• Please avoid unfair and unethical methods. If any discrepancies found, the user will be removed. Kindly follow the rules and regulations.

Madhumitha's Vallamai Thaaraayo 13

Madhumitha

Author
Author
#1
வல்லமை தாராயோ 13 – மதுமிதா

மடத்துப்பட்டியில் இருந்து சிவன்கோயிலுக்கு அருகில் புதுவீடு கட்டிக்கொண்டு வந்திருந்தனர். கிரகப்பிரவேச நாளில் அசோக், சுரேகா இருவருக்கும் சரியான காய்ச்சல்.

கொஞ்சம் கொஞ்சமாக சரியானார்கள். வைரல் காய்ச்சல் வந்து ஊர் முழுக்க குளுகோஸ் ஏற்றிக்கொண்டும் ஊசி மருந்துகளில் சரியாகிக் கொண்டும் இருந்தனர்.

ஊர் முழுக்க தொற்று போல இந்த காய்ச்சல் பரவிக் கொண்டிருந்தது. குடும்பத்தில் ஒருவருக்கு காய்ச்சல் வந்து குணமாகி முடியும்போது இன்னொருவருக்கு ஆரம்பித்தது. நாளிதழ்கள் பத்திரிகைகள் முழுக்க இதே பேச்சு. உடனடி நடவடிக்கை எடுக்க ஆலோசனைகள் வந்தபடி இருந்தன. ஊசி, மருந்துகள் காய்ச்சல் சீசனை சற்றே கட்டுப்படுத்தியது. பருவநிலை மாற்றம் வரும்போது இது தவிர்க்கமுடியாததாகி விடுகிறது.

வீடு கட்டிக் கொண்டிருக்கும்பொழுதே, எதிர் தெருவில் இருக்கும் பெண்ணும் இவர்கள் வீட்டுக்கு எதிர் வீட்டில் இருக்கும் பையனும் தங்கள் தங்கள் மொட்டைமாடியில் நின்று கொண்டு சைகை மொழியில் பேசுவதை அசோக் கவனித்திருந்தான். அந்தப் பெண்ணுடன் அவளுடைய தங்கையும் நின்று கொண்டிருப்பாள். ஆக பெண்ணின் வீட்டிலும் இந்த விஷயம் ஏதோ கொஞ்சம் தெரிந்திருக்க வேண்டும்.

ஒரு நாள் காலையில், அந்த இருவரும் வீட்டில் இல்லை ஒருவரிடமும் சொல்லிக் கொள்ளாமல் வெளியூருக்குப் போய்விட்டனர். இந்தச் செய்தி ஊரில் அனைவருக்கும் மெல்ல பரவ ஆரம்பித்தது.

’காலம் கெட்டுப்போச்சு. சாதி எதுவும் பார்க்காமல் இப்படிதான் ஒருவருக்கும் தெரியாமல் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிடறாங்க. படிக்கிற வயசில் இப்படி ஓடிப்போனால் அவர்களின் பிற்கால வாழ்க்கை எப்படி இருக்கும்?’

’இதற்குதான் பெண்ணை வளர்க்க வேண்டிய விதத்தில் வளர்க்கணும். கட்டுக்குள் பிடித்து வைக்காவிட்டால் இப்படிதான் ஆவார்கள்’ என்று ஆண்கள் கடைவீதிகளில் கூட்டமாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

இந்தப் பேச்சு ஓய்வதற்கு முன்பே, இரண்டு நாட்களில் தெரு முனையில் ஆறுபேர் குழு ஒன்று காத்திருந்தது. இந்தப் புதுவீட்டுக்கு வந்ததிலிருந்து தினமும் ஒருமணிநேரம் இவர்களுடன்தான்அரட்டை.

என்ன ஒருவர் முகமும் சரியில்லை. சன்னமான குரலில் தங்களுக்குள் பேச்சு வேறு. என்ன ஆச்சு?

"அகிலாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்கிறார்கள்" என்றாள் அருணா.


