Chocolate pakkangal 5

Chocolate pakkangal 5

அத்தியாயம் ஐந்து

இரவுகள்
மிகவும் சூன்யம் நிறைந்தவை
நட்சத்திரங்களை
எப்படி எண்ண வேண்டுமென
சொல்லிக்கொடுத்தவள் நினைவில் வர
அவள் சார்ந்த நிகழ்வுகளையும்
அவள் சார்ந்த நினைவுகளையும்
படியேறி கூட்டிப் போகிறேன்
தூரத்திலொரு புகைபோக்கியின் வழியே
மேலேறும் புகையை கிழித்து
தானும் இருப்பதாய் காட்டிக் கொள்கிறது நிலா
பாசி படிந்து காய்ந்து போன
மீன் தொட்டியொன்றின்
கடந்த காலத்தை அலசுகிறேன்
நிலவு நகருகிறது
மேகம் நகருகிறது
இரவு நகருகிறது
நட்சத்திரங்கள் விடுத்து
வானமெங்கும் ஒளிர்கிறது
கடைசியாய் நான் மூடிய
அவளின் விழிகள் மட்டும்!

 -டைரியிலிருந்து

அந்த சிறு மண்டபம் அமைதியில் ஆழ்ந்திருந்தது… தந்தைக்கு உபதேசித்த அம்மையப்பனின் வெள்ளி திருவுருவ சிலை நடுநாயகமாக வீற்றிருக்க சாம்பிராணியின் மணமும் பூக்களின் மணமும் பரவி நாசியை துளைத்து மனதை அமைதிபடுத்த… சுற்றியிருந்த துளசி தளங்களிலிருந்து வந்த துளசி வாசனையும் பூத்து மலர்ந்திருந்த பவளமல்லியும் ஜாதிமல்லியும் மயக்கத்தில் ஆழ்த்த… தெய்வீகமான சூழலில் அந்த மண்டபத்தில் நுழைந்தனர் வருண், ஆதிரை மற்றும் வள்ளியம்மை… பிள்ளைகளோடு!

தலைமுறை தலைமுறையாக சிதம்பரம் குமாரசுவாமியின் தலைமுறையினர் வசித்து வந்த எட்டு கட்டு வீடு! வீடு என்பதை விட அரண்மனை என்று சொல்வதே பொருத்தம்! அந்த விசாலமான வீட்டின் ஒரு பகுதி… கோவில் பூஜை மண்டபமாக இருந்தது… அந்த வீட்டினரின் வசதிக்காக வேண்டி முருகனின் திருவுருவ சிலை பிரதிஷ்ட்டை செய்யப்பட்டு நித்ய பூஜைகளும் நடைபெற்று வந்தன…

முக்கியமான நிகழ்வுகளையும் அந்த குடும்பத்தினரின் முக்கிய முடிவுகளையும் அங்கு வைத்து முருகனிடம் பூ கேட்டே செய்ய துவங்குவர்… அது போல முன் காலங்களில் குடும்பத்தின் ஆண்பிள்ளைகள் வியாபாரத்திற்காக கடல் கடந்து போக வேண்டி வரும் போது அங்கு முருகனிடம் குடும்பத்தை ஒப்படைத்து விட்டு செல்வதாக ஐதீகம்…

அந்த அந்தரங்க காரியதரிசி அவசரமாக அவர்கள் அருகே வந்தார்… அவர் பாபுஜிராவ்… ஐம்பது வயதை கடந்தவர்… கிட்டத்தட்ட முப்பது வருடங்களாக சிதம்பரம் குமாரசுவாமியின் நிழல்! எப்போது அவரை அணுக முடியும் என்பதை அனைவரையும் விட திடமாக அறிந்தவர்…

“அப்பா தியானம் முடிச்சாச்சா பாப்ஜி மாமா… ”வெகு அமைதியாக வருண் கேட்க…

“ம்ம்ம் ஆச்சு தம்பி… இப்போதான் எழுந்தார்… போய் பாருங்க… ”கிசுகிசுப்பான குரலில் பணிவாக அவர் கூற… பூஜா மண்டபத்தை ஒட்டியிருந்த தியான அறைக்கு சென்றனர் அனைவரும்!

