CP28

அத்தியாயம் 28

விழிபடும் தூரம் நீ

விரல் தொடும் தூரம் நீ

காத்து கிடக்கிறது ஐம்புலன்கள்

உன் காதலுக்காக!

-டைரியிலிருந்து

கல்லூரி குழுவினர் கொண்டாட்டத்தில் இருந்தனர்… மாநில அளவிலான போட்டிகளில் பெரும்பான்மையானவற்றில் இவர்களது கல்லூரி முதலிடம் பிடித்து இருக்க… ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப்பையும் பெற்றிருந்தனர்… ஆதிரை தனி நடன போட்டியிலும் குழு நடன போட்டியிலும் வெற்றி பெற்றிருந்தாள்… அந்த சந்தோஷம் அவளது முகத்தில் மின்னியது…

வெற்றியை கொண்டாட இரவு உணவு நட்சத்திர விடுதியில் வேண்டும் என்று கௌதமிடமும் லாவண்யாவிடமும் போராடி அனுமதி பெற்றிருந்தனர் மாணவர்கள்… விஷால் தலைமையில்! மாலையே கிளம்ப வேண்டிய குழுவினர்,மாணவர்களின் இந்த வேண்டுகோளினால் இரவு உணவை முடித்த பின் கிளம்புவது என்று திட்டம் மாற்றப்பட்டு இருந்தது…

பஃபே விருந்து… அவ்வப்போது குட்டி குட்டி நடனம்… வெடிசிரிப்பு என்று களைகட்டியிருந்தது பார்ட்டி… அவர்கள் வெற்றியை கொண்டாட வந்திருந்த அந்த நட்சத்திர விடுதியில்!

“அளவா செலப்ரேட் பண்ணிக்கங்க… பட் டோன்ட் எக்சீட் தி லிமிட்… நாங்க இங்க தான் இருப்போம்… ” கௌதம் அறிவித்து விட்டு அங்கிருந்த சோபாவில் அமர்ந்து கொண்டான்… உடன் அவனுடன் வேலை செய்யும் லாவண்யா!

லாவண்யா சலசலவென பேசிக்கொண்டே இருப்பவள் என்பதால் கௌதமுக்கு அவளோடு அந்த பதினைந்து பேர் கொண்ட குழுவை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதில் பிரச்சனை ஒன்றும் இருக்கவில்லை… பெரும்பாலான வேலைகளை கௌதம் பார்த்துவிடுவதால் அவளுக்கும் அது ஒரு ஈசி டாஸ்க்காகவே இருந்தது…

சோபாவில் அமர்ந்து கொண்டு பஃபேவை பார்வையிட்டு கொண்டே கௌதமிடம் சலசலத்து கொண்டிருந்தாள் லாவண்யா… உணவை உண்டு கொண்டே அவனும் பேச்சு சுவாரசியத்தில் ஆழ்ந்து விட… தோழிகளோடு பேசிக்கொண்டு உணவை உள்ளே தள்ளிக்கொண்டிருந்த ஆதிக்கு உள்ளுக்குள் புகைந்தது… அவனது பழைய லீலாவிநோதங்களை அறிந்து இருந்தவளால் தன் கண் முன்னே கௌதம் இன்னொரு பெண்ணிடம்… அது அவளது ஆசிரியரே ஆயினும்… பேசுவதை தாள முடியவில்லை… !

கண்களில் வெப்பத்தோடு அவனை பார்த்து கொண்டிருக்க… ஏதோ ஒரு உந்துதலில் திரும்பி ஆதிரையை பார்த்தவனின் கண்களில் குறும்பு புன்னகை!

“என்ன… ” என்று கண்களால் இவன் கேட்க… ஆதிரை கண்களை உருட்டினாள்…

“மவனே… கடலை வறுத்துட்டு இருக்கியா?” என்ற தொனியில்!

“சரி… நீதான் வாயேன்… நாம வறுக்கலாம்… ” குறும்பாகவே உதடுகளை அசைத்து சப்தமில்லாமல் கூறிய கௌதமை முறைத்தாள் ஆதிரை…

“பிச்சு பிச்சு… ” கண்களால் மிரட்டியவளை பார்க்கையில் மிகுந்த சுவாரசியம் பிறந்தது அவனுக்கு!

“அவளை பார்த்து கண்களை சிமிட்டி விட்டு லாவண்யாவிடம் மீண்டும் பேச்சை ஆரம்பிக்க,

இருவரையும் பார்த்து கொண்டிருந்த விஷாலுக்கு கடுகடுத்தது… இருவரின் கண் பாஷைகள் அவனை கோபத்தில் கொதிக்க செய்து கொண்டிருந்தன… தங்கள் இருவருக்குமிடையில் வந்த ஜிகேவை மொத்தமாக வெறுத்தான் அவன்… அதோடு தன்னை மறுத்துவிட்டு ஜிகேவிடம் மயங்கி கொண்டிருந்த ஆதிரையை ஏதாவது செய்து பழி வாங்கயே தீர வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது!

அவளை இந்த கூட்டத்தினர் முன் சற்று தலையிறக்கமாவது செய்தே ஆக வேண்டும் என்று எண்ணினான்!

கூல் ட்ரிங்கை பரிமாறி கொண்டிருந்த சர்வரை பார்த்தவனுக்குள் ஒரு திட்டம் உருவாகியது!

