அத்தியாயம் 33

உனது காயங்கள்

என்னில் தழும்புகளாய்!

-டைரியிலிருந்து

“என் அம்மாவை பகிரங்கமா மனைவி என்று ஒத்துக்கொள்ளட்டும்… அதன்பின் அவளை திருமணம் செய்து கொள்கிறேன்… ”என்று அவன் கூறியது அங்கிருந்த அனைவரையும் அதிர்ச்சியின் விளிம்பில் தள்ளியது… அவனது அன்னைக்காகவா இத்தனை துரோகமும் பழிவாங்கலும் அதற்கான போராட்டமும் என்று எண்ணிப்பார்த்த போது ஒவ்வொருவரின் மனதிலும் ஒவ்வொரு விதமான உணர்வுகள்!

சிதம்பரம் மிகவும் அவமானமாக உணர்ந்தார்… தன்னால் தனது மகன், தனது முதல் வாரிசு எத்தகைய நிலைக்கு இறங்க தள்ளப்பட்டு இருக்கிறான் என்பதை நினைத்தபோது அவரது நெஞ்சின் ஓரத்தில் சுருக்கென்ற வலி… கண்களில் அவரையும் அறியாமல் கண்ணீர் வழிந்தது… தன் ஒருவனின் சுயநலம் இத்தனை தன் மகனையும் பாதித்து மருமகளையும் நிற்கதியாக நிற்க வைத்து இருக்க… இந்த நிலை தேவையா என்று எண்ணினார்…

மெளனமாக விசாலாட்சியை பார்க்க… அவரது கண்களில் தாள முடியாத கண்ணீர்… எதையும் பேசிவிட முடியாத சூழ்நிலை கைதியாக தான் நிறுத்தப்பட்டு இருப்பதை வேதனையாக உணர்ந்தார்… அபிராமியின் வாழ்கையை தான் தட்டி பறித்து விட்டோமா?என்று மனதில் உறுத்தல்… ! மனசாட்சியோ வேறு மாதரியாக அவரை குடைய துவங்கி இருந்தது…

நான் பொய் சொல்ல மாட்டேன் ஆனால் உண்மையை மட்டும் வசதியாக மறைத்து விடுவேன் என்பது எத்தகைய நியாயம்? அந்த உண்மைகள் இன்னொருவரின் வாழ்க்கை ஆதாரமாக இருக்கும் பட்சத்தில், அந்த மறைத்தல் என்பது பாதகமாக முடியும் பட்சத்தில் அது எந்த விளைவை ஏற்படுத்த கூடும்?

காலத்தின் கைகளில் ஒவ்வொருவருவரும் கைதிகளே… அந்த சூழ்நிலை கைதிகளுக்கு இயற்கை அவர்களது பாதையை தேர்ந்தெடுக்கும் அதிகாரத்தை கொடுப்பதில்லை… அது அமைத்து கொடுக்கும் பாதை வழியே பயணமும் நிகழ்கிறது… ஆனாலும் இதுவும் கௌதமை பொறுத்தவரை போலித்தனமான வாதமாக தோன்றியது… எந்த இயற்கையும் நீ தவறு செய் என்று நிற்பந்திப்பதில்லை… பேராசை களமாட அதனை கொண்டு கொடுக்கப்படும் அதற்கான வெற்று விளக்கங்கள் அனைத்தும் பயனில்லா தொலைநோக்கியே!

“கௌதம்… இதற்கும் அதற்கும் எதற்கு முடிச்சு போடுகிறாய்?” ஹீனமான குரலில் சிதம்பரம் கேட்க…

“வேறு எதோடு முடிச்சு போடுவது? அதையும் நீங்களே சொல்லிடுங்க… ” இறுக்கமான முகத்தோடு கௌதம் கூற…

“அபிராமியிடம் நீ இதை பற்றி பேசியிருக்கிறாயா? அவள் இதுவரை என்னிடம் இது போல கேட்டதே இல்லை… அந்த அளவு… ” என்று இடைவெளி விட்டவர் விசாலாட்சியை கெஞ்சுதலான பார்வை பார்த்து விட்டு…

