Chocolate pakkangal 6
Chocolate pakkangal 6
அத்தியாயம் ஆறு
நினைவுகளின் முத்தம் பற்றி
உனக்கு ஒரு போதும் நினைவூட்டாதபடி
வெதுவெதுவென வைத்திருக்கிறது
உன் நினைவுகள் எனக்கு!
கோயில் சுற்றி வருகையில் “உனக்கெல்லாம் கேமரா வச்ச கோயிலா தான்கூட்டிப்போனும்… வச்சித்தொல!” என முன் நெற்றி ஒதுக்கிய உன் பகிரங்க ஆசையை, இந்த இலையுதிர் காலத்தில் சொல்லிக்காட்டிட முடியாதபடிக்கு
விலகிச்சென்றிருக்கிறாய்!
வெதுவெதுப்பு எப்போதும்
வெதுவெதுப்பாய் இருப்பதில்லை
அவ்வப்போது கொதி நிலையாகவும்!
-டைரியிலிருந்து
“இப்போ என்னாச்சுன்னு சோக கீதம் வாசிச்சுட்டு உக்கார்ந்துட்டு இருக்க அண்ணி?”
“ப்ச்… ” வள்ளியம்மையின் கேள்விக்கு பதில் இந்த ஒரு வார்த்தையாக மட்டுமே இருக்க… அவள் கடுப்பில் ஆதிரையை முறைத்து விட்டு ட்ரான்பலினில் குதித்து கொண்டிருந்த வாண்டுகளை கவனிக்க போக… வருண் சிரித்து கொண்டான்!
மழை விட்டும் தூவானம் விடாத கதையாக ஆதிரையின் சோர்ந்த முகத்தை பார்க்கமுடியாமல் பீனிக்ஸ் மாலுக்கு வள்ளியம்மை மற்றும் பிள்ளைகளோடு சேர்ந்து அவளையும் வலுக்கட்டாயமாக அழைத்து வந்திருந்தான் வருண்… ஆனாலும் பின்னணியில் வாசித்து கொண்டிருந்த வயலினை நிறுத்த முடியாது என்ற முடிவில் இருந்தாள் ஆதிரை…
“அம்மு… இந்த லூசு சிரிச்சாலே பார்க்க முடியாது… இந்த அழகுல இப்படி உர்ருன்னு இருந்தா யார் பார்க்கறது?” வள்ளியம்மையிடம் ஆதிரையை கிண்டலடிக்க… அதற்கும் ஆதிரை ஒரு முறைப்போடு நிறுத்தி கொள்ள…
“ஏய் குதிரை… இப்போ என்னாச்சுன்னு இப்படி இருக்க?” கடுப்பில் எப்போதும் அவளை கிண்டலடிக்கும் குதிரை என்ற வார்த்தையை கூறிவிட… அவனை பார்த்து முறைத்தவள் கையில் இருந்த க்ளச்சினால் அவனை அடித்து விட்டு…
“சாரி மாமா… ” மெல்லிய குரலில் அவள் மன்னிப்பு கேட்க…
“சரி… மாமா… ” வருண் அவளது தொனியை பின்பற்றி கிண்டலடிக்க… ஆதிரை மீண்டும் முறைக்க…
“ஓகே ஓகே… எத்தனை முறை தான்டா சொல்வ? இட்ஸ் ஓகே… ” புன்னகை மன்னனாக அவன் கூற… வருணை ஆச்சரிய பார்வை பார்த்தாலும் நஷ்டத்திற்கு காரணம் தான் என்ற குற்ற உணர்வு அவளை அழுத்தியது…
“இல்ல வருண் மாமா… நான் வாயை வெச்சுட்டு சும்மா இருந்திருக்கனும்… என்னால தான் இந்த நஷ்டமே… ”
“டென் தவுசன்ட் அன்ட் சிக்ஸ் பிப்டி… ” சம்பந்தமே இல்லாமல் அவன் கலாய்க்க… புரியாமல் பார்த்தாள் ஆதிரை…
“அத்தனை தடவை கேட்டு என் காது தீய்ஞ்சு போச்சு… தயவு செஞ்சு என்னை விட்டுடு… ” வருண் கெஞ்சுவதை போல நடிக்க…
“மாமா… வேணாம்… ” என பத்திரம் காட்டினாள் ஆதிரை…
