CP34

CP34

அத்தியாயம் 34

நீ எனும் நான்

வாசிக்கப்படாமலே இருக்கிறது

நான் என்கிற உன்னால்!

-டைரியிலிருந்து

முகத்தை அழுந்த துடைத்து கொண்டான் கௌதம்… மார்பிலேயே உறங்கியிருந்தான் மகன்… ! ட்ரிப்ஸ் இறங்கி கொண்டிருந்த கைகளை பார்த்த போது அவனுக்கும் வலித்தது… குழந்தையின் வலியை தான் ஏற்று கொள்ள முடிந்தால் போதுமே என்று மனம் கசங்கியது…

நிமிர்ந்து பார்த்தான்… தலைக்கு கையை முட்டு கொடுத்தபடி கண்களை மூடி அமர்ந்திருந்தாள் ஆதிரை… சோர்ந்து போயிருந்தாள்… கண்களை மூடி கொண்டால் உணர்வுகளை திரையிட்டு விட முடியும் என்று யார் இவளுக்கு கற்று கொடுத்தார்களோ என்று மனதுக்குள் திட்டி கொண்டான்…

நிமிடங்கள் மெளனமாக கழிய… நர்ஸ் ட்ரிப்சை தற்காலிகமாக முடித்து ஸ்டேண்டில் மாட்டிவிட்டு சென்றார்… வலியில் பிருத்வியின் முகம் கசங்க… பார்த்து கொண்டிருந்த இருவருக்குமே நடுங்கியது… மருத்துவர் கூறிய புரிந்த மற்றும் புரியாத வார்த்தைகளெல்லாம் நினைவுக்கு வந்து நடுங்க செய்தன!

அறைக்குள் அனைவருமே இருந்தாலும் சங்கடமான மௌனம் சூழ்ந்திருக்க… அதை உடைத்து கொண்டு நுழைந்தாள் சௌமினி! அவளுக்கு பின்னால் கண்களில் கலக்கத்தோடு அபிராமி… அவரை பார்த்து விட்டு உணர்வுகளை துடைத்த முகத்தோடு விசாலாட்சி கணவரை பார்க்க… சிதம்பரமோ அபிராமியை நிமிர்ந்து பார்க்க… அவரையும் அறியாமல் கண்களில் கண்ணீர்…

மற்றவர்கள் பார்ப்பதற்கு முன் தலையை குனிந்து தன்னை சமன்படுத்தி கொண்டார்… அவரது அந்த ஒரு நொடி செய்கை யார் கண்களில் பட்டதோ விசாலாட்சியின் கண்களில் பட்டு சென்றது!

சௌமினியின் முகம் வருணை கண்டதில் இறுகியிருந்தது… முன்தினம் ஓவிய கண்காட்சியில் ஸ்ருதியோடு அவனை கண்டதில் எரிச்சலடைந்து இருந்த மனம் இப்போது பிருத்வியை நினைத்து கலங்கினாலும் வருணை நேரடியாக பார்ப்பதை தவிர்த்தாள்… அவனுக்குமே அவளது நிலை புரிந்து இருந்தது… ஆனால் அவனது சூழ்நிலை வேறு என்பதை அவளுக்கு யார் புரிய வைக்கக்கூடும்?

கடல் கடந்து இருந்தாலும் கண் பாராமல் தவித்திருந்தாலும் சுற்றிலும் எவர் இருந்தாலும் ராமனும் ராமனே! சீதையும் அவனுக்குடையவளே… !

இந்த உண்மையை காலம் உணர்த்த வேண்டியவர்களுக்கு உணர்த்தாமலா போய்விடும்?

வருண் யோசனையாக அமர்ந்திருக்க… படுக்கையில் மகனை தன் மேல் கிடத்தி கொண்டு சாய்ந்து அமர்ந்திருந்தவனை நோக்கி… …

“கௌதம்… ” என்று அழைத்து கொண்டே சௌமினி அருகில் செல்ல… உதட்டை இறுக மூடி தன்னுடைய உணர்வுகளை மறைக்க முயன்றான் கௌதம்!

