cp40

cp40

அத்தியாயம் 40

அடர்சோகத்தின் தொடர் ராகமாய்

முந்தைய இரவின் தேடலையும்

இன்றைய இதய குமுறல்களையும்

மௌனத்தின் துணையோடு

கேட்டு கொண்டிருக்கின்றேன்!

முன்பொருமுறை சூட்டிய

இதயமற்றவன் பட்டத்தினை

கட்டிகாக்கின்றது கண்கள்!

பார்வையில்லா பறவையொன்று

இறக்கைக்கு ஒய்வு தேட

எனக்கு இளைப்பாறுதல் வேண்டும்!

ஆண்டவரே!

எனக்கொரு தனிமையும்

அழுவதற்கும் சொல்லிதாருங்கள்!

ஆமென்!

ஆதிரை தலை குனிந்து மனையில் அமர்ந்திருக்க… கையில் இருந்த மாங்கல்யத்தை ஒரு நிமிடம் ஊன்றி பார்த்தான் கௌதம்… தங்க சங்கிலியில் அம்மையும் அப்பனுமாக வீற்றிருக்க, உள்ளத்தில் தோன்றிய உறுத்தலை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு , என்றும் ஆனந்தமும் நிம்மதியும் நிலைத்திருக்க வேண்டும் என்று வேண்டி கொண்டு அந்த தாலியை தன் மனையாட்டியின் கழுத்தில் அணிவித்தான் கௌதம்…

அருகில் பிருத்வி… சந்தோஷமாக அந்த நிகழ்வை பார்த்தவாறு!

நடந்து முடிந்ததெல்லாம் கனவு போல தோன்றியது கௌதமுக்கு!

விசாலாட்சி வரலக்ஷ்மி பூஜை என்று மிகவும் நெருங்கிய சொந்தங்களை மட்டும் அழைத்திருந்தார்… அதிலும் வள்ளியம்மையின் வீட்டில் செய்வது தான் சரியாக இருக்கும் என்ற எண்ணம் அவருக்கு! அவரது குடும்பம், ராஜேஸ்வரியுடைய குடும்பம் மற்றும் அபிராமியுடன் கௌதம்… அவ்வளவே!

சிவகாமி மெளனமாக பூஜையறையில் அமர்ந்து கொண்டிருந்தார்!

விசாலாட்சி மனையில் அமர்ந்து கொண்டு அருகில் இருந்த மனையை காட்டி அபிராமியை அமர சொல்ல , அவருக்கோ மனம் தடுமாறியது!

மெளனமாக கௌதமை பார்க்க… அவனும் சிறு புன்னகையோடு அதை அனுமதித்தான்… அவருக்கு தெரியாது என்றாலும் அவனுக்கு இவையெல்லாம் வருண் மூலமாகவும் விசாலாட்சி மூலமாகவும் முன்பே வந்து சேர்ந்தது தானே!

அவரோடு சேர்த்து ராஜேஸ்வரி மாங்கல்யத்தை பெருக்கி கொள்ள ஆரம்பிக்க… தன் முன்னே இருந்த கலசத்தில் வைத்திருந்த மாங்கல்யத்தை கையில் எடுத்து தன் கணவரை அழைத்தார்!

“மாமா… இதை அபி கழுத்துல நீங்களே போட்டு விட்டுடுங்க… ” மிகவும் இயல்பு போல கூறிவிட்டு அவரது வேலையை பார்க்க… அபிராமிக்கு சங்கடமாக இருந்தது… பேரன் வந்துவிட்ட பின் இதென்ன அதிகப்ரசங்கித்தனம் என்று நினைக்க தோன்றியது…

“ஏய் சாலா… ஏன் இப்படி… யோசிக்காம இப்படியா செய்வ?” படபடப்பாக அவர் கடிக்க…

“அதெல்லாம் ஒண்ணுமில்ல… நீ பேசாம உட்கார்… வேற யாரை பற்றியும் நினைக்காதே அபி… கௌதம் நம்ம பையன் தானே… அவன் மனசு இனிமேலும் கஷ்டப்படனுமா? அவனுக்கும் ஒரு வாழ்க்கை அமைய வேண்டாமா?”

“அதுக்காக… இதை யார் கேட்டது?”