“ஹே ஜஸ்ட் கிட்டிங்… அவன் அப்படி சொன்னா உடனே நம்பிடுவியா ஆதி… அந்த அளவு அவனை இன்னும் நம்பறியா?”அவளது முகத்தை கூர்மையாக பார்த்தபடி வருண் கேட்க… ஒரு கணம் அதிர்ந்து மீண்ட ஆதிரை முகத்தை சட்டென சீர்ப்படுத்தி கொண்டு வருணை கேள்வியாக பார்த்தாள்… கண்களில் அவனை நினைத்து வெறுப்பு மண்டியிருக்க ……
“இன்னமும் அவனை நம்ப நான் என்ன அவ்வளவு முட்டாளா?”வலியோடு அவள் கேட்க… அவளை மாற்ற வேண்டி…
“ப்ச்… விடு ஆதி… நாம அந்த லேண்டை நாம கன்ஸ்ட்ரக்ஷனுக்கு யூஸ் பண்ண போறதில்லையே… அப்படி யூஸ் பண்ணாதானே அவன் சொன்ன மாதிரி ஆகும்… உன்னை நல்லா குழப்பி விட்டுட்டு போய்ட்டான்… அந்த இடத்தை நான் ப்ளான் பண்ணதே நம்ம காரமடை ஸ்பின்னிங் மில்லை இங்க ஷிப்ட் பண்ணத்தான்… ”என்று வருண் கூறி முடித்த போது கலக்கம் மறைந்து முகம் தெளிவான ஆதி…
“சொல்லவே இல்லையே நீங்க… அப்போ அவன் சொன்ன நெகடிவ் எல்லாமே நமக்கு சாதகம் தானே… ”பொங்கிய மகிழ்ச்சியோடு அவள் கூற… அவளது தலையில் தட்டினான் வருண்…
“இப்போ புரிஞ்சுதா? நான் ஏன் கவலைப்படலைன்னு… இதை அவன் முன்னாடி பேசினா கூட… ஏதாவது ப்ளே பண்ணி குழப்பம் பண்ணி விட்டுடுவான் ஆதி… அதான் நான் சைலன்ட்டா இருந்துட்டேன்… ”என்று சிரிக்கவும்…
“ஆக மொத்ததுல அவனை ஹேண்டில் பண்றதுல நீங்க எக்ஸ்பெர்ட் ஆகிட்டீங்க மாமா… நான் தான் நடுவுல ஏமாந்துட்டேன்… ”சுவாரசியமாக வருணிடம் பேசிக்கொண்டிருக்க… இருவருக்கும் நடுவில் தொப்பென்று வந்தமர்ந்தாள் வள்ளியம்மை…
“ஷப்பா… மூணு குட்டி பிசாசுங்களையும் என் தலைல கட்டிட்டு நீங்க மட்டும் அரட்டை அடிச்சுட்டு இருக்கீங்களா?” முகத்தை சுருக்கி கொண்டு வேண்டுமென்றே வள்ளியம்மை வம்பிழுக்க…
“நீதானே அண்ணி என்னை முறைச்சுட்டு அதுங்க பின்னாடி ஓடுன?”ஆதி சிரித்து கொண்டே கேட்க…
“அய்யய்யோ… என்னால இனிமே முடியாது சாமி… அண்ணா நீ கொஞ்ச நேரம் பார்த்துக்கோ… என்னை பெண்டு நிமிர்த்திடுச்சுங்க… ” செல்லமாக சலித்து கொண்டு அமர்ந்திருந்த பெஞ்சில் சாய்ந்து கொள்ள… அவளை குறும்பாக முறைத்து விட்டு…
“என்னம்மோ பத்து பிள்ளைங்களை கட்டி மேய்க்க சொன்ன மாதிரி ஒரு பில்ட் அப்ப தர்ற நீ… ”தலையில் தட்டி விட்டு பிள்ளைகளை பார்க்க போனான் வருண்…
“அண்ணா… எங்க ரெண்டு பேருக்கும் கசாட்டா… ” அமர்ந்தவாறே வள்ளியம்மை குரல் கொடுக்க…
“ஓகே… ஓகே… ” குரல் கொடுத்தவாறே… குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்டிருந்த டெண்ட்டில் நுழைந்து விளையாடி கொண்டிருந்த ரக்ஷாவை நோக்கி போனான்…
ரோஷன் ஒரு பக்கம் நுழைய ரக்ஷா இன்னொரு புறம் வெளியேற என்று சுவாரசியமாக குழந்தைகள் விளையாடி கொண்டிருக்க…
பிருத்வி எங்கே?
