cn3.2

cn3.2

நிலவு – 3(2)

தவிர்க்க முடியாத தளையில் மாட்டிக் கொண்ட, தனது நிலையை நினைத்து நொந்து போகவும் வழியில்லாமல், பெற்றவள் பேசிய வார்த்தைகள், மனதை வாள் கொண்டு அறுத்திட, அந்த நேரத்தில் ஊமையாகி நின்றாள் மிதுனா. இப்படி எல்லாம் அதிர்ச்சியில் உறைபவள் அல்ல அவள்.

மாமியாரின் பேச்சினை கேட்ட சிந்துவிற்கும் தணல் மேல் நிற்கும் நிலைதான். தனது அவசரபுத்தியினால் வந்த விளைவு, இன்னும் எத்தனை பேர் மனதை, வாழ்வை பதம் பார்க்கப் போகிறதோ என்ற தவிப்பில், நிறைமாத கர்ப்பிணிக்கும் சொல்லாத துக்கம் எல்லாம் ஒன்றாக சேர்ந்து நெஞ்சை அடைத்துக் கொண்டது.

மேலும் தனது மாமியார், அதுவும் இரண்டு பெண்களைப் பெற்றவர், தனது இக்கட்டான நிலை தெரிந்தும் தன்னை தட்டிக் கழிக்க நினைத்ததை அவரே சொல்லக் கேட்டு, சிந்துவால் தாள முடியாவில்லை.

“நான் அன்னைக்கே செத்துப் போயிருக்கணும் அண்ணி… சூதுவாது தெரியாம பழகிட்டு, நான் அனுபவிக்கிற தண்டனைய, இன்னும் எத்தன பேர் தலையில மாத்திவிடப் போறேனோ, தெரியல!” அடக்கப்பட்ட அழுகையில் கரைந்தவள், பேசியபடியே உள்ளே சென்று விட, அங்கே நடந்த பேச்சிற்கு சாட்சியாக, பாஸ்கர் மட்டுமே நின்றான்.

கழிவிரக்கத்தில் கரைந்த மனைவியை பார்த்தவனுக்கோ, இயல்பாய் அவள் மேல் இருக்கும் அன்பில், அவன் உள்ளம் உருகிவிட, இப்பொழுது மனைவியை சமாதானம் செய்ய உள்ளே செல்வதா, அல்லது தாய்க்கும் தமக்கைக்கும் நடுவில் நின்று நடப்பதை வேடிக்கைப் பார்ப்பதா என்றும் தெரியவில்லை.

ஆனால் இதெல்லாம் தான்ஒருவன் பொறுப்பாய் நின்று பொருளீட்டாததன் விளைவே என்று, அவனுக்கு இன்னமும் புரியவில்லை. அவனுக்கு வேண்டியதெல்லாம் மூன்று வேலை உணவு, சிரித்து பேசவும் ஆசையாய் வாழ்க்கையை அனுபவிக்கவும் தனக்கென்று ஒரு தலையாட்டும் பொம்மை.

அதுவரையில் தனக்கு கிடைத்ததே போதுமென்று அவன் இறுமாந்து, நிலையான வேலைக்கு முயற்சி செய்கிறேன் பேர்வழி என்று எல்லார் முன்னிலையிலும் கண்துடைப்பு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறான்.

திருமணமான நாள் முதற்கொண்டு தனது அதட்டலில் கரைந்திடும் மனைவியை எந்தநாளும், பாஸ்கர் சமாதானப் படுத்தியதில்லை. ஆனால், இன்று அவள் தனது வீட்டினரின் முன்பு, அழுகையுடன் நிராசையாகப் பேசிச் சென்ற வார்த்தைகளில், ஏதோ ஒரு ஆற்றாமை அவனுக்குள்ளும் வெளிப்பட செய்வதறியாது நின்றான்.

மஞ்சுளா கொட்டிய வார்த்தைகள், அங்கிருந்த ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் இறுக வைத்திருக்க, சற்று நேரம் கனத்த அமைதி அங்கே நிலவியது. யாரையும் கருத்தில் கொள்ளாமல் தனது பேச்சினை முடித்த மஞ்சுளா, உள்ளே சென்று விட்டார்.

