Cp31

Cp31

அத்தியாயம் 31

நீ எனும் நான்

வாசிக்கப்படாமலே இருக்கிறது

நான் என்கிற உன்னால்!

-டைரியிலிருந்து

காலை ஜாகிங்கிற்காக தயாராகி கொண்டிருந்தாள் சௌமினி… படிப்பை முடித்துவிட்டு தந்தையின் பள்ளியின் நிர்வாக பொறுப்பை கற்று கொள்ள ஆரம்பித்து இருந்த இந்த ஒரு வருடத்தில் அவளுடைய பழக்கங்கள் பெரும்பாலும் மாற்றத்துக்கு உள்ளாகி இருந்தது…

கௌதம் படிக்கவென சிங்கப்பூர் சென்றுவிட்ட போதிலிருந்தே தனிமையை உணர தொடங்கி இருந்தாள் சௌமினி… புதிய நட்புகளை ஆர்வமாக தேடிக்கொள்வதில் விருப்பம் இல்லாதவள்… வெகு சிலர் மட்டுமே இருந்த அவளது நட்பு வட்டத்தில் இருந்ததாலும் வருண் ஏற்படுத்தி விட்டிருந்த காயம் யாரிடமும் வெளிப்படையாக பழக செய்யாமல் இருந்திருந்தது…

தோட்டத்தை சுற்றி ஓடுவதற்காக ஷூவை அணிந்து கொண்டிருக்க… சற்று வேகமாக வந்து நின்றது அந்த லேண்ட் ரோவர்…

நிமிர்ந்து யாரென பார்த்தாள் சௌமினி!

வருண்!

மழிக்கப்படாத முகமும் உறக்கத்தை மறந்த விழிகளுமாக!

பார்த்து அத்தனை வருடங்கள் கடந்து விட்டாலும்… அவனை நினைக்கவே கூடாது என்று நினைத்தாலும்… வலிக்க வலிக்க அவனது நினைவுகள் காயப்படுத்தி கொண்டிருந்தாலும்… அவனை பார்த்த போது எம்பி குதித்த மனதை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை!… கௌதம் ஆதிரை அவனுக்கு வேண்டுமென அறிவித்தபோது மனதுக்குள் ஏனோ மழை பொழிந்தது! வருண் மணக்க இருந்த பெண் என்பதாலா? காதல் ஒருவருடைய இயல்பை இந்த அளவு மாற்றி விடுமா?… தன் மனதை ஆராய்ந்து பார்த்தாள்!

வருண் மனம் துயரப்பட்டால் சந்தோஷிக்கும் அளவு தான் ஒன்றும் குரூரமாகவில்லை என்று தோன்றியது… ஆனால் அவனை விட்டுக்கொடுக்கவும் மனம் வலித்ததை என்னவென்று வரையறுக்க? வாழ்க்கையின் கடைசி பக்கங்களை புரட்டும் போதும் வருணை தன்னால் மறக்க முடியாது என்றே தோன்றியது…

சட்டென்று கண்களில் சூழ்ந்த கண்ணீரும்… தடதடத்த மனதும்… தளர்ந்து நின்ற உடலும் பிரிவுத்துயரத்தை உணர்த்த… சற்று நிதானமாக தன்னை நோக்கி வந்த வருணும் அதே நிலையில் தான் இருந்திருப்பானோ? உறக்கத்தை மறந்த விழிகளில் வருத்தம் மிகுந்திருக்க தளர்வாக நடந்து வந்தவனை பார்த்தபோது மனம் கலங்கியது… என்னவாயிற்று என்ற கேள்வி மனதுள் எழ…

“வா வரு… வருண்… ”

அவனை இப்போது எப்படி அழைப்பது என்ற தயக்கத்தில் தடுமாற… அவனது முகமோ வெறுமையை சுமந்திருந்தது…

“நான் வர்றது இருக்கட்டும் சௌமினி… கௌதம் எங்க?” கோபத்தை அடக்கி கொண்டு நிதானமாக அவன் கேட்க…

“ஏன் என்னாச்சு?” அவன் சௌமினி என்ற முழுப்பெயரை கூறி அழைத்து ஒட்டாமல் கேட்ட விதத்திலேயே மனம் கனத்தது…

“அவன் எங்கன்னு தான் கேட்டேன் சௌமினி… ” பொறுமையை அவனால் இழுத்து வைத்து பேச முடியுமென்று தோன்றவில்லை வருணுக்கு…

