13. Saabam

Omahazeeya

Well-known member
#1
காலை கண் விழித்த போதே ஷ்ரவன் அங்கு அவர் பக்கம் இல்லை. அறையெங்கும் அன்று புதிதாய் கதிரவன் ஜனித்த கதிர்களின் ஆரவாரத்தில் ஒளிர, மறுபக்கம் பிரண்டு அதற்கு அப்பால் இருந்த அலைபேசியை எடுக்க கைநீட்டிய நேரம் படுக்கையில் இருந்த வெறுமை சில்லென கைப்பட்டு விரும்பத்தகாமல் குறுகுறுத்தது. போனின் பொத்தானை அழுத்தி பார்த்த போது மணி ஏழரை.

நிவேதாவையும், அத்தையையும் பார்த்து வந்திருந்த ஒரு வாரமும், வாரநாட்களில் ஒரேடியாய் வேலை வந்தவண்ணம் இருவரையும் அலைக்கழித்தது. வேலையாய் இருந்த போதிலும் வாரத்தில் இரண்டு நாட்கள் அத்தைத் தானாக அழைத்து, மனமாற பேசியதும் ஷ்ரவனுக்கு ஏகமகிழ்ச்சி.

எழுதி முடித்தக் கதையை திரையிலிட இரண்டு வாரங்கள் இருந்த போதிலும் ஏனோ வேலை மலையென ஓங்கி இருந்து வாட்டியது. ஷ்ரவனும் customer support, அது இது என்று ரொம்பவே மும்முரமாக வேலையாகவே இருந்தார். வாரநாட்களில் பெரிதாய் ஒன்றும் இல்லாது உலக வாழ்க்கைக்குரியதாய் காலை கண் விழிப்பதிலிருந்து, இரவு அன்றைக்கான ஓட்டம் திகட்டி தூக்கத்திடம் சரணடைந்து விடுவதுமாய் இருந்தோம்.

ஓட்டமாய் ஓடிய நாட்களின் ஆறுதல் எல்லாம் எல்லா இரவுகளிலும் பாழாய்ப்போன insomnia ஏதும் இல்லாமல் ஷ்ரவன் நிம்மதியாய் உறங்கிப்போனதே. வேலையின் அசதியினாலோ என்னவோ, காரணங்களின்றி நிம்மதியளித்தது அது மட்டுமே.

வாரத்தின் எந்நாளும் மாலை ஐந்துக்கு முன்பாய் வீடு திரும்பமுடியவில்லை. செய்து முடிக்கவென வீட்டிலும் வேலைகள் பல இருந்தன. ஒன்றும் செய்ய இயலாது, மாலை வீடு திரும்பியதும் உடலில் இருந்து உள்ளம் வரை அசதியாய் படுத்தியெடுத்தது.

நேற்று வெள்ளி இரவும் நான் வீடு திரும்பி சில மணி நேரம் கழித்தே ஷ்ரவன் வந்திருந்தார். வாரத்தின் எல்லா நாட்களிலும் தனியே அமர்ந்து உணவை திணித்து உறங்கிய இருவரும் அன்றே ஒன்றாயமர்ந்து சாப்பிட முடிந்ததும், அதுவே மிகப்பெரிய நிம்மதியும் தந்தது.

செறிந்தப் புதரென எங்கும் படர்ந்திருந்த முடிக்கற்றையதை வாரி, தூக்கிச் சுருட்டி முடியிட்ட பின் எழுந்து பார்த்ததில் தெரிந்தது ஷ்ரவன் கூடத்தில் அமர்ந்து மடியில் லேப்டாப்பும், கையில் போனுமாய் அலுவல் வேலையில் ஈடுபட்டிருந்தது. அதுவும் காலை ஏழரைக்கெல்லாம். இரவுகளில் எல்லாம் சரியாய் உறங்கியிருந்தால் காலைகளில் விடியும் முன்பே எழுந்து விடுவது ஷ்ரவன் பழக்கம்.

அலைபேசியில் அதி கூர்மையான முக பாவங்களோடு எதோ பேசியிருந்தவரை இம்சிக்காது நான் என்பாட்டில் குளியறையில் புகுந்து பல் தேய்த்து, பின் வெளியே வந்த நேரம் பார்த்தால் அப்போதும் அதே கை, அலைபேசியோடு காதினில் ஒத்தியபடி. அருகாமையில் காலி கோப்பையேதும் இல்லாதது காபி அருந்தாததைக் காட்டவும், மறு நிமிடம் கிச்சனுக்குள் நுழைந்து காலை காபிக்கான ஏற்பாடினைச் செய்தேன்.

காபியோடு அந்த லெதர் இருக்கையில் வந்தமர்ந்த நேரமும் தன் நெற்றிச் சுருங்க எதோ கவலை அழுத்தமே சகலமாய் முகத்தில் பிணைந்தவாறு லேப்டாப்பில் தோன்றிய எதையோ படித்து கொண்டிருந்தார். கொண்ட ஒருக்கத்தின் செறிவாய் displayவில் தென்பட்ட எழுத்துக்களுக்கு தக்கவாறு அந்தக் கருவிழிகள் நகர சற்று நேரம் ஏதும் பேசாமல், கையில் கொண்டிருந்த உயிர்நீர் மறந்து பார்த்திருந்ததை அவர் கண்டு கொண்டதும் அவ்வாறே சிறுக்கமாகியிருந்த புருவங்களிரண்டும் நேராகி பின் உயர்ந்தவாறு என்னை என்ன என கேட்டவரின் பார்வை வியப்பா, காதலா என்று முடிவெடுக்கயியலாத வண்ணம் இருந்தது.