முடியவில்லை… உதடுகள் துடிக்க…

“சௌமி… ” அவளது கையை பிடித்து இறுக்கி கொண்டான்! அங்கு வந்தது முதல் மருத்துவரிடம் பேசியதை தவிர… முதன் முதலாக வாய் திறந்தது அப்போதுதான்!… மறுபக்கத்தில் கண்களில் நீரோடு நின்ற தன் தாயை பார்த்தவனுக்கு மனதில் சொல்ல முடியாத உணர்வு! ஆனாலும் அப்போது அவனது தாயின் மடி அவனுக்கு தேவை…

உடல் நடுங்க தாயின் கைகளை இறுக்கி பிடித்து கொண்டவனை பார்த்த போது சௌமினிக்கு மனம் தவித்தது… உணர்வுகளை சிறை பிடித்து இருந்தவனின் குணம் அவளுக்கு மொத்தமாக அத்துப்படி!… அவ்வளவு சீக்கிரம் எதையும் வெளிப்படுத்திவிட கூடியவன் அல்ல… ஆனால் இப்போது அவனது தவிப்பையும் உணர்ந்தவளால் என்ன சொல்வது என்று புரியவில்லை… அதே புரியா பார்வையோடு என்னவென்ற தொனியில் வருணை பார்க்க…

கனைத்து கொண்ட வருண்…

“பிருத்விக்கு கன்ஜெனிடல் ஹார்ட் டிசீஸ் செ… சௌமினி… கொஞ்சம் காம்ப்ளிகேடட் சிச்சுவேஷன்ங்கற மாதிரி டாக்டர்ஸ் சொல்றாங்க… ” செமி என்று கூற வந்தவன் சௌமினி என்று மாற்றி கொண்டான் என்பதை அவள் அறிய நியாயமில்லை… நிதானமாகத்தான் கூறினான் என்றாலும் அவனுடைய கண்களிலும் கண்ணீர்… அந்த பிஞ்சின் நிலையை கண்டு…

நண்பனின் மார்பின் மேல் துயில் கொண்டிருந்த அந்த மழலையை உணர்வே இல்லாமல் நோக்கினாள் சௌமினி… பிருத்வியை பூவை போல வாரியெடுத்து தன்னோடு சேர்த்து அணைத்து கொண்ட அபிராமியின் கண்களில் வலி…

சௌமினியின் புருவம் நெரிபட்டு அவளது குழப்பத்தை கூற… என்னவென்று பார்வையால் கேட்டான் வருண்!

“இந்த குழந்தைக்கு இந்த வயசுலையே இதையெல்லாம் அனுபவிக்கனும்ன்னு எழுதிருக்கா?” நினைக்கும் போதே அவளது கண்களிலிருந்து கண்ணீர் உடைப்பெடுக்க பார்க்க…

“சௌமி… ”அவளது கைகளை இறுக்கமாக பிடித்து கொண்டான் கௌதம்… அவனது கண்களிலும் கண்ணீர்… முயன்று அடக்கி கொண்டவனுக்கு கைகள் நடுங்கியது… அவனது நடுக்கத்தை உணர்ந்த சௌமினி அவனது தோளோடு சேர்த்து அணைத்து கொண்டு…

“டேய் கௌஸ்… இதுக்கு போய் யாராச்சும் இப்படி டென்ஷன் ஆவாங்களா? நாம என்ன கற்காலத்துலயா இருக்கோம்? எவ்வளவோ சைன்ஸ் அட்வான்ஸ்மென்ட்ஸ் இருக்குடா… எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்… ”

நொடியில் அவளது கண்ணீரை மறைத்து கொண்டு நண்பனை தேற்ற… அந்த நட்பு எப்போதும் போல வருணை காயப்படுத்தி விட்டு சென்றது… ஆதிரையோ தலையை பிடித்து கொண்டு அமர்ந்திருந்தாள்…

நிமிர்ந்து கௌதமையும் சௌமினியையும் அபிராமியையும் பார்த்தவளுக்கு சௌமினியின் அந்த நெருக்கம் அவளுக்குள்ளும் எதையோ உடைத்து விட்டு சென்றது… இதுவரை ஆறுதலுக்காக யாரையும் தேடாதவன் தாயிடமும் தோழியிடமும் அதை தேடிய விதம் அவளது இதயத்தை கீறியது…

அபிராமிக்கோ பிருத்வியை நினைத்து மனம் வெதும்பினாலும் எதிரே அமர்ந்திருந்த சிதம்பரம் அவரது கோபத்தையும் ஆற்றாமையையும் கிளறி விட்டு கொண்டிருந்தார்… விசாலாட்சி அருகில் இருந்த சிதம்பரத்தை சங்கடமாக பார்த்தவாறு…

“உட்கார் அபி… ”குரலை சமன்படுத்தி கொண்டு கூற… வெறுமையான புன்னகை அபிராமியின் முகத்தில்… அந்த மருத்துவமனை சூழ்நிலை அவரது நினைவுகளை கிளறிவிட்டது…

முதன்முதலாக வாழ்கையில் அவர் பயந்து நடுங்கி வியர்த்து போனது கௌதமை பிரசவிக்கும் போது தான்… தாயின் துணையை இறைவன் எடுத்து கொள்ள… கோபத்தின் உச்சத்தில் இருந்த தந்தையின் துணையுமில்லாமல்… உடன் இருக்க வேண்டிய கணவனின் துணையும் நான்கு சுவர்களுக்குள் மட்டும் தான் என்றான பின் அந்த பிரசவத்தை என்னவென்று சொல்ல?

