cn – 18

cn – 18

நிலவு – 18

வளைகாப்பு தினத்தின் அதிகாலைப் பொழுதில் தயானந்தனின் வீடு…   

விடியலின் தென்றலை ஆர்பாட்டமாய் வரவேற்பவனைப் போல், வேகமாகத் தனது சிறிய உடலை தூக்கிக் குதித்த வண்ணமே, தன் கைகளை விரித்தபடியே விளையாடினான் இரண்டு வயது விபாகரன்.

“நெய்ய(நிறைய) கொகி(கொக்கு)…” காலை நேரத்தில் தன் கூட்டை விட்டு பறந்த காக்கைகளின் கூட்டத்தை அண்ணாந்து பார்த்து, ஜோராகக் கைதட்டி சிரித்துக் கொண்டிருந்தான் அந்த பெரிய மனிதன். 

“கொக்கு இல்லடா, அது காக்கா… சொல்லு பாப்போம்” குழந்தையின் பின்னே சுற்றிக் கொண்டிருந்த தயா, சளைக்காமல் விளக்கிக் சொல்ல, அடுத்த விளையாட்டில் தாவி விட்டது விபுகுட்டி.  

“நெய்ய பூ…” என்று வராண்டாவில் வரிசையாக வைத்திருந்த, பூந்தொட்டிகளை, தொட்டுப் பார்க்கவேன ஓடியவனை, தன் தோள்களில் அள்ளிக் கொண்டான் தயா.

“பட்டணத்து காத்து உன்ன தூங்க வைக்கலையாடா? நைட் ஃபுல்லா, நீ சிவராத்திரி கொண்டாடிட்டேன்னு உங்கம்மா மூக்க சிந்திட்டுப் போறா!” என்று சிரித்த மாமனின் கேள்விக்கு,

“ஆ… மா…” என்று கண்களை சுருக்கி, தலையை ஆட்டினான் விபாகர். 

வீசும் காற்றிலும் இயந்திரத்தனத்தை கொண்ட சென்னை வாசமும், புதிய இடமும் குழந்தை விபாகரனுக்கு ஒத்துக் கொள்ளாமல் போக, இரவு முழுவதும் தூங்காமல் ஆட்டம் காட்டியிருந்தான்.

அவனை கையில் வைத்துக் கொண்டு சோர்ந்து போன சிந்து, சற்று நேரம் தூங்கப் போவதாக அப்பொழுதுதான்  பிள்ளையை கீழே விட்டுவிட்டுச் சென்றிருக்க,

குழந்தையும் சளைக்காமல், அனைத்து வேலைகளையும் வெட்டி முறிப்பவனைப் போல் துருதுருவென்று தரையில் கால் பாவாமல் தனது ஆட்டத்தை தொடங்கி இருந்தான்.

“இன்னும் இருபது நாள் இருடா… உனக்கு போட்டியா இன்னொருத்தன கொண்டு வர்றேன், சேட்டைக்காரா! அப்போ நீ, எனக்கு வேணாம்” என்ற மாமனின் பொய்யான பேச்சில், முறைத்து சற்றும் பயம் கொள்ளாமல், அவனது முகத்தில் சப்பென ஒரு அடி கொடுத்தது குழந்தை.

“விபு வேவும்(வேணும்) மாமா…” என பிள்ளை சண்டைக்கு நிற்க,

“எனக்கு வேண்டாம்” என்று தயா வீம்பு பிடிக்க, உதட்டை பிதுக்கி கொண்டு அழ ஆரம்பித்து விட்டது குழந்தை.

பேரனுக்கு பாலை ஆற்றியபடியே வந்த மரகதம்,

“அவனை அழவைக்காதே தம்பி… சமாதானம் பண்ண அவங்க அம்மாதான் வரணும்” என்று சொன்னதும், பிள்ளையிடம் கொஞ்சிப் பேசி சிரிக்க வைத்தான் தயா.