ஒவ்வொருவராக வீட்டுவேலைகளை முடித்துவிட்டு அப்போதுதான் வந்து சேர்ந்திருக்கிறார்கள் போலுள்ளது. அருணாவைத் தவிர வேறு யாருக்கும் அகிலாவைப் பற்றிய மேலதிக விபரம் எதுவும் தெரியவில்லை.


"என்னஅருணா, தினமும் காலையில் அகிலா நாயை அழைத்துக்கொண்டு வாக்கிங் வருவாளே..."

அப்பெண்ணைப் பார்த்த நினைவு வந்தது. இருபத்தி ஐந்து வயது இருக்கலாம். திருத்தமான முகம். மாநிறம். கண்கள் இமைக்கும்போது அவ்வளவு அழகு. முதல் நாள் பார்க்கும்போது நாயை அழைத்துக்கொண்டு அவள் அவ்வளவு ஒயிலாக நடந்து வந்தாள். நாயும் அவளும் ஏதோ பேசிக்கொண்டே வந்தது போலவும் இருந்தது.

அடுத்த இரண்டு நாட்கள் கழித்து அப்பெண்ணை ரோஜா நர்சரியில் யதேச்சையாய் சந்திக்கையில் மிக நட்புடன் இருவரும் பேசிக்கொண்டிருந்தனர். சுரேகாவுக்குத் தேவையான ரோஜாச்செடியினைஅப்பெண்தான் வாங்கிக்கொடுத்தாள்.

"ஆமாம்.அவளுக்கென்ன?"


"ஒண்ணுமில்லை. மண்ணெண்ணை ஊற்றி உடலில் நெருப்பு வைத்துக் கொண்டாளாம்…"


"என்ன சொல்றே அருணா... காலையில் வாசல் தெளிக்கையில் அவளைப் பார்த்தேனே…" என்றாள்சிநேகா.


"அதுக்குப் பிறகு உள்ளே சமைக்க வந்தவள்தான் இப்படி செய்துவிட்டாள்"


"ஒண்ணும் இல்லை. அகிலாவுடைய புருஷன்தான் அவள் மேலே மண்ணெண்ணெய் ஊற்றி பத்தவைத்துவிட்டானாம்..."


"இப்படிநடக்கும்னுஅப்பவேநெனச்சேன்…"

"என்னநடக்குதுஇங்கே?"


"சுரேகா, உனக்கு ஒண்ணும் தெரியாது. நீ சும்மா இரு.’’


"என்னது... புருஷன் பொண்டாட்டியை கொலை செய்ய முயற்சி செய்திருக்கிறான்... நீங்க எல்லோரும் அதுக்கு சப்போர்ட்டா?"


"உனக்குஒண்ணும்தெரியாது. அவள்சரியில்ல."


"என்னசரியில்ல?"


"ரெண்டு மாசத்துக்கொரு முறை எங்கேயோ போயிடுவா யாரையோ பாக்க. அங்கிருந்து ஃபோன் செய்தா புருஷன் போயி அவளை இங்கே மறுபடி அழைச்சிட்டு வருவான். இது நாலஞ்சு முறை நடந்திருக்கு."


"அப்ப இவன் ஏன் போயி அவள அழைச்சிட்டு வர்றான். அங்கேயே விட்டுட வேண்டியது தானே..."


"அவதான் புருஷனோடதான் இருப்பேன்னு சொல்லி திரும்பி வந்துடறா. ஒவ்வொரு தடவையும் ஒவ்வொருத்தனோட. அவ அம்மாகூட இந்த விஷயத்துல தலையிடறதில்ல."


"அவங்க வீட்டுல வேற யாரும் இல்லையா என்னன்னு கேட்க?"


"யாரும் இல்லை. இதுக்கு முன்னாடி ரெண்டு தடவை அவளுக்கு சூடு போட்டான். முகத்தில காயம். வெளியில் கேட்டவங்க கிட்ட குக்கர்ல பட்டதுன்னு சொல்லிட்டா. கீழயும் சூடு போட்டிருப்பான் போலிருக்கு. நடக்க முடியாம அவ்வளவுசிரமப்பட்டா…"


"நீங்க இந்த தெருக்காரங்க எல்லாம் என்ன பண்ணிட்டிருக்கீங்க? ஏன் அவன் இப்படி செய்யறான்னு கேட்க வேண்டியதுதானே…"


"அவ மேல தப்பு இருக்கு. புருஷன் பொண்டாட்டி விஷயத்துல யாரு போயி என்னன்னு கேக்கறது?"


