அத்தியாயம் ஒன்பது

முத்தமிடு
நீ
குறுக்கு வெட்டாக
சிலுவையின் வடிவில்
சுவைத்த இதழில்
முத்தமிட்டதைப்போல
முத்தமிடு…

ஒருமுறை… ஒரேயொருமுறை!

 -டைரியிலிருந்து

வருண் யோசித்ததெல்லாம் சில நொடிகள் தான்… அவசரமாக எழுந்து தன்னை தயார் படுத்தி கொண்டவன் முதலில் வீட்டிலிருந்த அலுவலக அறையில் ஆதாரங்களையும் முக்கியமான காகிதங்களையும் கிழித்து மலையென குவித்து வைத்தான்… செல்பேசியில் அவனது இன்னொரு உதவியாளரான ஆனந்தை அலுவலகத்திற்கு வர கூறினான்… அவனது அவசர தொனி மறுபுறத்தையும் தொற்றி கொள்ள… வேலைகள் படுவேகமாக நடந்து கொண்டிருந்தது!

முக்கியமான ஆவணங்களை சேகரித்து வைக்கும் போதே ஆனந்த் வந்து சேர… அவன் வந்தவுடன் மேலும் இரண்டு பேரை உதவிக்கு அழைக்க வீடு பரபரப்படைந்தது… செல்பேசிகளில் தகவல் பறக்க ஒவ்வொரு அலுவலகத்திலும் பரபரப்பு தோற்றி கொண்டது அந்த நேரத்திலும்! உறக்கத்தை ஒத்தி வைத்து அலறியடித்து கொண்டு அலுவலகம் வந்து பிரச்னையை கொடுக்கும் என்று தோன்றிய காகிதங்களை அப்புறப்படுத்த ஆரம்பித்தனர் அந்ததந்த அலுவலகங்களின் மேலாளர்கள்!

வள்ளியம்மை அவளது வீட்டில் இருந்ததால் அவளுக்கு தெரியவில்லை… விசாலாட்சி மாத்திரையின் உதவியோடு தான் உறங்குவதே… அவரது இயல்பான உறக்கம் எப்போதோ பறிபோயிருந்தது அல்லவா! மீதம் இருப்பது ஆதிரை மட்டுமே…

சப்தம் கேட்டு கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவளுக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை… பரபரப்பாக இருந்த அலுவலக அறையை நோக்கி போனவள் என்னவென்பதை போல வருணை பார்க்க… கண்களால் பொறுமையாக இருக்க கூறியவன் செல்பேசியில் யாரிடமோ பேசினான்… சற்று காட்டமாக!

அவனது ஹிந்தி உரையாடல்கள் தமிழில்…

“யாதவ்ஜி… உங்களுக்கு தெரியாமல்தான் இருக்குமா? சரி… தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன்… ஆனால் நாளைக்கு என திட்டமிடப்பட்டிருக்கும் இந்த நிகழ்வு கண்டிப்பாக நிகழ கூடாது… ”

“வருண்ஜி… நீங்கள் கூறுவது சரிதான்… இது கௌரவத்தை பாதிக்கும் செயல் என்பது எனக்கும் புரிகிறது… ஆனால் எந்த டிவிஷனில் இந்த திட்டம் இருக்கிறது என்பதை எனது கவனத்துக்கு கொண்டு வரவே இல்லையே… எனக்கு ஒரே ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று தானே கேட்கிறேன்… ”மறுபுறத்தில் மத்திய நிதித்துறைசெயலாளர் கிட்டத்தட்ட கெஞ்சி கொண்டிருந்தார்…

“அந்த ஒரு நாளில் அனைத்தும் நடந்து முடிந்து விடும் யாதவ்ஜி… நான் வேண்டுமானால் உங்களது அமைச்சரிடம் பேசட்டுமா?”

“வேண்டாம் வருண்ஜி… முடிந்த அளவு நான் காலையில் முடித்து விடுகிறேன்… ”

மத்திய நிதித்துறை செயலாளரின் பிஏவை நெருக்கியதில் உறக்கத்தையும் பாராது அவரை எழுப்பி விட்டுவிட… அவர் தலையில் கை வைத்து கொண்டார்!

