DUECP 13
DUECP 13
அத்தியாயம் 13
நாட்கள் வேகமாய் நகர, படுக்கையில் நல்ல உறக்கத்தில் இருந்த கனியின் காதோரம், மெல்ல உரசிய மீசையும் “கனிம்மா..” என்ற அழைப்பிலும், சினுங்கலோடு, “போ மாமா…! சும்மா தூங்க விடாம…” என்ற படி கண்விழிக்க, எப்போதும் போல இப்போதும், அருகே யாருமில்ல வெற்றிடம், அவளை மிகவும் தோய்வுற செய்தது.
புரண்டு, வெற்றி படுக்கும் பகுதிக்கு வந்தவள், அவனின் தலையணையை பார்த்தவாறு படுத்து,
“டேய் மாமா… வரவர நீ ரொம்ப என்னைய அவாய்ட் பண்ற.. இது சரியில்ல பார்த்துக்கோ.. கனவுல மட்டும் டெய்லி வந்து, “கனிம்மா..! முனிம்மா..!” ன்னு கொஞ்ச வேண்டியது… அடியேய் கனி, இப்படியே போனா.. கனவுலையே குடுத்தனம் நடத்தி, புள்ளகுட்டி கூட கனவுல தான் பெத்துக்க போற…!” என புலம்பியவள்,
கோபமாக, அந்த தலையணையே வெற்றியின் சட்டையை பிடிப்பது போல பிடித்தவள், “இதோ பாரு மாமா, ஏதோ, முக்கியமான கேஸ், அதுவும் குழந்தைங்க சம்மந்தமானது ன்னு, நானும் விட்டு கொடுத்து, அடக்க ஒடுக்கமா இருந்தா.. அந்த கேஸ் முடுஞ்சு, ரெண்டு நாள் ஆகியும், கையில சிக்காம ஆட்டமா காட்டுற. நீ மட்டும் என்கிட்ட மாட்டு… அப்புறம் பாரு, இந்த கனி என்ன செய்யறான்னு…?!” என தனது மனதில் இருந்த ஏக்கத்தை, கோபத்தை அவளின் பாணியில் வெளிப்படுத்தியபடி இருந்தவள்,
“மாட்டினா, என்னடீ செய்வ?!” என்ற வெற்றியின் குரலில் அடித்துபிடித்து எழுந்தபடியே தடுமாற்றத்தோடு, “மாமா… எப்ப வந்த நீ!” என கேட்க,
“ஹும், நீ ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே வந்திட்டேன்!” என சொல்ல,
கனியின் மனமோ, ‘தான் பேசியதை கேட்டிருப்பானோ?!’ என்பதை விட அதிதீவிரமாய், ‘அப்ப காலைல.. கண்டது கனவா?! இல்ல, நிஜமாவே?! மாமா தான் அப்படி பண்ணியிருப்பாங்களோ?!’ என்று யோசித்தபடி நின்றவளை பார்த்தவன்,
“இப்படியே எத்தன மணி நேரம், நிக்க போற, இத்தன நாள் கழிச்சு, ஒருத்தன் வீட்டுக்கு வந்திருக்கான்னு கொஞ்சமாச்சும்.. அக்கறை இருக்கா..? போ, போய் அம்மா கஞ்சி வச்சிருந்தா எடுத்துட்டு வா..!” என சிடுசிடுக்க,
‘இதோ… வந்ததும் ஆரம்பிச்சிட்டாரு..! கனவுல மட்டும், நல்லா கொஞ்சற மாமா… நிஜத்துல இப்படி தான், நிமிஷத்துக்கு நிமிஷம் மாறி மாறி நடக்கற.. இதெல்லாம் சரியில்ல..!’ என மீண்டும் மனதினுள்ளே பேசியவளை, வெற்றி பார்த்த பார்வையில்,
“இதுலையெல்லாம் குறச்சலே இல்ல. எப்ப பார்த்தாலும் முறச்சுக்கிட்டு.. பொண்டாட்டிய பார்த்து விடுற லுக்கா இது… மக்கு…
நல்லவேளை, மாமாக்கு மூனாவது கண் இல்ல.. அப்படி மட்டும் இருந்திருந்தா, அவ்வளவு தான்.. இந்நேரம் நம்ம காலி.. கனி, முதல்ல போய் கஞ்சிய கொண்டு வந்து கொடு.. குடுச்சிட்டு, இன்னும் கொஞ்சம் வெரப்பா நிக்கட்டும்…!” என்று முனுமுனுத்தபடியே, கீழே சென்றவளை பார்க்க, வெற்றியால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அவள் வெளியேறிய அடுத்த நொடி, அவளின் செய்கையில் இதுவரை கஷ்டப்பட்டு அடக்கி வைத்திருந்த சிரிப்பை வெளியிட்டவன், தனது உடையை மாற்றிவிட்டு, கீழே சென்றான்.
அந்த கேஸ் சம்மந்தமான, அனைத்து வேலைகளும், இரு நாட்களுக்கு முன்பே முடிந்திருந்தாலும், மேலும் சில நடவடிக்கைகளையும், முடித்துவிட்டு விடியற்காலையில், தனது அறைக்கு வர, கனி படுத்திருந்த கோலம் பார்க்க, அவனுக்கு இப்போதே அவள் வேண்டும் என்ற எண்ணம் தோன்றினாலும், அவளை கொஞ்சம் குழப்பிவிட்டு, சர்ப்ரைஸ்ஸாக எதாவது செய்யலாம் என்று முடிவு செய்தவன், அதற்கான ஏற்பாடுகளை செய்து விட்டு,
அவளருகே சென்று மெல்ல முத்தமிட்டு அழைக்க, கனவு என நினைத்து கொண்டு, சினுங்கியவளை பிரிய மனமில்லாது, சட்டென விலகி நின்றவன், தனது திட்டப்படி, அவளை வெறுப்பேத்தி கீழே அனுப்பி வைத்தான்.