“ஆதி வந்துட்டாளா இல்லையா?”அவனது கோபம் பதட்டத்தை ஏற்படுத்த… ஆதி இன்னுமா வீட்டிற்குவரவில்லை என்ற கேள்வியும் அந்த பதட்டத்தை அதிகரிக்க செய்ய… மழை நின்ற அந்த காலை நேரத்திலும் சௌமினிக்கு வியர்க்க பார்க்க… அவசரமாக கேட்ட கேள்வி வருணின் முகத்தில் கசப்பை பரவ செய்தது…

“எஸ்… நீயும் இதில் கூட்டா சௌமினி… ”அவளை கேவலமாக பார்த்து கேட்டவனின் கேள்வி அவளுக்கு புரியவே சற்று நேரமாகியது…

“என்ன வருண் சொல்ற? ஐ ஆம் நாட் கெட்டிங்… ”

“ச்சீ… என் பெயரை கூட சொல்லாதே… கல்யாணமாகாத ஒரு பொண்ணை வீட்டிற்கு அனுப்பாம பத்து நாள் வெச்சுட்டு இருக்கறதுக்கு நீயும் ஒரு கூட்டு… உன் ப்ரெண்டுக்காக இதை கூடவா பண்ணுவ?” கோபத்தில் கத்த ஆரம்பிக்க… சந்திரசேகரன் சப்தம் கேட்டு வெளியே வந்தார்… அவரது முகத்திலும் குழப்பம்!

“என்னம்மா சத்தம் இங்க?” வருணை முறைத்து கொண்டே அவர் கேட்க… சௌமினி அவசரமாக…

“நத்திங்ப்பா… என்னோட ப்ரென்ட் தான்… நீங்க உள்ள போங்கப்பா… நான் பேசிக்கறேன்… ” என்று அவரை அந்த இடத்திலுருந்து விலக்க பார்க்க… அவர் அவனை முறைத்தவாறே உள்ளே போக… அவர் போனவுடன்… சற்று குரலை தழைத்த வருண் முன்பை காட்டிலும் கோபமாக…

“ஏன்… உன்னோட ப்ரென்ட் மானம் கப்பலேறிடும்ன்னு பார்க்கறியா… ஏன் உன் அப்பாவுக்கும் தான் தெரியட்டுமே அவனோட தான்தோன்றித்தனம்… ” பற்களை கடித்து கொண்டு கூறியவனை…

“அவன் எனக்கு ப்ரென்ட் ஆகறதுக்கு முன்னாடி உனக்கு அண்ணன் வருண்… அதை எந்த காலத்திலும் மறந்துடாத… ” கௌதமை நினைத்து உள்ளுக்குள் கோபம் வந்தாலும் அவனை விட்டுக்கொடுக்கவும் பிடிக்கவில்லை…

“அண்ணன்… ச்சே… இப்படி இன்னொரு தடவை சொல்லிடாதே… அவங்க அம்மா புத்தி… ” என்று சொல்ல வந்தவனை கோபமாக அடக்கினாள் சௌமினி…

“ஸ்டாப் இட் வருண்… இதற்கு மேல் நீ ஒன்றும் சொல்ல தேவை இல்லை… என்ன சொல்ல வந்த?… அதை சொல்லிட்டு கிளம்பு… ” கௌதமை சொன்னவரையிலும் கூட பொறுத்து கொள்ள முடிந்த அவளால் அபிராமியை பற்றிய வருணின் விமர்சனத்தை தாள முடியவில்லை… தெய்வீகமான அந்த முகமும் பெரியவளின் தன்மையும் அவளை எப்போதுமே வசீகரிக்குமே!

“என்ன சொல்றது? ஆதிரைக்கு அவனால ஏதாவது ஆச்சுன்னு தெரிஞ்சா கண்டிப்பா அவனை… ” என்று ஆவேசமாக கூறியவன் குரல் கம்ம நிறுத்தி…

“ஆதிரை எங்க சௌமினி?… அவளும் உன்னை மாதிரி பொண்ணுதானே… தயவு செய்து சொல்லு… இந்த பத்து நாளா எங்க யாருக்குமே எங்க உயிர் எங்க கையில் இல்ல… ” இனி இவளிடம் கோபமாக பேசி பயனில்லை என்பதை உணர்ந்தவன்… மெல்லிய குரலில் கேட்க…

“நான் கௌதம் கிட்ட பேசி பத்து நாளாச்சு வருண்… நான் சொல்வதை நம்பு… ஆதி இன்னும் வீட்டுக்கு வராதது எனக்கு தெரியாது… அவளுக்கு நான் என்ன பண்ணிட போறேன்?” அவளுமே மெல்லிய குரலில் கூறினாள்… அவனது தோற்றத்தை பார்க்கையில் மனம் வலித்தது… அதை விட அவன் கூறிய வார்த்தைகள் அவளை இன்னுமே வலிக்க செய்தது! ஆனால் வலிக்கும் என்று தெரிந்தும் காயப்படுத்துபவன் முன்னால் தன் காயத்தை காட்டி கொள்ள அவளுக்கு விருப்பமில்லை…

உள்ளே சென்று செல்பேசியை எடுத்தவள்… கௌதமை அழைத்தாள்!