கண்களை சுழற்றி பிருத்வியை தேடியவனின் கண்களில் அவன் தென்படவில்லை…
“ரஷிம்மா… இங்க வா… ”மருமகளை அழைத்தான் வருண்…
“என்ன மாமா… ”அவனிடம் ஓடி வந்தது வாண்டு!
“பிருத்வி குட்டி எங்கடா கண்ணா? உங்க கூடத்தானே விளையாடிகிட்டு இருந்தான்?”
“தெரியலையே மாமா… நான் டென்ட்ல விளையாடிகிட்டு இருந்தேன்… அவனும் இங்க தானே இருந்தான்… ” அவனுடைய வயதே ஆன ரக்ஷாவுக்கு அதற்கு மேல் விளக்க தெரியவில்லை… ரோஷனும் அதே போலவே கூற… அங்கிருந்த மற்ற பிள்ளைகளிடமும் அவர்களது பெற்றவர்களிடமும் விசாரிக்க துவங்கினான்… உள்ளுக்குள் பயம் இருந்தாலும் எப்படியும் பிள்ளை வெளியே சென்றிருக்க மாட்டான் என்பதில் உறுதியாக இருந்தான்…
“மேடம்… இங்க கிரீன் பேன்ட் எல்லோ ஷர்ட் போட்டுட்டு விளையாடிகிட்டு இருந்தானே ஒரு குட்டி பையன்… அவனை பார்த்தீங்களா?”அருகில் நின்று தனது குழந்தைக்கு விளையாட்டு காட்டி கொண்டிருந்த அந்த இளம் அன்னையிடம் கேட்க…
“இந்த பக்கமா போனான் சார்… ஆனா நான் அதுக்கு மேல கவனிக்கலை… ’ என்று குண்டை தூக்கி போட்டு விட்டு தனது குழந்தையை அவர் பார்க்க… அவர் காட்டிய வழி அந்த மாலில் இருந்து வெளியேறும் வழி!
வருண் பதட்டமடைந்தான்!
பிள்ளைகளை பார்த்து கொள்வதாக சென்ற வருண் யாரிடமோ பதட்டமாக கேட்டு கொண்டிருக்கிறானே என்ற பதட்டத்தில் அருகே வந்த ஆதிரைக்கும் வள்ளியம்மைக்கும் பிருத்வியை காணவில்லை என்றதும் பகீரென்றது!
வருண் பரபரப்பாக தேடி கொண்டு செல்பேசியில் டிரைவரை அழைத்தான்… அந்த டிரைவரும் சேர்ந்து கொண்டு தேட துவங்க… ஆதிரையின் கண்களில் கலக்கம் ப்ளஸ் கண்ணீர்!