நேராக கடுப்போடு கிச்சனுக்கு வந்தவள், “அத்தம்மா… உங்க பையன் கிட்ட சொல்லி வைங்க.. இந்த கனி பொறுமையா.. இருக்கற வரைக்கும் தான் கூலா இருப்பா.. கோபம் வந்திச்சு.. குலுக்கின கோலா மாதிரி பொங்கிடுவா…!” என அலப்பரையை கூட்ட,
என்ன தான் அன்று, வெற்றிக்காக பேசினாலும், சில தினங்களாய் அவளின் அமைதியும், யோசனையோடு கூடி முகமும், சந்திராவையும் கவலைபடவே செய்தது. இப்போது, பழைய படி பேசும், தன் ஆசை மருமகளை பார்த்தவர், “என்னாச்சி கனிம்மா.. வெற்றி என்ன சொன்னான், நீ இப்படி காண்டாகற மாதிரி…!” என அவரும் அவளுக்கு இணையாக பேச்சை வளர்த்த படி திரும்ப,
தனது இரு கைகளையும் கட்டி, கிச்சன் வாயிலில் நின்றிருந்த வெற்றி, சைகையில், ‘தான் இருப்பதை சொல்ல வேண்டாம்!’ என்றிட, சரியென தலையசைத்தவர், கனியின் பதிலுக்காக பார்க்க,
வெற்றி நிற்பதை அறியாமல் கனி, “நீங்க கஞ்சிய கொடுத்து, நெட்டகொக்கா மட்டுமில்லாம.. நல்லா வெறப்பா வேற வளர்த்து வச்சிருக்கீங்களே.. ஒழிய வெவரமா வளர்க்காம போயிட்டீங்க! அதென்ன எப்ப பார்த்தாலும், மூஞ்சிய வெறப்பா, முறப்பா வச்சிட்டு சுத்தறது..?! அப்படி முறைக்கும் போது, மூக்குலையே நங்குன்னு குத்தனும் போல இருக்கு…!” என பேச்சுக்கு தகுந்த, நடிப்போடு சொல்லிக்கொண்டிருக்க, தாயும், மகனும் அவளின் பேச்சு, செயல் இரண்டிலும் வரத்துடித்த சிரிப்பை, கஷ்டப்பட்டு அடக்கி நின்றனர் அவளின் சேட்டையை ரசிப்பதற்காக..
“புதுசா கல்யாணம் பண்ணோமே.. பொண்டாட்டி ன்னு ஒருத்தி வீட்டுல இருக்காளே.. வந்தமா, அவள கொஞ்சுனமா, அவளை குஷிபடுத்துனமான்னு.. இல்லாம, போ போய் கஞ்சி கொண்டு வா, சோறு கொண்டு வான்னு … சரியான சோத்து மூட்ட…!” என்றவள்,
“அத்தம்மா… தெரியாம தான் கேட்கறேன், உங்க பையனுக்கு அதுல வெவரம் ரொம்ப கம்மியா இருக்கும் போலவே, நாலு கொரியன் சீரியல பார்க்க வச்சா என்ன..?!” என கேட்க, மகனின் முகம் போன போக்கை பார்த்து, கஷ்டப்பட்டு சிரிப்பை கட்டுப்படுத்தியவர், “அத என்கிட்ட கேட்கறதுக்கு பதிலா, உன் மாமா பின்னாடி தான் நிக்கறான், அவனையே கேளு!” என்றபடி, கிச்சன் மேடையை நோக்கி திரும்ப,
அதுவரை, ஜாலியாக பேசியவளுக்கு, தான் பேசியதை வெற்றி கேட்டுவிட்டான்.. என தெரிந்ததும், தயக்கத்தோடு ட்ரேட் மார்க், “ஈ….!!” என்ற அசட்டு சிரிப்போடு, அவனை பார்க்க, உள்ளே சிரிப்பை அடக்கி வெளியே முன்பை விட அதிகமாய் முறைத்தபடி நின்றவன்,
“அராத்து, நீயெல்லாம் சப்ஸ்ட்யூட் இல்லாத பீஸ்டீ.. எப்படி.. எப்படி நாங்க வெரப்பா, முறப்பா திரியறோமா..?! அடிங்க..!!” என விரட்ட,
“அத்தம்மா… ஹெல்ப் மீ..!!!” என்ற படி கனியும், “சிக்கினா.. உனக்கு இருக்கு டீ!!!” என்று வெற்றி சிரித்தபடியும், சந்திராவை இடையே விடுத்து, இருவரும் துறத்தியபடி இருக்க,
இருவரின், சிறுபிள்ளை விளையாட்டு மனதுக்கு நிறைவை அவருக்கு தந்தது என்றால் மிகையில்லை. வெற்றி தேவைக்கு சிரிப்பானே ஒழிய, இதுபோல மலர்ந்து சிரித்தது எல்லாம் கிடையாது.. அதுவும் போலீஸ் ஆன பிறகு, அவனின் புன்னகையே குறைந்தவிட்டது என்று தான் சொல்ல வேண்டும். இப்போது கனியால், அவன் சிரிப்பதும், சிறுபிள்ளை போல துரத்தி கொண்டிருப்பதும், பார்க்கும் போது, மனம் முழுதும் நிறைந்து போயிற்று தாயாய் சந்திராவிற்கு….