"என்னதிது எல்லாருமே அவ மேல தப்பு இருக்குன்னு இதையே திருப்பி திருப்பி சொல்லிட்டிருக்கிறீங்க…"


"வேற என்ன சொல்றது? பாவம் புருஷன்காரன் தான் இப்பதான் வந்து வாழை இலையெல்லாம் எடுத்துட்டு போறான் ஜி.ஹெச்சுக்கு."


"போலீஸுக்கு நீங்க சொல்ல வேண்டியதுதானே?"


"போலீஸ் அப்பவே வந்தாச்சு. அகிலாட்ட விசாரிச்சுட்டாங்க. சமையல் செய்யறப்ப நெருப்பு புடிச்சதுன்னு சொல்லிட்டாளாம்."


"என்ன கொடுமை இது…"


"நீ பேசாம இரு சுரேகா. இங்க யாரும் அவன பகைச்சுக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் மேலே அவ மேலே தப்பு இருக்கிறதனாலே...."


வீட்டுக்கு திரும்பியவள் சாப்பிடாமல் மாடி ஏறியவள்தான். கேள்விகள் அவளைத் தின்று கொண்டிருந்தன.

மனைவியின் மேல் நெருப்பு வைக்கும் உரிமையை யார் கணவனுக்கு கொடுத்தது. இது என்ன சாடிசம். ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனை தேவையா? நியாயங்கள் எங்கே மாறுபடுகின்றன? எல்லோரும் இதனை சரியான பார்வையில் பார்க்க நாம் மட்டும் தவறான பார்வையில் பார்க்கிறோமா? ஏன் இந்த முடிவைத் தேர்ந்தெடுத்தாள்?

அந்தப் பெண் எவ்வளவு சுதந்திரமானவளாக இருந்தாள்?
அந்த ரோஜாச்செடியின் அழகும், மணமும்தான் அவளுக்கு எவ்வளவு பிடித்தமானதாக இருந்தது? நாயுடன் இயைந்த அவளுடைய நட்பு என்ன அற்புதமான அழகைத் தந்தது.

ஏன் அவள் தன் கணவனைக் காட்டித்தரவில்லை. தன் மரணத்திற்கு தானே ஏன் பொறுப்பேற்றுக் கொண்டாள்? கொடுமை செய்யும் கணவனின் மேல் இன்னும் அதீத பாசமா? என்றால் இந்த நேசம் எவ்வளவு உண்மையாய் இருந்திருக்க முடியும் தவறுகள் அனைத்தையும் அப்படியே மறந்துமன்னித்துவிடும்பேரன்பா


மாடியிலிருந்து கீழே வந்தவள் இயந்திரமாய் சாப்பிட்டாள். படுத்தவள் தூக்கமின்றி படுத்துக் கிடந்தாள். அதிகாலை ஐந்து மணிக்கு மெல்ல கண்ணயர்ந்தாள்.

காலையில் சந்தடி சத்தத்தில் எழுந்தாள். பெரிய வண்டி ஒன்று அவர்கள் வீட்டைக் கடந்து செல்ல பின்னாலேயே போலீஸ் ஜீப். சுரேகா வெளியே ஓடி வந்தாள்.


ஆம்… அகிலா இறந்துவிட்டாள். அவள் உடலை அரசு மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு எடுத்து வந்திருந்தனர். மூன்று தெருக்களிலிருந்தும் கூட்டம் கும்பல் கும்பலாய் வீட்டு வாசலிலும் தெருவிலும் நின்றிருந்தனர்.


மூடிய வெள்ளைத்துணியின் உள்ளே அந்த கருகிய மலர்.