“உங்க அக்கா சொல்றபடி மட்டுமே கேளுடா பாஸ்கர். மாமனார் வீட்டுல நல்ல மரியாதை கிடைக்கும்” உள்ளே செல்லும் போது, மகனையும் கொட்டு வைத்து பேச மறக்கவில்லை அவர்.

தன் இயல்பைத் தொலைத்தவளாய், மனதோடு மருகிக் கொண்டிருந்த மிதுனா, இனி பேசவும் கேட்கவும் இவர்களிடத்தில் எதுவுமில்லை என உணர்ந்தாளோ என்னவோ, நொடி நேரத்தில் தன்னை சமன் செய்துகொண்டு,

“பாஸ்கி, போய் சிந்துவ சமாதானம் பண்ணிட்டு வா… நான் வெளியே இருக்கேன்” அங்கே அமரவும் விரும்பாது, வாசல்படியை ஒட்டிய சிறிய திண்ணையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

அடிபட்ட புலியின் அமைதியாய், தம்பியோடு சென்று நாள் குறித்துக் கொண்டு வந்தவள், நேராக மேலே சென்று விட்டாள். அவளுக்கு தன்அறையில் சென்று, மனதை ஆசுவாசப்படுத்திக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது. தம்பியுடனும் பேசுவதை தவிர்த்திருந்தவள், வண்டியை விட்டு இறங்கியதும் அவனை விட்டு விலகி நடக்க,

“அக்கா… அம்மா பேசினது எனக்கும் பிடிக்கல, ஆனா வேற வழியில்ல, கேட்டுத்தான் ஆகணும். நீ மனசுல எதையும் வச்சுக்காத… எல்லாம் நல்லபடியா நடக்கும், அதெல்லாம் மாமாவும் நீயும் சேர்ந்து ஜமாய்ச்சுருவீங்க” என்றதோடு பேச்சினை நிறுத்திவிட்டான்.

சற்றே அசந்தாலும், தன் தலையில் பாரத்தை கட்டி வைத்து விடுவாளோ என்ற பயம் அவனுக்கு. அதனால்தான், முந்திக்கொண்டு, நல்லவிதமாய் பேசி பொறுப்புகளை, தன்பங்கிற்கு ஏற்றி வைத்து விட்டான்.

‘கவலைப்படாதே! உனக்கு, நான் இருக்கிறேன். உன் பொறுப்புக்களை என் தோள்களில் ஏற்று, அனைத்தையும் சரி செய்கிறேன்’ என்று சொல்வான் தன் உடன்பிறந்தவன், என்ற நடக்காத ஆசையில் அவன் பேச்சைக் கேட்க தேங்கி நின்றவளுக்கு, அத்தனை குரோதமும் துவேசமும் தோன்றிட, அதனை எல்லாம் தன் முகத்தினில் காட்டியவாறே முறைத்துக் கொண்டே, நிமிர்வுடன் மாடிப் படியேறினாள்.

வெயிலில் அலைந்து வந்த மருமகளுக்கு மோர் கொடுத்து இளைப்பாறச் செய்த மரகதம், சென்ற காரியத்தைப் பற்றி கேட்கும் விதமாய் மிதுனாவின் முகம் பார்க்க,

“இன்னையில இருந்து பத்து நாள் கழிச்சு வர்ற முகூர்த்த நாள்ல, காலையில நேரம் நல்லாயிருக்காம் அத்த… அதுக்கு அடுத்து செய்யலாம்ன்னா நாள், ரொம்ப தள்ளிப் போயிடுது.  அதான் அன்னைக்கே சரின்னு சொல்லிட்டு வந்துட்டேன். இனி என்னென்ன செய்யணும்னு லிஸ்ட் போட்டு வைங்கத்த… வேலைய ஆரம்பிச்சுரலாம்” என்றவள் சொல்லி கொண்டிருக்கும் போதே, மதிய உணவிற்கென தயானந்தன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான்.

“போயிட்டு வந்த விவரத்த தம்பிக்கிட்ட சொல்லிடும்மா…” என்ற மரகதம், மகனுக்காக உணவை எடுத்து வைக்கவேன நகர்ந்து விட,

“உடனே போயிட்டு வந்திட்டியா மிது?” கேட்டபடியே, தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு, அவளருகில் அமர்ந்தான்.

