cp final

cp final

ஐந்து வருடங்களுக்கு பிறகு…

**********************************

மெலிதான பனிப்பொழிவில் நனைந்திருந்தது குன்னூர் சாலை… சித்திரையின் இதமான பனி அந்த இடத்தை முழுவதுமாக சூழ்ந்திருக்க மாசு தீண்டா கன்னி காற்றை ஆழ்ந்து சுவாசித்து இரு கைகளையும் சூடு பரத்தி கன்னத்தில் தேய்த்து கொண்டாள் ஆதிரை…

குன்னூர் எப்போதுமே அவளுடைய மனதிற்கு நெருக்கமானதாகவே இருந்திருக்கின்றது… கசப்பான நாட்களின் போதும் இனிப்பான நாட்களின் போதும் குன்னூரை அவளால் தவிர்த்திட முடிவதில்லை… முனைந்ததும் இல்லை… !

கண்ணுக்கு இதமாக சுற்றிலும் படர்ந்திருந்த தேயிலை தோட்டங்களும் டேலியா மலர் தோட்டங்களும் சிகப்பு நிற பூக்களை சிந்தி பனியை தாங்கி நின்று கொண்டிருந்த குல்மொஹர் மரங்களும் மஞ்சளை படுகையாக விரித்து வைத்திருந்த கொன்றை மரங்களும் நீலபூக்களை சிந்தி அழகுக்கு அழகு சேர்த்து கொண்டிருந்த ஜாகரண்டா மரங்களும் சொர்க்கம் என்பது இதுதானோ என்று கேள்வி கேட்டு கொண்டிருக்க… அந்த சூழ்நிலையை அனுபவித்து கொண்டிருந்தாள் ஆதிரை!

“பேஏஏஏ… .” அந்த அமைதியான சூழலை கெடுக்கவென்றே வந்து குதித்தது அந்த வானரப்படை… . அந்த வானரப்படையின் அங்கத்தினர் யாரென்றால் ரக்ஷா, ரோஷன், பிருத்வி எல்லோரும் பத்து வயதை தாண்டிய பெரிய வானரமாக இருக்க அவர்களை பின்பற்றி கொண்டிருந்தது வைஷ்ணவி, ஸ்ரீஹரி.

இதில் வைஷ்ணவி நான்கு வயதான கௌதம் ஆதிரையின் செல்ல மகள்… ஸ்ரீஹரி வருண் சௌமினியின் வாரிசு!

“கொஞ்ச நேரம் நிம்மதியா இருந்தேன்… பொறுக்காதே உங்க கூட்டத்துக்கு… ” கூட்டமென்று திட்டியது வானரப்படையின் தலைவனான கௌதமை சேர்த்து தானே!

அவளுடைய முகத்தில் கோபத்துக்கு பதிலாக அவர்களது குறும்பை அங்கீகரித்த புன்னகை வீற்றிருக்க,

“அதெப்படி விட முடியும்டி பொண்டாட்டி?”

முதுகில் பலமாக அடித்து விட்டு அவளருகில் பின்னாலிருந்து குதித்து அமர்ந்தான் கௌதம்… அனைவருமாக கோடை விடுமுறைக்கு குன்னூரை தஞ்சமடைந்து இருந்தனர்!

முதுகை தேய்த்து கொண்டு அவனை பார்த்து முறைத்தாள் ஆதிரை…

“பக்கத்துல பிள்ளைங்க இருக்குன்னு கொஞ்சமாவது விவஸ்த்தை இருக்கா?”