துரத்தியபடியே, வெளி தோட்டத்திற்கு சென்றவர்களுக்கு, அங்கே தோட்டத்து செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும் பைப் கண்ணில் பட, அதற்கும் போட்டி போட்டு எடுத்த வெற்றி, முதலில் கனியை மொத்தமாய் நனைய வைத்தான் எனில், அவனோடு மல்லுக்கட்டி, அதை பரித்த கனியும் வெற்றியை முழுவதுமாய் நனைத்து விட்டே ஓய்ந்தாள்.
அதுவரை ஓட்டமும், ஆட்டமும் கழிந்த பொழுதின் முடிவில், இருவரும் கலைத்து போய், அங்கிருந்த புல்லில் மல்லாந்து படுக்க, இருவரின் முகமும் அந்த தோட்டத்து மலர்களை போல, மலர்ந்து கிடந்தது.
மூச்சு வாங்க, சிறிது நேரம் வானத்தை பார்த்து கிடந்தவர்கள், சில நிமிடத்திற்கு பின் ஒருவரை ஒருவர் பார்க்க, வெற்றியின் பார்வையில், முகம் இன்னும் வெக்கத்தால், மலர்ந்து சிவந்து இருக்க, ரோஜா மீதான பனித்துளி போல், அங்கங்கே வீற்றிருந்த நீர்துளி, இருக்கும் இடத்தை மறந்து, அவனை அதை பருக அழைப்பு விடுப்பதாய் தோன்ற, அவளை மிகவும் நெருங்கி, அவளின் நீர்துளியை உதடு கொண்டு துடைத்திடும் நேரம்,
பெண்மைக்கே உரித்தான நாணமும், இடம் பற்றிய அக்கரையும், கனியை வெற்றியின் நெருக்கத்தை அனுபவிக்கவிடாது தடுக்க, அவன் இதழ் தன் முகம் நெருங்கும் முன்பே, அவளின் கரம் கொண்டு, அவனின் இதழுக்கு தடை போட்டவள், தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட வார்த்தையை கஷ்டப்பட்டு, “மாமா.. இங்க வேணாமே..!” என சொல்ல, அதுவும் சத்தமின்றி காற்றாகி தான் போனது.. அவளுக்கே ஆச்சர்யம் தான், வாயாடி பட்டம் பெற்ற தன் நிலைமையை நினைத்து….
அவளின் முகத்தையே பார்த்தபடி இருந்த வெற்றிக்கு, அவளின் வார்த்தை தெளிவாக புரியாத போதும், கண்களின் தவிப்பும், தவிர்ப்பும்.. இருக்கும் சூழலை தெளிவாக்க, சிறு புன்னகையோடு, தன் இதழுக்கு தடையாய், இருந்த அவளின் மென்மையான கரத்திற்கு முத்தத்தை பரிசாக்கினான் வெற்றி…
அவன் இதழில், கரம் வைத்திருந்த கனிக்கோ.. அவனின் மூச்சு காற்றின் சூடும், இப்போது அவன் தந்த முத்தத்தினால் வந்த கூச்சமும், அவனிடமிருந்த தனது கரத்தை பிரித்தவள், அவனை திரும்பியும், பாராமல் தங்களின் அறையை நோக்கி ஓட்டமெடுத்தாள்.
அவள் விலகி சென்றாலும், மனதில் ஒருவித நிறைவோடு, மீண்டும் தனது இரு கரத்தையும் தலைக்கு கீழ் கோர்த்து, வானத்தை நோக்கி படுத்தவன், நடந்த நிகழ்வின் இனிமையை சுகமாய் கண்மூடி ரசிக்க துவங்கினான்.
எவ்வளவு நேரம் அப்படி இருந்தானோ, சந்திராவின் அழைப்பில், அதே சிரிப்போடு வீட்டிற்குள் வந்தவன், கனியே தேட, அவளோ தனது அத்தம்மாவை கேடையமாக்கி, அவருக்கு பின் மறைந்திருந்தாள். “அம்மா, நா போய் பிரஸ்ஸாகி வர்றேன் டிபன் எடுத்து வைங்க?!” என்றபடி சென்றவன், வரும் போதே, வெளியே செல்வது போல பார்மல் உடையணிந்து, ஒரு பேக்கோடு வர, அதுவரை இருந்த நிலை மாறி, கனியின் முகம் மெல்ல சுருங்கி போனது…
*********
கனியை போலவே, சந்திராவிற்கும் மகனின் இந்த செயல் கோபத்தை கொடுக்க, “வெற்றி… என்ன நினச்சிட்டு இருக்க உன் மனசுல?! கேஸ்ஸு, அது இதுன்னு.. இத்தன நாள் வீட்டுலையே தங்கல.. சரி போனா போகுதுன்னு விட்டா, வந்த கொஞ்ச நேரத்துல, மறுபடியும் அதுவும் பேக்கோட கிளம்பி நிக்கற.. இதுக்கு தான், இந்த கருமம் புடுச்ச வேலையே வேணாமின்னு சொன்னேன். கேட்டையா நீ..