தாய்மாமனின் செய்கையில் சின்னக்கண்ணன், தன்னை மறந்து சிரித்து விளையாடிய நேரத்தில், மெதுவாக அவனுக்கு டம்ளரில் பாலைக் குடிக்க வைத்த மரகதம், விழாவிற்கான ஏற்பாடுகளைப் பற்றிக் கேட்க,

“கேட்டேரிங் பதினோரு மணிக்கு வந்துரும். உதிரிப் பூ வாங்கி கட்டக் குடுத்தாச்சு. அதுவும் கொஞ்ச நேரத்துல வந்துரும். மத்த ஏற்பாடெல்லாம் நேத்தே முடிச்சாச்சுமா…” என்று அசராமல் நூறாவது முறையாக விளக்கி கூறினான் தயா.

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே நர்மதாவும் கங்காவும் ஆட்டோவில் வந்து இறங்கினர். பயண விவரங்களை கூறி, நலம் விசாரித்துக் கொண்டவர்கள் சிந்துவை பற்றிக் கேட்க,

“சிந்தா வா…” என்று பெரிய மனித தோரணையில், தன் அம்மாவை அழைத்த வண்ணமே, மாடிக்குச் செல்லத் தயாரானான் விபு.

“கண்ணா… அம்மா வேணாம், அத்தைய எழுப்புவோமா?” என்று தயா மிதுனாவை அழைக்கச் செல்ல,

“கொஞ்ச நேரம் போகட்டும் தம்பி… உடம்பு சூட்டுக்கு தூக்கம் வராம, ராத்திரி ரொம்ப நேரம் உட்கார்ந்திருந்தா…” என்று மரகதம் சொல்லும்போதே, தளர்ந்த நடையுடன் ஹாலில் வந்து அமர்ந்தாள் மிதுனா.

மிதுனா, மரகதத்தின் வசதிக்காக குடித்தனத்தை கீழே கொண்டு வந்திருந்தார்கள். கட்டில், சோபா, ஃபிரிட்ஜ் போன்ற அத்தியாவசியப் பொருட்களை புதிதாக மாற்றி இருந்தான் தயானந்தன்.

நாத்தனார்களிடம் பேசிக் கொண்டிருந்தவளை வம்படியாக தன்புறம் திருப்பி, “மிது, பாப்பா…” என்று மிதுனாவின் பெரிய வயிற்றை தடவிய விபாகர், அவளின் மடியில் அமரப் போக,

“அத்தை சொல்லணும் தங்கம், பேர் சொல்லக்கூடாது” என்ற நர்மதா, பிள்ளையை தூக்கி, தன் மடியில் இருத்திக் கொள்ள,

“அப்டி ஒழுங்கா சொன்ன குழந்தையதான், உன் தம்பி பேர் சொல்லி குடுத்து, கூப்பிட வச்சுருக்கான்” என்று நொடித்துக் கொண்டார் மரகதம்.

“உனக்கு ஏண்டா இந்த வேலை?” என்று கங்கா கேட்க,

“எல்லாம் ஷார்ட் ஃபார்ம்தான்-க்கா… அத்தை மூன்றெழுத்து, மிது இரண்டெழுத்து. ஈஸியா சொல்ல வரும்கா…” தயா கேலியில் இறங்க,

“மாமா – இழுத்துச் சொல்லணும், டேய் – ஈஸியா வரும்… நானும் சொல்லிக் குடுக்கவா?” பதிலுக்கு மிதுனா வம்பிழுத்தாள்.  

“இவங்க பேசுறத கேட்டு, நாமதான் தலைய பிச்சிட்டு போகனும்” அலுத்துக் கொண்ட மரகதம்,

“உள்ளே போயி கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க” என்று மகள்களைப் பார்த்து சொல்லும் நேரத்தில்,

“அக்கா…” என அழைத்துக் கொண்டு வாசலில் வந்து நின்றான் பாஸ்கர்.

உடன்பிறந்தவன் வந்து நின்ற சந்தோஷ அதிர்வில் நொடிப் பொழுது, ஸ்தம்பித்தாள் மிதுனா. சென்ற வாரம் பேசும் போது கூட, தன் வருகையைப் பற்றி ஏதும் சொல்லாதவன், தற்போது வந்ததில் ஆச்சரியப்பட்டு, புன்னகை பூரிக்க அவனை பார்த்தாள்.