“ஏன்… இப்போ அந்த விவஸ்தைல என்னடி குறைஞ்சு போச்சு?” கண்ணடித்தவாறு அவன் கேட்டதிலேயே மனைவியின் முறைப்புக்கு காரணம் அவனுக்கும் தெரியுமென்பதை உணர்த்த… மேலும் தீவிரமாக முறைத்தாள்…

“சரிடி பொண்டாட்டி… நீ முறைக்கிற முறைப்புல குன்னூர் சஹாரா பாலைவனமாகிட போகுது… பார்த்து பார்த்து… ” மேலும் அவளை கிண்டலடிப்பதில் இறங்க…

“எஸ் பாஸ்… அத்தை ரொம்ப ஹாட்டா இருக்காங்க… நான் வேணும்னா கொஞ்சம் சில்லுன்னு தண்ணீர் எடுத்துட்டு வரட்டா?” ரோஷன் மாமனுக்கு ஏற்ற மருமகனாக கேட்க… அவனது கழுத்தை இறுக்கமாக கட்டி கொண்டான் கௌதம்…

“ஐஸ் பக்கெட் சேலஞ்சுக்கு தானே ரோஷன்… ” கௌதம் விஷமமாக கேட்க…

“எஸ் பாஸ்… ” வேகமாக தலையாட்டினான் ரோஷன்…

“ஹை சூப்பர்… ”ஆர்ப்பரித்தன மற்ற வாண்டுகள் அனைத்தும்!

சிறு பூவாக குதித்த வைஷ்ணவியை தூக்கி கொண்டு இறுக்கமாக அணைத்து கொண்டான் கௌதம்… பிள்ளைவாசம் அவனை மயக்கியது!

“ம்ம்ம்ம்… .இந்த அறுந்த வாலோட சேர்ந்தா நல்ல பிள்ளைங்க கூட கெட்டிரும் ஆதி… இவனோட போய் இதுங்களை கூட்டு சேர விடறியே!”

சௌமினி வருணோடு நண்பனை வாரிக்கொண்டே வர… சிதம்பரமும் விசாலாட்சியும் சற்று தொலைவில் அமர்ந்து ரசித்து கொண்டிருக்க, டீ கப்புகளோடு வந்த அபிராமி அவர்களுடன் இணைந்து கொள்ள… பார்த்து கொண்டிருந்தவர்களுக்கு மனம் நிறைந்தது…

“இப்படி சேம் சைட் கோல் அடிக்க உன்னால் மட்டும் தான் முடியும் சௌம்ஸ்… ”

“உண்மைய சொல்றதுக்கு பேர் சேம் சைட் கோலா? … வரு உன் அண்ணனை என்னன்னு கேக்க மாட்டியா நீ?” அருகில் அமர்ந்து கொண்டு வழக்கை பார்த்து சிரித்து கொண்டிருந்த வருணை விலாவில் இடிக்க…

“என்னடா… ?” ஸ்ரீஹரியை வாரியெடுத்து தன் மடி மேல் அமர வைத்து கொண்டு கௌதமை பார்த்து சிரித்து கொண்டே அவன் கேட்க…

“என்ன என்னடா?” சௌமினி கிண்டலாக வருணை பார்த்து கேட்க…

“இல்ல செமி… நீ தானே என்னன்னு கேட்க சொன்ன? அதான் கேட்டேன்… ” சிரித்தபடியே கூற

“நல்லா இருக்கே… நீ கேட்கற லட்சணம்… ” செல்லமாக முறைத்தவளின் கழுத்தை இறுக்கி பிடித்து தன்னோடு சேர்த்து கொண்டான் கௌதம்…

“சௌம்ஸ் டார்லிங்… நீ பறன்னு சொன்னா கூட பறந்துடுவான் போல இருக்கே… அதெப்படி இப்படி இவனை நீ மாற்றி வெச்சுருக்க? இம்பாசிபிள்… ” என்று சிரிக்க…

“ஏன்டா… .ஆதி பறன்னு சொன்னா நீ பறக்கற மாதிரியா?” வருண் அவனை வார…

“தோடா… இங்க தேள் கொட்டினா அங்க நெறி கட்டுதே… .”கௌதம் சிரிக்க…

“ஷப்பா இப்போ எனக்கு கண்ணை கட்டுது… .” அதுவரை அங்கே ஆஜராகாமல் இருந்த வள்ளியம்மை சிவக்குமரனோடு வர… அரட்டை கச்சேரி களை கட்டியது…