கல்யாணம் வேணாமின்னு சொன்னவன கட்டாயபடுத்தி கட்டி வச்சது தப்பு தான். அதுக்காக, அவள இப்படி தவிக்க வச்சிட்டு, நீ சுயநலமா இருக்கறது சரியில்ல. இந்த லட்சணத்துல இவ சப்போர்ட் வேற..!” என கோபமாய் அவரின் ஆதங்கத்தையும், சேர்த்து காய்ந்திட,
பதில் சொல்லாமல் வந்து, டைனிங் டேபிளில் சிறு புன்னகையோடு அமர்ந்தவன், “அம்மா… செம பசி மொதல்ல சாப்பாட்ட போடுங்க. காலைல கஞ்சி கேட்டும் கொடுக்கல. கேஸ் டென்ஷன்ல சரியா சாப்பிடவே இல்ல. சாப்பிட்ட அப்புறமா மத்தத பேசலாம்…!” என்றவன், இடைவெளி விட்டு, யோசிப்பது போல நிறுத்தியவன், “அச்சோ.. அது கூட கஷ்டம் தான், ஏன்னா, ஏர்போர்ட் வேற போகணும். இன்னும் ப்ளைட்டுக்கு கொஞ்ச நேரம் தான் இருக்கு..!” என சாவகாசமாய் சொல்லிட…
அவனின் அலட்சியத்தில், கனிக்கோ பக்கத்தில் இருக்கும் சாம்பாரை, அவன் மேல் ஊத்திடும் கோபம் வந்தாலும், பசி என்று அமர்ந்தவனை மனதில் கொண்டு, அவனின் மற்றொரு பிரிவை எண்ணி, கண்ணில் நீர் துளித்தாலும், ஏற்கனவே தாயிடம் வாங்கிகட்டுபவன், இப்போது தன்னால், மீண்டும் பேச போய் சாப்பிடாமல் சென்றுவிட்டால்… என்ற எண்ணத்தோடு, அவசரமாய் தனது கண்ணீரை கட்டுபடுத்தியவள், வெற்றிக்கு தட்டை வைத்து பரிமாற…
“ஆஹா.. அம்மா என்ன தான் சொல்லு… உன் சமையல அடுச்சுக்க ஆளே இல்ல..! வெளிய பைவ் ஸ்டார் ஹோட்டல்ல சாப்பிட்டாலும், உன் பக்குவத்துல, சமச்சத சாப்பிடற சுகமே தனி… அதுவும் உன் மருமக பார்த்து, பார்த்து பரிமாற அழகு இருக்கே… வேலைக்காரங்க தோத்தாங்க போ …! அட… அட .. சொர்க்கம் தான்!” என சிலாகித்து கூற….
அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம் அனைத்தும் பொங்கிட, “ஏன்டா, என்ன பார்த்தா எப்படி தெரியுது..?! உனக்கு வேலை செய்ய வந்த வேலைக்காரி மாதிரியா இருக்கு… பசின்னு, உக்காந்தையே ன்னு சாம்பார மேல ஊத்தாம போனதுக்கு, இந்த பேச்சு தேவை தான்!” என அவனின் முதுகில் அடித்த படியே, கண்ணில் நீர் வடிய கேட்டவளின் கரத்தை பிடித்தபடி, கொஞ்சம் முகத்திலிருக்கும் புன்னகை மாறாமல், “அடியேய் அராத்து, போதும்டீ அடுச்சது, பாரு ட்ரஸ்ஸெல்லாம் கசங்குது.. இப்படியே ஏர்போர்ட் போனா நல்லாவா இருக்கும்?!” என கேட்க,
தன் கண்ணிரையும் பார்த்துவிட்டு சிரிப்போடு, தன் உடையையும், போகுமிடத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு பேசுபவனை, இனி அடித்தும்.. கேட்டும் .. என்ன பிரயோஜனம்?! என்ற நிலையில், அவனிடமிருந்து கையை பிரித்து எடுத்து, விலகி செல்ல போனவளை, மீண்டும் தனது இடதுகரம் கொண்டு இழுத்தவன், அவனுக்கு அருகே இருந்த சேரில் அமர்த்தி, “சட்டுன்னு நீயும் சாப்புடுடீ.. என் பொண்டாட்டி! போறது நா மட்டுமில்ல.. நம்ம ரெண்டு பேரும் தான்… !” என சொல்ல…
அவனின் இழுப்பில், வந்து அமரந்தாலும், அவன் செய்த செயல்களால், அவன் இறுதியாய் சொன்னது காதில் விழுந்தாலும், அதை உணராது இருந்தவளை, “வெற்றி…! கண்ணா…! என்னப்பா சொல்ற…?! நிஜமாவே, கனிய கூட்டிட்டு வெளிய போறையா?!” என மகன் சொன்ன செய்தியில், ஆனந்த அதிர்ச்சி அடைந்த சந்திரா கேட்க,
“இப்ப, நா தமிழ்ல தானே சொன்னேன்! உங்க மருமக பாருங்க, பொறுப்பே இல்லாம உக்காந்திருக்கறத.. ஒரு குழந்த பையன், என்ன சொல்ல வர்றான்னு கூட கேட்காம… நீங்க திட்டறீங்கன்னா, உங்க மருமக அடி வெளுக்கறா…! பொண்ண கட்டி வைக்காம, ரவுடிய போய் கட்டி வச்சிட்டீங்களே… இது நியாயமா?!” என்று வெற்றி கிண்டலாக கேட்க,
“போலீஸ் ஆபிஷருக்கு, ரவுடி சரியான ஜோடி தான்… !” என அவனுக்கு பதில் கூறியவர், “கனிம்மா, என்னடா அவன் சொன்னது புரியலையா?! சீக்கிரமா கிளம்புடா…!” என அவளை அசைத்து சொன்ன பின்பே, அவன் தன்னையும் உடன் அழைத்து செல்ல ஏற்பாடு செய்திருப்பதை கிரகித்த அவளின் மூளை,
“இல்ல அத்தம்மா, நா போகல..!” என சொல்லி, வெடுக்கென அவர்கள் அறைக்கு சென்றிட… ‘அட ஆண்டவா! இதுங்க ரெண்டும் பண்ணற ரவுசு தாங்களடா! ஒண்ணு இறங்கி வந்தா… இன்னொன்னு முறுக்கிட்டு நிக்குது.. இதுங்க ரெண்டும் இந்த ஜென்மத்துல, நம்மள பாட்டி ஆக்கின மாதிரி தான்… !’ என மனதிலேயே புலம்பிய சந்திரா, வெளியே வெற்றியை, ‘இது அத்தனைக்கும், நீ தான் காரணம். உன் விளையாட்டு தான் வினையாகி போச்சு…!’ என சொல்லாமல் சொல்லி முறைக்க மட்டுமே முடிந்தது.
