cp18

cp18

அத்தியாயம் பதினெட்டு

நிலவு நடுவானத்தை தொட்டிருந்தது… மணி பனிரெண்டை எட்டி பிடிக்க இன்னும் சில நிமிடங்களே இருக்க… நினைவுகளின் தாக்கத்தினால் உறக்கம் விடை பெற்று போயிருக்க… டைரியை எடுத்து வைத்து அமர்ந்தான் கௌதம்…

வாழ்வின்

சில பக்கங்களை

புரட்டுவதே இல்லை!

சிலபக்கங்களிலிருந்து

புரட்டி போக முடிவதே இல்லை!

எழுதிவிட்டு நிமிர்ந்தவனின் மூளை அன்றைய நினைவுகளால் கொதித்து போயிருந்தாலும் மனம் பிடிவாதமாக ஆதிரையிடம் ஒட்டி கொண்டது…

என்றுமே ஆதிரை அவனுள் குளுமையை கொண்டு வருபவள் தானே… அந்த சிறு வயதில் பூவை பறிக்கிறேன் என்று அவனது முதுகை பதம் பார்த்த போதும்… பின்னாளில் காதலில் உருகி அவனது கைகளில் கலைந்து களைத்து புன்னகைக்கும் போதும்… அவனது மனம் ஐஸ்க்ரீமாய் கரையுமே!

திடுமென நிகழும் விழிப்பில்

விடுபட்ட கனவை

கோர்க்க பார்க்கிறேன்

கை சேரவே இல்லை

அவளை போலவே!

கண்களில் பொட்டு தூக்கமும் இல்லை… அடுத்து என்ன செய்து இந்த இரவை கொல்வது என்று தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தான்… எப்படியும் கொன்றாக வேண்டுமே!

ஆபத்பாந்தவனாக செல்பேசி அழைத்தது… இந்த நேரத்தில் யார் என்ற கேள்வியோடு எடுத்து பார்த்தான்… சௌமினி தான் அழைத்திருந்தாள்!

மனம் கனத்தது!

தன்னால் வாழ்கையை தொலைத்து நிற்கும் இன்னொரு ஜீவன்… மனதில் குற்ற உணர்ச்சி அப்பியது!

“சௌம்ஸ் என்னடா… இந்த நேரத்துல?” குரலில் சற்று பதட்டமும் சேர்ந்து கொண்டது…

“கௌஸ்… ” என்று மட்டும் அழைத்தவள் அதற்கு மேல் பேசாமல் மௌனத்தை குத்தகைக்கு எடுக்க…

“என்ன சௌ… சொல்லுடா… டிஸ்டர்ப்டா இருக்கா?”

“ம்ம்ம்… ”

“என்னாச்சு?”

“அவனை பார்த்தேன் கௌஸ்… ” ஒற்றை வரிலேயே பதில்கள் இருக்க…

“வருணையா?”

“ம்ம்ம்… கூட ஒரு பொண்… னோட… ” முடிப்பதற்குள் குரல் எதிலேயோ சிக்கி கொண்டது போன்ற பிரமை அவளுக்கு… தொண்டையை அடைப்பது போல தோன்றியது!

“கஷ்டமா இருக்கா சௌமி?” கூர்மையாக கேட்டவனால் அவளது உணர்வை உணர முடிந்தது…

“இல்… ” என்று கூற வந்து இடைவெளி விட்டவள்… “ஆமான்டா… ரொம்… ப… ” அவளது கண்களில் கண்ணீர் தேங்கியது… அவனுக்கும்! சௌமியின் இப்போதைய தேவை அவளது மனக்காயத்தை ஆற்றி கொள்ள, வார்த்தைகளை சென்சார் செய்யாமல் கொட்டுவதை காது கொடுத்து கேட்க கௌதம்… !அதை உணர்ந்தவன் மெளனமாக அவள் கூறுவதை கேட்க தயாரானான்…

“அதுவும் அவ்வளவு க்ளோ… ஸா… அந்த பொ… ண்னோட… என்னால முடியல கௌதம்… ” வார்த்தைகள் குழறி பேச முடியாமல் அழ ஆரம்பித்தவளை என்ன சொல்லி தேற்ற?