கொண்டவன் துணிந்தவனாக இருந்தால் எந்த நிலையையும் எதிர்கொண்டு விட முடியும் அவனே கோழையாக இருந்தால்? அந்த நேரத்தில்… அதிகபட்ச வலியின் போதும் கூட உடனிருந்த செவிலிபெண்ணிடம் அவரது ஒரே கேள்வி…

“அவர் வந்துவிட்டாரா?”என்பதை தவிர வேறொன்றும் இல்லையே! அவர் கேட்டது செல்வத்தை அல்லவே! சிதம்பரத்தின் அருகாமை ஒன்றைத்தானே!

பலவீனமான சந்தர்ப்பத்தில் தன்னை தொலைத்த போதும்… அவரது திருமணத்திற்கு சிதம்பரத்தின் தந்தையும் தங்கையும் தடையாக நின்றபோதும்…… தந்தையை எதிர்த்து பேசிவிடாதவராக சிதம்பரம் இருந்துவிட்ட போதும் கூட தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று ஏற்றுகொள்ள முடிந்தது… ஆனால் குமாரசுவாமி குடும்பத்தின் முதல் வாரிசு யாருமற்றவனாக உதித்த போது மனம் வெதும்பியது…

அப்போது சிதம்பரத்திற்கும் விசாலாட்சிக்கும் திருமணம் முடிந்த நேரம்… மகன் பிறந்ததை கேள்வியுற்று தயங்கி தயங்கி சிதம்பரம் வந்தாலும்… அவரது கண்களில் அந்த தயக்கத்தை மீறிய பாசத்தை கண்டார் அபிராமி…

அந்த பாசம் அவரை கட்டிபோட்டது… கோபத்தை துடைத்தது! ஆனால் ஒட்டிகொண்டிருந்த சுயமரியாதை அவரை ஏற்று கொள்ளாமல் சண்டித்தனம் செய்தது… சிதம்பரத்திற்கு தன் மகனை காண்பது ஒன்றே போதுமானதாக இருந்திருக்க… அபிராமியின் மனதை கணக்கிட மறந்துவிட்டார்…

மகன் பத்தாம் வகுப்பு வரும் வரை ஒரு கூரையின் கீழ் வசித்தாரே தவிர… சிதம்பரத்திடம் மனதளவில் நெருங்க முயலவில்லை… அதை தான் என்றோ கொன்று விட்டாரே! அதனாலேயே அவரிடம் தனக்கான உரிமையை வலுகட்டயாமாக கேட்டு பெற முயலவில்லை… அதை சிதம்பரம் அவருக்கான வசதியாக ஏற்று கொண்டதுதான் அபிராமிக்கு இழைக்கப்பட்ட அநீதி!

ஆனால் தனக்கு விதிக்கப்பட்டது இதுதான் என்று ஏற்று கொண்டார்… அதை ஒட்டி வாழவும் பழகி கொண்டார்!அபிராமியின் தேவை கௌதமுக்கு தந்தை!… அந்த பணியை அவர் மனம் உவந்து செய்ததாக அவருக்கு தோன்றியிருந்தது… ஆனால் அவர் இருந்தது முட்டாள்களின் சொர்க்கம் என்பதை சிவகாமி மண்டையில் அடித்து ஒரு நாள் புரிய வைத்தார்!

விசாலாட்சியை அவனது தந்தையின் மனைவி என்றும் உடன் படித்து கொண்டிருந்த வருணை அவனது தந்தையின் மகன் என்றும் அறிமுகப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயம் வந்தது!

வாழ்க்கையின் மிகக்கொடுமையான பக்கங்களாக இருந்தது அந்த நாட்கள்! ஒரு தினம் கௌதம் மொத்தமாக தந்தையை உதறிவிட்டு வந்தான்… அவன் தந்தையென்ற உறவை வேண்டாம் என்ற போது மனம் கண்ணீர் வடித்தாலும் ஏதோ ஒரு மூலையில் அமைதி வந்தது… ஆனாலும் சிதம்பரத்தை என்றுமே முற்றிலுமாக வெறுக்க விலக்க முடிந்ததில்லை… அதற்கு அவரது மனம் ஒப்பியதில்லை!

பொறுமையாக தனக்கு விதிக்கப்பட்டது என்று ஒவ்வொன்றையும் ஏற்று கொண்ட அவரால் தன் மகன் தலைகுனிந்து நின்ற போது பொறுத்து கொள்ள முடியவில்லை… அதிலும் சௌமினியின் வாயிலாக விசாலாட்சியின் ஒரு சில வார்த்தைகளைகேட்டபோது மனம் அனலிட்ட புழுவாக துடித்தது! கேள்வியும் கேட்க வைத்தது!