“நீ கேட்கலை! எனக்கு வேண்டும்… ” என்று இடைவெளி விட்டவர்… “ஏன்டி அபி… இந்த வயசுல கூட நான் சக்களத்தி சண்டை போடுவேன்னு நினைத்து விட்டாயா” என்று கேட்க…

“சாலா… என்ன பேசுற நீ?”

“பின்னே என்ன? இந்த வயசுக்கு மேல் நமக்கு கண்டிப்பா ஒரு எமோஷனல் சப்போர்ட் வேண்டும் … போதும் அபி… நீயும் எவ்வளவோ கஷ்டத்தை பார்துட்ட… அதில் என்னோட சுயநலமும் கலந்துவிட்டது… இனியாவது கௌதம் கேட்ட அந்த அங்கீகாரம் வேண்டும் அபி… ”

வெகு நிதானமாக ,ஒவ்வொரு சொல்லாக எடுத்து கோர்த்து அவர் கூறுவதற்கும் சிதம்பரம் மாங்கல்யத்தை அபிராமியின் கழுத்தில் அணிவிப்பதர்க்கும் சரியாக இருக்க… விசாலாட்சியின் மனதில் ஒரு மூலையில் வலியும் இருந்தது… அடுத்த நிமிடமே அபிராமியின் மனதை எண்ணி அந்த வலியை அவர் துடைத்தெறிந்தார்!

நிமிர்ந்து சிதம்பரம் கௌதமை பார்த்த பார்வையில் எதையோ சாதித்து விட்ட உணர்வே இருக்க… அருகில் அமர்ந்திருந்த வருண் கௌதமை அணைத்து கொண்டான்… சிறு முறுவலோடு!

அனைத்தையும் நம்ப முடியாத பாவனையில் பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை!

இத்தனை நாட்கள் கழித்து கிடைத்த அங்கீகாரம்… ஒவ்வொருவரின் சுயநலன்களையும் கசப்போடு கடந்து வந்த நினைவுகள் அவளது மனதில் முட்டி மோதி கொண்டு நின்றன…

அவளையும் அறியாமல் கௌதமை பார்த்தாள்!

அவனது பார்வை அவள் புறம் திரும்பவே இல்லை!

அவ்வளவு சீக்கிரத்தில் உணர்வுகளை வெளிப்படுத்தி விட கூடியவன் இல்லைதான் என்றாலும் அனைத்துக்கும் அடிப்படையான காரணம் விலகும் போது சற்றேனும் அவனை குற்ற உணர்ச்சி ஆட்கொள்ளும் என்று மனதில் நினைத்தாள்… ஆனால் அவனை பார்த்தால் அது போல கிஞ்சிற்றும் இல்லையே!

பிருத்வியை மடியில் இருத்தியபடி மின்னல் தெறிக்கும் முறுவலோடு தன் பெற்றோரை பார்த்து கொண்டிருந்தவனின் கண்கள் லேசாக பனித்திருந்ததோ?

“ஆதி… இங்கே வா… ” அதுவரை மெளனமாக இருந்த சிவகாமி தன் மகளை அழைக்க… குழப்பத்தோடு தன் தாயை பார்த்தாள் ஆதிரை!

“என்ன விஷயம் மா?” ஏதோ திட்டம் தீட்டபட்டிருக்கிறது என்பதை உணர்ந்தவள் சிக்கி கொள்ள விரும்பாமல் கேட்க…

“வந்து மனைல உட்கார் ஆதி… ” கடினமான முகத்தோடு அவர் கூறுவதை மறுக்கும் தைரியம் என்றுமே அவளுக்கு இருந்ததில்லை… எதுவும் பேசாமல் இறுக்கமான முகத்தோடு அவள் அமர, அருகில் மௌனமாக கௌதம் வந்தமர்ந்தான்…

யார் சிக்கலாக்கி கொண்டது என்பது புரியாமலேயே சிக்கலில் சிக்கி சிதறிய இரண்டு உள்ளங்களும் வேறு வேறு எண்ண அலைகளில் ஆட்பட்டிருந்தது!