அழைப்பு ஏற்கப்படாமல் போய் கொண்டே இருக்க… சௌமினியின் முகத்தில் வியர்வை பூக்கள்!

விடாமல் முயன்று கொண்டிருந்ததில் பனிரெண்டு மணி அளவில் அழைப்பு எடுக்கப்பட…

“கௌஸ் எங்கடா இருக்க?”எடுத்தவுடன் பதட்டமாக சௌமினி கேட்டதில் அங்கிருந்த நிலையை அவனால் யூகிக்க முடிந்தது… வருண் அவசரமாக லவுட் ஸ்பீக்கரை ஆன் செய்திருந்தான்… பேச சொல்லி முறைத்து கொண்டே!

“என்ன சௌம்ஸ்… என்னாச்சுடா?”

“சொல்லு கௌஸ்… ஆதி உன் கூடவா இருக்கா?” விட்டால் அழுது விடுபவளை போல கேட்க…

“சௌம்ஸ்… குன்னூர் வர்றியா? உன் கூட இருக்கவங்க வந்தாலும் எனக்கு ஓகே டா… ” வெகு நிதானமாக கௌதம் கூறியதிலிருந்து அவன் வெகுவாக தயாராக இருக்கிறான் என்பதை மனதோரம் உணர்ந்தாள்! எதிரில் அமர்ந்திருந்த வருண் அவளை கூர்மையாக பார்த்து கொண்டிருக்க…

“கௌ… கௌஸ்… … என்னாச்சு? நீ… என்ன பேசற?… எனக்கு புரியலடா… ”

சௌமினி திக்கி திணறியதை பார்த்த வருணுக்கு மனதில் அபாய மணி அடிக்க துவங்கியிருந்தது… மெதுவாக தன் பிடி தன் வசம் இல்லாமல் நழுவுவதை உணர துவங்கி இருந்தான்…

கௌதம் மெளனமாக இருக்க…

“சரி டா… நானும் புறப்பட்டு வரேன்… என் கூட வருண் இருக்கான்… வருண் அப்பாவும் அத்தையும் வருவாங்க… ” சௌமினி மூச்சை இழுத்து விட்டு தன்னை நிதானப்படுத்தி கொண்டு உறுதியாக கூற…

“ஓகே… ஐ வில் பி வெய்டிங்… ”

*********

வருணோடு சிதம்பரமும் விசாலாட்சியும்மிகுந்த கோபத்திலிருந்த சிவகாமியும் சேர்ந்து கொள்ள… சௌமினியும் தனியாக கிளம்பினாள்… குன்னூர் வரை தனியாகவா என்று மலைத்த தந்தையையும் கன்வின்ஸ் செய்து குன்னூர் வந்து சேர்ந்திருந்தாள் வருணை தொடர்ந்து! சென்னை டூ கோவை பிளைட்டிலும் அதற்கு பின் காரிலுமாக அடுத்த இரண்டு மணி நேரத்திற்குள்ளாக மலை ஏறி கொண்டிருந்தனர்!

மலையேறும் வழியெங்கும் நிலச்சரிவினால் ஆங்காங்கே பாதைகள் மறிக்கப்பட்டு இருந்ததை சரி செய்த தடங்கள்!… முழுவதுமாக சரி செய்துவிட வில்லை என்றாலும் வாகனங்கள் ஊர்ந்து செல்லவாவது வழி செய்யப்பட்டு இருந்தது… இயற்கையும் அவனுக்கு இப்படியா உதவ வேண்டும் என்று கடுப்பாக நினைத்து கொண்டான் வருண்! பத்து நாட்களாக ஊட்டி வெளி உலகத்தின் தொடர்பை முற்றிலுமாக இழந்து இருந்ததை உணர முடிந்தது… பயணமெங்கும் பள்ளி காலமும் நிகழ்காலமும் போட்டி போட்டு மனதை அழுத்த… அவனது வாகனத்துக்கு பின் வந்த சௌமினியை அவ்வப்போது ரியர் வியு மிரரில் பார்த்து கொண்டான்…

கௌதம் அவனது கெஸ்ட் ஹவுசிற்கு அழைத்து வர கூறியிருந்தான் மூவரையும்… அவர்களுக்கு இடம் தெரிய வாய்ப்பில்லை என்பதால் சௌமினி மூலமாக!

