cp13

cp13

அத்தியாயம் பதிமூன்று

எதனோடும் ஒத்துப்போக மறுக்கும் இரவை
அது அதுவாகவே இருக்கட்டுமென

விட்டு வைக்கஒத்துழைப்பதாக இல்லை…

யாரோ எதுவோ நீயோ நானோ!

 -அன்றைய டைரியிலிருந்து

சில்லென்று வீசிய குளிர்காற்றில் சௌமிக்கு உடல் வெடவெடவென நடுங்கியது… யாரும் குறுக்கே வராத அந்த தனிமை அவளுக்கு மிகவும் பிடித்தமானது… மேலே செல்லும் மேகக்கூட்டத்தின் நடுவே கைகளை இறுக கட்டியபடி சுற்றிலும் பூத்திருந்த விதவிதமான பூக்களையும் தொலைவில் தெரியும் யூக்கலிப்டஸ் மரங்களையும் ரசித்தபடி… காற்றில் கலந்து வரும் அந்த இளம் தேயிலையின் இதமான நறுமணத்தை முகர்ந்தபடி செல்வது அவளுக்கு மிக மிக பிடித்தமான ஒன்று… அந்த தனிமையின் போது கௌதமோ அல்லது வருணோ இருந்தாலும் அது அவளுக்கு விருப்பமான தனிமையாகவே இருக்கும்…

கௌதமாக இருந்தால் அவளோடு இயற்கையை ரசித்தபடி கவிதைகளை பகிர்ந்தபடி ரசித்த எழுத்துக்களை சிலாகித்தபடி நடப்பான்… ஆனால் அது மிகவும் அரிதாகவே வாய்ப்பது… பெரும்பாலான நேரங்களில் பைக்கில் பறப்பதை விரும்பினாலும் வாழ்கையின் இருண்ட பக்கங்களின் காயங்களை அசைபோட விருப்பமில்லாத வேளைகளில் அவனாகவே…

“சௌம்ஸ்… வாயேன் ஒரு வாக் போலாம்… ”என்று அழைப்பதுண்டு!

அவனது ஆசைக்காதலியான பைக்கை விடுத்து நடப்பதற்கு அழைக்கும் அந்த பொழுதுகள் அதிகபட்ச காயங்களால் தாக்கப்பட்ட பொழுதாகவே அமையும் என்பதை உணர்ந்து கொண்டவளுக்கு அவனை தோளில் சாய்த்து கொள்வது இயல்பான ஒன்றாக ஆகிப்போனது…

வருண் அதற்கு நேர்மாறானவன்… அவனது எண்ணங்களின் போக்கை கண்டு சௌமி மிகவும் வியப்பதுண்டு… ஒவ்வொரு துளியிலும் நேர்மை… உண்மை! வானத்துக்கு கீழ் உள்ள அனைத்தையும் பற்றியும் அவனிடம் பேச முடியும் என்றாலும் சில நேரங்களில் மௌனத்தை அவனாலும் கடக்க முடிந்ததில்லை… அது அவனது குடும்பம் சம்பந்தப்பட்டதாகவே இருக்கும்…

அந்த வயதில் அவனது தலையில் அமர்ந்து கொண்ட முள் கிரீடத்தின் தன்மையை முற்றிலும் உணர்ந்தவன் அவன்… அது அவன் விரும்பியதல்ல ஆனாலும் விட்டு கொடுக்க கூடியதும் அல்ல என்பதில் பிடிவாதமாக இருப்பவன் என்பதையும் சௌமி உணர்ந்து இருந்தாள்… அந்த முள் கிரீடத்தோடு இரு நண்பர்களின் வாழ்கையும் பிணைக்கப்பட்டு இருப்பதை புரிந்த அவளது பேதை மனம் வலியில் மருகியது… அவளெங்கே அறிந்தாள்? அந்த சுழலில் தானும் சிக்கி சுழல போவதைம் தன் வாழ்க்கையும் சுழல போவதைம் அறிந்திருந்தால் தள்ளியே நின்றிருப்பாளோ?

