Cp19

Cp19

அத்தியாயம் பத்தொன்பது

கல்லெறிந்து விளையாடிய குளக்கரை

இன்று வெறிச்சோடி கிடக்கிறது

துணையிழந்து நிற்கும்

என் தனிமை போல!

-டைரியிலிருந்து

பிருத்வியின் அருகில் அவனை அணைத்துக்கொண்டு படுத்திருந்தாள் ஆதிரை… நள்ளிரவில் ஜுர வேகத்தில் தந்தைக்காக ஏங்கி புலம்ப ஆரம்பித்த பிருத்வியை சமாதானப்படுத்தி அவசரத்திற்காக வைத்திருக்கும் காய்ச்சல் மருந்தை கொடுத்து உறங்க வைப்பதற்குள் படாத பாடு பட்டுவிட்டாள்… அவளால் தன் மகனது ஏக்கத்தை தாளவே முடியவில்லை…

மனதின் அடியாழத்தில் அடக்கி வைத்திருந்த நினைவுகள் அனைத்தும் மேலேறி குத்தாட்டம் போட்டு கொண்டிருந்தன… அவை ஆதிரை என்ற அடிமுட்டாளின் முட்டாள்தனத்தை கேலி செய்து கொண்டிருந்தன… மனமோ பொய்த்து போனவனின் நம்பிக்கை துரோகத்தை நினைத்து வலியில் ஆழ்ந்திருந்தது…

அந்த ஒரு நாளை மட்டும் வாழ்கையின் புத்தகத்திலிருந்து நீக்க முடியுமா? முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்… எவ்வளவு சந்தோஷமாக அவனோடு பறந்து திரிந்த நாட்கள் அவை?

“ஏன் என்னை ஏமாற்றினாய் கௌதம்? உன்னை மட்டுமே உயிராக நினைத்திருந்தேனே… உனக்காக எதை செய்யவும் துணிந்திருந்தேனே… ஆனால்… நீ?”

மனதில் வலி படுத்தி எடுத்தது… ஐந்து வருடங்கள் கடந்த பின்னரும் இன்று நடந்தவை போலவே… வாழக்கையை வெறுத்துவிட்ட வலியும் வேதனையும்! யாரிடமும் வெளிப்படையாக கூற முடியாத வலி… மறந்து விட்டதாக மரத்து விட்டதாக காட்டி கொண்ட நினைவுகள்…

எவ்வளவு அப்பாவித்தனமாக உன்னை நம்பியிருந்தேன்… எந்த அளவு நம்பிக்கை வைத்திருந்தேன்… அத்தனையும் ஒரு நொடியில்… ஒரே நொடியில் காலடியில் போட்டு மிதித்து விட்டாயே! உன் மீது நான் வைத்த அளவற்ற காதலுக்கு பிரதிபலிப்புத்தான் உன் துரோகமா?

பிருத்வி மட்டும் இல்லையென்றால்? இந்நேரத்திற்கு தன்னை புதைத்த இடத்தில் புல் முளைத்திருக்குமே!… தன்னை மறந்து புலம்பிக்கொண்டிருந்தவளின் காதுகளில் மீண்டும் பிருத்வியின் புலம்பல் விழுந்தது…

“ப்பா… ப்பா… ”

மனதை கடப்பாரையால் பிளப்பது போன்ற வலியை உணர்ந்தவள் கண்களில் கண்ணீர் கோடுகள்… மகனை வாரி எடுத்து அணைத்து கொண்டு…

“அப்பா காலைல வருவாங்க செல்லகுட்டி… இப்போ தூங்கும்மா… ”என்று கண்ணீரோடு தட்டி கொடுக்க… அவளது மகன் சற்று அமைதியடைந்து உறங்க துவங்கினான்…

இன்று மகனது நிலையில் அன்று தன்னை இருத்தி சதுரங்க வேட்டையாடியவனை இன்றும் நடு வீட்டில் நிறுத்தி பளாரென அறையும் ஆத்திரம் வந்தது அவளுக்கு! அவனது சட்டையை பிடித்து கேள்வியை கேட்க வேண்டும் போல…

ஆனாலும் அவன் விட்டு சென்ற அவனது வாசம் அவளது நாசியில்! மறக்கத்தான் முடியுமா?மூழ்கி முத்தெடுத்து மயங்கி இருந்ததை மறுக்கத்தான் முடியுமா?