“அவள் என்னை புரிந்து வைத்திருக்கிறாள் கௌதம்… காரணம் காதல்… ” கௌதமுக்கு கொலை வெறியே வந்தது…

கையில் கிடைத்த கண்ணாடி பொருளை கண்ணை மூடி கொண்டு விட்டெறிந்தான்… அது சுவரில் தெறித்து விழுந்து உடைந்தது…

அங்கீகாரம் இல்லாமல் குடும்பம் நடத்துவாராம் அதற்கு பெயர் காதலாம்? இதற்கும் ஒப்புக்கொண்ட தன் தாயை ஒரு புறம் மனம் திட்டிக்கொண்டிருந்தாலும் அவனால் என்றுமே அவரை விட்டு கொடுத்துவிட முடியாது… விட்டுவிடவும் முடியாது… மனம் ஒரு புறம் கொதிக்கும் போதே மறுபுறத்தில் ஆதிரைக்கு நீ செய்ததற்கு பெயர் என்ன? என்று மனசாட்சி குத்தி காட்டியது… ஆனால் அவனது மனமோ ஆதிரையை ஆயுதமாக உபயோகப்படுத்தி விட்டேனே தவிர அவளை விட்டுவிட போவதில்லையே என்று சமாதானம் கூறிக்கொண்டிருந்தது…

ஆனால் ஆண்கள் இருவருமே வசதியாக மறந்து விட்ட ஒன்று… அது அந்த பெண்களின் தன்மானம்! தன்மானமும் சுயமரியாதையும் அடகு வைக்கப்படும் போது அந்த பெண்களால் சிலவற்றை ஒப்புக்கொள்ளவே முடியாது என்பதை மறந்து விட்டார்கள்…

“என்ன காதலா? இதற்கு பெயர் காதலா? கேவலமா இல்லையா? நீங்க தப்பித்து கொள்வதற்கு யூஸ் பண்ற வார்த்தை காதல்… இன்னொரு முறை சொல்லிவிடாதீங்க… வேற ஏதாவது சொல்லிவிட போறேன்… ” அதீத கோபத்தில் கௌதம் சிதம்பரத்தை வெளுத்து வாங்கி கொண்டிருக்க… வருணின் முகம் கறுத்திருந்தது… சிவகாமி தலையில் கை வைத்து அமர்ந்தவர் எழும் மார்க்கமே அறியாமல் இருந்தார்… விசாலாட்சிக்கு மகன்களின் முன் இப்படி தலை குனிந்து நிற்க வேண்டி இருக்கிறதே என்ற தவிப்பில் கண்களில் கண்ணீர்!

“அப்போ நீ செய்ததுக்கு பெயர் என்ன?” கண்ணீரை துடைத்து கொண்ட ஆதி தெளிவான குரலில் கௌதமை பார்த்து கேட்க… திரும்பி ஆதிரையை பார்த்தான்… அவனது கண்களில் யாருமே அறியாத கெஞ்சுதல் இருந்தது… அது தயவு செய்து இப்போது பேசாதே என்றது… மெளனமாக அவளை பார்த்தவனை…

“ஆக நீ என்னுடைய மாமாவின் வைப்பாட்டியின் மகன்… ” முகம் சொல்ல முடியாத கோபத்தை பூசியிருக்க…

“ஆதி… ” கோபத்தின் எல்லையை தொட்டு மீண்டு வந்தான் கௌதம்… எந்த வார்த்தையை அதிகமாக வெறுக்கிறானோ அதை ஆதிரையே கூறுவது அவனது கோபத்தை விசிறி விட்டது… அவளோ அதை சிறிதும் லட்சியம் செய்யாமல்…

“இதை என்னிடம் முன்னமே சொல்லியிருக்கலாமே கௌதம்… எப்பாடு பட்டாவது இவரை சம்மதிக்க வைத்திருப்பேனே… உயிரை கொடுத்தாவது… ஆனால் நீ?… ச்சீ… ” முகம் அருவருப்பில் சுளித்தது…

