cp14

cp14

அத்தியாயம் பதினான்கு

நான் யார் என்ற கேள்வி

கேள்வியாகவே இருக்கிறது

நீ யார் என்பது உட்பட…

 -அன்றைய டைரியிலிருந்து

பள்ளிகளுக்கு இடையேயான கால்பந்தாட்ட போட்டி… செயின்ட் ஜோசப் பள்ளியில்!அரங்கம் பள்ளி மாணவ மாணவியரின் கூட்டத்தினால் நிரம்பியிருந்தது… இவர்களது பள்ளிக்கு கேப்டன் கௌதம்… வருண் துணை கேப்டன்… இருவருக்குமே இருவரது அருகாமையும் பிடிப்பதில்லை என்றாலும் கொடுக்கப்பட்ட பணியை சிறு சுணக்கமும் இல்லாமல் செய்து முடிப்பதில் வல்லவர்கள்… அவர்களது இந்த குணம் விளையாட்டில் பெரிய அளவில் உதவியும் இருக்கிறது…

ஆனால் அன்று உள்ளுக்குள் கோபத்தில் கொதித்து கொண்டிருந்தான் கௌதம்… சிவகாமி அத்தையின் பேச்சு அவனது தன்மானத்தை எப்போதுமே சீண்டி பார்க்கும் என்றாலும் அன்று மிகவுமே வெப்பப்படுத்திவிட்டு சென்றிருந்தது… அவனுக்கு மட்டும் நெற்றி கண் இருந்திருந்தால் எரித்தே இருந்திருப்பான்…

“ஏய்… உனக்கெல்லாம் சூடு சுரணையே கிடையாதா?” எடுத்தவுடனே மிக மோசமான வார்த்தைகளோடுஆரம்பிக்க… ஆதிரையிடமும் வள்ளியம்மையிடமும் பேசி கொண்டிருந்தவனுக்கு அவரது வரவை உணர்ந்து கொள்ள சிறிது நேரம் பிடித்தது… முகம் முழுக்க பரவியிருந்த சிரிப்பு சிறிது சிறிதாக தேய்ந்து இறுகியது…

“ஏன் உங்களுக்கு வேணுமா?” நக்கலாக கேட்டு விட்டு இடைவெளி விட்டவன்… அவர் மீண்டும் தொடங்கும் முன்…

“எனக்கு பெயர் இருக்கு… இந்த ஏய் வா போ எல்லாம் என்கிட்ட வேணாம்… பொறுமையா மரியாதை கொடுக்க மாட்டேன்… நினைவு வெச்சுக்கங்க… ”

நறுக்கென்று கூறிவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேற முயற்சிக்க… அவனது அந்த நிமிர்ந்த பதில் சிவகாமியின் கோபத்தை மேலும் தூண்டி விட்டது… எப்போதுமே கௌதமை பற்றியும் அவனது தாயை பற்றியும் நல்ல அபிப்ராயம் வைத்திருந்தவர் அல்ல!… தங்களது சொத்து முழுவதையும் கொள்ளையடிக்க வந்தவர்களாகவே பார்த்து இருந்தவரால் கௌதமை ஏற்கவே முடியாமல் போக…

“எனக்கு நீ மரியாதை கொடுக்கறது இருக்கட்டும்… உனக்கும் உன் அம்மாவுக்கும் கொஞ்சமாவது மானம் ரோஷம் இருந்தா எங்க தலைலையே மிளகாய் அரைச்சுட்டு இருப்பீங்களா? வெட்கம் கெட்ட ஜென்மங்க… ”