வீட்டில் உள்ள அனைவரும் மேலோட்டமாக அவனை உள்ளே வா என்று அழைத்திருந்தும், அவன் உள்ளே வரத் தயங்க,

“மிது… மாப்ளே, நீ கூப்பிட்டாதான் வருவாரு போல…” தயாவின் பேச்சில், தன்னை மீட்டுக் கொண்ட மிதுனா,

“பாஸ்.. பாஸ்கி, ஏண்டா அங்கேயே நிக்கிற? உள்ளே வா” மகிழ்ச்சியுடன் அழைத்தும் தயக்கத்துடன் உள்ளே வந்து அமைதியாக நின்றான் பாஸ்கர்.  

விபுகுட்டி, தன் தமிழ் மாமா வந்திருப்பதாக நினைத்து, அவன் எதிரில் சென்று கைகளை தூக்கிய நொடி, பரிச்சயம் இல்லாதவனைக் கண்டு பின்னடைய,

“அப்பாடா குட்டி… அப்பாகிட்ட போங்க” என்று பாஸ்கரிடம் திருப்பி விட்ட மிதுனா, “குழந்தைய தூக்குடா” என்ற வழக்கமான அதட்டலில் பாஸ்கரும் சுயநினைவிற்கு வந்தவன், தன் மகனை கைகளில் அள்ளிக் கொண்டான்.

பரபரப்பும் பரவச உணர்வும் அவனை ஊமையாக்கி விட, ஒரு நிமிடம் அமைதியாக, பிள்ளையை பார்வையால் தழுவிக் கொண்டான்.  

புதியவன் என்ற பயத்தில் மிரண்டு, கீழே இறங்க நினைத்த மகனிடம் மொபைல் என்னும் மந்திரக்கோலை காண்பித்து, தன்னுடன் இருத்திக் கொண்டான்.

“உக்காரு பாஸ்கர்” என்று மிதுனா தம்பியை அமர வைத்தவள், காபி தயாரிக்கவேன உள்ளே செல்ல, மரகதம்  ரெடியாக வைத்திருந்ததை மருமகளிடம் கொடுத்து விட்டார். 

திரும்பி வந்தவன் திருந்தி வந்திருக்கிறானா? இனியாவது மனைவி குழந்தை என்று பொறுப்பாக இருப்பானா? போன்ற பல கேள்விகள் அங்குள்ள அனைவரின் மனதிலும் எழ, வந்தவனையே கண்கொட்டாமல் பார்த்து நின்றனர்.

உழைப்பின் களை முகத்தில் தெரிய, சற்றே மெலிவடைந்த, அதே சமயம் முருக்கேறிய தேகத்துடன் பொலிவான தோற்றத்தில் இருந்த, பாஸ்கரிடம் நல்ல மாற்றம் தெரிந்தது. நல்லதொரு முன்னேற்றம் கண்டுள்ளான் என திருப்தியான எண்ணத்துடன் அவனைப் பார்த்து மகிழ்ந்தனர். 

பிள்ளையின் முகம் நோக்கி, குனிந்து பேச ஆரம்பித்த பாஸ்கர், மற்றவர்களை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. முதன் முறையாக இன்றுதான் அவனை தூக்கிக் கொள்கிறான்.

பிறந்த குழந்தையை முறைதெரியாமல் தூக்கி கொண்டால், குழந்தைக்கு ஆபத்து என்று அனைவரும் சொல்லிவிட, பிறந்த பொழுதில் தள்ளி நின்றே மகனை பார்த்தவன், இன்று அவனை தன் கையணைப்பில் வைத்து, ஆரத் தழுவிக் கொண்டு, புதியதொரு உணர்வில் சிக்கித் தவித்தான் பாஸ்கர்.

“காபிய குடிச்சுட்டு மகன் கூட விளையாடலாம் பாஸ்கி!” என்று மிதுனா டம்ளரை கைகளில் திணிக்க,

“எப்பிடிக்கா இருக்க? ரொம்ப மாறிப் போயிட்ட நீ… தமக்கையை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான் பாஸ்கர்.