“ஆதிரா… ஜஸ்ட் ஷட் அப்… நாம் அப்புறம் பேசிக்கொள்ளலாம்… ” இருவருக்குமான கணக்குகளை தனியே தீர்த்து கொள்ளலாம் என்று அவன் கூற… கையை உயர்த்தி அவனை நிறுத்த கூறி…

“உன்னிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை… ” அந்த ஒன்றும் என்ற வார்த்தையில் அழுத்தம் கொடுத்து அவள் விரக்தியாக கூறியவள் மேலும் பேச முடியாமல் தத்தளிக்க… அந்த விரக்தி அவனது மனதையும் தாக்கியது… ஆனாலும் இப்போது அவளை சமாதானப்படுத்துவதை விட தந்தையை கார்னர் செய்து தன் தாய்க்கான அங்கீகாரத்தை பெற்றே ஆக வேண்டுமென்பது மட்டுமே அவனது மனதில் ஒரே நோக்கமாக இருந்தது…

அனைத்தையும் காட்டிலும் ஆதிரையை அப்போது தனித்து பார்க்க முடியவில்லை… தன்னுடைய ஆதி தானே என்ற நினைவு அவளுக்கான உணர்வுகள் தனி என்பதை அவனுக்கு புரியவைக்க தவறியிருந்தது… பெரும்பாலும் ஒவ்வொரு கணவனும் மனைவியும் தவறும் இடம் அது… ஆணுக்கான உணர்வும் உணர்தலும் உள்வாங்கிக்கொள்ளும் முறைகளும், பெண்ணுக்கான உணர்வும் உணர்தலும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் முறைகளும் முழுமையாக வேறுபட்டிருப்பதன் காரணமே ஒருவருக்கு மிகப்பெரிய பிரச்சனையாக தோன்றுவது மற்றவர்களுக்கு ஒன்றுமே இல்லாமல் தோன்றிவிடுகின்றது…

கணவனுக்கும் மனைவிக்குமே இவ்வளவு சிக்கல்கள் தோன்றிவிடுமேன்றால் திருமணத்திற்கு முன்பே உறவு சிக்கலில் மாட்டி கொண்டு விட்ட இருவரின் நிலை? கற்பை விட களவழகு என காப்பியங்களில் வேண்டுமானால் ரசிக்கப்படலாம் ஆனால் உண்மையில் அது அவ்வாறு இல்லை என்பதை இருவருக்குமே காலதேவன் மண்டையில் அடித்து புரியவைத்து கொண்டிருந்தான்… சில நிமிட சறுக்கல் தன் வாழ்கையை கூறு போட்டு கொண்டிருப்பதை ஆதியும் வெகு கசப்பாக உணர்ந்து கொண்டிருந்தாள்… அதற்கு முழு காரணமும் கௌதம் மட்டுமே என்ற அவளது வளர்ந்த குழந்தையின் மனம் அவன் மேல் வெறுப்பை வளர்த்து கொண்டிருந்தது…

இறுக்கமான முகத்தோடு அவளுக்கு அருகில் வந்தவன்… மற்றவருக்கு கேட்காத குரலில்…

“ஆதி… உன்னை இம்ப்ரஸ் செய்ய தான் வந்தேன்… செய்தேன்… ஆனா நான் ஒரு லிமிட்டோட நிறுத்திக்க தான் நினைத்தேன்… ஆனா… ” அவள் அதிர்ந்து பார்க்க… கௌதம் இடைவெளி விட்டு பெரிய மூச்சை எடுத்து கொண்டவன்…

“அன்றைக்கு உன்னை விட்டு போக முடியலடி… காரணம் உனக்கே தெரியும்… ” அவள் மேல் பழியையும் போட்டு விடாமல் வெகு எச்சரிக்கையாக கௌதம் கூறினாலும் ஆதிரையின் ஈகோ வெகுவாக அடிபட்டு தத்தளித்தது… முதல் அடி வைத்தது அவள் தான் என்றல்லவா மறைமுகமாக கூறுகிறான்… முகம் கசங்கி அவமானத்தில் கண்களில் கண்ணீர் வழிய வேறு புறம் திரும்பி கொள்ள… அவளை வலுகட்டாயமாக திருப்பியவன்…