“பன்னிரண்டு வருஷம் ஆகிடுச்சு… வாழ்க்கைல பாதி நாள் ஓடி போச்சு… ஆனாலும் என்னால அவனை மறக்க முடியலையேடா… முடிஞ்சிருந்தா எங்க அப்பா கொண்டு வந்து நிறுத்துன மாப்பிள்ளைல ஒருத்தனை கல்யாணம் பண்ணி தொலைச்சிருப்பேனே… ” கண்ணீருக்கு இடையில் அவள் கூற… கௌதமுக்கோ மனம் பதறியது… தோழியின் மனதை தான் சரியாக புரிந்து கொள்ளவில்லையோ?

திருமணம் வேண்டாம் வேண்டாம் என்று அவள் மறுத்த போதெல்லாம் அவளை திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கத்தான் முயற்சித்தானே தவிர… அவளது மனம் இன்னமும் வருணிடம் சிக்குண்டு இருப்பதை உணர்ந்தும் அவளை மாற்ற தவறி விட்டானே… ! வருண் மேல் இருந்த பகை உண்மையை மறைத்து விட்டதா? அல்லது மனதளவில் வருணுக்கு சௌமி சரியில்லை என்பது பதிந்து போனதா?

கடவுளே… இந்த பாவத்தை எங்கு சென்று தொலைக்க? தலையில் கைவைத்து யோசித்து கொண்டிருந்தவன்… திடீரென தோன்றியவனாக…

“சௌமி… ட்ரின்க் பண்ணிருக்கியா?”

“ஆமா… லைட்டா… இன்னைக்கு தான் பர்ஸ்ட்… அப்பாவோட பிராண்ட்… ” இயல்பாக அவள் கூறினாலும் தடுமாற்றம் குரலில் தெரிய… கௌதம் அதிர்ந்தான்… உடன் படித்த பெண்களும் கூட மது அருந்துவார்களே… ஆனால் சௌமி அந்த பக்கம் தலை சாய்த்து கூட பார்த்தது இல்லையே…

“ஏன் லூசு? அறிவிருக்கா உனக்கு?” கோபமாக சப்தமிட…

“ஏன்டா… லவ் பெயிலியர் பசங்களுக்கு மட்டும் தானா? எங்களுக்கு இல்லையா? நீங்க குடிச்சா கரெக்ட்… நாங்க குடிச்சா தப்பா… ” வேக வேகமாக கேட்டவள்… இடைவெளி விட்டு…

“முடியல கௌதம்… செத்துடலாம் போல இருக்குடா… … இன்னொருத்தி கூ… கூட அவனை பார்த்தப்… ப்போ… ” மீண்டும் அழ ஆரம்பிக்க… கௌதமின் கண்களில் கண்ணீர் கோர்க்க பார்க்க… சௌமினியை தோள் சாய்த்து கொண்டு ஆறுதல்படுத்த மனம் துடித்தது…

“யார் கூட பார்த்த சௌ? நான் விசாரிக்கறேன்… ”உணர்வுகளை வெளிக்காட்டாமல் அவளிடம் கேட்க…

“அந்த பிஏ பொண்ணு தான்… என்கிட்டே அவ கிடைக்கட்டும்… கிழிச்சுடறேன் கிழிச்சு… ” அழுகை மாறி கோபத்தில் கொதித்தாள்… ஸ்ருதியை நினைத்து! ஆனால் கௌதமுக்கோ இது அதிர்ச்சியான தகவல்… ஸ்ருதி எப்படி? அவளாக அவனிடம் சிக்கினாளா? அல்லது வருண் அவளை சிக்க வைத்திருக்கிறானா?