“ஒன்று இவனிடம் அல்லது அவனிடம்… இருவரிடமும் மாட்டி கொண்டு… ஹே கிருஷ்ணா… ”

தன் நிலையை எண்ணி நொந்து கொண்டார்!

செல்பேசியை வைத்து விட்டு நிமிர்ந்தவன் ஆதிரையை பார்த்து மிகவும் சங்கடமான புன்னகையோடு……

“இன்கம் டேக்ஸ் ரெய்ட் வர போறாங்களாம் நாளைக்கு!… அதான் கொஞ்சம் அதை கலைச்சு இதை கலைச்சு… மேக் அப் பண்றோம் ஆதி… ” இயல்பாக அவன் கூறுவது போல தெரிந்தாலும்… எவ்வளவு கோபத்தில் இருக்கிறான் என்பதை அவளும் உணராமல் இல்லை… அரசியல்வாதிகளோடு நெருக்கமான தொடர்பில் இருக்கும் குடும்பம்… அவர்களெல்லாம் இதற்கு ஆகவில்லை என்றால் பின் எதற்கு?

அவளுக்கே இந்த உணர்வு தோன்றும் போது பெயரை காப்பாற்ற வேண்டிய நிலையில் இருப்பவனுக்கு எவ்வளவு மனஅழுத்தம் இருக்கும்?

“மாமா… டேக் இட் ஈசி… ஜஸ்ட் ஆல் இன் தி கேம்… ” அருகில் வந்து கைகளை பிடித்து கூற… அவனது இன்னொரு கையால் அவளது தலையை செல்லமாக கலைத்து விட்டான்…

“அடடா பெரிய மனுஷி ஆகிட்டீங்க போல இருக்கே… அட்வைஸ் எல்லாம் பலமா இருக்கு… ”என்று சிரிக்க…

“மாமா… ”என பத்திரம் காட்டினாள்! அவனும் சிரித்து கொண்டே வேலையை பார்க்க… செல்பேசியில் இடைவிடாமல் உத்தரவுகளை பிறப்பித்தவண்ணம் இருக்க… அவளும் தூக்கத்தை தள்ளி வைத்தாள்!

*****

“சர்… இந்த ட்ரான்சாக்ஷன் டீடைல்ஸ் வேணுமே… அந்த டாக்குமெண்ட்ஸ் எங்க?”

“சர்… இந்த பர்சேஸ் இந்த தேதில செய்துருக்கீங்க… பட் பில்ஸ் எங்க?”

இடைவிடாமல் ஒருவர் பின் ஒருவராக கேள்வி கேட்டு கொண்டிருக்க… அந்த வருமானவரி ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் கூறி கொண்டிருந்தான்… இந்த ஆய்வு லக்ஷ்மி குரூப்பின் ஒவ்வொரு அலுவலகத்திலும் நடைபெற்று கொண்டிருந்தது…

உடன் ஆதிரை அமர்ந்திருந்தாலும் அவளுக்கு இவையெல்லாம் புதிது… வேண்டாமென்று விசாலாட்சி தடுக்க இருந்தும் கற்று கொள்ளட்டும் என்று வருண் உடன் அழைத்து வந்திருந்தான்… ஸ்ருதி நகத்தை கடித்து கொண்டு பதட்டத்தின் உச்சியில் இருந்தாள்!

“சர்… இந்த டாக்குமென்ட் வேணும்… ”என்று அந்த அதிகாரி குறிப்பிட்டு கேட்டது அவன் சமீபத்தில் வாங்கிய ஒரு சொத்துடைய பத்திர நகல்… ஆனால் அவன் அதை வாங்கியது கணக்கில் வராத பணத்தை கொண்டு… ஆதிரையின் பெயரில்! தந்தையின் யோசனைப்படிதான் என்றாலும் அதை எப்படி கணக்கில் கொண்டு வருவது என்று யோசித்து கொண்டிருந்த நேரத்தில் ரெய்டு வந்துவிட அந்த பத்திரத்தை வேறு இடத்திற்கு மாற்றி இருந்தான்…

“இல்ல சர்… இது கம்பெனியோட சொத்து கிடையாதே… தனிப்பட்ட முறைல ஆதிரையோட பெர்சனல் சொத்து… அது கம்பெனி சொத்தோட சம்பந்தமே படாதே!” தெளிவாக அவன் கூற…

“சர்… இந்த சொத்தை தான் நீங்க ப்ளாக் மணில வாங்கினதா இன்பர்மேஷன் வந்திருக்கு… சோ அதற்கு நீங்க தான் பொறுப்பு!” என்று சற்று காட்டமாக அந்த அதிகாரி பிடிவாதம் பிடிக்க… வருண் நிதானமாக அந்த வார்த்தைகளை கூறினான்… உடன் அமர்ந்திருந்த ஆதிரை அதிர்ந்து அவனை பார்க்க… வார்த்தைகளை கூறியவனே உள்ளுக்குள் வெதும்பினான்!