தூரத்தே தெரிந்த துருவன் அவளது நினைவுகளை பின்னோக்கி இழுத்து சென்றான்…

******

“ம்ம்மா எனக்கு சீக்கிரம் ஊட்டிவிடும்மா… இவளுக்கே குடுத்துட்டு இருக்க… ” வள்ளியம்மை கோபமாக விசாலாட்சியிடம் பொய்சண்டைக்கு செல்ல…

“அத்தை… அடுத்த வாயும் எனக்குத்தான்… ” வேண்டுமென்றே வள்ளியம்மையிடம் வழக்கடித்தாள் ஆதிரை… இருவரின் இந்த சண்டையை பார்த்து வள்ளியம்மைக்கு தலை பின்னி விட்டு கொண்டிருந்த ராஜேஸ்வரியும் இருவருக்கும்ஊட்டி விட்டு கொண்டிருந்த விசாலாட்சியும் தலையில் அடித்து கொண்டு சிரித்து கொண்டிருந்தனர்…

“அட கர்மமே… இதுங்க ரெண்டையும் என்ன பண்றது அண்ணி? ஒருத்தர் ஊட்டிவிட ஒருத்தர் தலைபின்னி விட… இதெல்லாம் இதுங்களுக்கே ஓவரா இல்ல?”ஆதிரைக்கு தலை வாரிவிட சீப்போடு வந்த சிவகாமி அங்கு நடந்து கொண்டிருந்த கூத்தை பார்த்து சிரிக்க… ராஜேஸ்வரியும் விசாலாட்சியும் சிரித்து கொண்டனர்…

சிவகாமி அவ்வப்போது வந்து தங்கி கொண்டிருக்க… ஆதிரை ஆறாம் வகுப்பு முதலே சென்னையில் தான் படித்து கொண்டிருந்தாள்… ராஜேஸ்வரி சிதம்பரத்தின் ஒன்று விட்ட தங்கை என்றாலும் சிவகாமியை விட அவரே விசாலாட்சியுடன் அதிக ஒட்டுதல்… அவருமே அடிக்கடி அண்ணன் வீடென்று வந்து விடுவார்…

இந்த மூத்த மூவரும் இணைந்து விட்டால் இளைய குரங்கு படையை மாற்றி மாற்றி செல்லம் கொஞ்சி கொண்டு விளையாட ஆரம்பித்து வீடு தலைகீழாகி விடுமே! குரங்கு படை என்பது ராஜேஸ்வரியின் மகள் சைந்தவியும் சேர்த்துதானே… சிவக்குமரன் அதிகமாக இதில் தலை கொடுப்பதில்லை… வருணோடு சேர்ந்து கொண்டு ஒதுங்கி விடுவான்…

“தலைக்கு எண்ணெய் வைன்னா வைக்கிறியா? எப்போ பார்த்தாலும் பரட்டையா இருக்கு… ”ஆதிரையின் தலையை வரக் வரக்கென்று வாரிக்கொண்டே கேட்க… முகத்தை சுருக்கி கொண்டு தலையை பிடித்து கொண்ட ஆதி அத்தையை பார்த்து முறைத்தாள்… நீ தலை வாரி விடாததால் தானே கொட்டு வாங்குகிறேன் என்ற பார்வையோடு!

பெரும்பாலும் சிவகாமி இல்லாத போதெல்லாம் விசாலாட்சி தான் தலை வாரி விடுவது பழக்கம்… அவர் மென்மையாக வாரி விட… சிவகாமியிடம் சிக்கும் போதோ ஆதிரைக்கு தலை வலியே வந்துவிடும்… அவருக்கு பாசம் இல்லை என்றேல்லாம் கூற முடியாது… அவரது அதீத பாசத்தை சரியாக வெளிப்படுத்த தெரியாதவர்…

“அதுக்கு தான் நான் ஹேர் கட் பண்ணிக்கறேன்னு சொன்னேன்… நீதான் இவ்வளவு முடிய வளர்த்துவிட்ட… இப்போ என்னை சொன்னா?”சிவகாமியிடம் ஆதிரை வம்புக்கு நிற்க… அவளது அழகை ரசித்து கொண்டே தலை பின்னி விட்டு கொண்டிருந்தார் சிவகாமி…

நாளுக்கு நாள் பிரகாசித்து வரும் மகளின் அழகை பார்த்து பெருமையாக இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஏதோ ஒரு பயம் கவ்வியது… பால் வண்ணத்தில் சருமமும்… செங்காந்தள் கண்கள் கவிதைகளாய் இருக்க… அந்த நிலவு முகத்தையும்,கொடியிடையும், இடையை தாண்டி தொடை தொடும் கூந்தலையும் பார்க்கும் போது மனம் படபடவென அடித்து கொள்வது உண்மை… அதனாலே மகள் அலங்காரம் செய்து கொள்வதை சிறிதும் விரும்பமாட்டார்… அலங்காரம் செய்யாமலே அவளது அழகு சுடர் விடும் போது அலங்காரமும் செய்தால்?

