியபடி!

தன்மையாக அழைத்த விசாலாட்சியை தீ பார்வை பார்த்தான் ஜிகே! ஏதோ கூற வந்த வள்ளியம்மையும் அவனது நெற்றி கண்ணை பார்த்து வாயை மூடி கொள்ள தன் தாயை பார்த்து அவன் முறைத்தது , வருணுக்கு மிகவும் எரிச்சலை கிளப்பியது… ஆனாலும் எதையும் பேச விரும்பவில்லை…

“தம்பி… கோபப்படாத… நம்ம ஆதி… ” என்று ஆரம்பித்த தாயை சுட்டு பொசுக்காதது ஒன்றே குறையாக இருக்க, மிக மிக கடினத்தொனியில்,

“இப்போ வர்றியா? இல்ல நான் கிளம்பட்டா?”

வார்த்தைகளை கடித்து மென்று துப்ப, வருணையும் அறியாமல் கேலி புன்னகை அவனது உதட்டில் ஒட்டி கொள்ள, அதை பார்த்த ஜிகே கட்டுக்கடங்காத கோபத்தில் தாயை முறைத்து விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தான்…

பயந்த அபிராமியோ விசாலாட்சியை சமாதான பார்வை பார்த்து விட்டு,ஆதிரையையும் பிருத்வியையும் பார்த்தவாறே அவனை தொடர்ந்தார்…

ஆதிரையின் முகத்தில் இகழ்ச்சியான கசப்பு புன்னகை தோன்றி மறைய, அவளது முக உணர்வுகளை ஆராய்ந்து கொண்டிருந்த வருணுக்கு நெற்றி முடிச்சிட்டது!

நேற்றைய சம்பவத்தில் ஆழ்ந்திருந்த ஜிகேவுக்கு ரத்தம் கொதித்தது! எப்படி அவளால் ஒன்றுமே நடவாதது போல எங்கோ பார்த்து கொண்டிருக்க முடிந்தது? அவளது பார்வையில் தான் கண்டது என்ன?

அதிர்வா? வெறுப்பா? அல்லது எதுவுமே இல்லாத வெறுமையான நீ யார் என்ற கேள்வியா?

எதற்காக திரும்பவும் அவள் தன் பார்வையில் பட வேண்டும்? ஆக மொத்தம் ஒன்றுமே இல்லையா? அனைத்துமே பொய்யா?

பொய்!??

மனசாட்சி அவன் முன் நின்று கேலியாக பார்த்து குத்தாட்டம் போட்டது!

அதை சொல்வதற்கும் நினைப்பதற்கும் உனக்கு முதலில் தகுதி இருக்கிறதா கெளதம்?

“எதற்காக தனக்கு தகுதி வேண்டும்? அன்று என்னிடமிருந்து அவள் தப்பியிருக்கலாம்… ஆனாலும் அவளை வலிக்க செய்ய வேண்டாமா? அவள் தந்து போன வலிகளை என்னால் தள்ளி போக முடியவில்லையே!!” மனதில் கோபத்தீ கொழுந்து விட்டெறிந்து கொண்டிருந்தது!

அவனது வாழ்கையில் தோல்வி எனும் அத்தியாயத்தை எழுதி போனவளை திரும்ப பார்த்த பின்பும் அவளை மன்னிக்க தான் என்ன பரமாத்மாவா?

உடன் வருண் இருந்தால் மட்டும் விட்டுவிட முடியுமா? நிர்தாட்சண்யமாக மறுத்து சென்றவளை காலடியில் விழ வைக்காவிட்டால் அவன் ஜிகே அல்லவே!

இது தீர்க்கப்படாமல் இருக்கின்ற கணக்கு! தீர்க்கப்படவேண்டிய கணக்கு! தீர்க்கும் வழிகளை ஆராய்ந்து கொண்டிருந்த கணக்கு! தீர்வே இல்லாத கணக்கும் கூட அல்லவா!

வெறும் ஐந்து வருட கணக்கா இது? இல்லை… ! வாழ்க்கை அவனுக்கு எழுதி வைத்த கணக்கு… அவனது வாழ்கையை பணயம் வைத்து அவனாடிய விளையாட்டு கணக்கல்லவா! வாழ்க்கை தனக்கு தோல்வியை பரிசளிப்பதா? அதை தான் ஏற்று கொண்டு விடத்தான் முடியுமா?

முடியாது… !