"எதுக்கு அப்படி பாக்கற?" என் மேலிருந்த பார்வை நான் பார்த்ததை கண்டதும் லேப்டாப்பின் மீதே திரும்பியிருந்தது. அவர் கேட்டதும் பிடிவாதமாய் வந்திருந்த புன்னகையை உதட்டினோடு பொத்தியபடி
கையில் இருந்ததுள் ஒரு கோப்பையை அவர் கையில் திணித்தவாறு, சற்று ஓய்ந்து போய் பின் சாய்ந்து கொண்டேன்.

என் காபியை அருந்தியவாறும், கண்கள் கோப்பையினுள் புதைந்த படியும் பார்வை அவர் கண்களில்லாது வேறொன்றில் இருக்க லேசாய் முணுமுணுத்தேன். "வேலை பாக்கறப்ப disturb தானே பண்ணக்கூடாது? பாக்க கூட கூடாதா?"

என் அலுப்பை கேட்டுச் சிறிதாய், மெலிதான சத்தத்தோடு சிரித்தவாறு தன் காபியிலிருந்து ஒரு வாய் அருந்தி பின், "ஒண்ணும் பேசாம, வெறுமன உக்காந்திருக்கியேன்னு கேட்டேன்," என்றவாறு ஓரக்கண்ணால் வாஞ்சையுடன் நோட்டமிட்டார்.

கண்ணைச் சுருக்கி அவர் முகத்தை பார்த்து, கைகளை விரித்து, "நீங்க தான் உங்க லேப்டாப்ப கொஞ்சறீங்களே.. நான் என்ன பேசறது?" என்று பாவமாய் கூறியதும், முன் போலவே, அதிகாலை வான் தாங்கிக் கொண்டாடும் கதிரவனைப் போல் மிக மென்மையாய் ஒரு சிரிப்பு.

"சரி, அப்போ உன்ன கொஞ்சவா? சொல்லு.." உடனே தன் மடியில் இருந்த லேப்டாப்பை தன்னருகில் வைத்து, என் பக்கம் திரும்பியவர் என் வயிற்றின் மேலிருந்த கையைப் பற்றி கண் சிமிட்டினார்.

முகமேறியிருந்தச் சூட்டை அவர் அறிய வாய்ப்பில்லை என்ற போதும், உதடேறி அமர்ந்திருந்த புன்னகையை திரையிட முடியதல்லவா? பதிலிற்காக என்னையே பார்த்திருந்தவர் கண்களும் விஷமமாய் மின்னிட, சிரிப்போடு மெல்லமாய் தொடையை தட்டினேன். "கொஞ்ச நேரம் உங்க தோள்ல சாஞ்சுக்கறேன், இம்சையா இருக்காதுன்னா.." என்றவாறு கடைசி துளி காபியை அருந்தி பின், அவரை ஏறிட்டேன்.

தன் காபியையும் கையோடே அருந்தி முடித்தவர், என்னருகில் நகர்ந்தமர்ந்து பின் உதடுகள் இதமாய் சுவாசத்தின் சூட்டோடு என் நெற்றியில் பதிந்திட, மேலேதும் வேண்டமுடியாதவாறு தன் திண்தோள் மீது சாய்த்து கொண்டார், தன் பெரிய கையினால் என் முகம் கூப்பி. தோள் சாய்ந்து கொண்டதில் திடுமென மனதிற்கு முளைத்த இறக்கைகளை மறைக்க முடியாத படி முகமெங்கும் புன்னகையாய் பூத்திருக்க, நாசி தொட்ட, என் மனதினால் பரிச்சயமான அவரது வாசனைத் தரும் போதையுமாய், அங்கு அப்போது பேச்சிற்கு அவசியமில்லாதிருந்தது.

சரிந்திருந்த சிகையை அவ்வப்போது அப்பெரிய கைகொண்ட உறுதியான விரல்கள் மௌனமாய் அளந்த போதிலும், கூர்மையான வினையியலான பார்வையாய் லேப்டாப்பையே பார்த்திருந்தார். ஏதும் பேசாமலே கழிந்திருந்த நேரமெல்லாம், மற்றொரு கையை வயிற்றின்மேல் பதிந்திருந்தது. ஏனோ, இன்னும் இரண்டு வாரங்களில் டாக்டரை பார்க்கச் செல்ல வேண்டியிருக்கும் என்று மனதில் தோன்றிய நேரம், நெஞ்சை பிசைந்தது.

இந்த முறை செல்லும்போது என்ன சொல்வாரோ என்று எண்ணும்போதே கண்ணீர் முட்டிய காலம் மாறி, இப்போது நெஞ்சு படபடப்போடு நின்றது. தேவையின்றி மண் துளையிடும் செடியாய் அழுத்தமாய், ஆழமாய், யோசனைகள் பிறக்க ஆரம்பிக்க, மனதை திசைத்திருப்ப வாய் திறந்து பேசுவதன்றி வேறொரு விடையை நானறியேன்.

"ஏன்பா?" என்றேன் அவர் கைமேல் சாய்த்திருந்த கன்னத்தை லேசாய் திருப்பி, அவர் பார்த்திருந்த லேப்டாப்பையே பார்த்து.