வருணின் ஸ்டேட்மென்ட் அதிகாரிகளுக்குள்ளாக பரபரப்பை ஏற்படுத்த… தலைமை அதிகாரி செல்பேசியில் அதற்கான உத்தரவுகளை பிறப்பிக்க ஆரம்பித்தார்!

இவன் இங்கே வெதும்பி கொண்டிருக்க… ஜிகே அவனது தனிப்பட்ட அறையில் புன்னகை முகமாக செல்பேசியில் பேசிக்கொண்டிருந்தான்……

“தட்ஸ் கிரேட்… அந்த டாக்குமென்ட் அவங்க கைக்கு போயாச்சு இல்லையா… ”

“எஸ் சர்… நீங்க சொன்ன மாதிரியே செய்துட்டேன்… ”

“ம்ம்ம் குட்… தென் உங்களை ட்ரெஸ் அவுட் பண்ணிட போறாங்க… பி கேர்புல்… ”

“இல்ல சர்… இந்த போனை ரொம்ப சீக்கிரட்டா ஆபீஸ்லையே வெச்சுருக்கேன்… ஐடி ஆபீசர்ஸ் எங்க போன் எல்லாத்தையும் சீஸ் பண்ணிட்டாங்க… இப்போ ரெஸ்ட் ரூம்ல இருந்து பேசறேன் சர்… டோன்ட் ஒர்ரி… ஐ ல் மேனேஜ்… ”என்று மறுபுறம் மொழிய… புன்னகை சற்று அதிகமானது ஜிகேவுக்கு!

உற்சாகமாக அவனது நாளை ஆரம்பித்தவனுக்கு உலகம் வண்ணமயமாக தோன்றியது… மதியம் பள்ளிக்கு வருவதாக சௌமினியிடம் கூறியிருந்தான்…

சௌமினியை நினைத்த போதே மனம் குளிர்ந்து… நன்றியில் நனைந்தது! வாழ்கையின் முக்கியமான நிகழ்வுகளின் போதெல்லாம் உடனிருக்கும் நட்பு… கை கொடுத்த தோழமை… சாய்ந்து கொண்ட ஆதரவான தோள்! அவள் மட்டும் இல்லையென்றால்? நினைக்க முடியவில்லை…

இன்னும் நான்கு மணி நேரங்களை கடக்க வேண்டுமே என்று ஏக்கமாக இருந்தது… மகனை பார்க்க!இப்போதே மதியமாகிவிடாதா என்று எதிர்பார்த்து வேலைகளை விரைவாக முடித்து கொண்டிருக்க… மகேஷ் அவசரமாக கதவை தட்டிவிட்டு உள்ளே நுழைந்தான்…

“மகேஷ்… ஆப்டர்நூன் எந்த என்கேஜ்மென்ட்சும் இல்லைதானே… ஐ ஹேவ் சம் அர்ஜன்ட் ஒர்க்… ”என்று கேட்டு கொண்டே நிமிர்ந்து பார்த்தவனுக்கு அப்போதுதான் அவனது பதட்டம் கண்ணில் பட்டது!

“என்னாச்சு மகேஷ்… ஏன் இவ்வளவு ரெஸ்ட்லெஸ்ஸா தெரியறீங்க?” இயல்பான குரலில் ஜிகே கேட்க…

“சர்… ஐடி ஆபீசர்ஸ் வெளிய வெய்ட் பண்றாங்க… ” தந்தி பாஷையில் அவனுக்கு பதில் கூறியவன்… என்ன செய்வதென்பதை போல பார்க்க… அந்த வார்த்தையில் அதிர்ந்தான்… !இது எப்படி சாத்தியமானது? வருண் ஏதாவது விளையாடி இருப்பானோ?