நாள் குறித்த விவரத்தை சுவாரசியம் இல்லாமல் உணர்ச்சியற்ற முகத்துடன், கணவனிடம் சொல்லிக் கொண்டிருக்க, அவளை உற்றுப் பார்த்த தயானந்தன்,

“என்ன ஆச்சு மிது? வெயில்ல போயிட்டு வந்தது ஒத்துக்கலயா?” என்றவாறே அவள் தலையை பிடித்து விடவென்று அவளிடம் நெருங்கி அமர, மனைவியும் அதற்கே காத்திருந்தவள் போல் கணவனின் தோள்களில் சாய்ந்து விட்டாள்.

“ஏய் மித்துக்குட்டி… என்னடி ஆச்சு? எப்பவும் இப்படியெல்லாம் நீயா வர மாட்டியே? அம்மா சாப்பாடு எடுத்துட்டு வர்ற நேரம்டி… எதுவா இருந்தாலும் சாப்பிட்டு முடிச்சிட்டு பேசலாம். கொஞ்சம் மொகத்த நல்லா வச்சுக்கோ” அவளை விலக்கிவிடும் பொழுதே, அவளது கண்களின் பளபளப்பை, கணவனுக்கு காட்டாமல், முகத்தை திருப்பிக் கொண்டாள்.

இத்தனை நேரம் இறுகிய கல்லாய் தன்னை சமன் செய்து கொண்டவளுக்கு, கணவனிடத்தில் அப்படி நடந்து கொள்ள முடியவில்லை. ஆறுதல் தேடி அலைந்த மனது, ஆதரவாளனைக் கண்டதும் தானாக தோள் சாய சொல்லியது.

ஏதோ சரியில்லை என்று தயானந்தனுக்கும் தோன்ற, அதைக் கேட்கும் நேரம் இதுவல்லவென்று அமைதி காத்தான். மரகதம் உணவை தயார் செய்திருக்க,

“ரெண்டு பேரும் சேர்ந்தே சாப்பிட்டு முடிங்கப்பா… எனக்கு கொஞ்சம் கைவேலை இருக்கு, முடிச்சிட்டு வர்றேன்” என்று அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு நகன்று விட்டார்.

இப்படியான வேலைகளை எல்லாம், தான்வீட்டில் இருக்கும் நாட்களில், நானே செய்கிறேன் என்று அடம் பிடித்து வேலைகளை தன்மேல், மிதுனா போட்டுக் கொள்வாள்.

இன்று அந்த பேச்சும் அவளிடம் காணாமல் போயிருந்ததை தயாவும் கவனித்து விட்டான். அமைதியாக இருவரும் பேசாமல் உணவை முடித்த பிறகே, தயா பேச்சை ஆரம்பித்தான்.

“நல்ல பிள்ளையா, சொன்ன வேலைய கரெக்டா செஞ்சுட்டு வந்திருக்க, திரும்ப எதுக்கு உன் மொகம் வாட்டமா இருக்கு… எனக்கு தெரிஞ்சு யார் எது சொன்னாலும், அலட்சியமா தூக்கி போட்டுட்டு. உன் வேலைய பாக்குற ஆள் நீ! உன்னையே கலங்க வச்சுருக்காங்கன்னா, என்னவோ பெருசா நடந்திருக்கு. என்ன விஷயம் மிது?” என்றவன், அவள் முகத்தை உயர்த்திக் கேட்க, பதில் அளிக்காமல் தலை குனிந்தபடியே அமைதி காத்தாள் அவனின் மனைவி.

“கால் வலிக்குதா? கை வலிக்குதா? தைலம் தேச்சுவிடவா?” நொடியில் அவன் சேவகனாய் மாறி, அவள் கைகளுக்கு சொடுக்கு எடுத்து விட, அவனிடமிருந்து கைகளை உதறிக் கொண்டாள்.

“இப்படி பண்ணா, நெஜமாவே கோபம் வரும்டி, அப்புறம் தயா, பேயா மாறி உன்னை துவம்சம் பண்ணிடுவான். என்  சக்கரகட்டியில்ல… மாமனுக்கு கோபத்த வரவைக்காம, பேசுவியாம். இல்லன்னா, இப்போ நீ கடிச்சிட்டு இருக்குற உதட்டை, நான் கடிக்க வேண்டி வரும்” என்றவன், மனைவி தன்உணர்வுகளை கட்டுபடுத்த கடித்துக் கொண்டிருக்கும், அவள் அதரங்களை பிரித்து விட்டான்.