நான் செயலற்று சாய்ந்து, யோசனையில் மூழ்கி வேண்டாத எண்ணங்கள் மூளை தட்டும் நேரமெல்லாம் அதனை கண்டுகொண்டவராய் தானே பேச்சைத் தொடங்கி, திசைத்திருப்பும் இலாவகமெல்லாம் அவருக்குண்டு. இன்று, ஏனோ வேலையில் மும்முரமாய் இருந்ததால் அதனை கவனியாமல் விட்டிருந்தார். ஆயினும், அழைத்த நொடி பதில் கிடைத்தது.
"சொல்லுப்பா?"

முகமோ அவர் தோள் தந்த இதமதில் புதைந்திருந்தாலும், தலையை கொஞ்சமாய் நிமிர்த்தி அவர் முகம் காண கேட்டேன். "என்ன பிரச்சனை? ஏன் வேலையா இருக்கீங்க?"

அப்போதும், displayவை உற்று நோக்கிய அப்பார்வை மாறாது பதில் தந்தார். "Tokyoல நடக்க வேண்டிய ஒரு textile fairக்கு கொஞ்சம் shipment அனுப்ச்சானுங்கல்ல?"

"எது? மூன்றரை டன் shipmentஆ?" என்றேன் நினைவு கூர்ந்த படியாய். இரண்டு தினங்களுக்கு முன், முழுவதுமாய் மூன்றரை டன் அனுப்பியாக வேண்டியதின் paymentஐ நல்லபடியாய் ஒப்பந்தம் பேசி முடித்து விட்டதாய், தலைவர் உவப்பாய் சொன்னது நினைவில் இனித்தது.

"அதே தான். அனுப்ச்சவன் இன்னிக்கு வந்து சொல்றான் நாளைக்குள்ள டெலிவரி ரெடி பண்ணு, நாளை கழிச்சு ஒரு நாள்ல fair ஆரம்பிக்குதுன்னு.." பெருமூச்சொன்றை மிகுதியான அசதியாய் விட்ட படி, பேசினார்.
கூறியதில் ஒன்றும் விளங்காது, முகம் சுருங்கக் கேட்டேன், "ஏன் நாளைக்குள்ள டெலிவர் ஆகாதா?"

"நாளைக்கு Japanல national holiday!" மீண்டுமொரு பெருமூச்சு.

"அச்சச்சோ.. இப்போ என்ன பண்ணுவீங்க?"

"Shipment Tokyo போயாச்சு. Custom clearance முடிக்க ஒரு நாளாகும்.. இப்படி இருக்கறவன் முன்னாலேயே அனுப்பியிருந்தா பிரச்சனை இல்ல. இப்ப வந்து கத்தினா, மாட்டியிருக்கறத என்ன பண்ண முடியும்.. இன்னிக்கே அவனே tokyo headofficeல வந்து எடுத்துக்கறேன்னு சொல்ல customer serviceக்கு போன் அடிச்சிருக்கான்..." பேசியிருந்த குரலில் கவலைக்கான செறிவு அதிகமாவதை உணர்ந்து, தன்போல் இருந்த அவரது உள்ளங்கையை என்கையினால் பற்றி, மெதுவாய் வருடிய படியே மீதிக் கதை கேட்டேன்.

"அவனுங்க யாரும் ஆபீஸ்ல இல்லாத, போன் எடுக்கல. எனக்கு திருப்பி அடிச்சு, worst customer serviceநு காரி துப்பறான்." என்று அலுப்பாய் சொன்னவரிடம் ஆறுதலாய் தலை அசைத்து, "அதுக்கு நீங்க என்ன பண்ண முடியும். சீக்கிரம் டெலிவரி வேணும்னா அதெல்லாம் பார்த்து, அவங்க தானே முன்னாடி குடுக்கணும்?" என்றேன்.

ஒப்புதலாய் தலையை மட்டும் அசைத்து, "நாங்க guarantee குடுக்கறது three daysல டெலிவரி, weekends, holidays இல்லாம தான். இவனுங்க christmas, new yearநா வேலை பாக்கறானுங்களா.. ஜப்பான்காரனுக்கெல்லாம் பண்டிகை வராதா என்ன? உலகத்துக்கெல்லாம் ஒரு வழின்னா இவனுக்கொண்டி ஒரு நியாயமாம்.." உதட்டில் சிறு வளைவோடே அவர் கூறி முடிக்க, லேசாய் அதற்கு ஈடாய் புன்னகைத்து வைத்தேன்.
 

Omahazeeya

Well-known member
#2
கீபோர்டை தட்டாது என் மடிமேல் ஓய்ந்திருந்த கை விரல்களின் விரிவாய் வளர்ந்திருந்த நகங்கள் கண்ணை உறுத்தின. "கைய்யப் பாரு!" என்று வேகமாய் அதட்டியபடி புறங்கை அறைந்த என் கையினை பார்த்து பின் நான் எழுந்து அறையினுள் சென்ற நேரம், காதில் விழும்படியாய் இரைந்து கேட்டார். "எதுக்கு இந்த அடி?"

உள் அறையில் இருந்து திரும்பிய விநாடி, என் விரல்கள் குவிந்து பற்றியிருந்த நகவெட்டியை கண்டு தெளிந்திருப்பார் காரணத்தை. அதனை கண்டும் ஒன்றும் புரியாமல் விழித்தவர் அருகில் அமர்ந்து முறைத்து, "கைய்ய நீட்டுங்க, ஷ்ரவன்," என்றேன் கண்டிப்பாக.

புருவ மத்திச் சுருங்க, கண்டிப்பாய் சொன்னதில் என்ன வேடிக்கையை பார்த்தாரோ, கண்களில் குறும்பு பளிச்சிட சிறுசுரத்தில் சிரித்தார். "ஏய், என்னது இது?"

