Cp8

அத்தியாயம் எட்டு

சில்லுகளாய்

நொறுங்குகிறது இதயம்

அத்தனையிலும் உன் முகம்!

 -டைரியிலிருந்து

“ஹஹா முடியலடா… அந்த கதையெல்லாம் இப்போ பேசினா சிரிச்சு சிரிச்சு வயிற்று வலியே வந்துடுது… ரொம்ப பசுமையான நாட்கள் இல்லையா கௌஸ்… ”

சௌமினி வாய்விட்டு சிரித்ததில் கண்களில் கண்ணீர் எட்டி பார்த்தது… முகம் சிவந்து மலர்ந்து செந்தாமரை அழகியாய் இருந்தவள் இப்போது பேரழகியாய் காட்சி தந்தாள்… அவளுக்கு வயது இருபத்தி ஒன்பது என்று சத்தியம் செய்தாலும் நம்புவது கடினம்… கௌதமின் பள்ளி தோழி! ஒரே வகுப்பு என்றாலும் ஒரு வயது பிந்தியவள்! சிறுவயது முதல் ஊட்டி லவ்டேல் செயின்ட் லாரன்ஸில் உடன் பயின்றவள்…

வேலை பளுவினால் மூன்று மாதங்களுக்கு பின் இப்போதுதான் அவளை பார்க்க வந்திருந்தான்… வாழ்க்கையின் மேடு பள்ளங்களின் போது உடனிருந்தவள்… எப்போதுமே நண்பனை யாருக்கும் விட்டு தராதவள்… கௌதமும் அப்படியே! பள்ளி காலம் முதல் இப்போது வரைக்குமே அவள் பிரியமான தோழி!

“எஸ் சௌம்ஸ்… மறக்கவே முடியாது… இன்னொரு தடவை அங்க படிக்க போன்னு சொன்னா எல்லாத்தையும் விட்டுட்டு ஓடிடுவேன்… கவலையே இல்லாம சிறகடிச்சு பறந்துட்டு இருந்த நாட்கள் இல்லையா… ”

கௌதமும் மனம் திறந்து கூற… கேட்ட சௌமினியின் முகத்தில் மின்னல் வெட்டி கண்களில் குறும்பு புன்னகை பூத்தது…

“டேய்… குறும்புக்கார கண்ணா… நீ ஜாலியாத்தான் போவ… ஏன்னா உன்னோட லீலைகள் அந்த மாதிரியாச்சே… ஒரு பொண்ணையாச்சும் விட்டு வெச்சு இருக்கியா? நீ மஸ்கா போட்ட பொண்ணுங்க லிஸ்ட்ட அந்த சிட்டி ரோபோவால கூட கணக்கு எடுக்க முடியாதே… நான் ஒருத்தி தான் உன்னோட லிஸ்ட்ல இல்லாத பொண்ணுன்னு நினைக்கறேன்… ரைட்டா?”குறும்பு கூத்தாட சௌமினி சொன்னதை கேட்டவனுக்கு சிரிப்பு பீறிட்டது!

“ஹேய் நீ பொண்ணா? ஓ மை காட்… இப்படி எல்லாம் இந்த கிரீன் சான்ட்ட பயமுறுத்தாத சௌம்ஸ்… ” கௌதம் கிண்டலடிக்க… சௌமினி வயிற்றை பிடித்து கொண்டு சிரித்தாள்…

அவன் அப்படி கூறிய காரணம் தான் அவளுக்கும் தெரிந்ததே! நண்பனது உள்ளும் புறமும் தெரிந்தது போல தனது மனம் அறிந்தவன் தன் நண்பன் என்பதும் அவள் அறிந்ததே… அப்போதைய சௌமினி பாய் கட் செய்து கொண்டு ஆண்பிள்ளைகளோடு ஆண்பிள்ளையாக கௌதமின் நெருங்கிய தோழியாக திரிந்தவள்… இப்போதோ விறைப்பாக காட்டன் புடவையுடுத்தி நெற்றியில் சிறு பொட்டு வைத்து வளர்ந்து இடை தாண்டிய கூந்தலை அழகாக பின்னி… கம்பீர நடையில் வருபவள்! வேலைக்கு தகுந்த வேடம்… இது அவளது ஸ்டேட்மென்ட்!