“அண்ணி… ஒன்னும் ஆகாது… டென்ஷன் ஆகாத… ப்ளீஸ்… ” வள்ளியம்மை ஆதிரையை தேற்றினாலும்… தான் குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வந்திருக்க கூடாதோ என்று எண்ணினாள்… அவளது கண்களிலும் கண்ணீர்!
“முருகா… ”தலை சுற்றுவது போல தோன்றவும் ஆதிரை வள்ளியம்மையை ஆதரவுகாய் பிடித்து கொண்டாள்… அவளது வாழ்வின் ஒரே பற்றுக்கோல்… நம்பிக்கை… வெளிச்சம்… என யாதுமாகி இருந்தவன் பிருத்வி!
அவனுடைய வயதிற்கு தன் தாயின் வாழ்வே தன்னை நம்பித்தான் என்பதை உணராவிட்டாலும் தாய்க்கு தாயுமானவனாக இருந்து பிஞ்சு கைகளால் அவளது கண்ணீரை துடைக்கும் ஜீவன்! குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று என்று அவளுக்கு நித்தமும் உணர்த்தி கொண்டிருக்கும் அவளது உயிர்! எதற்கு இந்த வாழ்வு?… யாருக்காக தான் வாழ வேண்டும் என்ற கேள்வி எழும் போதெல்லாம்… எனக்காக நீ வேண்டும் என்று கேளாமல் கேட்கும் குழந்தை!
“பழனி ஆண்டவா… என்னோட குழந்தைய கண்டுபிடிச்சு தந்திடு… என்னை தவிக்க விட்டுடாதே ஆறுமுகா… ” மனதில் முருகனை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தாள் ஆதிரை!
“ஆதி… ப்ளீஸ்… அழாதே… ”தனது கண்ணீரை துடைத்து கொண்டு ஆதிரையை தேற்ற முயன்ற வள்ளியம்மையின் வார்த்தைகள் அவளது மூளையை சென்றடைந்தால் தானே?… அது மரத்து போய் பிருத்வி என்ற சின்னஞ்சிறிய உருவத்தில் மட்டுமே லயித்து இருந்தது!
*******
செல்பேசியில் பேசியபடியே வருவதாக கூறிய தனது நண்பனை தேடிக்கொண்டிருந்தான் ஜிகே… மனதெங்கும் ஏதோ ஒரு உணர்வு அழுத்தி பிடித்திருக்க… பேசாமல் வீட்டிற்கு சென்று விடலாமா என்று யோசித்தான்… அவளை பார்த்தது முதல் மீண்டும் வந்து ஒட்டி கொண்ட அழுத்தம்!
திரும்ப பார்க்கவே கூடாது என்றெண்ணி அவளை விட்டு வெகுதூரம் சென்று விட்டதாக நினைத்து கொண்டிருந்தான்… ஆனால் உண்மை அதுவல்ல… காயம் இன்றும் பச்சை புண்ணாகத்தான் இருக்கிறது என்று தலையில் தட்டி உணர்த்தியிருக்கிறது விதி!
இரவு அந்த நினைவிலே மதுவும் சற்று அதிகமாக தடுமாறி வந்தவனை எதிர்கொண்டார் அபிராமி… அவன் மது அருந்தி வரும் போது அவனை பார்க்க அவரும் விரும்பமாட்டார்,அவனும் தவிர்த்து விடுவான்… ஆனால் நேற்றோ எதையோ கூற காத்திருந்தவராக அவனை நிறுத்தினார் அபிராமி!
“தம்பி ஒரு நிமிஷம் நில்லு… ” மாடியேற போனவனை அபிராமி நிறுத்த… என்னவென்று திரும்பி பார்த்தான்…
“எனக்கொரு பதில் தெரிஞ்சாகனும்… ” கறாராக அவர் ஆரம்பிக்க… நன்றாக திரும்பி நின்று கொண்டான்… அவரை பார்த்தவாறு!