ஏற்று கொள்வதற்கு தான் அப்பாவி அபிராமி அல்ல என்பதை இன்னமுமே வலிக்க சொல்லி தந்தேயாக வேண்டும் என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தான் ஜிகே!

ஜிகே வெறித்தனமாக தன்னை மறந்து தீர்மானித்து கொண்டிருக்க, அவனது நினைவுகளின் நாயகி கண்களில் நீரோடு மகனை அணைத்தவாறு படுக்கையில் சாய்ந்திருந்தாள்! அவள் எதிர்நோக்கி கொண்டிருந்த எதிர்காலம் இருளாக இருந்தது… அது தனக்கு வைத்திருப்பதுதான் என்னவென்று புரியாமல், நடப்பவற்றை நடந்தவற்றை என எதையுமே ஜீரணம் செய்ய முடியாமல் தவித்து கொண்டிருந்தாள்! கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருக்க, மூடிய அறைக்குள் அவளது உணர்வுகளை கண்கள் வழியாக கொட்டிக்கொண்டிருந்தாள்!

திரும்ப அவனை பார்த்தது அவளை உலுக்கியிருந்தது… அவனது நினைவுகளை சுத்தமாக அழித்து விட்டதாக அவள் எண்ணி இறுமார்ந்திருக்க, உன்னுடைய சோதனைகள் முடிந்துவிடவில்லை என காலதேவன் கூறி கொண்டிருந்தது அவளது காதுகளில் விழுந்தார் போன்ற பிரம்மை!

மீண்டும் அவனை ஏன் பார்க்க வேண்டும்?

வேண்டாம்… அவன் வேண்டாம்… அவனது நினைவுகள் வேண்டாம்!

வருணுக்கு தான் கொடுத்திருக்கும் வாக்கு நினைவுக்கு வந்தது… அவனுக்காகவேனும் தான் இதிலிருந்து வெளிவந்தே ஆக வேண்டிய கட்டாயத்தை உணர்ந்தாள் ஆதிரை…

சுற்றி வளைத்தது சூறாவளி கூட அல்ல, சுனாமி என்று உணர்ந்த பின்னரும் தன்னை, தனது தன்மானத்தை அடகு வைக்க அவள் ஒன்றும் கடைந்தெடுத்த முட்டாள் அல்லவே!

கண்களை துடைத்து கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்!

அழுது கொண்டிருக்க தான் ஒன்றும் அன்று இருந்த டீன் ஏஜ் ஆதிரை அல்ல என்பதை அவனுக்கு புரிய வைக்க வேண்டும்… மீண்டும் அவளிடம் வாலாட்டினால் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பதை அவன் உணர வேண்டும்…

ஆதிரை ஒன்றும் அவ்வளவு எளிதானவள் இல்லை என்பதை உணர வேண்டும்… டேக் இட் பார் கிராண்டட் என்று நீ விளையாடிய விளையாட்டிற்கு இனி பதில் கூறியே ஆக வேண்டும் கெளதம்…

உறங்கி கொண்டிருந்த மகனை தள்ளி படுக்க வைத்து விட்டு… மனதில் தீர்மானித்து கொண்டு தெளிவான முகத்தோடு கதவுகளை திறந்து கொண்டு வெளியே சென்றாள்… ஆம் கூட்டிலிருந்து வெளி வர தீர்மானித்து விட்டாள்!

தன்னை வேட்டையாடிய வேடனை வேட்டையாட புள்ளிமான் தீர்மானித்து விட்டது!

சோபாவில் அமர்ந்து எங்கோ பார்த்து கொண்டு மனதில் எதையோ எண்ணி ஆலோசித்து கொண்டிருந்த வருணை அழைத்தாள் ஆதிரை!

“மாமா… ” நிமிர்ந்து பார்த்தான் வருண்! என்னவென்று கேட்பது போல புருவத்தை உயர்த்த…

“நாளைல இருந்து நானும் ஆபீஸ் வரேன்… ” தீர்மானமாக ஒலித்த அவளது குரலின் உறுதி வருணை ஒரு நிமிடம் அசைத்து பார்த்தது… இனி ஜிகேவை கையாள தான் யோசித்து கொண்டிருக்கவேண்டிய தேவை இல்லை… ஆதிரை இருக்கிறாள் என்ற நினைவில் இதழோரம் சிரிப்பு மலர்ந்தது அவனுக்கு!