“ஹய்யோ அம்மு… ரொம்ப நேரமா இங்க மீசைக்கார நண்பா சாங் தான் ஓடிட்டு இருக்கு… அதை பார்த்து கண்ணு கட்டி போய், மயங்கி கிறங்கி உட்கார்ந்து இருக்கேன்… ” ஆதி நொந்து போனது போல கூற… மடியில் மகளை வைத்து கொண்டு வாய் விட்டு சிரித்தான் கௌதம்…

“ஏன் ஆதிக்குட்டி… மாமனோட அழகுல மயங்கி போய் உட்கார்ந்து இருந்தாயா?”

ஆதியிடம் அவன் கிண்டலாக கேட்க… அவள் அவனை கொலைவெறியாக பார்பதாக பெயர் செய்தாலும் அதில் பொங்கி வழிந்த காதலை உணராதவனா நம் கௌதமன்?

மகளை மடியில் வைத்து கொண்டு பிருத்வியும் மற்ற வாண்டுகளும் சுற்றி நிற்க அவன் அமர்ந்திருந்த கோலம் அவளை வசீகரித்தது…

இந்த நிலைக்காக அவன் போராடிய நெடிய போராட்டம் அவள் மனதில் வந்து போனது… அதிலும் அவள் இரண்டாவது முறை கருவுற்ற நிமிடத்திலிருந்து ஒவ்வொரு நொடியும் அவளை தாங்கிய விதமும் அவனது துடிப்பையும் ஒட்டு மொத்த காதலையும் உணர்ந்த அந்த கணங்களில் நெக்குருகி தான் போனாள்… இத்தனை காதலையும் அவன் மறைத்ததும் அவள் மறுத்ததும் அவள் மனதில் படமாக!

அதிலும் வைஷ்ணவியை பிரசவித்த சமயத்தில் பிருத்விக்கும் உடல்நிலை சரியில்லாமல் போய்விட ,ஒரே மனதாக பிறக்கும் குழந்தையின் தொப்புள் கொடி ரத்தத்தை சேகரித்து ஸ்டெம் செல் அறுவை சிகிச்சையை செய்து விட எண்ணி ஏற்பாடுகளை செய்துவிட்டாலும்… அவனுக்கு மனைவி மகன் என இருபுறமும் தவிப்பு!

அப்போதும் மனைவி பிரசவித்த போது அவளுடனே அறுவை சிகிச்சை அறையில் இருப்பேன் என பிடிவாதம் பிடித்து முதன் முதலில் கண்ணீரோடு மகளை கையில் ஏந்திய கணவனை கண்டு காதல் கண்மண் தெரியாமல் வழிந்தது!

“தேங்க்ஸ் டா குட்டிம்மா… ” ஆதிரைக்கு நன்றியுரைத்தாலும் அவனது கவனமெல்லாம் கையில் பூப்பந்தாக இருந்த குழந்தையின் மேலே இருக்க… குழந்தையின் சிவந்த மென்மையான பாதங்களில் இதழ் பதித்தான்…

“ம்ம்ம்… முதல்லையே என்னை கண் தெரியாது… மகன் மகன்னு உயிரை விடுவீங்க… இனிமே சுத்தம்… ” ஆற்றாமையோடு கூறுவதாக காட்டிக்கொண்டாலும் தன் கணவனை பெருமையாக பார்த்தாள் ஆதிரை!