கெஸ்ட் ஹவுசில் கோபமாக இறங்கிய சிவகாமியை அவசரமாக தடுத்தான் வருண்… அவனை பொறுத்தவரை ஆதியின் வாழ்க்கை எனும் குமாரசுவாமி குடும்பத்தின் ரகசிய அறை சாவி கௌதமிடம் வசமாக சிக்கிவிட்டது… அதை எப்படி மீட்பது என்பதுதான் இப்போதைய அவனது கவலை…

ஆதிரை கௌதமுடன் பழகிய போதும் அதை சிறுபிள்ளைத்தனமாக வருணிடமே அறிவித்தபோதும் கௌதம் இந்த அளவு தீவிரமாக இறங்கி அடிப்பான் என்று சற்றும் நினைக்கவில்லை… கௌதமை தான் குறைவாக மதிப்பிட்டுவிட்டதை வெகு தாமதமாக உணர்ந்தான் வருண்… ஆனால் நிலைமை கை மீறிவிடும் போல இருக்கிறதே!

“அத்தை… நீங்க இங்க இருங்க… நான் பார்த்துக்கறேன்… ”சிவகாமி அவசரமாக எதையாவது வாயை விட்டுவிட போகிறார் என்ற பயத்தில் அவன் கூற…

“விடு வருண்… நானே பார்த்துக்கறேன்… ” கோபமும் அவமானமும் முகத்தில் கொப்பளிக்க அவர் காரிலிருந்து இறங்க… மறுபுறம் இறங்கிய சிதம்பரம்…

“சிவகாமி… கொஞ்சம் பொறுமையா இரும்மா… நாங்க ரெண்டு பேரும் பார்த்துக்கறோம்… சொன்னா கேளும்மா… ”சற்று இறங்கிய குரலில் அவர் கூற… அவரை பார்த்து முறைத்தார் சிவகாமி…

“ஏன்… உங்க பையனை காப்பாற்ற நினைச்சுட்டு இருக்கீங்களா?” கத்தி போல கூர்மையாக கேட்டவரை அதற்கும் மேல் சமாதானப்படுத்த முடியுமென்று தோன்றவில்லை… சிவகாமியும் சிதம்பரமும் முன்னே செல்ல… வருண் விசாலாட்சியோடு அவர்களுக்கு பின் செல்ல… சௌமினி அவர்களுக்கு பின்னால் வந்த காரிலிருந்து இறங்கி வருணுக்கு பின் நடந்தாள்…

பள்ளியிறுதி முடிந்த பிறகு இந்த பக்கமே பாராமல் இருந்தவள் சௌமினி… காரணம் வருண்! இங்கு வந்தால் வருணின் நினைவிலிருந்து தப்ப முடியாது என்பதை உணர்ந்தவள் நீலகிரியையே தவிர்த்து வந்திருக்கிறாள்… ஆனால் விதியோ அவனுடனே மீண்டும் இங்கு வருவதற்கு வழி செய்திருக்கிறது… ஆனால் இவன் முழுமையாக சௌமினியை வெறுக்க வைத்து பின் வர செய்திருக்கிறது!

இடைவெளி விட்டு நடந்தவளை வெளிப்பார்வைக்கு வெறுத்தாலும் அவளது நிலையே அல்லவா வருணுக்கும்! ஆனால் அந்த மன துயரை எல்லாம் ஆதிரை என்னும் பெயர்… அது கொடுத்து கொண்டிருந்த அழுத்தம்… அவளால் குடும்பத்தில் காத்திருந்த பிரச்சனைகள் என்று அவனது காதலை கண் கொண்டு பார்க்க முடியாததற்கு நிறைய காரணங்களை கூற முடிந்திருந்தது…

குடும்பம் என்பதும் தொழில் என்பதும் வருணை பொறுத்தவரையில் வேறு வேறு அல்ல… குடும்பத்தில் பாதிப்பென்றால் கண்டிப்பாக அது தொழிலிலும் பிரதிபலிக்குமே! ஆனால் அத்தனையையும் தாண்டி சிறுவயது முதல் குட்டி தேவதையாக… வாழ்க்கையின் கோரப்பக்கங்களை அறியாத வெகுளியாக தன்னால் பார்க்கப்பட்ட ஆதிரையின் வாழ்க்கை நல்ல முறையில் அமைந்தாக வேண்டியதன் அவசியத்தை வலியோடு உணர்ந்து கொண்டிருந்தான்…

ஆவேசமாக உள்ளே நுழைந்த சிவகாமி… கௌதமை பார்த்து…

“டேய் எங்கடா என் பொண்ணு?”