ஆதிரை தனது உணவு தட்டை அவளுடைய இடத்தில் வைத்தவள்,

“ஹாய் கைஸ்… ஜஸ்ட் லிசன் பார் எ செக்கன்ட்… ” அவர்களுடைய குழுவிற்கு நடுவில் வந்தவள் அனைவரையும் பார்த்து,

“உங்க எல்லாருக்கும் ஒரு சர்ப்ரைஸ்… ” ஓரக்கண்ணால் கௌதமை பார்த்து கொண்டு ஆரம்பிக்க,

“ஹேய் என்ன சொல்லு… ” கூட்டத்தினரிடையே சுவாரசியம் பிறந்தது… கௌதமோ நெற்றியை சுருக்கினான், இவள் எந்த சர்ப்ரைசை பற்றி கூறுகிறாள் என்பது புரியாமல் குழம்பினான்!

இவள் எதையாவது உளறி பிரச்னையை இழுத்து விட்டுவிட போகிறாளோ என்றும் உள்ளுக்குள் எண்ணம் ஓட… எதுவாக இருந்தாலும் பார்த்து விடலாம் என்று நிமிர்ந்து அமர்ந்தான்… அதிலும் லாங் ஸ்கர்ட் புல் ஸ்லீவ் டியுனிக் ஷார்ட் ஷர்ட்டில் அவளது அயர்ன் செய்யப்பட்ட நீள கூந்தலை கேட்ச் கிளிப்பில் அடக்கியவாறு கையை ஆட்டி பேசிக்கொண்டிருந்தவளை அணுவணுவாக ரசித்தவனுக்கு அந்த நிமிடம் உலகமே வண்ணமயமாக தோன்றியது!

கௌதம் புறம் திரும்பி உரிமையான பார்வை பார்த்தவளின் கண்களில் குறும்பு கூத்தாட, சிரித்து கொண்டே…

“அந்த சர்ப்ரைஸ் என்னன்னா… நம்ம ஜிகே சர் யாருன்னா… ” என்று நிறுத்தியவள் அவனை மீண்டும் பார்க்க… அவனோ நீ எதை வேண்டுமானாலும் கூறிக்கொள் என்று கைகளை கட்டி கொண்டு புன்முறுவலோடு அமர்ந்திருந்தான்… மீறி போனால் அவர்களது உறவை பற்றி சொல்லக்கூடும் என்று மட்டுமே எதிர்பார்த்தான்…

“தி பேமஸ் கர்னாடிக் சிங்கர் அபிராமிம்மாவோட ஒன்லி சன்… ” என்றதும் கூட்டம் ஆரவாரித்தது…

கௌதமுடைய கண்களில் சிறு அதிர்வு!

“வாவ்… கிரேட் சிங்கர் அபிம்மாவோட சன்னா சர் நீங்க?” அருகில் அமர்ந்திருந்த லாவண்யா வாயை பிளக்க… கௌதம் சற்று லஜ்ஜையோடு புன்னகைத்தான்…

“ஆமா மேம்… ” என்றவன் இடைவெளி விட்டு… “இந்த லூசு எதுக்கு இதை போய் சொல்லிட்டு இருக்கா?” தனக்கு தானே கேட்டு கொள்ள… அதை கவனித்த லாவண்யா அவனை ஆராய்ந்தாள்… அதுவரை யாரையுமே சிறு மரியாதை குறைவாக கூட அவன் குறிப்பிட்டது இல்லை எனும் போது ஆதிரையை ஒருமையில் அதிலும் உரிமையாக குறிப்பிட்டது அவளுக்கு எதையோ உணர்த்தியது… லாவண்யாவின் ஆராய்ச்சி பார்வையை உணர்ந்தவன்,

“லாவண்யா மேம்… ஆதி என்னோட கசின் அன்ட் ஆல்சோ மை பியான்சி… ” என்று மற்றவர்களுக்கு கேட்காத குரலில் விளக்கமளிக்க… லாவண்யாவின் புருவம் உயர்ந்தது ஆச்சரியத்தில்!

ஆதிரை கீழுதட்டை மடக்கி பற்களால் கடித்து கொண்டு அவனை குறும்பு பார்வை பார்க்க… கௌதம் ஆள்காட்டி விரலை உயர்த்தி பத்திரம் என்று புன்னகைத்தான்…

“சர்… அப்போ கண்டிப்பா நீங்க ஒரு பாட்டு பாடியாகனும்… ” தியா ஆரம்பித்து வைக்க… கோரிக்கை தீயாக பற்றி கொண்டது… ஆதிரையின் திட்டமும் அதுதான் என்பதை அவளது குறுகுறுத்த விழிகள் கூற…

“ஹேய் நோ சான்ஸ் கைஸ்… அம்மாதான் பாடுவாங்க… எனக்கு அந்த அளவு தெரியாது… ” தப்பித்து கொள்ள பார்த்தவனை விடுவேனா என்று நினைத்தவள்,

“யாரும் நம்பாதீங்க… ” என்று மற்றவர்களிடம் கூறி விட்டு… அவன் புறம் திரும்பியவள்…

“நீங்க நல்லா பாடுவீங்கன்னு அம்மு சொல்லிருக்கா… ப்ளீஸ்… ஒரே ஒரு சாங் பாடுங்க… ” அவனிடம் கெஞ்ச… அவளது அந்த உரிமையான கெஞ்சலில் அதிர்ந்த ஒரே ஜீவன்… விஷால்! இந்த அளவு உரிமையான உறவை அவன் இருவருக்குமிடையில் அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை… மனதின் மூலையில் சுருக்கென்றது…