“போட்டிக்கு வந்துடுவியே… ” என்று சிரித்தவன்… மகளை கையில் ஏந்தியவாறே ஆதிரையின் நெற்றியில் முத்தமிட்டு,

“நீதான்டி என்னோட முதல் குழந்தை… நீ கொடுத்த வரம் தான் என்னோட ரெண்டு குழந்தைங்களும்… நீயில்லாம நான் இல்லடா… ” களைப்பில் படுத்திருந்த மனைவியின் கண்களை பார்த்து உருகியவனை குறும்பாக பார்த்தாள் ஆதிரை… இவன் இது போலவெல்லாம் பேசுவது அரிதிலும் அரிதாயிற்றே… ! தான் ஏதாவது சென்டிமென்டலாக பேசினாலும் கிண்டலடித்து ஒரு வழியாக்கி விட்டுத்தானே மறுவேலை பார்ப்பான்…

“மாம்ஸ்… சரக்கடிச்சு இருக்கீங்களா?” அந்த நேரத்திலும் அவனை வாரியவளை விஷமமாக பார்த்தான்…

“உனக்கிருக்க கொழுப்பு ஊர்ல எவளுக்குமே இருக்காதுடி… வீட்டுக்கு வா… உனக்கு வெச்சுக்கறேன்… .” சிரித்தபடியே கூற..

“இந்த வெச்சுக்கற பிசினெசை விட மாட்டீங்களே… ” சிரித்தவளின் காதை திருகி,

“எனக்கு நோ ப்ராப்ளம்… எப்போ வெச்சுக்கலாம்?” என்று கண்ணடிக்க…

“கர்பியுல இருக்கும் போதே இந்த லொள்ளா?”

“தீண்டாமை ஒரு பாவ செயல்… தீண்டாமை ஒரு பெரும் குற்றம்… தீண்டாமை ஒரு மனித தன்மையற்ற செயல் ஆதி… ” என்று கூறியவன் வாய்விட்டு சிரிக்க…

“அடப்பாவி எதுக்கு எதை இழுக்கறீங்க?” கூறிக்கொண்டிருக்கும் போதே உள்ளே வந்த செவிலிப்பெண்… ஆதிரை அறியாமல் அவனிடம்

“சர்… பிருத்விக்கு தியேட்டர் ரெடி ஆகிடுச்சு… ” என்று கிசுகிசுக்க… கௌதம் உடல் விறைத்து அதுவரை மனைவிக்காக அவளது மனநிலையை இலகுவாக்க பேசிக்கொண்டிருந்தது மாறி… தீவிர முகபாவத்தோடு… குழந்தையை அவளிடம் கொடுத்து விட்டு சென்றான்…

“வந்துடறேன் ஆதி… ” என்று போக முயல…

“மாமா… பிருத்வி குட்டியை கொஞ்சம் அனுப்பி வைங்க… அவன் தான் தங்கச்சி பாப்பா மேல உயிரை வெச்சுட்டு இருந்தான்… ” இயல்பாக கூறியவளை உற்று பார்த்தான்… உள்ளுக்குள் சிலபல நிலநடுக்கங்கள்!

ஆதிரையிடம் பிருத்வி உடல் நலமில்லாமல் இருந்த செய்தி மறைக்கப்பட்டிருக்க… வருண் அவனுடன் இருக்க… மருத்துவர்கள் பிறந்த குழந்தையிடமிருந்து ஸ்பெஸிமன்களை கலெக்ட் செய்திருந்தனர் பிறக்கும் போதே!

பிறக்கும் போதே உடன் பிறந்தவனின் உயிரை காப்பாற்ற போகும் தன் மகளை பார்க்கும் போது கண்களில் நீர் சூழ்ந்தது அவனுக்கு! ஆனால் இது உடையும் நேரமல்லவே!

“கொஞ்ச நேரம் வெய்ட் பண்ணு ஆதி… இப்போ அவனை அழைச்சுட்டு வந்தா பாப்பாவுக்கு இன்பெக்ஷன் ஆகிடும்… கொஞ்சம் செட்டில் ஆகட்டும்டா… ” என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் பிருத்வியை தேடி ஓடினான்!

அடுத்து கழிந்த நேரமெல்லாம் முழுதாக தவிப்பில் கரைய… ஐந்து மணி நேரத்திற்கு பிறகு தங்கையின் திசுக்களை ஏற்று கொண்டு வெற்றிகரமாக வெளியே வந்தான் பிருத்வி!

