cp12

cp12

அத்தியாயம் பன்னிரெண்டு

பாதைகள் பயணங்களை தீர்மானிக்காதொரு

 ஊர் சுற்றல் வாய்க்கும் நாளொன்றில்

உன்னைக் கண்டடைவேன்!

 -அன்று எழுதிய டைரியிலிருந்து

ஊட்டியை தாண்டி பைகாராவை நோக்கி தேசிய நெடுஞ்சாலை அறுபத்தி ஏழில் பறந்து கொண்டிருந்தது அந்த ஆயிரத்து இருநூறு சிசி டுகாட்டி… மலை பாதையில் அனாயசமாக வளைந்து திருப்பி கொண்டு முன் சென்ற நண்பனின் ஜிப்சியை தோற்கடிக்க… பின்னால் அமர்ந்திருந்த சௌமினி சந்தோஷ உச்சியில் கத்தினாள்… ஜிப்சியில் இருந்த நண்பர்களை பார்த்து!

“ஹேய்ய்ய்ய்ய்… ” அவளது கையில் கௌதமுடைய பியர்கேன் பொங்கியது…

ஊட்டியில் அவ்வளவாக உரைக்காத குளிர் அந்த வனப்பகுதியில் அதிகமாகவே உறைக்க… அணிந்திருந்த விண்டர் ஜாக்கெட்டை இறுக்கமாக இழுத்து விட்டு கொண்டு கௌதமை நெருங்கி அமர்ந்தாள்… அவர்களது தற்போதைய தகுதி பனிரெண்டாம் வகுப்பை கடந்து கொண்டிருப்பது…

“டேய் கூஸ்… ரொம்ப குளிருதுடா… ” குளிரில் வார்த்தை தந்தியடிக்க அவனது முதுகில் ஒன்டியவளை பார்த்து பழிப்பு காட்டினான் ஜிப்சியில் இருந்த சாண்டி… ராணுவ அதிகாரியின் மகன்… இருப்பது வெலிங்கடன்! ஜிப்சியில் வாவென அவன் சௌமினியை அழைத்து வைக்க… அவளுக்கோ கௌதமுடைய டுகாட்டியை விட மனமில்லை…

சௌமினி சென்னையில் இருந்த மிக முக்கியமான பள்ளியின் தாளாளரான சந்திரசேகரனின் மகள்… ஒற்றை பெண்!… அவர்களது பள்ளியில் படித்தால் அவளது குறும்பு அதிகமாகிவிடும் என்று பயந்த அவளது தந்தை அவளை லாரன்சியன் ஆக்கிவிட… அவள் கௌதம் ஜோதியில் நான்காம் வகுப்பு முதலே ஐக்கியமாகி விட்டாள்…

அவர்களது குழுவில் இன்னொரு பெண் சாக்ஷி… அவளும் மற்றொரு ராணுவ அதிகாரியின் மகள்… இந்த குழுவுக்கு பெயரே ஜிஎஸ் கியுப்… எங்கு போவதானாலும் நால்வரும் இணைந்து கொள்வது வழக்கமாக இருந்தது… சாண்டி மற்றும் சாக்ஷி வெலிங்கடனில் இருந்தாலும் செயின்ட் லாரன்ஸில் போர்டிங் கட்டாயம் என்பதால் அவர்களது வாசமும் அங்கு தான்… ஆனால் வீக் என்ட் அவுட்டிங்கில் ஒன்றாக வெலிங்கடனை இரண்டு படுத்துவது தொடங்கி சுற்றியும் உள்ள இடங்களுக்கு பறந்து விடுவர்…

கெளதம் மிகவும் ஆசைப்பட்டு வாங்கிய பைக் டுகாட்டி… அனாயசமாக இருபத்தி இரண்டு லட்சங்களை விழுங்கிய அவனுடைய ஆசை காதலி! பத்தாம் வகுப்பில் பள்ளிகளுக்கு இடையேயான புட் பால் மேட்சில் வெற்றி பெறுவேன் தந்தையிடம் பந்தயம் கட்டி வாங்கிய பைக் அது…