“தாத்தா தியானத்துல இருப்பாங்க… மூணு பேரும் சத்தம் போடாம வரனும்… என்ன கண்ணா புரிஞ்சுதா?”

வாண்டுகளை மேய்த்து கொண்டு வள்ளியம்மை சற்று பின்னால் போக ஆதிரையை அழைத்து கொண்டு முன்னால் சென்றான் வருண்… தந்தை ஆதிரையை பார்த்தே ஐந்து வருடங்களாகி விட்டனவே…

அன்றைய தினத்தோடு இந்தியாவை தலை முழுகியவள்… லண்டனிலிருந்து வருவதற்கு வெகுவாக யோசித்தவள்… விசாலாட்சியின் வற்புறுத்தலுக்காக மட்டுமே மீண்டும் இங்கு வந்தவளை எப்படி தந்தையை பார்க்க அழைத்து வருவது என்று வெகுவாக யோசித்து ஒருவாறாக கட்டி இழுத்து வந்திருக்கிறான்…

குழந்தை பேற்றுக்காக சிவகாமியோடு அவள் அங்கிருக்க விசாலாட்சிதான் லண்டன் சென்று கவனித்து கொண்டாரே தவிர… இந்தியா வருவதற்கு அவள் இளகவில்லை… அதுவும் சிதம்பரத்திடம் சற்றும் இளகவில்லை… இறுகியவள் இறுகியவளாகவே தானே இருக்கிறாள்…

வருணுக்கு இதயம் படபடவென அடித்து கொண்டது ஆனாலும் அந்த பதட்டத்தை அவன் வெளிக்காட்டி கொள்ளவில்லை… வெகு சாதரணமாக அழைத்து வருவது போலத்தான் ஆதிரையை அழைத்து வந்திருந்தான்…

தியானத்தை முடித்து கைகளை பரபரவென தேய்த்து விட்டு கொண்டார் சிதம்பரம்… நிமிர்ந்து பார்த்தவரின் கண்கள் சட்டென மலர்ந்தன… வருண் நின்று கொண்டிருக்க… பின்னால் எங்கோ பார்த்தபடி ஆதிரை!

அவளுக்கும் பின்னால்… அவளை ஒட்டியபடி மலங்க மலங்க விழித்தபடி…

நிமிர்ந்து வருணை பார்த்தவரின் கண்களில் கேள்வி தொக்கி நிற்க…

“பிருத்விப்பா… ”

உயிர்வரை தீண்டிய அந்த வார்த்தைகளில் அலைப்புற்று இருந்தவர் அமைதியானார்!… கண்களில் கண்ணீர் சூழ… ஏக்கமாக பிருத்வியை பார்த்து அருகே அழைத்தார்… பழக்கம் இல்லாத அந்த குழந்தை அருகே செல்ல முடியாதென மறுக்க…

“பாரு ஆதி… குழந்தையும் உன்னை மாதிரியே இருக்கான்… என்கிட்டே வர மாட்டேங்கறான்… ” சந்தோஷ கண்ணீரோடு அவர் கூற… எங்கோ பார்த்தவளின் உதடுகள் துடித்தன… கண்கள் கலங்கின…

அவளுக்கு மிகவும் பிரியமான மாமா தான்… சிறு வயது முதலே அவரை தொங்கி கொண்டு திரிந்தவள் தான்… ஆனால் வாழ்க்கையே வெறுத்து போக காரணமும் அவரே அல்லவா… மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குலையவும் பிடிப்பில்லாமல் போகவும் மூல காரணம் அவளது பிரியத்துக்குரிய மாமா தானே!