ஒவ்வொருவரின் கண்களிலும் ஆனந்த மழை!

தனக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்தவனை என்ன செய்வது? ஆனால் அது தனக்காகவும் மகனுக்காகவும் அல்லவா!

அவனை கோபித்து கொள்ளவே அவளால் முடியவில்லையே!

காதல் பெருநெருப்பென இருக்கும் பட்சத்தில் இது போன்ற சிறு பொய்களும் காற்றாகி அந்த காதலெனும் பெரு நெருப்பை ஊதி மேலும் பெரிதாக்கி விடுகின்றது அல்லவா!

****

இப்போதும் அந்த நினைவில் காதல் வழிய கணவனை பார்வையால் கபளீகரம் செய்து கொண்டிருந்தவளை பார்த்து,

“ஓஓஓஹோஓஓஓ… .” அனைவருமாக ஓ போட…

வெட்கத்தில் முகம் சிவந்தாள்… அவளது வெட்கம் அவனுக்குள் ஏதேதோ சந்தோஷங்களை விதைத்தது…

“மாமா… .பைக் ரைட் போகலாமா?” ரக்ஷா ஆரம்பித்து வைக்க..அத்தனை பொடிசுகளும் அதை மந்திரமாக பிடித்து கொண்டன…

அங்கு வந்தால் அவனுடைய டுகாட்டியில் ரைட் போகாமல் பிள்ளைகள் இருப்பதில்லை… ஆனால் இந்த பழக்கத்தை ஆரம்பித்து வைத்ததே ஆதிரை அல்லவா!

இருவருக்குமிடையே எல்லாம் சரியாகி தேனிலவு குன்னூரில் தான் என்று அவளோடு பயணித்தவனை… அவர்களது வீட்டில் தான் தங்க வேண்டுமென்று ஆயிரம் முறை வேண்டி அங்கேயே தங்க வைத்திருந்தார் சிவகாமி!

“ஏன் இவ்வளவு பிடிவாதமா இங்கயே வரீங்க?” புரியாமல் ஆதிரை கேட்க, அதற்கு சிரித்து விட்டு…

“விட்ட இடத்தில் தானே பிடிக்க முடியும் ஆதி… என்னுடைய காதலை தொலைத்த இடம் இது… அதை இங்கயே மீட்க நினைக்கிறேன்… ” இலகுவாக கூறிவிட்டு அவள் முகம் பார்த்தவனை கண்களில் நீர் கோர்க்க பார்த்தாள்…

“தொலைச்சது நீங்க மட்டுமா?”

அவளது கேள்விக்கு கௌதம் பதில் கூற முடியாமல் தவிக்க..

“நான் உங்களை தொலைத்துவிட்டு,எனது வாழ்க்கையை தொலைத்துவிட்டு அதன் அர்த்தம் புரியாமல், நான் வாழ்வதன் அர்த்தம் தெரியாமல் திக்கு தெரியாத காட்டில் அலைந்து கொண்டிருந்தேன்… உங்க காதலை உணர்ந்த போதுதான் என்னை நானே மீட்க முடிந்தது கௌதம்… ”

உணர்வுகளின் பிடியில் சிக்கிய, கண்களில் நீரோடு அவள் கூறிய வார்த்தைகள் கௌதமை ஏதோ செய்தது…

“சாரிடா கண்ணம்மா… நானும் உன்னிடம் வெளிப்படையாக பேசியிருக்க வேண்டும்… ”

ஒருவாறாக தன்னை மீட்டு கொண்டு,

“ப்ச்… விடுங்க மாமா… இனிமேல் காம்பன்செட் செய்து விடலாம்… ”

“காம்பன்சேஷன் தானே… .செய்து விடலாம்… ” என்று கண்ணடித்தவனை பார்த்து வெட்கத்தோடு சிரித்தாள்… ஆனால் வெளிப்படையாக காட்டி கொள்ளாமல்,