கௌதமை ஆதிரை வேண்டாமென்று பிடிவாதமாக மறுத்துவிட்ட நிலையில்… மன அழுத்தம் அதிகமான நிலையில் சிதம்பரத்திற்கு இதயம் அதன் அழுத்தத்தை காட்ட… மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்க பட்டிருந்தார்!

உடன் விசாலாட்சி அமர்ந்திருக்க… முகத்தில் எந்த உணர்வையும் காட்டாமல் அபிராமி வந்தார்… அவசர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்தோடு படுத்திருந்த சிதம்பரத்தை பார்க்கையில் அவரது முகத்தில் வேதனை… ஆனாலும் அதை வெளிப்படையாக காட்ட முடியாத துயரம் அவருள்!

மனைவிக்குரிய உரிமை துணைவிக்கு இல்லையே!

அவரது சம்பந்தமே இருக்க கூடாதென்று மகன் உத்தரவிட்டு இருந்தாலும்… அவர் திருமணம் முடிந்தது முதலே அவருடன் தாமரை இலை நீராக மகனுக்காக வாழ்ந்திருந்தாலும்… காதல் கொண்டிருந்த மனம் இன்று வேதனையில் விம்மியது! அருகில் இருந்த விசாலாட்சியை பார்த்து…

“சாலா… காதலே இல்லாத பந்தத்துல இருக்கறதா சொன்னாயாமே… ” நேரடியாக எந்தவித தயக்கமும் இல்லாமல் விசாலாட்சியை கேட்ட அபிராமியின் நிதானமான கேள்வியில் சட்டென்று அதிர்ந்தார்… தலை குனிந்தார்!

உண்மைகள் சுடுமே!

“பந்தத்தை ஏற்படுத்தி கொண்டே ஆகவேண்டுமென்ற சூழ்நிலையில் நடுக்கூடத்தில் கெஞ்சிய என்னை துரத்தி விட்டு உன்னை மணமேடையில் அமர வைத்தது யார் சாலா?” வெளிப்படையாக யாரையும் குறை கூறாமல்… மகன் அனுபவித்த துன்பத்திற்கு முதன் முறையாக விசாலாட்சியை கேள்வி கேட்டார் அபிராமி… ஆனால் அவரிடம் பதில் இருந்தால் தானே?

“நான் அவரை திருமணம் செய்தே ஆக வேண்டிய நிலையில் இருந்தது உனக்கு மட்டும் தானே தெரியும்… கடைசி வரையிலும் கூட எனக்காக என்னிடம் பேசிவிட்டு மணமேடையில் அமர்ந்தது யார் சாலா?”

உணர்வே இல்லாமல் அபிராமி கேட்க… அந்த நாட்களின் நினைவில் விசாலாட்சிக்கு முகம் கசங்கியது… பெற்றவர்களின் அதீத அழுத்தமும் தாய் மாமனின் குடும்ப மரியாதையை நீ தான் காப்பாற்ற வேண்டும் என்ற செண்டிமெண்டல் தாக்குதலும் அவரை அந்த நேரத்தில் நிலை தடுமாற செய்துவிட்டன என்பதை எங்கனம் அபிராமிக்கு விளக்குவது?

திருமணத்துக்கு பின்னரோ ஒவ்வொன்றுமே செண்டிமெண்டல் மிரட்டல்களின் அடிப்படையிலேயே நடந்தது என்பதை கூறினால் எந்த அளவுக்கு கணவருக்கு மரியாதை கிடைக்கும் என்று யோசித்து மௌனமானார் விசாலாட்சி…

“அவர் என்னைத்தான் காதலிக்கிறார் என்று தெரிந்தும்… காதலற்ற வாழ்க்கை மட்டுமே கிடைக்கும் என்ற நிலையில் அதை ஒப்பு கொண்டது எதற்காக சாலா?” முகம் மாறாமல் அபிராமி கேட்க… விசாலாட்சி அவசரமாக சுற்றிலும் பார்த்தார்… அறையில் அவர்கள் மூவர் மட்டுமே… அதிலும் விழித்திருப்பது இருவர் மட்டுமே என்ற நிலையில் அவருக்குள் நிம்மதி விரவியது!

அதை காட்டிலும் வெளியில் யாருமே அறியாமல் அபிராமி மட்டுமே அறிந்த ரகசியம் என்பது ஒன்று உண்டென்றால் அது… விசாலாட்சி சிறு வயது முதலே சிதம்பரத்தின் மேல் கொண்ட காதல்!… விசாலாட்சியின் காதலை அறிந்திருந்த அபிராமி முதலில் மறுக்க… சிதம்பரத்தின் பிடிவாதமான காதல் அவரை அசைத்து பார்த்து விட்டது… விசாலாட்சியோ கானல் நீராகவிருந்த தனது காதலை காப்பாற்றி கொள்ள சந்தர்ப்பம் கிடைத்த போது அதை உபயோகப்படுத்தி கொண்டார் என்பதை அந்த இருவர் மட்டுமே அறிந்திருந்தனர்!