“ஏய் பப்ஃபல்லோ செமி… ” முதுகில் பலமான அடி விழ… திரும்பி பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் அது வருண் தானென்று புரிந்து கொள்ளவில்லை என்றால் அவள் அவனது செமி இல்லையே… ஒரு நல்ல பெயரை இருவருமாக கன்னாபின்னாவென டேமேஜ் செய்வதை நினைத்து சிரித்து கொண்டாள்… அதே புன்னகை முகத்தோடு அவனை ஏறிட்டு…

“ஏய் பக்கி… என் பெயர் சௌமினி… அழகான பெயரை ஏன்டா இப்படி படுத்தி வைக்கிறீங்க?”

“ஏன்? வேற யார் அப்படி கூப்பிடறது?”அவனது வார்த்தைகளில் அதீத பொறாமை தெரிய… அவள் மேலும் சிரித்து கொண்டாள்… அநியாயத்துக்கு இவன் பொசெசிவ் என்று மனதில் நினைத்து கொண்டாள்!

“வேற யார் மகனே… கௌஸ் தான்… அவன் ஒரு மாதிரி கொலை பண்ணா நீ ஒரு மாதிரி… ஷப்பா… ”என்று சிரிக்க… அதுவரை சாந்தமாக இருந்த அவனது முகத்தில் கோபம் அனல் பறந்தது!

“நீ அவனோட என்னை சேர்த்து வைச்சு பேசறதை சுத்தமா வெறுக்கறேன் செமி… எரிச்சலை கிளப்பாதே… ” அதோடு பேச விருப்பமில்லை என்று வேறுபக்கம் அவனது முகத்தை திருப்பி கொள்ள… சௌமி தான் இறங்கி வர வேண்டியதாயிற்று…

“உடனே ஏன்டா இப்படி வேதாளம் முருங்கை மரம் ஏறின மாதிரி முகத்தை தூக்கி வெச்சுக்கற? பிடிக்கலைன்னா விடு பேசலை… ” அவனுக்கு முன்னே வந்து முகத்தை தன் புறம் திருப்பியவள் கெஞ்சும் பார்வையோடு கூற… புன்னகை மலர்ந்தது அவனது முகத்தில்!

வருணை பொறுத்தவரை அவனது கோபம் அந்த அளவு மட்டுமே… பெரிதாக கோபித்து கொள்ள விருப்பமற்றவன்… அடிக்கடி கோபம் வந்தாலும் ஒரே ஒரு முறை சௌமி சிரித்து அவனை சமாதானப்படுத்திவிட்டால் ஐஸ் கட்டி உருகுவதை போல உருகி விடக்கூடியவன்…

ஆனால் கௌதமை பொறுத்தவரை வருண் கிழக்கு என்றால் அவன் மேற்கு! கோபம் அவ்வளவு எளிதில் வந்துவிடாது… எப்போதும் சிரித்து விளையாடி மற்றவர்களையும் தன்னுடைய விளையாட்டில் ஈடுபடுத்தி பார்ப்பவன் ஆனால் கோபம் என்று வந்துவிட்டால் உயிர் உள்ளவரை மறக்க விரும்பாதவன்… துரோகங்களையும் காயங்களையும் அவன் என்றுமே மறப்பதில்லை… ஆனால் வெளிகாட்டி கொள்வதுமில்லை! இருவரையும் பற்றி சிறுவயது முதலே முழுவதுமாக அறிந்தவள் சௌமினி…

“அச்சு ஸ்வீட் செமி… இப்படியே இருந்தாத்தான் அழகு… ஓகே… ”அவளது பாய் கட்டை கலைத்து விட… தலை கலைந்ததில் அவனை பார்த்து முறைத்தாள்!