அதோடு சுடிதார், தாவணி தவிர வேறு எதையும் அவளை அணிய அனுமதித்ததில்லை… சிவகாமி மட்டுமல்ல விசாலாட்சியுமே அப்படித்தான் என்பதால் ஆதிரையும் இந்த விதிமுறைகளை மீறியதில்லை… எவ்வளவுதான் பணம் கொட்டி கிடந்தாலும் கலாசாரம் மாறாமல் வளர வேண்டுமென்பது சிவகாமியின் ரூல்புக்கில் இருக்கும் முதல் விதிமுறை…

இத்தனை அழகையும் பத்திரமாக பாதுகாக்க வேண்டிய அவசியத்தை இந்த அப்பாவி பெண் புரிந்து கொள்ள வேண்டுமே… பெண்களை மயக்கவென்றே இருப்பவர்களை இனம் கண்டு கொள்வாளா இவள்?

கணவரும் அகால மரணமடைந்து விட… தனியே தன்னை சூழ்ந்த பொறுப்புக்களின் நடுவில் மகளது வாழ்கையை சிறப்பாக அமைத்து கொடுக்க வேண்டுமே என்ற பயமும் அவரை பீடித்தது!

சிவகாமியின் மனதில் ஒரு தாயாக… அழகான பெண்ணை பெற்ற தாயாக… பணம் படைத்த அழகான பெண்ணை பெற்ற தாயாக குழம்பி கொண்டிருக்க… அந்த குழப்பத்துக்கு உரியவளோ தனது அத்தை ஊட்டிவிட காலை பொங்கலை ரசித்து உண்டு கொண்டிருந்தாள்…

“அத்தை பொங்கல் ரியலாவே டேஸ்ட்டா இருக்கா? இல்லை நீ ஊட்டி விடறதால டேஸ்டா இருக்கா?… வாவ் யம்மி… ”சிலாகித்து கூற… வள்ளியம்மையும் சப்பு கொட்டி கொண்டு…

“ஆமா ஆதி… அதே அதே… அதுக்காகவே தான் நானும் நானாவே சாப்பிடறது இல்ல… ” இதில் கூட்டு சேர்ந்து கொண்ட களவாணிகளை பார்த்து விசாலாட்சி…

“ரெண்டு சோம்பேறி கழுதைங்களும் இதுல கூட்டு சேர்ந்துக்கறீங்களா?” விசாலாட்சி சிரிக்க…

“நாலு கழுதை வயசாச்சு… இன்னும் தலை பின்னி விட ஒரு ஆள் வேணும் உனக்கு!” ஆதிரையின் தலையில் மீண்டும் நங்கென்று கொட்ட… தலையை தேய்த்து விட்டு கொண்டு முறைத்தாள் ஆதி…

“அண்ணி… இதென்ன வளர்ற பிள்ளை தலைல கொட்டறீங்க?” விசாலாட்சி சிவகாமியிடம் சண்டை பிடிக்க… ஆதிரை விசாலாட்சியின் கன்னத்தை பிடித்து கிள்ளினாள்…

“சாலா செல்லம் சாலா செல்லம் தான்… ”என்றவாறு முத்தமிட…

“அடிக்கழுதை… அத்தை கன்னத்தை எச்சி பண்ணினதுமில்லாம பேரை சொல்லி வேற கூப்பிடறியா?” ராஜேஸ்வரி காதை திருக… அவரிடமிருந்து லாவகமாக தப்பித்த ஆதி… மூவரையும் பார்த்து கண்ணடித்து…

