cp38

cp38

அத்தியாயம் 38

கல்லெறிந்து

விளையாடிய குளமின்று

நீரற்று கிடக்கிறது

நீயற்ற நான் போல!

-டைரியிலிருந்து

அந்த கான்பரன்ஸ் ஹால் நிரம்பியிருந்தது… வருடாந்திர சந்திப்பு என்ற அளவில் மட்டுமே முன்தினம் கௌதம் கூறியிருந்ததால் இந்த அளவு கூட்டத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை… ஒருவேளை வருடாந்திர ஷேர் ஹோல்டர்ஸ் ரீவியு மீட்டிங் என்பதே இப்படி தான் இருக்குமா? அப்படியா?

மனதில் பலப்பல கேள்விகளும் துணை கேள்விகளுமாக முளைத்து கொண்டிருக்க… அதற்கு விடை தெரியாமல் மகேஷை விழியால் சல்லடை போட்டு தேடி கொண்டிருந்தாள்… நேராக சென்று கௌதமிடம் கேட்கவும் அவளுக்கு விருப்பமில்லை… முன் தினம் அவளிடம் வம்பளத்து சென்றவனை பார்த்தால் குதறும் வெறியில் இருந்தாள் ஆதிரை…

அதிலும் உடை பற்றி வேறு அவன் கூறி சென்றது அவளை கடுப்பில் ஆழ்த்த, அதற்காகவே இன்று ஜ்வெல் நெக்லைன் புல் ஸ்லீவ் சல்வார் கமீஸை அணிந்திருந்தாள்… எங்கும் ஒரு இடைவெளியும் தெரிந்து விடக்கூடாது என்று கவனமாக இருந்ததே அவளது அழகை எடுத்து காட்டி கொண்டிருந்ததை அவள் உணரவில்லை!

முதல் நாள் வலுகட்டாயமாக மகனை தன்னோடு அழைத்து சென்று விட்டவன், காலையில் பள்ளிக்கும் அவனே அழைத்து கொண்டு போய்விட்டு வீட்டிற்கு தகவலை மட்டும் தெரிவித்திருக்கிறான்… அவனது செய்கை அவளை பொறுத்தவரை எதிர்பார்த்தது தான் ஆனால் அதற்கான தம் வீட்டினரின் எதிரொலி தான் அவளது எரிச்சலை தூண்டி விட்டுவிட்டது…

விசாலாட்சி புன்னகையோடு சரியென்று விட, வருண் அதற்கும் மேலே போய்,

“குட்டி பையன் சமர்த்தா இருந்துட்டானாடா?” என்று வேறு உரிமையாக கேட்டு வைக்க… வேறொரு பக்கம் இருந்து வந்த கேள்வியில் அதிர்ந்து பார்த்தாள்…

“சாப்பிட படுத்தினானா மாப்பிள்ளை?”

சிவகாமி கௌதமிடம் செல்பேசியில் கேட்டு கொண்டிருந்தார்…

அதற்கு அந்த பக்கமிருந்து என்ன பதில் வந்ததோ , அவர் வாய்விட்டு சிரிக்க… விசாலாட்சி என்னவென்று கேட்டார்!

“என்ன அண்ணி? உங்க பேரன் என்ன சொல்றானாம்?”

“அபி அண்ணி ஊட்டிவிட்டாத்தான் டேஸ்டா இருக்குன்னு சொல்றானாம்!”

“இங்க இருந்தா நம்மளை ஐஸ் வைத்து காரியத்தை சாதித்து கொள்வான்..இப்போ அபியை ஐஸ் பிடிச்சுட்டானா?” பெருமையாக கூறியவர்… அமர்ந்திருந்த ஆதிரையை பார்த்து…

“உன் பையன் பொழச்சுக்குவான் ஆதி… ” என்று சிரிக்க,

“இவளும் ஐஸ் பிடிச்சுத்தானே காலேஜ் வரைக்குமே உங்க கிட்ட ஊட்டிக்குவா… அந்த வால்த்தனம் இவ பையனுக்கு இல்லாம போய்டுமா?” சிவகாமி பேரனோடு சேர்த்து மகளையும் கிண்டல் செய்ய…

“சரியா சொன்னீங்க அண்ணி… ” என்று இருவரும் கூட்டு சேர்ந்து கொள்ள… அவளுக்கு தான் அங்கிருப்பது அனல் மேல் இருப்பது போலிருந்தது!

இவர்களுக்கு எந்த கோபமும் இல்லையா? தன்னை நினைத்து, கௌதமை நினைத்து , வீணாகி போன வாழ்க்கையை நினைத்து என எந்த கவலையும் இல்லையா?

ஆனால் லண்டனில் இருந்தவரை சிவகாமி அவளிடம் இந்த அளவிற்கு அவளிடம் சிரித்து பேசியதில்லை… மகளின் வாழக்கையை நினைத்து கவலையிலேயே இருப்பார்… அதனாலேயே இனியும் தனியாக இருக்க வேண்டாம் என்று சென்னை வர அவள் ஒப்பு கொண்டதே!