'உச் உச் உச்…' என்ற ஒலி தவிர வேறு பேச்சில்லை. யாரும் அருகே போகவில்லை.
அகிலாவின் அம்மாவிற்கு அவள் உடல் வண்டியிலேயே வைத்து (வெள்ளைத்துணியால் மூடியதுதான்) காட்டப்பட்டது. அவர் வாயைப் பொத்தி ஒரே அழுகையோடு உள்ளே சென்று விட்டார். வீட்டுக்குள் அவளைக் கொண்டு வரவில்லை. கணவன்தான் அகிலாவின் சிதைக்கு தீ மூட்ட வேண்டுமென்று அதே வண்டியில் ஏறிக் கொண்டான். முதலிலேயே உயிரோடு தீ மூட்டியவன்தான் இப்போது சம்பிரதாயப்படி வழியனுப்பச் சென்றான். எந்த குற்றவுணர்வும் இருக்காதாஅவனுக்கு. .

நாய் மட்டும் மூன்று முறை வண்டியைச் சுற்றி வந்து பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. வண்டியின் பின்னே சற்று தூரம் ஓடிவிட்டு வீட்டுக்குத் திரும்பிவிட்டது. அகிலா மருத்துவமனைக்குப் போன அன்று முதல் அன்றைக்கு இரவிலிருந்தே ஒரு பருக்கை கூட சாப்பிடவில்லையாம். கண்ணிலிருந்து நீர் வடித்துக்கொண்டே இருந்ததாம். .


"அய்யோ அந்த நாய் இறந்துவிட்டதாம்" வெளியே கச கசவென மறுபடியும் பேச்சுக் குரல்.

இதென்ன தொடர் மரணங்களைப் பார்க்க வேண்டி இருக்கிறது… அதுவும் இயற்கை மரணமில்லை.

எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? நாகரிக மனிதர்களாக இன்னும் நாம் பரிணாம வளர்ச்சி அடையவே இல்லையா…. நாய்க்கு இருக்கும் பாசம் கூட மனிதர்களுக்குக் கிடையாதா…?

இது என்ன வாழ்க்கை... இந்த அவலங்களை அப்படியே பார்த்துக்கொண்டு இருக்க வேண்டுமா?

இதில் இந்த நூலகப்பணியால் வீட்டில் வேறு குழப்பம். நூலகமும் தனி கட்டடம் கட்ட வழியின்றி அடுத்த கட்ட வளர்ச்சி நடவடிக்கைக்குப் போகாமல் இருந்தது. இந்த மன உளைச்சல் எதற்கு?

எல்லாவற்றையும் விட்டுவிடலாம். நூலகக் கட்டடம் வந்தாலென்ன, வராவிட்டால்தான் என்ன? நூலகத்துக்கு இடம் கிடைத்தால் என்ன, கிடைக்காவிட்டால்தான் என்ன?

என்ன நினைப்பு இது... பாழும் மனது வேளைக்கொரு விதமாய் நினைக்கிறதே. நமக்கு நன்மை செய்த நூலகத்துக்கு, அறிவை மேம்படுத்திய நூலகத்துக்கு என்ன கைம்மாறு செய்ய முடியும், இதனை விடுத்து.

இனி வரும் காலத்தில் இதைப்போல இருபது பேரேனும் பயனடைய மாட்டார்களா… இடையே முயற்சியை கை விட்டுவிடக் கூடாது.
 

Madhumitha

Author
Author
#2
சென்னையில் கன்னிமரா நூலகம், தேவநேயப்பாவாணர் நூலகம், பிரிட்டிஷ் கவுன்சில் லைப்ரரி இருக்கின்றன. அந்த அளவுக்கு அவ்வளவு விசாலமான இடமாக இல்லாவிட்டாலும் ஓரளவுக்கு வாசிக்கும் புத்தகங்களை வைக்குமளவில் இங்கே இடம் கிடைக்க வேண்டும். தென்றல்நகருக்கு நூலகம் வந்தே ஆக வேண்டும்.புத்தகங்களைப் படிக்கிறவங்க குறைஞ்சிருக்கிறாங்க. அப்படி இருக்கும்போது நூலகத்துக்கான தேவை என்ன? இது போன்ற கேள்விகளை எத்தனை முறை எதிர்கொள்வது? என்ன பொருத்தமான பதிலைச் சொல்வது?