காலத்தின் கைகளில் குற்றம் என்பது சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்ததே! எவருமே முழு நல்லவர்களும் இல்லை… அதே போல தீயவர்களும் இல்லை… ஒவ்வொருவருக்கான நியாயங்களும் நீதிகளும் அவர்களை பொறுத்தவரை சரியே!

குடும்ப மரியாதையை காப்பாற்ற என்று பெரியவர்கள் விசாலாட்சியை நெருக்கியது அவர்களை பொறுத்தவரை சரியாக இருக்கலாம்… ஆனால் ஒருவருக்கு நன்மையாக இருக்கும் ஒரு செயல் இன்னொருவரை அடியோடு பாதிக்கும் என்ற அடிப்படை கோட்பாட்டை அவர்கள் மறந்து விட்டனர்…

விளைவு… சிதம்பரம்,அபிராமி,விசாலாட்சி,சிவகாமி என ஒவ்வொருவருமே விதியின் கைகளில் பொம்மைகளாக… காலம் பொம்மலாட்டத்தை நடத்தி முடித்து விட்டது…

அபிராமி கேட்ட ஒவ்வொரு கேள்வியுமே விசாலாட்சியை குற்ற உணர்வில் தவிக்க விட்டது… மௌனமாகவே கண்களில் நீரோடு நிற்க…

“சாலா அண்ணியை விட்டுடுங்க அபிராமி அண்ணி… தப்புல முக்கால்வாசி என்னோடதுதான்… ” முதுகுக்கு பின் தழுதழுத்த குரல் கேட்க… அதிர்ந்து திரும்பியவர்களின் கண்களில் கண்ணில் நீரோடு நின்றிருந்த சிவகாமி தான் தெரிந்தார்…

“சிவகாமி அண்ணி… ” வாய் திறந்து அழைத்தாலும் குரல் வெளியே வர மறுக்க… சற்று ஆச்சரியமாக அவரை பார்த்து கொண்டிருந்தார் விசாலாட்சி… அதே வியந்த பார்வையோடு அபிராமியும் அவரை பார்க்க… ஏக காலத்தில் இருவரின் பார்வையையும் சந்திக்க முடியாமல் தலை குனிந்தார் சிவகாமி!

“ஆமா அண்ணி… புரியுது… ஆனா என் பொண்ணை வைத்து தான் அதை புரிஞ்சுக்க முடியுதுன்னா… ” என்று தழுதழுத்தவர்…

“ஆதி பாவம் அண்ணி… ” கண்கள் மட்டும் அபிராமியை பார்த்து கொண்டிருக்க… வார்த்தைகள் வலியோடு ஜனித்து கொண்டிருந்ததை அவராலும் உணர முடிந்தது…

ஆனால் அபிராமிக்கே ஒப்புதல் இல்லாத விஷயத்தில் அவரால் கௌதமை ஆதரிக்கவும் முடியவில்லை… அதே போல விட்டு கொடுக்கவும் முடியவில்லை… அன்னைக்காக என்று சதுரங்க வேட்டையாடிய விதமும் முறையும் அவரால் சற்றும் ஜீரணிக்க முடியவில்லை…

“இல்லை சிவகாமி… என் பையன் செய்தது தப்பு… எனக்காகன்னு இந்த மாதிரி அவன் செய்திருக்க கூடாது… ” வார்த்தைகள் மெலிந்து விட… குற்ற உணர்வோடு அவர் கூற…

“அதுக்கு தம்பியை தூண்டி விட்டதே என்னுடைய தவறான வார்த்தைகள் தானே அபிராமி அண்ணி… ஆனா என்னுடைய தப்புக்கு எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுத்து இருக்கலாம்… ” என்று கூறும் போதே குரல் உள்ளே சென்றிருக்க… கண்களில் கண்ணீர் சூழ்ந்தது…

சிவகாமி வார்த்தைகளை யோசிக்காமல் பேசிவிட கூடியவர் தான் ஆனால் ஆதிரையை பொறுத்தமட்டில் மிகச்சிறந்த தாயாக இருக்க விருப்பப்பட்டவர்… முடிந்த அளவு அதை செய்யவும் செய்தவர்… கடுமையும் கட்டுப்பாடும் அளவுக்கு மீறி இருந்தாலும் அதுவும் அவளது நன்மைக்காகத்தானே என்றே நினைத்திருந்தார்… ஆனால் அந்த கடுமையே அவளை தவறுக்கு தூண்டி இருக்குமோ என்ற எண்ணத்தில் மனதால் மிகவும் உடைந்து இருந்தார்!