“தலைய கலைக்காத கலைக்காதன்னு எத்தனை தடவைடா சொல்றது?” கடுப்பாக அவள் கூற… வருண் சிரித்தான்…

“ஆமா அறுபது அடி கூந்தலை கலைச்சு விட்டுட்டாங்க… உடனே முறைக்கறா… ஏய் லூசு… போனி போடற அளவாச்சும் வளர்த்து வைக்க மாட்டியா? ரொம்ப பாயிஷா தெரியற செமி… ” அவள் சற்று அதிகமாக முடி வளர்த்து இரண்டு பின்னலிட்டு பொட்டு வைத்தால் மேலும் அழகாக இருப்பாள் என்ற எண்ணம் அவனுக்கு…

“சோ வாட்? ஐ டோன்ட் கேர்… ” என்று சிரித்து விட்டு அவனுக்கு முன் சென்று நின்று கைகளை கட்டி கொண்டு அவனது கண்களை நேராக பார்த்தாள்…

“வருண் நான் ஒன்றை சொல்லவா?” அவளது தொனியே ஏதோ தீவிரமாக பேச போகிறாள் என்பதை அறிவிக்க… அவனும் கைகளை கட்டி கொண்டு கேட்க தயாரானான்!

“எஸ் மேம்… கோ அஹெட்… ” அவர்களது டியுட்டரின் முன் நிற்பவனை போல நின்று கொண்டு கூறவும் சொல்ல வந்த விஷயத்தை தாண்டி சிரிப்பு வந்தது அவளுக்கு! மலர்ந்த சிரிப்பின் இடையில்…

“வரு… நீயும் எனக்கு ப்ரென்ட் கௌதமும் எனக்கு ப்ரென்ட் தான்டா… ”

“சோ… ”

“எனக்கு நீயும் முக்கியம் அவனும் முக்கியம் வரு… ”

“ஓகே தென்… ”

“அவன் கிட்ட பேசினா நீ முறைக்கறதும் உன்கிட்ட பேசினா அவன் நக்கலடிக்கறதும்… ஷப்பா ஐ ம் டயர்ட் மேன்… ”

“சோ… ”

“நீங்க ரெண்டு பேரும் சமாதானமா போனா நான் தான் முதல்ல சந்தோஷப்படுற ஆளா இருப்பேன் வரு… ப்ளீஸ்… ”

“சாரி செமி… அது நடக்காது… உனக்கு என்னோட பீலிங்க்ஸ் புரியல… அதை நான் புரிய வைக்கவும் தயாரா இல்லை… உனக்கு வேணும்னா நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்கலாம்… பட் எனக்கு இருக்க ஒன் அன்ட் ஒன்லி ப்ரென்ட் நீ மட்டும் தான்… அதே மாதிரி உனக்கும் நான் மட்டும் தான் ப்ரெண்டா இருக்கனும்ன்னு நினைக்கறேன்… பட் உன்னால அது முடியாதுதான்… அட்லீஸ்ட் என் கிட்ட பேசும் போதாவது அவனை பற்றி பேசாம இரேன்… ப்ளீஸ்… ”

“இல்ல வரு… நான் சொல்றதை… ” சௌமி மறுத்து கூற வருவதை தடுத்து…

“செமி… ஐம்பொசெசிவ்… ரியலி வெரி மச் பொசெசிவ்… என்னோட கார்… என்னோட பைக்… ஈவன் என்னோட பென்… எனக்கு மட்டும் தான் சொந்தம்… அன்ட் யூ ஆர் மை ப்ரென்ட்… என்னோட ஆட்டிடியுட் இவ்வளவுதான் தான் செமி… ஒன்னு புரிஞ்சுக்கோ இல்லைன்னா அவனை பற்றி பேசாத… ப்ளீஸ்… ”

அவன் வரிசையாக கூறி கொண்டு வந்ததில் அவன் விட்டுவிட்ட முக்கியமான ஒன்று ‘என்னுடைய அப்பா’ என்பது… அவனால் ஏற்று கொள்ளவே முடியாமல், தந்தையை அவனோடு பகிர்ந்து கொள்ள முடியாத வெப்பம் மட்டுமே அவனை ஆட்டுவிக்கிறது என்பதை எந்த நேரத்திலும் யாரிடமும் கூறி விட கூடியவன் அல்ல… மனதின் மறைவான பிரதேசத்தின் அந்த உண்மை சௌமி அறிந்தது தானே!