பெருநகரங்களில், அங்கே படிக்கும் மாணவிகளைப் பார்க்கும்போது அவர்களுக்கு எந்த அளவில் நம் ஊரில் இருப்பவர்கள் குறைச்சலாக இருக்கிறார்கள்... அவர்களுக்கு அங்கே இத்தனை வசதியான நூலகங்கள் இருக்கின்றனவே. அங்கிருக்கும் அத்தனை வசதி இல்லாவிட்டாலும் ஓரளவுக்காவது வசதியுடன் தென்றல்நகரில் நூலகம் இருக்க வேண்டாமா?

போய் நூலக ஃபைலை எடுத்து வந்தாள். முதல் முதலாக நூலகத்துக்காக கேட்கப்பட்ட இடத்தில் கட்டடம் கட்டுவதற்காக, மாதிரியாக வரைந்திருந்த வரைபடத்தை எடுத்துப் பார்த்தாள்.

அதில் கீழ் தளத்தில் முன்புற வாசலுக்கு அருகில் காம்பவுண்டுக்கு உள்ளே, மாணவிகள் எடுத்துவரும் சைக்கிள் மற்றும் டூவீலர் நிறுத்துவதற்கான இடம் குறிக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் இருக்கும் அறையில், வாசிக்கும் புத்தகத்தின் ஒரு பக்கத்தை நகல் எடுக்க வேண்டும் என்றால், அதற்கான ஜெராக்ஸ் மிஷின் வைக்கும் அறை வரையப்பட்டிருந்தது.

நம் ஊர் மாணவிகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்னும் என்ன வகையில் இங்கே வசதி செய்து தர வேண்டும்? புது நூலக கட்டடத்தின் மாடித்தளத்தில் ஒரு ஆப்சர்வேட்டரி அமைக்க வேண்டும். டெலஸ்கோப் வழியாக வானியலை குழந்தைகள் கற்றுக்கொள்ள வேண்டும். கோள்களின் இயக்கங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும், நிலவின் நட்சத்திரங்களின் பாதைகளை நேரடியாகப் பார்க்க வேண்டும். மூடப் பழக்க வழக்கங்களிலிருந்து வெளியே வரவேண்டும்.

தென்றல் நகரத்துப் பள்ளி, கல்லூரி மாணவிகள் மட்டுமல்ல, விருதுநகர் மாவட்டம் மற்றும் சுற்றிலும் இருக்கும் அனைத்து இடங்களில் இருந்தும் வந்து பார்த்து பயன்பெறும் வசதி இருக்க வேண்டும். முக்கியத்துவம் கருதி இலவசமாக இல்லாமல், குறைந்த பட்ச கட்டணமாகவாவது வைக்கலாம். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துக்கு அருகில் இருக்கும் பிளானடோரியம்போல இல்லையெனினும், இருக்கும் சின்ன இடத்தில் எவ்வளவு வசதி செய்ய முடியுமோ அவ்வளவு செய்ய வேண்டும்.

இந்த நூலகத்தையும் ஆப்சர்வேட்டரியையும் உபயோகப்படுத்தும் பெண்குழந்தைகள் தமிழ்நாட்டில், இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க ஆதர்சமாகப் போற்றப்படும் வகையில் வாழும் வாழ்க்கையைப் பெறவேண்டும்.

நூலகத்துக்கான இடமே இன்னும் கிடைக்கவில்லை. இடம் கிடைத்து கட்டடம் கட்டினால் தானே, அதற்குப் பிறகு அந்தக் கட்டடத்தில் மேல்தளத்தில் இதையெல்லாம் செய்ய முடியும்? இது என்றேனும் சாத்தியமாகுமா?

இது ஒரு அரசாங்கம் முன்னெடுத்துச் செய்யவேண்டிய காரியமல்லவா? அரசாங்கத்துக்கு மக்களின் தேவை, நலனின் மீதான அக்கறை எங்கே இருக்கிறது? மக்கள் அறிவில்லாமல் இருந்தால்தான் அவர்களுக்கு நல்லது. குறைந்தபட்ச அறிவு இருந்தால் கூட அது அவர்களுக்கு கெடுதலாகத்தான் போய் முடியும். அப்படி இருக்கும்போது இதை எப்படிச் செய்வார்கள்?