“சரி… அதென்ன… நான் இல்லாதப்ப தான் உங்களுக்கு கவிதை அருவி கொட்டுமா? இப்போவே எனக்கு ஒரு கவிதை சொல்லுங்க… ”

“எனக்கு தெரியாம திருட்டுத்தனமா படிச்சுட்டு இந்த லொள்ளு வேறயா?” அவளது காதை அவன் திருக…

“அதனால தான் இந்த திருட்டு சாமியாரோட திருட்டுத்தனம் எல்லாம் எனக்கு தெரிஞ்சுது… இல்லைன்னா எனக்கு தெரியுமா என்ன?” கல்லூரி கால ஆதிரை மீண்டிருக்க… அவளது குரலில் டன் டன்னாக கேலி வழிந்தது…

“உனக்கு என்ன தெரிய வேண்டும்டி? என் கிட்ட கேளு… நான் சொல்லித்தரேன்… ” கண்களில் விஷமத்தோடு அவன் கேட்க… அவள் அவனை பார்த்து வணங்கினாள்…

“நீங்க சொல்லி தரீங்களா? ஆளை விடுங்க… ஹாதிராம் போல இன்னொரு ராம் பற்றி டீச் பண்ண ஆரம்பிச்சா என் நிலைமை என்னாகறது?”

புன்னகையோடு கூறியவளை பார்த்து வாய்விட்டு சிரித்தான்… அவள்

“ஆனா நீங்க மென்ஷன் செய்த அந்த வரி என்னை உலுக்கிடுச்சு கௌதம்… ” மென்மையாக அவள் கூற… அவன் பதில் கூறாமல் அவளை பார்த்தான்…

“ஹாத்திராமை மறந்துவிட்டானே சப்தகிரிவாசன்… ” என்றவள் இடைவெளி விட்டு…

“மறக்கனும்ன்னு எவ்வளவுதான் ட்ரை செய்தாலும் கூட மறக்கவே முடியலையே… ” உணர்ந்து கூற… அவளை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்…

“வேண்டாம் ஆதி… போனது போனதாவே இருக்கட்டும்… ” உடைய காத்திருந்த குரலில் அவன் கூற… அவளுக்கு உள்ளுக்குள் சிலிர்த்தது… அந்த சூழ்நிலையை மாற்ற வேண்டி,

“சரி… கவிதை… கவிதை… .சொல்லுங்க… ” சினுங்கியவளை பார்த்து…

விரல் தொடும் தூரம் நீ

இமை படும் தூரம் நீ

காத்திருக்கின்றன… .

ஐம்புலன்களும்

உன் காதலுக்காக!

அவனது கைகளை தன் கன்னத்தோடு வைத்து கொண்டு குளிரோடு அவனது கவிதையையும் ரசித்தவள்,

“இன்னும் என்னன்ன சர்ப்ரைஸ் வெச்சு இருக்க கௌதம்?” காதலோடு அவள் கேட்க…

“ம்ம்ம் நிறைய… நீ தான் எக்ஸ்ப்ளோர் பண்ண மாட்டேங்கிற… ” என்று கண்ணடித்தவனின் குறும்பை கண்டு முகம் சிவந்தாள் ஆதிரை!

“எக்ஸ்ப்ளோர் பண்ணலாமே மாம்ஸ்… ஆனா இன்னும் நீ எனக்கு ஒரு லெட்டர் கொடுக்கலை… கிப்ட் கொடுக்கலை… ஒரு ஐ லவ் யூ கூட சொல்லலை… .” என்று சிணுங்க…

“கிப்ட்டா… அதான் பிருத்வி இருக்கானே… ” என்று விஷமமாக சிரித்தவனின் தலையில் மட்டென்று ஒன்று வைத்தாள் ஆதிரை!

“டேய் பிராடு… .” என்று சிரித்தவளின் பார்வையில் விழுந்தது அவனது டுகாட்டி… அவளது பார்வையை தொடர்ந்தவனின் பார்வையில் கணிக்க முடியாதொரு உணர்வு!