“இப்போ கொஞ்சம் பொறு ஆதி… என்னை நம்பு… என்னை என்ன வேண்டுமானாலும் சொல்லிக்க… ஆனால் இப்போ எதையாவது பேசி காரியத்தை கெடுத்து விடாதே… ப்ளீஸ்… ”

ஆதிரையின் வெறுமையான பார்வையின் அர்த்தத்தை உணர கௌதமால் அப்போது முடியவில்லை…

******

ஆதிரைக்கும் கௌதமுக்குமான வாதங்களை குறுக்கிடாமல் பார்த்து கொண்டிருந்த வருண்… முகத்தை அழுந்த துடைத்து கொண்டு…

“இந்த அளவு நீ கேவலமா இறங்குவியா கௌதம்?” அவனை அதே பார்வை பார்த்தபடி வருண் கேட்க… கௌதமால் சட்டென்று பதில் பேச முடியவில்லை…

“நம்ம ரெண்டு பேருக்கும் உள்ள உறவுமுறை நமக்கு எப்போவோ தெரியும்… ஆனா வள்ளியம்மை ஆதின்னு யாருக்குமே தெரியாதே… உன்னோட மனசாட்சி க்ளியரா இருந்து இருந்தா அவ கிட்ட நேராவே நீ சொல்லியிருக்கலாமே… எப்போ உன் மனசுல அந்த நேர்மை இல்லையோ அப்போ உன்னோட நோக்கத்திலும் நேர்மை இருக்காதே… ” கூர்மையாக கேட்க…

“என்னுடைய நேர்மையை பற்றி நீ கமென்ட் செய்ய வேண்டாம் வருண்… அதற்கான தகுதி உனக்கில்லை… ” ஆதி கூறிவிட்ட வார்த்தை கொடுத்த வலியிலிருந்து வெளியே வந்தவன் வெப்பமாக உரைக்க…

“சௌமினி இன்று வரை மிஸ் சௌமினியாக தானே இருக்கிறாள்… அதை விட வேறு என்ன தகுதி எனக்கு வேண்டும் கௌதம்?” வார்த்தைகளில் பழுக்க காய்ச்சிய இரும்பின் தன்மை! நடப்பவற்றை ஜீரணிக்க முடியாமல் அமர்ந்திருந்த சௌமினியின் முகத்தில் துயரத்தை மீறிய பெருமிதம் மின்னியது! அதை கண்டுகொண்ட வருண் மனதிலும் மின்னல்!

ஒரே வாக்கியத்தில் அவர்களது காதலின் மீதான நம்பிக்கையும் விட்டு விட முடியாத பந்தத்தையும் நேர்மையையும் காலம் கடந்துவிட்டாலும் பிரிந்து விட்டாலும் இருவருக்குள்ளுமே வேரூன்றிவிட்ட நேசத்தை அவன் கூற… கௌதம் மனதுக்குள் தன் தோழியை நினைத்து பெருமை பட்டான்…

இப்படியான காதல் நிச்சயம் ஒரு வரம்!

வெளிப்படையாக நடந்து கொண்டிருந்த இந்த வாதங்கள் பெரியவர்களை வலிக்க செய்து கொண்டிருந்தது… தங்களது தவறுகளால் சிறியவர்களின் வாழ்க்கை குரங்கின் கை பூமாலையாகிவிட்டதே என்ற துயரம் அவர்களின் முகத்தில்!

“நீ அப்பாவை ஷேர் செய்வது மட்டும் தான் எனக்கு பிடிக்கவில்லை… ஆனால் என்றைக்காவது உன்னை விட்டு கொடுத்து இருப்பேனா? ஸ்கூலிலும் சரி… சிவகாமி அத்தையிடமும் சரி உன்னை என்றுமே விட்டுகொடுத்ததில்லை கௌதம்… ஆனால் உன்னுடைய காரியத்தை சாதிக்க நீ செய்த இந்த வேலை எனக்கு உன் மேல் இருந்த மரியாதையை போக்கி விட்டது… ” துயரம் நிறைந்த கண்களோடு ஆதியின் எதிர்காலத்தை நினைத்து கௌதமை இடித்துரைக்க… அதை கேட்ட அவனது முகத்திலும் அதே துயரம்!