கலசத்தின் மேல் வீற்றிருந்த அந்த மாங்கல்யத்தை ராஜேஸ்வரி எடுத்து கொடுக்க, கைகள் நடுங்க வாங்கியவனின் உள்ளத்தில் நிலநடுக்கம்!

ஆதிரை நிமிர்ந்து அவனது கண்களை பார்த்தாள்! ஏதேதோ சொல்ல முடியாத வார்த்தைகள் அந்த பார்வையில்! அவனது தொடர்ந்த பார்வையை எதிர்கொள்ள முடியாதவள் தலை குனிந்து கொள்ள…

‘இனி வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் ஆண்டவா… ’ என்று தான் வெகு நாட்களாக வணங்காதிருந்த இறைவனை வணங்கி கொண்டே அவளது கழுத்தில் அணிவித்தான்.

தலைகுனிந்து அமர்ந்திருந்த ஆதிரையின் கண்களில் இருந்து உருண்ட கண்ணீர் அவனது வலக்கரத்தில் பட… கௌதமுடைய மனமும் கனத்தது!

எப்படியெல்லாம் நிகழ்ந்திருக்க வேண்டிய திருமணம்?

மத்தளம் கொட்ட ,வரிசங்கம் நின்றூத,ஊர்கூடி வாழ்த்த,நண்பர் குழாம் கூடி கேலியில் முகம் சிவக்க வைத்து, நீயில்லாமல் நானில்லை நானில்லாமல் நீயில்லை என்று அக்கினிக்கு முன் சத்தியம் செய்து நடந்திருக்க வேண்டிய திருமணம் என்ற நினைவிலேயே அவன் மனம் மேலும் கனத்தது!

அன்று அவளிடம் கூற நினைத்தது இன்றும் அவனது நினைவில்!

“நீ சிவகாமியின் மகளாகவும் நான் அபிராமியின் மகனாகவும் இல்லாதிருந்தால், நம்மை காட்டிலும் அதிர்ஷ்டம் செய்தவர்கள் வேறு யாருமில்லை… இப்போதோ நம்மை காட்டிலும் துரதிர்ஷ்டம் செய்தவர்கள் வேறு யாருமே இல்லை… ”

கரை காணாமல் அவன் மேல் அவள் கொண்டிருந்த காதலை கொன்று அதன் மேல் தான் எழுப்பிய மாளிகை எத்தனை நாட்களுக்கு என்ற கேள்வி எப்போதும் போல அவனுள்!

மறந்தவற்றை என்றேனும் நினைப்பாளா என்று தனக்கு தானே கேட்டு கொண்டான்… விடை தெரியாத அந்த கேள்வி அவனை சற்று மருட்டியது!

ஆயிற்று! இனி பிருத்விக்காக… ! மகனுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாமே… விட்டுகொடுப்பது தன்னை மட்டும் தானே!

அங்கிருந்த ஒவ்வொருவரின் மனதிலும் சொல்ல முடியாத நிம்மதி சூழ்ந்தது!

வருணும் சௌமினியும் கௌதமும் ஒவ்வொருவரை பார்த்து கொள்ள… மூவரின் முகத்திலும் புன்னகை!

வருண் கட்டை விரலை உயர்த்தி காட்ட , கௌதமும் அதையே பின்பற்ற… பார்த்து கொண்டிருந்த சௌமினியின் மனம் பறவையின் இறகாக பறந்தது!

சற்று தள்ளி நின்று கொண்டிருந்த சௌமினியின் அருகில் சென்ற வருண், பெரியவர்கள் காலில் விழுந்து வணங்கி கொண்டிருந்த தம்பதியரை பார்த்து சந்தோஷத்தில் சௌமினியை தோளோடு சேர்த்து அணைத்து கொண்டான்… சௌமினியையும் கௌதமையும் தவிர அருகில் நின்று கொண்டிருந்த யாருமே அவனது கண்களில் தென்படவில்லை… !

கண்களில் ஆனந்த கண்ணீரோடு கௌதமையும் ஆதிரையையும் பார்த்து கொண்டிருந்த சௌமினிக்கு வருணின் அணைப்பு மேலும் மகிழ்வை கொடுத்தது…

இந்த கணத்துக்காக அல்லவா அவள் பலவருடமாக ஏங்கியது!

