DUECP 12 riyaraj

அத்தியாயம் 12

வெற்றி, கனி இருவரின் திருமணம் முடிந்து.. நாட்கள் வேகமாய் கடந்து கொண்டிருக்க, கனிக்கு எப்படி கழிந்ததோ, வெற்றிக்கு மிக மிக பரபரப்பானதாகவே போனது, கனியிடம் பேசவும் நேரமின்றி…

அன்று இரவு, கனியின் கதை சொல்லும் படலத்தில் கடுப்பாகி இருந்தவனை பார்த்த போது, ‘அச்சோ போச்சு… நம்மாளு போலீஸ்ன்னு மறந்து போய், இப்படி கடுப்பேத்திட்டோமே..! கருப்பு சாமி முறைச்சு பார்க்கற மாதிரியே பார்க்கறாரே..!! பொட்டுன்னு துப்பாக்கிய தூக்கி போட்டுடுவாரோ…!!!’ என்று ஒரு நிமிடம் பயம் வந்தாலும், ‘ச்ச.. ச்சா… மாமா நம்மள அப்படியெல்லாம் போட்டு தள்ள மாட்டாங்க!’ என்ற தைரியமும் கூட, கொஞ்சம் வெளியே கெத்தாகவே காட்டி நின்றாள், அவன் வேகமாய் அவள் புறம் வரும் வரையில்….

அவன் எழுந்த வேகத்திற்கும், அவளிடம் வந்த வேகத்திற்கும், கனியின் ஒட்டுமொத்த தைரியமும் கற்புரமாய் கரைய.. “மாமா.. மாமா… ப்ளீஸ் மாமா! தெரியாம வம்பு பண்ணிட்டேன் மாமா.. இனிமே வாயே திறக்க மாட்டேன் மாமா.. நீ என்ன சொல்றீயோ, அதே மாதிரி அப்படியே அடி மாறாம செய்யறேன் மாமா… அடிச்சிடாத மாமா.. குழந்த புள்ள உடம்பு தாங்காது மாமா…!” என கண்களை இறுக மூடி, காதை இரு கரம் கொண்டு மூடி, மூச்சுக்கு முன்னூறு மாமா போட்டவள்.. சிறிது நேரம் சென்றும், வெற்றி எதுவும் செய்யாமல் இருப்பதை பார்த்து, ஒற்றை கண்ணை திறந்து, மெல்ல தலைநிமிர்த்தி பார்த்தவள், பட்டென விழி விரித்து, அதிர்ந்து நின்றாள், வெற்றி நின்ற கோலத்தை கண்டு….

அதுவரை ட்ரக் போண்டும், டீசர்டுமாய் இருந்தவன், இவள் பேசி முடித்து நிமிர்ந்த போது, “ம்ம்…! ம்ம்..!” என்றபடியே, வேக வேகமாய், தனது  பேண்ட்டை கழட்டிவிட்டு.. வெளியே செல்வதற்கு தோதாய், பார்மல் பேண்ட்டை, போடுவதை கண்டு, ஒரு நொடி திகைத்தாலும், தன் முன் அவன் செய்யும் செயலில், “ச்சீ… மாமா, என்னது?!”  என்றபடி திரும்பி நின்றாள் முகத்தை மூடி…

உடையை மாற்றிக்கொண்டே, காதில் இருந்த ஹெட் போனில்.. “சதீஷ்.. வேற இன்பார்மேஷன் கிடச்சா, இமீடியட்டா எனக்கு இன்பார்ம் பண்ணிடு.. இன்னும் கொஞ்ச நேரத்துல, நா ஸ்டேஷன் வந்திடுறேன். சார்கிட்டயும் நா வர்றேன்னு இன்பார்ம் பண்ணிடு” என பேசியவனின் பதட்டமும், பரபரப்பும் ஏதோ சரியில்லை என்பது மட்டும் புரியவைக்க, இதுவரை இருந்த விளையாட்டு தனத்தை துறந்தவளாய், அவனின் பர்ஸ், வாட்ச் என எடுத்து கொடுத்தவள், கேள்வியாய் அவன் முகம் பார்க்க, 

“ஒரு முக்கியமான கேஸ்டா, இப்ப விளக்கம் சொல்ல முடியாது.. நா எப்ப வருவேன்னு தெரியாது.. அம்மாகிட்ட சொல்லிடு, பத்திரமா இருங்க ரெண்டு பேரும், டைம் கிடச்சா கால் பண்றேன்!” என்றபடியே, ஸ்சூவை அணிந்தவன், அடுத்த சில நிமிடத்தில், வாகனத்தில் பறந்திருந்தான் தனது பணிக்காக…..

‘என்ன நடந்தது!’ என்பது புரியாமல், சிறிது நேரம் வாசலிலேயே நின்றவளை தழுவிய குளிர்ந்த காற்றில், நிற்கும் இடமும், சூழலும் நினைவில் எழ, கதவை அடைத்து விட்டு, வந்தவள் குழப்பத்தோடே உறங்கி போனாள்.