மறுத்து பேச முடியாமல் அவன் நிற்க… சௌமினியால் கௌதமை அந்த நிலையில் பார்க்க முடியவில்லை…

“வருண்… நீ உன்னுடைய நிலையில் இப்படி இருப்பது பெரிய விஷயமே இல்லை… ஏனென்றால் உனக்கு அனைத்துமே இருக்கிறது… குடும்ப பாரம்பரியம்,சமுதாயத்தில் அங்கீகாரம், தந்தையிடம் உரிமை, உறவுகளின் அன்பு என அனைத்தும் பெற்றவன் நீ… ஆனால் உன்னுடைய தந்தைக்கு முதல் மகனாய் பிறந்தும் இவை எதுவுமே கிடைக்க பெறாமல் இருப்பது எவ்வளவு பெரிய துயரம் என்பதை நீ அறிய மாட்டாய்… அறியும் வகையில் நீ வளர்க்கப்படவில்லை… ” கூறும் போதே சௌமினிக்கு குரல் தழுதழுத்தது… குரல் தேய கூறிவிட்டு கௌதமை பார்க்க… அவனது கண்களிலிருந்த அந்த வெறுமை அவளது நெஞ்சத்தை தாக்க… கௌதமை தோளோடு அணைத்து கொண்டாள்!

அந்த நிலையிலும் விட்டுத்தராத அந்த நட்பை பார்க்கையில் அவனுக்கு ஏனோ பொறாமையாக இருந்தது… நெருங்கி வந்த காதலி தொடுவானமாகி கொண்டே இருப்பதாக தோன்றியது…

தலையில் கைவைத்து அமர்ந்திருந்த சிவகாமியை பார்த்து…

“இவங்க எப்படியெல்லாமோ பேசி இருக்காங்க… அந்த பேச்சை எல்லாம் நீ வாங்கியிருந்தும் பொறுமையாவே இருந்தா நீ இப்போ சொல்றதுல அர்த்தம் இருக்கும் வருண்… ஆனா இப்போவும் கௌதம் என்ன கேட்கறான்… அம்மா கழுத்துல ஒரு தாலிய தானே கட்ட சொல்றான்… ” சௌமினியின் கேள்வியில் கோபச்சூடு விரவியிருக்க…

“அவன் செய்ததை நியாயப்படுத்த பார்க்கறியா சௌமினி?”கோபமாக வருண் கேட்க…

“அவன் செய்தது தப்பா ரைட்டான்னு பேச நமக்கு உரிமை கிடையாது வருண்… அது அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்டது… ஆனா அவனோட டிமான்ட்ல நியாயம் இருக்கே… அதை பார்க்க முடியலையே உங்களால… ” சௌமினி விடாமல் வாதம் புரிந்து கொண்டிருக்க…

அறையிலிருந்து கோபமாக ஆதி வெளியே வர… வருண் சௌமினியை முறைத்து கொண்டு நிற்க… கௌதம் தந்தை முன் சென்று…

“உங்களுக்கு இரண்டு என்ன… பத்து பேரை மணந்து கொள்ள திறன் இருக்கலாம்… அதற்கும் என் அம்மா கேள்வி எதுவும் கேட்காமல் தகைந்து போகலாம்… ஆனால் நான் கேட்பேன்… உங்க சட்டையை பிடித்து கேட்பேன்… ஏன் என் அம்மாவை ஏமாற்றினீங்க?”