இங்கு வந்த பின் சற்று மாறிய அவரின் முகத்தில் இப்போது வெகுவான நிம்மதி படர்ந்திருந்தது…

“ஏன்மா உனக்கு கோபமே இல்லையா?” நேராக அவரிடம் கேட்க

“எதை நினைத்து ஆதி?”

“அவனை ரொம்ப ஈசியா ஏற்று கொண்டீங்க… இப்போது கூட அவனிடம் சிரித்து பேசறீங்க… எப்படிம்மா இப்படி மாறி போனீங்க?”

“முதலில் யார் அவன் ஆதி?” இறுக்கமான முகத்தோடு கேட்க

“அவன் தான் கௌதம்… ” கசப்பாக கூறியவளை முறைத்தார்…

“முதலில் மரியாதையாக பேசு ஆதி… எப்படி இருந்தாலும் அவர் என்னுடைய மாப்பிள்ளை… ” கடுப்பாக கூற…

“அதை தான் கேட்க்கிறேன்… எப்படி உங்களால் அத்தனையும் ஜீரணித்து கொண்டு பேச முடிகிறது?”

“அவருடைய அம்மாவிற்கு நான் செய்த அநியாயங்களை எல்லாம் அவர் ஜீரணித்து கொண்டு அத்தை என்று பாசமாக அழைக்கும் போது எனக்கு மட்டும் என்னம்மா? அதுவுமில்லாமல் அவரை போன்ற ஒரு மாப்பிள்ளையை யாருக்கு பிடிக்காமல் போகும்?”

“ஆனாலும் அவர் எனக்கு செய்தது அநியாயம் இல்லையா? என் விஷயத்தில் அவர் குற்றவாளி இல்லையா?” ஆதங்கமாக அவள் கேட்க…

“அவர் குற்றவாளி என்றால் நீ மட்டும் என்ன? என்னுடைய பார்வையில் இருவரும் ஒன்றுதானே… ஆனால் குற்றம் பார்த்தால் சுற்றம் இல்லை கண்ணா… ” அவளை ஆதரவாக அணைத்து கொண்டு அவர் கூற… அருகில் வந்தமர்ந்த விசாலாட்சியோ,

“ஆதிம்மா… அவன் எனக்கு மூத்த பிள்ளை… சிறு வயது முதலே சாலாம்மா என்று என்னையே சுற்றி வந்து நான் கேட்க வேண்டிய கேள்விகளை கூட அவன் கேட்டு, எனக்காகவும் பார்த்தவன் கண்ணம்மா… அவனது போராட்டம் அபிக்காக மட்டும் இல்லை… எனக்காகவும் தான்… அவனை போய் நாங்கள் எப்படி வெறுக்க முடியும்? என்னை கேட்டால் அவன் ஆசைப்பட்டிருந்தால் நானே திருமணம் செய்து வைத்திருப்பேன்… ஆனால் அவன் கேட்டது அபிக்கு அங்கீகாரம் தானே? ஒரு நல்ல பிள்ளை அதை தானே செய்வான்?”

நீளமாக தன் மகனுக்காக வாதாடிய விசாலாட்சியை வியப்பாக பார்த்தாள்…

“உங்களை நினைத்தால் எனக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது அத்தை… உங்களுடைய வாழ்க்கையை பங்கு போட்டு கொண்டவர்களிடம் உங்களுக்கு இருக்கும் அன்பு நிஜமாகவே என்னை ஆச்சரியப்படுத்துகின்றது… ” உணர்ந்து கூறியவளை பார்த்து கசப்பாக புன்னகைத்தார்.

“என்னுடைய வாழக்கையை அவள் பங்கு போட்டு கொள்ளவில்லை ஆதி… அவளுடைய வாழ்க்கையை நான் பறித்து கொண்டேன்… குடும்ப கௌரவத்தின் பெயரால் அவளுக்கு நடந்த அநியாயத்தில் பல, நானும் அவளும் மட்டுமே அறிந்தவை… இப்போதும் எனக்கு இருக்கும் குற்ற உணர்ச்சியை பற்றி உனக்கு தெரியாதுடா… ” என்று இடைவெளி விட்டவர்…

“கௌதம் கடைபிடித்த வழி வேண்டுமானால் விமர்சனத்துக்கு உரியதாக இருக்கலாம்… ஆனால் அவனது எண்ணம் சற்றும் மாசில்லாதது… அப்போதும் அவன் நினைத்தது ஒன்று விதிவசத்தால் நடந்தது ஒன்று என்று இருக்கலாமே தவிர கௌதம் இப்படி செய்பவனே அல்ல… அவன் என் மகன்… .மூத்த மகன்… அபி வளர்த்த பிள்ளை தவறாக மாட்டான்… .” உறுதியான அவரது வார்த்தைகள் அவளை கேள்வியில் ஆழ்த்தின…

எங்கே நடந்தது தவறு?