"கைய நீட்டுங்கன்னு சொல்றேன் இல்ல?"

"இப்ப முடியாது.. வேலையா இருக்கேனே.." என்றவாறு லேப்டாப்பை நோக்கி, கையை இழுத்தவரை விடாப்பிடியாய் இழுக்க முயன்றேன், "கண்ணுக்கு தானே பாக்கற வேலை, ஒன்னும் டைப் அடிக்காம சும்மா தானே இருக்கு கை, நீட்டுங்க!"

"ஶ்ரீ, இதுக்கு மேல வெட்டணும்னா விரல தான் வெட்டிகணும்.." என்றார் கைகளை காண்பித்து. பெரியதாய் வளர்ந்து விடவில்லை தான், ஆனாலும் சாதாரண நகத்தை விட சிறிது வளர்ந்திருந்தாலும் உடனடியாக வெட்டிவிடுவது பழக்கம். வீட்டில் இருக்கும் யார் கைகளிலும் பெரிய நகங்களை பார்த்தாலும் அவ்வாறாய் செய்வதாலேயே, அனைவரும் இரு வாரங்களுக்கு ஒரு முறை நகம் களைந்துவிடுவர்.

சொன்னவரிடம் பாவமாய் பார்த்து, சோகமாய் கூறினேன். "நகம் வெட்ட காட்டக்கூட முடியாதா உங்களுக்கு!"

இவள் இப்படித்தானென்பதை போல் கண்களை உருட்டி, பின் வேறு வழியில்லாமல் கையை நீட்டியதும் உள்ளெழுந்த உற்சாகத்தோடு முன் சரிந்து, கையை பற்றி வெட்டத் தொடங்கினேன். ஒரு கணம் நான் சிரத்தையோடு செய்வதை நோட்டமிட்டவர், லேப்டாப்பிடம் திரும்பியவாறு, "ஆனால், இம்சை பண்றப்பா நீ," என்றார் போலியான வருத்தத்துடன்.

"அப்படித்தான்பா பண்ணுவேன்," என்று அசட்டுத்தனமாய் பதிலளித்து, அக்கையின் நகங்களை முடித்து அடுத்த கையினை கேட்ட நேரம், அதனையும் தந்து ஒரு நெட்டுயர்ப்போடு குறைபட்டு கொண்டார். "இப்படி தான் அங்க ஒருத்தன் என்னனா என்ன மீட்டிங்கு தாடியோட வராதேங்கறான், நீயானா நகத்த வெட்டுங்கற; நான் என்ன ஸ்கூல் பையனா.."

கூறிமுடித்தக் கணம் காது கேட்டச் செய்தி ஊட்டிய திகைப்போடு, விழிகள் விரிய அவரை பார்த்தேன். "தாடி எடுத்துடுவீங்களா அப்போ? யார் சொன்னா? Marcஆ? அவர் தானே?"

இடைவிடாது முகச்சுளிப்போடு நான் பேசியதால் மெலிதாய் புன்னகைத்தவர், ஆம் என்பது போல் தலை அசைத்து பின், "உனக்கு உன் கவலை.." என்றார் கேலியாய்.

தாடியில்லையானால் கேட்கும் நேரமெல்லாம் கன்னத்தில் ஒன்றும் கிடைக்காதென்று கூறிவிடலாமா, என்று முகம் சுருங்க யோசித்திருந்த நேரம் முன்னாலிருந்த மேசை மேலிருந்த ஷ்ரவன் அலைபேசி சிணுங்கிற்று.

Displayவில் நளன் தெரிந்தார், பின்னால் அவரது சிரித்த முகம் ஒளிர. லேப்டாப்பே கண்ணாய் அமர்ந்திருந்த இவரோ அதைக் கண்டதும் உவகை துள்ள கண்களில் சிரிப்போடு என்னை ஏறிட்டு, "இங்க பாத்தியா இவன? இப்போ தான் நம்ம நெனப்பு வருது!" என்று மென்மையாய் வைதவாறு அழைப்பை ஏற்று speakerஇல் இட்டதில், "டேய்!" என்று நளன் குரல் எப்போதும்போலாய் பெரிய உற்சாகத்தோடு ஒலித்தது.

நளன் ஷ்ரவனுடைய நண்பர் ~மிக நெருக்கமான நண்பர், பால்யத்தில்லிருந்தே! மனமுவந்த இனிமையான பேச்சும், கேட்காமல் உதவும் நெஞ்சமும், ஆறுதலாய் அரவணைக்கும் கைகளுமாய் இருக்கும் இவருக்கு நண்பர்கள் அதிகமென்றாலும், நளன் அளவு நெருக்கமாய் யாரும் கிடையாது. சிறு வயதிலிருந்தே ஒன்றென வளர்ந்தவர்கள், ஷ்ரவன் கல்லூரிக்கு சென்னை வந்தபோதும், நளன் தன் மருத்துவ படிப்பு முடியும் வரையிலாய் சென்னையில் இருந்ததும்; இருவரும் ஒன்றாய் தங்கியதுமென அவர்கள் பிரிந்திருப்பது என்னவோ இவர் லண்டன் வந்த ஐந்து வருடங்களில் தான்.

தனக்கு ஒன்றானால் தன்னைவிட சஞ்சலப்படும் நெஞ்சமும், தனக்கு உறுதுணையாய் நிற்கும் திடமும் கொண்டவர் நளன், என்று மனமிக்க வாஞ்சையோடு ஷ்ரவன் கூறிய நாட்களெல்லாம் வெல்லக்கட்டியென இனித்தது.