“நீ என்னதான் நினைச்சுட்டு இருக்க? இப்படியே இருந்தா அர்த்தம் என்ன?” அவர் எப்படியே என்று கூறுகிறார் என்று புரிந்தாலும் அதற்கு பதிலளிக்க அவனுக்கு பிடித்தமில்லை…
“நான் பேசிட்டே இருக்கேன்… நீ ஒண்ணுமே பேசாம இருந்தா என்ன அர்த்தம் கேட்கறேன்… ”
“நீ பேச வர்ற விஷயம் எனக்கு அனாவசியம்ன்னு அர்த்தம்மா… ”அத்தனை போதையிலும் நிதானமாக பதிலிருத்தவனை பார்க்கும் போது முதலிலெல்லாம் தோன்றாத கோபம் இப்போது அவரை அலைகழித்தது! காரணமும் உண்டே… !
யாருக்காக இல்லையென்றாலும் பிள்ளைக்காக என்று நினைக்க வேண்டாமா? அதை பற்றி கூட தெரியாமல் இந்த வாழ்க்கை தான் எதற்கு? தான் இன்னும் எத்தனை நாளைக்கு? தனக்கு பிறகு மகனுக்கு பற்றுகோடாக எதனை விட்டு செல்ல போகிறோம் என்ற ஆற்றாமை அபிராமிக்கு!
“தம்பி… பழசு எதையுமே நினைக்க வேண்டாம்… எல்லாத்தையும் புதுசா தொடங்கு கண்ணா… ”
“அதுக்கு நான் செத்து போகணுமேம்மா… ” உணர்வே இல்லாமல் அவன் கூறியது அபிராமியை துடிக்க வைத்தது…
“தம்பி என்ன சொல்ற?”
“ஆமாம்மா… புதுசா வாழ்க்கைய ஆரம்பிக்கனும்னா எனக்கு என்னோட சுயமரியாதை வேணும்… மத்தவங்க மழுங்க மழுங்க அடிச்ச என்னோட தன்மானம் வேணும்… சின்ன வயசுல இருந்து எனக்கு கிடைக்காதது அத்தனையும் வேணும்… ” பேசியவாறே மாடிப்படியில் அமர்ந்தவன் தலையில் கை வைத்து முகத்தை மறைத்து கொண்டான்… போதை உணர்வுகளை வெளியே கொண்டு வருகிறதோ?
“கிருஷ்ணா… இந்த பிள்ளைக்கு ஏன் இந்த மனசை கொடுத்த?” வெளியே சொல்ல முடியாமல் தனக்குள்ளே மருகி கொண்டிருந்தார் அபிராமி! முகத்தை மறைத்தவன் அழுந்த துடைத்து கொண்டு…
“இது என்னோட போராட்டம்… நான் போராடிகிட்டு இருக்கேன்… இந்த வாழ்க்கையோட போராடிகிட்டு இருக்கேன்… எனக்காக யாரும் வேணாம்… ஒருத்தரும் வேணாம்… நான் தனிதான்… வரும் போதும் தனியாத்தான் வந்தேன்… போகும் போதும் தனியாத்தான் போவேன்… ” கூறி கொண்டிருந்தவனின் குரலில் வெறி ஏற…
“ஆனா எதையுமே விட்டு கொடுத்துட மாட்டேன்… கண்டிப்பா மாட்டேன்… நான் நியாயமா நடந்துக்கனுமா? எனக்கு யாரும்மா நியாயம் செய்தது? இல்லையே! நான் மட்டும் நியாயமா நடக்கணும்ன்னு எதை வெச்சு சொல்ற?”
அதீத கோபத்தில் கூறினாலும் நிறுத்தி நிதானமாக கூறியவனின் தொனியில் தான் கூற வந்ததை மறந்தார் அபிராமி!
“தம்பி… இவ்வளவு கோபம் நல்லதில்லை கண்ணா… ” கண்களில் நீரோடு அவர் கெஞ்ச… கூர்மையாக அவரை பார்த்தான் கௌதம்! அந்த பார்வை ஆயிரம் கதைகளை கூறியது… ஆயிரம் கேள்விகளை அவரை கேட்டது… ஆனால் அதற்கான பதில்கள்? அவரிடம் இல்லையே!