அங்கே நடைபெற்று கொண்டிருக்கும் ரெய்டுக்கு தான் தான் காரணம் என்று கண்டுபிடித்திருப்பானோ? எப்படி முடியும்? மிகவும் ரகசியமாக செய்யபட்டதாயிற்றே! இதையெல்லாம் மனதில் உழப்பி கொண்டிருந்தாலும் வந்திருக்கும் அதிகாரிகளை எப்படி சமாளிப்பது? வியாபாரத்தில் முக்கால் பகுதி கருப்பு பணம் தானே விளையாடுகிறது! எதை துருவ இங்கு வந்திருக்கின்றனர்?

மூளை அதன் போக்கில் யோசித்து கொண்டிருக்க… வாய் அனிச்சையாக அவர்களை உள்ளே அனுப்ப கூறியது!

உள்ளே வந்த அதிகாரிகளை புன்னகை முகமாக வரவேற்றான் ஜிகே!

“ஹலோ சர்… வாங்க என்ன இந்த பக்கம்?” இயல்பாக வரவேற்றவனை அவர்களும் ஏமாற்றவில்லை…

“நத்திங்… ஒரு சின்ன என்குயரி… இன்னொரு ரெய்ட்ல இருந்தோம்… இதையும் க்ளாரிபை பண்ணிட்டு போயிடலாம்ன்னு வந்தோம் ஜிகே சர்!”

முகம் சுருங்க அவர்கள் கூறுவதை கேட்டு கொண்டிருந்தவனுக்கு அவர்களை எப்படி சமாளிப்பது என்று யோசிக்க சிறிது நேரம் தேவைப்பட்டது… அவர்கள் காட்டிக்கொள்ளவில்லை என்றாலும் ஒன்றுமில்லை என்று சொல்வதை நம்புவதற்கில்லை!

“சர்… ஜஸ்ட் எ செக்கன்ட்… ரெஸ்ட் ரூம் போயிட்டு வர்றேன்… ”என்று அவர்களிடம் கூறி விட்டு ரெஸ்ட் ரூமினுள் நுழைந்தான்!

செல்பேசியை எடுத்து முதலில் அழைத்தது மதிவாணனுக்கு!

“மதி… என்ன இது… இங்க உங்காளுங்க வந்திருக்காங்க?”

“சர்… ரொம்ப சாரி… நான் வருண் சர் ஆபீஸ்ல இருக்கேன்… அவரோட ஹெட் ஆபீஸ்ல ஏதோ ஒரு டாக்குமென்ட்டுக்கு சோர்ஸ்ஸா உங்களை சொல்லிருப்பார் போல இருக்கு… ஐ ஆம் ஹெல்ப்லெஸ்… சாரி சர்… ” அந்த மதிவாணனுக்கும் அதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்பதை புரிந்தாலும் வருண் தன்னை சொல்ல என்ன வழி இருக்கிறது என்று மிக தீவிரமாக யோசித்தான்… அவனுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை!

“இட்ஸ் ஓகே… ஐ ல் டேக் கேர்… ”என்று முடித்து விட்டு வந்த போதும் குழப்ப மேகம் சூழ்ந்திருக்க… அதே குழப்பத்தோடு அவர்கள் முன் அமர…

“சர்… லக்ஷ்மி குருப்ஸ்ல இன்னைக்கு ரெய்ட் பண்ணிருக்கோம்… ”

“ஓகே… ” ஒன்றும் அறியாதவன் போல கேட்டு கொள்ள…

“அதுல ஒரு ப்ராபர்ட்டி உங்க ஒய்ப்போட பெர்சனல் ப்ராபர்ட்டின்னு வருண் சொன்னார்… ” வெகு இயல்பாக அவர் கூற… கௌதம் மனதில் பத்தாயிரம் வால்டேஜ் ஷாக் அடித்தது போன்ற பிரமை! தன் காதுகள் எதை கேட்டன என்பது புரியாமல்…

“ஐ டோன்ட் கெட் யு… ப்ளீஸ் கம் அகைன்… ”புருவத்தை சுருக்கி அவன் கேட்க…

“உங்க ஒய்ப் மிசஸ் ஆதிரையோட பர்சனல் ப்ராபர்ட்டின்னு சொன்னாங்க… டாக்குமெண்டேஷன்ஸ் அப்படித்தான் இருக்கு… சோ அதை உங்க ப்ராபர்ட்டியோட லிஸ்ட் பண்ணிருக்கீங்களா… இல்ல இனிமே லிஸ்ட் பண்ண போற ப்ராபர்ட்டியா சர்… ” அந்த அதிகாரி மிக மிக இயல்பாக கேட்க… வார்த்தைகளால் ஒவ்வொருவரையும் சுழற்றியடித்து கொண்டிருத்த அந்த சுனாமி போகும் வழி அறியாது விழித்தது!