“சாலாச்சி… உன் பேர் சாலாச்சிதானே?”என்று கூறி விட்டு தப்பிக்க பார்க்க…

“அதானே… இதுக்கு போயா கோபிப்ப ராஜேஸ்வரி?” வள்ளியம்மை அவளது பங்குக்கு அவளது அத்தையை கலாய்த்து வைக்க… இருவரும் சிக்குவதற்கு முன்னர் தப்பித்தனர்… இருவரும் படிப்பது வேறு வேறு கல்லூரிகள்… ஆதிரை படிப்பது சிவில் இஞ்சினியரிங் முதல் வருடம்… வள்ளியம்மை படிப்பது இரண்டாம் வருட பேஷன் டெக்னாலஜி…

ஆதிரை அவளது கல்லூரியில் இறங்கி கொள்ள… வள்ளியம்மை அவளது கல்லூரியை நோக்கி சென்றாள்… தோழிகளோடு அரட்டை அடித்து கொண்டே வகுப்பறைக்கு செல்ல… அவளுக்காகவே காத்து கொண்டிருந்தான் விஷால்… மூன்றாம் வருட மாணவன்…

“ஹாய் ஏஞ்சல்… ”முகம் முழுக்க புன்னகையோடு அவளை எதிர்கொண்டவனை பார்த்ததும் உள்ளுர கோபம் வந்தாலும்… அதை காட்டி கொள்ளாமல்…

“ஹாய்… ” ஒப்புக்கு சிரித்து வைத்தாள்… உடனிருந்த அனிஷாவும் சாதனாவும் நமுட்டு சிரிப்பு சிரிக்க… அதை கண்டுகொள்ளாமல் விஷால் ஆதிரையை கண்களால் விழுங்கி கொண்டிருந்தான்… அந்த கல்லூரியில் பல பேருடைய கனவு கன்னியாக வலம் வருபவளை அன்று இவ்வளவு அருகிலிருந்து சைட் அடிக்கும் பாக்கியத்தை கொடுத்த கடவுளுக்கு நன்றி கூறி கொண்டான்…

பாந்தமாக அணிந்திருந்த ப்ளாக் அன்ட் ஒயிட் காட்டன் சுடிதார் அவளது அழகை பறைசாற்ற… நெற்றியில் ஒற்றை சிறு பொட்டையும் கண்களில் மெலிதான மை தீற்றலையும் தவிர வேறு அலங்காரம் இல்லாத அந்த பதுமை… பலருடைய உறக்கத்தை கெடுத்து வருபவள் என்பதை அவளாவது உணர்வாளா என்று யோசித்தான் விஷால்…

அவளை பார்த்து கொண்டே நடந்ததில் அவளது வகுப்பறை வந்ததையே உணராமல் அவன் பார்த்து கொண்டிருக்க…

“ஓகே பை… ”முறைத்தவாரே கூறிவிட்டு உள்ளே சென்றமர்ந்தாள் ஆதிரை… இதுபோன்ற பார்வைகள் அவளுக்கு புதியது இல்லை… ஷாப்பிங் செல்லும் போது விசேஷங்களுக்கு செல்லும் போது என மற்றவர்களின் வியந்த பார்வையை எதிர்கொண்டு இருக்கிறாள் தான்…

“நீங்க எந்த ஊரும்மா?”என்ற வியந்த பார்வையோடு கூடிய கேள்வி அவளை எப்போதுமே தொடர்வதுதான்… ஆனால் விஷால் போல வெளிப்படையான பருகும் பார்வை அவளுக்கு கிஞ்சிற்றும் பிடிப்பதே இல்லை… எரிச்சலோடு கூடிய கோபம் மட்டுமே பதிலாக இருந்தாலும் அதை காட்டி கொள்ளவும் விரும்பமாட்டாள்…

வகுப்பறையில் அமர்ந்து தோழிகளிடம் பேசி கொண்டிருந்ததில் மனம் சமன்பட… வகுப்பக்கள் துவங்கியது… முதல் வகுப்பு பேசிக் சிவில்… விரிவுரையாளருக்காக அனைவரும் காத்து கொண்டிருக்க… அறையின் உள்ளே நுழைந்தார் பிரின்சிபால்… வகுப்பறை அமைதியானது!

“ஹாய் ஸ்டுடென்ட்ஸ்… குட் மார்னிங்… ” வாழ்த்திவிட்டு பேச்சை துவங்கலாம் என்று வாய் திறக்க போக… பின்னால் அமர்ந்திருந்த குறும்பு மாணவர்கள்…

“குட் மார்னிங் சார்ர்ர்ரர்… ” பள்ளியில் சொல்வது போல இழுத்து கூற… சிறு சிரிப்பு மலர்ந்தது அவரது முகத்தில்… அவரும் இது போல எத்தனை குறும்பு மாணவர்களை பார்த்திருப்பார்… அருகில் நின்று கொண்டிருந்தவனை பார்த்து சிரித்தார் அவர்!