வகுப்பு தோழர்கள் யாராவது அவளிடம் வாலாட்டினால் முதல் அடி இவனுடையதாகதான் இருக்கும்… செயின்ட் லாரன்ஸில் வாரம் ஒரு முறை அவுட்டிங் இருக்கும் போதெல்லாம் இவர்களது கூட்டம் ஊட்டி,குன்னூர்,கேத்தி சுற்றி கொண்டிருக்கும்… கூடவே மசினக்குடி,முதுமலை என்று இவர்கள் சுற்றாத இடமில்லை…

அங்கு வகுப்புக்களில்ஒவ்வொரு குழுவுக்கும் ஒரு சில பழக்கங்கள் இருப்பதுண்டு… ஒரு சில குழுக்களில் ஆண் பெண் பேதமில்லாமல் போதை மருந்து பழக்கம் வரை பழகி இருந்தாலும் இவர்களது குழு ஓரளவு அந்த வழிகளில் சென்றதில்லை… அதுவும் கௌதமை தாண்டி சௌமினியும் அதிலெல்லாம் மாட்டி கொண்டதில்லை…

அந்த நண்பர்கள் குழு இப்போது வரையிலுமே நட்பை நீட்டித்து கொண்டிருக்கிறது… சென்னையில் இருப்பவர்களுக்கு அடிக்கடி பார்த்து கொள்ள சந்தர்ப்பம் கிடைத்தாலும் வேலை பளுவினால் சந்திப்பை தவிர்ப்பவர்கள் கூட வெளிநாட்டில் இருக்கும் நண்பர்கள் வரும் போது கண்டிப்பாக சந்தித்து விடுவர்!

“ஷப்பா… முடியலடா… வயிறு வலிக்குது… ”என்றவள் சிறிது இடைவெளி விட்டு

“நம்ம க்ரூப் ஓகே… நம்ம கிளாஸ்மேட்ஸ் பத்தி எல்லாம் ஏதாவது தெரிஞ்சுதா?சஞ்சய் என்ன பண்றான்?” சிரித்து கொண்டே அந்த சஞ்சய்யை பற்றி விசாரித்தவள் உண்மையிலேயே அவனை பற்றி விசாரிக்கவில்லை என்பது அவனுக்கும் தெரியும்… அவனுக்கு தெரியும் என்பதை அவளும் அறிவாள்… இருந்தாலும் அவளது வாயில் இருந்தே பூனைக்குட்டி வெளிவரட்டும் என்பதற்காக காத்திருந்தான்…

“ம்ம்ம் சஞ்சய் தானே… ஹைதராபாத்ல அவங்கப்பாவோட மல்டி ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலை ரன் பண்ணிட்டு இருக்கான்… அப்போ அப்போ எனக்கு பேசுவான்… சரி அந்த பூசணிக்கா மது என்ன பண்ணுது… ?”

“அடப்பாவி… அவளுக்கு ஸ்கெட்ச் போட அவ்ளோ நாள் சுத்துனியேடா… இப்போ அவ உனக்கு பூசணிக்காயா?”கையில் இருந்த புத்தகத்தை கொண்டு அவனை அடிக்க…

“ஹேய்… சேட்டு பொண்ணுங்கன்னா அப்படித்தான் சௌம்ஸ்… சீக்கிரமே ஆண்டி ஆகிடுவாங்க… ” என்று கண்ணடிக்க… அடப்பாவி என்று வாயில் கை வைத்து கொண்டாள்…

“அப்புறம்… ” என்று இடைவெளி விட்டவள் அவள் தயங்குகிறாள் என்றவுடனே… நீயாக கேட்காவிட்டால் பதில் கிடைக்காது மகளே என்ற முகக்குறிப்போடு குறும்பு மாறாமல் அவன் பார்க்க… அவனது எண்ண ஓட்டத்தை புரிந்து கொண்டவளால் எளிதாக அந்த கேள்வியை கேட்டு விட முடியவில்லை…

வயதும்… பொறுப்பான தற்போதைய பதவியும்… சூழ்நிலையும் அவளை தடுக்க… ஒருவாறாக கேட்டாள்…

“வருண் எப்படி இருக்கான்?”