வருணை பற்றி நூற்றுக்கு நூறு சதவிதம் நம்பிக்கை இருந்தது… அவன் கண்டிப்பாக ஸ்ருதியை காதலியாக பார்த்திருக்கவே மாட்டான் என்று!… உறுதியாக அவன் ஸ்ருதியை கண்டுக்கொண்டான் என்பதை அறிந்து கொண்டவன்… இதை வளர விட கூடாது என்று முடிவெடுத்து கொண்டான்… வேறு எதை காட்டிலும் சௌமினி முக்கியமல்லவா…

முடிந்தவரையில் அவளை சமாதானப்படுத்திவிட்டு செல்பேசியை வைத்த போது மணி ஒன்றாகி இருந்தது… தொலைவிலிருந்த தூக்கம் காணமல் போயிருந்தது… இந்நேரத்துக்கு அவளை அழைக்கலாமா? வேண்டாமா? ஊஞ்சலாடியது மனது… இறுதியாக செல்பேசியை எடுத்து எண்களை அழுத்தினான்… அந்த நேரத்திலும் சட்டென அழைப்பு எடுக்கப்பட…

“ஹலோ ஜிகே சார்… சொல்லுங்க… ” ஸ்ருதியின் படபடப்பான குரல்!

“நாளைல இருந்து வேலைக்கு போகாதீங்க ஸ்ருதி… ” அதிகார குரலில் அவன் கூற… மௌனித்தாள் அவள்…

“ஏன் ஜிகே சார்?”

திரும்ப கேள்விகள் கேட்பது இவளது பழக்கம் இல்லையே என்று யோசித்தவன்…

“வருண் கூட இன்னைக்கு வெளிய போயிருந்திங்களா?”

“சர்… எப்பவுமே போறதுதானே… ”

“நான் அதை சொல்லலை… உங்களை வருண் கூட ரொம்ப க்ளோஸா பார்த்து இருக்காங்க… உண்மையா இல்லையா?” உள்ளுக்குள் கோபம் கனன்று கொண்டிருந்தாலும் வேறு வழியில்லை… உரலுக்குள் தலையை கொடுத்தாயிற்றே!

“எஸ்… ஜிகே சர்… ” எந்த வித அலம்பலும் இல்லாமல் ஒப்புகொண்டவளை எந்த வகையில் சேர்ப்பது? இவள் வேண்டுமென்றே செய்கிறாளா? அல்லது வேண்டாமென்று நினைக்கிறாளா? கோபத்தை விட எரிச்சல் தான் அதிகமாக இருந்தது…

“ஸ்ருதி… உங்களை அனுப்பினது வருண் கூட உங்களுக்கு ரிலேஷன்ஷிப்பை உருவாக்க கிடையாது… ஜஸ்ட் அங்க நடக்கற விஷயங்களை சொல்லவும் நான் சொல்றதை அங்க செய்யவும் தான்… அதை தாண்டி அவன் கூட பழகணும்ன்னு நினைச்சா நான் சும்மா விட்டுடுவேன்னு நினைக்காதீங்க ஸ்ருதி… ”

அவன் பொறுமையாக கூறிக்கொண்டிருந்தாலும் அதில் உள்ள கோபத்தையும் அதிகாரத்தையும் உணர்ந்து கொண்டாள் அந்த புத்திசாலி… ஆனால் அனைத்துக்கும் பணிந்து போக வேண்டிய அவசியம் இப்போது அவளுக்கு இல்லையே… வருண் அவளுக்குள் அந்த பலத்தை விதைத்திருந்தான்…

“சாரி ஜிகே சர்… ஐம் இன் லவ்… நீங்க சொல்றதை என்னால கேட்க முடியாது… ப்ளீஸ் விட்டுடுங்க… ”

திக்காமல் திணறாமல் தெளிவாக கூறி முடித்த ஸ்ருதியின் தைரியம் வியப்படைய செய்ய… அவளுக்காக சிரிப்பதா அல்லது கோபப்படுவதா என்று புரியவில்லை…

‘ஆதியில் வந்தது பாதியில் நிற்க நேற்றைக்கு வந்தது நெய் சோறு கேட்க’ என்ற பழமொழி தேவையே இல்லாமல் அவனது மண்டைக்குள் ஊர்ந்தது… அவனையும் மீறி சிரித்தான் ஜிகே!