சுற்றிலும் மக்கள் இருக்கின்றனர் என்கிற உணர்வை துறந்து சிவகாமி பேசிக்கொண்டிருக்க… சுற்றியும் ஒவ்வொருவராக கேலியாக பார்த்து விட்டு போவதை பார்த்த கௌதமுக்கு மிக மிக அவமானமாக இருந்தது… வள்ளியம்மையும் ஆதிரையும் சிவகாமியை பார்த்த பயத்தில் சற்று தள்ளி நின்று கொண்டனர்… ஆதிக்கோ தாயின் கோபத்தை பார்த்து உடல் நடுங்கி கொண்டிருந்தது…

“நாங்க உங்க கிட்ட என்னைக்காவது கை ஏந்தி நின்று இருக்கோமா? என் அப்பா… நான் வாங்க உரிமை இருக்கு… ஏதாவது பேசணும்னா அவர் கிட்ட போய் பேசிக்கங்க… ”

அவனுக்கு அவரது முகத்தை பார்க்கவும் விருப்பமில்லை… தந்தையை நினைத்து உள்ளம் கொதித்தது… தன்னை இந்த நிலையில் நிற்க வைத்து விட்டாரே என்ற கோபம்… இத்தனை பேச்சுக்களும் அவரால் தான் என்ற வெட்கம் அவனை கொன்று கொண்டிருக்க… சிவகாமி உணர்வு மிகுதியில் என்ன பேசுகிறோம் என்பதையும் உணராமல் குத்தி கிழிக்க துவங்கியிருந்தார்…

“டேய் நிறுத்துடா… என்னடா அப்பா… சொப்பா? உங்க அம்மா என்ன எங்க அண்ணனுக்கு தாலி கட்டின பொண்டாட்டியா? உண்மைய சொல்ல போனா வப்பாட்டி… அவளுக்கெல்லாம் வெட்கம் மானம்ன்னு எதாவது இருந்தா இப்படி என் அண்ணனை வலை போட்டு பிடிச்சிருக்க மாட்டா… மேடை ஏறினவ தானே? ஏன் அவளுக்கு என் அண்ணன் மட்டும் தான் பழக்கமா? அவங்களுக்கு முன்னாடி எத்தனை பேரோ… பின்னாடி… ” என்று பேசிக்கொண்டே போக அதற்கும் மேல் பேச முடியாமல் குரல்வளையை பிடித்திருந்தான் கௌதம்…

அவனது கண்களில் கொலைவெறி!

சுற்றுபுறத்தை எண்ணி கவலைப்பட்டவன் இப்போது அதையெல்லாம் மறந்திருந்தான்… தன் தாயை பற்றிய அவரது விமர்சனம் அவனை கொதித்து எழ செய்திருந்தது… அதற்கும் மேல் என்ன வார்த்தைகளை கேட்டு விட முடியும்? அவனுக்கு அவனது தாய் மட்டுமே தெய்வம்… அந்த மஞ்சள் பூசிய முகத்தை பார்க்கும் போதெல்லாம் இனம் புரியாத அமைதி பரவுவதை அவன் என்றுமே உணர்ந்திருக்கிறான்… அப்படிப்பட்ட தன் தாயை இப்படி விமர்சனம் செய்வதா?

“இன்னொரு வார்த்தை பேசுனா இங்க ஒரு கொலையே விழும்… தேவை இல்லாம கோபப்படுத்தி என்கிட்டே வார்த்தைய பிடுங்காதீங்க சிவகாமி அம்மா… ” கோபத்தில் சிவந்திருந்த முகத்தை பார்க்கையில் அவருக்கு உள்ளுக்குள் ஏனோ குளிரெடுத்தது… சிறு புழுவாக பார்த்து பழக்கப்பட்டவன் இன்று குளவியாக மாறிவிட்டான் புரிந்து கொண்டார்… கொட்டி கொண்டே இருந்தால் புழுவும் குளவிதானே!