சொல்ல முடியாத சோர்வு தாக்க தலையை உலுக்கிக்கொண்டு எழுந்தாள். குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவிக்கொண்டு உள்ளே போய் தண்ணீரைக் குடித்தாள்.

’சக்தி கொடு’ பாடல் வானொலியில் ஒலிக்க, சுரேகாவும் சேர்ந்து பாடினாள் உரக்க… "சக்தி கொடு…"

உற்சாகமாய் வேலையை முடித்து சாப்பிட வருகையில் நேரம் பதினொன்னரை மணி. தொலைபேசி மணி ஒலித்தது. எடுக்க விரைந்தாள். நின்று விட்டது. சாப்பிட்டு கை அலம்பிவிட்டு வருகையில் மறுபடியும் தொலைபேசி ஒலித்தது. எடுத்தாள்.

"வணக்கம். நான் அகரம் பத்திரிகை நிருபர் அஸ்வின் ராஜா. சுரேகா அசோக்கிடம் பேசணும். இருக்காங்களா?"

ஆஹா... அகரம் பத்திரிகையா…! அனுப்பிய கடிதத்தைப் பார்த்துவிட்டு அழைக்கிறார்களா? அப்போ எழுதிய கடிதத்திற்கு பலன் கிடைச்சுடுச்சா... இனி நூலகத்துக்கு விடிவு காலம் பிறந்து விடுமா?

"வணக்கம். நான் அகரம் பத்திரிகையிலிருந்து அஸ்வின் ராஜா பேசறேன்..."

நினைவுக்கு வந்தவள் சுதாரித்துக்கொண்டு பேசினாள்.

"சொல்லுங்க... ஆமா... நான் சுரேகாதான் பேசறேன்."

" நீங்கள் அனுப்பிய 'விருப்பம்' பத்தி பேசணும். எப்போது வரலாம்?"

"நாளைக்கு இரவு சென்னை போகிறேன். அதனால காலைலேயே வந்துடுங்க. இல்லைன்னா சென்னைல சந்திக்கலாம்."

"நாளைக்கு காலைல வந்திடறோம் மேடம்."

காலை பத்தரை மணிக்கு அகரம் நிருபர் வந்தார்; உடன் ஒரு புகைப்படக்காரருடன்.

இதுவரை நிகழ்ந்த நூலகத்துக்கான மொத்த விபரங்களையும், முதலமைச்சர் லலிதாதேவியைச் சந்திக்க வேண்டிய காரணத்துக்கான நிர்ப்பந்தமும் சொல்லப்பட்டது இன்னொரு முறையாக.

"ஏன் முதலமைச்சரை சந்திக்கணும்?"

"நூலக கட்டடம் கட்ட இடம் தேவை. நேரடியாக சந்தித்தால் முழு விபரமும் சொல்லிவிடலாம். சி.எம். நினைத்தால் ஒரு கையெழுத்துதான். இடம் உடனே கிடைக்குமில்லியா... அதான்…"

"கலெக்டரச் சந்திக்கலாமே…"

"எத்தனை கலெக்டர்களை, தாசில்தார்களைப் பார்த்தாச்சு. ரெண்டு சி.எம்.களுக்கும் மனுவும் குடுத்தாச்சு. ஒண்ணும் வேலைக்காகல. பத்திரிகை மூலமாங்கறப்ப மீடியாங்கறதால நல்லாயிருக்குமேன்னுதான் உங்களுக்கு எழுதினோம்."

"இடம் ஏன் கிடைக்கல?"

"நாங்க கேட்ட பழைய இடம் இப்போதைக்கு இந்த சேர்மன் பதவில இருக்கிற வரை கிடைக்காது. இப்ப கேக்கிறது நீர்ப்பிடிப்பு இருக்கிற இடம்."

"அப்ப இதுவும் கிடைக்காதா?"