“சர்… ”குழம்பிய குரலில் அவள் அழைக்க… தன்னை ஒருவாறாக நிலைப்படுத்தி கொண்டவன்…

“லவ்… ஷிட்… ” இடைவெளி விட்டவன்… “வித் வாட்?”நறுக்கென்று கேட்க… ஒரு நிமிடம் யோசித்தாள் ஸ்ருதி…

“எல்லாமேதான் சர்… ஒரு சராசரியான வசதி இருக்க என்னை மாதிரி பொண்ணுக்கு வருண் மாதிரி ஒருத்தர் கிடைக்கறது பெரிய விஷயம் சர்… அதையேன் கெடுக்க நினைக்கறீங்க?”

நேரடியான அந்த பதிலை பார்த்து பரிதாபப்பட்டான் ஜிகே!

“ஸ்ருதி… அளவுக்கு மீறி ஆசைப்படும்போது அதுக்கான விலையையும் நீங்க குடுக்கணும்… வருண் உங்களை லவ் பண்ணலை… அவன் உங்களை ஸ்மெல் பண்ணிட்டான்… நீங்க தப்பிக்கணும்னா அங்க வேலைக்கு போயிடாதீங்க… மீறி போறது உங்க ரிஸ்க்… ”

என்று கூறிவிட்டு செல்பேசியை ஜிகே வைத்தது ஸ்ருதியை சற்று குழப்பி விட… ஆனாலும் இதையெல்லாம் கணக்கில் எடுத்து கொண்டு வருணை விட்டுவிட அவளுக்கும் மனதில்லை… எத்தனை கதைகளில் படித்திருக்கிறாள்… எத்தனை படங்களை பார்த்திருக்கிறாள்… !

மில்ஸ் அன்ட் பூன்ஸ், ஹர்லெக்கின் என அவள் படித்த அத்தனை பாஸ் செக்ரட்டரி காதல் கதைகளும் அவளை மாய லோகத்தில் சஞ்சரிக்க வைக்க… உண்மை சுடுமென புரிந்து கொள்ளவில்லை அவள்! அளவுக்கு மீறிய வசதியான வாழ்கையும் அந்தஸ்தான அழகான கணவனும் மட்டுமே அவளது கனவுகளை ஆக்கிரமித்து இருக்க… வருண் கண்டிப்பாக தனது கனவுகளுக்கு பொருத்தமான நாயகன் என்று தீவிரமாக எண்ண துவங்கியிருந்தாள்!

********

“ம்மா… எதுக்கு எல்லாத்தையும் பயர்ல போடறாங்க?”அங்கு வந்தது முதல் இருபதாவது தடவையாக ஹோம குண்டத்தை பார்த்து கேட்க ஆதிரைக்கு பொறுமை சற்று குறைய துவங்கியது… ஆனாலும் மகன் கேட்க்கும் போது சொல்லாமல் இருக்க முடியாதே… பியைத்து எடுத்து விடுவானே…

“இன்னைக்கு என்ன டே? சொல்லு பார்க்கலாம்… ”அவள் பத்தொன்பதாவது தடவையாக கேட்ட கேள்வியை திரும்பவும் பிருத்வியிடம் கேட்க… அந்த வாண்டோ அதே ஆர்வத்தோடு…

“தக்ஷாவோட பெத்டே… ”

“அதுக்கு அத்தையும் மாமாவும் என்ன பண்றாங்க?”

“ஆயுஷ்ஷ்ஷ் கோமம்ம் பண்தாங்க… ”அவனது உச்சரிப்பில் ஆயுஷ் ஹோமம் என்பதை அவ்வளவு அழகாக கூற… அதை ரசித்தவள்…

“எதுக்கு பண்றாங்க?”