சிதம்பரத்தின் முகத்துக்கு நேராக நின்று கொண்டு கௌதம் கேட்க… பதில் கூறாமல் சிதம்பரம் மெளனமாக தலை குனிய அதற்கு மேலும் விசாலாட்சியால் பொறுமையாக பார்க்க முடியவில்லை… தான் தாலியை வாங்கிய பாவத்திற்கு அடுத்த தலைமுறையின் வாழ்க்கை அந்தரத்தில் மிதப்பதை பார்த்த பின்னரும் அவரால் பொறுமையை கைபிடிக்க முடியவில்லை… தீர்க்கமாக சிவகாமியையும் தன் கணவரையும் பார்த்தவர்…

“அவர் பதில் சொல்ல மாட்டார் கௌதம்… நான் சொல்றேன்… ”என்று கௌதமை பார்த்து கூறியவர்…

“அவருக்கு கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை… ” கோபமாக கூறிவிட்டு… தொடர்ந்தார்

“நானும் அபியும் ஒன்றாகத்தான் பாட்டு கற்றுக்கொள்ள போனோம்… அதனால் நாங்க ரெண்டு பேருமே சின்ன வயதில் இருந்தே நல்ல ப்ரெண்ட்ஸ்… அபி பாட்டோட நடனமும் கத்துகிட்டா… அபியோட அம்மா அப்பா எல்லாருமே நல்ல பாடகர்கள்… அதே மாதிரி இவளும் மேடை கச்சேரிகள் நிறைய செய்ய ஆரம்பிச்சா… என்னுடைய ப்ரென்ட் அப்படிங்கற முறைல எங்க வீட்டுக்கு வருவா… அப்போ மாமா அவ மேல ஆசைப்பட்டாங்க… ” என்று நிறுத்திவிட்டு அனைவரையும் பார்த்துவிட்டு தொடர்ந்தார்…

“ஆனா அபி முதல்ல பிடி கொடுக்கலை… அப்புறம் எப்படியோ… ஒத்துகிட்டா… ஆனா எங்க வீட்ல உறவு முறையை தாண்டி கல்யாணம் செய்றது இல்லை கௌதம்… அதனால் பெரிய மாமா என்னை தான் செய்துக்கனும்ன்னு சொன்னாங்க… இவங்களும் ஒத்துகிட்டாங்க… ” என்று கசப்பாக நிறுத்த… அங்கிருந்த இளையவர்கள் அனைவரின் முகத்திலும் கோபம்…

“ஏன் ஒத்துக்கிட்டாங்க… இதற்கு ஏன் ஒருத்தரோட மனசை கலைக்கனும்? இது சந்தர்ப்பவாதம் இல்லையா?” ஆதிரை கோபமாக கேட்க…

“காரணம் இருக்கே ஆதி… ”சிதம்பரம் முதன்முறையாக வாய்திறக்க…

“அப்படி என்ன காரணம் சொல்ல போறீங்க மாமா?” ஆதிரையால் கேட்காமல் இருக்க முடியவில்லை… அவரால் தானே தன்னுடைய வாழ்க்கையும் இப்படி இன்னொருவன் விளையாட களமாகி விட்டது என்ற கோபம்!

“ஏன்னா எனக்கு முன்னாடி என்னோட அப்பா வைத்த ஆப்ஷன்ஸ் வேற இல்லை… அபியையும் அவளோட பாடற வேலையையும் அவருக்கும் சிவகாமிக்கும் பிடிக்கலை… ஒன்று இந்த குடும்பம் இல்லைன்னா அபி… ரெண்டுல ஏதாவது ஒன்றைத்தான் சூஸ் பண்ண முடியும்ன்னு சொல்லிட்டார்… ”

“அப்போ அபிம்மாவை சூஸ் செய்து இருக்கலாமே… இப்போ ரெண்டு பேர் வாழ்க்கைல விளையாடி இருக்கீங்க… ” சௌமினி விடாமல் கேட்டு வைக்க… அவர் மெதுவாக மறுதலித்தார்…

“அது முடியாதும்மா… என் குடும்பத்தை விட்டுட்டா என்னோட அடையாளம் தொலைஞ்சு போய்டும்… ”

“அதெப்படி சொல்றீங்க? என்றைக்கு இருந்தாலும் உங்க அப்பாவுக்கு நீங்க பிள்ளை தானே… ” சௌமினி கோபமாக கேட்க

“இல்லை… அவர் என்னை தத்தெடுத்து இருந்தார்… பிள்ளை வாரிசு இல்லைன்னு… ” தலையில் கை வைத்து கொண்டு அவர் கூற…

அனைவரது முகத்திலும் அதிர்ச்சி… யாருமே எதிர்பார்க்காத பதில்… !!