“நான் யாரையுமே பார்க்க சங்கடப்படவில்லை சிவகாமி… உன்னை தவிர! உன்னை பார்க்க மட்டும் தான் கஷ்டமா இருக்கு… கௌதம் இப்படி செய்துட்டானேன்னு… ” தலையை பிடித்து கொண்டு அவர் அமர்ந்து விட… மிக மிக சங்கடமான மௌனம் சூழ்ந்தது…

நாட்களும் நகர்ந்தது… சிதம்பரம் தேறினார்… சிவகாமி மனதளவில் உடைந்து போயிருந்தார்… வருண் மருத்துவமனையே கதியென்று இருக்க… வள்ளியம்மை நொறுங்கி போயிருந்த ஆதிரையை தேற்றுவதிலேயே இருக்க… பெற்ற கடனுக்கென்று அபிராமியுடன் அந்த ஒரு நாள் மருத்துவமனை பக்கம் தலைகாட்டிய கௌதம்… அதன் பின் வரவே இல்லை…

ஆனாலும் மனதில் ஒரு குற்ற உணர்வு…

இந்த நிலைக்கு காரணம் தானே என்ற குற்ற உணர்வு!

சிதம்பரம் உடல்நிலை தேறி அவரது வீட்டில் வைத்து பேசியது இப்போதும் அபிராமியின் காதுகளில் ஒலித்து கொண்டிருந்தது…

“இதுவரைக்கும் நான் நடந்துகிட்ட முறைக்கு என்னை மன்னிச்சுடு அபி… உனக்கான நியாயத்தை நான் சரியா செய்யலை… ஆனா அதுக்கு தண்டனை என் மருமக அனுபவிக்க வேண்டாம்… ” தலை குனிந்து கொண்டே அவர் கூற… அவர் என்ன கூற வருகிறார் என்று கூர்மையாக பார்த்தான் கௌதம்!

அபிராமியின் முகத்தில் சங்கடம்… தன் மகனின் செயல் அவருக்கு சிறிதும் ஒப்புதல் இல்லாதது… எப்படியாவது இதை சரி செய்ய வேண்டுமே என்ற தவிப்பில் இருந்தாலும் சிதம்பரம் சொல்ல வருவதை மெளனமாக கேட்டு கொண்டிருந்தார்…

“நமக்குள்ள இருக்க உறவுமுறைக்கு தாலி தான் அங்கீகாரம் கொடுக்கணும்ன்னு இருந்தா அதை செய்ய எனக்கு தடையில்லை… ” குற்ற உணர்வோடு அவர் கூற… சரேலென நிமிர்ந்தார் அபிராமி!

“கட்டாயத்துனால எனக்கு நீங்க தாலி கட்ட வேண்டாம்… எனக்கும் சுயமரியாதை இருக்கு… கௌதமுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் நடக்க நான் தடையா இருக்க மாட்டேன்… ” என்று முடித்து விட…

“ஏன் உங்களுக்கு மட்டும் தான் சுயமரியாதை இருக்குமா?” சப்தம் வந்த திசையை நோக்கி பார்க்க… நின்று கொண்டிருந்தது ஆதிரை!

“ஆதி கொஞ்சம் பேசாம இரு… ” சிவகாமி திடுக்கிட்டு அவளை அடக்க பார்க்க…

“இல்லம்மா… இப்போ நான் பேசியே ஆகனும்… ” தாயை பார்த்து தீர்க்கமாக கூறியவள் அபிராமியை பார்த்து…

“நம்பினேன்… கடைசி வரைக்கும் நம்பினேன்… பைத்தியமா இருந்தேன்… அவன் எதை சொன்னாலும் கேள்வியே கேட்காமல் செய்தேன்… ஆனா… உங்க மகன் எனக்கு செய்தது துரோகம்… ” குரல் தழுதழுத்து தேய பார்க்க… அவளது வார்த்தைகள் அவளையே கூர்ந்து பார்த்து கொண்டிருந்த கௌதமை சல்லடை கண்களாக துளைத்தன…

ஆதிரைக்கோ ஆத்திரம் பொங்கியது… கௌதமையும் சிதம்பரத்தை ஒரு சேர பார்த்து கொண்டே…

“இப்படி செய்ததுக்கு பேசாம என்னை கொன்று போட்டிருக்கலாமே… என் மாமா ஒரு முதுகெலும்பு இல்லாத துரோகி… அவரை போலவே இவனும் ஒரு… ” என்று இடைவெளி விட்டு கௌதமை அதே ஆத்திரத்தோடு பார்த்தவள்…

“பச்சை துரோகி… ”என்று முடிக்க…

அந்த வார்த்தை கௌதமின் கோபத்தை கிளறி விட்டது… ஆட்டத்தை ஆரம்பித்ததே அவன் தான் என்பதை மறந்தான்… வேகமாக அவளை நோக்கி வந்தவன்… அவளை வலுகட்டாயமாக தன் புறம் திருப்பி…

“நான் என்னடி துரோகம் செய்துட்டேன் உனக்கு? விட்டா பேசிட்டே போற?” கோபத்தில் பற்களை கடித்து கொண்டு கேட்க… அவனை ஆழமாக பார்த்தாள் ஆதிரை!