அவளது நிலை புரிந்த வருண்… பிருத்வியை தூக்கி தந்தையின் கையில் கொடுக்க… அமர்ந்திருந்த அவர் மடியில் இருத்தி கொண்டார்… கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது…

“பிருத்வி கண்ணா… இந்த தாத்தா உனக்கும் வேணாமா? உன் அம்மாவும் சரி… அத்தையும் சரி… அப்… ”என்று கூறும் போதே குரல் உடைய… கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுக்க… கண்களை துடைத்து கொண்டு பேரனிடம் தொடர்ந்தார்…

“யாருக்குமே நான் வேணாமாம்… நீயாச்சும் என் கூட இருப்பியா கண்ணா?” அந்த குழந்தையிடம் கெஞ்சுவதை பார்த்த வருணுக்கு மனம் வருந்தியது… ஆதிரைக்கும் வள்ளியம்மைக்கும் கண்கள் கலங்கியது… பிருத்வி ஒன்றும் புரியாமல் தாத்தாவின் வெண்தாடியை தடவி கொண்டிருந்தான்…

“ப்பா… என்னப்பா… சின்ன குழந்தைகிட்ட போய்… என்ன பேசறீங்க?” கோபமாக அவன் கடிந்து கொள்ள…

“என் பேரன் கிட்ட நான் கேப்பேன் வருண்… அவன் கிட்ட மட்டும் தானே நான் உரிமையா பேச முடியும்… ” என்றவர் பிருத்வியுடன் ரோஷனையும் ரக்ஷாவையும் தன்னோடு அணைத்து கொண்டார்…

“என்னுடைய மூத்த பேரன் இல்லையா?”

பெருமிதம் மின்ன அவர் கூற அவரது கோலம் மூவருக்குமே மனதை பிசைந்தது… எவ்வளவு கம்பீரமான மனிதர்… வேஷ்டி தான் அவரது பிரியமான உடை… அந்த உடையில் தங்க பிரேமிட்ட கண்ணாடி அணிந்து கிளம்பும் போது இருந்த அவ்வளவு கம்பீரமும் எங்கே என யோசித்தாள் வள்ளியம்மை… அவர் ஒருவரது தடுமாற்றம் எத்தனை பேருடைய வாழ்க்கையை சின்னாபின்னபடுத்தி விட்டது என்பது நினைவுக்கு வந்த போது இளகிய மனது மீண்டும் இறுகியது…

வள்ளியம்மையும் தன் தந்தையிடம் அவ்வளவாக பேசுவதில்லை… ஆதிரை யாரையும் பார்க்க விரும்பாமல்லண்டன் போய்விட… வள்ளியம்மைக்கு அந்த வாய்ப்பு இல்லையே! அவளது கணவனும் சென்னையில் தானே இருக்கிறான்… அவ்வப்போது தந்தையை பார்த்தாலும் முகம் கொடுத்து பேசி வருடம் ஐந்தாகி விட்டது…

இப்போதைய சிதம்பரம் அந்த பூஜை மண்டபமும் தியானமுமாக மட்டும் தன் வட்டத்தை சுருக்கி கொண்டவர்… வியாபாரங்களை வருண் கையில் ஒப்படைத்து விட்டு அந்த கூட்டிலிருந்து பழகி விட்டவர்… கடந்தகால தவறுகளுக்காக இப்போது தண்டனையை ஏற்று கொண்டு அனுபவிப்பவர்! தன்னுடைய தவறுகள் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது என்பதை கண்ணால் கண்டபிறகு அவரது நிம்மதி அவரை விட்டு வெகு தூரம் சென்றிருந்தது!