அவன் சொல்வதைப் போல், மிதுனாவின் நிறைமாத தோற்றம், அவளை முற்றிலும் மாற்றியிருந்தது. முகத்தில் கனிவும், குரலில் குழைவும் மெருகேறி, பார்வையில் சந்தோஷ சோர்வு கரைகட்டி நிற்க, தாய்மையின் பொலிவில் வெகு பாந்தமாக இருந்தாள்.   

“நல்லா இருக்கேன்டா… நீயும்தான் ரொம்ப மாறிட்ட… வீடியோ கால் பேசுறப்போ சரியாத் தெரியல…”

“நீ கன்ஸீவ் ஆனதுல இருந்து வீடியோ கால்ல ரொம்ப பேசுறதில்லக்கா…” என்றதும் ஆமாம் என்று மிதுனா தலையாட்ட, மேலும் ஏதோ ஒன்றைக் என்று கேட்க நினைத்து, நொடி நேரம் அவளைப் பார்த்தவன், பின்பு கேட்காமல் தலை குனிந்து கொண்டான்.  

“நீ பால் குடிச்சியா ராஜா? தம்பி பேர் என்ன?” மகனிடம், பாஸ்கர் பேச்சினைத் தொடர,

“விபு” என சட்டென்று சொல்லி வாயை மூடிக் கொண்டது சின்னச் சிட்டு.

பாஸ்கர் புரியாமல் திருதிருவென்று முழிக்க, ‘அடப்பாவி இந்த பார்வைய, இன்னும் மாத்திக்கலையா நீ?’ மனதோடு அலுத்துக் கொண்ட தயா,

“அக்கா… சிந்துவ கூட்டிட்டு வா!” என்று நர்மதாவை மேலே அனுப்பினான்.

“விபாகர் சொல்லுடா குட்டி” என்று தந்தையாய், பாஸ்கர் சொல்லிக் கொடுக்க, மகனோ மாட்டேன் என்று தலையசைத்து “விபு” என்றே மறுபடியும் கூறி, கருமமே கண்ணாக அலைபேசியை குடைய, அங்கே சிரிப்பலை பரவியது.

எந்தவொரு விவரமும் சொல்லாமல் நர்மதா, சிந்துவை அழைத்து வந்து நிற்க, மகனுடன் பேசியபடியே இருந்த பாஸ்கரும், வந்து நின்ற சத்தம் கேட்டு அவளை நிமிர்ந்து பார்த்தான்.

இத்தனை நாட்களில் சிந்துவைப் பற்றிய நினைவு, உள்ளுக்குள் கனன்றாலும், எதையும் பெரிதாக வெளிப்படுத்திக் கொள்ளாத அவனது சுபாவம், மனைவியின் மீதான ஆசையை கட்டுப்படுத்தி வைத்திருந்தது. ஆவல் மீறிடும் பார்வையை அவன் பார்க்கவில்லை என்றாலும் மனதில் ஆர்வம் இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால் சிந்து அப்படி அல்லவே! எந்த ஒன்றையும் உணர்வுப் பூர்வமாக அணுகும் பழக்கமுடையவள். அதன் காரணமே விரக்தியின் விளிம்பில், தன்னை நிறுத்தியவனைப் பார்த்ததும், தன் பிடித்தமின்மையை காட்டி விட்டாள்.    

அந்த நேரத்தில் சிந்துவின் முகத்தில் எரிச்சலும், வெறுப்பும் ஒரு சேர குடிகொள்ள, அடுத்த நொடியே அங்கிருந்து சென்று விட்டாள். கணவன் மீது கொண்ட அவநம்பிக்கை பாவனை இன்னும் மாறாமல் இருக்க, அவனது பார்வையை சகிக்க இயலாமல் அங்கிருந்து விலகி விட்டாள்.  

வந்தவனை உதாசீனப் படுத்தும் தோரணை அவளது செய்கையில் அப்பட்டமாகத் தெரிய, யார் அழைத்தும் அவள் நிற்கவில்லை. முகத்தில் அறைந்தாற்போல் இருந்த சிந்துவின் செய்கையில், மனதளவில் பெருத்த அடி வாங்கி விட்டான் பாஸ்கர்.  