“இந்த அளவு திமிர் இருக்கவன் எங்க பிள்ளைங்களோட பழக கூடாது… மேல வந்து விழுந்தா இப்படித்தான்டா பேச்சு வரும்… ” ஆவேசமான அவரது வார்த்தைகளில் அவனது மனம் பிசைந்தது… பாசத்தை காட்டியதற்கு இப்படிப்பட்ட வார்த்தைகளை வாங்க வேண்டுமா? வெறுத்து போனது…

தன்னுடன் பிறக்காவிட்டாலும் தந்தையின் வார்த்தைகளை மட்டுமே பற்றி கொண்டு தன்னையும் அண்ணனாகவே நினைக்கும் குட்டி தங்கையை பார்த்தான்… ஒற்றையாக வீட்டிலிருந்து பழக்கப்பட்டு உறவுகளுக்காக ஏங்கிய மனம் தங்கையை விட்டு கொடுக்க முடியாமல் தவித்தது… வள்ளியம்மையுடன் நின்று கொண்டு அவனது முகத்தை ஏக்கமாக நடுக்கத்தோடு பார்த்து கொண்டிருந்த ஆதிரை அவனது மனதில் வலியை விதைத்தாள்… பழகுவதற்கும் தகுதி வேண்டும் என்ற மாயையில் இருப்பவர்களுக்கு எங்கே புரிய போகிறது இந்த அன்பும் பாசமும்?

மனம் வலித்தது ஆனாலும் விட்டு கொடுத்து விட்டால் அவன் கௌதமன் இல்லையே… !

“அம்மை என்னோட தங்கை… பேச வேண்டாம்ன்னு அப்பா சொல்லட்டும் இல்லைன்னா சாலாம்மா சொல்லட்டும்… அதை நீங்க சொல்ல வேண்டிய அவசியம் இல்லை… உங்க பொண்ணை வேணும்னா ப்ரிட்ஜ்ல பூட்டி வெச்சு பாதுகாத்துக்கங்க… ”

கோபத்தை அடக்கி குரலை உயர்த்தாமல் சிவகாமியிடம் கொதித்து விட்டு விடுவிடுவென்று சிம்ஸ் பார்க்கை விட்டு வெளிய வந்தவனுக்கு மனம் ஒரு நிலையில்லாமல் தடுமாறியது…

தனக்கு மட்டும் ஏன் இந்த நிலை? உடன் படிப்பவர்கள் எல்லாம் தந்தை தாயென்று அழகான குடும்பமாக வாழ… தனக்கு மட்டும் அந்த கொடுப்பினை இல்லையா? தன் தாய் ஏன் இப்படி ஒரு இருண்ட வாழ்கையை ஒப்புகொள்ள வேண்டும்? வீட்டின் வாட்ச்மேனின் மகனும் அவனது தந்தையை தந்தையென்று சொல்லி கொள்ளும் உரிமையை பிறப்பிலேயே அல்லவா பெற்றிருக்கிறான்… தான் அதற்கும் அருகதையில்லாதவனா?

சிவகாமி பேசிய வார்த்தைகளை விட அவரை அந்த அளவு பேசும் நிலைக்கு தன்னை வைத்த தந்தையையும் அதற்கு ஒப்புக்கொண்டு இருக்கும் தாயையும் நினைத்து கோபம் கட்டுகடங்காமல் பெருகியது… விடுவிடுவென்று வெளியே வந்தவனின் கண்களில் பட்டது அவனது டுகாட்டி… விலையை பற்றி கவலையே இல்லாமல் மகனுக்காக சிதம்பரம் ஆசையாக வாங்கி கொடுத்தது… இப்போது பார்க்கும் போதே வெறுப்பாக இருந்தது அவனுக்கு!

யாருக்கு வேண்டும் பணம்? இழந்துவிட்ட தன்மானத்தையும் சுயமரியாதையையும் திருப்பி தர அவரால் முடியுமா? சமுதாயத்தில் வெளிப்படையான அங்கீகாரத்தை தர முடியுமா? அங்கீகாரம் இருந்துதிருந்தால் சிவகாமி அத்தை அந்த அளவு தன் தாயை பற்றி பேசியிருக்க முடியுமா? அது இல்லாத உறவென்பதால் தானே இந்த நிலை தனக்கும் தன் தாய்க்கும்?