“முதல்ல ஒன்றை புரிஞ்சுக்கோ… நான் என்றைக்கும் உன் பின்னால சுத்தலை… லவ் பண்றேன் லவ் பண்றேன்னு… ”என்று இடைவெளி விட்டவன்…

“டார்ச்சர் பண்ணலை… ”என்று கூறிக்கொண்டே போக… ஆதிரையின் முகத்தில் அடிபட்ட வலி… வாழ்கையில் அனைத்தும் முடிந்துவிட்ட வலி!

“நான் தான் தானா உன் வலைல விழுந்தேன்… அந்த அளவு ஏமாளியா இருந்திருக்கேனே… ”கண்களில் கண்ணீர் சூழ பார்க்க… அவனுக்கு முன் தன் கண்களில் கண்ணீரை காட்ட கூடாது என்ற முடிவில் இருந்தவள் வேறு புறம் திரும்பி கண்ணீரை மறைத்து கொள்ள… மீண்டும் அவளது முகத்தை வலுகட்டாயமாக திருப்பினான் கௌதம்…

“நான் என்ன ஏமாற்றினேன் ஆதி? உன்னை கல்யாணம் செய்துக்க மாட்டேன்னு சொன்னேனா… ஐ ஆம் ரெடி பார் தி மேரேஜ்… பட் என் அம்மாவுக்கு நியாயம் செய்யனும்… அதை மட்டும் தானே கேட்கறேன்… ”

தாயை பற்றிய எண்ணப்போக்கில் இருந்தவன் முழுமையாக ஆதிரையின் மனதை படிக்க மறந்து இருந்தான்… இது விட்டேத்தியான பதிலாக அவளுக்கு தோன்றியதுதான் உண்மை! மறுக்கும் உரிமை தனக்கு மட்டுமே என்று சிறுபிள்ளைத்தனமாக கணக்கிட்டது அவளது மனது… அதை உரைக்கவும் செய்தாள்!

“இவ்வளவுக்கு அப்புறமும் மேரேஜா? ஷிட்… நீ தேவையில்லைன்னு நான் சொல்லிட்டேன்… ”என்று மீண்டும் முகத்தை திருப்ப முயல… அவன் இரும்புக்கரம் கொண்டு முகத்தை பிடிவாதமாக திருப்பியதில் தாடை வலித்தது!

“என்னை வேண்டாம்ன்னு சொல்லிட்டு என்ன செய்ய போற? வேறே எவனையாவது கல்யாணம் செய்துக்கலாம்ன்னு நினைக்கிறியா?”கூர்மையாக அவளது விழிகளை பார்த்து கேட்டவனின் தொனியில் ஆதிரையின் கோபம் கிளரிவிடப்பட்டு கொண்டிருந்தது…

“ஏன் பண்ணிக்கிட்டா என்ன தப்பு? உன்னையே நினைச்சுக்கிட்டு உருகிட்டு இப்படியே நின்றுவிடுவேன்னு நினைத்தாயா?”சற்று கேலியாக அவள் கேட்க… அவளை பிடித்திருந்த அவனது கைகள் தளர்ந்தது…

கௌதம் மனதளவில் மட்டும் அல்ல அனைத்து விதத்திலும் அவளை மனைவியாகவே நினைத்திருக்க அவளது வார்த்தைகள் அவனை கொன்று தின்ன துவங்கி இருந்தன!இதுவரைக்குமே அவனது காதலை,உணர்வுகளை அவனது மனதினுள் மறைத்து வைத்திருந்தானே தவிர ஒரு வார்த்தையும் அவளிடம் கூறவில்லை என்பதை அவன் உணரவே இல்லை…

தன்னை போல அவள் தன்னை நினைக்கவில்லை என்பதை மட்டுமே அவனது மனது உணர துவங்கி இருந்தது… அந்த காந்தல் அவனது பேச்சிலும் வெளிப்பட… உறவு ஒட்டாத நிலையை நோக்கி வேகமாக போய் கொண்டிருந்தது!அவளை தள்ளிவிட்டு…

“போ… போய் எவனையோ கட்டிக்கோ… உனக்கெல்லாம்… ”என்று ஆரம்பித்தவன் சுற்றிலும் இருந்தவர்களை பார்த்து அடுத்து கூற வந்த வார்த்தைகளை விழுங்கி கொண்டிருந்தான்… ஆனாலும் அவன் கூற வந்த வார்த்தைகளை ஒவ்வொருவருமே உணர்ந்தனர்… ஆதிரை உட்பட! அந்த வளராத பெண்ணின் மனம் ரத்தத்தில் குளித்து எழுந்தது!