ஆனாலும் உள்ளே கோபம் கனன்றது… என்ன இருந்தாலும் அவர்களுடைய குடும்பம் தனி என்று நிருபித்து விட்டார்களே என்று வலித்தது… தனித்து விடப்பட்ட அந்த சூழல் அவளை மேலும் அழுத்த மேலும் அத்தையிடம் முகம் கொடுத்து பேசாமல் கிளம்பிவிட்டாள்… மகனை பார்க்க முடியாத ஆற்றாமை வேறு!

அலுவலகம் வந்தபோது அந்த சூழலே பரபரப்பாக இருந்தது…

மகேஷ் வந்தவர்களுக்கு உபசாரம் செய்வதில் சுழன்று கொண்டிருக்க,அவளுக்கு என்ன வேலை என்பதை யாரும் அவளிடம் கூறவே இல்லை… ஏதாவது செய்ய சொல்லியிருந்தாலாவது உருட்டி கொண்டிருக்கலாம் ஆனால் எதுவுமில்லாத போது குழப்பமாக இருந்தது ,… எதிலும் ஒட்ட மனம் இல்லாமல் ஓரமாக அமர்ந்து இருந்தவளின் பார்வை வட்டத்தில் விழுந்தான் கௌதம்!

ஆதிரை கல்கியின் தீவிர விசிறி… அதிலும் சிவகாமியின் சபதம் அவளை மிகவும் கவர்ந்த புதினம்… ஒவ்வொரு முறை படிக்கும் போதும் அது புதியதாகவே தோன்றும்… அவள் கண் முன் விரியும் கற்பனை காட்சியில் சிவகாமியின் காதல் தலைவன் நரசிம்மவர்ம பல்லவனின் உருவம் கம்பீரமாக கௌதமை போன்றே தோன்றியிருக்கிறது ஒரு காலத்தில்!

அந்த நினைவு சட்டென மனதை கவ்வ, வசீகரமான திராவிட சிற்பமாக ஒவ்வொரிடமும் பேசிக்கொண்டிருந்தவனை அவளையும் அறியாமல் பார்த்து கொண்டே அமர்ந்திருந்தாள்…

அவளுடைய நிலையும் சிவகாமியை போலத்தானே! அவள் கொண்ட காதலும் கைக்கூடவில்லை… அதை போலவே இவளது காதலும் துரோகத்தினால் குற்றுயிராகிவிட்டிருக்கிறது… சிவகாமியை நினைக்கும் போது தோன்றும் பரிதாப உணர்வு இப்போது தன் மேலேயே தோன்றியது!

இவர்கள் பாவப்பட்டவர்கள்!

ஆண்களின் அதிகார வெறியும் கடமை வெறியும் அவர்களது பெண்களை குற்றுயிராக்கி எரிப்பதையும் இவர்கள் உணராதவர்கள் என்று மனம் வலி கொண்டது…

ஏதேதோ எண்ணங்கள் சூழ அமர்ந்திருந்தவளை அழைத்தான் கௌதம்…

“ஆதி… கம் ஹியர்… ”

அவனுக்கு அருகில் உள்ள இருக்கையை கை காட்டி அமர சொன்னவன், மடித்து விடப்பட்டு இருந்த அவனது முழுக்கை சட்டையை இழுத்து விட்டு கொண்டு அவன் யாரையோ வரவேற்க, நிமிர்ந்து பார்த்தாள்!

கௌதமுக்கு மறுபுறத்தில் வருண்! முகத்தில் முறுவல் மின்ன கௌதம் அவனை வரவேற்க, அதே சந்தோஷம் வருணின் முகத்திலும்!

வருண் வந்தபிறகு யானை பலம் வந்தது போல தோன்றினாலும், அவனது வருகை அவளை குழப்பியது!

கூட்டத்தில் சலசலப்பு எழுந்தது!

எட்டாவது உலக அதிசயம் அல்லவா இப்போது நடந்து கொண்டிருப்பது! தொழில்துறையில் எதிர் எதிராக நின்று கொண்டு விரோதிகளாக பார்க்கபட்டவர்களை ஒன்றாக ஒரே இடத்தில் யாருமே எதிர்பார்க்கவில்லை!

சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்திருக்க முடியுமா?

இருவருமே அதீத புத்திசாலிகள்! திறமையான வியாபாரிகள்! ஆனால் இதுவரை எதிரெதிராக இருந்தவர்கள்… இருவரின் உறவுமுறையும் கூட வெளியில் அவ்வளவாக தெரிந்ததில்லை… ஆனால் இப்போது அத்தனை தளைகளையும் உடைத்து கொண்டு ஒன்றாக, அதிலும் உள்ளன்போடு, அமர்ந்திருந்த காட்சி போர்ட் ஆட்களையே பரவசப்படுத்தியது என்றால் ஆதிரையின் மனம் சொல்ல முடியாத திருப்தியில் இருந்தது!