“ப்ச்… உன்கிட்ட பேசவே கொஞ்சம் பயமா இருக்கு வரு… பட் ஐ ஸ்டில் லைக் யூ… ஆனா இந்த அளவு பொசெசிவ்னஸ் தப்பு… ஐ ரியலி ஃபியர்… ” முகம் கசங்க கூறிவிட்டு முன்னே செல்ல… வருணின் முகமும் கசங்கியது…

எதையும் பேசாமல் செல்ல… அவளோடு நடந்து கொண்டிருந்தவனும் மௌனத்தை விடாமல் பிடித்து கொண்டு தொங்க… வார்த்தைகளில்லா நொடிகளாக கழிந்த அந்த நிமிடங்களை இருவருமே வெறுத்தனர்… ஆனாலும் அந்த வயதுக்குரிய பிடிவாதம் அதாவது தான் செய்வது ஒன்றே சரி என்ற பிடிவாதத்தில் இருந்து இருவருமே கடந்து வர பிரியப்படவில்லை…

இருவருமே ஒருவருக்கொருவரின் அருகாமையில் வெளிப்பாதையை விட்டு உள்ளடங்கிய காட்டு பகுதி துவங்கும் பகுதிக்கு வந்ததை சிறிது நேரம் கழித்தே உணர்ந்தனர்! சற்று இருளாக துவங்கிய பாதை சௌமினியின் மனதில் சிறு பயத்தை விதைக்க… வருண் இயல்பாக நடந்து கொண்டிருந்தான்… அவனது மனம் இன்னுமே அந்த வெப்பத்திலிருந்து வெளிவரவில்லை என்பதை அவனது இறுகிய முகத்திலிருந்து உணர்ந்தவள் என்ன சொல்வது என வெகுவாக யோசிக்க துவங்கினாள்… ஆனால் அந்த வெப்பம் அவள் கூறிய அந்த ‘உன்கிட்ட பேசவே பயமா இருக்கு வரு’ என்ற வார்த்தைகளினால் என்பது தெரியவில்லை…

நடந்து கொண்டிருந்தவர்களுக்கு ஏதோ விசித்திரமான சப்தங்கள் கேட்க… இருவருமே சட்டென்று நின்று ஊன்றி கவனிக்க… அது என்னவென்று சௌமினியால் பிரித்தறிய முடியவில்லை… ஆனால் வருண் ஒருவாறு ஊகித்து அவளது கையை பிடித்து இழுத்தான்…

“வா செமி… திரும்பி போய்டலாம்… ” அவள் மேலே சென்றுவிட கூடாதே என்ற பதட்டத்தில் அவனது குரல் ஒலிக்க… அவனை விசித்திரமாக பார்த்தாள் சௌமி…

“இல்லடா ஏதோ சத்தம் வருது… என்னன்னு பார்க்கலாம் வா… ” பிடிவாதமாக அவனையும் இழுத்து கொண்டு போக… ஐயோவென்று இருந்தது அவனுக்கு! இவளுக்கு இவையெல்லாம் தேவையா என்றெண்ணி கொண்டு…

“அதெல்லாம் ஒன்னும் வேணாம்… நீ வா போலாம்… பாரஸ்ட் ஏரியா லூசு… ஏதாவது அனிமல்ஸா இருந்துட போகுது… ” அவளை அந்த புறமாக விட்டு விடாமல் அவளை இழுத்து கொண்டு நகர பார்க்க… அவளோ பிடிவாதமாக அந்த பகுதியில் நுழைந்தாள் அவனையும் இழுத்து கொண்டு…

வருண் தலையிலடித்து கொண்டு அவளையும் இழுக்க பார்க்க… அவளது இயல்பான துறுதுறுவென ஆராய்ந்து பார்க்கும் குணம் தலை தூக்க… அப்படி என்னதான் இருக்கிறது என்று பார்த்தே ஆக வேண்டும் என்று இழுத்தாள்…