ஒரு காலத்தில் அவனது இரண்டாம் உயிராக இருந்து அவனது மகிழ்ச்சி, கோபம் , ஆற்றாமை என அனைத்துக்கும் சாட்சியாக இருந்த அவனது டுகாட்டி! அந்த உணர்வுகள் அவனை போட்டி போட்டு கொண்டு ஆக்கிரமிக்க… மெளனமாக அவளை பார்த்தவனின் பார்வையில் இருந்தது என்ன?

அவளும் மௌனமாகவே அவனது பார்வையை எதிர்கொள்ள, அதே உணர்வோடு மெல்ல டுகாட்டியின் அருகில் சென்றான்… மனம் படபடவென அடித்து கொண்டது… எண்ணங்கள் கடந்த காலத்தின் கசப்புக்களை ரிவைண்ட் செய்தது ,தவிர்க்க முடியாமல்!

செல்பேசியில் சிதம்பரத்தை அழைத்து ஏதோ கூறிய ஆதிரை, அதை கௌதமிடம் தந்தாள்… .

மௌனமாகவே செல்பேசியை வாங்கி காதில் வைக்க…

“அப்பு… இப்போவாவது அந்த வண்டிய எடுத்துக்க ராஜா… ” என்று சிதம்பரத்தின் குரல் பிசிறடிக்க…

கௌதம் எதையும் பேசாமல் டுகாட்டியை உற்று பார்த்தான்… இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சுமுகமாக இருந்தாலும் இந்த விஷயத்தில் மகன் தன்னிடம் சமாதானமாக போவதில்லை என்பது திண்ணம் என்றே நம்பியிருந்தார் சிதம்பரம்!

“நீ எடுக்கலைன்னா இனிமே கூட அந்த வண்டி அங்கவே தான் இருக்கும்… வருணுக்கு நான் நல்ல அப்பாவா இருந்திருக்கேன்… ஆனா என் மூத்த பையன் கிட்ட நான் சறுக்கிட்டேன்… இனியாவது இந்த அப்பா திருந்திக்க ஒரு வாய்ப்பு கொடு கண்ணப்பா… ” உடைந்த அவரது குரல் அவனையும் உடைக்க…

“அப்பா… .என்னப்பா நீங்க… . மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்துது… அவ்வளவுதானே தவிர… வேற ஒன்றுமில்லை ப்பா… ”

பேசிமுடித்து விட்டு ஆதிரையிடம் செல்பேசியை தந்தவனின் கண்களும் லேசாக கலங்கியிருக்க…

“மாமா… .” தோளில் கை வைத்தாள் ஆதிரை… சுதாரித்து கொண்டவன் அவளை பார்த்து…

“ஹேய் பொண்டாட்டி… என்ன ரெடியா?” விஷம சிரிப்போடு அவளை பார்த்து கேட்க…

“என்ன ரெடியா?” ஒரு மார்கமாக அவனை கேட்டாள் அவனது மனைவி!

“ஹஹா… ஜஸ்ட் டுக்காட்டில ஒரு ரைட் தான்… நீ வேறென்ன நினைச்ச?” கிண்டல் சிரிப்போடு அவன் அவளை வார… அவனது முதுகில் பலமாக வைத்தாள்…

“நீ ஒரு ஜூனியர் எஸ் ஜே சூர்யா மாமா… டபுள் மீனிங் ஓவரா இருக்கு… ” சிரித்து கொண்டே பைக்கில் ஏறி அமர்ந்தவளை திரும்பி பார்த்தவன்…

“அபச்சாரம் அபச்சாரம்… எனக்கெல்லாம் டபுள் மீனிங் தெரியவே தெரியாது… ஒன்லி சிங்கிள்… தட் டூ வெரி வெரி பேட்… ” கண்ணடித்தவனின் கழுத்தை நெரித்தாள்…