தன் மகன் பொருட்டு நடந்த இந்த மாற்றம் அவளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது!

இந்த மாற்றம் இருவரின் நிறுவனத்தின் மதிப்பையும் எந்தளவுக்கு மேல் கொண்டு செல்லும் என்பதை அறியாமல் இல்லை அங்கிருந்த ஒவ்வொருவரும்… அதன் பிரதிபலிப்பு ஒவ்வொருவரின் முகத்திலும்!

உள்ளுக்குள் கேள்விகள் உறுத்தி கொண்டிருந்தாலும் நடப்பதை உன்னிப்பாக கவனித்து கொண்டிருந்தாள்…

வெகு தீவிர கலந்துரையாடல் துவங்கியது…

சிறிய முகவுரைக்கு பிறகு கம்பெனி இயக்குனர்கள் சுழற்சி பதவியேற்பு குறித்தான அறிவிப்பை கம்பெனி செக்ரட்டரி படிக்க , ஆதிரை அதிர்ந்து மற்ற இருவரையும் பார்த்தாள்!

“Mrs.Aathirai Gowtham Kumaraswamy is appointed as executive director and inducted into the board w.e.from 1st august… ”

அவளது பதவி குறித்தான அறிவிப்பு ஒரு புறம் அவளை புயலென தாக்கியது என்றால் , அதற்கான அவளை குறித்த விளிப்பு அவளை சூறாவளியாக சுழற்றியது!

திருமதி ஆதிரை கௌதம் குமாரசுவாமி!

எத்தனை எத்தனை கேள்விகளையும் வேள்விகளையும் உள்ளடக்கியது இந்த விளிப்பு!

எத்தனையோ ஏமாற்றங்கள், தோல்விகள், வேதனைகள், பழிவாங்குதல்கள் ,சோதனைகள் ,கோபங்கள் ,பிரிவுகள் என அனைத்தையும் வெற்றி கொண்ட வாக்கியமல்லவா அது!

தலை குனிந்து அமர்ந்திருந்த ஆதிரையின் கண்களில் சிறு துளி கண்ணீர்… கதறி அழ வேண்டும் என்று தோன்றியது! அவள் முன் அமர்ந்து இருந்த அத்தனை பேரையும் கணக்கில் கொண்டு அவளது உணர்வை ஜீரணித்தாள்!

இந்த அங்கீகாரம் தானாக கிடைத்து இருக்கபோவதில்லை… அதிலும் ஜிகேவாக இருந்தவனை கௌதம் குமாரசுவாமியாக வருண் எதிரில் கூறுவது? கௌதமின் போராட்டம் இதற்காகத்தானே!

நிமிர்ந்து இருவரையும் பார்த்தாள்… வருண் மனமார புன்னகைத்தபடி கை தட்டி கொண்டிருந்தான்…

ஆதிரையை கண்விலக்காமல் பார்த்து கொண்டிருந்த கௌதமின் முகத்தில் அவளால் கண்டுகொள்ளமுடியாத ஏதோவொரு உணர்வு! அந்த நிமிடம் அவளுள் உறைந்து நின்றது! அவனது கூர்மையான சுழற்றிகொள்ளும் பார்வையை எதிர்நோக்க முடியாமல் தழைத்து கொண்டாள்…

அவளையும் மறந்து அமர்ந்து இருந்தவளின் காதுகள் கூடியிருந்தோரின் கைதட்டல்களை மென்மையாக உணர…

அவளையும் மீறி கைகள் நடுங்கியது…

அந்த வாக்கியத்தை அங்கீகரிப்பதா அல்லது வேண்டாமா?

இத்தனை பேர் முன்னிலையில் எதையும் மறுக்க முடியாதே!

ஆனால் அனைத்தையும் மறந்துவிட்டு ஏற்க முடியுமா?

அருகில் அமர்ந்திருந்த கௌதம் அவளது கையை மென்மையாக பற்றினான்! அவளது விரல்களோடு அவனது விரல்களை கோர்த்து மென்மையாக இறுக்க , அந்த மென்மை அவளது நடுக்கத்தை குறைத்தது…

ஒவ்வொருவர் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கூற முடியவில்லை என்று அன்று வீட்டினரிடம் வெடித்தது அவளது நினைவுக்கு வந்தது! இனி பதில் கூற வேண்டிய அவசியமே இல்லாமல் செய்துவிட்டானே!

அவளது மனம் போகும் திசையை எண்ணி திடுக்கிட்டாள் ஆதிரை!