"அதே நீர்ப்பிடிப்பு இருக்கிற இடத்திலதான் மூணு கல்யாண மண்டபம், போலீஸ் குடியிருப்பு எல்லாம் இருக்கு. ஏன் லைப்ரரிக்கு மட்டும் தரக் கூடாது?"

"அப்ப ஒண்ணு பண்ணுங்க. மொத்த விபரமும் இன்னும் விளக்கமா சொன்னா நம்ம பத்திரிகையில ஆர்டிகிள் ஒண்ணு பண்ணிடலாம்."

"அய்யோ வேணாம்... அப்படி செஞ்சா அப்புறம் சி.எம்.முக்கு நூலகத்துக்கு ஏதாவது செய்யணும்னு நெனச்சிருந்தா செய்ய முடியாம போயிடக் கூடாது பாருங்க. மனப்பக்குவம் மாறி, உள்ளதும் போச்சு நொள்ளைக் கண்ணா ஆயிடக் கூடாது பாருங்க…. எதிர்மறையா இந்த நூலகத்துக்கு எதுவுமே இனி செய்யக்கூடாதுன்னு அவங்களுக்குத் தோணிடுச்சுன்னா…"

"பாதிப்பு எதுவும் இருக்காத அளவுல ஆர்டிகிள் பண்ணலாம்."

"வேண்டாங்க… பயமாயிருக்கு. ஒண்ணு வாசகர் விருப்பமா இதை நிறைவேத்துங்க. இல்லைன்னா இப்பிடியே விட்டுடுங்க."

"என்ன மேடம்... எங்க எடிட்டர் சொல்லி உங்களைப் பார்க்க வந்திருக்கோம். நீங்கதான் இந்த விருப்பத்த எழுதினவங்கன்னு ஆதாரமா எங்களுக்கு உங்களை ஃபோட்டோ வேற எடுக்கணும். நூலகத்தையும் ஃபோட்டோ எடுக்கணும். எந்தப் பிரச்சினையும் இல்லாது பண்ணலாம்."

"எல்லாம் எடுத்துட்டு போங்க. எடிட்டரிடம் காட்டுங்க. நான் சொல்றதையும் ஆசிரியர்ட்ட சொல்லுங்க. அவர் முடிவு பண்ணட்டும். மேலும் விபரம் தேவைன்னா நாளைக்கு வந்துட்டு ஒரு வாரம் சென்னையில்தான் இருப்பேன். அங்கே கேளுங்க. நேரில் வந்துகூட சொல்கிறேன். அதற்கு முன்னால் ஆர்டிகிளாக தயவுசெய்து பண்ண வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டாள்.

"சரி மேடம்."

அன்றைக்கு இரவு ஊருக்குப் போக வேண்டி இருந்ததால் சுரேகாவால் அவர்களுடன் நூலகத்துக்குப் போக முடியவில்லை. ஃபோன் செய்து ’அகரம் பத்திரிகையிலிருந்து வந்தவர்கள் நூலகத்துக்கு வரும்போது நூலகத்தைக் காட்டிவிட்டு வேறு எதுவும் பேச வேண்டாம், எல்லா விபரங்களும் இங்கே சொல்லியாகி விட்டது’ என்று சொன்னாள்.

ஆனால் நூலகத்தில் புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. நூலகம் குறித்த முழு விபரமும் குறிப்பாக எழுதப்பட்டது.

சென்னையில் இருந்த ஒரு வாரத்தில் செய்தித்தாளை அவள் பார்க்கவில்லை.

அந்தச் சமயத்தில், தென்றல்நகர நூலக புகைப்படத்தையும் நூலக விபரத்தையும் குறிப்பிட்டு, நூலகத்தில் புத்தகங்களை வைக்க இடமில்லை; வாசகர்கள் உட்கார்ந்து படிக்க வசதி இல்லை; புத்தகங்கள் கட்டுகளாகக் கட்டப்பட்டு வாசகர்களுக்கு வாசிக்கக் கொடுக்கப்படவில்லை என்ற செய்தியுடன் தென்றல் நகர நூலகத்தின் அவல நிலை என்று தென்மாவட்டங்களுக்கு வரும் பத்திரிகையில் இல்லாமல், அண்ணாமலை காஞ்சிபுரப் பகுதியில் வெளிவரும் நாளிதழில் மட்டும் வரும்படியாக செய்தி வெளிவந்திருந்தது.