“தக்ஷா நல்லா இதுக்கனும்ன்னு பண்தாங்க… ”

“சரியா? புரிஞ்சுதா? இப்போ ஒழுங்கா உட்கார்ந்து சுவாமி கிட்ட வேண்டிக்கோ… பிருத்வி பாப்பாவும் நல்லா இருக்கணும்ன்னு… ”

சிதம்பரத்தின் ஒன்று விட்ட தங்கையான ராஜேஸ்வரியின் மகன் சிவக்குமரனுக்குத்தான் வள்ளியம்மையை மணம் செய்து தந்திருந்தனர்… அவர்களது பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டு திருமணம் சமீபத்தில் இருந்தது… இந்த நிலையில் ரக்ஷாவுக்கு பிறந்த நாள் என்று வள்ளியம்மையும் சிவக்குமரனும் சிதம்பரம் வீட்டினரை ஆயுஷ்ஹோமத்திற்கு அழைத்திருக்க… அதிகாலை ஐந்து மணிக்கே அங்கு வந்துவிட்டனர் விசாலாட்சியும் ஆதிரையும்… !

வருண் காலை உணவுக்கு வந்துவிடுவதாக கூறியிருக்க… பிருத்வியை தூக்க கலக்கத்தோடு அப்போதே அழைத்து வந்துவிட்டதில் சற்று நேரம் மடியிலேயே உறங்கியவன்… விழித்தது முதல் கேள்விகளாய் கேட்டு கொண்டிருந்தான்…

“ம்மா… பிருத்வி பாப்பாக்கு இந்த மாதிதி கோமம் பண்ணவே இல்லை… அப்புதம் எப்பதி பாப்பா நல்லா இதுக்கும்?” தூக்க கலக்கத்தில் பிருத்வி கேட்டாலும் அவன் கேட்பதிலும் அர்த்தம் இருக்கிறதே… இதுவரை எதையுமே இது போல ஆதிரை செய்தது இல்லையே…

வள்ளியம்மைக்கு அனாவசியமாக பிறந்தநாள் கொண்டாட்டம் என்று பிள்ளைகளை பழக்க கூடாது என்ற எண்ணம்… எவ்வளவுக்கு எவ்வளவு எளிமையாக இருக்க முடியுமோ அவ்வளவு எளிமையாக இருப்பவள்… அதனால் பார்ட்டி என்றெல்லாம் செய்யாமல் ஹோமத்தோடு ஏழைகளுக்கு உணவும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு உணவும் மட்டுமே அன்றைய முக்கிய நிகழ்வாக இருக்கும்…

லண்டனில் இவை எதையுமே பின்பற்றியதில்லை ஆதிரை… அவளது தடுமாற்றத்தை பார்த்த அருகில் அமர்ந்திருந்த விசாலாட்சி…

“பிருத்வி பாப்பாக்கு இனிமே ஹோமம் பண்ணிடலாம்… இப்போ தானே இங்க வந்து இருக்கீங்க… ” என்று அவனை அள்ளி எடுத்து கொண்டு கூற… பாட்டியின் கழுத்தை கட்டியபடி…

“ஆச்சி… அந்த ரக்ஷா பிக்கிக்கு அம்முத்தை மாமா எல்லாதும் விஷ் பண்தாங்க… ஏன் அப்பா எனக்கு விஷ் பண்ணவே இல்ல?”அதிமுக்கியமான கேள்வியை விசாலாட்சியை பார்த்து பிருத்வி கேட்டு வைக்க… ஆதிரையின் மனது அந்த கேள்வியில் தடதடத்தது…

“பிருத்வி கண்ணா… வர்ற பர்த்டேக்கு அப்பா உனக்கு கண்டிப்பா விஷ் பண்ணுவாங்க… சரியா?” அவனை சமாதானம் செய்தவரை பார்த்து முறைத்தாள் ஆதிரை… அவரோ அதை கண்டுகொள்ளாமல் திரும்பி கொள்ள… அவளது மகன் அடுத்த கேள்வியை ஆரம்பித்தான்…