எதுவும் புரியாமல் இருந்த நிலையிலிருந்து அனைத்தும் புரிந்த நிலைக்கு வந்த அதாவது தலையில் அடித்து புரியவைக்கப்பட்ட அந்த நிகழ்வு அவனது நினைவுக்கு வந்தது…

வலித்தது…

அப்போது பத்தாம் வகுப்பில் இருந்தான் கௌதம்…

அன்று தந்தையின் பிறந்தநாள் என்று தாய் கோவிலுக்கு அழைத்து வந்திருந்தார்… காலை முதலே அவரை பார்க்க முடியாமல்,விஷ் செய்ய முடியாமல் இருந்ததில் ஏக கடுப்பு அவனுக்கு… தாயை விட தந்தை மீதான ப்ரியம் மிகவும் அதிகம்… எது ஒன்றையும் பகிர்ந்து கொள்ள தந்தை தேவை… அவனது மிகச்சிறந்த ரோல் மாடலும் அவரே!

பள்ளி விடுமுறையில் வீட்டிற்கு வரும் போதெல்லாம் சிதம்பரத்தையே நாய்குட்டி போல ஒட்டி கொண்டு திரிபவன்…

“ப்பா… நான் சொன்ன மாதிரியே சாக்கர் பைனல்ஸ்ல நான் தான் ஹையஸ்ட் கோல் ஸ்கோரர்… எப்படி… !” சிதம்பரத்தை அணைத்து கொண்டு காலரை ஏற்றி விட்டு கொள்ள… வளர்ந்த பிள்ளையை கழுத்தோடு இழுத்து அணைத்து…

“நீ என் பையன்டா… ” என்று உச்சி மோர்ந்த போது மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தான் கௌதம்… அடுத்த நாள் அவனே மறந்து விட்ட டுகாட்டி பைக்கை வீட்டின் முன் நிறுத்தி காட்டி அதன் சாவியை அவனிடம் கொடுக்க… சந்தோஷத்தில் மனமெங்கும் பட்டாசு வெடிக்க… சிதம்பரத்தை கட்டி கொண்டு…

“ஐ லவ் யூ அப்பா… யூ ஆர் தி பெஸ்ட்… ”என்று கூறி அந்த பைக்கில் அவரையும் அமர்த்தி கொண்டு பறந்த போது அவன் சற்றும் நினைக்கவில்லை… அவனே அவரை வெறுத்து ஒதுக்கி வைப்பான் என்று! ஆனால் அதுவும் நடந்ததே!

உலகிலிலேயே அவனால் அதிகமாக வெறுக்கப்படும் நபராக ஆகி போனார் சிதம்பரம்!

“தம்பி… அப்பா பேரை சொல்லு கண்ணா… ” பிறந்தநாளுக்கு அவருக்கு அர்ச்சனை செய்ய போக… அங்கு வந்து நின்றது விசாலாட்சியோடு சிவகாமியும்… உடன் வருணும்!

கௌதமை பொறுத்தமட்டில் விசாலாட்சியும் அபிராமியும் பேசி பார்த்திருக்கிறான்… நெருக்கமான உறவினர்கள் என்பதை மட்டும் சிதம்பரம் உரைத்திருக்கிறார்… பெரிதாக ஒட்டுதல் இருக்காது என்றாலும் வருணும் வள்ளியம்மையும் பள்ளியில் தோழர்கள்…

அப்போதெல்லாம் மிக நல்ல நட்பு என்றில்லாவிட்டாலும் நல்ல பழக்கம் இருந்தது வருணுக்கும் கௌதமுக்கும் இடையில்… வள்ளியம்மை ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே செயின்ட் லாரன்ஸில் உடன் படித்தாள்… அதன் பின் சென்னையில் தொடர்ந்தாள்… வருணை காட்டிலும் அண்ணாவென்று அவனை சுற்றி வரும் வள்ளியம்மை அவனுக்கு மிகப்ரியமானவள்…

அர்ச்சனை செய்வதற்காக சிதம்பரத்தின் பெயரையும் நட்சத்திரத்தையும் கூற… அதை கேட்ட சிவகாமி கோபத்தில் கொதித்தார்!