“சரி உங்க பேரனாச்சு நீங்களாச்சு… ”என்று கூறிவிட்டு இயல்பாக அவரது காலடியில் சம்மணமிட்டு அமர்ந்தவன்… வியாபார விஷயங்களாக பேச தொடங்கினான்…

எந்த விஷயத்திலும் அவரது கருத்து அவனுக்கு மிகவும் அவசியம்… அவரது அறிவுரையில்லாமல் எதையும் செய்ய விருப்பப்படுவது இல்லை… ஆனால் அவன் பிடிவாதம் பிடிக்கும் விஷயமும் ஒன்று உள்ளதென்றால் அது ஜிகே மட்டுமே…

அவனுடனிருக்கும் போட்டிகளையும் சவால்களையும் தந்தையிடம் பெரும்பாலும் தெரிவித்தது இல்லை… தெரிவிக்கும் ஒரு சில விஷயங்களில் உணர்வுகளை துடைத்து கொண்டு கேட்டு கொள்வாரே தவிர எந்த கருத்தையும் தெரிவித்ததும் இல்லை…

அது போல அவனது தந்தையை அவன் முன் எவருமே விமர்சிக்க முனைவதில்லை… அவனை பொறுத்தவரை அவனுக்கு அவனது தந்தை உயர்ந்தவர்… மிக மிக உயர்ந்தவர்… அதை விட அவருக்குள்ள பெர்சனல் ஸ்பேசில் மற்றவர்கள் நுழைவதையும் வெறுப்பவன்… அப்படி நுழைபவர்களும் நுழைந்தவர்களும் அவனுடைய கடும் வெறுப்புக்கு ஆளாகியது வரலாறு!

சற்று நேரம் குழந்தைகளோடு விளையாடிவிட்டு கிளம்பும் போது…

“ப்பா… கொஞ்சம் வெளிய வரலாமே… ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போங்களேன்… ப்ளீஸ்… ” கெஞ்சுதலாக வருண் கேட்க… மறுப்பாக தலை அசைத்தார்…

“இல்ல வருண்… வரலை… ”

தந்தையின் மறுப்பை எண்ணி மனம் வருந்தியவன் ஆதிரையையும் வள்ளியம்மையையும் அழைத்து கொண்டு வெளியே வந்தான்… பிள்ளைகளை அங்கேயே விட்டு விட்டு… !

குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்தால் அவருக்கும் சற்று மனம் அமைதியடையும்… பிடிப்பு வருமென ரோஷனும் ரக்ஷாவும் வரும்போதெல்லாம் பெரும்பாலானா நேரத்தை தன் தந்தையுடனிருப்பது போல பார்த்து கொள்வான்… இப்போது பிருத்வியையும் சேர்த்துக்கொண்டான்…

காத்து கொண்டிருந்த பாபுஜியை பார்த்து,

“பாப்ஜி மாமா… என்னோட ஆபீஸ் ரூம்ல கொஞ்சம் பைல்ஸ் இருக்கு… நேரம் கிடைக்கும் போது அதை அப்பாவுக்கு காட்டி சைன் வாங்கி வைங்க… என்னோட பிஏவ விட்டு எடுத்துக்கறேன்… ”

“சரிங்க தம்பி… ” மரியாதையான குரலில் அவர் கூற… குரலை தழைத்த வருண்,

“அப்பா மருந்தெல்லாம் சரியா சாப்பிடறாங்களா?” மெல்லிய குரலில் கேட்க…

“நான் கரெக்டா பார்த்துடுவேன் தம்பி… கவலைப்படாதீங்க… ” ஆதூரமாக கூறிய அவரது மொழிகளில் மனம் நிம்மதியானது…

அவர் தவறு செய்திருக்கலாம்… ஆனால் அவர் அவனது ஆருயிர் தந்தை! தனக்கு அடையாளம் கொடுத்து சமூகத்தில் மரியாதையை பெற்று தந்ததால் மட்டும் அவர் தனக்கு தந்தை என்று இல்லை… அதை எதையுமே செய்யாமல் இருந்திருந்தாலும் அவர் தனக்கு தந்தையே என்று அவ்வப்போது எண்ணி கொள்வான்!