உச்சஸ்தாயில் கத்துவதற்கு தொடங்க… நிமிர்ந்து அவரை பார்த்தவன் எதையும் கூறாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்து…

“உட்காருங்க… ”

பொதுவாக அனைவரையும் பார்த்து கூறிவிட்டு எதுவுமே பாதிக்காதவனாக அமர்ந்து கொண்டான்… சற்று தள்ளி நின்றிருந்த சௌமினியை கண்டவன் அவளது கண்களில் தெரிந்த குற்றசாட்டினையும் அறிந்து கொண்டான்… ஆனால் அவளை நேருக்கு நேராக பார்த்த அவனது தைரியம் அவனது செயலை அவன் தவறாகவே நினைக்கவில்லை என்பதை சௌமினிக்கு உணர்த்தியது… ஏதாவது நியாயமிருக்க கூடுமோ?

கண்களால் அவனை ஆற்றுப்படுத்தியவள் அவனுக்கு அருகில் சென்று அமர்ந்து கொண்டாள்…

“இங்க பார் கௌதம்… உனக்கும் எங்களுக்கும் ஆகவே ஆகாதுன்னு முடிவு பண்ணி ஒதுங்கியாச்சு… இப்போ மறுபடியும் எதுக்கு பிரச்சனை செய்யற?” சிவகாமி கோபத்தின் மிகுதியில் பேச…

“ஒதுங்கியாச்சுன்னு யார் சொன்னது?”எங்கோ பார்த்து கொண்டு கேலியாக அவன் கேட்க… சிவகாமியின் முகம் கறுத்தது!

“ஒதுங்காம?”முறைத்தபடி அவர் கேட்க…

“அதுக்கு வேற ஆளை பாருங்க… என்கிட்டே அந்த வேலை நடக்காது… நடந்த ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லியே ஆகனும் உங்க குடும்பத்துல இருக்கவங்க… ”

“என்ன பதில் சொல்லணும்… அதான் உங்களுக்கு வேண்டும் என்பதை எல்லாம் செய்து விட்டாரே அண்ணன்… இனிமேலும் என்ன பிடுங்க போற?”

“செய்துட்டாரா? யாருக்கு?” கேலி தெறித்தது அவனது குரலில்! சிவகாமி நிதானித்து சிந்திக்க துவங்கினார்…

“சோ… பழி வாங்கற… உங்க அம்மாவை இங்க ஒட்ட விடாம செய்தது நான் தானே… அதான் உனக்கு என் மேல கோபம் இல்லையா?”குரல் கம்ம கூற…

“நீங்களே ஒத்துக்கறீங்க? என் அம்மாவை இந்த நிலையில் நிற்க வைத்தது யார் சிவகாமிம்மா?”

“சரி… அதற்கு என் மகள் என்ன தப்பு செய்தா கௌதம்? உன்னோட கோபம் எல்லாம் என் மேல தானே… என் பொண்ணு எங்க? எங்க ஒளித்து வைத்து இருக்க? பாவம் டா… அப்பாவி பொண்ணு… எதை சொன்னாலும் நம்பிடுவா… என் பொண்ணை மட்டும் விட்டுடு கௌதம்… என் சொத்து முழுவதையும் கேட்டா கூட கொடுத்துடறேன்… ”

அதுவரையும் ஆவேசமாக பேசிக்கொண்டிருந்தவர் கௌதமிடம் தன்னுடைய ஈகோவை எல்லாம் விட்டுவிட்டு கெஞ்ச துவங்க… எந்த நிலையிலும் கம்பீரத்தை விட்டு தராத அவரை அந்த நிலையில் பார்க்கையில் வருணுக்கு மனம் வலித்தது!

யார் வேண்டுமானாலும் தவறானவர்களாக இருக்கலாம்… ஆனால் தவறான தாய் இருக்கவே முடியாது என்பதை இயற்கை கௌதமுக்கு மீண்டும் மீண்டும் உணர்த்தி கொண்டிருந்தது… ஆனாலும் அந்த நிலையிலும் மீண்டும் சொத்து என்ற பேச்சை எடுக்கவும் நெகிழ்ந்த மனது மீண்டும் இறுகியது… பதில் பேசாமல் சோபாவின் பின்னே சாய்ந்து கொண்டான்!