முன்னேறியவளின் கால்களில் ஏதோ தட்டுப்பட… குனிந்து பார்த்தனர்! இருள் போர்த்திய அந்த இடத்தில் கிடந்தது மது பாட்டில்களும் இன்னபிற சாமான்களும்… அருவருப்பாக காலை எடுத்தவள் சட்டென்று பின்னடைய… அவளுக்கு பின்னே இருந்த வருணை இடித்து கொண்டாள்…

இருவரின் பார்வையும் மரத்துக்கு பின்னே போக… அங்கு கர்மமே கண்ணாக இருவர்… பளீரென்று மின்னிய வெளிச்சத்தில் அந்த இருவரும் தெளிவாக தெரிய… மின்சாரத்தை தொட்டது போல தூக்கி வாரி போட்டது சௌமினிக்கு…

கையை வாய் மேல் வைத்து அந்த காட்சியின் அதிர்ச்சி தாங்காமல் அருவருப்பு குறையாமல் பின்னோடு நகர்ந்தவளை இழுத்து கொண்டு வெளியே சாலைக்கு அவசரமாக வந்தான் வருண்…

“அறிவு கெட்ட லூசு… அதான் சொல்றேன்… வேணாம் வேணாம்ன்னு… சொன்னா அதுல அர்த்தம் இருக்கும்ன்னு புரிஞ்சுக்க வேணாம்? உன்னையெல்லாம்… ச்சை… ” அவனுக்குமே அந்த அருவருப்பை தாள முடியவில்லை… இவளால் இதை வேறு பார்த்து தொலைத்து விட்டோமே என்ற கோபம்… அவனது கோபம் வேறு அவளது தன்மானத்தை சீண்டி விட…

“ஆமா… எனக்கு ரொம்ப தெரியும் பாரு… கர்மம்… ”என்று கூறி கொண்டே வாயை மூடி கொண்டு குனிந்து கொண்டாள்… வயிற்றை பிரட்டியது…

“நீ நிஜமாவே செமி தான்டி லூசு… ” என்று கடுப்படித்தவன் அவளது நிலையை பார்த்து அருகில் வந்தவன்…

“செமி… என்னாச்சுடா… ?” என்று அவளது தலையை அவசரமாக பிடித்து கொள்ள… அவனது கையை சட்டென விலக்கி விட்டாள்… அந்த காட்சியை பார்த்தபிறகு வருணோடு தனித்து நிற்கவும் அவளுக்கு கூசியது… அவனை நிமிர்ந்து பார்க்காமல் தப்பித்து போகும் உணர்வோடு…

“ப்ளீஸ்… இங்க இருந்து முதல்ல போகலாம் வரு… ” என்று கூறி அவசரமாக ஓட… அவளை பின் தொடர்ந்தான் வருண்! குழப்பமான பார்வையோடு!

*******

“நாங்க தான் வின் பண்ணினோம்… ஹைஐஐஐஐ… ” ஆதிரையோடு வள்ளியம்மையும் சேர்ந்து குதித்தாள்… எதிரில் கௌதம் சிறிய சிரிப்போடு…

“ரெண்டு பேருமே அழுகுண்ணி ஆட்டம் ஆடறீங்க பக்கிங்களா… நான் ஒத்துக்க மாட்டேன்… ” வேண்டுமென்றே இருவரையும் வம்பிழுத்தான்…

மூவருமாக ஷட்டில் பேட்டோடு சிம்ஸ் பார்க்கை தஞ்சமடைந்து இருந்தனர்… வீட்டிலோ வேறு இடத்திலோ விளையாடினால் சிவகாமியின் கண்களில் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் சிம்ஸ் பார்க் போகிறோம் என்று கூறி தப்பித்து வந்திருந்தனர் ஆதிரையும் வள்ளியம்மையும்!