“அபியை கல்யாணம் செய்துகிட்டா என்னை பிள்ளை இல்லைன்னு அறிவிச்சுடுவேன்னு சொல்லிட்டார்… எனக்கு அப்புறமா அவருக்கு பிறந்த சிவகாமிக்கு தான் மொத்த சொத்தும் என்று சொல்லி விட்டார்… ”என்று இடைவெளி விட்டவர்…

“இப்போதும் சிவகாமிக்கு தான் முழு உரிமை… அனுபவ பாத்தியதை மட்டும் தான் எனக்கும் என் வாரிசுகளுக்கும்… ”

குற்ற உணர்வுடன் கூறி முடிக்க… ஒவ்வொருவரின் முகத்திலும் ஒவ்வொரு உணர்வு… கௌதம் அருவருப்பாக அவரை பார்த்தான்…

“ஆக சொத்துக்காக என் அம்மாவை கழட்டி விட்டுட்டீங்க?” அவனது குரலில் இருந்த அருவருப்பு அவரை மிக மோசமாக தாக்க… நெஞ்சில் சுருக்கென்றது…

“இப்போ என்கிட்டே அம்மா கழுத்துல தாலியை கட்டுங்கன்னு சொல்றியே கௌதம்… நீயும் சொத்துக்காகத்தான் செய்றியா?” வலியை சகித்து கொண்டே அவர் கேட்க…

“ச்சீ… யாருக்கு வேண்டும் உங்க சொத்து?… எனக்கு தேவை அங்கீகாரம்… அடையாளம்… அவ்வளவுதான்… ”

“அதே அடையாளத்தை தக்க வைத்து கொள்ள வேண்டி மட்டும் தான் போராடினேன்… அன்றைக்கு என் அப்பாவிடம் தகைந்து போனேன் கௌதம்… அதற்கு பின் பெயருக்காவது அபி கழுத்தில் தாலிகட்டியிருக்கலாம்… ஆனா எங்க ரெண்டு பேருக்கு இடையே அப்படி ஒரு நினைவே வரவில்லை… நீ டென்த் வரும் வரை! ஆனால் எப்போது நீ கேள்வி கேட்டாயோ அதற்கு பின் என்னிடம் அவள் பேச கூட இல்லை… ”

கூறி முடித்தவரின் கண்களில் கண்ணீர் திரண்டு இருந்தது… ஆதிரைக்கு ஏனோ சிதம்பரத்தின் மீது சிறிதும் பரிதாபம் வர மறுத்தது… ஒரு பெண்ணின் கண்ணீரை விட அடையாளம் பெரிதல்ல என்று எண்ணினாள்… அந்த எண்ணம் அவளுக்குள் அவர் மீதான கோபத்தை அதிகப்படுத்தியது… இவருடைய பாதசுவட்டை கௌதம் பின்பற்றிவிட்டானே என்ற ஆற்றாமையும் சேர்ந்து கொள்ள… யாரையும் பார்க்க பிடிக்கவில்லை…

“அம்மா கேட்கலைன்னு சொல்றது உங்களுக்கு ஈசியான எக்ஸ்கியுஸ்ஸா போச்சு… உங்க சுயநலத்துக்கு என்ன கலர் வேண்டுமானாலும் கொடுக்கலாம்… ஆனால் சுயநலம் எப்போதும் சுயநலம் தான்… ” கோபத்தில் பற்களை கடித்து கொண்டு கூற… ஆதிரை கௌதமை கையால் காட்டி…