அப்படியென்றால் அவனது துரோகங்களை கூட மன்னிக்க சொல்கின்றதா இந்த மனது? நெகிழ்ந்த மனதை மீண்டும் இழுத்து பிடிக்க நினைத்தாள்… ஆனால் அதற்கு வாய்ப்பே இல்லாதபடி கௌதம் அவளது கைகளை இறுக்கி சைகை காட்ட , ஆதிரை விழித்து கொண்டவளாக எழுந்து கைகளை கூப்பி வணக்கம் கூறினாள்!

அதன் பின் நடந்தவற்றை எல்லாம் வேறொரு உலகத்தில் சஞ்சரித்தபடி பார்த்துகொண்டிருந்தவளை கட்டாயமாக தரையிறக்கினான் கௌதம்!

சந்திப்பெல்லாம் சுமுகமாக முடிந்து, மதிய உணவையும் அவர்களோடே முடித்து கொண்டு அவனது அறையில் இருந்த சோபாவில் சரிந்தவனை பூரித்த முகத்தோடு எதிர்கொண்டான் வருண்.

இவர்கள் இருவருக்குமிடையில் என்னதான் நடக்கிறது? மூடு மந்திரமாக இருந்தவர்கள் அவளுக்கு மிகுந்த குழப்பத்தை கொடுத்தனர்…

நெரித்த புருவங்களோடு முறைத்து கொண்டிருந்தவளை பார்த்து மனம் நிறைய புன்னகைத்தான் வருண், அதற்கான பிரதிபலிப்பு அவளிடம் இல்லாத இல்லாத போதும்!

“ஏதாவது ரிப்லக்ஷன் தெரியுதா?

கௌதமிடம் குனிந்து வருண் கிசுகிசுப்பாக கேட்க, உதட்டை பிதுக்கினான் அவன்! ஒரு வார்த்தையும் பேசாமல் மௌனமாகவே இருப்பவளின் மனதை எதை கொண்டு அளப்பது? பார்த்தவரையில் எந்த எதிர்ப்புணர்வையும் அவன் பார்க்கவில்லை என்றாலும் அவள் ஆதரிக்கவும் இல்லையே!

“சரி விட்டு பிடி… ” என்று கிசுகிசுத்தவனை முறைத்தாள் ஆதிரை… தான் உடன் அமர்ந்து இருக்கும் போது இருவருக்கும் மட்டும் என்ன ரகசியம் வேண்டி இருக்கிறது? அதிலும் தன்னை பார்த்து கொண்டே!

“சரி… அந்த டாகுமெண்ட்டை லீகலாக்கிட்டியா?” கேட்பதை மொட்டையாக வருண் கேட்டு வைக்க… கௌதமும் அதை புரிந்து கொண்டு,

“ஆச்சுடா… அதை முடித்து கொண்டு தானே இந்த போர்ட் மீட்டிங் அரேஞ்ச் செய்தேன்… ” நெட்டி முறித்தபடி சோர்வாக கூறினாலும் முகத்தில் வெளிச்ச கீற்று!

இவன் எந்த சொத்தை பற்றி கூறுகிறான் என்று யோசித்தபோது தான் புலப்பட்டது… வருமானவரி அதிகாரிகளிடம் சிக்கி கொண்ட அவள் பெயரிலான சொத்து!

பின் மண்டையில் யாரோ படாரென்று அடித்த உணர்வு!

ஆக இதற்காகத்தானா இந்த நாடகம்?

மனதுக்குள் ஏமாற்றம் அலையடித்தது!

“எந்த சொத்து பற்றிய பேச்சு வருண் மாமா?” குழப்பத்தை தெளிவுப்படுத்தி கொள்ள அவள் வருணை நோக்கி கேட்க, அவனை கையமர்த்திய கௌதம் அவனுக்கு அப்போதிருந்த நல்ல மனநிலையில் ,குறும்பு புன்னகையோடு,

“எதை பற்றி பேசிட்டு இருக்கோம்ன்னு நீ நினைக்கற?” கிண்டலாக கேட்க, ஆதிரைக்கு உள்ளுக்குள் சுருக்கென்றது.

“நான் உங்க கிட்ட கேட்கலை… ”

“ஆனா கேட்டது என்னோட ப்ராபர்ட்டி பற்றி தானே… ” அலட்டாமல் கூற,

“நான் என்னுடையதை பற்றி கேட்டேன்… ” முகத்தை திருப்பி கொண்டு அவள் கடிக்க , அதையெல்லாம் கண்டு கொள்ளாத கௌதம்…

“ம்ம்ம்… நீ யாருடைய ப்ராபர்ட்டி?” கள்ள சிரிப்பு உதட்டோரம் வழிய, கண்களில் குறும்பு மின்ன கேட்டவனை பார்வையால் எரித்தாள் ஆதிரை!