*******
கனி தாங்கள் தங்கியிருந்த அறையின் பால்கனியில், தூரத்து தெரிந்த மலை முகட்டை பார்த்திருந்தாலும், அதன் அழகு கொஞ்சமும் அவளை கவரவில்லை என்பது அவளின் நிர்மூலமான முகத்திலிருந்தே தெரிந்தது வெற்றிக்கு..
கோபம் கொண்டு அறைக்கு சென்றவளை, ‘தங்களுக்காக இல்லாவிட்டாலும், பெரியவர்களின் மனதிற்காகவாவது, ஏற்பாடு செய்த பயணத்திற்கு வந்து தான் ஆக வேண்டும். இப்போது கிடைத்த விடுமுறை போல், இனி கிடைக்குமா?! என்பதும் அவன் தொழிலில் சொல்ல முடியாது..!’ என சொன்ன பிறகு, கனியும் கிளம்ப, ஒரு வழியாய் ஊட்டிக்கு அழைத்து வந்து ஒரு மணி நேரம் ஆகியிருந்தது.
மாலை நேர இளம் காற்றும், சுற்றிலும் இருக்கும் இயற்கை அழகும் வெற்றிக்கு தந்த இதத்தை கனிக்கு தராது போனதை வேதனையோடு பார்த்தவன், ‘சாரிடீ.. நா சும்மா விளையாட்டுக்கு தானே சொன்னேன். நீ, எத்தன நாள் என்கிட்ட விளையாண்ட.. அத நா செஞ்சா இப்படி ரியாக்ட் பண்ணற…!’ என மனதில் நினைத்தவன், மெல்ல அவளை நெருங்கி..
“கனி, கொஞ்சம் ரெப்ரஸ் ஆகிட்டு வா, வெளிய போயிட்டு வரலாம்…!” என சொல்லிட, எந்த விதமான பாவனையும், இல்லாது வெறுமனே சென்றவளை பார்க்க பார்க்க, தன் மீதே கோபமாய் வந்தது வெற்றிக்கு… கனி வந்ததும், இருவரும் சேர்ந்து பொட்டானிக்கல் கார்டன், ரோஸ் கார்டன் என சுற்றி வந்தாலும், பேச்சு என்பது இல்லாது ஒருவித அமைதியே சூழந்திருந்தது.
படபட பட்டாசாய் எப்போதும் இருக்கும் கனியின் இந்த மாற்றம் வெற்றியே எதிர்பார்க்காத ஒன்று.. என்ன செய்து அவளை மாற்றுவது என தெரியாமல், அவளின் முகத்தையே ஏக்கமாய் பார்த்து பார்த்து திரும்பும் அவனை நினைத்து, மனதுக்குள் விழுந்து விழுந்து சிரித்தாலும், வெளியே முகத்தை சீரியஸ்ஸாக வைத்தபடி நடந்தவளின் மனசாட்சியோ….
“கனி.. இது ஓவர் நடிப்புடா சாமி…! ஏன்டீ இப்படி அவன போட்டு படுத்தற..!” என கேட்க, “அவன நா படுத்தறனா .. எவ்வளவு தில்லிருந்தா, என்னை அவாய்ட் பண்ணிட்டு போகறேன்னு சொல்வான். நா யாருன்னு அவனுக்கு தெரியல. காட்டறேன் பயபுள்ளைக்கி…?!” என சொல்ல,
“ஆகமொத்தம், அவன வச்சி செய்யறதுன்னு முடிவு கட்டிட்ட.. நடத்து நடத்து..!” என்று சொல்லிவிட்டு, ‘விசயம் தெருஞ்சா, நீ என்ன ஆக போறையோ?!’ என அதுவும் மனதினுள்ளேயே புலம்பிவிட்டு சென்றுவிட.. தனது நடிப்பை தொடர்ந்தபடியே வெற்றியோடு சென்றாள் அவர்களின் அறைக்கு…
அறைக்கு வந்ததும், வெற்றி தன்னை சுத்தப்படுத்தி வர பாத்ரூம் செல்ல, கனி அவன் உள்ளே சென்று கதவடைக்கும் வரை அமைதியாய் நின்றவள், அதற்கு பிறகு அங்கிருந்த கண்ணாடி முன்பு சென்று நின்று.. “கனி சும்மா சொல்லக்கூடாது… அசத்தற போ..! இதையே கண்ட்டின்யூ பண்ணற, அவன கதற விடுற… இனி ஒரு தரம் உன்ன விட்டுட்டு, வீட்டு வாசல தாண்ட கூட யோசிக்கணும். அப்படியே போனாலும், நீ ஓகே சொன்னா தான்.. சரியா..!” என்றபடியை, அவளுக்கு அவளே நெட்டிமுறித்து டிஸ்ட்டி கழித்து முடிக்க, வெற்றி கதவை திறந்து வருவது அறிந்து, தனது உடையோடு, அவனை தாண்டி உள்ளே சென்றுவிட்டாள் தானும் படுப்பதற்கு தயாராக….