“ம்ம்ம் அவனுக்கென்ன… நல்லா இருக்கான்… ஆதிதான் லண்டனல இருந்து வந்துட்டால்ல… கொஞ்சம் தலைகீழா தான் சுத்தறான்… ” மெல்லிய குரலில் கூற… வலி படர்ந்தது சௌமினியின் முகத்தில்… பேசாமல் எங்கோ பார்த்தவளை பார்க்கவே மனம் பிசைந்தது…

“இப்போ நினைச்சா கொஞ்சம் கஷ்டமா இருக்கு சௌ… எங்க ரெண்டு பேரோட போட்டில உன்னை ரொம்பவே வதைச்சுட்டோம் இல்லையா… ஐம் சாரி டா… ” வெளிவார்த்தையில் அவனுக்கு இருந்த வலியை காட்டிலும் உள்ளுக்குள் அவன் படும் வேதனை அதிகம் என்பதை புரிந்து கொண்டவள்…

“ஹேய் விடு கௌஸ்… ஒரு வழி பாதைல ரொம்ப தூரம் டிராவல் பண்ணி வந்தாச்சு… இனிமே திரும்பி கூட பார்க்க முடியாது… இப்போ உன்னோட லைப்பை பாரு… ” என்று கூறி இடைவெளி விட…

“ம்ம்ம்… லைப்… ” என்று சலித்து கொண்டவன் , “அப்படி ஒன்று இருக்குதா என்ன?” வெகு இயல்பாக கேட்பது போல தோன்றினாலும் அதனுள் மறைந்திருந்த வேதனைகளை அவள் புரிந்து கொள்ளாமல் இல்லை… அது புரிந்ததால் தானே அவனது இந்த திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்ததே… ஆனாலும் உள்ளுக்குள் சிறு நடுக்கம்… அவனது மனதை மாற்ற வேண்டி உரையாடலின் போக்கை திசை திருப்பினாள் சௌமினி!

“நீ சொன்னதுக்கு ஓகே சொல்லிட்டேன்னாலும் உள்ளுக்க பயமா இருக்குடா… ஸ்கூல் நேம் ஸ்பாயில் ஆகிடாம நீ தான் கேர்புல்லா இருக்கணும்… ” பொறுப்பாக அந்த பள்ளியுடைய கரஸ்பாண்டன்ட்டாக கூற…

“ஓகே மேடம்… தங்கள் சித்தம் என் பாக்கியம்… ” சோபாவில் இருந்து எழுந்தவன் இடை வரை குனிந்து வணங்கியவனின் தோரணையில் சௌமினிக்கு சிரிப்பு வந்தது!

“சரி வா போலாம்… ”என்று எழுந்து கொண்டவளை பற்றிய சிறு குறிப்பு என்னவென்றால்…

சென்னையின் மிக முக்கியமான தரமான பள்ளிகளில் ஒன்று அவர்களது பள்ளி… மிக முக்கிய புள்ளிகள் பிள்ளைகளை சேர்பதற்காக போட்டியிடும் பள்ளி… அதன் இப்போதைய நிர்வாகி சௌமினி… கூடுதல் விவரம் என்னவென்றால் அந்த பள்ளியில் தான் ஆதிரை தன் மகனை சேர்த்திருந்தாள்!…

******

கௌதமுடைய மடியில் அமர்ந்திருந்தான் பிருத்வி, அவனது அலுவலகத்தின் தனிப்பட்ட அவனுடைய அறையில்!

சௌமினியிடம் அனுமதி வாங்கி கொண்டு பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு தனது அலுவலகத்துக்கு வந்தவனுக்கு உலகமே வண்ணமயமாக தோன்றியது… அந்த வாண்டின் முகத்தை பார்க்க பார்க்க தெவிட்டவில்லை… அந்த குண்டு கன்னங்களை பார்த்தவனுக்கு ஆதியின் கன்னம் தான் நினைவுக்கு வந்தது… அவளுக்கும் இதே போலத்தான் குண்டு கன்னங்கள் அப்போது!… இப்போது சற்று வடிந்துள்ளதோ என்று தோன்றியது…

அலைபாயும் அந்த கண்கள்… அதில் கருந்திராட்சைகளாய் கண்மணிகள்… அவளும் இதே போலத்தானே… மருண்டு விழிக்கும் போதும்!… காதலில் கனிந்த போதும்!… மௌனத்தில் உருகிய போதும்!அந்த மீன்விழிகளை நினைத்து கொண்டான்…

ஒரு கையில் சாக்லேட்டை மென்று இன்னொரு கையில் ஐஸ்க்ரீமை நக்கி கொண்டிருந்த மகனை பார்க்கும் போது நெஞ்சம் இனித்தது… செப்பு உதடுகள்… அதில் தோய்ந்து கன்னத்தில் வழிந்தது ஐஸ்க்ரீம்!… மகனை அப்படியே அணைத்து கன்னத்தில் முத்தமிட அவனது உதட்டில் ஒட்டி கொண்டது… நாக்கால் சுவைத்து பார்த்தான்… இது போல ஒரு சுவை வேறெதுவும் இல்லையென தோன்றியது!