“குளிருதா? வேணும்னா ஸ்பீடை குறைக்கவா?” சிரித்து கொண்டே கெளதம் கேட்க…

“உதைப்பேன்டா ராஸ்கல்… ஸ்பீடை இன்னும் ரைஸ் பண்ணு… ” அவளுடைய பேவரிட் டுகாட்டியில் அதி வேகமாக பறப்பது அவளுக்கு மிக மிக பிடித்த ஒன்று…

பைகாராவை அடைந்த போது குளிர் மேலும் தீவிரமடைந்து இருந்தது… நீலகிரியில் பாரம்பரியமாக வாழும் இருளர், பணியர், குறும்பர், தோடவர், படகர், கோதவர் ஆகியவர்களில் தோடவர்கள்அதிகமாக வாழும் சிறு கிராமம் ஷோலூர்… அவர்களுக்கு பைகாரா புனித நதி!

முக்குர்த்தி மலையில் உருவாகி க்லன் மார்கன் தேயிலை தோட்டங்களை நனைத்து ஷோலுரை வந்தடையும் அந்த நதி, அதன் பின் அருவியாக விழுந்து எழும் அழகை என்னவென்று சொல்ல?

அந்த பரந்த புல்வெளியில் ஓடி சென்று மூச்சு வாங்க அமர்ந்தவளை தொடர்ந்தான் கௌதம்… பின்னே ஜிப்சியில் சாண்டியும் சாக்ஷியும்… ! கௌதமும் சாண்டியும் எப்போதும் போல பெர்முடாஸ் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஹூடியில்… சௌமினியும் சாக்ஷியும் த்ரீ போர்த் மற்றும் டாப்ஸில்… ! கௌதம் கண்களை கூலர்ஸ் மறைக்க… அந்த பதினேழு வயதிலேயே ஆளை அசரடிக்கும் ஆளுமையோடு இருந்த அவனுக்கு பெண் நண்பிகள் எக்கச்சக்கம்… அந்த அளவு கவிழ்க்கும் வித்தையை அறிந்தவன் என்பதில் அளவில்லா பெருமையும் கூட…

“எனக்கு மடங்காம ஒரு பொண்ணா… நெவர்… ” அடிக்கடி சௌமினியிடம் கூறி முறைப்பை பெற்று கொள்ளாவிட்டால் உண்ட உணவு ஜீரணம் ஆகவில்லையென நினைக்கும் வர்க்கம்!

“குளிருதுன்னு சொல்லி என் பியரை காலி பண்ணிடாத லூசு… ” அவளிடமிருந்து பிடுங்கியவன் அருகில் அமர்ந்து அவனது வாயில் பியரை சரித்து கொள்ள… அவனை முறைத்த சௌமினி…

“கர்மம் கர்மம்… இந்த கேவலமான சரக்கை உன்னோடவே வெச்சுக்க… இதுவும் இந்த நாத்தமும்… ” முகத்தை சுளித்து கொண்டு அவனை அடிக்க… ஜிப்சியிலிருந்து குதித்த சாண்டியும் சாக்ஷியும் அவள் பக்கத்தில் தொப்பென்று அமர்ந்தனர்…

“வாட்… பியர் சரக்கா? ஹே அது ஜஸ்ட் பார்லி வாட்டர் மா… ” என்று கௌதம் சிரிக்க… சாண்டி ஹைபை கொடுத்தான்…

“ம்ம்ம்… ” சௌமினி முறைக்க… கெளதம் எழுந்து கொண்டான்… சாண்டியும் சாக்ஷியும் அவனுக்கு கட்டை விரலை உயர்த்தி காட்ட… சௌமினியோ சிறிது பயந்திருந்தாள்…

“வேணாம் கெளஸ்… தேவையா உனக்கு இந்த ரிஸ்க்?”சற்று பயந்த குரலில் அவள் கூற… மற்ற மூவரும் சிரித்து கொண்டனர்…

“அட்வெஞ்சர் இல்லாத லைப் ஸ்பைஸ் இல்லாத சாப்பாடு சௌம்ஸ் டார்லிங்… இட் வோன்ட் டேஸ்ட்… ” கண்ணடித்து கொண்டு கௌதம் கூற… காலி பியர் கேன் அவனை நோக்கி பறந்தது… அதில் லாவகமாக தப்பித்தவன்… அவளுக்கு பழிப்பு காட்டி கொண்டு வழிந்து ஓடும் அந்த பைகாரா அருவியை நோக்கி ஓடினான்… அவனுக்கு பின்னே சாண்டியும் சாக்ஷியும்…