ஆனாலும், இது எதிர்பார்த்ததுதானே என்று தன்னைதானே சமாதானப் படுத்திக் கொண்டவன், எந்தவொரு உணர்ச்சியும் வெளிக் காட்டாது, தன் பேச்சினை மகனுடன் தொடர, மற்றவர்களுக்குதான் அயர்வாக இருந்தது.

இவர்களுக்கு புத்தி சொல்லி, ஒன்றாக சேர்ந்து வாழ வைப்பது, எளிதாக நடந்து விடுமா என்ற குழப்பம் அந்த நேரத்தில் அனைவரின் மனதிலும் உண்டானது.

சற்று நேரம் குழந்தையுடன் சிரித்து விளையாடியவன், தன் தமக்கையை தவிர்த்து, வேறு யாரிடமும் பேச முயலவில்லை. அந்தச் செயலே தயாவிற்கு கோபம் வரக் காரணமாக அமைய, அடுத்து பாஸ்கர் சொன்னதில், அவனை நேரடியாக முறைத்து விட்டான்.

“நான், சாந்தி அக்கா வீட்டுக்கு போயிட்டு வர்றேன்கா…” மிதுனாவிடம் சொன்ன படியே பாஸ்கர் கிளம்பி நிற்க,

“இன்னும் கொஞ்ச நேரத்துல குடும்பத்தோட அவளும் இங்கேதானே வரப்போறா… அப்போ பார்த்துக்கலாம் பாஸ்கி” என்று மிதுனா விளக்கம் கூறினாலும்,

“இல்லக்கா… நம்ம வீட்டு சார்பா, நான் போயி முறையா சொல்லணும். அதான் போயிட்டு கையோட கூட்டிட்டும் வந்துடுறேன்” என்று பொறுப்பானவனாக பேச, அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சிதான் இது.

இந்த பொறுப்புணர்வு இல்லை என்றுதானே, எல்லோரும் அவனை கரித்துக் கொட்டியது. இப்பொழுது அந்த மனதாங்கல் சற்றே விலகிய தோற்றம் கொள்ள, மிதுனா மனதோடு மகிழத்தான் செய்தாள்.

இவன் பாசம் வைக்காதவன் அல்ல, அதை வெளியே காட்டிக் கொள்ளாதவன் என்று தம்பியை புரிந்து வைத்திருந்தவளுக்கு, அவன் சொல்வதும் சரியென்று பட, தம்பி சொன்னதற்கு சம்மதித்து விட்டாள்.

பாஸ்கருக்கு சாந்தினியின் வீட்டிற்கு செல்லும் எண்ணம், இங்கே வந்து நிற்கும் வரை இல்லைதான். தன் அக்காவை பார்க்கவென்று, சந்தோஷமாக இங்கே வந்தவன், அவளது  குடும்பத்தார்கள் அனைவரும் இங்கேதான் இருப்பார்கள் என்ற எண்ணத்தை மிக எளிதாக மறந்து போய் விட, அங்கே நிற்கும் ஒவ்வொரு நொடியும் முள்ளில் நிற்பதைப் போல் அவஸ்தை கொண்டான்.

அவர்களின் முகம் பார்த்து பேச தயங்கியவன், சிந்துவின் அலட்சியப் பார்வையில் மேலும் அடிபட்டு நிற்க, யாரையும் ஏறிட்டு பார்க்க முடியாத தர்ம சங்கடமான சூழ்நிலையில் தள்ளப்பட்டு விட்டான்.

இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க, பெரியவள் வீட்டிற்கு செல்லலாம் என்று நினைக்க, அதற்கான காரணமும் தோதாக அமைந்து விட்டது. அங்கு செல்ல முடிவெடுத்து, மிதுனாவிடம் சொல்லிய வேளையில், தயா அவனை முறைத்துக் கொண்டு நின்றான்.