“அங்கிள்… எனக்கு இன்னொரு ஐஸ்க்ரீம் வேணும்… ” மழலை மாறாமல் மிளற்றியவனை மீண்டும் தன் கைக்குள் கொண்டு வந்து…

“ம்ஹூம் ஒரு நாளைக்கு ஒன்னு தான்… இன்னொன்னு நாளைக்கு வாங்கி தரேன்… ஓகே வா… ” என்று சிரித்து கொண்டே கேட்க… தலை குனிந்தவாறே கண்களை மட்டும் உயர்த்தி பாவமாக பார்த்தான்… கௌதம் சட்டென அதிர்ந்தான்… ஆதிரையும் இதே போலத்தானே பார்ப்பாள்… அவளது குறும்புத்தனம் எல்லை மீறும் போது கண்டிக்கையில் தலை குனிந்து கொண்டு மேல்பார்வையாக பரிதாப பார்வை பார்ப்பாளே… !

மகனை நெஞ்சோடு சேர்த்து இறுக்கி கொண்டவனின் கண்கள் துளிர்த்தது…

“ஓகே ஓகே வாங்கி தரேன்… ஆனா ஒரு கண்டிஷன்… ”அந்த வாண்டோடு பேரத்தை துவக்கினான் அவன்…

“என்னை அங்கிள்ன்னு சொல்ல கூடாது… அப்பான்னு தான் சொல்லணும்… சரியா?” குழந்தையோடு குழந்தையாக இறங்கி அவனது மகனோடு ஒப்பந்தம் போட்டு கொண்டிருக்க… அந்த வாண்டோ வெகு விவரமாக…

“உங்க நேம் கௌதமா அங்கிள்?”ஆர்வமாக கேட்டது… அடடா செம விவரம் தான் என்று எண்ணி கொண்டு…

“அடப்பாவி பயலே… கௌதம்ன்னு பேர் இருந்துட்டா உன் அப்பாவா?… ஆண்டவா… ” நொந்து கொண்டான்…

“டெல் மீ அங்கிள்… ”மீண்டும் கேட்க

“ஆமா குட்டி செல்லம்… என் பெயர் கௌதம் தான்… சோ நான் தான் உன் அப்பா… ஓகே வா… ” என்று அவனது இனிப்பான கன்னத்தில் முத்தமிட… அவனது கழுத்தை கட்டி கொண்டான் அந்த பட்டாம்பூச்சி!

“ஹை அப்பா… எங்க அப்பா வந்துத்தாங்க… ” கழுத்தை கட்டி கொண்டு அந்த இளந்தளிர் கொண்டாட… அந்த வார்த்தைகளில் தன்னிலையை முழுவதுமாக மறந்தான் கௌதம்!

“ஆனா நீங்க தொன்ப தூதமா இதுக்கததா அம்மா சொன்னாளே… ” தெளிவாக கேட்ட மகனை புன்னகையோடு பார்த்தான்…

“ஆமா குட்டி… ரொம்ப தூரத்துல தான் இருந்தேன்… ஆனா சாமி சீக்கிரமா குட்டிய போய் பார்க்க சொன்னாங்களா… அதான் ஓஓஓடி வந்துட்டேன்… ” அவனை போலவே நடித்து கொண்டு கூறிய கௌதமை பார்த்து கிளுக்கி சிரித்தான் குழந்தை…

“எதுல வந்தீங்க… ப்ளைட்டா ராக்கெட்டா?” கிளுகிளுவென்ற குரலில் கேட்ட அந்த சின்ன குட்டியை பார்த்து இரண்டு கைகளையும் விரித்து வைத்தவன்…

“அப்பா… பெரிய ராக்கெட்ல வந்தேன்… செல்லகுட்டி எதுல வந்தீங்க?” பதிலுக்கு கேட்டவனை பாவமாக பார்த்து விட்டு…