மூவருமாக ஓடியவர்கள் அவசரமாக ஷூக்களை கழட்டி விட்டு வேலியை தாண்டி குதித்தனர்… சௌமினிக்கோ மனம் படபடத்தது… சுபாவத்தில் சற்று பயந்தவள் சௌமினி… மலங்க மலங்க விழித்து கொண்டு அவன் பக்கத்தில் வந்தமர்ந்த அந்த குட்டி தேவதையை அவனுக்கு நான்காம் வகுப்பு முதலே பிடித்திருந்தது…

அவளது பயங்களை உணர்ந்தாலும் அவளை விட்டுவிட்டு எங்கும் சென்றதில்லை அவன்… ஆரம்பத்தில் பயந்து அலறினாலும் கூட தன்னோடு பைக்கில் அமர வைத்து அதிவேகமாக பறப்பான்… நாளடைவில் அந்த பயணங்களை பார்த்து பயந்தது போய் விரும்பவும் ஆரம்பித்து விட்டாள் சௌமினி…

உயரங்களை பார்த்து நடுங்கியவளை ட்ரெக்கிங் பயணங்களுக்கு வலுக்கட்டாயமாக அழைத்து சென்று மலையேற வைத்திருந்தான்… இரண்டு வாரங்களுக்கு முன் நால்வருமாக முக்குர்த்தி மலையை தஞ்சமடைந்து இருந்தனர்… ட்ரெக்கிங்கிற்காக!

இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது இப்போது அவன் செய்வது ஒன்றுமே இல்லைதான்… ஆனாலும் அப்போதைய காலநிலை தான் அவளுடைய மனதில் கிலியை பரவ செய்திருந்தது… ! கடுமையாக மழை பொழிய ஆரம்பித்து இருக்கும் நேரத்தில்… ,பைகாரா நதியில் எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் வர கூடும் என்ற நிலையில்… ,அந்த காட்டாற்றின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பது அவ்வளவு அவசியமா என்ற பயம்… !

அவள் பயந்து கொண்டிருக்கும் போதே கற்களில் கால் வைத்தவர்கள் ஒவ்வொரு கல்லாக மாறி மூவருமே கையை பிடித்து கொண்டு ஆற்றின் நடுவில் உள்ள கற்களில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுக்க… சௌமினி நடுங்கி கொண்டே அவளிடமிருந்த கேமராவில் சுருட்ட ஆரம்பித்தாள்!

“சௌம்ஸ் நீ எடுத்தது போதும்… இப்போ இங்க வா… ” என்று அவன் அழைக்க… வேகமாக மறுத்து தலையாட்டினாள்…

“நோ… முடியாது… நான் வரமாட்டேன்… ” தண்ணீரை பற்றிய பயமும் அவளுக்கு சேர்த்து கொள்ள… கௌதம் அங்கிருந்தே முறைத்தவன் அவளை நோக்கி வர ஆரம்பித்தான்… கால்களுக்கு இடையில் காட்டாற்று நீர் ஆவேசமாக செல்ல ஆரம்பித்து இருந்தது… சாண்டியும் சாக்ஷியும் கரைக்கு திரும்பியிருந்தனர்…

சௌமினியிடமிருந்து கேமராவை பறித்தவன் அதை சாண்டியிடம் கொடுத்து எடுக்க கூறி விட்டு கைபிடித்து நீருக்கு நடுவே இழுத்து சென்றான்… ஒவ்வொரு கல்லாக லாவகமாக தாண்டி கொண்டிருக்க… சௌமினி அவன் இறுக்கமாக பிடித்திருந்த கையை விட முடியாமல் தவித்தாள்…

“வேணாம் கௌஸ்… பயமா இருக்கு… வா கரைக்கு போகலாம்… ப்ளீஸ்… ” அவனிடம் கெஞ்ச… அதை எல்லாம் கண்டுகொண்டால் அவன் கௌதம் இல்லையே… வயதுக்குரிய கண்மூடித்தனமான தைரியம் துணிச்சல் ப்ளஸ் என்னவாகிவிட போகிறது என்ற அலட்சிய மனோபாவம்… !