சூழ்ந்திருந்த நினைவிலிருந்து காதில் ஒலித்த குரல் வடிகட்டியது. "என்னடா, அதிசயமா நியாபகம் வந்து கூப்ட்டுருக்க?" என்று லேப்டாப்பில் எதோ பார்த்தவாறு ஷ்ரவன் தன் முகத்தில் அரும்பியிருந்த புன்னகை அறியாது கேட்டிருந்தார்.

அதை கேட்ட நளன் சிரித்தார். "நீ வேற ஏண்டா! ஆல்ரெடி, ஊர்ல அம்மா கிட்டேந்து இதே பாட்டு தினம். எங்க இருக்க நீ? ஶ்ரீ இல்ல பக்கத்துல?"

பார்வை லேப்டாப்பிடமே இருந்த படி அந்த வேலையையே பார்த்து கொண்டிருந்தவர் தோளிலிருந்து தலை நிமிர்த்தி, சிரித்தேன். "பக்கத்துல தான் உக்கார்ந்து சூர்யாவும், தேவாவும் என்ன பேசிக்கறீங்கன்னு ஒட்டு கேக்கறேன்," என்றேன். அவ்வப்போது இவர்கள் ஒருவரை ஒருவர் நினைத்து சிலாகிப்பதைக் கண்டு நானும் அபூர்வாவும், இருவரும் தளபதி சூர்யா, தேவா கணக்காய் இருக்கிறீர்களென்று கிண்டலடிப்பதுண்டு.

"ஹே ஶ்ரீ, இருக்கீங்களா! நல்லவேளை, நீங்களும் இருந்தா நல்லதா இருக்கும்னு நெனச்சேன்!" என்றவாறாய் ஆரவாரத்தோடு அவர் பதில் தந்தது, வியப்பாய் நான் ஷ்ரவனை பார்த்த பார்வைக்குக் காரணமானது.

அதே வியப்பை தன் கண்களில் நிறுத்தி என்னை பார்த்தவரை கண்டு மெலிதாய் புன்னகைத்தேன். அடுத்த நொடி நளன் கூறியதை கேட்டு இருவருக்கும் மழை ஓய்ந்த மண்ணென மனம் குளிர்ந்தது. "ஒண்ணுமில்லடா! கல்யாணம் பண்ணிக்கணுமாம், அம்மா ஒரே வசவு! சரின்னு தலைய ஆட்டி வெச்சதோட என் கதை முடிஞ்சது. நாளைக்கே நிச்சயதார்த்தம்னுட்டாங்க!" என்று முடித்தவரின் கதையில் விழிவிரிய ஷ்ரவனை நோக்க, அவரோ வெகுக் coolஆக சிரித்தார்.

"என்னடா சொல்ற? நாளைக்கு நிச்சயதார்த்தமா? கல்யாணமாது முன்னாடியே சொல்லுவியா, இல்ல புள்ள பொறந்தப்பறமா சொல்லுவியா?" கேலியாக இவர் கூற, நளனோ பதிலாய் முறுவலித்தார். "யப்பா டேய், நாளைக்கு நிச்சயம்னு இன்னிக்கு சாயங்காலம் தான் எனக்கே சொல்றாங்க."

"இப்போவாது சொன்னாங்களேன்னு நினைச்சுக்கோங்க நளன்," என்று என் பங்கிற்கு கூறி சிரித்து பின் கேட்டேன், "சரி, யார் உங்க தமயந்தி? அவங்க பேர் என்ன?"

"அவங்க சென்னைதான். She is a nutritionist. நேத்திக்கு போன்ல பேசினோம், இன்னும் நேர்ல பாக்கலை. பேர்மட்டும் உதி, தமயந்தி இல்ல," என்று சத்தமின்றி சிரித்தார். அதைக் கேட்ட இவர் முகத்திலும் தான் அத்தனை பெரிதாய், காணும் மனத்தில் பதிந்துவிடும் படியாய் ஒரு மிருதுவான சிரிப்பு

"அடேயப்பா! சிரிப்பெல்லாம் பலமாத்தான் இருக்கு!"

"இப்படியெல்லாம் சொல்லிட்டு நாளைக்கு வரமுடியலடான்னு கைய விரிப்ப! மரியாதையா கல்யாணத்துக்கு வந்து சேந்துடு, ஶ்ரீயோட," என்று எச்சரித்த குரல் மறுக்கணம் ஓய்ந்து போயிற்று. குழந்தையின் உள்ளமென மகிழ்ச்சியும், சிரிப்பும் மட்டுமாய் எறட்டிருந்த இடத்தில் சிறிது நேரம் அமைதியே காற்றிலே கலந்து இருந்தது.

அதனின் தொடர்ச்சியாய் நளன் மெதுவாய் கூறினார். "முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன் பாரு, இன்னிக்கு அப்பு வந்திருந்தா!" என்பதை கேட்டதும் ஷ்ரவனின் முகம் கவலையின் சுவடுகள் தெரிய ஆரம்பித்தன.
 

Omahazeeya

Well-known member
#3
"ஏய், ஆமாண்டா! நேத்தி ராத்திரி ரொம்ப காது வலிப்போல. ரொம்ப முடியலைன்னு சொன்னா.. tonsilitis aggravate ஆகியிருக்கா? என்னாச்சு?" என்றார் லேப்டாப்பை தன் மடியிலிருந்து கீழறக்கி, பின் இருக்கையில் நேராய் அமர்ந்து.