“தலைவர் பாட வேண்டும் என்றால் தலைவி ஆட வேண்டுமோ?” அனி கிண்டலாக கலாய்க்க… இக்கட்டில் மாட்டி விட்ட ஆதிரையை பார்த்து நெளிந்து கொண்டே லேசாக முறைத்தவன் ,

“லூசு… என் மானத்தை வாங்காத… இங்க நான் லெக்சரர்… ” பற்களுக்கிடையில் கடித்து கொண்டு அவன் கூற… அந்த இடமே சிரிப்பில் மூழ்கியது…

“சோ வாட்… இப்போ என்ன காலேஜ்லையா இருக்கீங்க? அதுவும் இல்லாம நீங்க லெக்சரர்ன்னு எல்லாருக்குமே தெரியும்… ரொம்ப அலட்டாதீங்க… ” சிரித்தவாறே அவள் வார , அவள் கூறிய அந்த தொனியில் அவனும் சிரித்து விட…

“சர்… ஒரு பாட்டு தானே… பாடிடுங்க… ” லாவண்யாவும் பரிந்து கொண்டு வர…

“ஓகே… ஓகே… ” என்றவன்… தீவிர முகபாவத்துக்கு சென்று…

“ம்ம்ம்ம்… ” சற்று யோசித்து…

“காற்றின் மொழி ஒலியா இசையா?

பூவின் மொழி இதழா மணமா?

கடலின் மொழி அலையா நுரையா?

காதல் மொழி விழியா இதழா?

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதற்க்கு மொழியே தேவையில்லை!”

கணீரென்ற குரலில் பாடியவனின் குரல் அமுதமென ஒவ்வொருவரையும் ஈர்க்க… ஆதிரை மயங்கினாள்! அதே மயக்கத்தோடு சர்வர் கொண்டு வந்த ஜூஸை எடுத்தவள் அருந்தி கொண்டே அவனையும் விழுங்கினாள்!

மயக்கம்… கிறக்கம்… அதை தவிர வேறு இல்லை அவளது கண்களில்!

அந்த நான்கு வரிகளோடு அவன் பாடலை நிறுத்த… கூட்டம் ஆர்ப்பரித்தது!

“வி வான்ட் மோர்… வி வான்ட் மோர்… ” என்று சப்தமிட… மீண்டும் தொடர்ந்தான் கௌதம்… சிறு புன்முறுவலோடு! பார்வை ஆதிரையை தழுவி கொண்டே இருந்தது… இரவும் அந்த இடமும் அவனையும் அறியாமல் மயக்க… அவனது காதலியை தேடி அவளிடம் தஞ்சம் புகுந்தது அவன் மனம்!

மாணவர்களும் மாணவிகளும் அவனை சுற்றி சேர்களை போட்டு கொண்டு அமர்ந்து கொண்டனர்… அவனுக்கு அருகில் ஆதிரை அமர்ந்து கொள்ள… நொடிக்கு ஒரு முறை அவளை தழுவியது அவனது பார்வை!

“காற்று வீசும் போது திசைகள் கிடையாது

காதல் பேசும் போது மொழிகள் கிடையாது

பேசும் வார்த்தை போல மௌனம் புரியாது

கண்கள் பேசும் வார்த்தை கடவுள் அறியாது

உலவி திரியும் காற்றுக்கு உருவம் தீட்ட முடியாது

காதல் பேசும் மொழியெல்லாம் சப்தகூட்டில் அடங்காது!

இயற்கையின் மொழிகள் புரிந்துவிடில்

மனிதரின் மொழிகள் தேவையில்லை

இதயத்தின் மொழிகள் புரிந்து விடில்

மனிதற்கு மொழியே தேவையில்லை”

அவன் பாடலை பாடினானோ இல்லையோ அவனது மனதை தெரிவித்து கொண்டிருந்தான்… அவனது மனதின் மொழியை பகிர்ந்து கொண்டிருந்தான் அவளுக்கு… ஒவ்வொரு வார்த்தையும் அவனது வார்த்தையாக… விழிகள் வேறு இடல் மாறாமல் ஆதிரையை தீண்ட… முதல் சரணத்தோடு பாடலை அவன் முடிக்க… கைதட்டலில் அந்த ஹோட்டல் அதிர்ந்தது!

“சர்… எக்சலன்ட்… நீங்க இவ்வளவு நல்ல சிங்கரா?பேசாம நீங்க ப்ளே பேக் சிங்கரா போயிருக்கலாமே… ” விஷாலின் நண்பனான அர்ஜுன் சிலாகித்து கூற… அதை ஆமோதித்தாள் மேகா!