அவரது உடல்நிலை கெட்டிருந்த நிலையில் அவரை அனைவரும் ஒதுக்குவதை கண்டவனுக்கு மனம் வெதும்பியது… துன்பமான நேரத்தில் தோள் கொடுக்காத மகன் என்ன மகன் என்ற கேள்வி அவனுள்!

“அப்பாவை பார்த்துக்கங்க பாப்ஜி மாமா… ” கூறியவனின் குரலில் இருந்த ஆற்றாமையை உணர்ந்தவர் அவனை சமாதானப்படுத்த…

“கண்டிப்பா தம்பி… நான் இருக்கும் போது எதுக்கு கவலைப்படறீங்க?”

மெளனமாக வெளியே நடந்தான் வருண்… அவனோடு ஆதிரையும் வள்ளியம்மையும்!

ஆதிரை கண்ணில் வழிந்த நீரை துடைத்து கொண்டாள்… அவளுக்குமே அவளது மாமனுடன் பேசக்கூடாது என்ற வைராக்கியமா என்ன? அதெல்லாம் ஒன்றுமில்லையே… அவரது செயல்களை ஏற்று கொள்ள முடியவில்லை… காலம் கடந்து விட்ட போதும் அது அவளையும் வள்ளியம்மையையும் வெகுவாக பாதித்து இருந்தது… ஒரு புறம் வள்ளியம்மை அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொள்ள… மறுபுறம் வருண் அவளது தலையை தன் தோள் மேல் சாய்த்து கொண்டான்… வருடங்கள் கடந்துவிட்ட போதும் காயத்தின் வடு மாறாதே!

*******

அந்த சிறிய அறையில் அதிகாரிகளும் ஏலம் கேட்பவர்களுமாக குழுமியிருக்க… சர்வே எண் பட்டா எண் போன்ற விவரங்களையும் நிலத்தின் மற்ற விவரங்களையும் கூறி ஏலத்தை ஆரம்பித்து வைத்தார் அந்த அதிகாரி… வங்கியில் கடன் வாங்கி கட்ட முடியாமல் போன ஒரு சினிமா புரோடியுசரின் நிலங்கள் அவை… கடன் தீர்பாணைய ஏலத்தில் விலையை குறைத்து வாங்கி விடலாம் என்பதால் அந்த நிலங்களுக்கு போட்டி அதிகம்… மின் ஏலமும் நடக்கும் என்றாலும் மதிப்பு அதிகமுள்ள இடங்களை இது போல திறந்த முறை ஏலத்தில் விற்பது சற்று அதிகம் லாபம் அதிகம் தரக்கூடியது… பங்கேற்பாளர்கள் சிண்டிகேட் அமைக்காத வரை!

முதல் வரிசையில் வருணும் ஆதிரையும் அமர்ந்திருக்க… சற்று தள்ளி ஸ்ருதியும் அமர்ந்திருந்தாள்… குறிப்பெடுக்க கையில் நோட் பேடோடு!

ஏலம் ஆரம்பிக்க… அறைக்குள் நுழைந்தான் ஜிகே… லேசான சலசலப்பு எழ… தெரிந்தவர்கள் அவனுக்கு வணக்கம் தெரிவித்தனர்… அவனும் பதில் வணக்கம் தெரிவித்து விட்டு காலியாக இருந்த முதல் வரிசை நாற்காலியில் அமர்ந்தான்…

கண்களில் அணிந்திருந்த கூலர்ஸ் அவன் யாரை பார்க்கிறான் என்பதை கூறாமல் தவிர்க்க… அருகில் இருந்த மகேஷிடம் விவரங்களை கூறிக்கொண்டு ஏலத்தையும் கவனித்து கொண்டிருந்தான்…