நிமிர்ந்து அவனது பூரித்த முகத்தை பார்த்தவள் அவனருகில் மேலும் நெருங்கி நின்று கொண்டாள்! மெளனமாக அவளை பார்த்த அவன் பார்வை ஆயிரம் கதை பேச… அந்த நிமிடத்தில் அவனது காதலி என்பதை காட்டிலும் தோழி என்பதை விடவும் அவனது மனையாட்டியாக இப்போது தானிருந்திருக்க வேண்டும் என்று ஏக்கப்பட்டாள்! அதை புரிந்து கொண்ட அவனோ நெருக்கத்தை அதிகப்படுத்த,

“ஓஓஓஓஒஹோஓஓ… ” அருகில் நின்று கொண்டிருந்த வள்ளியம்மை, சைந்தவி, சிவக்குமரனோடு சிறுசுகளும் கிண்டலடிக்க… வெட்கத்தோடு விலக பார்த்தாள் சௌமினி!

விலகப்பார்த்தவளை விலக விடாமல் தன்னோடு மேலும் நெருக்கமாக்கி கொண்டவனை பார்த்து ஒவ்வொருவரும் சிரிக்க…

“ஹலோ… என்ன சிரிப்பு வேண்டி இருக்கு?” சிவக்குமரனை பார்த்து சிவந்த முகத்தோடு கேட்ட வருணை கிண்டல் பார்வை பார்த்தனர் அனைவரும்!

“மாமா… இத்தனை பேர் இருக்கும் போதே ரொமான்ஸா? கலக்குங்க… அண்ணா என்ன சும்மாவே இருக்க? வீட்டு மாப்பிள்ளை நீ… ” சைந்தவி சிவக்குமரனுக்கு எடுத்து கொடுக்க…

“டேய் மாப்பிள்ளை… உன் தங்கச்சிய கட்டின அப்புறமும் கூட எனக்கு இவ்வளவு தைரியம் வரலைடா… ஆனா அண்ணன் தம்பி ரெண்டு பேருமே செம தைரியம் புடிச்சவன்களா இருக்கீங்கடா… ”

ஆஹா இவர் கிண்டலடிக்க ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டாரே! சின்ன கோடு போட்டாலே ரோடே போட்டு விடும் திறமையாளனுக்கு இப்போது தான் ப்ளை ஓவரே கட்டி கொடுத்திருப்பதை உணர்ந்தவன் அதை சிரித்து சமாளிக்க முயன்றான்…

“என் தங்கச்சிய கட்டினதுக்கு அப்புறமும் கூட உங்களுக்கு தைரியம் வருமா மாம்ஸ்?”

“அடேய்… சிரிச்சு மழுப்பாதே… என்ன விஷயம் சொல்லு… ” விடவே மாட்டேன் என்று பிடித்து கொண்டவரிடமிருந்து எப்படி தப்புவது என்று மிகவும் சீரியசாக யோசிக்க ஆரம்பித்தான் வருண்… எப்படி போனாலும் கேட் போடுவாரே!

“செமி எங்க ரெண்டு பேருக்குமே ப்ரென்ட் தான் மாம்ஸ்… ” தங்களை நோக்கி வந்து கொண்டிருந்த கௌதமையும் துணைக்கு சேர்த்து கொள்ள… அருகில் வந்த கௌதமோ முகம் கொள்ளா சிரிப்புடன் சௌமினியின் கழுத்தோடு இழுத்து தோளில் கை போட்டு கொண்டான்…

“ஆமா சிவா… ரெண்டு பேருக்குமே க்ளோஸ் ப்ரென்ட் தான்… ஆனா இந்த அய்யாவுக்கு அதுக்கும் மேல… ” என்று பெரிதாக சிரிக்க… வெட்கத்தோடு சிரித்தாள் சௌமினி!

கௌதமுடைய சிரிப்பை ஆச்சரியமாக பார்த்து கொண்டிருந்தாள் ஆதிரை… இருவரும் காதலிப்பதாக நினைத்த காலத்தில் கூட அவனிடம் இந்த சிரிப்பை அவள் பார்த்ததே இல்லை… மனம் விட்டு தோழர்களுடன் இருக்கும் போது மட்டுமே சிரிக்கும் சிரிப்பு! தான் எப்போதுமே அவனை அந்த அளவிற்கு நெருங்கியதில்லை போலும்!