“எஸ் சர்… எவ்வளவு நல்ல குரல்வளம் உங்களுக்கு… ” ரசனையோடு அவள் கூற… ஆதிரைக்கு ஒரு புறம் பெருமையாக இருந்தாலும் பெண்களின் ரசனை பார்வை அவன் மேல் விழுவதை அவள் விரும்பவில்லை…

“இல்ல அர்ஜுன்… எனக்கு அதில் இன்ட்ரஸ்ட் இருந்ததில்லை… சிமிண்ட்டும் செங்கல்லும் ஈர்த்த அளவு இசை என்னை ஈர்க்கவில்லை… ” சிறு புன்னகையோடு அவன் கூற…

“ஆனா உங்களது அம்மா உங்களை பாட சொல்லி கட்டாயப்படுத்தவில்லையா? அதுவும் இவ்வளவு அழகாக பாடுகிறீர்களே… ”

“இல்லை அனிஷா… என் அம்மா எதற்கும் என்னை கட்டாயப்படுத்த மாட்டார்கள்… என்னுடைய விருப்பம் மட்டுமே அவர்களுக்கு முக்கியம்… ” தாயை பற்றி பெருமையாக பேசும் போது அவனது முகம் அவனையும் அறியாமல் மிக மிக மென்மையானது!

“உங்களை பார்த்தால் எனக்கு மிகவும் பொறாமையாக இருக்கிறது சர்… எவ்வளவு பெரிய சிங்கர் உங்களது தாயார்… ஆனால் சற்றும் அதை காட்டிகொள்ளாமல் எங்களுடன் பழகி கொண்டு… எப்படி சர்?” லாவண்யா சிலாகிக்க… வெளியே புன்னகைத்தாலும் உள்ளே கசப்பு எழுவதை அவனால் தடுக்க முடியவில்லை…

தன்னுடைய வாழ்க்கையின் அவலங்கள் யாரும் அறியாத ஒன்று என்னும் போது மற்றவர் பார்த்து பொறாமைப்படத்தான் செய்வார்கள்! உனக்கென்ன கவலை இல்லாத வாழக்கை என்று அவனுடைய முகத்துக்கு நேராக கூறியவர்கள் எத்தனை பேர்… அவையெல்லாம் சுட்டுவது எதை? தாயின் இருள் வாழ்க்கையை மட்டும் தானே!

அது தனக்கான பெருமையா என்ன?

நினைக்கும் போது மனம் வலித்தது… நிமிர்ந்து ஆதிரையை பார்த்த அவனது பார்வையில் அவள் கண்டதென்ன? இதுவரை அவள் பார்க்காத அவனது பார்வை… அவளது உயிருக்குள் ஊடுருவி எதையோ கேட்கும் பார்வை…

“அப்படியெல்லாம் கிடையாது லாவண்யா மேம்… தூரத்து பச்சை கண்ணுக்கழகு என்று சொல்வார்கள் இல்லையா… அது போலத்தான்!… சமயங்களில் எங்கள் வீட்டு வாட்ச்மேனின் மகனை பார்த்து நான் பொறாமைப்பட்டிருக்கிறேன்… ” சிரித்து கொண்டே கூறியவனின் வார்த்தைகளில் இருந்த உண்மையும் அந்த உண்மை கொடுத்த வலியும் அவன் மட்டுமே அறிந்த ஒன்று!

“ஆனால் உங்களை நினைத்தால் உண்மையில் மலைப்பாக இருக்கிறது… ஒன்றும் இல்லாதவர்களே அலட்டி கொள்ளும் போது நீங்கள் இந்த ஆசிரியர் வேலையை தேர்ந்தெடுத்தது பெரிய விஷயம் ஜிகே சர்… உங்களது இந்த எளிமையை நினைக்கும் போது நாங்கள் ஒன்றுமே இல்லை… ” லாவண்யா விடாமல் அவனை பூக்களிட்டு அர்ச்சனை செய்து கொண்டிருக்க… அதை கேட்டு கொண்டிருந்த ஆதிரைக்கு உள்ளுக்குள் நண்டு ஊர்ந்து கொண்டிருந்தது…

“சரியான கிருஷ்ணராசி… ” என்று முனுமுனுத்தவளுக்கு எங்கு சென்றாலும் பெண்களை அவன் ஈர்த்து விடுவதை நினைத்து கொதிப்பாக இருந்தது…

“கேட்டுக்க ஆதி… ” அவளை பார்த்து சிரித்து கொண்டே சட்டை காலரை ஏற்றி விட்டு கொண்டு கூறியவனை பார்த்து உதட்டை சுளித்தாள் ஆதிரை…

“ஓவர் ஹெட் வெய்ட் உடம்புக்கு ஆகாது மாமா… ”

“யாருக்குடி ஹெட் வெய்ட்?”

“வேற யாருக்கு… உங்களுக்கு தான்… ” சிரித்து கொண்டே கூறியவளை தலையில் தட்டினான்…

“ஆதி… உனக்கு ஒரு கதை தெரியுமா?” என்று ஆரம்பிக்க… அவனை நோக்கி கைகளை சேர்த்து கும்பிட்டாள்…

“ஐயோ… வேண்டாம்… மறுபடியும் ஒரு கதைய சொல்ல ஆரம்பிச்சுடாதீங்க… ” ஹாத்திராம் கதையை நினைத்து பயத்தில் அவள் நழுவ…

“வாலு… ” என்று அவளது தலையை மீண்டும் தட்ட…

“வளர்ற பிள்ளை தலைல தட்ட கூடாது மாம்ஸ்… ” தலையை தடவி கொண்டே அவள் கூற…

“ஏய் பப்ளிமாஸ்… ஒய் ஆக்சிசில் மட்டும் வளர்ந்துக்கோ… ஏன்னா இப்போவும் நீ குட்டை கத்தரிக்காய் தான்… ஆனா எக்ஸ் ஆக்ஸிஸ் வேண்டாம்டி… அப்புறம் வீட்டில் கதவை எல்லாம் மாற்றி வைக்க வேண்டும்… ”