இந்த நிலையில் இவர்களை நிறுத்த வேண்டுமென்று எத்தனை நாட்களாக திட்டமிட்டு செயலாற்றி… கடைசி நேரத்தில் மனம் கனத்தது…

காரணம் ஆதிரை… !

அவளின் உணர்வுகளை பணயம் வைத்து இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்று மனதில் வலி… ! எதையும் பேசாமல் மெளனமாக இருப்பதை பார்த்து சௌமினி குழப்பமாக இருந்தாள் என்றால் சிவகாமியின் ஈகோ சீண்டப்பட்டு கொண்டிருந்தது… எந்த நேரமும் வெடிக்கும் என்ற நிலையில் நின்று கொண்டிருந்தார்…

அவனுக்கு முன் அமர்ந்து கொண்டிருந்த வருணுக்கு மனதுக்குள் கோபத்தீ… பத்து நாட்களாக நாய் படாத பாடு பட்டு… வீட்டு பெண் காணவில்லை என்பதை வெளியில் யாரும் அறிந்துவிட கூடாது என்றெண்ணி ப்ரைவேட் டிடெக்டிவ் வைத்தெல்லாம் ஆராய்ந்து… கடைசியாக அனைத்து கைகளும் கௌதமை காட்டவும் தான் சௌமினியை பிடித்ததே!

“காலேஜ்ல கேட்டா நீ வேலைய விட்டுட்டதா சொன்னாங்க… ” கோபத்தை அடக்கி கொண்டு கேட்க… சோபாவின் பின் சாய்ந்து கொண்டிருந்த கௌதம்…

“எஸ்… இந்த ட்ரிப்போட ரிசைன் பண்ணிடறேன்னு சொல்லிட்டு தான் ஊட்டி வந்தேன்… ” வெகு இயல்பாக பதிலை கூற…

“பூஜா ஹாலிடேஸ் ஆரம்பிச்சது உனக்கு வசதியா போய்டுச்சு… இல்லையா… ” இறுகிய முகத்தோடு வருண் கேட்க…

“எஸ்… யூ ஆர் ரைட்… வாட் நெக்ஸ்ட்?” பதிலில் ஒவ்வொரு நொடியிலும் திமிர் பிரதிபலிக்க… வருணுக்கு ச்சே என்றானது!

“உன் அம்மாவை கூட கிளப்பிட்ட போல இருக்கு… ”கடுப்பாக கேட்டவனின் தொனியில் நிமிர்ந்து பார்த்து சிரித்த கௌதம்…

“ஓ அங்கயும் போய் பார்த்தாச்சா? நவராத்திரிக்கு வைஷ்ணவ தேவி கோயிலுக்கு போயிட்டு வாம்மான்னு ஜம்முவுக்கு அனுப்பிட்டேனே… ” கேலியாக அவன் கூற… வருண் தன் முன் இருந்த டீபாயை ஆத்திரத்தில் குத்தினான்…

“பிளான்ட்… கம்ப்லீட்லி பிளான்ட்… ” கோபமாக கொதித்தவன்… “ஆதியோட செல்போனை ரீச் பண்ண விடாம செய்து, அவளோட இடத்தை கண்டுபிடிக்க முடியாத மாதிரி செய்து, பத்து நாள் எங்களை பேயா சுத்த விட்டு… ஏன் டா? ஏன்? நாங்க அப்படி என்ன தப்பு பண்ணிட்டோம்… ஆதி என்ன செய்தா?” கௌதமின் முகத்துக்கு நேராக கையை நீட்டி பேசிய வருணின் கையை பிடித்து கீழே இறக்கினான்…

“அப்படி ஒன்றும் அலைய தேவை இருந்திருக்காதே வருண்… சாண்டிக்கு என்னோட கெஸ்ட் ஹவுஸ் தெரியும்… லாவண்யாவை கேட்டு இருந்தா கண்டிப்பா சொல்லிருப்பாங்க… இவ்வளவு திறமையான உனக்கு நான் சொல்லி தர வேண்டுமா வருண்?”கேலியும் குத்தலும் அவனது கேள்வியில் விரவி கிடக்க…