மனதில் சுருக்கென்று வலி!

“டேய் கௌஸ் வேண்டாம்டா… நீயும் சேர்ந்து கிண்டலடிக்காதே… ” அழுது விடுபவளை போல சௌமினி கூற… மனதோடு நெருக்கமாக இருந்த அந்த பள்ளிகாலத்தை நோக்கியே போய் விட்டனர் அந்த மூவரும்!

“ஹேய் உன்னை போய் நான் கிண்டலடிப்பேனா சௌம்ஸ்… யூ ஆர் மை டார்லிங்… ” என்று அவளது கழுத்தை தன்னோடு இறுக்கியவன்… வருணை கேலியாக பார்த்து சிரிக்க வருணின் முகமோ அந்த கிண்டலை உள்வாங்கி கொண்டு ஒளிர்ந்தது!

சிவக்குமரனிடம் திரும்பிய கௌதம்…

“சிவா… ஸ்கூல் டேஸ்ல இவன் பயங்கர பொசெசிவ்… இவள் என்னோட பேசிட்டு இருக்கறதை பார்த்தா கூட பயங்கரமா சண்டை போடுவான்… அதுக்காகவே இவனை சீண்டி விட்டுட்டே இருப்பேன்… ” என்று சிரிக்க…

“ஆமாம்… இந்த ரெண்டு பிசாசுங்களும் சேர்ந்து என்னை பைத்தியமாக்கினது மட்டும் தான் மிச்சம்… ஆனா விதிய பாருங்கண்ணா… இத்தனை வருஷம் கழிச்சும் இதுங்க ரெண்டு கிட்டவும் நான் மாட்டிட்டு முழிக்கனும்ன்னு விதி… ”

சொன்னவளின் வார்த்தைகளில் இருந்த பொருள் கண்களில் இல்லாமல் குறும்பாக புன்னகைத்து கொண்டிருக்க… விஷம சிரிப்போடு அவளது கைகள் இரண்டையும் பற்றி கொண்டான் வருண்… அவளது கழுத்தை வளைத்து பிடித்திருந்த கௌதமை பார்த்து சிரித்தவாறு..!

“அப்போ மாட்டிக்கிட்டே… ஓகே தானே செமி?” கண்ணடித்து கேட்டவனை விழிகளை விரித்து பார்த்தாள்…

“நான் எப்போடா ஓகே சொன்னேன்… ?” குறும்பாக புருவத்தை உயர்த்தி கேட்டவளை பார்த்து வாய் விட்டு சிரித்தான் கௌதம்…

“சபாஷ்… சரியான போட்டி… ” கௌதம் வருணை ஏற்றி விட…

“இப்போ தானடி சொன்ன… ”

“இல்லையே… நான் ஓகே சொல்லவே இல்ல… ”

“டேய் கௌதம்… சிவா மாம்ஸ்… அம்மு… சைந்து… நீங்க எல்லோரும் தான் சாட்சி… இவ ஓகே சொன்னா தானே?”

“ஆமா… ஆமாஆஆஆ… ” எல்லோரும் ஒரே குரலில் ஆமாம் சாமி போட… சௌமினிக்கு முகம் வெட்கத்தில் சிவந்தது…

“கிடையவே கிடையாது… நான் ஓகே சொல்லவே இல்ல… ” வேகவேகமாக தலையாட்டியவளை பார்த்து எல்லோரும் சிரிக்க…

“எஸ்… நீ சொன்ன… ”

“நோ… நான் சொல்லலை… ” இவனோ விடாக்கண்டனாக கேட்க.. அவளோ கொடாகண்டியாக மறுதலித்து கொண்டே இருக்க… அந்த காட்சியை பார்த்து கொண்டிருந்த பெரியவர்களுக்கும் மனம் கனிந்தது! அவர்களும் முன்பே அறிந்திருந்த செய்தி என்பதாலேயே பெரிதாக அதிர்ச்சி என்று ஒன்றும் அவர்களுக்கு இல்லை என்பதை விட மகிழ்ச்சியும் நிம்மதியுமே அவர்களது முகத்தில்!