கனி வந்து பார்த்த போது, வெற்றி ஒருபுறம் அமைதியாய் படுத்து உறங்கியிருக்க, “என்னடா இது, எப்படியும் நம்மகிட்ட வந்து கெஞ்சுவாரு, எப்படியெல்லாம் முறுக்கிக்கலாமின்னு ப்ளான் போட்டு வந்தா, கண்டுக்காம தூங்கறாரூ..?!” என்று முனுமுனுத்தபடி, அவனின் அருகே சென்று குனிந்து பார்க்க, நல்ல உறக்கத்தில் இருந்தான் வெற்றி.
சுறுசுறுவென கோபம் வர, “லூசு! லூசு! பொண்டாட்டி கோவமா இருந்தா, அவள சமாதானப்படுத்தாம இழுத்து போத்திட்டு தூங்குது பாரு.. தூங்கு மூஞ்சி..!” என வாய்விட்டே திட்டடியவள், கட்டலின் மறுபுறம் வந்து படுத்தவளுக்கு தான், தூக்கம் தூரம் விலகி சென்றிருந்தது.
கொஞ்ச நேரத்திற்கு மேல் அமைதியாய் படுத்திருக்க முடியாமல் போக, மெதுவாய் அவன் புறம் திரும்பி படுக்க, அவனும் அவள் புறம் பார்த்து தான் படுத்திருந்தான். “தூங்கற பாரு ஒன்னுமே தெரியாத புள்ள மாதிரி… அச்சோ! இப்ப எனக்கு தான் தூக்கமே வரமாட்டிங்குதே…! என்ன செய்வேன்?!” என வாய்விட்டே சொன்னவள், மீண்டும் திரும்பி படுக்க, அடுத்த நொடி அவளின் இடையோடு, வலுவான கரம் கொண்டு இறுக்கி அணைத்திருந்தான் வெற்றி.
“ப்ராடு! தூங்கற மாதிரியா நடுச்ச?!” என அவனின் கரத்தை எடுத்தவிட கனி செய்த முயற்சியை எளிதாக முறியடித்தவன், அவளை தன்னை நோக்கி திருப்பி, அவள் மீதே படர்ந்து, “ஏய், அராத்து! யாரு ப்ராடு.. நீயா?! நானா…?! என்னம்மா ஏக்ட் விடுற… கோபமா இருக்கற மாதிரி!” என சொல்ல,
‘அச்சச்சோ! கண்டுபிடிச்சிட்டானே?!’ என்று எப்போதும் போல, “ஈ……!” என சிரித்தபடி.. “எப்படி மாமா கண்டுபிடிச்ச..?!” என கேட்க, “அதான், நா பாத்ரூம திறந்தது கூட, தெரியாம கண்ணாடி கூட சேர்ந்து ப்ளான் போட்டத, கேட்டுட்டேனே..!”. என்றவன், “இப்படி என்னைய வச்சி, விளையாண்ட உன்னைய எதாச்சும் செய்யணுமே…!” என சொன்னவன்,
அவளின் கரத்தை கெட்டியாக பிடித்தபடியே, கழுத்து வளைவில் தனது மீசையை வைத்து குறுகுறுப்பூட்ட, அவனின் செயலில் கூச்சமும், வெக்கமும் வந்து பாடாய் படுத்த, “மாமா…மாமா ப்ளீஸ்! இனி விளையாட மாட்டேன்.. விடு மாமா..!” என கெஞ்ச,
“என்னது விடறதா..?! இனி விடுற ஐடியாவெல்லாம் சுத்தமா இல்ல..!” என்றவன், தன் மீசை கொண்டு செய்த செயலை, தனது உதடு கொண்டு செய்ய துவங்க, அவனின் கரங்களோ, அவளை மெல்ல உணரத்துவங்கியது. அவனின் செயலில் எழுந்த அவஸ்தையான உணர்வில் மேனி சிலிர்க்க, அவனிடமிருந்து விலக, ஒரு மனம் சொல்ல, கணவனாய் மனைவியிடம், அவன் எடுத்தக்கொள்ளும் உரிமைக்கு இடமளிக்க சொல்லி, அவளின் பென்மை சொல்லிட.. இரு கொல்லி எறும்பாய் தவித்தவள், மெதுவாக…
“மாமா, அன்னைக்கி, ஏதோ பேசனுமின்னு சொன்னீங்களே..! அத இன்னும் நீங்க சொல்லவே இல்ல…!” என அவனின் வேகத்திற்கு முட்டுகட்டை போட,
அவளின் மேனியில் பதிந்திருந்த தனது முகத்தை நிமிர்த்தியவன், “கனி, அன்னைக்கே நா, ஒரு விசயம் சொன்னேன் நியாபகம் இருக்கா?!” என சீரியஸ் டோனில் கேட்க,
“என்ன மாமா?!” என யோசனையோடு கேட்டவளை பார்த்து, “எனக்கு குறுக்க பேசினா பிடிக்காதுன்னு சொன்னேன், நியாபகம் இருக்கா..?! இனி நீ பேசுவ..!” என கேட்டு கண் சிமிட்ட,
“அடப்பாவி, அப்ப நீ எதுக்கு சொன்ன?! இப்ப எதுக்கு கனெக்ட் பண்ற?!” என்ற அதிர்ந்து, விழி விரித்தவளை பார்த்தவாறே, அவளின் இதழ்களை சிறை செய்தவன், கரங்கள் செய்த மாயத்தில், கனியும் மெல்ல வெற்றியோடு முழுமையாய் கரைந்திருந்தாள்.