“ச்சீ நீயெல்லாம் ஒரு… ” என்று ஆரம்பித்து அபிராமியை வசைபாட ஆரம்பிக்க… அப்போதுதான் அவர்களை கவனித்த அபிராமி சிவகாமியின் வார்த்தைகளில் கூனி குறுகினார்!

“இன்னொருத்தியோட கல்யாணம் ஆகிடுச்சுன்னு தெரிஞ்சும் இப்படி இருக்கன்னா உன்னோட நெஞ்சழுத்தம் எப்படிபட்டதா இருக்கும்… ” அபிராமியின் முன் கையை நீட்டி பேசிய அந்த பெண்ணை கொல்லும் ஆத்திரம் வந்தது கௌதமுக்கு… உடன் இருந்த வருணை பார்த்தபோது மிக அவமானமாக இருந்தது,…

“அண்ணி… வேணாம் ப்ளீஸ் இங்க எதுவும் பேசாதீங்க… ”என்று அந்த பெண்ணை விசாலாட்சி இழுக்க… அந்த கோபம் அவரை நோக்கி திரும்பியது…

“அண்ணி… உங்களுக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா? நம்ம வீட்டு ஆம்பிளைங்க அப்படி இப்படி இருக்கறதுதான்… அதுக்காக அந்த குடும்பத்துக்கே அண்ணனை தாரை வார்த்து கொடுத்துடுவீங்களா? கண்டிச்சு வைக்க மாட்டீங்களா? தொடர்பு தொடர்பா மட்டும் தான் இருக்கணும்… இப்படி அப்பா ஆட்டுகுட்டின்னு உறவா மாறிட கூடாது… ”

கோவிலில் அத்தனை பேர் முன்னிலையிலும் சிவகாமி வெடித்து விட்டு திரும்பியும் பார்க்காமல் செல்ல… அபிராமியோடு விசாலாட்சியும் கூனி குறுகி நின்றார்…

நிமிர்ந்து யாரையும் பார்க்கவே முடியாமல் உடல் நடுங்கி கால்கள் வேரோடி அதே இடத்தில் நின்றவரை விசாலாட்சியின் குரல் நினைவுக்கு அழைத்து வந்தது…

“அபி… ” அவரது குரலிலும் நடுக்கம்… நிமிர்ந்து விசாலாட்சியின் முகத்தை பார்த்த அபிராமியின் கண்களில் வலியோடு கூடிய கண்ணீர்…

“சாரி அபி… சிவகாமிய பத்தி உனக்கே தெரியாதா? என்னால அவங்களை அடக்கவே முடியல… ”

“பரவால்ல சாலா… என்னோட தகுதியை அவங்க வெளிப்படையா சொல்லிட்டு போறாங்க… அவ்வளவுதான்… ” என்று கூறிவிட்டு நகர பார்க்க…

“அப்படி சொல்லாதே அபி… இரு… அர்ச்சனைக்கு குடுத்தே இல்லையா… பிரசாதம் வாங்கிட்டு போ… ப்ளீஸ்… இப்படி நீ மனசு வெந்து போறதை பார்க்க என்னால தாங்க முடியலடி… ” விசாலாட்சியின் கண்களில் கண்ணீர் பெருக…

“நீ வாங்கிக்க சாலா… நீ வாங்கினா என்ன நான் வாங்கினா என்ன? எல்லாம் ஒண்ணுதானே… ”