“அப்பதீன்னா இதே மாதிதி கோமம் செய்வாங்களா அப்பாவும் ஆதிம்மாவும்?” ஹோமகுண்டத்தின் முன் அமர்ந்திருந்த சிவக்குமரனையும் வள்ளியம்மையையும் பார்த்து கேட்க… விசாலாட்சிக்கு என்ன சொல்வது என்று விளங்கவில்லை… அருகே ஆதி முறைத்து கொண்டு அமர்ந்திருக்க…

“கண்டிப்பா செய்வாங்கடா செல்லம்… ” பிருத்வியை அணைத்து கொள்ள… சமாதானமாகி அமர்ந்து பார்த்து கொண்டிருந்தவன் திடீரென…

“ஆச்சி… இப்போவே அப்பாவ பாக்கனும்… ” ஏக்கமாக பிருத்வி கேட்டதில் மெய்யுருகி போனார் விசாலாட்சி… ஆனால் முடிவென்பது அவரது கையில் இல்லையே…

பிருத்வி கேட்டதை கேட்டுகொண்டிருந்த ஆதிரையும் அதிர்ந்து அமர்ந்திருந்தாள்…

ஹோமம் முடிய… செய்முறைகளை முடித்து வள்ளியம்மையும் சிவகுமாரனும் அவர்களது கால்களில் விழுந்து ஆசி பெற்றுக்கொள்ள… ஆதிரையும் எழுந்தாள்… பிருத்வியின் பிடிவாதமும் அதிகமாகி கொண்டே இருந்தது…

“அப்பா வேணும் ஆச்சி… இப்பவே பார்க்கணும்… ” பிடிவாதம் அதிகமாக… அனைவரும் பிருத்வியை பார்க்க… சங்கடத்தில் நெளிந்தாள் ஆதி! அங்கு இருந்த ஒவ்வொருவருமே உண்மைகளை அறிந்து இருந்த காரணத்தால் சங்கடத்தில் நெளிய… பிருத்வியின் பிடிவாதமும் தந்தையை காண ஏக்கபட்டு காண முடியாததில் கோபமும்… சேர்ந்து அவனை அழ வைக்க… விசாலாட்சி எப்படி சமாதானப்படுத்துவது என்று புரியாமல் திணறி கொண்டிருந்தார்…

“அம்மா… கொஞ்சம் அவனை சமாதனப்படுத்தும்மா… ரொம்ப அழறான்… ” வள்ளியம்மை பிருத்வி அழுவதை தாளமுடியாமல் தாயை கடிந்து கூற…

“இவனோட அப்பா ஒரு பங்கு பிடிவாதக்காரன்னா அம்மா ரெண்டு பங்கு பிடிவாதக்காரி அம்மு… அவங்க ரெண்டு பேருக்கும் பிறந்தது எப்படி இருக்கும்? இன்னும் என்னவெல்லாம் பார்க்கனும்ன்னு விதிச்சு இருக்கோ? நான் என்ன பண்றது?” பேரனை சமாதானப்படுத்த முடியாமல் அவர் புலம்ப… ஆதிரை அவரை அழுத்தமான பார்வை பார்த்தாள்… அவளது பார்வையின் கூர்மை தாங்க முடியாமல் தலைகுனிந்த விசாலாட்சியை…

“பெரியவங்க எல்லாருமா விதைச்சீங்க… ஆனா அறுவடை செய்தது நான் மட்டும்தான் அத்தை… அவரும் நானும் வாழ வேண்டிய வாழ்க்கையை நீங்க எல்லாரும் வாழ்ந்துட்டீங்க… இதுல என் பிடிவாதம் என்ன இருக்கு?” மனதை அழுத்தி கொண்டிருந்தவை எல்லாம் வார்த்தைகளாக வர… எதையுமே பேச தோன்றாமல் ஆதிரையையே பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி…

உண்மைதானே!… இருவரும் வாழ வேண்டிய வாழ்க்கையை யார் வாழ்ந்தது? மனதில் எழுந்த இந்த கேள்வி அவரது வார்த்தைகளை தடை செய்ய… மெளனமாக சோபாவில் அமர்ந்தார்… பெருங்குரலெடுத்து அழுத பிருத்வியின் முதுகில் பலமான அடியை வைத்தாள் ஆதி!