அவர்களிடமிருந்த மொத்த சக்தியும், தீரும் வரை, அவர்கள் ஒருவருக்கொருவர் கொண்டாடி மகிழ்ந்தவர்கள், மெல்ல இருள் விலகி, விடியலை நோக்கி செல்லும் போது, ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்றனர்.
மெதுவாக கண்விழித்த வெற்றிக்கு, தன் கையணைப்பில் மலர்ந்த முகத்தோடு, இரவு நடந்த நிகழ்வுக்கு ஆதாரமாய் நலுங்கிய சிற்பமாய் இருந்தவளை, மென்னையாய் தன்னோடு இறுக்கியவன்.. அவளின் காதருகே சென்று, “கனிம்மா…!” என்றிட, நேற்றைய காலை பொழுதினை போலவே, “போ.. மாமா! சும்மா தூங்கவிடாம…!” என சினுங்கிட,
அவனின் அணைப்பு கொடுத்த அழுத்ததில், தூக்கம் கலைந்து எழுந்தவளுக்கு, அப்போது தான்… தான் இருக்கும் நிலையும், நேற்றைய நிகழ்வும் நினைவு வர, மலர்ந்திருந்த அவளின் மதிமுகம், செவ்வானமாய் மாறி போயிட, அதை மறைக்க வெற்றியின் மார்பிலேயே முகம் புதைத்தாள்.
அவள் எழுந்து முதல், அவளை பார்வையால் தொடர்ந்தவன், அவளின் வெக்கத்தையும், அதை மறைக்க தன்னிடமே அடைக்கலம் ஆனவளை ஆசையாய் அணைத்துக்கொண்டாலும், நேரம் அறிந்து, “கனிம்மா, எழுந்து ரெடியாகுடா… பாரு மணி என்ன ஆகுதுன்னு…! நா ப்ரேக்பாஸ்ட் ஆர்டர் பண்றேன்!” என சொல்ல,
தான் இருக்கும் நிலையில், எப்படி அவன் இருக்கும் போதே அங்கிருந்து செல்வது, என்று தவிப்போடு அவனை பார்க்க, அவளின் பார்வைக்கு அர்த்தம் புரிந்தாலும், அவளின் வெக்கத்தை ரசிப்பதற்காகவே, “என்ன கனி, சொல்லிட்டே இருக்கேன். நீ பாட்டுக்கு ஜாலியா படுத்துட்டு இருக்க… போ, போய் ப்ரஸ்ஸாகிட்டு வா..!” என கோபம் போலும் சொல்லிய நொடி,
இருவரையும் மறைத்திருந்த போர்வையை சட்டென எடுத்து, தன்னை மறைத்தவள், பாத்ரூம் நோக்கி சென்றிட, அவளை வெக்கப்பட வைக்க நினைத்தவன், வெக்கிப்போனான் தன் நிலையை எண்ணி….
******
புதிதாய் திருமணமான ஜோடிகளுக்கே உரித்தான விதத்தில் அடுத்த, அடுத்த பொழுதுகள் கழிந்தாலும், கனியிடம் பேச வேண்டியதை பேசிவிடுவது, என்ற முடிவோடு இருந்தவன், “கனி கொஞ்சம் அப்படியே வெளிய வாக் மாதிரி போயிட்டு வருவோமா?!” என கேட்க
“இந்த நேரத்துலையா, போ.. மாமா குளிரும்! இங்கையே சொல்லு, நா கேட்கறேன்!” என்று மறுக்க, “செல்லமில்ல, ரூம்ல இருந்தா, நா சொல்ல வர்றத நீயும் கேட்க மாட்ட, என்னாலையும் முழுசா சொல்லிட முடியாது.. அதனாலதான் சொல்றேன், வெளிய போலாம்!” என பேசி, அவளுக்கு லஞ்சமாய் சில பல கிஸ்களை கொடுத்து தாஜா செய்தவன், “போலீஸ்கிட்டையே லஞ்சம் வாங்கின ஆள், நீயா தான்டீ இருப்ப..” என கிண்டல் செய்தபடியே வெளியே வந்தவர்கள், பேசுவதற்கு தோதாய் ஒரு இடத்தில் அமர்ந்தார்கள்.
“கனி, தயவு செஞ்சு முதல் நாள் மாதிரி, குறுக்க பேசி டைவர்ட் பண்ணிடாத டாப்பிக்க!” என சொன்னவனின் குரலிலேயே, தனது விளையாட்டுதனத்தை விடுத்து, அடுத்து அவன் சொல்வதை கேட்கும்படி அமர்ந்தவளை பார்க்கும் போது, ரகு சொன்னது அனைத்தும் மனதில் வலம் வந்தது.