இருவருக்கும் இடையே பாலமாக சௌமினி இருக்கும் பட்சத்தில் இருவரின் ஒற்றுமையை பற்றி இனி கவலைப்படவே தேவை இல்லையே!

“இப்போ என்கிட்டே ஓகே வான்னு கேட்கறவன்,அன்னைக்கு அவனோட செக்ரட்டரி கூட ஆர்ட் எக்ஸிபிஷன்ல என்ன பண்ணிட்டு இருந்தான்னு கேளுடா… ” கௌதமை பார்த்து சௌமினி கேட்டு வைக்க… கௌதம் வயிற்றை பிடித்து கொண்டு வெடிச்சிரிப்பு சிரித்தான்…

“ஆமா… ஆமா… என்னடா பண்ணிட்டு இருந்த? ஒழுங்கா சொல்லிடு… ” கண்ணடித்தபடியே கேட்க…

“அடேய் பழிகாரா… செய்றதையும் செய்துட்டு என்னை இப்படி வேற மாட்டி விடறியே..இது உனக்கே நல்லா இருக்கா?” வருண் பாவமாக கேட்க… அங்கிருந்த மற்றவர்களுக்கும் அந்த சிரிப்பு பரவியது…

“நான் என்ன செய்தேன் வருண்… ஐ ம் பாவம்… ” ஒன்றுமறியாதவனை போல கேட்டவனை முறைக்க முயன்றாலும் வருணால் சிரிக்க மட்டுமே முடிந்தது… இருவருக்குமே அந்த சம்பவங்களின் பின்னணிகள் அறிந்த ஒன்றானதால் அதற்கு யார் காரணம் என்று ஆராய்ச்சி செய்வது தேவையில்லாத ஒன்று என்று தோன்றி இருந்தது… அதுவும் இல்லாமல் அது போன்ற ஆய்வுகள், மலர்ந்து இருக்கும் உறவுகளில் சங்கடத்தை ஏற்படுத்த கூடும் என்பதுவும் உண்மையல்லவா!

மற்ற எதையும் விட குடும்ப நிம்மதி முக்கியம் என்பதில் இருவருமே உறுதியாக இருந்தனர்! சுழல்களில் சிக்கி உறவுகளை சிக்கலாக்கி கொண்ட பின்பு இருவருக்கும் வந்த ஞானமென்பது நாம் அனைவருமே அறிந்த ரகசியம் தானே!

“அடப்பாவி… நீ அப்பாவியா? வேண்டாம்டா… எனக்கு ஹார்ட் அட்டாக் வந்துட போகுது… ” என்று நெஞ்சை பிடித்தவன்… “நீயும் ஒருநாள் ஆதிகிட்ட இப்படி மாட்டுவ… அவ இவளை மாதிரியே க்ராஸ் எக்ஸாமைன் பண்ணத்தான் போறா… அப்போ இருக்குடா உனக்கு… ” சிரித்து கொண்டே சபதமிட்டவனை பார்த்து கண்ணை சிமிட்டிய கௌதம்…

“ஹப்பா… என் ஆபீஸ்ல லேடி செக்ரட்டரி கிடையாதே… அதுவும் இல்லாமல் லேடீசை வேலைக்கு வைப்பதே இல்லையே… ” என்று வருணை பார்த்து மீண்டும் பெரியதாக சிரித்தவனை ஆச்சரியமாக பார்த்து கொண்டே இருந்தாள் ஆதிரை!

“அதான் மொத்தமா அங்க ஆதிரை இருக்காளே அண்ணா… ” வள்ளியம்மையும் அவனை கேலி செய்ய…

“ஓ அவ லேடின்னு சொல்றியா அம்மை?” விஷம புன்னகையோடு கௌதம் கேட்ட தொனி ஆதிரையை கடுப்பேற்ற, அவனை முறைத்தாள்!

“இதுக்கு பேர் தான் தனக்கு தானே ஆப்புங்கறது… ” முறைத்து கொண்டே போனவளை பார்த்து, சிவக்குமரன் சிரித்து கொண்டே கௌதமை கலாய்க்க… அதற்கும் வெடிசிரிப்பு கிளம்பியது அங்கே!

error: Content is protected !!