“அம்மா… ப்ளைட்ல தான் கூத்தீட்டு வந்தா… நான் பெதியவனா ஆனாத்தான் ராக்கெட்ல போக முதியுமாம்… ” பரிதாபமாக கூறியவனை அணைத்து கொண்ட கௌதம்…

“அச்சோ என் செல்லகுட்டி… ”அவனை அணைத்து கொண்டு முத்தமிட்டவன் ,அவனுக்கு வாங்கி வைத்திருந்த இசை எழுப்பி கொண்டே வாசிக்கும் அந்த கதை புத்தகத்தை அவனுக்கு காட்ட…

“ஹை… எனக்காப்பா… அந்த பிக்கி தக்ஷா(ரக்ஷா) இதே மாதிதி ஸ்டோதி புக் வெச்சுதுந்தாப்பா… ஆனா எனக்கு குதுக்க மாட்டேன்னு வம்பு செய்யதா… நான் என்னோட புக்கை அவ கிட்ட காத்தி கொக்காணி காத்துவேனே… ”

அவனுக்கு கதையை வாசித்து காட்டி கொண்டே ஒவ்வொரு வார்த்தைக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் அந்த ஒலியை எழுப்பி காட்ட… கை தட்டி ஆரவாரித்தான் அவன் மகன்!

“ஹை சூப்பர் ப்பா… ”

அவனுடன் சற்று நேரம் விளையாடியவன்… அவனை வாரி எடுத்து கையில் வைத்து கொண்டு…

“பிருத்வி குட்டி… நான் ஒன்னு சொன்னா கேட்பியா?”கேள்வியாய் வாண்டின் முகம் பார்க்க…

“எஸ் ப்பா… ”ஐஸ்க்ரீமும் சாக்லேட்டும் வேலை செய்தது!

“நான் உன்னை இங்க கூட்டிகிட்டு வந்ததை எல்லாம் யார்கிட்டவும் சொல்ல கூடாது… ஓகே வா… ”

“ஏன் ப்பா?”வெகு சிரத்தையாக சந்தேகம் கேட்க… அவனது ஒவ்வொரு வார்த்தையும் இனிப்பாக இறங்கியது கௌதமின் மனதினுள்!

“அன்னைக்கு அப்பா கூட அம்மா சண்டை போட்டாங்களா இல்லையா?”அவனையே திருப்பி கேள்வி கேட்க… அது ஆமென்று தலையாட்டி…

“ஆமாப்பா… ”அப்பாவியாக கண்களை உருட்டி தலையாட்ட…

“அப்புறம் செல்லகுட்டிய இழுத்துட்டு போனாங்களா இல்லையா?”

“ஆமாப்பா… ஆனா ரொம்ப அழுதாளே அம்மா… ” பாவமாக தன் தாயை நினைவுப்படுத்த… கௌதம் மனதில் வாள் கொண்டு வீசிய உணர்வு! நினைவுகள் அறுத்தன!… உணர்வுகள் கசந்தன!

“அதனாலத்தான் சொல்றேன் பிருத்வி குட்டிம்மா… அம்மா அழுவா… உன்னை கூட்டிகிட்டு மறுபடியும் லண்டனுக்கே போயிடுவாளே… அப்போ அப்பா அழுவேன்ல… ” என்று அந்த குட்டி மனிதனிடம் கேள்வி கேட்க… தாடையை தட்டிக்கொண்டு யோசனையில் ஆழ்ந்தது சில்வண்டு!

“ஆமா ப்பா… யு ஆர் ரைட்… ” ஆமென்று ஒப்புக்கொண்டு சான்றிதழும் கொடுத்த மகனை அணைத்து மீண்டுமொருமுறை முத்தமிட்டு கொண்டான்!

“சக்கரைக்கட்டிடி இது… !”

“ப்பாஆஆ… ச்சீ… எச்சி… ” கன்னத்தை துடைத்து விட்டு கொண்டவனை பார்த்து சிரித்தான் கௌதம்!

பிருத்வியின் ‘அப்பா’ என்ற ஒரே ஒரு அழைப்பு அவனை உயிர்வரை தீண்டியது…

தாயன்பிற்கு சற்றும் சளைத்ததில்லை தந்தையின் அன்பு… !

தன் மகனை பார்த்தது முதல் கௌதம் உருகி கரைந்தான்… அவனுக்கு முன் வேறெதுவுமே தேவையில்லை என தோன்றியது! தான் தவற விட்ட கணங்களை நினைத்து கனமானது மனது!