“சியூர் ஆதி… ”

“நாளைக்கு என்ன எங்கேஜ்மேன்ட்ஸ் இருக்கு உங்களுக்கு?” மிகவும் ப்ரோபெஷனாலாக அவன் முன் வந்தமர்ந்து கேட்டவளை பார்த்து சிரித்தவன்…

“நாளைக்கு ஒரு ஏலம் இருக்கு மேடம்… அதுக்கு தான் போறேன்… நீங்களும் வரீங்களா?”சிரித்தபடியே அவன் கேட்க…

“அதுக்கு அவனும் வருவானா?”எங்கோ பார்த்தபடி அவள் கேட்க…

“யூ மீன் ஜிகே… ?”

“ம்ம்ம்ம்… வெளக்கமாத்துக்கு பட்டு குஞ்சம் கேக்குதாம்… பேர பாரு… பெரிய ஜிகே… ” பற்களை கடித்து கொண்டு அவள் பொறும… அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை…

“ஆதி… இந்த வோர்ட்டிங்ஸ எல்லாம் எங்க பிடிச்ச? லண்டன்ல இதை கூட டீச் பண்ணாங்களா?” கண்களை சிமிட்டி நக்கலாக கேட்க… வருணை முறைத்தாள் ஆதிரை… அவன் உடனே கைகளை உயர்த்தி…

“ஓகே ஓகே… நோ அபென்ஸ்… வருவான்… நான் போனா அவனும் கட்டாயம் வருவான்… ”

“அவ்ளோ பாசம்… ”அவளும் நக்கலை விட்டுவிடாமல் கேட்டு வைக்க… சிரித்தான் வருண்…

“ஆமா… கண்டிப்பா… ” வருண் சிரிக்க…

“இனிமே அது முடியாது மாமா… ” அதுவரையில் குரலில் இருந்த இலகுத்தன்மை மாறி கடினமாக அவள் கூறுவதை கேட்டவனுக்கு இதழோரம் புன்னகை மலர்ந்தது!

*******

“சர்… ” சாய்வு நாற்காலியில் சாய்ந்து கண்களை மூடி நினைவுகள் தந்த வலியில் ஆழ்ந்திருந்தவனுக்கு மகேஷ் அழைத்தது காதில் விழ… கண்களை திறந்து பார்த்தான்!

“சொல்லு மகேஷ்… ” ஒருவாறாக சமன்பாட்ட குரலில் அவன் கேட்க…

“இங்க செக்கிங் முடிச்சாச்சு… எல்லாம் ஓகே சர்… ”அந்த கட்டிடத்தின் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து செய்யவேண்டியவைகளை முடித்து விட்டு ஜிகேவிடம் அதை கூறி கொண்டிருந்தான் மகேஷ்…

ஒரு பெரிய மூச்சோடு, முழுக்கை போலோ ஷர்ட்டை முழங்கை வரை இழுத்து விட்டபடி எழுந்து கொண்டான்…

“நாளைக்கு என்ன எங்கேஜ்மேன்ட்ஸ் மகேஷ்?”

“நாளைக்கு தான் சர் டெபிட் ரெக்கவரி ட்ரிபியுனல் அனௌன்ஸ் பண்ணிருக்க புழல் லேண்ட் ஒப்பன் ஆக்ஷன்… ”என்று அவன் கூறியதும் இவனது புருவம் உயர்ந்தது!

“லக்ஷ்மி குரூப்ஸ் வர்றாங்க இல்லையா… ” பார்வை கூர்மையானது!

“எஸ் சர்… ”

“நான் கேட்ட ரிப்போர்ட்ஸ் எங்க மகேஷ்?”என்று கேட்க… கையோடு வைத்திருந்த பைலை ஜிகேவிடம் கொடுத்தான் மகேஷ்! ஒவ்வொரு பக்கமாக படித்து பார்த்தவனுக்கு புருவம் முடிச்சிட்டது… உள்ளுக்குள் திட்டம் உருவாகியது!

“ரைட் மகேஷ்… ”என்று கிளம்பினான்…

“ஹி இஸ் டன்… ”மனதில் கூறி கொண்டவனுக்கு இதழ் வளைந்தது… இகழ்ச்சி புன்னகையில்!

தன்னுடைய வெகு இஷ்டமான ரே பன் கருப்பு கண்ணாடியை அணிந்தவன்… சவாலான பார்வையோடு கிளம்பினான்… அவனுக்கு தெரியாதது என்னவென்றால் போட்டி இனி வருணோடு இல்லை… ஆதிரையோடு!

ஆதிரையை கேடயமாக்கிய வருணின் புத்திசாலித்தனத்தோடு!

error: Content is protected !!