பதில் பேச முடியாமல் கண்களை துடைத்தவாறு அவனுக்கு உணவை எடுத்து வைத்த தாயை நினைத்து இப்போதும் கோபத்தில் திளைத்தது நெஞ்சம்…
வர சொல்லிய நண்பனை காணாமல் தேடி கொண்டிருக்கையில் கண்களில் பட்டான் அந்த அழகு சிறுவன்!
சிறுவன் என்று அழைக்க முடியாமல் குழந்தை என்பதை விட சற்று பெரியதாக… ஒரு ஐந்து வயது இருக்குமா? வழுவழுவென வெண்மை நிறத்தில் அழகு குட்டியாக துறுதுறுவென எஸ்கலேட்டரில் ஏறி இறங்கி விளையாடி கொண்டிருந்த அந்த பாலகனை பார்க்கும் போது எங்கோ பார்த்த நினைவு! யாரையோ நினைவுப்படுத்தும் முகம்… குண்டு குண்டு கன்னங்கள்… முட்டை முட்டையாய் கண்கள் அலைபாய… சற்று நேரம் அங்கிருந்த க்ரில்லில் சாய்ந்து கொண்டு அவனை ரசித்து கொண்டிருக்க… மனம் சிறிது சிறிதாக அமைதியடைந்தது… என்ன விந்தை?
இதற்குத்தான் குழந்தைகள் வேண்டுமா?
ஏறி இறங்கி கொண்டிருந்த அந்த எஸ்கலேட்டரில் ஏறி மறுபுறமாக மீண்டும் இறங்கி விளையாடி கொண்டிருந்தவன்… மீண்டும் ஏற போகும் போது முன்னே சென்ற குழந்தை மீது மோத… சட்டென்று சமாளிக்க முடியாமல் கீழே விழுந்தான்… ஜிகே வுக்கு பதறியது!
“ம்மா… ” கீழேவிழுந்த அந்த வாண்டு கத்தியது அவனது உயிரை தீண்ட… வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவன் அவனை தூக்க ஓடினான்!
“சார்… குழந்தைகளை இப்படித்தான் தனியா விளையாட விடுவீங்களா? நல்ல அப்பா சார் நீங்க… ” அந்த எஸ்கலேட்டர் ஆப்பரேட்டர் வெகு நேரமாக அந்த குழந்தையை ரசித்து கொண்டிருந்தவனை தந்தையென எண்ணி இடிக்க… அவனை வாரி எடுக்க போனவனை ஏதோ செய்தது அந்த வார்த்தை!
“அச்சோ… சின்ன குட்டிக்கு அடி பட்டுடுச்சா?” என்று அணைத்து கொண்டு கேட்க…
“நோ நோ… ஐ ம் எ பிக் பாய் யூ நோ?” கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை எனும் கணக்காக அது மழலை மாறாத குரலில் வழக்கடிக்க… அதன் தோரணையில் சட்டென சிரித்து விட்டான் கௌதம்!
“ஓ… நீங்க பிக் பாயா? அப்போ ஏன் கத்துனீங்க?”அவனது தோரணையிலேயே இவனும் கேட்க…
“நான் கத்தினேனா? நோ நோ… ஐ வாஸ் காலிங் மை மம்மி… ”
“ஓகே… ஓகே… ஏன் தனியா வந்து விளையாடறீங்க? உங்க பேரன்ட்ஸ் தேட மாட்டாங்களா?” பொறுப்பாக அந்த வாண்டை கேட்க…
“நான் அத்தை கிட்ட சொல்லிட்டேன் அங்கிள்… நான் விளையாததேன்னு… கீழ தான் இதுக்காங்க… ” மழலை குரலில் கூறி கொண்டிருந்த அந்த சில்வண்டை அணைத்து கொள்ள வேண்டும் போல தோன்றியது அவனுக்கு! அலைப்புற்று இருந்த அவனது மனதை அமைதிபடுத்தி கொண்டிருந்தது தெரியாமல் பேசிக்கொண்டிருந்தான் அந்த வாண்டு!