“ப்ராபர்ட்டியா… ? ஹவ் டேர்? நான் என்ன உயிரில்லாத ஜடமா? உங்க இஷ்டத்துக்கு விளையாட? உங்க அப்பா வீட்டோட சண்டை இருந்தா என்னை தூண்டிலா யூஸ் பண்ணி அவங்களை மிரட்டுவீங்க… இப்போ எல்லாரும் ஒண்ணா சேர்ந்துட்ட திமிரா? என்னைக்குமே உங்களோட இந்த புத்தி மாறாதே!” முகம் சிவக்க இத்தனை நாட்கள் தேக்கி வைத்த கோபத்தை எல்லாம் அவனிடம் கொட்ட துவங்கினாள்!

இவ்வளவு நேரம் ததும்பி கொண்டிருந்த உற்சாகம் வடிய வருணை உணர்வற்ற பார்வை பார்த்தவன் ,எப்போதும் போல இடக்காக பதில் கூறாமல் மெளனமாக அவளது வெடிப்பை தாங்கி கொள்ள தயாரானான்! இனியும் ஈகோவினால் எதையாவது பேசி அவனது வாழ்க்கை மேலும் சிக்கலாக்கி கொள்ள அவன் விரும்பவில்லை… கொண்டவளிடம் பணிந்து போவதும் ஆண்மைக்கு அழகு தான் என்பதை சற்றே தாமதமாக உணர்ந்த புத்திசாலி இவன்!

“நான் ரத்தமும் சதையும் இருக்க உயிருள்ள மனுஷி… அதை என்னைக்காவது உணர்ந்து இருக்கீங்களா? உங்களுக்கு பழி வாங்க கிடைச்ச பொருள் தானே நான்! எனக்கும் உணர்வு இருக்கு ,ஆசை இருக்கு,வாழ்க்கை இருக்கு… ஆனா அதையெல்லாம் நெருப்பில் போட்டு பொசுக்கி விட்டு இப்போ எதுக்காக என்னை உங்க மனைவின்னு போர்ட்ல இண்டக்ட் செய்தீங்க?”

அவனது கண்களை வெட்டும் பார்வை பார்த்தபடி ஆதிரை கேள்வி கேட்க… அவள் பேசி முடிக்கட்டும் என பொறுமையாக டேபிளில் சாய்ந்தபடி நின்று கொண்டான் கௌதம்… அவனது இந்த பொறுமையை பார்த்த வருண் ஆச்சரியத்தின் உச்சியில் இருந்தான்… பொறுமைக்கும் அவனறிந்த கௌதமுக்கும் தொடர்பே இல்லையே!

“மனைவி… … ம்ம்ம்ம்… இதை கேட்டாலே எனக்கு பெரிய ஜோக் மாதிரி இருக்கு… உங்களை நம்பினேனே! அதுதான் நான் செய்த தப்பு… என்னை எதை கொண்டு அடித்து கொள்வது என்றே புரியவில்லை… நம்பிக்கை என்பதன் அர்த்தத்தை சொல்லி கொடுத்துவிட்டீர்கள் அல்லவா… இப்போது என்ன புதியதாக மனைவி?”

ஆதிரை தனது உள்ளக்குமுறல்களை கொட்டி கொண்டிருக்க அவளது முகத்தையே பார்த்து கொண்டிருந்தான் கௌதம்… அவனது இந்த மௌனம் அவளது கோபத்தை அதிகப்படுத்தியதையும் அவன் அறியவில்லை…

“ஆதிம்மா… தவறு என்பது அனைவரிடமும் இருக்கு… கௌதம் மட்டும் இங்கே குற்றவாளி கிடையாது, நானும் ஒரு குற்றவாளி தான்… அப்பா, அம்மா, அபிம்மா ,அத்தை, ஏன் நம்ம தாத்தான்னு ஒவ்வொருத்தர் செய்த தப்புக்கும் கௌதமை மட்டும் சிலுவையில் அறைய கூடாது… ஆனால் அந்த சிலுவையின் முழு பாரத்தையும் சுமந்தது அவன் மட்டும் தான் ஆதி… ”

அவளை சமாதானப்படுத்த மட்டுமல்லாமல் தான் உணர்ந்த உண்மைகளை மனதார கூறிய வருணை ஆச்சரிய பார்வை பார்த்தான் கௌதம்… தான் எதையும் கூறாமல் தன்னுடைய உணர்வுகளை உள்வாங்கி இருந்தவனை பார்க்கும் போது அவனது கண்ணோரம் நீர் துளிர்த்தது!

இவன் என்னுடைய சகோதரன்!

கைகளை நீட்டி வருணின் தோளை அணைத்து கொண்டவனை மென்மையாக தட்டி கொடுத்தான் வருண்! அவனை பொறுத்தமட்டிலும் கௌதம் இழந்தவற்றை எல்லாம் மீட்டு கொடுத்துவிட முடியாது ஆனால் அவனால் செய்யக்கூடியது… அவனை முழுமனதோடு தன் தந்தையின் மூத்த மகனாக ஏற்பது ஒன்று தான்!… அந்த ஒன்றே அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்துவிடும் என்று முழு மனதாக நம்பினான்!