சிறு வயதிலிருந்தே அபூர்வாக்கு tonsilitis இருப்பதும், அது அவ்வப்போது படுத்தி ஜலதோஷம், ஜுரம், காது, தொண்டை வலியென வதைப்பதுமாய் இருக்கும். கொஞ்ச நாட்களாய் ஏதுமில்லாதிருந்தது, நேற்றைய முந்தினம் இரவெல்லாம் தூங்கமுடியாது படுத்தியதாய் அபூர்வா நேற்று காலை சொல்லியிருந்தாள். அதற்கு, நேற்று மாலையே நளனிடம் சென்று காட்டுமாறு ஷ்ரவன் வைதார்.

"ஆமாண்டாப்பா! ஆனா tonsilitis aggravate ஆகல, adenoitis தான் ரொம்ப ஜாஸ்தியாகிருக்கு. Surgery பண்ணிடலாம். ஒண்ணும் பிரச்சனை இல்லை," தானொரு ENT அறுவை சிகிச்சை மருத்துவராய் பேசும் போக்கில், மிகச்சாதாரணமாய் சொல்லிவிட்டார். அதைக்கேட்ட நொடியே தன்னை கொண்டிருந்த இடமே அதிர்ந்த மாதிரியாய் ஷ்ரவன் அடைந்திருந்த தாக்கம், அதை பார்த்து மேலும் மனம் பதைபதைத்தது.

"Surgeryஆ! என்னடா சொல்ற? மாத்திரைல சரி செய்ய முடியாதா? அவ்வளோ ஜாஸ்தியா இருக்கா?" என்றார் ஐயமாய். மனம் அண்டியிருந்த தவிப்பை முகத்தை பார்த்தறியும் அவசியமில்லாது என் கைவிரல்கள் லேசாய் தீண்டியதும் வாரி, தன் இருக்கைகளுக்குள் இட்டுக்கொண்டதே தெரிவித்தது அவரிருந்த நிலையை.

பதில் வரும் முன் நெட்டிய, சத்தமான மூச்சொன்றை விட்டு பின் நளன் கூறலானார். "ஆமாம்பா! Tonsilsவிட adenoids அதிகமா இருக்கு. ரெண்டையும் சேர்த்தே எடுத்துட்டா, அப்பறம் காது வலியில்லாம இருப்பாள் இல்லையா? அதான் அவகிட்டையே சொன்னேன், உன்கிட்ட கேட்டுட்டு surgery date fix பண்ணிடுங்கன்னு சொல்லிட்டா," அவர் கூறியதின் பாரிப்பு அலைபேசி வெளியிட்டக் குரலில் அல்லாது, அருகில் இருந்த மனிதரின் இறுக்கத்தில் உணர்ந்தேன்.

"அப்படியா, நீ எப்போ appointment freeந்னு சொல்லு. நான் ஏத்தமாதிரி டிக்கெட் புக் பண்ணிடறேன்," என்றவர் தலை குனிந்து சரிதானே என்பது போல் என்னை பார்த்தார். தான் வீசும் ஒவ்வொரு பார்வைக்கும் பொருளுணரச்செய்து, நெஞ்சமதிலே குடியேறி, மனதின் ரேகையெனவே ஆகிக்கிடந்தது அவையாவும்.

ஏனோ அது இழைத்த நெகிழ்ச்சியெல்லாம் இன்று அவர் பார்வையை அமிழ்ந்திருந்த கவலை சூறையாடியது. ஒன்றும் பதில் பேசாது புறங்கையை விரல்களினால் மெல்ல வருடினேன். மிகச்சிறிய surgery என்றாலும் தன் தங்கைக்கு என்றால், அதுவும் நாங்களிருவரும் ஆயிரம் மைல் தாண்டியும், அங்கு அவளோடு யாருமில்லாத போதும் என்றால் சட்டென மனம் எப்படி ஒப்பும்?

எதுவோ சொல்லி, எதுவோ கேட்டதுமாய் நளன் குரலில் ஒரு ஸ்வரம் ஏற்றிக்கேட்டார். "டேய், நீ வரவெல்லாம் வேண்டாம்பா. இது மொத்த surgical procedureஏ 15 நிமிஷம், மிஞ்சி மிஞ்சி போனா முக்கால் மணி நேரம். அடுத்த நாளே அப்பு வீட்டுக்கு வந்துடுவா; இதுக்காக நீ அங்கேந்து வரேன்னு சொல்றியா? நான் ஏதுக்கு இருக்கேன், பாத்துக்க மாட்டேனா?"

"அச்சோ, அது எப்படி விடமுடியும்? பத்து நிமிஷமானாலும் அப்பு பாவமில்லையா? நாங்க வந்துடறோம் நளன்!" அவரேதும் பேசாது சிந்தனையில் ஆழ்ந்திருந்த நேரம் நான் பதிலளித்தேன். நெற்றி மத்தியிலிருந்த சுருக்கத்தைக் கண்டால் surgery என்றதும் கொண்ட தாக்கத்தின் செறிவு சற்றும் குறையாது இருந்ததை பார்த்து இதயத்தில் இரும்பையேற்றி வைத்தது போல் கனத்தது.

"ஶ்ரீ நீங்களும் அவனுக்கு ரெண்டாவதா இருக்கீங்க! நானொண்ணும் சொல்லலைப்பா, நீங்களாச்சு அப்புவாச்சு," என்றவர் சில விநாடிகள் பின் தொடர்ந்தார். "டேய்?"

"சொல்றா!" என்றார் இவரும், சற்று அத்தாக்கத்திலிருந்து மீண்டவராய்.

"ஒண்ணும் கவலையில்ல. ரொம்ப minor surgery, சரியா?"