“ஓகே ஸ்டுடென்ட்ஸ்… மீட் யுவர் நியு பாக்கல்ட்டி… இனிமே இவர்தான் உங்களுக்கு பேசிக் சிவில் ஹேண்டில் பண்ண போறார்… ” என்று கூறி இடைவெளி விட… அனைவரும் எழுந்து நின்று மரியாதை தெரிவித்து விட்டு அமர… அவனையே பார்த்து கொண்டிருந்த ஆதிரையின் விழிகளில் ஆராய்ச்சி!

எங்கேயோ பார்த்து இருக்கிறேனே… எங்கு? என்று நினைவடுக்குகளை கசக்கி பிழிந்து பார்க்க… எங்கு என்பது நினைவுக்கு வரவில்லை… ஆனால் அந்த கல் போன்ற முகமும் அந்த உயரமும் தனக்கு மிகவும் பரிட்சியமாக இருந்தது போல தோன்றியது… மிகவும் பழக்கப்பட்ட முகம்!

“… அன்ட் ஹி இஸ் ஜிகே… டன் ஹிஸ் சிவில் எஞ்சினியரிங் கிராஜுவேஷன் இன் பிரஸ்டீஜியஸ் நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர்… இப்போ நமக்கு பார்ட் டைம் பெக்கல்ட்டியா ஒர்க் பண்ண வந்துருக்கார்… ” என்று கூற… மாணவர்களிடையே கைத்தட்டல் எழுந்தது… அங்கிருந்த பெரும்பாலான மாணவர்களுக்கு அவன் படித்த அந்த யுனிவர்சிட்டி கனவு… உலக அளவில் சிவில் இஞ்சினியரிங்கில் டாப் டென்னில் இருக்கும் பல்கலைக்கழகம்… அதை விட கல்விக்கு சிங்கப்பூர் அரசாங்கம் கொடுக்கும் முக்கியத்துவமும் ஸ்காலர்ஷிப்களும் மாணவர்களை வசீகரிப்பவை!

“வாவ்… செம்ம ஹேண்ட்சம்… ”அருகிலிருந்த அனிஷா ஜொள்ள… ஆதிரைக்கோ அவனை எங்கு பார்த்தோம் என்பது புரியவில்லை…

கல்லூரி முதல்வர் கூறி முடித்து விட்டு அவனிடம் கூறி கொண்டு கிளம்ப… வகுப்பறைக்கு நடுவில் வந்தவன்… சுற்றிலும் அனைவரையும் ஒரு முறை பார்த்தான்… சிறு மென்மையும் தட்டுப்படாத அந்த முகமும் அந்த கூர்மையான பார்வையும் வகுப்பு முழுவதையும் அளவெடுக்க…

“ஹாய் ஸ்டுடென்ட்ஸ்… ஐ ம் ஜிகே… ”என்று கூறி இடைவெளி விட… ஒரு குறும்புக்கார மாணவி எழுந்து…

“ஜிகேன்னா ஜெனரல் நாலேட்ஜா சர்?”சிரித்து கொண்டே கேட்ட போதும் அவனது முக உணர்வுகள் மாறவில்லை… சிரிப்போ கோபமோ எதுவுமே இன்றி அந்த பெண்ணை பார்த்து…

“ஐ ம் ஜஸ்ட் ஜிகே… அந்த ஜிகே க்கு நீங்க என்ன டெபனிஷன் வேணும்னாலும் வெச்சுக்கலாம்… ” கல் போன்ற முகத்துடன் கூறியவனை அந்த பெண்ணும் விடாமல்

“எனக்கு கொஞ்சம் ஜிகே கம்மின்னு எல்லாரும் சொல்றாங்க… கொஞ்சம் ஜிகே கடனா கிடைக்குமா சர்… ”

இது போன்ற கேள்வி முதலிலெல்லாம் வந்திருந்தால் அவன் கூறும் பதிலே வேறு மாதிரி இருக்குமே என்ற நினைவில் அவனது முகத்தில் மிக மெல்லிய புன்னகை கீற்று அரும்பியது… ஆனால் தான் இங்கு ஆசிரியர்… !