“என்ன தைரியம் இருந்தா, என் ப்ராபர்ட்டிய கடிச்சு வப்ப…” என்றவாறே அவள் உதடுகளை முன்னிழுத்து முத்தமிட,

“என்ன விளையாட்டு இது? அத்தை இருக்காங்க… அக்கம் பக்கம் பாக்கவே மாட்டீங்களா தயா?” என்றவள், அவனை வம்படியாக தள்ளி விட்டு, அவளும் விலகி அமர்ந்து கொண்டாள்.

‘உன்னை விட்டேனா பார்’ என்ற ரீதியில் இவனும் அவள் அருகில் நகர்ந்து அமர்ந்து, அவள் மடியில் தலை சாய்த்தவாறே,

“இப்போ ஒழுங்கா விவரம் சொல்லல்லன்னா, நீ மாட்னி ஷோக்குதான் ஆசபடுறன்னு, தப்பா கணிச்சு, கதவ சாத்திருவேன். யார் என்ன நினைச்சாலும் கவலயில்ல” எப்படி பேசினால், தன் மனைவி இயல்பு நிலைக்கு வருவாள் என்பதை தெரிந்திருந்தவன், சீண்டலுடன் அவள் இடையுடன் கைகளை உறவாட விட,

“நெனப்பு போகுது பாரு, இந்த ஆசாமிக்கு… இன்னைக்கு என்ன கெஞ்சினாலும் உனக்கு தடாதான்டா, தயாபையா! இங்கே ஒருத்தி கவலையில இருக்கேன்னு சமாதானம் பண்ணத் தெரியல… மாட்னி ஷோக்கு பிளான் பண்றாரு…” கடிந்து கொண்டவள்,

கணவனை வீம்பாக தன் மடியில் இருந்து விலக்கி வைக்க, எழுந்தவன், அவனது மடியில் மனைவியின் தலையை சாய்த்து, அவள் எழ முடியாதவாறு தன் கைகளால், மனைவியின் கைகளோடு இடையையும் இறுக்கமாக பிடித்துக் கொண்டு விலங்கிட்டான்.

“விடுங்க தயா, பிளீஸ்…” முகம் சுருக்கி இவள் சொல்ல,

“நீயும் என்ன விசயம்னு சொல்லேன், பிளீஸ்!” மனைவியைப் போலவே கணவனும் கெஞ்ச,

“ஒன்னுமில்ல, வெளிய போயிட்டு வந்த அசதி”

“அதுக்கு ஏன் மொகமும், பார்வையும் டோட்டலா சேஞ்ச் ஆகியிருக்கு. அலட்டலா ஒரு பார்வை பாப்பியே அப்டி உன் மாமன பாரு, இப்போ” மேலும் அவன் சீண்டலுடன் பேச,

“என் மொகக்த படிச்சு பாக்கிறவருக்கு, என் மனசுல இருக்குறது என்னன்னு சொல்லாம தெரியனுமே, எதுக்கு என்னை கேக்குறீங்க?”

“நான் கொஞ்சம் மந்தமான ஆளுடி… நானா கண்டுபிடிக்க லேட் ஆகும். அதுவரைக்கும் உன்னோட இந்த மொகத்த சகிச்சுக்க எனக்கு தைரியம் இல்லடி மித்துக்குட்டி. எனக்கும் பயம் வரும்ல… மேடம் மனசுல என்ன இருக்குனு சொல்லிடுங்க சூப்பர்வைசர்”

“என்னை நல்லா புரிஞ்சு வைச்சுருக்கீங்க தயா… ஆனா நான் அப்படியில்லையோன்னு தோணுது. இப்போ நான் சொல்ற விஷயம் உங்களுக்கு கோபம் வரலாம். அது எம்மேல கூட திரும்பலாம். அத நினைச்சாதான் எனக்கு பயமா இருக்கு தயா… எங்கே நீங்க என்னை விட்டு விலகிடுவீங்களோன்னு நான் பயப்படுறேன்” இறங்கிய குரலில் மெதுவாகப் பேசினாள் மிதுனா.