“நீங்க எந்த ப்ராபர்ட்டிய சொல்றீங்க?”

அவன் குழப்பமாக கேட்க… அவர் சம்பந்தப்பட்ட சொத்து விவரத்தை தெரிவிக்க… வருண் அதில் விளையாடி இவனை கோர்த்து விட்டிருப்பது புரிந்தது! இந்த நேரத்தில் பின்னோக்கி செல்வதோ எதையும் மறுத்து பேசுவதோ சரியாகாது என்பதை உணர்ந்தவன்…

“ஓகே சர்… அதை இன்னும் லிஸ்ட் பண்ணலை… இயர் என்ட் சப்மிஷன் அப்போ நான் அதை கொண்டு வந்துடறேன்… ”

“ஓகே சர்… பைன்… ”அந்த இரு அதிகாரிகளும் விடைபெற… உள்ளுக்குள் கோபம் கனன்றது…

அவனை சிக்க வைக்கவென தான் மதிவாணனை வைத்து இந்த ரெய்டுக்கு ஏற்பாடு செய்ததே… அதை பெரிய அளவிலும் கொண்டு செல்லாமல் பெயருக்கு சிறு அதிர்வாக இருக்கும்படி அவன் கொண்டு போக கூறினாலும்… அந்த குடும்பத்துக்கு ரெய்ட் என்பது சிறு சுணக்கம் மட்டுமே என்பதையும் அறியாதவன் அல்ல…

ஆனால் வருணோ ஜிகே வெளியே கொண்டு வர திட்டமிட்ட சொத்தை வைத்தே அவனுக்கே திருப்பி அடித்தது கோபத்தை கிளறி விட்டது… அதை காட்டிலும் ஆதிரையை மனைவி என்று கூறியது அவனது கடுகடுப்பை மேலும் அதிகபடுத்த அறைக்குள் அடிபட்ட புலியாக… தன் காயத்தை தானே கீறி விட்டு வலியை அனுபவிக்கும் புலியாக சீறி கொண்டிருந்தான்!

ஆனாலும் மனதோரம் மழை! கண்ணுக்குள் பொத்தி வைத்த அந்த சின்ன கண்ணனை நெஞ்சோடு அணைத்து கொள்ள மனம் பரபரத்தது!

செல்பேசி அழைக்க… யாரென்று எடுத்து பார்த்தான்!

சிதம்பரம் அழைத்திருந்தார்!

கடைசியாக எப்போது அவரிடம் பேசியது என்று நினைத்து பார்த்தான்…

நினைவில்லை!

எப்போதோ… பேசிய நினைவு!

வலித்தது!

செல்பேசி அழைத்து கொண்டே இருக்க… ஏற்கனவே கொந்தளித்து கொண்டிருந்த மனம் அவரது அழைப்பை பார்த்ததும் பூகம்பம் வந்த நிலம் போல அதிர்ந்து கொண்டிருந்தது!

எடுப்பதா வேண்டாமா? யோசித்து கொண்டிருக்கும் போதே நான்காவது முறையாக அழைக்க… வேறு ஒன்றும் தோன்றாமல் செல்பேசிக்கு உயிர் கொடுத்தான்…

“கௌதம்… ” ஏக்கங்களை மொத்தமாக சுமந்து அவர் அழைத்த அழைப்பு உயிர் வரை தீண்ட… நெஞ்சம் வலித்தது… வார்த்தை வெளிவர மறுத்தது… தொண்டை குழிக்குள் வார்த்தைகள் சிக்கி கொள்ள… மௌனம் அவனை போர்த்தி கொள்ள…

“அப்பு… இந்த அப்பா கிட்ட பேசவே மாட்டியா?”