அபிராமியால் அந்த இடத்தில் நிற்கவே முடியவில்லை… கேட்க கூடாத வார்த்தைகளை எல்லாம் கேட்டதில் மனதோடு உடலும் நடுங்கி கொண்டிருந்தது… விசாலாட்சியை நேர்கொண்டும் பார்க்க முடியவில்லை… பார்த்தால் தன்னுடைய சுபாவத்திலிருந்து மாறி அவளை ஏதாவது கேள்வி கேட்க நேர்ந்து விடுமோ என்று பயந்தார்…

“அபி… உனக்காக இல்லைன்னாலும் நம்ம பிள்ளைக்காக இரு… பார் கௌதம் ரொம்ப பயந்து போய் நின்னுட்டு இருக்கான்… ” என்று விசாலாட்சி சுட்டி காட்ட இன்னமுமே கூனி குறுகி போனார்… உடனிருந்த வருணை பார்க்கையில் அவருக்கு தொண்டையை அடைத்தது!

கௌதமின் முகத்தில் தெரிந்த வலியையும் குழப்பத்தையும் பார்த்தவர் எதுவும் பேசாமல் கோவிலிலிருந்து வெளியேற… மெளனமாக தொடர்ந்தான் கௌதம்!

வீட்டிற்கு வந்தவர் எதுவுமே பேசாமல் அறைக்குள் நுழைய போக…

“ம்மா… ” குரலின் உறுதி அவரது மனதை கலங்கடித்தது… எதுவும் பேசாமல் நின்றவரை உறுத்து விழித்தான்…

“அவங்க யாரு?” ஒற்றை வரியில் ஒருவருக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த முடியுமா? ஆனால் கௌதமன் செய்து கொண்டிருந்தானே! அவனுடைய இறுகிய முகமும் அதை காட்டிலும் வெந்து தணிந்த வார்த்தைகளும் அவருக்குள் பூகம்பத்தை ஏற்படுத்த… இனி மறைப்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தார்!

“யாரு கௌதம்?” அவனோ ஒன்றுமே பேசாமல் அவரையே பார்த்து கொண்டிருக்க… ஒரு மூச்சை இழுத்து விட்டு கொண்டவர்… அவனது கண்களை பார்க்காமல்…

“அப்பாவோட ஒய்ப்… ”

இப்படி ஒரு பதிலை வேறு யாரேனும் கேட்டு இருப்பார்களா என்று கேட்க தோன்றியது அவனுக்கு!

“அப்போ நீங்க?”

அவனது நேரடியான இந்த கேள்விக்கு அவரால் பதில் கூற இயலவில்லை… மெளனமாக நிலத்தை பார்த்தவரை கண்டபோது அவனது கோபத்தை இவ்வளவுதான் என்று வரையறுக்க முடியுமா என்று கூட தோன்றவில்லை… வாழ்க்கை வெறுத்து போனது… தனக்கான பெயரும் தகுதியும் என்னவென்று யோசித்தவனுக்கு அவனது தன்மானம் வெகுவாக அடிபட்டது…

“ஏன் மா… ஏன்?” கோபத்தின் மிகுதியில் அவன் கத்த… அவனை நிமிர்ந்து பார்க்கவும் தயங்கிய அபிராமியின் கண்களில் கண்ணீர் வெள்ளம்!

“உனக்கு புரியாது கௌதம்… ப்ளீஸ் கேட்காத… ” அவரது இருண்ட பக்கங்களை பெற்ற மகனிடம் எப்படி திறப்பது என்ற தயக்கத்தில் அழுகையில் கரைந்தார்…

“சொல்லுங்கம்மா புரிஞ்சுக்கறேன்… புரிஞ்சுதானே ஆக வேண்டும்… ”

“எனக்கு அவர் மட்டும் போதுமென்று தோன்றியது கண்ணா… வேறெதுவுமே பெரியதா தோணலை… ”

“அவரை பார்த்துட்டு என்னை விட்டுட்டீங்கம்மா… ” கூற வந்தவன் கூறிவிடவில்லை… தாயை எரித்துவிடும் பார்வை பார்த்தவன் மெளனமாக பின்னடைந்தான்!