“என் சக்கரகட்டிக்கு பயமா? அடிச்சாலும் புடிச்சாலும் உனக்கு நான்தான், எனக்கு நீதான்… இத எனக்கு, சொன்னதே நீதானே. அதுல இந்த ஜென்மத்துல, எந்த மாற்றமும் இல்ல… அடுத்த ஜென்மத்துல வேணும்னா வேற டிராக் ட்ரை பண்ணி பாக்குறேன்” என்று சீண்டலைத் தொடர்ந்திட,

“படவா! உனக்கு நானே அதிகம். இதுல, வேற ரூட் போவியா? அதுவும் அடுத்த ஜென்மத்துல…” பொய்க் கோபத்துடன் வெகுண்டு பேசியவள், அவன் தலைமுடியை பிடித்து ஆட்டி வைக்க,

“போதும் விடுடி, இம்சராணி! என் முடியெல்லாம் உன் கைக்கு வரபோகுது. வழுக்கை தலையோட இருந்தா எந்த பொண்ணும் திரும்பிப் பாக்காதுடி” இவனும் பொய்யாய் அலற,

“எனக்கு அதுதான் வேணும் நல்லா அனுபவிடா… ஃபிகர் கேக்குதா உனக்கு” பல்லைக் கடித்தபடியே தன் செயலை தொடர்ந்தாள்.

“அய்யோ, அம்மா!” என தயா சற்றே பெரிய குரலில் சொன்னதும், கணவனின் கையணைப்பையும் மீறி எழுந்து அமர்ந்திருந்தவள்,

“அத்த இருக்குறத எப்படி மறந்தேன்? ச்சே… கொஞ்ச நேரத்துல எல்லாத்தையும் மறக்க வைக்கிறீங்க” என்றே தளர்ந்து பேசி, பொய் முறைப்புடன் கணவனைப் பார்த்தாள்.

“சும்மா சொன்னேன் மிது… இவ்வளவு பதட்டம் உனக்கு செட் ஆகல. அம்மா உள்ளே வர இன்னும் அரைமணிநேரம் ஆகும். அதுக்குள்ள உன்னோட மனசுல என்ன கொடையுதுன்னு சொல்லுவியாம்” என ஒரு வழியாக அவளது மனதில் இருப்பதை வெளியே கொட்ட வைத்தான்.

பிறந்த வீட்டின் மீது ஏக கடுப்பில் இருந்தவள், அனைத்தையும் ஒப்பித்து விட்டு, மிட்டாய் திருடிய குழந்தை அகப்பட்டு முழிப்பதை போல் தலை குனிந்து அமர்ந்திருந்தாள்.

மனைவியின் மன உளைச்சல்களை அறிந்து கொண்டவன், பெருமூச்சு விட்டவாறு,

“அவங்க ஆசைய தடை சொல்றதுக்கு நாம யாரு மிது? ஒத்த பிள்ளையோட வாழ்க்கைய, கௌரவமா அடுத்தவங்க முன்னாடி காமிக்க நெனைக்குறாங்க… அது வாஸ்தவம்தானே?” என்றவனின் அமைதியான பேச்சில், அலைபுற்றிருந்த மிதுனாவின் மனம், கணவன் என்ன சொல்ல வருகிறான் என்று புரியாமல், அவனை ஆவலுடன் நோக்கியது.

“மாமியாரா அவங்க பேசினது சரின்னா, ஒரு அம்மாவா உன்னை பேசினது எந்த வகையிலயும், சரின்னு ஒத்துக்க முடியாது. நீயும் பதில் பேசாம, அங்கே உக்கார பிடிக்கமா வெளியே வந்திருக்கக் கூடாது.

உன்னோட வீடு அது, உனக்கு சொந்தமான இடம். நமக்கு உரிமையான இடத்துல, நீ மனசு வருத்தபட்டு நின்னதுக்கு, அவங்க, எனக்கு பதில் சொல்லியே ஆகணும் மிது” பார்வையிலும் வார்த்தையிலும் கோபத்தை ஏற்றிக் கொண்டவன், பேசிய குரலே அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுப்பான் என்று சொல்லியது.