அவனுடைய சக்கரைக்கட்டி மகனை கொஞ்சி கொண்டிருக்கும் போதே செல்பேசி அழைக்க… அதை ஆழ்ந்து பார்த்தவன் எடுத்து பேச ஆரம்பித்தான்…

“ம்ம்ம்… சொல்லுங்க மதிவாணன்… ”

“ஜிகே சர்… எனக்கு எதுவும் ரிஸ்க் வந்துடாதே?” பேசியவனின் குரலில் பயம் கலந்திருக்க…

“அதெல்லாம் ஒன்னும் ஆகாது மதி… நான் பார்த்துக்கறேன்… ”

“அவர் தோண்டி துருவினா நான் மாட்டிக்க கூடாது சர்… பத்திரிக்கைல போட்டு கிழிகிழின்னு கிழிச்சுடுவாங்க… ”

“எந்த ரிஸ்க் வந்தாலும் நான் இருக்கேன் மதி… வேலைய முடிச்சுட்டு எனக்கு பேசுங்க… ” கௌதம் ஒரே வரியில் முடித்துவிட மறுபுறத்தில் அந்த மதியால் அதற்கும் மேல் பேச முடியவில்லை… முடியவில்லை என்பதை விட முடியாது என்பதே பொருத்தம்! ஏனென்றால் ஜிகே கவனிக்கும் கவனிப்பை வேறு எவருமே செய்ய முடியாது… வாங்கியவற்றுக்கு இது போன்ற கணக்குகளை முடிப்பது அவசியமாயிற்றே!

“ஓகே சர்… ”

செல்பேசியை வைத்தவன் திரும்பி தன் மகனை பார்த்தான்… அவனது பார்வையிலிருந்த அர்த்தத்தை அந்த சிறு பட்டாம்பூச்சியால் புரிந்து கொள்ள முடியுமா?

********

ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் வருண்… ஆதிரை இங்கு வந்தது முதலே ஏதேதோ நினைவுகள் மனதை அழுத்தி கொண்டிருந்தன… மனதின் ஒரு மூலையில் இருண்ட பாகத்தில் தேவையில்லையென தூக்கி எறியப்பட்ட நினைவுகள்… வேறு மார்கமில்லாமல் இப்போது அவன் முன் விஸ்வரூபமெடுத்து தலைவிரி கோலமாக ஆடி கொண்டிருப்பது போன்ற பிரம்மை அவனுள்!

ஆனால் வேறு வழியில்லை… கத்தி எடுத்தே தீர வேண்டிய நேரமிது… ஆனால் அவனது கத்தி மருத்துவனது கத்தியா அல்லது கொலையாளியின் கத்தியா என்பதை காலம் அல்லவா தீர்மானிக்க கூடும்!

அவனுக்கு கிடைத்த தகவல்கள் வெகு திருப்தியாக இருந்தன… ஆக யானையை பிடிக்க வெட்டி வைத்த குழியில் யானை தானாக மாட்டி கொண்டிருக்கிறது! அவனுடைய தேவையும் அதுதானே…

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை சிலர் புரிந்து கொள்ள வேண்டிய நேரம் கையெட்டும் தூரத்திலேயே இருப்பதாக பட்டது அவனுக்கு!

ஆழ்ந்த உறக்கத்திலிருந்தவனை அழைத்தது செல்பேசி… எங்கோ அழைப்பது போல அவனுக்கு கேட்க… மிகவும் சிரமத்துக்கு இடையில் கண்களை மெதுவாக பிரித்தான்…

விடாமல் அழைத்து கொண்டிருந்தது அந்த தொல்லை பேசி!

“ச்சே… ” தூக்கத்தை கலைத்த அந்த பேசியை எரிச்சலோடு பார்த்தான்!

“ஹ… லோ… ”கொட்டாவி விட்டு கொண்டே காதில் வைத்தவனை மறுபுறத்திலிருந்து வந்த செய்தி நிமிர்ந்து அமர செய்தது!

“வாட்ட்ட்… ”முதலில் புரியாமல் கேட்டு… பின் அதை தெளிவுபடுத்தி கொண்டபோது மனமெங்கும் கோபத்தீ!

எப்படியென புரியாமல்… ஏன் என்று தெரியாமல் எரிச்சல் மிகுந்து அமர்ந்திருந்தான்… கண்களில் ஒட்டி கொண்டிருந்த தூக்கம் பறந்து விட்டிருந்தது!