“ஒவ்வொன்னா லிஸ்ட் போட்டு வன்மத்தை வைப்பதென்றால் நம் வாழ்நாள் முழுக்க வன்மத்தை மட்டும்தான் சுமக்க முடியும்… முடிவே கிடையாது… விட்டுகொடுப்பவர்கள் கெட்டு போவதில்லை, கெட்டு போனவர்கள் விட்டு கொடுப்பதில்லை… ” கூறிக்கொண்டிருந்தவன் சற்றே மௌனமாகி அவளை பார்க்க… அவளது பார்வை எங்கோ வெறித்து கொண்டிருந்தது… கண்களில் கண்ணீர் குளத்தோடு!

“நாம் வாழ்வது ஒருமுறை… இனியொருமுறை பிறப்போமா என்பது உறுதி கிடையாது… அப்படி பிறந்தாலும் இதே உறவுமுறையோடு இருப்போமா என்பதிலும் உறுதி கிடையாது… இந்த கணம் மட்டுமே உண்மை… இது மட்டுமே வாழ்க்கை ஆதி… அதையும் நம் கோபதாபத்தால் விட்டுவிட கூடாது… வாழ்க்கை வாழ்வதற்கே ஆதிம்மா!” வருண் அவளை சமாதனப்படுத்த முயல… அப்போதும் கௌதம் வாய் திறந்தானில்லை!

“கடந்து போனவை கடந்தவையாகவே இருக்கட்டும்… மறந்துவிடு ஆதி… வாழ்கையை புதிதாக வாழப்பார்… ” தோழனாக சகோதரனாக ஆசானாக அவளிடம் பேசிக்கொண்டிருந்தவனை வெறித்து பார்த்தாள்!

“எதை மாமா மறக்க சொல்றீங்க? மறக்க வேண்டும் என்றால் நான் இறக்க வேண்டும்… ” கூறிக்கொண்டே அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு குரல் உடைந்தது… கௌதம் திடுக்கிட்டு அவளை பார்த்தான்!

தனது அதே வார்த்தைகள்!

தாயிடம் தான் கூறிய அதே வார்த்தைகள்!

இருவருக்குமே வலிகள் ஒன்றுதானே! அதனால் சிந்திக்கும் வார்த்தைகளும் ஒன்றாகி விட்டது போல!

அவளது கண்களில் கண்ணீர்… துடைக்கவும் தோன்றாமல்…

“இவர் மழுங்கடித்த எனது மரியாதை எனக்கு வேண்டும்… நான் தொலைத்து விட்ட நிம்மதியும் சந்தோஷமும் வேண்டும்… காணாமல் போன எனது கடந்த காலம் வேண்டும்… ஐந்து வருடமாக என் மகன் காணாத அவனது வசந்த காலம் வேண்டும்? இவரால் முடியுமா? இவை அத்தனையும் இவரால் திருப்பி தர முடியுமா?” அவள் உடைந்து அழுவதை அவனால் பார்க்க முடியவில்லை…

“இவை அனைத்தையும் என்னிடமிருந்து பறித்து கொண்டு இப்போது மறந்துவிட வேண்டுமா? எப்படி முடியும் என்னால்?” ஆங்கிலத்தில் பாதி தமிழில் மீதி என்று கொட்டி தீர்த்தவளை உணர்வை தொலைத்து பார்த்து நின்றான் கௌதம்…

வருண் தான் வெளியே செல்வதாக சைகை காட்டிவிட்டு நகர்ந்தான்! அவனுக்கு அதற்கு மேலும் அங்கு நிற்க சங்கடமாக இருந்தது… இருவருக்கும் இடையேயான பேச்சுக்கள் வரும் போது தான் அங்கு இருப்பது சரியல்ல என்பதை உணர்ந்து வெளியே சென்று நின்று கொண்டான்…

ஆதிரைக்கு மூச்சு வாங்கியது… கோபம் ஒரு பக்கம்… விடாமல் பேசியது மறுபக்கம்… உடல் நடுங்கியது!

கைகளை கட்டி கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த கௌதமை உறுத்து விழித்தவளுக்கு இனியும் எதற்காக இங்கு நிற்க வேண்டும் என்று தோன்றியது!

கைப்பையை எடுக்க போனவளை தடுத்தவன்,

“ஆதி… ” மென்மையாக அழைத்து அவளது கையை பற்ற, கோபத்தில் அவனது கையை உதற பார்த்தாள்… முடியவில்லை! மென்மையில் இவ்வளவு வன்மையா? அவன் பற்றியிருந்த கையையும் அவனையும் மாற்றி மாற்றி முறைத்தவள்…

“இப்போ விட போறீங்களா இல்லையா?” கோபத்திலும் நிதானமாக கேட்டாள் ஆதிரை!