அப்போதும் மௌனத்தை கைவிடாமல் இருக்க…

“கெளதம்… ”

சிதம்பரத்தின் குரல் உடைந்து இருந்ததோ? அழுகிறாரா? அவர் அழுகிறாரா? அவனால் நம்ப முடியவில்லை… பிள்ளை பாசம் அப்படிப்பட்டதா? இல்லை தங்கையின் பெண்ணுக்காக மீண்டும் தன்னிடம் வந்திருக்கிறாரா? என்னவென்று அவனால் ஊகிக்க முடியவில்லை…

ஆனால் மனசாட்சியோ… அவனையே கேள்வி கேட்டது… !!

ஐந்து வருடமாக பார்க்காத… அவனது பிறப்பை கூட அறியாத… இப்போது பார்த்த உன் மகனின் மேல் உனக்கு இருக்கும் பாசம் உண்மையென்றால்… பிறந்தது முதல் மார் மேலும் தோள் மேலும் போட்டு வளர்த்து பதினைந்து வருடங்களாக நண்பனுக்கு நண்பனாக ஆசானுக்கு ஆசானாக… தந்தையுமாக… சில நேரங்களில் தாயுமாக இருந்த உனது தந்தையின் பாசம் குறைவானதா?

மனசாட்சி கேட்ட கேள்வியிலும் அவரது அழைப்பிலும் மனம் பிசைந்தது… பிருத்வியை பார்க்காமல் இருந்திருந்தால் தன் தந்தையிடம் இளகி இருக்க கூடுமா? கண்டிப்பாக இருக்காது!… ஆனால் தற்போது தனது மகனை கொண்டு தந்தையை அளந்தது மனம்… நாற்காலியில் கண்களை மூடி சாய்ந்து அமர்ந்திருந்த அவனது கண்ணோரம் நீர் துளிர்த்தது!

“சொல்லுங்க… ”

அவனது அந்த ஒற்றை சொல் அவரை விண்ணுக்கும் மண்ணுக்குமாக குதிக்க வைத்தது… தன் மகனா? கௌதமா? என்னிடம் பேசி விட்டானா? அவரால் அந்த மகிழ்ச்சியை தாள முடியவில்லை… ஆனாலும் சில விஷயங்களை பேசியே ஆக வேண்டியிருக்கிறதே… விட்டு கொடுக்கவும் முடியவில்லை!

“வீட்டுக்கு வா தம்பி!”

“முடியாது… ” ஒரே வார்த்தையில் முடிக்க…

“உனக்காக இல்ல தம்பி… பிருத்விக்காக… ” அவருக்குமே அவனது பலவீனம் தெரிந்து விட்டதோ என்று தோன்றியது கௌதமுக்கு! அவர் கூறுவது அவருக்கு நியாயமென பட்டாலும் அவனால் கண்டிப்பாக சில விஷயங்களை ஒப்புகொள்ள முடியாது என தோன்றியது… கிடைக்காத நியாயங்களும் பொருந்தாத தீர்ப்புக்களும் தன் வாழ்கையை சின்னபின்னபடுத்தி விட்டதோ என்று தோன்றியது அவனுக்கு…

இடையில் உள்ள பிரச்சனைகள் அப்படியே இருக்க… எதற்கு இந்த வீண் வேலை என்று நினைத்து கொண்டு…

“எனக்கு எதுவுமே தேவை இல்ல… என் மகனை எப்படி என் கிட்ட கொண்டு வர்றதுன்னு எனக்கு தெரியும்! ஒருக்காலும் அவனை வப்பாட்டி பெத்த பையன்னு சொல்ல வச்சுட மாட்டேன்… அவன் என் மகன்… எனக்கு பிறந்தவன்… இதை எங்க வேணும்னாலும் சொல்ல எனக்கு தைரியம் இருக்கு… துணிச்சல் இருக்கு… அவன் என் மகனாத்தான் வளர்வான்… உங்க தலையீடு இதுல தேவையே இல்ல… ”வார்த்தைகளால் அவனது தந்தையை வறுத்து எடுத்தவன்… இதற்கு மேல் பேச ஒன்றுமில்லையென வைத்து விட…

சிலையென சமைந்து நின்றார் சிதம்பரம்!

Written by

Ardent reader, kirukkufying something, want to travel with characters around me.

error: Content is protected !!