சிரித்து கொண்டே கிண்டலடித்தவனை கொலைவெறியோடு பார்த்தாள் ஆதிரை… தன் நண்பர்கள் அனைவர் முன்பும் அதிலும் தன்னை தேவதையாக எண்ணி பூஜை செய்ய தயாராக இருப்பவர்கள் முன்பும் வைத்து தன்னை டேமேஜ் செய்து கொண்டிருந்தவனை குதறி விடும் கடுப்பில் இருந்தாள் ஆதிரை…

“மாமா… வேண்டாம்… ” நின்று கொண்டு இடுப்பில் கை வைத்தபடி மிரட்டியவளின் தொனியில் அவன் சிரித்து விட… அர்ஜுனும் கைலாஷும் சுவாரசியமாக முன்னுக்கு வந்தனர்…

“சர்… இதோட நிக்நேம் எல்லாம் சூப்பர்… நீங்க மேல இன்னும் கொஞ்சம் பிட்டை போடுங்க… மீதிய நாங்க காலேஜ்ல பார்த்துக்கறோம்… ” அவளை நக்கலாக பார்த்து கொண்டு கூற… அவனும் சுவாரசியமாக…

“அட இது நல்ல டீல் கைலாஷ்… கலக்குங்க… ” என்று கட்டை விரலை உயர்த்தி கூறியவன்… அவளை பார்த்து கண்ணடிக்க…

“ஓஓஓஓஓஓ… ” அனைவருமாக கலாய்க்க துவங்க…

“மாமா… வேண்டாம்… ” அழும் குரலில் கூறியவளை பார்த்தவனுக்கு புன்னகை விரிந்தது…

“ஓகே ஓகே… ஹேய் பாய்ஸ்… யாரும் ஆதியை கிண்டலடிக்க கூடாது… ” அவன் கூறுவதிலேயே அவனது குறும்புத்தனம் தெரிய… தரையை கோபமாக உதைத்தாள் ஆதி…

“ஏய் அந்த தரையை ஏன்டி உதைக்கிற? உடைஞ்சுட போகுது… அப்புறம் அந்த ப்ரேக்கேஜ் அமௌன்ட்டும் என் தலைல தான் விழும்… ”

“அதெல்லாம் உங்க தலைல ஒன்றும் விழாது… ” ரோஷமாக அவள் கூற,

“ஏன்? நீயே அதையும் கட்டிக்கறேன்னு சொல்றியா? ஓகே ஓகே..எனக்கு ப்ராப்ளம் இல்லை… எவ்வளவு வேண்டுமானாலும் உதைச்சு தரைய பெயர்த்து எடுத்துக்கோ… லாவண்யா மேம்… இனிமே நாம பிரேக்கர் மெஷினுக்கு அனாவசியமா செலவு செய்ய வேண்டாம்… நம்ம ஆதிய மட்டும் கூட்டிட்டு போய்டுங்க… அவ எல்லாவற்றையும் உடைத்து கொடுத்துடுவா… ”

அநியாயத்துக்கு அவளை வாரி கொண்டிருக்க… அவனது ஒவ்வொரு கமெண்ட்டுக்கும் வெடி சிரிப்பு கிளம்ப…

“கௌதம்… வேண்டாம்… அப்புறம் நான் மனுஷியா இருக்க மாட்டேன்… ” அழும் குரலில் அவள் கூற..

“இப்போ மட்டும் நீ மனுஷின்னு யார் சொன்னா? ராட்சசி தான்… ” என்று அவளை மீண்டும் கிண்டலடித்தவன்… கண்ணடித்து… “என்ன கொஞ்சூண்டு அழகா இருக்க அழகான ராட்சசி… ” அவளது கோப ரூபத்தை ரசித்தபடி அவன் கூற…

“ஓஓஓஓஓஓஹோஓஓஓ… ” அனைவருமாக ஓ போட்டு கலாய்க்க…

“அழகான ராட்சசியே… அடி நெஞ்சில் குதிக்கிறியே… ” கைலாஷ் அர்ஜுன் மற்றும் கமலும் சேர்ந்து கொண்டு பாட ஆரம்பிக்க… அதற்கு அனிஷா தியாவோடு மற்ற மாணவிகளும் பின் பாட்டு பாட… அந்த இடமே மகிழ்ச்சியில் திளைத்து கொண்டிருந்தது…

ஒருவனை தவிர…

விஷால்!