“முடியாது ஆதி… ”

இரண்டே வார்த்தைகள்!

உறுதியாக! திண்ணமாக! அவனது முடிவை கூறுவது போல கூறினான்!

“மரியாதை கெட்டுடும்… ”

அதே தின்மையோடு அவள் கூற… மெலிதாக அரும்பிய புன்னகையோடு,

“என் ஒய்ப் கிட்ட நான் மரியாதைய எதிர்பார்க்கலையே… !” அலட்டி கொள்ளாமல் அவன் கூற… அவள் இழுத்து பிடித்து வைத்திருந்த கோபமெல்லாம் பல மடங்காக அதிகமாக,

“ஒய்ப்பா… … ??? ஹா… ” கேலியாக அவள் உதட்டை வளைத்ததிலேயே அவளது கசப்பு அப்பட்டமாக தெரிந்தது… “நீங்க என்னை வேற வார்த்தை தானே சொல்வீங்க?” அவனை கூறு போட்டு கொண்டிருந்த பார்வையோடு, அவனிடமிருந்து தன் கையை பியைத்து எடுக்க முயற்சித்து கொண்டே அவள் கேட்க… கௌதம் அதற்கும் அசைந்து கொடுக்கவில்லை…

“அது அந்தந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி… ” என்றவனது பார்வை சத்தியமாக கண்ணியமான பார்வையல்ல! அவனை உருகி உருகி அவள் காதலித்த போது,அவனது பார்வையிலேயே அவள் குழைந்த அவனது அந்த பார்வை! அதன் பின் இத்தனை நாட்களில் இந்த பார்வையை அவனிடம் அவள் கண்டதே இல்லை! மீண்டும் அதே பார்வையை அவனிடம் கண்டபோது மனம் படபடவென அடித்து கொள்ள…

“இதுக்கெல்லாம் நான் மயங்கி கிடந்தது ஒரு காலம்… இப்பவும் ட்ரை செய்யாதீங்க!”

“நான் என்ன ட்ரை செய்யறேன்னு நீ நினைக்கிற?” அவள் கொதித்து கொட்டிய அடையாளமே இல்லாமல் அவன் குறும்பாக கேட்க…

“நீங்க எதை வேண்டுமானாலும் செய்வீங்க… பழிவாங்கனும்னா எந்த எக்ஸ்ட்ரீம்க்கும் போவீங்க… ”

கல் போன்ற முகத்தோடு அவள் கூறியபோது அவளது மனம் கடந்த காலத்தின் ஏமாற்றத்தின் பிடியில் இருந்தது என்பதை உணர்ந்தான்… மனம் சொல்ல முடியாத துயர் கொண்டது!…

ஒரு நிமிட சறுக்கல் இருவரின் காதலை சூறையாடி சென்றதை உணர்ந்தான்… ஆனால் அவனது பக்க வாதத்தை இப்போது அவள் முன் வைக்கவோ, நியாயப்படுத்தி பேசவோ , யாரால் நிகழ்ந்தது என்ற கருத்துரையை இப்போது நிகழ்த்தி பார்ப்பது இந்த கசப்பை மேலுமே வளர்க்க கூடும்… அவற்றோடு அவன் மன காயங்களை அவளாக உணர வேண்டும் என்று நினைத்தான்…

அவள் மறந்து போன வாக்கியங்களை அவனாக நினைவுப்படுத்த விரும்பவில்லை…

அவளை மேலும் அருகில் கொண்டு வந்தவன்,

“திரும்ப திரும்ப பாஸ்ட்டை அட்டாப்சி செய்து பார்க்காதே ஆதி… எதுவா இருந்தாலும் ப்ரெஷா ஸ்டார்ட் செய்யலாம்… ” என்றவன்… நீளமான மூச்சை இழுத்து விட்டவாறு ,

“நம்ம பிருத்விக்காக… ப்ளீஸ்… ” கரகரத்த குரலில் அவளிடம் அவன் வேண்ட, நிமிர்ந்து அவனது கண்களை நேராக பார்த்தவளின் கண்களிலும் கண்ணீர் தடயம்!

“பிருத்விக்காக… பிருத்விக்காக… பிருத்விக்காக… ” ஆதிரையின் குரல் உடைய,

“எனக்கென்று மனம் இல்லையா? உணர்வில்லையா? எனக்காக எதுவுமே இல்லையென்றால்… யாருமே இல்லையென்றால்… நான் எதற்காக?”

அடைகாத்து வந்த துயரங்கள் வார்த்தைகளில் வெளிவர, கௌதம் ஒரு சில நொடிகள் எதுவுமே புரியாமல் நின்றான்…

அவனது இறுக்கம் தளர்ந்தது!

அவனது கையை உதறி விட்டு வெளியேறியவளின் மனம் குமுறியது!

error: Content is protected !!