அவன் மேலும் சப்தமிட்டு அழ… வள்ளியம்மை ஓடிவந்து பிருத்வியை தூக்கி கொள்ள… ஆதிரை கோபமாக பிருத்வியை பார்த்து கத்தினாள்…

“உனக்கு நான் மட்டும் தான் பிருத்வி… அப்பா ஆட்டுகுட்டின்னு கேட்ட… முதுகு தோல் உரிஞ்சுடும்… போ… போய் கார்ல ஏறு… ” மிகுந்த கோபத்தோடு கத்தியவளை பார்த்து பயந்த குழந்தை வள்ளியம்மையை கட்டி கொண்டு மேலும் அழ…

“ஆதி… இவன் குழந்தை… பாவம் இதுக்கென்ன தெரியும்… இவன் கிட்ட போய் கத்திகிட்டு இருக்க?” அவளை சமாதனப்படுத்த முயன்ற வள்ளியம்மையை நோக்கி அவளது கோபம் திரும்பியது…

“நான் மட்டும் என்ன பண்றது அண்ணி? எங்கையாவது போனா… உன் பையனான்னு கேட்கறாங்க? அடுத்தது அப்பா யாருன்னு கேள்வி… கோவில் போனா இதே கேள்வி… கம்பெனி போனாலும் இதே கேள்வி… எங்க பார்த்தாலும் இதையே கேட்டா நான் என்ன பண்றது? கேட்டுட்டு கழுத்தை வேற உத்து உத்து பார்த்தா நான் என்ன செய்ய? இதுக்கு தான் நான் இங்க வரவே மாட்டேன்னு சொன்னேன்… பிடிவாதம் பண்ணி இங்க வர சொன்னீங்க… இப்போ எனக்கு பிடிவாதம்ன்னு சொன்னா?அவன் கால்ல போய் விழுந்து எனக்கு வாழ்க்கை கொடுன்னு கேட்க சொல்றீங்களா?”

மிகுந்திருந்த கோபமும் சுயபச்சாதாபமும் போட்டி போட… கத்தலில் ஆரம்பித்து மடங்கி அமர்ந்து அழுகையில் முடித்தாள் ஆதி…

“ஆதி… ” கையில் பிருத்வியோடு அவளையும் அணைத்து கொண்ட வள்ளியம்மையின் கண்களிலும் கண்ணீர்… தாயை எதுவும் கூற முடியாமல் முறைக்க…

“நானே சைந்து கல்யாணத்துக்கே எப்படி வர்றதுன்னு ரொம்ப யோசிச்சுட்டு இருக்கேன் அண்ணி… எல்லாரும் கேப்பாங்க… பேசாம நான் அம்மாகிட்டவே போய்டறேன்… எனக்கு இந்த ஊர் வேணாம்… எதுவுமே வேணாம்… ” அழுகையின் ஊடே கூறி கொண்டு கண்ணீர் வடிக்க… அத்தையிடமிருந்து இறங்கிய பிருத்வி… ஆதியின் கண்ணீரை பிஞ்சு விரல்களினால் துடைத்து…

“ம்மா… ”என்று அழைத்து அவளது கழுத்தை கட்டி கொள்ள… குழந்தையின் அந்த செயலில் உடைந்து போன ஆதி… அவனை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்தாள்…

சற்று நேரத்திலேயே சுதாரித்தவள்… சட்டென பிருத்வியை தூக்கி கொண்டு காரை நோக்கி சென்றாள்… வீட்டிற்கு செல்ல வேண்டி! அந்த சூழ்நிலை தன்னால் மேலும் கெட்டு விட கூடாதே என்று…

அன்று இரவே பிருத்வி நினைவில்லாமல் ஜுரத்தில் புலம்ப ஆரம்பித்தான்…

தந்தையை எண்ணி! அவனது தந்தைக்காக ஏங்கி!

error: Content is protected !!