தனக்கான மரியாதையை தேடித்தர வேண்டியவர்களே மரியாதையை குழி தோண்டி புதைத்து இருப்பது அவனது மனதை அதிர வைத்தது… அவரது மரியாதையையும் குலைத்து கொண்டு நிற்கதியாக எதற்கு இப்படி நிற்க வேண்டும்? இதற்கு பெயர் காதலா?

அதுவரை தந்தை மேலிருந்த பாசத்தை வெறுப்பு என்ற பெருநெருப்பு எரிக்க ஆரம்பித்து இருந்தது! வயதுக்கு மீறியதாக அனுபவங்கள் அமைய அவனாகவா வரம் பெற்று வந்தான்? ஆனாலும் அமையும் போது என்ன செய்வது?

இரண்டு வருடங்களுக்கு முன்பான நிகழ்வுகளை மறக்க முடியாமல் சிவகாமியின் குற்றசாட்டுக்களையும் ஏற்க முடியாமல் தவித்தான் கௌதம்… அவனுக்கு அவரிட்ட பெயர் வாழ்கையின் கடைசி வரை துரத்தி கொண்டு தான் இருக்கும் போல என்று தோன்றியது!… தப்புவதற்கு மார்கமே இல்லையா?

பைக்கில் ஏறி அமர்ந்தவன் அந்த குன்னூர் சாலையில் கண்மண் தெரியாமல் பறந்தாலும்… அடுத்த நாள் தான் பங்கேற்க வேண்டிய கால்பந்தாட்ட இறுதி போட்டி நினைவுக்கு வர… வேறு வழியில்லாமல் பயிற்சிக்கு சென்றான்!

********

அவனுடைய கோபத்தை எல்லாம் அந்த கால்பந்தின் மீது காட்டி கொண்டிருந்தான் கெளதம்… சிவகாமி அத்தையின் மேலான கோபம், தன் தந்தையின் மீதான கோபம்,இந்த உலகத்தின் மீதான கோபம்,தன் மேலிருந்த கோபம் என அனைத்தும் ஆட்டி வைக்க… அவனது கோபமெல்லாம் கோல்களாக மாறி கொண்டிருந்தது…

அவனது அந்த ஆவேசமும் ஆக்ரோஷமும் கூட்டத்தை ஆரவாரிக்க செய்ய… எதிர் அணியை மிகவும் உறுத்தி கொண்டிருந்தான் அவன்! கௌதமுடைய வேகம் வருணை சற்று யோசிக்க வைத்தது…

இன்று என்ன இப்படி கண்மண் தெரியாமல் இப்படி ஒரு ஆவேசம்? அவனது பக்கத்தில் போகவே சற்று தயக்கமாக இருந்தது… ப்ரேக்கில் கூட வியுகங்களை அவனுடன் சேர்ந்து விவாதித்து விட்டு ஆதரவாக தோளை தட்டி கொடுத்தான்…

நிமிர்ந்து பார்த்த கௌதமின் விழிகளில் ஏதோ ஒரு வெறுமை…

வருணால் தனது தந்தையை அவனுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லைதான்… ஆனாலும் அவனது அந்த வெறுமை அவனது மனதையும் உறுத்தியது… மீண்டும் அவனது தோளை தட்டி கொடுக்க… பார்வையாளர்கள் பகுதியிலிருந்து பார்த்த சௌமினியின் முகத்தில் பளீரென்ற வெளிச்ச கீற்று! சந்தோஷ மின்னல்!