“ஒய் நாட்? அந்த ஜிகேவை டீச் பண்ணத்தானே நாங்க இருக்கோம்… ஆனா நான் கொஞ்சம் ஸ்ட்ரிக்ட்… வித்ஸ்டேன்ட் பண்றீங்களான்னு பார்க்கலாம்… ”

அந்த பெண் இரட்டை அர்த்தத்தில் கேட்ட கேள்விக்கு அவனும் இரட்டை அர்த்தத்திலேயே பதில் தந்து ஒரு புறம் தன்னுடைய குரு என்ற நிலையையும் உணர்த்தி அவனது இரும்புத்தன்மையையும் உணர்த்த… மாணவர்களிடையே புன்னகையும் கைதட்டலும் பரவியது!

“ஆஹா தியாவோட மூக்கை வந்த முதல் நாளே பஞ்சர் பண்ணிட்டாரே… ” இன்னொரு குறும்புக்கார மாணவன் சப்தம் கொடுக்க… சிரிப்பலை பரவியது…

அந்த சிரிப்புக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல… அனைவரையும் ஒரே பார்வையால் பார்க்க… ஆதிரை குழப்பத்தின் உச்சியில் இருந்தாள்… இந்த குரல்…

“உன்னோடு சேர்த்து பத்து… ” என்றோ கேட்டது போல அவளது செவிப்பறையில் வந்து மோதியது…

“கேர்ள் ப்ளஸ் ப்ரென்ட்… இஸ் ஈக்வல் டூ கேர்ள் ப்ரென்ட்… ” வழிந்த புன்னகையோடும் குறும்போடும் ஒலித்தது அவனது குரல்…

அவள் இந்த குழப்பத்தில் இருக்க… ஒவ்வொருவராக தங்களை அறிமுகப்படுத்தி கொண்டிருந்தனர்… அவளது பக்கத்தில் இருந்தவள் எழுந்து…

“ஐ ஆம் அனிஷா… என்னோட ஆம்பிஷன் பெர்பெக்ட் ஹவுஸ்வைப்தான் சர்… என் பேரன்ட்ஸ் நான் இஞ்சினியர் ஆகியே தீரனும்ன்னு இங்க தள்ளி விட்டுட்டாங்க… ”என்று சிரித்து கொண்டே கூற… கொல்லென்ற சிரிப்பு படர்ந்தது வகுப்பறையில்…

“ம்ம் ஆல் தி பெஸ்ட்… ”என்றவன் அடுத்து அமர்ந்திருந்த ஆதிரையை பார்த்து…

“நெக்ஸ்ட்… ” என்றழைக்க… அவளோ அவனா இவன்… இவனா அவன் என்ற குழப்பத்தில் காதில் விழாமலிருக்க… சற்று கடினமாக அழைத்தான்…

“நெக்ஸ்ட்… ” அருகிலிருந்த அனிஷாவும் சாதனாவும் அவளை உலுக்கினர்…

“ஏய் ஆதி… சர் உன்னை இன்ட்ரோ பண்ணிக்க சொல்றார்… ” அவர்கள் உலுக்கிய உலுக்கலில் சுய உணர்வு வர பெற்றவள்… தன்னை சுதாரித்து எழுந்து…

“ஐ ஆம் ஆதிரா… ” என்று கூற…

“அன்ட் யுவர் ஆம்பிஷன்?… ”என்று கேட்க… சட்டென்று புரியாமல் விழித்தாள்…

“க்ளாஸ்ல உட்கார்ந்து தூங்கறதா?” கூர்மையான பார்வையோடு கேட்டவனை அவசரமாக மறுத்தாள் ஆதி!

“நோ… நோ சர்… ”

“பின்ன… தூக்கம் ப்ளஸ் தூக்கம் இஸ் ஈக்வல் டூ அவுட்ஸ்டாண்டிங் ஸ்டுடென்ட் அவார்ட்… ஓகே… ” என்று ஜிகே வெகு இயல்பாக கூற… ஆதிரைக்கு மீண்டும் காதுகளில் அதே குரல் ஒலிக்க… பே என்ற பார்வையோடு அவனையே பார்த்து கொண்டிருக்க…

“என்ன பார்க்கறீங்க… அவுட்ஸ்டாண்டிங் மீன்ஸ் க்ளாசை விட்டு வெளிய அனுப்பிடுவேன்னு சொல்றேன்… ” கறாராக அவன் கூற… ஆதிரைக்கு சட்டென பல்பு எரிந்தது…

“இது கௌதமே தான்… ”

error: Content is protected !!