வந்தவன் பொண்டாட்டிய பார்த்து பேசுவான், அவளை சமாதானம் செய்வான்னு நினைச்சா… திரும்பவும் கம்பி நீட்டுற வேலையதான் செய்றான். இவனை அன்னைக்கே கைய காலை கட்டி இங்கேயே கட்டிப் போட்டுருக்கணும் என்று மனதோடு கடிந்து கொண்டு பல்லைக் கடித்தவன்,

“அவங்களுக்கு ஃபோன்ல விவரத்தை சொல்லிக்கலாம். இங்கேயே இருக்க சொல்லு மிது!” என்று மனைவியின் மூலமாக தயா உத்தரவிட,

“இல்லக்கா நான் போயிட்டு சீக்கிரமா வந்துடுறேன்” என்று தமக்கையிடம் பதில் அளித்துவிட்டு, வெந்நீரை கால்களில் ஊற்றிக் கொண்டவன் போல் புறப்பட்டு நிற்க,

“வந்த இத்தன நேரத்துல ஒரு வார்த்தை கூட, எங்ககிட்ட பேசத் தோணல… உன் கூடப்பொறந்தவங்க மட்டுந்தான் கண்ணுக்கு தெரியுறாங்களா மாப்ளே?” கோபத்துடன் நேரடியாக பேசியபடியே தயா முன்னே வர,

“ஆனந்தா! இன்னைக்கு விசேசம் நல்லபடியா முடியனும். அதுவரைக்கும் எதப் பத்தியும் பேசாதே! அவர் போக்குல விடு” மரகதம் தீர்க்கமாக கூறி மகனை கட்டுக்குள் வைக்க, யாரையும் பார்க்காமல் பாஸ்கர் கிளம்பி விட்டான்.

“இவன் இன்னமும் மாறலம்மா… எப்படி போனானோ அப்பிடியேதான் வந்திருக்கான். சரியான விளங்காவெட்டி” என்று காறித்துப்ப, மிதுனாவிற்கும் கோபத்துடன் கூடிய வருத்தம் மேலோங்கி விட்டது.  

“அவனை திட்றதுக்கு முன்னாடி, சிந்து என்ன செஞ்சானு நினைச்சு பாருங்க… ஒரு வேல அவ முகத்தை திருப்பிட்டு போகமா இருந்திருந்தா, என் தம்பியும் இங்கே தங்கியிருப்பானோ, என்னவோ…” என்ற மிதுனா, தனது மனவோட்டத்தை மறைக்காமல் கணவனிடம் சொல்ல,

“என்னமோ இவன் உருகிப் பார்த்த மாதிரியும், அவ முறைச்சிட்டு போன மாதிரியும் பேசுற… இவன் கூப்பிட்டு பேசுறதுக்கு என்ன? உன்கூட ஃபோன்ல பேசுன இத்தன நாள்ல பொண்டாட்டி கூட பேசி இருக்கானா? நீயாவது அவனுக்கு எடுத்துச் சொல்லி இருக்கியா?” அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை தயா, மனைவி மீது வைக்க, அவள் நிலைகுலைந்து போனாள்.

கணவனின் கேள்விக்கு என்னவென்று பதில் சொல்வாள்? ‘மனைவியுடன் பேசு… குழந்தையின் முகத்தை பார், உன் குடும்பத்திற்கு நீதான் பொறுப்பேற்க வேண்டும் என்று மிதுனா எத்தனையோ முறை சொல்லத்தானே செய்தாள்.  அதை அவள் தம்பி கேட்க வேண்டுமே!

நேரில் வரும்போது, அனைத்தையும் பேசி சரி செய்து கொள்கிறேன் என்று சொன்னவன், குழந்தையுடன் இருந்த சிந்துவின் புகைப்படத்தை மட்டும் தமக்கையிடம் அலைபேசியில் அனுப்பி வைக்குமாறு கேட்டு வாங்கி வைத்துக் கொண்டான்.

இந்த விஷயத்தை சொன்னால் இதற்கும் தயானந்தன் கடிந்து கொள்வான். அவனுடன் சேர்ந்து பெரியவர்களும் முகத்தை பார்க்க நினைப்பவனுக்கு, பேசத் தெரியவில்லையா என்று குறைபட்டும் கொள்வார். இதையெல்லாம் மனதில் நினைத்தே, மிதுனா சொல்லாமல் தவிர்க்க, அதை அறியாத தயா குத்திக் காண்பித்து விட்டான்.