அவர்கள் அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தவன், தூரத்து நிலவை பார்த்தபடியே, “கனி, உனக்கே நல்லா தெரியும், நா கல்யாணம் செஞ்சுக்கறதுல அவ்வளவா ஆர்வம் இல்லாம இருந்தது. அதுக்கு முக்கிய காரணமே, எங்க அம்மா தான். அவங்க என்னோட வேலைய விடச்சொல்லும் ஒவ்வொரு தடவையும், நாளைக்கி வர்றவ, நீ இப்படி ராத்திரி பகல்ன்னு பார்க்காம ஓடுனா ஒத்துக்கமாட்டா.. அவள நல்லபடியா பார்த்துக்கணுமின்னு சொல்ல, சொல்ல… அப்ப, மனைவி வந்தா.. என்னோட முதல் காதலான, இந்த யூனிஃபார்முக்கு விடை கொடுக்க வேண்டி வருமோன்னு தான், அத அவாய்ட் பண்ணேன்”.
“முதல் தடவ உன்ன பார்த்தப்ப, நீ பேசினத வேற யாராச்சும் பேசியிருந்தா, கண்டிப்பா கன்னம் பழுத்திருக்கும்.. உன்கிட்ட அப்படி கோபப்பட முடியல. அதோட, நீ பிரகாஷ் மாமா பொண்ணுன்னும், உன்னோட உயிர் கொஞ்ச நாள் தான்.. அப்படின்னும் சொன்னதும், நா நானாவே இல்ல. மேபி வேற யாராவதா இருந்திருந்தா ஹாஸ்பிட்டல்லையே உண்மைய கண்டுபிடிச்சிருப்பேன். உனக்கு அப்படி இருக்க கூடாது ன்னு மட்டுமே, மனசுல ஓடிட்டு இருந்ததால மத்தத கவனிக்கல…
ரகு வந்து உனக்கு எதுமில்லன்னு சொன்னதும், ஒரு புறம் நிம்மதியா இருந்தாலும், என்னைய ஏமாத்திட்டீங்க, அதோட இப்படி நாடகமாடற நீ, நாளைக்கி இந்த வேலைய விட வைக்கவும் நாடகமாடுவியோன்னு தான் கோபம் வந்துச்சு.
அது மட்டுமா.. என்ன வாய்டீ உன்னோடது… அப்பப்பா.. என்னாலையே முடியல.. நீ செய்யற சின்ன சின்ன விசயம் கூட தப்பாவே தெரிஞ்சுது. ரகு அப்பவே சொன்னான், எங்களுக்கு தெரிஞ்ச கனி வேற.. நீ இப்ப அவள புருஞ்சுக்கல.. அவள நல்லா தெரிஞ்சிட்டு முடிவு பண்ணுன்னு.. அதே மாதிரி தான் நாளுக்கு நாள் உன்னோட ஒவ்வொரு முகமா தெரிய வந்துச்சு எனக்கு.
அம்மாகிட்ட அன்னைக்கி, நீ போலீஸ் வேலைய பத்தி உயர்வா பேசும் போதே பாதி ப்ளாட் ஆகிட்டேன். மிச்சத்தையும் அந்த சில நாள்ல, உன்னை பத்தி விசாரிச்சு தெரிஞ்சிட்டேன்.
நீயும், உன் ப்ரண்ட்ஸ் சில பேரும் சேர்ந்து கிராம புற பெண்களுக்காகவும், ரத்ததானம், உடல் உறுப்பு தானம் பத்திய விழிப்புணர்வு சம்மந்தமா நடத்தற கூட்டம் எல்லாமே.. சமூகத்தின் மேல அக்கறை இருக்கற நீ, எந்த சூழ்நிலையில எப்படி நடக்கணுமின்னு தெரிஞ்சு நடந்துப்பேன்னு, அப்பவே முடிவு பண்ணிட்டேன்.
முதல் தடவ பேசும் போது கூட, உன்ன பத்தி முழுசா தெரிஞ்சுக்காம.. புருஞ்சுக்காம.. ஜஸ்ட் ஒரு அபெக்சன்ல தான், உன் கேரக்டர மாத்திக்கோ, அது தான் என்கூட நீ வாழ சரியா இருக்குமின்னு சொல்லிட நினச்சேன். பட், இந்த இடைவெளியும் நல்லது தான். இப்ப முழுசா உன்னை நல்லா தெரிஞ்சிட்டு, புரிஞ்சிட்டு தான், மனைவியா முழுசா ஏத்துக்கிட்டேன். ஐ லவ் யூ கனி..!” என்றவனுக்கு பதில் வராது போக,
‘இவ்வளவு தூரம் பேசிட்டு, அதும் காதல சொன்னா பதிலே சொல்லாம என்ன பண்ணறா?!’ என பார்க்க, அவள் செய்திருந்த வேலையில், வெற்றியின் முகம் அஸ்டகோணலாய் மாறியிருந்தது. அவன் இவ்வளவு பேசியதை கேட்டாளா?! இல்லையா?! என தெரியாமல் விழிக்க வைக்கவே, கனி அவர்கள் அமர்ந்திருந்த இருக்கையிலேயே தூங்கியிருந்தால்.. அவனும் தான் என்ன செய்வான்?! (ஹா…ஹா..)
.