ஆதிரை ஆறாம் வகுப்பு முதல் சென்னையில் படிக்கவென லண்டனில் இருந்து வந்திருந்தாள்… லண்டனில் அதற்கும் மேல் படிக்க வைக்க சிவகாமி விருப்பப்படவில்லை… அந்த நாட்டின் கலாச்சாரத்தை அவர் வெறுக்கவில்லை ஆனால் ஒத்துபோகவும் முடியவில்லை… கட்டுபொட்டியாக சென்னையிலிருந்து விட்டு அதே கட்டுபொட்டி கலாசாரம் லண்டனில் தன் மகளுக்கும் வர வேண்டும் என்று விருப்பபட்டால் முடியுமா?

அவரது கணவர் கைலாசத்திற்கு தன் மகள் எங்கிருந்தாலும் நல்ல பழக்கவழக்கங்களை கற்று கலாசாரத்தை காப்பாற்றினால் போதுமென்று இருந்தது… அதனால் சிவகாமியின் திட்டத்திற்கு எதிர்சொல் பேசவில்லை…

“அம்மு… இந்த அண்ணா ரொம்ப சீட் பண்றாங்க… நான் விளையாட்டுக்கு வரலை… ” பேட்டை தூக்கி போட்டு விட்டு கோபமாக ஆதிரை போக… கெளதம் ஓடி சென்று அவளது தலைமுடியை இழுத்தான்…

“ஆஆ… அம்மா… ”

“ஒய் பொடுசு… உன் சைசுக்கு இவ்ளோ கோபம் வருதா?” என்று காதை பிடித்து திருக ஆரம்பிக்க… குட்டி ஆதிரைக்கோ மிகவும் வலித்தது…

“அண்ணா… ப்ளீஸ் விடுங்கண்ணா… வலிக்குது… ” ஆதிரை அழ தயாராக…

“என்ன அண்ணாவா? பிச்சு போடுவேன்… வருண் உனக்கு என்னவாகறான்?”

“வருண் மாமாவா?… ” காதை பிடித்து திருகியதில் உண்டான வலியோடு கேட்க…

“ம்ம்ம்… வருண்… மாமா… நான் அண்ணாவா?” கடுப்பாக அவன் கேட்க…

“பின்ன என்ன சொல்லணும்?”

“ஒழுங்கா மாமா மாமான்னு நூறு தடவை தோப்புகரணம் போடணும்… என்ன தெரியுதா?” அவன் மிரட்டி கொண்டிருப்பதிலேயே அவன் விளையாடி கொண்டிருக்கிறான் என்பது வள்ளியம்மைக்கு விளங்கியது!

“அண்ணா! ஆதிய விடுங்கண்ணா… பாவம் அவ… எனக்கிருக்கற ஒரே ஒரு ப்ரென்ட்… ” ஆதியை அவனிடமிருந்து விடுவிக்க முயல… மீண்டும் ஆதியின் தலையில் மட்டென்று ஒரு அடி வைத்தவன்…

“இந்த பொடுசு தான் உனக்கு ப்ரெண்டா? பார்த்தா இத்துனூண்டா இருக்கு… இது சிக்ஸ்த்தா? ஒய் பொடுசு… சாப்பாடு சாப்பிடுவியா? இல்ல பார்த்துட்டு போவியா?” மீண்டும் மீண்டும் அவளை வம்பிழுக்க… அவளால் அழுகையை கட்டுபடுத்த முடியவில்லை…

“போடி அம்மு… இனிமே உன் கூட பேச மாட்டேன்… இந்த டெவில் கிட்ட என்னை மாட்டி விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு இருக்க… நான் போறேன்… ” கோபித்து கொண்டு போக… வள்ளியம்மை கௌதமை முறைத்தாள்…