“டேய்… வேண்டாம்… ” என்று அவனை அவள் வார… அவளை அவன் வார… சிரிப்பு பட்டாசாக தொடர்ந்த அந்த பயணத்தை போலவே தற்போது பிள்ளைகளையும் அமர்த்தி கொண்டு குன்னூர் சாலைகளில் பறந்து கொண்டிருந்தான்…

ஒருவர் மாற்றி ஒருவர் என்று விடாமல் பறந்து கொண்டிருக்க… அதை பார்த்து கொண்டே இருந்த சௌமினி கௌதமிடமும் வருணிடமும்,

“ரியலி ஐ மிஸ் மை ஸ்கூல் டேஸ் … எவ்வளவு சந்தோஷமான நாட்கள்… இல்லையா?” உணர்வுபூவமாக உணர்ந்து கூற,

“எஸ்… அப்போ இருந்த ஈகோ க்லாஷஸ்,வெட்டி பந்தா, சண்டை , சமாதானம்ன்னு எல்லாத்தையும் நினைச்சு பார்த்தா இப்போ சிரிப்பு வருது செமி… பட் அந்த என்ஜாய்மென்ட் தனி தான்… ” மனைவியாக இல்லாமல் தோழியாக பார்த்து அவன் கூற… மூவருமே அந்த நாட்களை நோக்கி பயணிக்க ஆரம்பித்து இருந்தனர்… .

“ஆமா வருண்… பைக் ரைட்ஸ் ,சாக்கர் மேட்ச் ,கெமிஸ்ட்ரி லேப் இதையெல்லாம் இப்போ நினைச்சா கூட சில்லுன்னு இருக்கில்லையா?” கௌதம் கைகளை கட்டி கொண்டு கேட்க…

ஆதிரை வள்ளியம்மையோடு குழந்தைகளிடம் போராடி கொண்டிருந்தாள்… வைஷ்ணவி அவளை தலையால் தண்ணீரை குடிக்க வைத்து கொண்டிருந்தாள்…

“ஆமா கௌதம்… யூ ஆர் கரெக்ட்… . அட்வென்ச்சர் இல்லாத லைப் ஸ்பைஸ் இல்லாத சாப்பாடுன்னு தானே சொல்வ… ” என்று வருண் சிரிக்க… அதை பார்த்த கௌதமின் முகத்திலும் சிரிப்பு படர்ந்தது…

“ஹஹஹா… யூ ஆர் ரைட் டா… ”

“ஓகே… நாம மூன்று பேரும் இப்போ அந்த அட்வெஞ்சரை செய்யலாமா?” வருண் கௌதமையும் சௌமினியையும் பார்த்து கேட்க… இருவரும் ஆர்வமாக என்னவென்பதை போல பார்க்க…

“உன்னோட டுக்காட்டில மூன்று பேரும் ரைட் போறோம்… .” ரகசிய குரலில் அவன் கூற… மற்ற இருவரது முகமும் தவுசன்ட் வாட்ஸ் விளக்கானது…

“வாவ் சூப்பர்… .” கௌதம் கை தட்டி…

“க்லென் மார்கன் எஸ்டேட்ஸ் வரைக்கும்… .” என்று முடிக்க…

“ஹேய்… சூப்பர்… ஆனா மூன்று பேர் எப்படி வரு?” புன்னகையிலும் வருத்தத்தோடு சௌமினி கேட்க…

“அது தான் சௌம்ஸ் டார்லிங் அட்வெஞ்சர்… ” கௌதம் சிரிக்க…

ஆதிரைக்கும் வள்ளியம்மைக்கும் குழந்தைகளுக்கும் கை காட்டியவன் க்லென் மார்கன் எஸ்டேட்டை நோக்கி டுகாட்டியில் பறக்க ஆரம்பித்து இருந்தான்… வருண் சௌமினியோடு!

வாழ்தல் ஒரு வரம்!

வாழ்க்கை அழகானது!

இனிப்பான இந்த சாக்லேட் பக்கங்கள் எப்போதும் தொடரும்!

சுபம்

error: Content is protected !!