“ஓ சொல்லிட்டீங்களா… அப்போ நாம ரெண்டு பேரும் விளையாடலாமா?”என்று ஏக்கமாக அவன் கேட்க… வெகு வேகமாக தலையாட்டியது அந்த பட்டாம்பூச்சி!
“ஓ விளையாடலாமே… ” அவனிடமிருந்து துள்ளி கீழே இறங்கியவன் கௌதமையும் இழுத்து கொண்டு எஸ்கலேட்டரின் மேல் ஏற ஓடினான்… அந்த வாண்டோடு சரிக்கு சரியாக இவனும் ஏறி இறங்க… இருவருமே சந்தோஷத்தில் மிதந்தனர்…
அரைமணி நேரம் விளையாடியவன்… அந்த வாண்டை பார்த்து…
“நீங்க இங்க விளையாடிகிட்டு இருக்கீங்களே… உங்களைதேட மாட்டாங்களா… ?” அவனை வாரி எடுத்து நடந்து கொண்டே கேட்க…
“அச்சோ ஆமா… மை மம்மி வில் செர்ச் பார் மீ… ” அவன் மேல் சாய்ந்து கொண்டு அந்த வாண்டு கூற… அதன் வாசத்தில் மனம் நிறைந்தது! அவன் கூறிய இடத்தை நோக்கி போய் கொண்டே அந்த வாண்டை பார்த்து…
“சரி இவ்ளோ விளையாடுறீங்களே… உங்களுக்கு கால் வலிக்காதா?”செல்லமாக அவன் கேட்க… அந்த வாண்டோ அவனது கழுத்தை கட்டி கொண்டு…
“எஸ்… வலிக்கும் தான்… ஆனா மம்மி தான் காலை பிதிச்சு விதுவாளே… ”என்று மழலை மாறாமல் மிழற்ற…
“ஏன் டேடி பிடிச்சு விட மாட்டாங்களா?” சிரித்து கொண்டே அவன் கேட்க…
“ம்ஹூம்… ஐ ஹேவ் நோ பப்பா… அவங்க ரொம்ப தூரமா இதுக்காங்களாம்… நான் இன்னும் பிக் பாயா ஆனாத்தான் வதுவாங்களாம்… ” என்று கூற… அந்த வாண்டை பரிதாபமாக பார்த்தான்… பரிதாபத்துக்கு ஆளாக்கியதே தான் என புரியாமல்!
“சரி… உங்க பேர் என்ன? சொல்லவே இல்ல… ”
“மை நேம் இஸ் பிருத்வி… பிருத்வி குமாரசுவாமி… ” பிருத்வி மழலை மாறாத குரலில் கூற… ஜிகேவுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த உணர்வு!
அதிர்ந்து அவனை பார்த்தவன்…
“அம்மா பேர் என்ன கண்ணா?”
“ஆதிரா அம்மா… ” சொல்லி கொண்டே தாயை பார்த்த சந்தோஷத்தில் அவன் துள்ளி கீழிறங்க முயற்சிக்க… கௌதம் மனதில் பூகம்பங்கள்!
“அப்பா பேர் என்ன பிருத்வி?”வெளியே வராத குரலில் கேட்க…
“அப்பா பேர் கௌதம்… கௌதம் குமாரசுவாமி!” சப்தமில்லாமல் அணுகுண்டை வீசி விட்டு பிருத்வி அவனது கைகளிலிருந்து துள்ளி இறங்கி ஓட…
“பிருத்விகுட்டி… ”கண்ணீரோடு தாவி வந்து அணைத்து கொண்டது ஆதிரை!