“ம்ஹூம்… ரெண்டு பார்ட்டியுமே வந்திருக்கு… மாத்தி மாத்தி கேட்டு விலைய ஏத்தி விட்டுடுவாங்கப்பா… நமக்கு சரி வராது… ”ஏலம் கேட்க வந்தவர்களில் ஒரு சிலர் முனுமுனுக்க ஆரம்பிக்க… ஜிகேவின் முகத்தில் குறுஞ்சிரிப்பு தோன்றியது…

ஆதிரைக்கோ இது போன்ற விஷயங்கள் புதிது என்பதால் கைகள் சில்லிட்டு நடுங்க ஆரம்பிக்க… தைரியத்திற்கு வருணின் கைகளை இறுக பற்றி கொண்டாள்… அவளது நடுக்கம் புரிந்த அவனும் அவளுடன் இடதுகையை கோர்த்து வைத்து கொண்டு வலது கையால் தட்டிக்கொடுத்தான்…

ஆனால் அவனது சந்தேகம் அவளது கைநடுக்கம் ஏலத்திற்கு வருவது புதிய விஷயம் என்பதாலா அல்லது ஜிகே அந்த அறையில் இருப்பதாலா? அவனுக்கு இரண்டாவது காரணமே ஆதிரையின் நடுக்கத்திற்கு காரணம் என்று தோன்றியது!

“ஆதி… கூல்… டேக் இட் ஈசி… இதுக்கே இப்படி டென்ஷன் ஆனா இன்னும் எவ்வளவோ இருக்கு… ”அவளது புறம் குனிந்து காதில் கிசுகிசுப்பாக கூற… அவளும் அவன் புறம் குனிந்து கேட்டு கொண்டு அதை அங்கீகரித்தாள்…

“புரியுது மாமா… ஐ ல் மேனேஜ்… ”

அதுவரை அவர்கள் புறம் திரும்பியும் பார்க்காத ஜிகே… ஏதோ ஒரு உந்துதலில் திரும்ப… இருவருக்குமான சம்பாஷணையை பார்த்து கோபத்தில் கொதிக்க ஆரம்பித்தான்… அதுவரை இருந்த மென்மைத்தன்மை காணமல் போய் முகத்தில் கடினத்தன்மை வந்து குடிபுகுந்தது… வெறுப்பாக முகத்தை திருப்பியவன்… ஏலம் கேட்க ஆரம்பித்தான்…

நான்கு கோடியில் ஆரம்பித்த ஏலம் அப்போது நாலரை கோடியாக இருந்தது… வருண் கேட்டு முடித்திருந்தான்… அதுவும் ஒவ்வொரு லட்சமாகத்தான் கேட்பு தொகை ஏறி கொண்டிருக்க…

“அஞ்சு கோடி… ” ஐந்து விரல்களை மடக்கி காட்டியவனின் முகத்தில் மருந்துக்கேனும் இரக்கம் இருக்கவில்லை… அவ்வளவு கடினப்பட்டிருந்தது!

அந்த அதிகாரி சற்று அதிர்ந்து ஜிகேவை பார்த்தார்… இருக்காதா? ஒவ்வொரு லட்சமாக ஏறி சூடு பிடிக்காத ஏலத்தை ஒரே வார்த்தையில் ஐம்பது லட்சம் ஏற்றி கேட்பவனை பார்க்கும் போது அதிர்ந்தாலும் வரும் லாபத்தை நினைத்து மகிழ்ந்தார்…

கோபமாக அவனை பார்த்த வருண் கேட்பதற்கு வாய் திறக்க… அவனை கையமர்த்தியவள்… கையை உயர்த்தி தானே கேட்க ஆரம்பித்தாள்…

“பைவ் க்ரோர்ஸ் அண்ட் பிப்டி லேக்ஸ்… ”

இனி சான்சே இல்லையென்று ஒவ்வொருவராக எழுந்து போக துவங்கினர்!