மனைவி, தம்பியுடன் பேசுவதை, ஒரு முறையாவது நின்று கேட்டிருந்தால், இன்றைய கோபதாபத்திற்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். தனக்கும் அவனுக்கும் சம்மந்தம் இல்லாதவனைப் போல் தயா ஒதுங்கிக் கொண்டு, இப்பொழுது மனைவியின் மேல் பழியை ஏற்றி வைத்தான்.

“அவங்களுக்காக நீங்க ரெண்டு பேரும் தர்க்கம் பண்ணிட்டு இருக்க வேண்டாம், தம்பி! அம்மா சொன்ன மாதிரி விசேசம் முடியட்டும், பொறுமையா உட்கார வச்சு பேசுவோம்” என்று நர்மதா அமைதியாக எடுத்துச் சொல்ல,

“பொண்டாட்டிக்கு வளையல் அடுக்குறப்போ, மனசும் முகமும் பூரிச்சுப் இருக்கணும் ஆனந்தா… இன்னைக்கு நடக்கிற ஒவ்வொன்னையும் மனசுல பொக்கிசமா வச்சுக்கனும். இன்னைக்கு பூரா அவ முகம் வாடாம பார்த்துக்க வேண்டியது உன்னோட பொறுப்பு…” என்று கங்காவும் தன்மையாக கூறிய பிறகு, அனைவரும் அவரவர் வேலைகளைப் பார்க்க சென்றனர்.

இயந்திரகதியில் வேலைகள் நடந்து கொண்டிருக்க, தயா மனைவியிடம் பேச முயற்சிக்கவில்லை. என் தங்கைக்கு, இவனால் ஒரு விடிவுகாலம் கிடைத்து விடாதா?’ என்ற ஆதங்கமே அவன் மனம் முழுவதும் வியாபித்திருக்க, மனைவியின் மனநிலையை கவனத்தில் கொள்ளவில்லை.

வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே நடைபெறும் வைபவத்தில் மகிழ்ச்சி என்பது நிறைக்குடமாக தளும்ப வேண்டும் என்பதை மறந்து போனவன், பாஸ்கர் சென்றதற்கும், அவன் சிந்துவிடம் பேசாததற்கும் மிதுனாதான் காரணம் என்ற தப்பான அர்த்தத்துடன் குறைகுடமாக மனைவியின் மீது வெறுப்பை சிந்திக் கொண்டிருந்தான்.  

கணவனின் கோபப்பர்வை தன்மேல் படர ஆரம்பித்திருக்க, மிதுனாவிற்கு தம்பி வந்தது சந்தோஷத்தை கொடுக்காமல் அவஸ்தையை கொடுத்தது என்றால் மிகையில்லை.

சிறிது நாட்களாகத்தான் கோபதாபங்கள் மறைந்து உள்ளன்போடு உண்மையான புரிதலில் வாழ்க்கை தெளிவான நீரோடையாக தடையில்லாமல் பயணித்துக் கொண்டிருக்கிறது.

இந்த சமயத்தில் தன் தம்பி வந்து நின்றது மட்டுமில்லாமல், அவன் மனைவியிடம் பேசாமல், இந்த வீட்டை அன்னியமாக நினைத்து சென்றது மனதிற்குள் பெரும் வலியைக் உண்டு பண்ணியது.

இதற்கெல்லாம் தன்னையே குற்றவாளியாக்கி கணவன் தன்னை கடிந்து கொண்டது என அனைத்தும் சேர்ந்து மிதுனாவிற்கு பெருத்த மனத் தாங்கலை ஏற்படுத்தியது.    

சந்தோஷமாக புலர்ந்த வளைகாப்பு நாளில்தானா, கணவன் தன்னை முறைத்துக் கொண்டு நிற்க வேண்டும் என்ற ஆற்றாமையும் அலைமோத, தனது நிலையை நினைத்து வெகுவாக சோர்ந்து போனாள்.   

தன் தம்பி, தன்னுடன் பேசும் சமயங்களில் எல்லாம், கணவன் தன்னிடம் முறைத்துக் கொண்டும், அதன் பிறகு இருவரும் முட்டிக் கொண்டும் இருப்பது வாடிக்கையாகிப் போன ஒன்றுதானே!