“என்ன சொல்றீங்க தயா? அமைதியா பேசிட்டு இப்டி கோபப்பட்டா எப்படி?” கணவனின் கோபத்தை அறிந்தவள்தான், ஆனால், அது இருவருக்குமிடையே நடக்கும் தர்க்கத்திற்காக மட்டுமே, இதுவரையில் பார்த்திருக்கிறாள்.

ஆனால் இப்பொழுது தனது தாயின் பேச்சில் கோபம் கொண்டவன், என்ன மாதிரியான காரியத்தில் இறங்கப் போகிறானோ என்ற அவஸ்தையில் அவனைப் பார்க்க,

“அவங்க பொறுப்பை எப்படி தட்டிக் கழிக்கலாம் மிது? அங்கே உன்னோட வருமானம் மட்டுமே இருந்தாலும், இவங்கதானே எல்லாத்தையும் நேர்செஞ்சு பொண்ணுக்கு செய்ய வேண்டியத செய்யனும்.”

“அதுக்கு இப்போ என்ன பண்ணப் போறீங்க தயா? என்னையும் சீர்வரிச கொண்டுவான்னு அனுப்பிவிடப் போறீங்களா?” அவசரப்பட்டு இவளும் வார்த்தையை விட,

“எந்த நாளும், நான் எதையும் எதிர்பார்த்து உன்னை ஏத்துக்கல… அதுக்காக உன்னை யார் என்ன சொன்னாலும் பார்த்துட்டு சும்மா போறவனும் நான் கிடையாது” என்று அழுத்தமாக உரைக்க, மிதுனா மனதளவில் நிம்மதி அடைந்தாள்.

“என்ன சொன்னாலும் விளங்காம இருக்குறவங்ககிட்ட பேசி எந்த பிரயோஜனமும் இல்ல தயா… உங்க கோபத்த காமிக்கிற அளவுக்கு, இவங்க தகுதியானவங்க கிடையாது. அடிச்சு சொன்னாதான் புரியுங்கிற நிலையில வந்து நிக்கிறவங்களுக்கு, அப்பிடியே புரிய வைக்க போறேன். நீங்க இதுல தலையிடாதீங்கப்பா…” தனது பேச்சில் சகஜத்தை கொண்டு வந்து கணவனை சமாதானப் படுத்திட,

“எப்டி? இப்போ அழுமூஞ்சியாட்டம் வந்துருக்கியே, அந்த மாதிரி கவனிச்சிட்டு வரப்போறியா?” விலகாத கோபத்தில் தயாவும் பேச,

“அந்த நேரத்துல எனக்கு வந்த அதிர்ச்சியில சும்மா வந்துட்டேன் தயா… இனி இப்படி இருக்க மாட்டேன். அந்த வீட்டுப் பொண்ணா, எனக்கு எது நடந்தாலும் தாங்கிக்கிற பக்குவம் எனக்கு இருக்கு. ஆனா, எனக்காக நீங்க பேசப்போய், உங்களுக்கு ஒரு தலைகுனிவு வந்தா, என்னால தாங்கிக்க முடியாது. இந்த பேச்சை என்கிட்ட விட்டுட்டு, ஆக வேண்டிய வேலையப் பாருங்க தயா…” தனது நிலையை தெளிவாய் உரைத்து, கணவனிடம் அடுத்த கட்ட வேலைகளை கையில் எடுக்கச் சொன்னாள்.

“என்னத்த பாக்க சொல்ற? லிஸ்ட்ட பார்த்தா பெரிய தொகை தேவப்படும் போலயே? மொத பணத்துக்கு ஏற்பாடு பண்றேன். இன்னைக்கு அம்மாகூட உக்காந்து பட்ஜெட் போட்டுவை மிது.” என்றவன், பெருமூச்சு விட்டபடியே கண்ணயர்ந்து விட்டான்.

அனைவரின் மனத் தாங்கல்களையும், குழப்பங்களையும் தாங்கி நின்ற வளைகாப்பு வைபவத்தை, பலயோசனைகள் செய்து, இருக்கின்ற பணத்தையெல்லாம் ஒன்று சேர்த்து சிறப்பாக நடத்திட தயாரானான் தயானந்தன்.

 

 

 

error: Content is protected !!