மறுநாள் விடியலில், தொலைகாட்சியில் வந்த செய்தியை பார்த்த போது தான் தெரிந்தது, வெற்றி அவ்வளவு பதட்டத்தோடு சென்றதன் காரணம்.. தமிழ்நாட்டில், அதுவும் குறிப்பாக சென்னையிலிருந்து மட்டும், ஒரே நாளில் கிட்டத்தட்ட நாற்பது குழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதை, அனைத்து மீடியாக்களும், ஹாட் டாப்பிக்காக ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. 

அன்று முதல் வெற்றி வீட்டிற்கு வருவதே, ரெப்ரஸ் செய்வதற்கு மட்டுமே என்பது போல ஆகிற்று. 

கிட்டத்தட்ட பத்து நாட்கள் சென்ற நிலையில், சந்திராம்மா, “இந்த மாதிரி நிறைய தடவை ஆகியிருக்கு கனி… நேரம் காலம் இல்லாம, நல்லது கெட்டதுன்னு ஒன்னுக்கும் போகாம, வீடு வாசல்ன்னு நினப்பே இல்லாம, சுத்தறதெல்லாம் என்ன பொழப்பு. 

இது  வேணாம்டா.. வெற்றி… ஏதோ உங்க அப்பா தான், ஆசை பட்டு சொன்னாருன்னு.. இந்த வேலையில சேர்ந்த, இப்ப அவரோட ஆசைக்கு கொஞ்ச நாள் வேல பார்த்தாச்சு.. இந்த வேலைய விட்டுடு ன்னு சொன்னா, கேட்டா தானே!” என ஆதங்கத்தோடு சொல்ல, 

“அத்தம்மா, நீங்க வேலையா பார்க்கிறத, மாமா சேவையா பார்க்கறாங்க…! இதுல தப்பில்லையே…. அதோட உத்தியோகம் புருஷலட்சணம்…!” என கண்சிமிட்டி லேசான புன்னகையோடு, வெற்றி தரப்பை விட்டு கொடுக்காமல் பேசியவளை, 

“அவன வேலை பார்க்க வேணாம், சம்பாதிக்க வேணாமின்னு சொல்லலடா கனி, இப்பவும்  நமக்கு இருக்கற சொத்தை பராமரிச்சாலே போதும், இன்னும் ரெண்டு தலைமுறைக்கு வரும்… வீணா தூங்காம, சாப்பிடாம உடம்ப கெடுத்துட்டு நிம்மதியில்லாம… இருக்கறதுக்கா வேலையும்,  சம்பாத்தியமும்..” என தனது பக்கத்திலிருந்தே பேசியவர், மேலும்..

“நீயே சொல்லு கனி.. கல்யாணம் ஆகி ரெண்டாவது நாள் போனவன், இதுவரைக்கும் வீட்டுலையே தங்கல…! புதுசா கல்யாணம் பண்ணோமே… வீட்டுல ஒருத்தி இருக்கான்னாவது தோணுதா, அவனுக்கு..! கல்யாணம் நடந்தாலாவது, ஒழுங்கா வீட்டோட இருப்பான்னு நினச்சா… எங்கே….!” என சலிப்பாய் கூறியவரின், அருகே அமர்ந்து அவரின் கை பற்றி, முகம் பார்த்தவாறு,

“அத்தம்மா, ஒரு அம்மாவா உங்க ஆதங்கம் ரொம்ப ரொம்ப சரியா தான் இருக்கு…! ஒவ்வொரு அம்மாவும் எதிர்பார்க்கறது, தன் மகன் குடும்பம், குழந்தை, சேமிப்பு, சந்தோஷம், பாதுகாப்பு எல்லாமே கொண்டு சிறப்பா வாழணுமின்னு தான்.. 

சரி… எல்லாருமே அப்படி இருந்திட்டா.. யார் தான், இந்த மாதிரி குற்றம் செய்யறவங்க கிட்ட இருந்து மத்தவங்கள காப்பாத்தறது…?!” என கேட்ட கனியிடம்,  

“அதுக்கு…  என் புள்ள தான் போகணுமா…?! எனக்கும், அவன் பத்திரமா வரணுமின்னு இருக்காதா..?! நா என்ன ஏழு புள்ளையா வச்சிருக்கேன். ஒன்னே ஒன்னு… அவனுக்கு எதுவும் ஆகிட கூடாது. சந்தோஷமா நிம்மதியா வாழணும் ன்னு ஆசை படறது குத்தமா?” என வந்த மருமகளும் தனக்காக யோசிக்காமல் மகன் சார்பாக பேசியதில் வருத்தத்தோடு கேட்க, 

“அத்தம்மா.. நீங்க ஆசை படறதோ, நீங்க நினைக்கறதுலையோ தப்பே கிடையாது. ஆனா மாமா பார்க்கற தொழில், உயிர் காக்குற டாக்டர் தொழில விடவும் மேன்மையானது தெரியுமா? டாக்டர்ஸ் தான் கடவுள்ன்னு எல்லாரும் சொல்றாங்க. பட், அவங்கள விடவும் பலமடங்கு உயர்ந்தவங்க போலீஸ். 