“ஏன் எங்க வீட்டு பொண்ணு காணோம்ன்னு நீயே போஸ்டர் அடிச்சு ஒட்ட சொல்வியா?”கடுப்பாக வருண் கேட்க…

“உங்க வீட்டு பொண்ணுங்கன்னா மட்டும் உங்களுக்கு அக்கறை வந்துடுமே… இதோ இங்க இருக்காளே சௌமினி… இவளை யாருன்னு தெரியுதா உனக்கு?” கோபமாக கௌதம் கேட்க… முறைத்து பார்த்தவனால் சட்டென்று பதில் கூற முடியவில்லை…

அதுவரை மெளனமாக பார்வையிட்டு கொண்டிருந்த சிதம்பரமும் விசாலாட்சியும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர்… அடுத்த வெடிகுண்டா என்ற சோர்வு அவர்களுக்குள்!

“அது என்னோட பெர்சனல் கௌதம்… ” வேறுபுறம் திரும்பி கொண்டு கடுப்பாக பதிலளிக்க… சௌமினிக்கு அந்த பேச்சு தன் பக்கமாக திரும்புவது பிடிக்கவில்லைஎன்பதை அவளது சுருங்கிய முகமே கூற… அவனது பதில் கௌதமுக்கு கோபத்தை வர வைத்தது…

“அப்போ நீ பேசிட்டு இருப்பது என்னோட பெர்சனல் வருண்… ”அலட்டாமல் அவன் கூற…

“ஷிட்… ஆதிரை சின்ன பொண்ணுடா… அவளை போய்… ச்சை… ”தலையிலடித்து கொண்டவனை விசித்திரமாக பார்த்தான்…

“ட்வெல்த் படிக்கும் போதே ஆதிரையை காரணம் காட்டி தான் சௌமினி கிட்ட நீ ப்ரேக் அப் பண்ணினதா எனக்கு ஞாபகம்… ”

“நான் ஆதிரையை காரணம் காட்டலை… நாங்க பிரிந்த காரணம் வேற… அது இப்போ உனக்கு நான் விளக்க தேவையில்லை… ”சிவகாமியையும் சிதம்பரத்தையும் பார்த்தபடியே அவன் கூற…

“வேற என்ன காரணம் வருண்… நீ ஒரு செல்பிஷ் கூஸ் என்பதை தவிர? எனக்கு நீ விளக்க தேவையில்லைன்னா நானும் எதையும் விளக்க தேவையில்லைதான்… ” வருணின் கேள்விக்கான பதில் அவனை போலவே வந்து விழ… திகைத்து பார்த்தான்!

“கௌஸ்… இப்போ இந்த பேச்சு எதுக்குடா… எனக்கு அசிங்கமா இருக்கு… அவனே வந்தாலும் எனக்கு இனிமே அவன் வேண்டாம்… ” இருக்கின்ற பிரச்னையை விட்டு தன்னை மையப்படுத்தி நடக்கும் விவாதத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வருவது என்று தெரியாமல் விழித்தாள்!

தன் பொருட்டு நடந்து கொண்டிருந்த வாக்குவாதம் சௌமினியை சங்கடத்தில் ஆழ்த்தியது… சிவகாமியின் பொறுமையும் பறக்க துவங்கியது! ஆனால் அவளது வார்த்தைகள் வருணின் மனதுக்குள் ஆழமாக சென்று பதிய… அவன் பார்த்த பார்வையின் அர்த்தத்தை சௌமினியால் புரிந்து கொள்ள முடியவில்லை… அந்த பார்வை முழுக்க அவனது தோல்வியின் வலியை மட்டுமே சுமந்து இருந்ததாக தோன்றியது… அது அவளது கற்பனையாக இருக்கக்கூடும் என்று நினைத்து கொண்டாள்!

“இப்போ இந்த பேச்சும் தேவையில்லை… ஆதி இப்போ எங்க?” சௌமினியை முறைத்து கொண்டே வருண் கேட்க… கௌதம் அதுவரை பேசிக்கொண்டிருந்தவன் மீண்டும் மெளனமாக… சிவகாமிக்கு பற்றி கொண்டு வந்தது…

“ஆதி எங்கன்னு இப்போ சொல்ல போறியா இல்லையா கௌதம்?”