"நீ இருக்கப்ப என்ன கவலைடா! சீக்கிரமா date fix பண்ணிட்டு சொல்லு," என்றவர் கூடவே சேர்த்தார், "உன் கல்யாண தேதியும் தான்," என்றவாறு. நளனுடனான அழைப்பு வைத்த மறு நிமிடமே இருவரும் ஒத்தாய் அபூர்வாவை அழைக்க முற்பட்டதும், உதட்டின்மேல் இடுங்கிய சிறிய புன்னகையும் மண்ணில் ஊன்றிய நங்கூரமாய் இருந்த மனத்தை தளர்த்தியது.

அழைப்பை ஏற்றவுடன் பேசிய அப்புவின் குரல் கரகரப்போடு, எப்போதும்போலில்லாது நீர்த்திருந்த கவலையை எங்களிடமே திரும்பச்செய்தது. "நான் இப்போதான் உனக்கு கூப்டணும் நெனச்சேன், நீயே பண்ணிட்ட; என்ன சொன்னாரா உன் ஆருயிர் நண்பர்?"

தொண்டைக்கட்டிய குரலும், அதிலேயே மெல்லமாய் அவள் பேசியதில் இருந்தச் சோர்வும் அனைத்தையும் பளிங்காய் காட்டியது. "இவ்வளோ அசதியா பேசறியே.. ரொம்ப முடியலையா கொழந்த?" என்றேன், உள்ளமெல்லாம் ஏனோ வெதும்பியது. அவள் மிகுந்தக் கவலையோடு இருந்த வேளையிலும் இவ்வாறாக குரல் சுரத்தின்றி நான் கேட்ட நாளில்லை என்பதாலோ, அதனைக் கேட்ட இவரது முகம் மேலும் வாடியதாலோ தொண்டையில் ஜனித்த உணர்வுகள் வார்த்தைகளாய் வரவழைக்க இயலாது அவஸ்தையானது.

இங்கு சூழ்ந்திருந்த ரோதனை தன் மனத்தினால் அறிந்தாற்போல், அதை நாங்கள் உணரச்செய்யமால் இருக்க உடனடியாய் பதிலளித்தாள். "ஶ்ரீ! அப்படி ஒண்ணுமில்ல, நளன் அண்ணா நேத்திக்கு கொஞ்சம் antibiotics குடுத்தாறா, மூணு வேளை சாப்ட்டு இப்போ பாரவாயில்லையா தான் இருக்கு.."

"ஜொரம் இருக்கா அப்பு?" அவள் கூறியதும், தாமதிக்காது ஷ்ரவன் கேட்டார்.

"இப்போ இல்லை. காதுதான் வலி குறையல," என்றாள் உடனேயே.

"சரி, நானும் ஶ்ரீயும் வரோம் சீக்கிரமா-" இவரை அவள் பேசவிடவில்லை அதற்குமேல்.

"ஐயோ இல்லடா, நீங்க வரவேண்டாம். நளன் அண்ணாதான் இருக்காரில்ல? 15 நிமிஷ surgeryக்காக பத்து மணிநேரம் travel பண்ணி வருவியா?" தொண்டை சரியில்லாததால் அவள் கேட்ட அமர்த்தல் தொனியும் பலமின்றிக் கிடந்தது.

"அதெப்படி அப்பு தனியா அப்படி விடமுடியும்," என்று நான் கேட்ட கேள்விக்கு, பதில் இல்லாது மாறாய் அவள் கேள்வியே பதிலானது. "ஶ்ரீ! தயவு பண்ணி அவன்கிட்ட சொல்லுங்க. 10 நிமிஷத்துக்காக உங்களை அலையவெச்சு, அவனும் அலையறேன்னு சொல்றான். நீங்களும் அவனுக்கு supportஆ!"

அவள் கூறியதில் வியப்பும், தவிப்புமாய் என்னை பார்த்த ஷ்ரவனிடம் என்ன சொல்வதென்று தெரியாது அமைதியாய் பார்த்தேன். அவரோ, "அது எப்படி அப்பு விட முடியும்?" என்றார்.

அவளோ, "அதெல்லாம் முடியும்! சரி, அப்போ வர்றதுன்னா பதினஞ்சு நாள் தங்கற மாதிரி ரெண்டு பேரும் வாங்க, எனக்கு ரொம்ப சந்தோஷம். சும்மா இதுக்காக இன்னிக்கு வந்துட்டு நாளைக்கு கிளம்பற கதையே இங்க வேண்டாம்," என்றாள் சவாலாய். இவருக்கே தங்கையில்லையா! இந்த சாமர்த்தியமும் இல்லாது போகுமா! சற்று நேரம் தங்கை சகல உரிமையாய் விடுத்த கோரிக்கையில் தன்னிலையை புறம்விட்டு லேசாய்ச் சிரித்தவரை கண்டதும் என்னிலும் தொற்றி கொண்டது அச்சிரிப்பானது.

"அது கஷ்டமாச்சேப்பா!" மலைப்பாய் அவர் கூறியதில் எட்டிப்பார்த்த ஏக்கமும் இன்னுமும் மனதை ஏதோ செய்து துளையிட்டது.

"அப்போ ரெண்டு பேரும் அங்கேயே இருங்க பேசாம. இந்த வந்துட்டு ஒடனே கிளம்பற வேலையே வேண்டாம். ஶ்ரீக்கு அலைச்சல், பாவம்!" என்றாள் உறுதியாய். ஷ்ரவன் மறுமொழி பேச வாய் எடுத்ததுமே பட்டென்று பேசினாள். "ஐயோ! நான் சொன்றேனில்ல? வேண்டாம்னா வேண்டாம். சும்மா என்ன கத்தவிடாதே, தொண்ட வலியா இருக்கு!" என்றதும் அதன்மேல் அவளிடம் முறையிட்டு பயனில்லை என்று தெளிந்தது.