இதனை தற்சமயம் நினைவு கூர்ந்தவள், இவர்கள் சேர்ந்து வாழும் வரை தங்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் சந்தேகம் தானோ என்ற உணர்வு ஆட்டிப் படைக்க, தவித்துப் போனாள்.

இவளின் மன உளைச்சலைக் கண்டு கொள்ள யாரும் இல்லாமல் போக, தன்னைப் பற்றிய வருத்தத்திலேயே பரிதவித்தவள், எளிமையான முறையில் தன்னை அலங்கரித்துக் கொண்டாள்.

கணவன், தன்னிடம் இரண்டு வார்த்தைகள், சகஜமாகப் பேசியிருந்தால் கூட மிதுனாவின் மனம் சமன் பட்டிருக்கும். ஆனால் அவனோ, பாஸ்கரின் மேலுள்ள கோபத்தில் மனைவியிடம் முறுக்கிக் கொண்டான்.    

அவரவர்க்கு அவர்களது எண்ணங்களே முக்கியம் என்பது போல், சிந்து கீழே எட்டிப் பார்க்கவில்லை. அவளிடம் பேசவேன மேலே சென்ற மூத்த சகோதரிகள் மிதுனா தயாரான பின்னரும் கீழே வரவில்லை.

சாந்தினி வந்து தங்கையை மேலோட்டமாக பார்த்து தன்னால் முடிந்த வரையில் மேலும் அழகு படுத்தும் போதுதான் மூன்று சகோதரிகளும் கீழே வந்தனர்.

சாந்தினியை அனைவரும் வரவேற்றுப் பேச, சிந்துவும் கடமைக்குப் பேசிச் சிரித்தாள். மறந்தும் மிதுனாவின் அருகில் சென்று, அவளை கவனிக்கவில்லை.

இன்றைய தினம் யாரிடமும் முகத்தை திருப்பிக் கொள்ளாதே என்ற மூத்த சகோதரிகளின் அறிவுரையை மனதில் கொண்டுதான் கீழே வந்தாள் சிந்து.

ஆனால் பாஸ்கர், தன் வீட்டாரிடம் பேசாமல் சென்றது, அவளுக்குத் தெரிய வந்திருக்க, அந்த அதிருப்தியை மிதுனாவிடம் காண்பித்து, அவளிடமிருந்து விலகி நின்றாள்.

நிறைமாத பெண்ணின் மன அழுத்தத்தோடு, கணவனின் நிராகரிப்பும் மனதைப் பந்தாட, தனது அத்தனை மனக் கசப்பையும் சிந்துவின் மேல் ஏற்றி வைத்திருந்தாள் மிதுனா.  

கீழே வந்தும், தன்னுடன் பேசாமல் நின்றவளைக் கண்டு கொண்டவள் பதிலுக்கு, தானும் சிந்துவுடன் பேசுவதை முற்றிலுமாக தவிர்த்தாள்.

அரைமணி நேரம் கழித்து, விருந்தினர் கூட்டம் வர ஆரம்பிக்க, அதே நேரத்தில் சாந்தினியின் கணவன் மனோகருடன், பாஸ்கர் வந்து சேர்ந்தான்.   

அவனைப் பார்த்ததும் குழந்தையை தூக்கிக் கொண்டு மீண்டும் மேலே சென்று விட்டாள் சிந்து. கணவனின் மேல் உண்டான வெறுப்பு அவளை யோசிக்காமல் அங்கிருந்து போகச் செய்திருந்தது.

மேலே சென்று, சிந்துவிடம் பேசிவிட்டு, அவளை கீழே அழைத்துக்  வாவென சாந்தினி, பாஸ்கரிடம் சொல்ல, அவன் சென்றானா? கணவனின் அழைப்பிற்கு சிந்து வந்தாளா? மனைவியின் மீதான கோபம் தயாவிற்கு தீர்ந்ததா? அடுத்த பதிவில் காண்போம்…    

  

 

 

 

  

 

 

  

 

 

 

    

   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!