பிடிவாதமாக அவளை தன்னருகே நிற்க வைத்து அவளை கழுத்தோடு இழுத்து தன்னருகே நிற்க வைத்து அவளது தலைக்கும் கொம்பை வைக்க… சாண்டி ஜூம் செய்து சிரித்து கொண்டே படமெடுக்க ஆரம்பித்தான்…

அவளை சற்றும் நகர விடாமல் கௌதம் கழுத்தோடு இறுக்கி பிடித்திருக்க, நின்று கொண்டிருந்த கல் லேசாக வழுக்கியது சௌமினிக்கு… தடுமாறி ஒரு கால் மடங்கி நீரில் விழ போக, கரையில் நின்று கொண்டிருந்தவர்களுக்கு தூக்கி வாரி போட்டது… !

கௌதம் சுதாரித்து கொண்டு அவளை இடையோடு சேர்த்து இறுக்கி பிடித்து கொள்ள… நிம்மதி பெருமூச்சு விட்டாள் சௌமினி…

இருவரையும் வெகு கோபமாக இடையிட்டது ஒரு குரல்…

“ஹேய் இடியட்… ஸ்டுபிட் செமி… மேல வந்து தொலை… வெள்ளம் வர்ற மாதிரி இருக்கு… ” அவளை மட்டும் அழைக்கும் குரல் யாருடையது என்று கூற தேவையில்லையே… கௌதமின் முகத்தில் புன்னகை படர்ந்தது… திரும்பி சௌமினியின் முகத்தை பார்க்க… அங்கும் அதே புன்னகை…

கரையில் வருண்!

“என்ன?… சர் கொதிக்கறார் சௌம்ஸ்… சம்திங் சம்திங் ஏதாவது மேட்டர் ஓடுதா?” கைகள் மட்டும் அவளது இடையை விட்டு விடாமல் கரையை நோக்கி வந்துகொண்டே நக்கலாக அவளை கேட்க… அதை பார்த்த வருணுக்கு முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்து கொண்டிருந்தது!

“மண்ணாங்கட்டி… ஏன்டா கடுப்பேத்தற? மேட்டரும் இல்ல மண்ணாங்கட்டியும் இல்ல… அவனுக்கு உன் கிட்ட நான் பேசினா பிடிக்காது… உனக்கு அவன்கிட்ட பேசினா பிடிக்காது… ரெண்டு பேருமா என்னை நல்லா டார்ச்சர் பண்றீங்கடா… ” கடுப்பாக அவள் கூறிய மறுமொழியில் வாய் விட்டு சிரித்து கொண்டே கரையை நோக்கி வர…

“சீக்கிரம் மேல வா… தண்ணீர் கொஞ்சம் அதிகமா வந்துட்டு இருக்கு… ”சாண்டியும் சாக்ஷியும் அவசரப்படுத்த… வேலியை தாண்டி குதித்து படிகளில் ஏற துவங்கியிருந்தனர்… படிகளில் ஏற துவங்கிய சிறிது நேரத்திற்குள் வேலியை தாண்டி நீர் பொங்கி கொண்டு ஓட ஆரம்பித்து இருந்தது…

வருண் முறைத்தபடி மேலே நின்றிருக்க… சௌமினி பதட்டமாக கௌதமின் முகத்தை பார்க்க… அவனோ கவலையே இல்லாமல் ஷூவை அணிந்து கொண்டு சாண்டியிடம் எதையோ பேசி சிரித்தபடி படிகளில் ஏறிபோக… சாக்ஷியும் அவர்களோடு சேர்ந்து கொள்ள… சௌமினி வருணோடு தனித்து விடப்பட்டாள்…

“அறிவிருக்கா உனக்கு?” கோபமாக அவள் முகத்தின் முன் கையை நீட்டி திட்ட ஆரம்பிக்க… உனக்கு வேண்டுமா என்று கேட்க ஆரம்பித்த உதடுகள் ஒட்டி கொண்டன…

“அவனுக்கு தான் மண்டைல மசாலாவே இல்லைன்னு தெரியுது… நீயும் அவன் கூட சேர்ந்துகிட்டு… ச்சை… ஒழுங்கா படிச்சு ஊர் போய் சேரனும்ன்னு எண்ணமே இல்லையா?”