இப்ப டாக்டர் ஒரு நோயாளி வந்தா, அவர காப்பாத்த முயற்சி மட்டும் தான் செய்வாங்க. அவங்களால முடுஞ்ச எபெக்ட் போட்டு போராடுவாங்க. பல சமயம் காப்பாத்திடறாங்க.. சில கேஸ் தோத்தும் போயிடும். இதுல அவங்களுக்கு எந்த லாஸும் கிடையவே கிடையாது.

ஆனா, போலீஸ் அப்படி இல்ல அத்தம்மா.. அவங்களுக்கு ஒரு உயிர காப்பாத்த போகும் போது, எப்படி வேணுமின்னாலும் ஆபத்து தேடிவரும். அவங்க கொஞ்சம் சுதாரிப்பா இல்லாம போனா, உயிர் போகவும் வாய்ப்பு இருக்கு. பல போலீஸ் அதிகாரிங்க தன்னோட கை, கால் இழந்து வீட்டுல முடங்கி இருக்காங்க.. 

நம்ம ஜாலியா கொண்டாடுற, எல்லா கொண்டாட்டத்துக்கும், அவங்க, தன்னோட வீட்டு கொண்டாட்டத்த விட்டுட்டு, வந்து நிக்கறதால தான் பாதுகாப்பா எல்லாரும் இருக்க முடியுது. அப்படி பட்ட உன்னதமான வேலையில இருக்கறதுக்கு, நீங்க பெருமை படணும் அத்தம்மா. மாமா அன்னைக்கி கண்ணு சிவந்திருந்துச்சே, அதுக்காக ஹாஸ்பிடல் போயிருப்பாங்க போல, வாங்கின மருந்த கூட சரியா எடுத்துக்காம, ஓடறாங்கன்னா.. அவங்க வேலை மேல வச்சிருக்கற மதிப்ப, நீங்க புருஞ்சுக்கோங்க அத்தம்மா. அத விட்டுட்டு இப்படி பேசறது சரியே இல்ல..!

இப்ப மாமா எடுத்திருக்கற, கேஸ் பார்த்தீங்க இல்ல, பாவம் அத்தம்மா, பச்ச குழந்தையில இருந்து, பதினஞ்சு வயசு பொண்ணு வரை கடத்தியிருக்காங்க. அவங்கள, நல்லபடியா மீட்டு கொண்டு வர, போராடற உங்க புள்ளைய பாராட்டாம இப்படி பேசறது ட்டூ பேட்…!” என்றவள், 

“இப்ப என்ன அத்தம்மா, உங்களுக்கு வாரிசு வேணும், உங்க பேர் சொல்ல! அவ்வளவு தானே! விடுங்க மாமா வேலை முடுஞ்சு வந்ததும், கேஸ்ஸுல எப்படி, தீயா வேலை பார்த்தாரோ… அதே மாதிரி இதுலையும் தீயா வேலை பார்த்து, உங்கள பாட்டி ஆக்கிடுறோம்.. இப்ப ஹேப்பியா..!” என இதுவரை பொறுப்பாக பேசியதற்கு நேர் மாறாக,விளையாட்டாக பேசியவளை நெட்டி முறித்து.. 

“ஜாடிக்கு ஏத்த மூடி தான் கனிம்மா.. அவன்கிட்ட வேலைய விட சொல்லி பேசினாலும், இப்படி தான் பக்கம் பக்கமா பேசியே சரிகட்டிடுவான். நீயும், அதே மாதிரி இருக்க. என்னைய பொருத்த வரை, என் குடும்பம் நல்லா இருக்கறது முக்கியம்.. சோ, நீயாச்சு உன் மாமானாச்சு.. எந்த ஆபத்தும் இல்லாம உன் மாமன் வந்தா, எனக்கு அதுவே போதும்..!” என்று சமாதானம் ஆனவரின், தோள் மீது சாய்ந்தவள், 

“டோண்ட் வொரி, அத்தம்மா..! மாமா எப்பவும் பர்பெக்ட்டா டார்கெட் பிக்ஸ் பண்ணி தான், ஏக்க்ஷன் எடுப்பாங்க.. சோ, டோண்ட் வொரி… பீ ஹேப்பீ…!” என விவேக் மாடுலேஷனில் சொல்லி சிரிக்க, சந்திராவும், இதுவரை இருந்த மனஅழுத்தம் நீங்க நகைத்தார்.

கனி பேச ஆரம்பிக்கும் போதே வந்து விட்ட வெற்றி, கனியின் பேச்சில் திகைப்போடு, பெருமையாய் பார்த்தான் எனில், அவளின் இறுதி பேச்சில் சிரித்தபடி, ‘அதானே. இந்த அராத்து அதோட குணத்த மாத்திக்காதே..!’ என்று நினைத்தபடி, அப்போது தான் வந்தது போல, நேராக மாடிக்கு சென்றவன், வந்த வேலையை முடித்து, மீண்டும் சென்றான் தனது வேலையை விரைவிலேயே முடிக்க..

error: Content is protected !!