“இந்த சுயநலவாதி இன்னொரு சுயநலவாதியை திட்டறான்… ஆனால் இதற்கு நடுவே மாட்டிகொண்டு அலைகழிக்கப்பட்ட சாலா அத்தையை பற்றி யாருமே பேச வில்லையே… தன்னோட கணவன் இன்னொருத்தி மேலத்தான் காதலை வைத்து இருக்கார் என்பது தெரிந்தும் மௌனமா இருந்தஅவங்களுக்கு என்ன சொல்ல போறீங்க மாமா? இதை விட ஒரு பொண்ணுக்கு வேற கொடுமை செய்துட முடியாது… ” கோபமாக சிதம்பரத்தை பார்த்து கேட்க… சிதம்பரம் பதில் கூற முடியாமல் தலைகுனிய… விசாலாட்சி அமைதியாக கூறினார்…

“நான் எதையுமே எதிர்பார்க்கலை ஆதி… பெண்களில் முக்கால்வாசி பேர் காதலே இல்லாத தாம்பத்தியத்தை எதிர்கொண்டு தான் இருக்காங்க… நான் அதில் ஒருத்தி என்று நினைத்து கொண்டேன்… ” அமைதியாக கூறினாலும் உள்ளுர இருந்த வலியை ஆதிரை வெகுவாக அறிந்து கொண்டாள்…

“நீங்க சொல்றது உண்மை அத்தை… காதலே இல்லாமல்… ” என்று கூறும் போதே நா தழுதழுக்க… “ஆனா என்னால முடியாது… இப்போ என்னை வைத்து தானே இத்தனை வாக்குவாதமும்… எனக்கு இவன் தேவையில்லை… என்னோட வாழ்க்கை எப்படி ஆனாலும் சரி… இவன் எனக்கு தேவையே இல்லை… ”

கௌதம் அவளை அதிர்ந்து பார்க்க…

“என்னை வைத்து நீ ஆட்டத்தை ஆரம்பித்தாய்… அதை நானே முடித்தும் வைக்கின்றேன்… நீ வேண்டாம் வேண்டாம் வேண்டாம்… ” கோப மிகுதியில் ஆதிரை கூற…

சிவகாமியின் கண்களில் கண்ணீர்!

மௌனசாட்சியாக நின்ற காலத்தை துணைக்கழைத்து தானும் காத்திருக்க துவங்கினார்!

அலைக்கழித்த கோபங்கள் சிதம்பரத்தின் இதயத்தை பாதிக்க… அது தன் இயக்கத்தை நிறுத்தி பின் துடிக்க துவங்கியது… ! யாருடைய சமாதானங்களும் ஆதிரையை அசைக்கவில்லை… அவள் தன்னை வேண்டாமென்று கூறியது மட்டுமே கௌதமின் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது… நம்பிக்கை சிதைவடையும் போது மனம் எவ்வாறெல்லாம் தவிக்குமென அப்போது அவன் உணர துவங்கி இருந்தான்!

காதலில் ஆழ்ந்திருந்த போதெல்லாம் அவளை நினைத்து துடிக்காத இதயம்… அவள் பிரிந்த பின்பு தவித்து துடித்தது… ஆனால் அவளது மறுதலிப்பு அவனது மென்மையான பாகங்களை சீண்டி பிடிவாதத்தில் கரைத்து பிரிவென்னும் பெரு நெருப்பில் தள்ளியது!

வானவில்லாக வந்து போன காதலை நினைத்து மனம் கலங்கினான் வருண்… திரும்ப சௌமினியை மீட்க முடியுமா என்று கலங்கினாலும் கண் முன் வாழ்கையை தொலைத்து நிற்கும் ஆதிரையை எப்படி கரையேற்றுவது என்றும் தவித்து நின்றான்!

ஆதிரையின் வாழ்க்கைக்கு என்ன செய்வது என்று மிகவும் யோசித்தாலும்… பிரிந்து சென்றுவிட்ட காதலி அவனது இதயத்தை பிழிந்து எடுத்து சென்றிருந்தாள்!

சௌமினியின் நிலை… ?

ஆதிரையின் நிலை… ?

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!