“ஆறு கோடி… ” அவளை திரும்பியும் பார்க்காமல் மீண்டும் அவன் கேட்க…

“ஆறரை கோடி… ” சூடு பிடித்ததை பார்த்த அதிகாரிக்கு நிலை கொள்ளவில்லை… இங்குமங்குமாக கண்கள் அலைபாய்ந்ததே அன்றி அவருக்கு வேலை வைக்காமல் இருவருமே கேட்டு கொண்டிருக்க… பத்து கோடியில் வந்து நிறுத்தினான்…

அடுத்து கேட்க போனவளை அவசரமாக தடுத்தான் வருண்…

“போதும் ஆதி… வேணாம்… அவனே எடுக்கட்டும்… விட்டுடு… ” அவனுக்கு புரிந்த உண்மையை புரிந்து கொள்ள ஆதிரை தயாராக இல்லை… அவளால் விட்டுவிடவும் முடியவில்லை…

“மாமா ப்ளீஸ் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க… ”

“இல்ல ஆதி அவன் வேற ஏதோ ப்ளான்ல இருக்கான்… ”

“அவன் எந்த ப்ளான்ல வேணும்னா இருக்கட்டும்… அவனுக்கு இதை விட்டு கொடுக்க மாட்டேன்… ”

“இல்ல ஆதி சொல்றதை கேளு… ”

“மாமா ப்ளீஸ்… ”

அவனை ஒரே வார்த்தையில் அடக்கிவிட்ட ஆதிரை…

“டென் அன்ட் பைவ் சீரோ… ”என்று முடித்து விட்டு ஜிகே புறம் திரும்ப… முழுக்கை ஷர்ட்டை மடித்து விட்டிருந்தவன் அதை மேலும் இழுத்து கொண்டு நாற்காலியின் பின்னால் சாய்ந்து அமர்ந்து கொண்டான்… அதற்கு மேல் கேட்பவனை போல தெரியவில்லை!

வருணை வெற்றிபார்வை பார்த்தாள் ஆதிரை!

“எப்படி சாதித்து விட்டேன் பார்த்தாயா?” அவளது பார்வை சொன்ன செய்தியை படித்த வருணுக்கு குழப்பம்… ! என்னவென்று அவள் பார்வையால் கேட்க…

“அவனுக்கு தேவைன்னு நினைச்சு இருந்தா கண்டிப்பா விட்டு கொடுத்திருக்க மாட்டான் ஆதி… ஐ நோ ஹிம்… ” என்றான் அதே குழப்பத்தோடு!

“ஐ நோ ஹிம் பெட்டர் மாமா… கண்டிப்பா இனிமே முடியாதுன்னு தான் அவன் விட்டதே… ”

“அவனை தப்பாவே கணக்கு போட்டு வெச்சுருக்க ஆதி… ” முடித்துவிட்ட வருணை புரியாத பார்வை பார்த்தாள் ஆதிரை!

எழுந்து சோம்பல் முறித்த ஜிகே… இருவரையும் கடந்து போக முனைய… ஆதிரையின் கேலியான பார்வையை பார்த்து நின்றான்… அப்படியே விட்டுவிட்டு போய்விட்டால் அவனும் ஜிகே இல்லையே!

“என்ன ராமநாதன் குமாரசுவாமி… தனியா வர்றதுக்கு பயந்துட்டியா?” நக்கலாக அவன் கேட்டதில் கடுப்பான வருண்…

“பயமா எனக்கா?”என்று சிரிக்க… ஆதிரை முனுமுனுத்துக்கொண்டாள்…

“இப்போ பயந்துட்டு போறது யாராம்?” அவள் மிக மெல்லிய குரலில் கூறி கொண்டது அவனது காதில் ஸ்பஷ்டமாக விழுந்து வைக்க…