தான் ரசித்து கொண்டிருந்தவளை நேற்று வந்தவன் கடத்தி கொண்டு போய்விட்டதாக எண்ணி அவன் கொதித்து கொண்டிருக்க… அனைவருமாக வைத்து செய்து கொண்டிருந்த ஆதிரையோ கண்களிலிருந்து கண்ணீர் வழிய கௌதமிடம் மல்லு கட்டி கொண்டிருந்தாள்… இவ்வளவு நேரம் கலாய்த்ததற்கு அவன் சேர்த்து வைத்து சமாதானப்படுத்தி கொண்டிருந்தான்…

“ஏய் லூசு… இதுக்கு போயா அழுவ? செல்லம்ல… ஸ்போர்டிவா எடுத்துக்க ஆதி… நீயும் தான் எல்லார் முன்னாடியும் போட்டு கொடுத்த… நான் ஸ்போர்டிவா எடுத்துக்கலை? ” அவளை அருகில் அமர வைத்து சமாதானப்படுத்தியவனை முறைத்தவள் அழுகையை கண்டினியு செய்ய…

“இதுக்கே இப்படின்னா… சௌமியை எப்படி எல்லாம் கலாய்ச்சு இருக்கோம் தெரியுமா? ஒரு பக்கம் நான்… இன்னொரு பக்கம் வருண்… ஆனா ஸ்டெடியா நின்னு அடிப்பா அவ… ஆனா நீ? ம்ஹூம்… ஷேம் ஷேம் பப்பி ஷேம்… குட்டி பாப்பா அழுது… ” மீண்டும் அவள் அழுவதையே கலாய்த்தவனை பார்த்த கமல்…

“சர்… உங்க கிட்ட தான் ட்ரைனிங் எடுக்கனும்… அப்போதிருந்து வாரு வாருன்னு வாரிட்டு இப்படி தேத்தறதுல கூட வாரிட்டு இருக்கீங்களே… பாவம் உங்க கிட்ட சிக்கறவங்க… ” என்று சிரிக்க…

“சிக்கினா சிக்கன் ப்ரை பண்ணிடனும் கமல்… பாவமே பார்க்க கூடாது… ” என்று கூறி கண்ணடிக்க…

“ஆனா நீங்க செம டெரர்ன்னு தான் இத்தனை நாளா நினைச்சுட்டு இருந்தோம்… ஆனா அநியாயத்துக்கு பயங்கர ஸ்போர்டிவா இருக்கீங்க சர் நீங்க… ” சிரித்தபடி அர்ஜுன் கூற…

“காலேஜ்ல நான் லெக்சரர் அர்ஜுன்… இப்போ ப்ரீ டைம் தானே… அதுவும் நம்ம ஆளை கிண்டல் பண்ணி அழ வெச்சு சமாதானப்படுத்தறது செம கிக்கான விஷயம் தெரியுமா?”

“ஓஓஓஓஓஓஹோஓஓஓ… ” மீண்டும் அனைவரும் ஓ போட ,

“ஆனா ரொம்ப அழ வெச்சுட்டீங்க சர் ஆதியை… ” கைலாஷ் சற்று பாவமாக கூற…

“இப்படி அழறான்னா நினைக்கிறீங்க… இப்போ ஒரு pug dog வாங்கி தரேன்னு சொன்னா போதும்… மாமான்னு கட்டிப்பா… என்னடி பப்ளிமாஸ் சொல்ற? வெலிங்க்டன் போலாமா… சாண்டி வீட்ல puggy இருக்காம்… ”

சிறுவயதில் pug வாங்கி தருகிறேன் என்று கூறி அவளை சமாதானப்படுத்திய நினைவில் புன்னகையோடு அவன் கூற… அவளுக்கும் அதே நினைவு!

முறைத்து கொண்டிருந்தவள் உதட்டை சுளித்து கொண்டு திரும்பி…

“நான் இன்னும் சிக்ஸ்த் படிக்கற பாப்பா இல்ல… pug வாங்கி தந்தா கட்டிக்க… ” என்று உதட்டை மீண்டும் சுளிக்க…

“சரி… வேற என்ன வாங்கி தந்தா கட்டிப்ப?” மயக்கும் புன்னகையோடு அவள் புறம் குனிந்து ரகசியமாக கேட்க… நிமிர்ந்து அவனை பார்த்தவளின் முகத்தில் ஆயிரம் ரோஜாக்கள்! சுற்றிலும் இருந்த வானரப்படையை சிரமப்பட்டு நினைவுக்கு கொண்டு வந்து…

“ச்சீ… போங்க மாமா… ” என்று எழுந்து கொள்ள பார்க்க… அவளை இழுத்து சற்று தள்ளி அமர வைத்தவன், அவள் குடிக்காமல் விட்டிருந்த கூல் ட்ரின்க்கை அவள் கையில் திணித்தான்…

“பிடி அழுமூஞ்சி… குடித்து முடி… மீதிய உன் அம்மா கிட்ட போட்டு கொடுத்து அழு… ” கிண்டலாக அவன் கூற…

“அம்மாவை வம்பிழுக்காம உங்களுக்கு ஜீரணமாகாதே… இனிமேலாச்சும் உங்க கோபத்தை எல்லாம் ஒதுக்கி வைங்க மாமா… எனக்காக ப்ளீஸ்… ” கையில் கூல் ட்ரின்க்கை வைத்து கொண்டு தலை சாய்த்தவாறு அவள் கேட்க… ஒரு நொடி அவளை ஊன்றி பார்த்தான்… அந்த பார்வை அவனது மனதை தைத்து லட்சம் கேள்விகளை அவர்கள் இருவரின் முன் வைத்தது…

மெளனமாக அவளை பார்த்து கொண்டிருந்தவன்… அவளை தோளோடு அணைத்து கொண்டு…

“இந்த பிரச்சனை எல்லாம் உனக்கு வேண்டாம்டா… நான் பார்த்துக்கறேன்… சரியா?” ஆதூரமாக கேட்டவனை பார்த்து புன்னகைத்தவள் வேறு எதையும் பேசாமல் குடித்து முடித்தாள்!