“இல்ல வருண்… ஜஸ்ட் பார் பன்… ”எப்படியாவது புரிய வைத்து விட வேண்டும் என்று அவள் விளக்க… அவனது முகம் மேலும் சிவந்தது… கோபத்தில்!

“என்ன பன்? மண்ணாங்கட்டி! ரிவர் ப்ளட் ஆகற நேரத்துல இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கறதுதான் அறிவு இருக்கவங்க செய்யற வேலையா?டோன்ட் யு ஹேவ் எனி சென்ஸ்?” வருண் அவளை வறுத்து எடுக்க துவங்கி இருந்தான்…

சௌமினிக்கு கௌதமும் சரி வருணும் சரி நெருங்கிய தோழர்களே! இருவரில் யாரையுமே விட்டு தர முடிந்ததில்லை… ஆனால் அந்த இருவருமே இரு துருவங்களாக இருந்து அவளையல்லவா பந்தாடி கொண்டிருந்தனர்!

“சாரி வரு… ப்ளீஸ் கோபப்படாத… ” அவனது கோபத்தை அதற்கு மேலும் அவளால் எதிர்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை… இனி இது போல ரிஸ்க் எடுக்க கூடாது என்று மனதில் நினைத்து கொண்டு அவனிடம் மன்னிப்பு கேட்க…

“என்ன சாரி?அவன் பொறுக்கின்னு தெரிஞ்சும் அவன் கூட சுத்தற… இப்போ இப்படி வேற… டோன்ட் யூ ஹேவ் எனி சென்ஸ்?

இடைவிடாமல் அர்ச்சனை செய்து கொண்டிருந்த வருணை பரிதாப முகத்தோடு பார்த்து கொண்டிருந்த சௌமினியை கோபப்படுத்தியது அவன் கடைசியாக கூறிய வார்த்தைகள்!

“ஸ்டாப் இட் வருண்… அவனை பொறுக்கின்னு சொன்ன எனக்கு கெட்ட கோபம் வந்துடும்… ” கோபமாக அவள் கூற அவனது முகத்தில் கேலி புன்னகை…

“ஏன்… சர் கேர்ள்ஸ் விஷயத்துல ரொம்ப நல்லவரோ?” அவன் நக்கலாக கேட்டது அவளை உசுப்பேற்றி விட…

“என் விஷயத்துல நல்லவன் அவன்… என்னோட ப்ரென்ட்… நீ எனக்கு எப்படியோ அதே மாதிரி தான் அவனும்… ஜஸ்ட் டோன்ட் மேக் ஃபஸ் அவுட் ஆப் இட்… ” கடுகடுவென்று வெளிவந்த வார்த்தைகளில் அவனது கோபமும் கிளறி விடப்பட…

“அவனோட லிஸ்ட்ல நீயும் சேர போற… அவ்வளவுதான்… ” தோளை குலுக்கி விட்டு முன்னே செல்ல ஆரம்பிக்க… அவனுக்கும் முன்னே சென்று தடுத்தாள் சௌமினி…

“இப்படி கேவலமா யாருமே நினைக்க மாட்டாங்க வருண்… அவன் பொண்ணுங்க கூட பழகறான்னா… அவன் சார்மிங்… ரொம்ப ஸ்வீட்… அதனால பொண்ணுங்க தானா வந்து அவன்கிட்ட flirt பண்றாங்க… ஏன் இவ்வளவு நேரோ மைண்டடா இருக்க? உன்னால் முடிந்தால் நீயும் உன் கேர்ள்ப்ரெண்ட்ஸ் லிஸ்டை அதிகம் செய்துக்கோ… ”கோபமாக அவள் வருணிடம் கூற… அவனோ அவளை முறைத்து விட்டு…

“எனக்கு மற்ற பொண்ணுங்க பத்தி கவலை இல்ல… ”

“வாட் டூ யூ மீன்?”