“வருண்… இந்த புத்திசாலி கிட்ட சொல்லி வை… எனக்கு தேவைன்னு நினைச்சு இருந்தா நான் விட்டுருக்க மாட்டேன்… நான் விட்டது எல்லாமே எனக்கு தேவை இல்லாதது தான்… ” அவன் கூறியதின் பொருள் புரிந்த ஆதிரைக்கு எரிச்சலாக இருந்தது…

“இப்போதைய விஷயத்தை மட்டும் பேச சொல்லுங்க மாமா… வார்த்தைக்குள்ள விளையாட மற்றவர்களுக்கும் தெரியும்… எனக்கு தேவை இல்லைன்னு தூக்கி எரிஞ்சேன்… அந்த கதை எல்லாம் இப்போ தேவை இல்லை… இப்போ இந்த புத்திசாலி தோற்று போனதை அவரால ஒத்துக்க முடியல…… ஹி இஸ் எ லூசர்… ஆல்வேஸ் அன்ட் பை ஆல் மீன்ஸ்… ” என்று நேரடியாக அவனை தாக்கி வருணிடம் கூற…

அதுவரை அவளை திரும்பியும் பார்க்காமல் வருணிடம் பேசி கொண்டிருந்த ஜிகே… அவள் புறமாக திரும்பி…

“நான் லூசர்… ஹா ஹா… ஜோக் ஆப் தி மில்லேனியம்… அஞ்சு வருஷத்துக்கு முன்ன உனக்கு நான் வெச்ச பேரை இப்போ சொல்லி காட்ட ஒரு நிமிஷம் ஆகிடாது… திரும்ப என் கண்ணுல பட்டுடாத… அப்படி பட்டதனாலத்தான் இப்போ உங்களுக்கு இந்த நஷ்டம்… ஜாக்கிரதை… ” என்று கடித்து மென்று துப்பி விட்டு அவன் நகர போக… ஆதிரை சிரிக்க துவங்கினாள்…

“ஆதி… போகலாம் வா… இதெல்லாம் தேவை இல்லாத விஷயம்… ” வருண் அவளை அந்த இடத்திலிருந்து விலக்க எண்ணி அழைக்க,

“இருங்க மாமா… இவனோட திமிருக்கு நான் பதில் கொடுக்காட்டி எப்படி?” வருணை அவள் அடக்கிவிட்டு…

“நஷ்டம்… ஹஹா… எதுக்கு இந்த ஓவர் கான்பிடன்ஸ் உனக்கு? எப்பவுமே உன்னோட தகுதிக்கு மீறியே நினைச்சுட்டு இருக்க… ” அவனை தீண்ட கூடாத பாகத்தில் தீண்டி கொண்டிருக்கிறோம் என்பதை உணராமல் ஆதிரை பேச… உச்சத்திற்கு போன கோபத்தை அடக்கி… மிக அமைதியாக…

“ஏழு கோடி ருபாய் மார்கெட் வால்யு இருக்க இடத்தை பத்தரை கோடி கொடுத்து வாங்கினது முதல் நஷ்டம்… sand density இல்லாத லேக் ஏரியா… கன்ஸ்ட்ரக்ஷன் போனா மாட்டிக்கற ஏரியா… இது ரெண்டாவது நஷ்டம்… நான் இங்க வந்தது அந்த லேண்டை bid பண்ண இல்லை… விலைய ஏத்தி விட மட்டும் தான்… ஓகே வா ஸ்டெ… ”என்று ஆரம்பித்து விட்டு எப்போதும் அவளை விளிக்கும் அந்த வார்த்தையை பாதியோடு நிறுத்த… அவன் கூறிய விஷயங்களை விட அவன் கூறாமல் விட்ட வார்த்தையில் அவளது தேகமெங்கும் மிளகாயில் குளித்தது போன்ற எரிச்சல்…

அவனை எரிக்க நெற்றிக்கண் இல்லையே என்று கொதிக்க ஆரம்பித்து இருந்தாள் ஆதிரை!

error: Content is protected !!