நூலகத்துறையினர் இதை எதிர்பார்த்திருந்திருக்கவில்லை.

மாநில நூலக டைரக்டர் லட்சுமி அவர்கள் நேரடியாக தென்றல்நகர நூலகம் குறித்து என்ன நடக்கிறது என்று விருதுநகர் மாவட்ட நூலகரிடம் எழுத்து மூலமாகக் கேட்டு ஆணை பிறப்பித்தார். இதுவரையில் இங்கிருந்துதான் மனு மேலிடங்களுக்குச் சென்றது. முதல் முதலாக நூலகத்துறையின் மேலிடத்திலிருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு போனிலும் எழுத்து மூலமாகவும் வந்த உத்தரவு இது.

இது சாதகமான சூழல்தானா… எதிர்மறை விளைவை அளிக்குமா என்னும் பரபரப்பும் குழப்பமும் ஒருங்கே எழுந்தது.
 

sridevi

Well-known member
#7
மனைவியின் மேல் நெருப்பு வைக்கும் உரிமையை யார் கணவனுக்கு கொடுத்தது. இது என்ன சாடிசம். ஒரு பெண்ணுக்கு இப்படி ஒரு தண்டனை தேவையா? நியாயங்கள் எங்கே மாறுபடுகின்றன?
well said sis(y)(y)(y)(y)
எந்த நூற்றாண்டில் இருக்கிறோம்? உலகம் எங்கே போய்க்கொண்டு இருக்கிறது? நாகரிக மனிதர்களாக இன்னும் நாம் பரிணாம வளர்ச்சி அடையவே இல்லையா…. நாய்க்கு இருக்கும் பாசம் கூட மனிதர்களுக்குக் கிடையாதா…?
arumaiyana varigal sis pathil engu chendru theduvathu, avasara ulagathil avaravar pathi mattum thane ninaikirom
முதல் முதலாக நூலகத்துறையின் மேலிடத்திலிருந்து விருதுநகர் மாவட்டத்துக்கு போனிலும் எழுத்து மூலமாகவும் வந்த உத்தரவு இது.[nalla munetrom sis what's next :unsure::unsure::unsure::unsure:waiting eagerly.
 

Madhumitha

Author
Author
#8
well said sis(y)(y)(y)(y)

arumaiyana varigal sis pathil engu chendru theduvathu, avasara ulagathil avaravar pathi mattum thane ninaikirom
நீங்க வாசிச்சீங்களான்னு நினைச்சேன். வாசிச்சதும் பிடிச்ச இடங்களைக் குறிப்பிட்டு எழுதுனதுக்கு அவ்வளவு நன்றிம்மா sridevi
 

Latest profile posts

banumathi jayaraman wrote on thanikag4u's profile.
My heartiest birthday wishes to you, Thanikag4u Sir/Madam
banumathi jayaraman wrote on Sugan's profile.
My heartiest birthday wishes to you, Sugan Sir
banumathi jayaraman wrote on Safina's profile.
My heartiest birthday wishes to you, Safina Madam
banumathi jayaraman wrote on Priyanandhini23's profile.
My heartiest birthday wishes to you, Priyanandhini23 Madam
banumathi jayaraman wrote on Priya Vijayakumar's profile.
My heartiest birthday wishes to you, Priya Vijayakumar Madam
banumathi jayaraman wrote on kumarrsm's profile.
My heartiest birthday wishes to you, Kumarrsm Sir
banumathi jayaraman wrote on Jeni's profile.
My heartiest birthday wishes to you, Jeni Madam
நண்பர்களே.....அப்பலோ 21 பதிவேற்றம் செய்திருக்கிறேன். வாசியுங்கள். கருத்து பகிருங்கள் .
Apollo - 21 https://www.smtamilnovels.com/community/index.php?threads/apollo-21.628/
Dear frens, uyir vidum varai unnoduthaan -- epi 13 posted. pls read and comment

Advertisements

New Topics