“ஏன் ண்ணா?”அவளது தொனிலேயே கடுப்பு தெரிய…

“ஹே குட்டி… சும்மா லுளுளாய்க்கு தான்டா… இரு அதை போய் இழுத்துட்டு வரேன்… ” அழுது கொண்டு ஓடிய குட்டி ஆதிரையின் பின்னே ஓடினான் கௌதம்… அவசரமாக அவளை பிடித்து தோளில் நட்பாக கை போட… ஆதிரைக்கு எரிச்சலாக இருந்தது… கண்களில் இருந்து கண்ணீரும் நிற்காமல்…

“நான் போறேன்… என்னை விடுங்க… ” அவனை தள்ளிவிட்டு போக முயல…

“அச்சோ… இந்த பொடுசுக்கு இவ்ளோ கோபம் வருமா?” கௌதமோ நெடுநெடுவென வளர்ந்து இருக்க… ஆதிரையோ அவனது இடையளவே இருக்க… அதை வைத்து அவன் கிண்டலடித்து கொண்டே இருந்தான்…

“என்னை பொடுசுன்னு சொல்லாதீங்க,… எனக்கு கோபம் வந்துடும்… ” ஒரு விரலை காட்டி மிரட்டிய அந்த குட்டி பெண்ணை மிகவும் பிடித்து இருந்தது… ஆனால் அது கள்ளம் கபடம் இல்லாத வெள்ளை உள்ளங்களின் அன்பு என்பதை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளவில்லையே!

சிறு கல்மிஷமும் இல்லாமல் கௌதம் எப்போதும் போல ஆதிரையின் கழுத்தை தன்னோடு இறுக்கி பிடித்து…

“நீங்க ரொம்ப பெரியவங்களாம்… ரொம்ப ஹைட்டாம்… இப்போ இந்த மாமா கிட்ட கோவுச்சுக்காம விளையாட வருவீங்களாம்… சரியா?”ஆதிரையின் தாடையை பிடித்து கொஞ்சி கொண்டே அவளை தன்னோடு இழுத்து கொண்டு போக… ஆதிரை முறைத்து கொண்டே வர… கௌதமுக்கு புன்னகை விரிந்தது…

“சரி… ஆதிக்குட்டிக்கு dog ன்னா பிடிக்குமா?” அடுத்த தூண்டிலை அவன் வீச குட்டி ஆதி அதில் தொபுக்கடீர் என்று சிக்கி கொண்டாள்…

“ஆமா… ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்… ” கண்கள் பட்டாம்பூச்சியாக சிறகடிக்க…

“ஓகே… மாமா உங்களுக்கு pug dog ப்ரெசண்ட் பண்ணா என்ன பண்ணுவீங்க?” அவளது முகத்தில் அந்த சிரிப்பை பார்க்க அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது…

“வாவ்… puggy… ஐ லவ் இட் மாமா… ப்ளீஸ் எனக்கு இப்போவே வேணும்… ” குட்டி ஆதிரை இப்போதே வேண்டும் என்று அடம் செய்ய ஆரம்பிக்க… அந்த குட்டி பெண்ணின் மாமாவென்ற அழைப்பு அவனுக்கு மிகுந்த சந்தோஷத்தை கொடுத்தது… எதையோ சாதித்த உணர்வு! மிகவும் பெரியவனானது போல ஒரு தோற்றம்!

“இப்போ இல்ல… நீயும் அம்மையும் நானும் நாளைக்கு ஈவினிங் வெலிங்க்டன் போலாம்… அங்க என் ப்ரென்ட் வீட்ல pug குட்டி போட்டு இருக்கு… அதுல ஒன்னை நாம எடுத்துட்டு வரலாம்… ஓகே வா?” என்று கேட்க… சந்தோஷமாக தலையாட்டினாள் குட்டி ஆதிரை…

மூவருமாக சிரித்து பேசிக்கொண்டிருக்க… அதை கண்ட ஒரு ஜோடி விழிகளில் அனல் பறந்தது…

“ஆதி… … ”அதீத கோபத்தில் பின்னால் குரல் கேட்க… வள்ளியம்மையும் ஆதியும் நடுங்கி கொண்டு திரும்பினர்!

நின்று கொண்டிருந்தது சிவகாமி!

error: Content is protected !!