கொதித்து போய் கேட்டவரை கேலியாக பார்த்தவன் தனது வாட்சை திருப்பி பார்த்து கொண்டான்… அருகிலிருந்த கோவிலுக்கு அவளை அனுப்பி வைத்திருந்தான்… காரணங்கள் பலவற்றை கூறி!… அவள் வருவதற்கு எப்படியும் மேலும் ஒரு மணி நேரம் ஆகி விடும் என்பதை ஊகித்தவன் அதற்குள்ளாக பேசி விட வேண்டும் என்று முடிவெடுத்து இருந்தான்…

“உங்க பொண்ணு எங்கன்னு ரோட்ல போறவன் வர்றவன் எல்லாரையும் கேட்பீங்களா?” நக்கலாக அவன் கேட்ட கேள்வி சிவகாமியை மட்டுமல்லாது,வருணையும் சிதம்பரத்தையும் கோபப்படுத்தியது!

“கௌதம்… நீ பேசறது தப்புப்பா… ” அதுவரை மெளனமாக இருந்த சிதம்பரம் வாய் திறக்க… கௌதம் குத்தலான பார்வையோடு திரும்பினான்…

“தப்பு சரிங்கறதுக்கு டெபனிஷன் நீங்க சொல்றீங்களா? இதுதான் ஜோக் ஆப் தி மில்லேனியம்… ”

“சரி கௌதம்… ஆதி கிட்ட எதுக்காக பழகின? எங்களை பழி வாங்க உனக்கு வேற வழியே தெரியலையா?” கோபமாக சிவகாமி கேட்க…

“அவ கிட்ட நான் மட்டும் தான் பழகினேனா? எனக்கு முன்னாடி எத்தனை பேரோ?… பின்னாடி எத்தனை பேரோ?” சற்றும் கவலைப்படாமல் கூறுவது போல கௌதம் கூறிக்கொண்டே போக அத்தனை பேர் முகத்திலும் அதிர்ச்சி ரேகைகள்…

ஆனால் அந்த வார்த்தையை கூறுவதற்குள் அவன் ஆயிரம் முறை இறந்து பிழைத்தான்… தன்னை நம்பி தன்னையே உயிராக நினைத்து உடல் பொருள் ஆவியனைத்தும் கொடுத்தவளுக்கு தான் செய்து கொண்டிருப்பது என்ன? இந்த துரோகம் மட்டுமே! மனம் சவுக்கால் விளாசியது… ஆனாலும் அவள் தனது ஆதிரை… அவளை தான் எப்படியும் சமாதானப்படுத்திவிட முடியும் என்பதை மனதுக்குள் லட்சம் முறை உருபோட்டு கொண்டான் கௌதம்…

அந்த நேரத்தில் சிவகாமியை உணர வைக்க… தன் தாயை பேசிய வார்த்தைகள் அனைத்தும் எவ்வளவு கேவலமானவை என்பதை உணர வைக்க வேண்டும் என்பதை தவிர வேறு எண்ணம் எதுவும் இல்லை… அதுவும் இல்லாமல் அவனது குறிக்கோளை அடைந்தே ஆக வேண்டும் என்ற வெறி… தனக்கான அங்கீகாரத்தை கொடுக்க மறுத்தவர்களின் மேலான வெறி… அந்த அங்கீகாரத்தை தன் தாய் பெற்றே ஆக வேண்டுமென்ற வெறி… அவனது காதலை அவனது கண்களில் இருந்து தள்ளி வைத்தது…

ஆதிரை கௌதமோடு பழகி வருகிறாள் என்பதை சென்னையிலிருந்து கோவை வரும் போதுதான் வருண் சிவகாமியிடம் கூறியிருந்தான்… அதை எப்படி ஜீரணிப்பது என்று சிதம்பரத்திற்கும் விசாலாட்சிக்குமே புரியவில்லை… ஆனால் அதையும் மறுத்து கௌதம் கூறுவதை கேட்டபோது அதிர்ந்தனர் அனைவரும்… சௌமினி உட்பட!

“கௌதம்… ” சிவகாமி அதீத கோபத்தில் கத்த… அலட்டிக்கொள்ளாமல் திரும்பி…

“என் பெயர் கூட ஞாபகத்துக்கு வருதா? எனக்கு நீங்க வைத்த பெயர் உங்களுக்கு நினைவில் இருக்கா? எல்லாமே நீங்க கற்று கொடுத்ததுதான் சிவகாமிம்மா… ” சிறுபுன்னகையோடு கூற… சிவகாமி அதிர்ந்து அவனை பார்த்தார்!

“சரி… நீங்க சொன்ன மாதிரி நான் ஆதியை… ” என்று பேசிக்கொண்டே திரும்ப நின்ற இடத்தில் வேரோடி போன ஆதிரையை பார்த்து அதிர்ந்தான் கௌதம்!

error: Content is protected !!