அவன் அப்போது அறியவில்லை… அந்த சுழலில் அவளை சிக்க வைத்து சின்னாபின்னமாக்க போவதே தான் தான் என்பது!

வெளியே லேசாக மழை தூர ஆரம்பித்து இருந்தது… இடக்கையில் கடிகாரத்தை பார்த்தவன் நேரமாவதை உணர்ந்து…

“கைஸ்… கெட் ரெடி… மழை வர்ற மாதிரி இருக்கு… சீக்கிரம் கிளம்பிடலாம்… மழை ஆரம்பிச்சுட்டா ஊட்டி ரோடு ரொம்ப மோசமா இருக்கும்… ” கௌதம் அனைவரையும் அவசரப்படுத்தினான்… அவனுக்கு ஊட்டியின் இயல்பு மிகவும் நன்றாக தெரிந்த ஒன்றானதே!

மழை காலம் என்பது நீலகிரியின் மிகவும் மோசமான கெட்ட கனவாக நிறைய முறை இருந்திருக்கின்றது… மண் சரிவுகளும் பாறை உருண்டு விழுவதனால் ஏற்படும் விபத்துக்களுமாக மழை காலத்தில் நீலகிரி முழுவதுமே அந்த பயம் பீடித்து விடுவதை இப்போதைய காலங்களில் மிகவுமே உணர வேண்டி இருக்கிறது…

முன்பு மக்கள் நெருக்கம் இவ்வளவு இல்லாமல் கான்க்ரீட் வனமாக மாறாத நேரங்களில் சொர்கமாக திகழ்ந்த பூமி நீலகிரி!… இப்போது மண் திட்டுகளை பிடித்து வைக்க மரங்கள் இல்லாமல் அழித்து விட்ட நிலையில் இயற்கை எப்படி தன் எதிர்ப்பை காட்ட முடியும்?

மழை பெய்து ஊறி போன மண், மரம் இல்லாததினால் சரிந்து விடுகிறது… காடுகள் சூழ்ந்த நீலகிரியை எப்போது தேயிலை எஸ்டேட்களுக்காக கூறு போட தொடங்கினார்களோ அப்போதே அதன் இயல்பும் சிறிது சிறிதாக மாறி விட்டு இருப்பதை நீலகிரியின் பூர்வீக குடிகள் சோகமாக உணர்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்…

அவசரமாக அனைவரும் கிளம்ப முற்பட… ஆதிரை தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்… சற்று தள்ளியிருந்து எதேச்சையாக திரும்பி பார்த்தவனின் விழிகளில் அவள் விழ… இவளுக்கு என்னவாயிற்று என்று புரியாமல் அருகில் வந்தான்…

“ஆதி… என்னடா ஆச்சு?” இயல்பாக அவள் அருகில் வந்து கேட்க… அருகில் நின்று கொண்டிருந்த தியா…

“என்னாச்சுன்னு தெரியல சர்… திடீர்ன்னு தலைய பிடிச்சுட்டு உட்கார்ந்துட்டா… ” சற்று கலக்கமாக கூற… அவனுக்குமே சற்று பதட்டம் சூழ்ந்தது!

“ஆதி… குட்டிம்மா… என்னடா… ” அவளது கையை பிடித்து உலுக்கியவனை சோர்வாக பார்த்த ஆதிரை…

“தலை சுற்றுது மாமா… என்னன்னு தெரியல… ”என்று கூறிவிட்டு மீண்டும் தலையை பிடித்து கொள்ள…

அவளின் தலையில் கைவைத்து பார்த்து ஆராய்ந்து சூடு இல்லாததை உணர்ந்து கொண்டாலும் ஏன் இப்படி இருக்கிறாள் என்பது புரியவில்லை… இந்நேரம் வரை நன்றாகத்தானே பேசிக்கொண்டிருந்தாள்!… லாவண்யாவுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை… ஆதிரையால் எழ கூட முடியவில்லை… நடையின் தடுமாற்றத்தால் நிதானமாக உட்காரவும் முடியவில்லை…

அருகில் நின்றிருந்த விஷாலுக்கோ முள் மேல் நிற்பது போல இருந்தது…

“குட்டி… கொஞ்சம் எழுந்து நில்லு… ” அவளை வலுகட்டாயமாக எழ செய்ய… ஆதிரை முடியாமல் துவண்டாள்…

“ப்ளீஸ் விடுங்க மாமா… என்னால நிற்க முடியல… ” குழறி கொண்டு பேசியவளை கன்னத்தில் பட்டென அறைந்து…

“ஏய்… எதைடி சாப்பிட்ட? தெரியாம எதையாவது குடிச்சிட்டியா?” கோபமாக கேட்க… அவளால் பதில் கூற முடியாமல் தலையை சாய்த்து கொள்ள… அருகிலிருந்த அனிஷா…

“கொஞ்ச நேரத்துக்கு முன்ன எல்லாருமே சாப்பிட்ட ஜூஸ் தானே… எங்களுக்கு ஒன்றுமே இல்லையே… ” குழப்பமாக கூற…

“சர்… இப்போ என்ன செய்யறது? ஒன்றும் புரியலையே… ” கலக்கமாக லாவண்யா கேட்க, கௌதமின் புருவம் முடிச்சிட்டது…