அவளை தள்ளி நிறுத்தியவன் வெளியே செல்ல எத்தனிக்க… சிவகாமி அபிராமியிடம் பேசிய வார்த்தைகளை கேட்டு நின்றான்…

“அபிராமி அண்ணி… நான் உங்களுக்கு செய்த தப்பை நான் திருத்திக்க நினைக்கறேன்… ஆதி தான் புரியாம பேசறா… கௌதம் வார்த்தைய விட வேண்டாம் அண்ணி… ”

கிட்டத்தட்ட கெஞ்சும் நிலையிலிருந்த சிவகாமியின் வார்த்தைகள் அவனது வேகத்தை குறைத்தது… ஆனால் அதே வார்த்தைகள் ஆதிரையின் கோபத்தை தூண்டி விட்டன… தன்னால் தன்னுடைய தாய் இந்த நிலையில் கெஞ்சுகிறாரே என்கிற கோபத்தில்…

“அம்மா… ப்ளீஸ்… ”கோபமாக கூறியவள்… வேகமாக மறுத்து பேச முயன்ற அன்னையை,

“ம்மா… இது வரைக்கும் உன்னோட பேச்சை நான் மீறினது இல்லை… முதன் முதலா உனக்கு தெரியாம நான் தேட நினைத்த வாழ்க்கை… ”

குரல் தேய்ந்து தழுதழுத்தது… மகளது மனக்குமுறல் சிவகாமிக்கு புரிந்தாலும் பிரச்சனைகளின் ஆணிவேராகி விட்ட தன்னை நொந்து கொள்ள மட்டுமே முடிந்தது அவரால்…

பெற்றவர்கள் செய்த வினை பிள்ளைகளை சேருமடி என்ற சித்தர் வாக்கு அவரது நினைவுக்கு வந்தது… இதற்கும் மேல் தான் பேசி பிரச்சனைகளை பெரிதாக்குவதை விட நீரோடு செல்கின்ற ஓடம் போல வாழ்க்கை எதை நோக்கி போகிறதோ அதை ஏற்று கொள்வதே நல்லது என்ற முடிவுக்கு வந்திருந்தார்…

முடிவாக ஒரு முடிவுக்கு வந்தவர் தீர்க்கமாக ஆதியை பார்த்து விட்டு…

“இனி முடிவு ரெண்டு பேர் கைல தான் அபிராமி அண்ணி… கடவுள் தான் துணை… ” கண்களில் நீர் கோர்க்க கூறியவர் கௌதமை திரும்பியும் பார்க்காமல் தலையை பிடித்து கொண்டு அமர்ந்த கோலம் அப்போதும் நினைவுக்கு வந்து மனதை வலிக்க செய்தது கௌதமை பெற்றவருக்கு!

“நாங்க செய்த தவறை எல்லாம் நினைத்து கொண்டு நீ வாழ்க்கையை தொலைத்து விடாதே கௌதம்… அப்பாவுடைய காலமோ என்னுடைய காலமோ அபியுடைய காலமோ அனைத்துமே இனி சிறிது காலம் தான்… ஆனால் உன் வாழ்க்கை அப்படி அல்ல… இனிதான் உனது வாழ்க்கையை நீ வாழ வேண்டும்… என்றைக்கிருந்தாலும் நீ என் மூத்த மகன் தான்… ஆதி என்னுடைய மூத்த மருமகள் தான்… ”

விசாலாட்சி இறுதி வார்த்தைகளாக அதில் நின்று விட்டார்…

முன் ஜென்மமாக தோன்றிய நினைவுகளில் ஆழ்ந்திருந்தவர் நிமிர்ந்து விசாலாட்சியை பார்த்தார்… அவரது கண்கள் எதையோ கூற விழைந்தது… இந்த முடிவே இல்லாத கேள்விகளுக்கு யார் முற்றுப்புள்ளி வைப்பது என்று மனதுக்குள் ஆயாசம் எழுந்தது…

நடுங்கிய கைகளை கோர்த்து கொண்டு சௌமினி கௌதமை சமாதானம் செய்து கொண்டிருக்க… பிருத்வி அவனது நெஞ்சில் சுகமாக துயில் கொண்டிருந்தான்… எந்த கவலையும் இல்லாமல்!

அதை பார்த்து கொண்டிருந்த வருணின் முகத்தில் புன்னகை… !

error: Content is protected !!