“பிகாஸ் யூ ஆர் மை ப்ரென்ட்… ” வருண் அந்த ‘மை’யில் அழுத்தத்தை கொடுத்து விட்டு மீதம் உள்ள படிகளில் ஏற துவங்க… இவன் என்ன சொல்ல வருகிறான் என்பதே புரியாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தாள் சௌமினி…

மேலே ஏறி வந்த கௌதம் கண்டது வருணின் காருக்கு பக்கத்தில் நின்று கொண்டிருந்த வள்ளியம்மையும் உடன் இன்னொரு குட்டி பெண்ணும்!

“கெளதம் அண்ணா… ” பட்டாம்பூச்சியாக அவனை நோக்கி வந்தவளை சந்தோஷமாக சேர்த்து அணைத்து கொண்டான் கௌதம்…

“அம்மை… எப்படா வந்த?”

“இன்னைக்கு மார்னிங் தான் ண்ணா… டென் டேஸ் லீவ் விட்ருக்காங்க… சிவகாமி அத்தை கூட வந்திருக்கேன்… ” அதுவரை சந்தோஷமாக கேட்டு கொண்டிருந்தவனுக்கு சிவகாமி என்ற பெயர் கசப்பை தந்தது…

சிவகாமி என்னும் பெயரினால் அடையாளம் காட்டப்பட்ட சில கசப்பான பக்கங்கள் அவனது முகத்தை சுருக்க வைத்தன… தன் மேல் பாசத்தை பொழிந்து கொண்டிருக்கும் தந்தையை விட்டு கொடுக்கவும் முடியாமல் அதே சமயத்தில் வெளிப்படையாக அவரை தந்தை என்று கூற முடியாத நிலை அவனுக்கு வெறுப்பை அளித்தது… அவரிடமிருந்து தள்ளி நிறுத்தி கொண்டிருந்தது… தந்தையை தள்ளி நிறுத்த முடிந்த அவனால் தன் மேல் பாசமாக இருக்கும் ஏழாம் வகுப்பு படிக்கும் குட்டி தங்கையை நிறுத்த முடியவில்லை…

“சரிடா… உங்க அத்தை பார்த்தா பிரச்சனையாகிடும்… நான் கிளம்பறேன் அம்மை… ”

“அண்ணா… ” வள்ளியம்மையின் முகம் சுருங்கி கண்கள் அழ தயாராக…

“உன்னையும் பார்க்கலாம்ன்னு தான் அத்தை கூட வந்தேன்… ” பல விஷயங்கள் தெரியாத வள்ளியம்மைக்கு கௌதம் மிக மிக பிரியமானவன்… வருணை போலவே!

“என் செல்ல குட்டில்ல… நாளைக்கு ஈவினிங் சிம்ஸ் பார்க் வருவீங்களாம்… நாம விளையாடலாமாம்… சரியா?”

“அண்ணா… நானும் வரட்டா?” சப்தம் வந்த திசையை கௌதம் பார்க்க… அங்கு ஒரு குட்டி பெண் நின்று கொண்டிருந்தாள்!

பார்த்தவுடனே அவனை கவர்ந்தது அந்த குண்டு குண்டு கன்னகளும் பெரிய கண்களும் தான்… பால் வெள்ளை சருமத்தில் ஒரு துளி ரோஸ் கலரை தெளித்து வைத்தது போன்ற ஒரு நிறம்… சிறிய பெண்ணாகவும் இல்லாமல் பெரிய பெண்ணிலும் சேர்த்தி இல்லாமல் மிகவும் அப்பாவித்தனமான தோற்றத்தில்… குழந்தை தன்மை மாறாமல் கொழுகொழுவென பார்க்கவே அழகாக இருந்த அந்த குட்டி பெண்ணை பார்த்து கொண்டே…

“ஒய் நாட்… வாயேன்… ” என்று அவளிடம் கூறிவிட்டு வள்ளியம்மையிடம் திரும்பியவன்…

“குட்டி… யார் இந்த பப்ளிமாஸ் குட்டி?” சிரித்து கொண்டே கேட்டவனை முறைத்தாள் அந்த குட்டி பெண்…

“சிவகாமி அத்தையோட பொண்ணுண்ணா… என்னோட க்ளோஸ் ப்ரென்ட்… ஆதிரா… ! லண்டன்ல இருந்து வந்திருக்கா!”

அதை கேட்ட மாத்திரத்தில் அவனுக்கு முகம் இறுகி கசந்தது!

error: Content is protected !!