"சரி நீ முடிவு பண்ணிட்ட, என்ன கேட்டாலும் நடக்காது. ஒழுங்கா உடம்ப பாத்துப்பியா?" என்றார் ஒரு நீளமான, அவதியாய் அனுங்கியவாறு.

"பாத்துப்பேன்," என்றாள் பேதைப்பெண்.

"ரைட்! நாளைக்கு நான் உன்னோட R.A puram IOB accountக்கு பணம் transfer பண்றேன்.." இடையிலேயே அவள் குரல் கேட்டது மறுப்பாய். "எதுக்கு? என் கிட்ட பணமெல்லாம் இருக்கு," என்று.

"ஷ்! பண விஷயத்துல நான் சொல்றத நீ கேளு. அனுப்பறேன்னு சொன்னா அனுப்பறேன்," கண்டிப்பான குரலைக் கேட்டதும் முகத்தைச் சுளித்திருப்பாள்.

"சரி, அனுப்பு. நானொண்ணும் சொல்லலை." என்றாள் மெலிதாய்.

அவ்வாறே அவளிடம் பேசியும், மீதி நேரமனைத்தும் வேலைகள், சோம்பல், பின் அலுவல் வேலையென அவ்வாரயிறுதி உருண்டோடியது.

அதற்க்கடுத்து வந்த வாரத்தின் ஒரு நாளில் அபூர்வாவிற்கு surgery நல்ல விதமாய் நடந்து முடிந்து, அடுத்த இரண்டு வாரங்களில் எப்போதும் போலாய் சாப்பாடே மென்று, விழுங்கும்படியாகவே தேறியிருந்தாள். உதவிக்காக அவளது நெருங்கிய தோழியும், பின் கேத்தனுமாய் அவளுடன் இருந்தது அந்நேரத்தில் அவளுக்கும், இங்கே எங்களுக்கும் பேரளவான ஆறுதல். இருந்தாலும், மனதெங்கிலும் கவலைக்கிடமாய் இருந்தது இருவருக்குமே. நினைத்த நேரம் உடனில்லாமல் தொலைவில் இருந்து, இம்மாதிரி நேரங்களிலும் உடனே செல்ல முடியாமல் இருக்கும் நிலையை உணர்ந்து நாங்களே மருகிக்கொள்வதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

குடும்பத்திற்கு ஒன்றானால் நினைத்ததும் சென்று பார்க்கவும், உடனிருந்து உதவவும் முடியாமல் இருக்கும் கையாலாகாத்தனத்தை வெளிநாட்டு வாழ்க்கை என்னும் பெயரில், விருப்பத்தோடு நாங்கள் ஏற்ற சாபமதின் விஸ்வரூபமாய் தெரிந்தது.

A/N

Chapter எப்படி இருந்தது?

வெளிநாட்டு வாழ்க்கை விருப்பதினுடனான சாபம். ரொம்ப உண்மை. Staying half world away from family is not easy. Totally.

நீங்க என்ன நினைக்கறீங்க? Commentsல சொல்லுங்க:)
 

sridevi

Well-known member
#5
குடும்பத்திற்கு ஒன்றானால் நினைத்ததும் சென்று பார்க்கவும், உடனிருந்து உதவவும் முடியாமல் இருக்கும் கையாலாகாத்தனத்தை வெளிநாட்டு வாழ்க்கை என்னும் பெயரில், விருப்பத்தோடு நாங்கள் ஏற்ற சாபமதின் விஸ்வரூபமாய் தெரிந்தது.
arumaiyana varigal (y)(y)(y)(y).panam pinne odum podhu thanaga uravugalai sila nerum vilaki vaikkum sulnilai varukirathu....... foreign life increses luxary decreases intimacy:):):):):)
 

Today's birthdays

Latest profile posts

Shanthini Dos's Un Uyir thaa..! Naam Vazha..! Next epi updated..read and share ur valuable views
next episode of "Mayanathi Suzhal" is updated....Happy reading...
ருத்ராங்கி வருவாள்
ஹாய் மக்களே போஸ்டட் 7த் எபி மன்னவன் கரம் பிடித்தேன்.
Devi's Neenga Kanale next epi posted..read and share ur valuable views makka
எனதன்புத் தோழமைகளே! செங்கல் பூக்களின் அடுத்து இரு அத்தியாயங்கள் மலர்ந்து மணம் வீசுகின்றன. (சு)வாசித்து உங்களது கருத்தை எனக்குச் சொல்லுங்கள்!
Hi dearies, uyir vidum varai unnoduthan-- epi 4 posted :)
kanadharva logaa - 12 updated friends.. marakkaama unga karuththai sollunga pa....
Latest ah memes kadai open panni irukken.... Vanga pazhagalam...
https://www.smtamilnovels.com/community/index.php?threads/little-hearts-memes-shop-vanga-pazhagalam.305/
(Ithu Athula....) doubt eh venam.... Athe than Ithu.. 😉😉
அன்புடையின் அடுத்த அத்தியாயம் போட்டாச்சு மக்களே:) படிச்சுட்டு என்ன நினைக்கறீங்கன்னு சொல்லிடுங்க:)

Advertisements

Online statistics

Members online
91
Guests online
1
Total visitors
92