வெளியே மழை சற்று வேகமாக பெய்ய துவங்கி இருந்தது…

மருத்துவமனைக்கு அழைத்து மருத்துவரின் இருப்பை உறுதி செய்து கொண்டான்…

“லாவண்யா மேடம்… எல்லாரையும் அழைச்சுட்டு நீங்க கிளம்புங்க… லேட் செய்தா மழை ரொம்ப வலுத்துடும்… எல்லாரும் மாட்டிக்கற மாதிரி ஆகிடும்… ” என்று லாவண்யாவிடம் கூற…

“சர் ஆதிரா இல்லாம… ” என்று தயங்க…

“நான் பார்த்துக்கறேன்… ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வந்துடறேன்… ” என்று கூறியவாறே சாண்டியை செல்பேசியில் அழைத்தான்…

“சாண்டி… கொஞ்சம் உடனே வா… எமெர்ஜென்சிடா… ” பதட்டமாக கேட்ட அவனது குரலில் சாண்டிக்கும் அந்த பதட்டம் தொற்றி கொள்ள…

“யாருக்கு என்னடா மச்சான் ஆச்சு? இவ்வளவு டென்ஷனா இருக்க?”

“நம்ம ஆதிக்கு தான்டா… மயக்கமா இருக்கா… கொஞ்சம் சீக்கிரம் வா… ” சாண்டியை அவசரப்படுத்த… பார்த்து கொண்டிருந்த லாவண்யாவுக்கு பயம் பீடிக்க துவங்கியிருந்தது…

“சர்… பயமா இருக்கு… நீங்க எப்படி தனியா சமாளிப்பீங்க? ஏதாவது பிரச்சனைன்னா மேனேஜ்மென்ட்டுக்கு பதில் சொல்லவே முடியாது சர்… ” நடுங்கி கொண்டே கேட்க… கௌதமுக்கும் பதட்டம் சூழ்ந்தது… ஆனால் அதை காட்டி கொள்ளாமல்,

“நத்திங் சீரியஸ் லாவண்யா மேம்… என் ப்ரெண்ட்ஸ் வராங்க… டோன்ட் ஒர்ரி… நீங்க கிளம்புங்க… கொஞ்சம் மழை பலமா பிடிச்சுட்டா காட் ரோடு யூஸ் பண்ணவே முடியாது… ” உண்மையை அவன் எடுத்து சொல்ல… அவளோ மனமே இல்லாமல் கிளம்பினாள்!

அனைவருக்கும் விடை கொடுத்து அனுப்பி விட்டு… சாண்டியோடு ஆதிரையை மருத்துவமனைக்கு அழைத்து செல்ல… அவன் நினைத்தவாறு அவள் date drug எனப்படும் போதை மருந்தை உட்கொண்டிருப்பது தெரிய வந்தது…

“ஆதிரை அந்த மாதிரி பெண் கிடையாது ஸ்டீபன்… ரொம்ப நல்ல பொண்ணு… அவ போய்… ” என்று தயங்கி கொண்டே கௌதம் மருத்துவரிடம் கூற…

“யூ ஆர் ராங் ஜிகே… அதை அவங்க தான் எடுக்கணும்ன்னு அவசியம் கிடையாது… ட்ரிங்க்ஸ்ல யாராவது கலந்து கூட கொடுத்து இருக்கலாம்… செக்கண்ட்ஸ்ல கரைஞ்சு போற ஜஸ்ட் மிளகு சைஸ் மாத்திரை… எடுத்துகிட்டவங்களுக்கு தெரியவே தெரியாது… பட் மாத்திரையோட எபெக்ட் குறையற வரைக்கும் கண்டிப்பா ப்ளாக் அவுட் தான்… என்ன நடந்ததுன்னு கூட தெரியாது… ”

மருத்துவர்களுக்கே உரிய அலட்சிய குரலில் கூறி முடித்துவிட… சாண்டியும் கௌதமும் ஒருவரை ஒருவர் குழப்பமாக பார்த்து கொண்டனர்…

“என்னடா பண்றது?” கௌதம் சாண்டியை கேட்க…

“கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்… ப்ளாக் அவுட்ல இருந்து வெளிய வரட்டும்… அப்புறமா சென்னை போ… ” அவனை நன்கறிந்த ஸ்டீபன் நண்பனாக கூற… ஒத்துகொண்டவன் சாண்டியின் காரிலேயே தனது கெஸ்ட் ஹவுசுக்கு ஆதிரையை அழைத்து கொண்டு வந்தான்… தனது வாழ்க்கையை வைத்து சூதாட துவங்கி இருந்த அந்த கர்ணன்!

கர்ணன் தனக்கான அங்கீகாரத்தை, பெற்ற தாயிடம் பெறுவதற்காக போராடினான்… இவனோ தந்தையிடம் போராட துவங்கி இருந்தான்… போராட்ட களம் ஒன்று தான், ஆனால் இவன் கொண்ட ஆயுதம் உயிர் என்னும் ஆயுதம் அல்லவா! நம்பிக்கை, காதல்,பாசம்,நேசம் என்ற அத்தனையையும் போராட்ட களத்தில் முன்னிறுத்தி ஆட போகிறோம் என்பதையும் அறிந்திருந்தவனுக்கு தன்னுடைய ஆட்டம் தன் கையை மீற போவதை அறிந்திருந்தால்?