ஆட்டம் முடிவதற்கு இன்னும் ஐந்து நிமிடங்களே இருக்க… பந்தை கோல் போஸ்ட்டை நோக்கி அடிக்க வந்த கௌதமை முழங்கையால் இடித்து தள்ளி விட்டான் எதிரணி கேப்டன் நிஷாந்த்… பார்த்து கொண்டிருந்தவர்கள் அதிர்ந்து நின்றனர்… கௌதம் இதை எதிர்பாராமல் இருக்க… நிலை தடுமாறி கீழே விழுந்தான்… முகத்திலும் கைகளிலும் முழங்காலிலும் அடி பலமாக இருக்க…

“சாரி கௌதம்… ” ஒன்றும் அறியாதவன் போல ரெப்ரி முன் கௌதமிடம் மன்னிப்பு கேட்டான் நிஷாந்த்…

ரெப்ரி நிஷாந்தை மிகவும் கண்டித்துவிட்டு கௌதமை வெளியேற்றினார்… அடி மிகவும் பலமாக இருந்ததால்… !

இப்போது ஆக்டிங் கேப்டனாக வருண்!

ஆட்டம் மீண்டும் ஆரம்பிக்க… இவர்களுக்கு கிடைத்த பெனால்டி கார்னர் கோலாக மாறாமல் போக… அணியினரின் எரிச்சல் வெளிப்படையாகவே தெரிய… கடைசி வாய்ப்பாக பந்து வருணின் கட்டுபாட்டில்! அருகில் பந்தை தட்டி செல்ல நிஷாந்த்!

பந்தை ஆவேசமாக போஸ்ட்டை நோக்கி காலால் விசிறி விட்டு நிலைதடுமாறி நிற்க முயல… கட்டுபாட்டை இழந்த வருண் அருகில் இருந்த நிஷாந்தின் மேல் கால்களை விசிறி அவன்மேலேயே விழுந்தான்… தன்னையும் மீறி நடந்து விட்ட தவறுக்கு என்ன செய்வது?… ரெப்ரி உதட்டை பிதுக்கி விட்டு போக… அதற்கு முன்பே அந்த பந்து கோலாக மாறியிருந்தது… செயின்ட் லாரன்ஸ் வெற்றியடைந்து இருந்தது!

சுற்றிலும் மகிழ்ச்சி ஆராவாரம்… அமர்ந்திருந்த கௌதம் தன் வலியையும் மறந்து கைகளை தட்ட… குழுவினரோடு மகிழ்ச்சியை கொண்டாடி கொண்டிருந்தான் வருண்!

வருணின் தாக்குதலில் நிலைகுலைந்த நிஷாந்துக்கும் அடி மிகவும் பலமாக இருக்க… விழுந்ததில் பல் உடைந்து ரத்தம் கொட்டிகொண்டிருந்தது… இருவரின் பனிப்போரை பற்றி கேள்விப்பட்டிருந்த நிஷாந்த் வருணை முறைத்து கொண்டு போக… அலட்சியமாக தோளை குலுக்கி கொண்டு அவனருகே சென்றான் வருண்!

“வருண்… பழி வாங்கறியா? அவன் உனக்கும் எனிமி… அதை மறந்துட்டயே… ” கடுகடுவென முகத்தை வைத்து கொண்டு வருணிடம் நிஷாந்த் கடுப்படிக்க… வருணோ சற்றும் அலட்டிகொள்ளாத புன்னகையோடு…

“நான் அவனை அடிப்பேன்… அவன் என்னை அடிப்பான்… அது எங்களுக்குள்ள இருக்க விஷயம்… ஆனா வேற எவனாவது கைய்ய வெச்சா சும்மா விட்டுடுவோமா? தொலைச்சுருவோம்… ஜாக்கிரதை… ” முகத்தில் சிறு கோபத்தையும் காட்டாமல் நிஷாந்திடம் பேச… அதை கேட்டு கொண்டிருந்த சௌமினி சந்தோஷ சாரலில் நனைந்தாள்!

error: Content is protected !!